கொன்றைவேந்தன் (61-65)

-பத்மன்

கொன்றைவேந்தன் – ஔவையார்

கொன்றைவேந்தன் (55-60)

கொன்றைவேந்தன்- 61

பிறன்மனை புகாமை அறமெனத் தகும்

விளக்கம்:

பிறர் குடும்பத்துக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தாமல் இருத்தல் மிகச் சிறந்த அறமாக மதிக்கத் தகுந்ததாகும் என்றுரைக்கிறார் ஔவையார்.

பிறரது வாழ்க்கையில் மூக்கை நுழைத்து குட்டையைக் குழப்பும் டி.வி. சீரியல் கதாபாத்திரங்களை ரசிக்கும் மக்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் மிகவும் தேவையான அறிவுரை இது.

புகுதல் என்பது குறிப்பாக வன்மையை, அடாத செயலையே குறிக்கிறது. வினை என்பது நன்மை, தீமை இரண்டுக்கும் பொது என்றாலும் சிறப்பாக தீவினையைக் குறிப்பதைப் போல, புகுதலும் பொதுச் சொல் என்றாலும் குறிப்பாக தீய பொருளைச் சுட்டி நிற்கிறது. வீடு புகுந்து கொள்ளை, வெள்ளம் புகுந்தது என வன்செயலில் இச்சொல் அதிகம் பயில்கிறது.

பிறரது வீட்டுக்குள் செல்லுதல், நுழைதல் மென்மையானவையாக இருக்கும். ஆனால் புகுதல் அடாவடியாகவே இருக்கும். கள்ளத்தனமாகப் போகுதலும் புகுதலே.

ஆக பிறன்மனை புகுதல் என்பது அறத்துக்கு ஒவ்வாத செயலையே சுட்டுகிறது. உறவினர்களும் நண்பர்களும் உறவு, நட்பு வட்டத்தின் எல்லையை மீறி ஒரு குடும்பத்துக்குள் ஊடுருவுதலும் ஆதிக்கம் செலுத்துதலும் புகுதலே. இது அறமாகாது என்கிறார் ஔவையார்.

மேலும் சமுதாய ஒழுக்கத்தைப் பெண்களுக்கு மட்டுமே சாற்றிவிட்டு, அவ்வொழுக்கத்தை தான் ஓரத்தில் சார்த்திவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேறோர் அறிவுரையையும் ஔவையார் தருகிறார்.

பிறன்மனை புகாமை என்ற வகையில் பிறர் மனைவியை விரும்பி கேடு செய்யாமை என்பது இல்லறத்தைப் பேணும் மிகச் சிறந்த அறச் செயல் என்றுரைக்கிறார்.

இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை,

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனென்றோ ஆன்ற ஒழுக்கு

-என்று கூறியுள்ளார் (திருக்குறள்- 148).

பிறர் மனைவியை சிந்தையாலும் தீண்டாத மாண்பு அறம் மட்டுமன்று, சிறந்த ஒழுக்க நெறியுமாகும் என உரைத்துள்ளார்.

ஆகையால் ஆணோ, பெண்ணோ எவ்வகையிலும் பிறர் மனைக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தாமல் இருப்பதே போற்றத் தக்க அறச் செயல் என உபதேசிக்கிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 62

பீரம் பேணில் பாரம் தாங்கும்

விளக்கம்:

வலிமையைப் பேணினால்தான் சுமையைத் தாங்க முடியும் என்கிறார் ஔவையார்.

பீரம் என்பதற்கு வீரம், வலிமை, தாய்ப்பால் எனப் பல பொருள் உண்டு. பாரம் என்றால் சுமை, பொறுப்பு எனப் பொருள்.

உடல் வலிமையாக இருந்தால்தான் சுமைகளைத் தாங்க முடியும். உடலோடு உள்ளமும் வலிமையாக இருந்தால்தான் பொறுப்புகளைத் தாங்க முடியும், நிர்வகிக்க முடியும். உடல், மனம் ஆகியவற்றோடு புத்தி வலிமையும் இதற்கு அவசியம்.

இத்தகைய வலிமையைப் பேணிக் காக்க வேண்டும். உடலையோ மனத்தையோ அறிவையோ சரியாகப் பராமரிக்காமல் வலிமை குன்ற விட்டுவிட்டால் சுமைகள் நம்மை நசுக்கி விடும்; பொறுப்புகள் நம்மைப் பொசுக்கி விடும்.

