-பத்மன்

கொன்றைவேந்தன்- 66
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
விளக்கம்:
சூதுவாது இல்லாமல் இருப்பது பெண்களுக்குச் சிறந்த அணிகலன் போன்றதாகும் என்கிறார் ஔவையார்.
பேதைமை என்றால் அறியாமை என்றும் பொருள் உண்டு. அவ்வாறெனில் முட்டாள்தனமாக இருப்பதா பெண்களுக்கு அழகு? ஞானப்பெண்ணான ஔவையார் அந்த அர்த்தத்திலா சொல்லுவார்? இல்லவே இல்லை.
அறிந்திருந்தாலும் அறியாததுபோல அடக்கமாக இருப்பதே பேதைமை; அதுவே பெண்களுக்கு ஆபரணம் போன்றது என்று சிலர் பொருள் கூறுவர். அது ஓரளவு சரி.
எல்லாம் எனக்குத் தெரியும் என்று அலட்டிக் கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு ஒருவகையில் அணிகலன் போன்றதுதான். ஆனால் இப்பொருளில், பெண்கள் அடக்கி வாசிக்க வேண்டும் என்பது போன்ற நிர்பந்தம் காணப்படுகிறது.
அப்படியானால் என்ன உட்பொருள்?
பேதைமை என்பது கள்ளங் கபடமற்ற, சூதுவாது இல்லாத குணத்தையும் குறிக்கிறது. இதற்கு அப்பாவித்தனம் என்பது மேலோட்டமாகத் தெரியும் பொருள்.
ஆராய்ந்து பார்த்தால் வஞ்சனையும், தேவையின்றி வாதிடுதலும் அற்ற நற்குணம் என்பதே இங்கே ‘பேதைமை’ என்பதன் உட்பொருள். இக்காலத் தொலைக்காட்சி சீரியல்களில் வரும் பெண் கதாபாத்திரங்களைப் பார்த்தால், சூதுவாது அற்ற பேதைமைக் குணம் பெண்களுக்குச் சிறந்த அணிகலன் என்பது தாமாகப் புரியும்.
அதுசரி, சூதுவாது அற்ற பேதைமைக் குணம் பெண்களுக்கு மட்டும்தான் அணிகலனா? ஆண்களுக்கு அது என்ன அடிமைச் சங்கிலியா என்ற கேள்வி எழுமே, எழுகிறதே?
அதற்கு இப்படிச் சிந்திக்கலாம். ‘பேதைமை என்பது மாந்தர்க்கு அணிகலன்’. அது திரிந்து மாதர்க்கு என ஆகிவிட்டது.
இருப்பினும் அணிகலன்களை அதிகம் விரும்பி அணிவது பெண்களாக இருப்பதால், சூதுவாது அற்ற நற்குணமாகிய பேதைமை ஆனது மாதர்க்குச் சிறந்த அணிகலன் போன்றது என்பதும் பொருத்தமானதே.
$$$
கொன்றைவேந்தன்- 67
பையச் சென்றால் வையம் தாங்கும்
விளக்கம்:
நிதானமாக நடந்து கொண்டால் இந்த உலகம் நம்மைத் தாங்கும் என்கிறார் ஔவையார்.
‘பைய’ என்பது பாண்டிய நாட்டுச் சொல்வழக்கு. இதற்கு மெல்ல, மெதுவாக என்று பொருள். அவசரமின்றி நிதானமாக நடத்தலும் ‘பைய’ எனப்படும்.
மதுரையில் சிவனடியார் திருமடத்துக்கு சமணர்கள் தூண்டுதலால் தீயவர்கள் தீ வைத்தபோது அந்தத் தீயை ‘பையவே சென்று பாண்டியனுக்கு ஆகுக’ என்று திருஞான சம்பந்தர் பணித்ததாக தேவாரம் குறிப்பிடுகிறது. அரசாட்சி செய்வோர் நடுநிலையோடு செயலாற்றாவிட்டால், தவறுகளைத் தடுக்கத் தவறினால் அதற்குரிய பலனை அவர்களே அனுபவிக்க வேண்டும் என்பதால், தீயோர்கள் வைத்த தீயை ‘பையப் போய் பாண்டியனைப் பற்றுவதற்கு’ மடை மாற்றிவிட்டார் திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். மெதுவாகத் தீயதன் பலனை அனுபவிக்கும்போது தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக அப்படிச் சொன்னார்.
சரி, விஷயத்துக்கு வருவோம். ஆக, பைய என்றால் நிதானமாக எனப் பொருள். பரபரப்பாகவோ அவசரமாகவோ செயலாற்றும்போது பதற்றம் ஏற்பட்டு சிந்தை தடுமாறி செயல் சீர்குலைய வாய்ப்புண்டு. நிதானமாகச் செயல்படும்போது சிந்தனை சீராக இயங்கி காரியம் கைகூடும். ஆகையால் நிதானமாகச் செயல்படுவோரை உலகம் தாங்கும்; ஆதரவளிக்கும்.
