மகாவித்துவான் சரித்திரம்- 2(4ஆ)

-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்

4ஆ. பட்டீச்சுரம் போய் வந்தது



ஸ்ரீ சிவஞான முனிவர் காஞ்சிப்புராணம் அரங்கேற்றிய வரலாறு

ஒருநாள் சிவஞானமுனிவரைப் பற்றிச் சொல்லுகையில் அவர் காஞ்சிப் புராணம் பாடி அரங்கேற்றியபொழுது நிகழ்ந்த ஒரு வரலாற்றை அடியில் வருமாறு கூறினார்:

மணியப்ப முதலியார் முதலிய செங்குந்தச் செல்வர்களுடைய உதவியினால் சிவஞான முனிவர் காஞ்சீபுரத்தில் இருந்துவந்தார். தாம் இயற்றி நிறைவேற்றிய காஞ்சிப் புராணத்தின் முதற்காண்டத்தை அப்போது அம்முனிவர் அரங்கேற்றத் தொடங்கினர். கச்சியப்ப முனிவரும் வேறு பல வித்துவான்களும் செல்வர்களும் வந்திருந்தனர். சிவஞான முனிவர்பால் அழுக்காறு பூண்ட சிலர், ‘இவர் ஒரு நூலைப் பாடுவதும், அதனை அரங்கேற்றுவதும் அதனை நாம் பார்த்திருப்பதும் சரியா? இவரது புராணத்தில் ஏதேனும் குறைகளைக் கூறி இவருக்குள்ள மதிப்பைக் குறைக்க வேண்டும்’ என்று நினைந்து கோயில் ஓதுவார் ஒருவரை அழைத்து ஊக்கிவிட்டு ஆட்சேபனை செய்யும்படி ஏவினார்கள். அவர் கல்விப்பயிற்சி யில்லாதவர்; தேவாரம் மட்டும் ஓதுபவர்; அவர்கள் சொல்லியதற்கு உடன்பட்டுத் தைரியத்தோடு சபையில் வந்திருந்தனர்.

அரங்கேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. விநாயகர் வணக்கங்களாகிய முதல் இரண்டு செய்யுட்களைப் படித்துப் பொருள் கூறிய பின் மூன்றாவது செய்யுளாகிய ஸ்ரீ நடராஜப் பெருமான் துதியை முனிவர் படிக்க ஆரம்பித்தார்; “சங்கேந்து மலர்க்குடங்கைப் புத்தேளும்” என்று அதனைக் கூறிவிட்டுப் பொருள் சொன்னார். ஓதுவார், “முதலில் *13 சங்கையா ஆரம்பித்தீர்கள்?” என்று இழிப்புத் தொனியோடு கேட்டார். உடனே சிவஞான முனிவர், “பாடலில் இருப்பது சங்கு என்னும் சொல்தான். உம்முடைய வாக்கில்தான் சங்கை உண்டாயிற்று” என்று விடை சொன்னார். ஓதுவார் மீட்டும் ஆட்சேபிக்கத் தொடங்கி, “முத்தி நகரங்கள் ஏழிலொன்றும் பிரசித்தஸ்தலமுமாகிய இந்தக் காஞ்சீபுரத்திற்குப் புராணம் பாடவந்த நீங்கள் எப்படிச் சிதம்பரம் நடராஜருக்கு முதலில் துதி கூறலாம்? ஸ்ரீ ஏகாம்பரநாதர் துதியையல்லவோ முதலில் சொல்ல வேண்டும்? எல்லாத் தலபுராணங்களிலுமுள்ள அமைப்பைப் பாருங்கள்” என்றார். அப்போது சிவஞான முனிவர் ஸ்ரீ சபாபதியின் பெருமை முதலியவற்றைக் கூறித் தக்க காரணங்களை எடுத்துரைத்தும், ஓதுவார் அவற்றை அங்கீகரியாமல் மேன்மேலும் விதண்டாவாதம் செய்தார்.

இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டே அருகில் இருந்த கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவரை நோக்கி அஞ்சலி செய்து, “இவரை அடியேன்பால் விட்டுவிடப் பிரார்த்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓதுவாரைப் பார்த்து, “இங்கே நேரே வந்து இரும்; நீர் யார்? படித்திருக்கிறீரா?” என்று கேட்டார்.

ஓதுவார்: நான் இத்தலத்து ஓதுவார்களுள் ஒருவன்; ஏதோ ஒருவாறு தமிழ் கற்றிருக்கிறேன்.

கச்சி: உமக்குத் தேவாரம் தெரியுமா?

ஓதுவார்: நன்றாகத் தெரியும். என்னுடைய வேலையே தேவாரம் ஓதுவதுதானே. இதைக்கூடக் கேட்க வேண்டுமா?