எந்த ஒரு மனிதருக்கும் அவர் குழந்தையாக இருக்கும்போது அருந்திய தாய்ப்பாலே அவர்தம் வலிமைக்குக் காரணமாக அமைகிறது. தாய்ப்பால்தான் குழந்தைக்கு பலம். தாய், பாசத்தோடு கொடுக்கும் பால் குழந்தையின் உடல் உறுதிக்கு மட்டுமின்றி, மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. தாப்ப்பாலால் வலிமை பெற்ற குழந்தைகள் பிற்காலத்தில் குடும்ப பாரத்தை நன்கு சுமக்கிறார்கள். குழந்தைக்கு தாய்ப் பாலூட்டுவதன் அவசியத்தை இளம் தாய்மார்களுக்கு இக்காலத்தில் அறிவுறுத்திக் கூற வேண்டிய நிலை உள்ளது. இதைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் சிந்தித்து அறிவுறுத்தியுள்ளார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆக ‘பீரம்’ எனப்படும் வலிமையை முறையாகப் பேணினால்தான் பாரமாகிய சுமைகளையும் பொறுப்புகளையும் சரியாகத் தாங்க முடியும் என்று மொழிந்துள்ளார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 63

புலையும் கொலையும் களவும் தவிர்

விளக்கம்:

பொய் சொல்லுதல், கொலை செய்தல், களவாடுதல் ஆகிய தீய செயல்களைத் தவிர் என்கிறார் ஔவையார்.

புலை என்பதற்கு இழிவு, தீய செயல், பொய், புலால் உள்ளிட்ட பல பொருள்கள் உள்ளன.

கொலை செய்தல் என்பது பிறரது உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல். கொலை என்பதற்கு உயிர்வதை, இம்சை, துன்புறுத்தல் ஆகிய பொருள்களும் உண்டு. ஆக கொலை என்பது உடலில் இருந்து உயிரைப் பிரிப்பது மாத்திரமல்ல. உடலைத் துன்புறுத்துவதன் மூலம் உயிரைத் துடிக்கச் செய்வது, மனதை நோக அடிப்பது ஆகியவையும் கொலையே.

களவு என்பது பிறர் பொருளை அபகரித்தல். இது பிறர் அறியாத வகையில் செய்யும் திருட்டு, அறிகின்ற வகையிலேயே செய்யும் கொள்ளை ஆகிய இரு வித களவுகளையும் குறிக்கும். அதுமட்டுமின்றி வஞ்சனையால், கபடத்தால் பிறரது உடைமைகளை அபகரித்தலும் களவே.

இவ்வாறாக, புலை என்ற வகையில்- பொய் சொல்லுதல், இழிசெயல், தீய செயல், புலால் உண்ணுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். கொலை என்ற வகையில்- உயிர்வதை, துன்புறுத்துதல், மனத்தை நோவடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்கச் சொல்கிறார். களவு என்ற வகையில் -திருடுதல், கொள்ளையடித்தல், வஞ்சனையால் பிறர் உடைமைகளைச் சுருட்டுதல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு கூறுகிறார்.

மனிதரை மானுடத் தகுதியில் இருந்து கீழிறக்கம் செய்பவை புலை, கொலை, களவு ஆகிய மூன்றும். இந்த மும்மலங்களையும் தவிர்த்துவிட்டு மனிதனாக வாழ் என்று உபதேசிக்கிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 64

பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

விளக்கம்:

இழிவானவர்களிடம் முறையான ஒழுக்கம் என்பது இருக்காது என்கிறார் ஔவையார்.

பூரிய என்றால் இழிவான, கீழ்மையான, கெட்ட என்று பொருள். சீரிய என்றால் சீரான, நேரான, சிறப்பான என்று பொருள்.

ஒழுக்கம் என்பது கடைபிடிக்கும் கொள்கை, முறையான செயல்பாடு, நேர்த்தி, நெறிமுறை, தனது மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக மேற்கொள்ளும் செயல் – அது சார்ந்த பழக்கம் எனப் பொருள்படும். இழிவான, கீழ்மையான, தீய நடத்தை உள்ளவர்களிடம் இத்தகைய உயர் குணங்களை எதிர்பார்க்க முடியுமா?

கெடுதி, புறத்தில் இருந்து வருதல் வேறு. தன் இயல்பிலேயே கேடு இருத்தல் என்பது வேறு. உயர்ந்தவர்களை, மேலானவர்களை வெளியில் இருந்து வரும் கேடுகள் வருத்தினாலும் அவர்கள் நிலை திரிய மாட்டார்கள். ஆனால் இழிவானவர்களின் தன்னியல்பே கெட்டுப் போயிருப்பதால் அவர்களுக்கு நல்லது கிடைத்தாலும்கூட திருந்திவிட மாட்டார்கள்.