அவ்வாறு இல்லாமல் நிதானமின்றிச் செயல்பட்டால் உலகம் தாங்காது. பரபரப்பாக, இயந்தரகதியாக, நிதானம் தவறி மக்கள் இயங்குவதால் உலகுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களை அனைவரும் அறிவோம். அதன் பலன்களையும் அனுபவித்து வருகிறோம். இவ்வாறான நிதானமற்ற செயல்பாடுகள் தொடர்ந்தால் உலகம் நம்மைத் தாங்காது. பைய என்பதற்கு மென்மையாக என்றும் பொருள் உண்டு. அந்த மென்மை தவறி, வன்மை தலைதூக்கும்போது வையம் தாங்காது குமுறும். அது இயற்கைச் சீற்றமாகவும் வரும்; கடுமையான எதிர்விளைவாகவும் வரும்.
‘அதிர நடக்காதே, பூமாதேவி சாபமிடுவாள்’ என்று கிராமத்துப் பெரியோர்கள் எச்சரிப்பார்கள். இந்த அதிர நடத்தல் காலை அழுத்தி நடப்பதை அல்ல, அதிர்ச்சியூட்டும் வகையில் அடாவடியாக நடப்பதையே முக்கியமாகக் குறிக்கிறது.
நமது செயல்களில் நிதானமும், மென்மையும் வேண்டும். அப்போதுதான் உலகம் நம்மைக் கொண்டாடும்; தாங்கிக் கொள்ளும். இதனைத்தான் ஔவையார் ‘பையச் சென்றால் வையம் தாங்கும்’ என எளிமையாகக் கூறியுள்ளார்.
$$$
கொன்றைவேந்தன்- 68
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
விளக்கம்:
தீயவை என்று கருதுவதற்கு இடமுள்ள அனைத்தையும் தவிர்த்துவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.
பொல்லாங்கு என்பதற்கு தீது, தீங்கு, குறை, குற்றம், பொல்லாதது, ஈனம், கெடுதி, மறதி எனப் பல பொருள் உண்டு. எல்லாம் என்ற சொல்லுக்கு அனைத்து வகையிலான என்று பொருள். தீமை என வகைப்படுத்தக் கூடிய அனைத்தும் என எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒருவகையில் தீயது என இனம் காணக் கூடிய எல்லா விஷயங்களையும் இவ்வகையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொய் சொல்லல், புறம் கூறல், கோள் மூட்டுதல், பொறாமைப் படுதல், பேராசை கொள்ளுதல், சந்தேகித்தல், சந்தர்ப்பவாதம் பேசுதல், வம்பளத்தல், வதந்தி கிளப்புதல், வில்லங்கம் செய்தல், வீண்சண்டை இழுத்தல், குற்றமாய்க் காணுதல், குறை கூறிக் குத்துதல், கபடமாய் நடித்தல், வஞ்சித்தல், திருடுதல், கொள்ளையடித்தல், கையூட்டுப் பெறுதல், ஊழல் புரிதல், ஏமாற்றுதல், துரோகம் இழைத்தல், கொல்லுதல், சதித் திட்டம் தீட்டுதல் – இப்படியாக பொல்லாங்கை வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.
எனவே, எல்லா வகையிலான துன்பம் விளைவிக்கும் தீங்குகளையும், ஈனத்தை ஏற்படுத்தும் இழிசெயல்களையும் கண்டறிந்து அவற்றை ஒதுக்க வேண்டும்; செய்யாமல் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 69
போனகம் என்பது தானுழுது உண்ணல்
விளக்கம்:
உணவு என்பது தன்னுழைப்பில் கிடைப்பதை உண்ணுவதையே குறிக்கும் என்கிறார் ஔவையார்.
‘போனகம்’ என்பதற்கு உணவு, உணவு வகை எனப் பொருள். உழவு என்பது வேளாண் தொழிலை முக்கியமாகக் குறித்தாலும், வேறு எல்லா வகை கடின உழைப்புப் பணிகளையும் குறிக்கும். உழை என்பதற்கு வருந்தி முயற்சி மேற்கொள்ளல், கடினமாகப் பணியாற்றல் என்று பொருள். மற்ற எல்லாத் தொழில்களையும் விட விவசாயத்துக்கே அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால் ‘உழை’ என்பதை வேர்ச் சொல்லாகக் கொண்ட உழவு என்ற சிறப்புச் சொல், விவசாயத்துக்கு அமையப் பெற்றது.