கச்சி: அப்படியானால் இந்தத் தலத்துத் தேவாரத்தைச் சொல்லும் பார்க்கலாம்.

ஓதுவார் ஊக்கத்துடன் சொல்லத் தொடங்கி வழக்கம் போல் *14  ‘திருச்சிற்றம்பலம்’ என்றார். உடனே, கச்சியப்ப முனிவர் கம்பீரமாக, “நிறுத்தும்; உம்மைக் காஞ்சீபுரத் தேவாரம் சொல்லச் சொன்னால் திருவேகம்பமென்று சொல்லாமல் திருச்சிற்றம்பலமென்பதை ஏன் சொல்லுகின்றீர்?” என்று கேட்டார்.

ஓதுவார்: எல்லாத் தலங்கட்கும் அது பொதுவானது.

கச்சி: இங்கே கூறப்பட்ட முறைக்குக் காரணமும் அதுவே. பல சைவ நூல்களைப் படித்திருந்தால் இந்த மரபு உமக்குத் தெரிந்திருக்கும்.

உடனே ஓதுவார் தலை கவிழ்ந்து, “அடியேன் செய்த குற்றத்தை க்ஷமிக்க வேண்டும்” என்று வருந்திக் கேட்டுக்கொண்டு ஒடுக்க வணக்கத்துடன் இருப்பாராயினர்.

நான் திருநாகைக் காரோணப் புராணம் பாடங்கேட்டது

இப்படியிருக்கையில், நான் கொண்டுபோன பிரபந்த நூல்கள் கேட்டு முற்றுப்பெற்றன. மேலே கேட்பதற்குப் பாடப் புத்தகம் என் கையில் இல்லாமையை யறிந்து ஒருநாள் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்த திருநாகைக் காரோணப் புராணத்தை வாங்கிக் கொடுத்துப் பாடஞ் சொல்லி வந்தார். அப்படியே கேட்டு வருகையில் அந்நூலில் தினந்தோறும் முதலில் 50  பாடல்களுக்குக் குறையாமல் 100 செய்யுள் வரையிலும், இரண்டு வாரங் கழித்த பின்பு 100  செய்யுள் முதல் 200 வரையிலும் கேட்டு வந்தேன். கேட்குங்காலத்தில் ஒவ்வொரு செய்யுளிலுமுள்ள பொருள் நயங்களையும் சொன்முடிபு பொருள் முடிபுகளையும், மேற்கோள்களையும் அப்பொழுது அப்பொழுது சொல்லி என் மனத்திற் படும்படி செய்துவந்தார். விரைந்து நான் படித்துச் செல்லுவேனாயின் அவ்வாறு படித்தலைத் தடுத்து ஒவ்வொரு செய்யுளின் சுருக்கத்தையும் நல்ல நடையிற் சொல்லும்படி செய்து வருவார்; இச்செய்யுளால் அறிந்து மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை இன்னவையென்றும் சொல்லுவார். இங்ஙனம் இவர் பழக்கிவந்தமை கவனிப்பையும் ஆராய்ச்சி முறையையும் எனக்கு உண்டுபண்ணியது.

அந்தப் புராணத்தால் அறிந்துகொண்ட காப்பியச் சுவைகள் பலவாதலின், தமிழ்ப் பாஷையின் பெருமையையும் அந்நூலை இயற்றிய இவருடைய கல்வி மேம்பாட்டையும் அறிந்து இன்புறுவேனானேன். அந்நூல் முற்றுப் பெற்றபின் இரண்டாவது முறையும் அதைக் கேட்க விரும்பினேன். அப்படியே படிக்கச் செய்து அரிய பகுதிகளை விளக்கிக்கொண்டே வந்தார். இரண்டாமுறை பாடங்கேட்டதில் பின்னும் பல புதிய விஷயங்கள் தெரியவந்தன. சிலதினங்களில் அந்நூல் முற்றுப்பெற்றது.