முன்னவர்களான உயர்ந்தோரை ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்று தனது மூதுரையில் குறிப்பிடுகிறார் ஔவையார். கெட்டாலும் என்பது, புறக் காரணிகளால் தனது செல்வம், அந்தஸ்து, செல்வாக்கு போன்றவை கெட்டுப் போவதைக் குறிக்கிறது. அவ்வித நிலையிலும்கூட மேலோர் செம்மையாகவே நடந்துகொள்வர்.

ஆனால் கீழோர் இதற்கு எதிர்மறை. இதற்கு சம்ஸ்கிருதத்தில் ஒரு சுபாஷிதம் உண்டு:

‘உபதேசோஹி மூர்க்கானாம் பிரகோபாய ந சாந்தயே
பயஹ பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்த்தனம்’

இதன் பொருள்: பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நன்மைக்குப் பதில் விஷத்தையே வளர்க்கும், அதுபோல தீயோருக்குக் கூறப்படும் அறிவுரையும் பதிலுக்கு அமைதியைத் தந்து விடாது.

இதுதான் கீழ்மைக் குணம். தனக்கு வரும் நன்மையையும் தீமையாய்க் கருதி உதறும், மென்மேலும் தீங்கையே விரும்பும்.

மேன்மை- கீழ்மை என்பது தொடர் பழக்கத்தால் வருவது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அது இயல்பாக மாறி விடுகிறது. அதன்பின் மீண்டும் மாறுவது இயலாமல் போய்விடும்.

ஆகையால்தான், ‘பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்’ என்று எச்சரிக்கிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 65

பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்

விளக்கம்:

மெய்ஞானம் பெற்றவர்களுக்கு தமக்கு வேண்டியவர் என்ற தனித்த விருப்பமும், பிறரை வெறுக்கின்ற கோபமும் இருக்காது என்கிறார் ஔவையார்.

பெற்றோர் என்றதும் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்- தந்தையர் நினைவுக்கு வருவர். பிள்ளைப் பேறு பெற்றவர் என்பதால் அவர்களுக்கு பெற்றோர் எனப் பெயர். ஆயினும் பேறுகளில் பெரிய பேறு, மெய்யான பேறு, மெய்ஞானத்தைப் பெறுவதுதான். ஆகையால் அத்தகைய உண்மையான உயர் ஞானத்தைப் பெற்றவர்களையே பெற்றோர் எனக் குறிப்பிடுகிறார் ஔவையார்.

அவ்வாறான மெய்ஞானிகள் காய்தல்- உவத்தல் இன்றிச் செயல்படுவர். அதாவது வேண்டாதவர் என்று கருதி வெறுப்பதோ, வேண்டியவர் என்று கருதி விரும்புவதையோ ஞானம் பெற்றவர்கள் செய்ய மாட்டார்கள்.

மெய்ஞானிகள் நடுநிலையோடு, விருப்பு –வெறுப்பால் மாறுபடாத நிலைமனதோடு இருப்பார்கள். இவர்களைத்தான் பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ‘ஸ்தித பிரக்ஞர்’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மெய்ஞானிகளுக்கு வேண்டியவர்- வேண்டாதவர் கிடையாது. அவர்கள் சமபாவத்தோடு தான் யாரையும், எதனையும் காண்பார்கள். இதனை,

‘அயம் பந்துரயம் நேதி கணனா லகுசேதஸாம்
உதார சரிதானாம் து வசுதைவ குடும்பகம்’

-என்று உரைக்கிறது சம்ஸ்கிருத சுபாஷிதம்.

இதன் பொருள்: இவர் நம்மவர், அவர் அயலவர் எனக் கருதுவது குறுகிய மனப்பான்மை. தாராள மனப்பான்மை கொண்டோர் உலகமே ஒரு குடும்பம் எனக் கருதுவர்.

ஆகையால் மெய்ஞானம் பெற்றோருக்கு இவர்கள் நமக்கு வேண்டிய சுற்றத்தார், அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள் என்ற பாகுபாடு இருக்காது என்று மொழிந்துள்ளார் ஔவையார்.

$$$

2 thoughts on “கொன்றைவேந்தன் (61-65)

Leave a comment