ஆகையால் ஔவையார் இங்கே ’தான் உழுது உண்ணல்’ என்று கூறியிருப்பதன் பொருள், தனது கடின உழைப்பால் கிடைக்கும் வருவாயில் உண்பது என்று பொருள்படும்.
பிறர் அன்போடு அளிப்பது விருந்து. அது ஓரிரு நாள்களுக்குச் சரி. தினசரி பிறர் கொடுப்பதை உண்டால் அது பிச்சை. உண்மையான துறவிகள் பிச்சை ஏற்றாலும் அவர்களுக்குக் கொடுத்தாலும் புண்ணியம், மேன்மை. பிறர் பிச்சை ஏற்பது அவமானம். (உழைக்க இயலாதவர்கள் இதற்கு விதிவிலக்கு.)
அதைவிட அவமானம், உழைக்கத் தெம்பிருந்தும் வாய்ப்பிருந்தும் அதனைத் தவிர்த்து பிறர் உழைப்பில் உண்பது.
இங்கே கடின உழைப்பு என்பது உடல் உழைப்பை மாத்திரமல்ல, அறிவைக் கொண்டு உழைப்பதையும் குறிக்கிறது. புலவர்களை ‘சொல்லேர் உழவர்’ என்றே சான்றோர் குறிப்பதால், புலமை, கலைத் திறமை போன்றவையும் கடின உழைப்பே.
வளர்ந்த மனிதர் எவ்வகையினாலும் தன் உழைப்பில் உண்ண வேண்டும். அப்போது தான் அது உணவு என்றே சொல்லத் தகும்.
இதனைத்தான் ஔவைப் பிராட்டியார் ‘போனகம் என்பது தானுழுது உண்ணல்’ என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
$$$
கொன்றைவேந்தன்- 70
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
விளக்கம்:
உண்பது அருமருந்து என்னும் அமுதமாக இருந்தாலும்கூட உற்றார், உறவினர், சுற்றத்தோடு உண்பதே மேல் என்கிறார் ஔவையார்.
மருந்து என்பது உயிர் காப்பது; உடல்நலம் பேண உதவுவது. அதிலே நீண்ட ஆயுட்காலம் திடகாத்திரமாக வாழ உதவும் அமிர்தமானது ‘மருந்து’ என்ற பெயரிலேயே சிறப்பித்துப் போற்றப்படுகிறது.
அத்தகைய உயர்ந்த தேவாமிர்தம் ஆகினும் தனித்து உண்ணாமல் பலரோடு சேர்ந்து உண் என்கிறார் ஔவையார். இது, கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனாகிய புலவன் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றை நினைவுறுத்துகிறது:
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரன் அமிழ்தம் இயைவது ஆயினும் தமியர் உண்டலும் இலரே”
-என்பது அப்பாடல்.
இதன் பொருள்: “இந்திர லோகத்து அமிழ்தமாக இருந்தாலும்கூடத் தனியாக உண்ணாமல் சேர்ந்து உண்ணும் உயர்ந்தோர் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைபெற்றிருக்கிறது.”
நமது முன்னோர்களின் அத்தகைய உயர்ந்த உள்ளம் நமக்கும் வேண்டும் என்பதற்காகத் தான் ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்று அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.
மற்றொரு கோணத்திலும் இதனை நாம் நோக்கலாம். மருந்து என்பதற்கு சிறிய அளவு என்றும் பொருள் உண்டு. ஏதேனும் ஒரு பொருள் சிறிதளவேனும் இல்லை என்பதைக் குறிக்க, அப் பொருள் மருந்துக்குக் கூட இல்லை என்று சொல்வது வழக்கம். மருந்து, மாத்திரைகளை அள்ளிச் சாப்பிட மாட்டோம்; சிறிய அளவிலேயே உட்கொள்வோம். ஆகையால் மருந்து என்ற சொல், சிறிய அளவையும் சுட்டிக்காட்டுகிறது.
நம்மிடம் மருந்தைப் போல சிறிய அளவில் மட்டுமே உணவு இருந்தாலும்கூட அதை சுயநலமாக தானே உண்ணாமல், பசியோடு வந்திருக்கும் விருந்தினர்களை உபசரித்து, பகிர்ந்து உண்பதே சிறந்தது என்றும் ஔவை சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம்.
ஆக, விலை மதிப்பிட முடியாத உயர்ந்த வகை அரிய உணவாக இருந்தாலும் சரி, சொற்ப அளவிலான எளிய உணவாக இருந்தாலும் சரி, விருந்தினர்களோடு பகிர்ந்து அளித்து உண்பதே பண்பு என்று பகர்கிறார் ஔவையார்.
$$$
.
2 thoughts on “கொன்றைவேந்தன் (66-70)”