மாயூரப் புராணம் பாடங்கேட்டது

அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்த மாயூரப் புராணத்தை வாங்கிப் பாடங்கேட்டு வந்தேன். உதயகாலம் தொடங்கியே பாடம் ஆரம்பிக்கப்படும். மணி எட்டானால், காலையாகாரம் செய்துகொண்டு வரும்படி என்னை இவர் அனுப்பி விடுவார். காலை ஆகாரமானவுடன் பத்து அல்லது பதினொரு மணிவரையிற் பாடம் நடைபெறும். மாலையில் திருமலைராயனாறு சென்று அனுஷ்டானஞ் செய்துவிட்டுத் திரும்புகையில் ஆகாரஞ் செய்துகொண்டு வரும்படி அக்கிரகாரத்திலுள்ள வீட்டினுள் என்னை அனுப்பி நான் உண்டு வரும்வரையில் அவ்வீட்டுத் திண்ணையில் தனியே இருப்பார். இவரிருத்தலை வீட்டுக்காரர் தெரிந்துகொண்டு தீபங்கொணர்ந்து வைத்தாலுண்டு; இல்லாவிட்டால் இருட்டிலேதான் இவர் தனியேயிருப்பார். அங்ஙனம் அமைந்த பேரன்பை என்னவென்று சொல்லுவேன்! இப்படி ஒருவர் இருந்ததாகக் கதையிலும் கேட்டதில்லை. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று பாடஞ்சொல்லுவார்.

மாலையனுஷ்டானத்தை முடித்த பின்பு, ஆறுமுகத்தா பிள்ளை கந்த புராணத்தைப் பாராயணஞ் செய்வது வழக்கம்; அதற்காகப் புத்தகமுங் கையுமாக அவர் வந்தவுடன் என் பாடம் நிறுத்தப்படும். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அப்புராணத்தை அவர் படிக்கத் தொடங்குவார். இவர் அதிலுள்ள கடினமான பாகத்திற்கு மட்டும் அவர் விரும்பும்பொழுது பொருள் சொல்லுவார். அது 9 மணி வரையில் நடைபெறும். அதுவும் எனக்குப் பேருதவியாக இருந்தது. அதற்கு மேலே இவருக்கும் ஆறுமுகத்தா பிள்ளை முதலியவர்களுக்கும் வேறு வேறிடங்களிற் படுக்கைகள் போடப்படும். முக்கியமானவர்கள் அங்கங்கே சென்று சயனித்துக் கொள்வார்கள். அப்படியே சயனம் பண்ணிக்கொள்ளும் பாவனையோடு இவர் வந்து படுத்துக்கொள்வார். இவருடைய பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் அருகில் இருந்து இவருக்கு நித்திரை வரும்வரையில் நான் பாடங் கேட்டுக்கொண்டிருப்பேன்.

இவர் நித்திரை செய்யத் தொடங்குவாராயின் நானும் அந்தச் சமயம் பார்த்து மெல்லவெழுந்து தூங்கச் செல்வேன். அதன்பின்பு 12 அல்லது ஒரு மணிக்குமேல் ஆறுமுகத்தா பிள்ளை விழித்து எழுவார். எழுந்தவுடன் வீட்டின் வெளிப்புறத்தே சென்று திண்ணையைப் பார்த்துவிட்டுவருவார்; திண்ணையில் யாரேனும் உண்பதற்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்து யாரேனும் இருந்தால் அவர்களை அழைத்துச்சென்று உண்பிப்பது பகற்காலத்திலும் இரவிலும் அவருக்கு வழக்கம். பின்பு எழுப்பி உண்ணுதற்கு இவரை அழைத்துச்செல்வார். உண்பதற்கு இவர் அமர்ந்தவுடன் யாவரும் அமர்ந்து பேச்சின்றியே ஆகாரம் செய்வார்கள். எத்தனை பேர்கள் வந்தாலும் பந்திபோசனத்துக்கு உரியவர்களை உடன்வைத்துக்கொண்டு உண்பித்தலும் புறத்தேயிருந்து உண்ணுதற்கு உரியவர்களை அங்கங்கே வைத்து உண்பித்தலும் அவ்வீட்டு வழக்கம். ஆறுமுகத்தா பிள்ளை திருவாவடுதுறை மடத்தில் உணவளிக்கும் முறையை பந்தியிலிருந்து நன்றாக அறிந்தவராதலால் அங்கே நடத்தும் முறைப்படி எல்லாம் விமரிசையாக நடைபெற வேண்டுமென்பது அவரது கருத்து. அந்தப்படியே தினந்தோறும் நடைபெற்றுவரும்; “வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்னும் முதுமொழிப் பொருள் ஆறுமுகத்தா பிள்ளையிடம் நன்றாக அமைந்திருந்தது.

ஒவ்வொரு தினத்தும் இரவில் பிள்ளையவர்கள் போய் உண்பதற்கு அமர்ந்தவுடன் நான் புத்தகமுங் கையுமாகச் சென்று பிள்ளையவர்கள் பக்கத்திலிருந்து படிக்க வேண்டியவற்றைப் படித்துப் பொருள் கேட்க வேண்டுமென்பது ஆறுமுகத்தா பிள்ளையின் கருத்து. எந்தக் காலத்தும் இவர் தடையின்றிப் பாடஞ் சொல்லுவார். என்றைக்கேனும் தூக்கத்தால் அங்ஙனம் செய்வதற்குத் தவறிவிட்டால் அன்று ஆகாரம் செய்துகொண்ட பிறகாவது மறுநாட் காலையிலாவது ஆறுமுகத்தா பிள்ளை என்னைக் கோபித்துக் கொள்வார். “இவருக்கு ஏன் பாடஞ்சொல்ல வேண்டும்? படிப்பில் சிறிதேனும் இவருக்கு ஊக்கம் இல்லையே. சமயம் பார்த்து இவர் கேட்க வேண்டாமா? அஜாக்கிரதையுடன் இருக்கின்றாரே. இப்படிப்பட்டவருக்கு நீங்கள் பாடஞ் சொல்லுவதில் எனக்கு இஷ்டமில்லை. அப்பால் உங்களுடைய சித்தம் போலே செய்யலாம்” என்று சில சமயங்களிற் பிள்ளையவர்களிடம் சொல்லுவார். அதனோடு நில்லாமல் இவர் முன்னிலையில் என்னையும் கண்டிப்பார். இந் நிகழ்ச்சிகளைக் காணும் இக் கவிஞர் பிரான் யாதொன்றும் சொல்லாமலே சும்மா இருந்துவிடுவார். இவர் குறிப்பை யறிந்து நானும் மௌனமாகவே இருப்பேன்.

இங்ஙனம் எந்தக்காலத்தும் இவரிடம் தடையின்றிப் பாடங் கேட்டு வந்தமையினாலே தான் என் அனுபவத்தை,

“........................................... அங்
கைத்தலவா மலகமென மாணவர்கள் பலர்க்குமின்ன கால மென்னா
தெத்தகைய பெருநூலு மெளிதுரைத்துப் பயனுறுத்தும் இணையி லாதோன் "
"அருத்திமிகு மெனையருகி லிருத்தியருந் தமிழ்நூல்க ளறைந்து"
(உறையூர்ப் புராணச் சிறப்புப் பாயிரச் செய்யுட்கள்)
"அருத்திகூ ரெனையரு கிருத்திநூல் பலசொற்
றல்ல லகற்றிய நல்லிசைப் புலவனும்“"”

              (மீ.பிரபந்தத்திரட்டு, உரிமையுரை) 

-என்ற பாடல்களாகப் பிற்காலங்களில் வெளியிடலானேன்.

ஆறுமுகத்தாபிள்ளை என் புத்தகத்தை ஒளித்து வைத்தது

ஒரு நாளிரவில் இவர் உண்ணும்பொழுது நித்திரையின் மிகுதியாலும் ஒருவரும் எழுப்பாமையாலும் நான் சென்று பாடங் கேட்கத் தவறினேன். வழக்கப்படியே மறுநாள் விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்த பிள்ளையவர்களுடன் ஆற்றிற்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து படித்தற்கு மாயூரப் புராணத்தைப் பார்த்தேன். வைத்த இடத்தில் அது காணப்படவில்லை. வேறொன்றையாவது எடுத்து வந்து படிக்கலாமென்றெண்ணிச் சென்று என் புத்தகக்கட்டைப் பார்த்தேன். அதுவும் வைத்த இடத்திற் காணப்படவில்லை. மிக்க கவலையோடு அச் செய்தியை இவர்பால் தெரிவித்தேன். உடனே இவர் தேடிப் பார்க்கும்படி அங்கிருந்த வேலைக்காரர்களிடம் சொன்னார். அவர்கள் மிக முயன்று தேடியும் கிடைக்கவில்லை. நான் வருத்தமடைந்து, ‘பாடங் கேட்க இயலவில்லையே’ என்று முகவாட்டத்தோடு நின்றேன். என்னுடைய நிலைமையை அறிந்த இவரும் வருத்தமுற்றனர். “இந்தச் செய்தியைத் தம்பியிடம் (ஆறுமுகத்தா பிள்ளை) சொல்லலாமே” என்றார்.

அவரோ ஒவ்வொரு தினத்தும் காலையில் எட்டு மணிக்கு மேற்பட்டுத்தான் துயிலுணர்வது வழக்கம். உணர்ந்தாலும் உடனே விழித்து எழுந்திருக்க மாட்டார். “துரைசாமி!” என்று தம்முடைய பிள்ளையை அழைப்பார். அச் சமயம் பார்த்துக் கொண்டே அயலில் வந்து நின்று குமாரர் ஏனென்பார். அவ்வொலியைக் கேட்ட பின்பே தம்முடைய கண்ணைத் திறந்து அவர் முகத்தைப் பார்த்துவிட்டு எழுந்து புறத்தே வருவார். ஆதலால், அந்தச் சமயத்திற் சென்றால் அவர் என்ன சொல்லுவாரோவென்று அஞ்சி நான் பிள்ளையவர்களுடைய அருகிலேயே இருந்துவிட்டேன். இவரும் அங்ஙனம் செய்தது நல்லதென்று சொன்னார்.

இப்படி யிருக்கையில் வீட்டினுள்ளே யிருந்து குறிப்பிட்ட காலத்தி லெழுந்து ஆறுமுகத்தா  பிள்ளை வெளியே வந்தார். நான் பாடங் கேளாமற் சும்மா இருத்தலை அவர் பார்த்து, “ஏன் இவர் சும்மா இருக்கிறார்? சுத்த சோம்பேறி. இவருக்குப் பாடஞ் சொல்ல வேண்டாம்” என்று கடிந்து சொல்லிவிட்டு அப்பாற் செல்லத் தொடங்கினார். அப்பொழுது நான் ஒன்றும் சொல்லவில்லை. இக் கவிஞர் கோமான், “இவர் வைத்த இடத்திற் புத்தகம் காணப்படவில்லையாம். அதைத் தம்பி வருவித்துக் கொடுத்தால் நல்லது” என்று சொன்னார். உடனே அவர் ஹூங்காரம் செய்து விட்டு, “படிக்கும் புத்தகத்தைக்கூடச் சரியாக வைத்துக் கொள்ளத் தெரியவில்லையே. நான் எண்ணியபடியேதான் இவர் இருக்கிறார். ஐயா அவர்கள் இவரியல்பை அறிந்து கொள்ளவில்லை” என்று சொல்லிவிட்டுச்சென்றார். அப்போது, “எப்படியாவது புத்தகத்தை வருவித்துக் கொடுக்க வேண்டும்” என்று இவர் அவரை வற்புறுத்தினார்.

அப்பால் மீண்டு வந்து நின்று இவரை நோக்கி அவர், “இவ்வளவு காலமாகச் சிரமப்பட்டு இரவும் பகலும் இவருக்குப் பாடம் சொல்லி வருகிறீர்களே. இவரும் படிப்பவர் போலவே பாவனை பண்ணிக் கொண்டிருக்கிறாரே. ஏதேனும் இவருக்குத் தமிழிற் பயிற்சி ஏற்பட்டிருக்கிறதா? பல நூல்களைப் பாடங்கேட்டிருக்கிறாரே; புதிதாக ஏதேனும் ஒரு செய்யுள் செய்வாரா? அந்தப் பழக்கம் இவருக்கு இருக்குமென்று நான் நம்பவில்லை. நான் வருவதற்குள் ஏதேனும் ஒரு செய்யுள் செய்து முடிப்பாராயின் புத்தகத்தை எப்படியாவது வருவித்துக் கொடுப்பேன். அது கிடைக்காவிடின் விலைக்காவது வேறொன்று வாங்கிக் கொடுப்பேன்” என்று சொல்லவே பிள்ளையவர்கள் ஒரு செய்யுள் இயற்றும்படி கட்டளையிட்டார். பிறருதவியின்றிச் செய்யுள் செய்கின்றேனா வென்பதை அறிந்து கொள்வதற்குக் காவலாக ஒருவரை வைத்துவிட்டு ஆறுமுகத்தா பிள்ளை அப்பாற் சென்றார்.

பின்பு என்னை அழைத்துக்கொண்டு இக்கவிஞர் பிரான் வேறிடம் செல்லும்பொழுது காவலாக இருந்தவரும் உடன் வந்தார். நான் ஆலோசித்து ஒரு வெண்பாவை முடித்து அதனை இவருக்குச் சொல்லிக் காட்ட நினைந்து, “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்று தொடங்கினேன். உடனே இவர் என்னை மேலே சொல்லாதபடி கையமர்த்திவிட்டு, “பூஜைக்கு இடம் பண்ணும்படி தவசிப்பிள்ளைக்குச் சொல்லி வாரும்” என்று உடனிருந்தவரை அனுப்பி என்னை நோக்கி, “நீர் சொல்லிய தொடர் ‘மாறுமுகச்செம்மலே’ என்றும் பிரிக்கப்படுமே. அதை யறிந்து தம்பி கோபித்துக் கொள்வாரே. வெறுவாயை மெல்லுகிறவருக்கு அவல் கிடைத்தது போலவே யாகுமன்றோ இது? விபரீதமான அர்த்தமாகும்படி ஒருபொழுதும் பாடலாகாது. ஜாக்கிரதையாகவே செய்யுளைச் செய்து முடிக்க வேண்டும்” என்று சொல்லி நான் இயற்றியதாகவே தாம் ஒரு வெண்பாவை விரைவிற் பாடி முடித்து அதனை எனக்குச் சொல்லத் தொடங்கினர். தொடங்கிய பொழுது, பாதுகாப்பாளர் விரைந்து வருதலை யறிந்து ஒவ்வொரு வார்த்தையாகவே விரைந்து சொன்னார். அவற்றை முறையே அறிந்து அவ்வெண்பாவைப் பாடஞ்செய்து கொண்டேன். அச்செய்யுள்,

“ஆறுமுக பூபாலா வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டான் மதிப்பவரார் - கூ றுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயைசெய் நீ”

என்பது.

இதற்குள் ஆறுமுகத்தா பிள்ளையும் வந்து விட்டார். உடனே நான் சென்று இச்செய்யுளை அவரிடம் பக்குவமாகச் சொல்லிக் காட்டினேன். கேட்ட அவர் முதலிலிருந்த கோபம் தணிந்தவராய் என்னை நோக்கி, “நீர் இனி நன்றாகப் பாடங்கேட்பதுடன் செய்யுள் செய்வதிலும் பழக்கம் வைத்துக் கொள்ளும். அஜாக்கிரதையாக இருந்துவிட வேண்டாம்” என்று சொல்லி வருகையில் என்னுடைய பாடபுத்தகத்தையும் புத்தகக்கட்டையும் அங்கே ஒரு வேலைக்காரன் கொணர்ந்து வைத்தான். அவர் அந்தப் புத்தகக் கட்டை முன்னிருந்த இடத்தில் வைக்கும்படி சொல்லி அவன்பாற் கொடுத்தனுப்பிவிட்டு மாயூரப் புராணத்தை மட்டும் என்னிடம் கொடுத்தார்.

அதனை வாங்கிக்கொண்டு சென்று அதற்குள் அங்கே வந்திருந்த இவரிடம் பாடங்கேட்கத் தொடங்கினேன். தொடங்கு முன் நிகழ்ந்தவற்றை விவரமாக இவர் விசாரித்தார்; சொன்னேன். அப்பால் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிது நேரம் வரையில் எனக்கு விளங்கச் சொல்லிவிட்டுப் பாடஞ்சொல்லத் தொடங்கினார். அன்றைத் தினம் தொடங்கிச் செய்யுள் செய்யும் முறைகளிற் சில எனக்குத் தெரியவந்தன. அவற்றைக் கொண்டு நாளடைவில் நான் பல விஷயங்களை ஊகித்து அறிந்து கொண்டேன்.

ஒரு போலிப் புலவர் வந்து சென்றது

பின்பு இவருடைய கட்டளையின்படி சவேரிநாத பிள்ளையும் மாயூரத்திலிருந்து பட்டீச்சுரம் வந்து உடனிருப்பாராயினர். அவரோடு சேர்ந்தே மாயூரப் புராணத்தைப் பாடங்கேட்டு வந்தேன். ஒருநாள் இரவில் முன்வேளையில் அப்புராணத்தில் அகத்தியர் பூசைப்படலம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பாகத்திலுள்ள செய்யுட்களை முறையே படித்து வந்தோம். தமிழாசிரியராகிய அகத்தியரைப் பற்றிய செய்திகளைக் கூறும் பகுதியாதலின் இவருடைய புலமைத்திறம் அதில் நன்றாக அமைந்திருந்தது. உடனிருந்தவர்கள் கேட்டு ஆனந்த பரவசரானார்கள்.

அச் சமயத்தில் வாயிற்படிக்கு வெளியே ஒருவர் வந்து நின்றார். அவர் தலையில் பெரிய பாகையொன்றை வைத்துக் கொண்டிருந்தார். முகத்தில் நீண்ட வீசையும் *15 புஸ்தியும் அவருக்கு இருந்தன. தேகத்தில் நெடுஞ்சட்டைமட்டும் அணிந்துகொன்டு கையில் நீண்ட பிரம்பொன்றை வைத்திருந்தனர். புராணங் கேட்டுக் கொண்டிருந்தமையால் அங்ஙனம் நின்றவரை ஒருவரும் கவனிக்கவில்லை. அவரைப் போன்றவர்கள் அடிக்கடி யாசகத்திற்காக வந்து அவ்வீட்டின் புறத்தே நிற்பதுண்டு. அங்ஙனம் வந்தவர் தம்மை ஒருவரும் கவனிக்கவில்லை யென்பதை அறிந்து கனைத்தார். அவ்வொலியைக் கேட்ட எங்கள் ஆசிரியர், “யார்?” என்று கேட்கவே அவர், “நான் தஞ்சைமா நகரத்திலுள்ள தமிழ் ‘வித்துவாம்ஷன்’; என்னை ஆதரித்த சிவாசி மகாராசா இறந்து போய் விட்டமையால் என்னுடைய அருமை அறிந்து ஆதரிப்பவர் அங்கே யாருமில்லை. என்ன செய்கிறது! குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே. அதனால் இந்த நாட்டிலுள்ள பல பிரபுக்களிடம் போய் என்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டி அவர்களாற் கிடைக்கும் பொருளைக்கொண்டு காலங்கழிக்கிறேன். நான் வரகவி. அறம்வைத்துப் பாடுகிற வழக்கமும் எனக்கு உண்டு. அப்படிப் பாடிச் சிலருக்குத் தீங்கும் விளைவித்திருக்கிறேன். அதனாலே என்னைக் கண்டால் யாரும் பயப்படுவார்கள். இந்த நாட்டிலுள்ள தனவான்களுக்கெல்லாம் என்னிடத்தில் விசேஷமான மதிப்புண்டு” என்றனர். கேட்ட இவர் புன்முறுவல் செய்துகொண்டு, “அப்படியானால் இங்கே வந்து இரும்” என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினர். அவர் அங்கே வந்து இருந்தார்.

அவருடைய அறிவின்மையைக் குறித்து மந்தணமாகப் பேசிக்கொண்டிருந்த நாங்கள் பின்பு அதை விடுத்துப் படிக்கத் தொடங்கினோம். எப்படியாவது தம்முடைய புலமையை வெளிப்படுத்தற்கு அதுதான் நல்ல சமயமென்று அவர் நினைத்தார்.

அநேக இடங்களிற் சில பிரபுக்கள் பிறரை ஏதாவது படிக்கச் சொல்லித் தாம் சயனித்துக் கொண்டிருந்து கேட்பதைப் பார்த்தவராதலால் இவ்விடமும் அவற்றைப் போன்ற ஓரிடமென்றும் பிள்ளையவர்களே அவ்வீட்டுத் தலைவரென்றும் அவர் எண்ணி விட்டார். நாங்கள் படித்துக்கொண்டு செல்லும் பாடல்களுக்கு இடையிடையே பொருள் சொல்லவும் தொடங்கினார். அப் பொருள் சிறிதும் பொருத்தமுள்ளதாகவே இல்லை. நாங்கள் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் மேலே படித்துக்கொண்டு சென்றோம். அவரும் சிறிதேனும் அச்சமும் சலிப்பும் இல்லாமல் பொருத்தமில்லாத சொற்களை இடையிடையே பொழிந்து கொண்டே இருந்தார். அப்போது சவேரிநாத பிள்ளை அவரை நோக்கி, “ஏன் இடையிடையே முழக்கிக் கொண்டிருக்கிறீர்? சும்மா இரும்” என்று சொன்னார். வந்தவர் எங்களை நோக்கி, “நீங்கள் பொருள் சொல்லாமற் படித்துக்கொண்டே போவது நன்றாகவில்லை. அர்த்தம் சொல்லிக்கொண்டு சென்றாலல்லவோ எசமானவர்களுக்குத் திருப்தியாகவிருக்கும்? இப்படிப் படிப்பதனால் என்ன பயன்? பிரபுக்களிடத்திற் பழகும் முறை தெரியவில்லையே! அதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று தான் நீங்கள் படிக்கும் பாடல்களுக்குப் பொருள் சொல்ல முன்வந்தேன்” என்றார்.

சவேரிநாத பிள்ளை, அவர் வாயை எப்படியாவது அடக்கிவிட வேண்டுமென்று நினைந்து, “இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லும்; பார்ப்போம்” என்று ஒரு பாடலைப் படித்துக்காட்டினர். அவர் சிறிதும் அஞ்சாமல், “இந்தப் ‘பொஷ்தகத்தை’ எனக்கு இனாமாகக் கொடுப்பீர்களானால் நான் சொல்லத் தடையில்லை” என்று சொல்லிவிட்டுப் பின்னும் தமது திறமையைக் காட்ட வேண்டுமென்று நினைந்து வெற்றுரைகளை வர்ஷிக்கத் தொடங்கிவிட்டார். எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. இவரும் மெல்லச் சிரித்துக்கொண்டே இருந்தார்.

அந்தச் சமயத்தில் தற்செயலாக அங்கே வந்த ஆறுமுகத்தா பிள்ளை இந் நிகழ்ச்சியை யறிந்து அவரைப் பார்த்து, “நீர் யார் ஐயா? இந்த இடத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்! உம்மை உள்ளே விட்டவர் யார்? இந்த நிமிஷமே வெளியே போய்விடும். உமக்கு மரியாதை தெரியவில்லையே” என்று கடிந்து சொன்னார். பிள்ளையவர்களையே அந்த வீட்டின் சொந்தக்காரரென்று எண்ணியவராதலால் ஆறுமுகத்தா பிள்ளையைத் தம்மைப்போலவே யாசகத்துக்கு வந்திருப்பவரென்று தம்முள் அவர் நிச்சயித்துக் கொண்டு, “நீர் யார்காணும் என்னை வெளியே போகச் சொல்வதற்கு? உமக்கு என்ன ஐயா அதிகாரம் இந்த இடத்தில்? வீட்டு எசமானவர்களிடத்தில் நான் ‘பிரஷங்கம்’ செய்து கொண்டிருக்கிறேன். அவர்களோ சந்தோஷிக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அதைக் கெடுப்பதற்குப் ‘பூஷை’ வேளையிற் கரடியை விட்டோட்டுவது போல் நீர் எங்கிருந்தையா வந்து முளைத்தீர்? முதலில் நீர் வெளியிலே போய்விடும்” என்றார்.

அப்போது வீட்டு எசமானென்று பிள்ளையவர்களைச் சொன்னதில் உவப்புற்ற ஆறுமுகத்தா பிள்ளை கோபங்கொள்ளாமல் புன்முறுவல் செய்து திரும்பவும், “நீர் யார் ஐயா?” என்று அவரைக் கேட்டனர். அவர், “நான் தஞ்சைமா நகரத்து அரண்மனைத் தமிழ் வித்துவாம்ஷன்” என்றார். ஆறுமுகத்தா பிள்ளை, “நீரா தமிழ் வித்துவான்! நீர் இதுவரையில் இன்னாரென்று இவர்களை அறிந்து கொள்ளவில்லையே. உம்மைத் தமிழ் வித்துவானென்று யார் மதிப்பார்?” என்றார். நாங்களெல்லாம் மெளனமாக இருந்தோம். பிள்ளையவர்களும் ஒன்றும் பேசவில்லை. அதனால் வீட்டுத்தலைவர் தம் சார்பில் இருப்பதாக எண்ணிக்கொண்டு, வந்தவர், “நீர் என்னுடைய படிப்பை அறிந்து கொண்டீரா? கொண்டிருந்தால் என்னை வெளியிலே போகச் சொல்லுவீரா? நீர் என்னை அறிந்துகொள்ளாதவர். நீரே வெளியிலே போம்” என்று மீட்டும் சொன்னார்.

 அப்பொழுது ஆறுமுகத்தா பிள்ளை அங்கே வெளியில் நின்று கொண்டிருந்த ஒரு வேலைக்காரனைப் பார்த்துக் கோபித்துக்கொண்டு, “ஏன் இந்த மனுஷனை உள்ளே விட்டாய்? வெளியே அழைத்துக்கொண்டு போய் விடு” என்றார். அவன் உடனே வந்து அதட்டிக் கீழே இறங்கச் சொன்னான். அவர், “நீ யார் என்னை வெளியே அழைத்துக்கொண்டு போகச் சொல்லுவதற்கு?” என்று கடிந்து சொன்னார். அந்த வேலைக்காரன் அவர் கையைப் பிடித்து மெல்ல அழைத்துக்கொண்டு வெளியே போய் ஓரிடத்திலிருக்கச் செய்து உள்ளே வராதபடி பாதுகாத்துக் கொண்டிருந்தான்.

அப்பால் எங்களுக்குப் பாடம் நடைபெற்றது. பாடம் பூர்த்தியானவுடன் படுக்கப்போக வேண்டியவர்கள் போய்விட்டார்கள். பின்பு வழக்கம் போலவே எல்லோரும் ஆகாரம் செய்து கொண்டார்கள். அப்பால் ஆறுமுகத்தா பிள்ளை, பிள்ளையவர்கள் விருப்பப்படி மனமிரங்கி, காவலிலிருந்த அப்புலவரை வருவித்துச் செவ்வையாக ஆகாரம் செய்வித்துச் செலவிற்கும் சிறிது கொடுத்து, “இனிமேல் இப்படிப்பட்ட தப்புக்காரியங்களைச் செய்ய வேண்டாம்” என்று கண்டித்துச் சொல்லி அனுப்பினார். அவரும் அந்த வீட்டுத் திண்ணையிலேயே படுத்துக்கொண்டிருந்துவிட்டுக் காலையில் எழுந்து எல்லோரிடத்தும் சொல்லிக்கொண்டு ஸந்தோஷத்துடன் கும்பகோணம் சென்றார்.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

13.  சங்கை – ஐயம்.
14.  தேவாரம் சொல்லும்போது முதலில் ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தலே முறை.
15.  வீசையின் மேலுள்ள முக ரோமம்; ஹிந்துஸ்தானிச் சொல்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s