ஸ்வதந்திர கர்ஜனை- 2(3)

-தஞ்சை வெ.கோபாலன்

ஏ.ஓ.ஹியூம்

பாகம்- 2: பகுதி 3

இந்தியர்களுக்கென்று ஓர் அமைப்பு தேவைப்பட்டது!

1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரின் முடிவில் இந்திய சிப்பாய்களை அடக்கி,  ஒடுக்கி, படுகொலைகளைச்  செய்து முடித்து, இந்தியாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் பிரிட்டிஷ் அரசி விக்டோரிய மகாராணியார் இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலிருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

அப்படி விக்டோரியா மகாராணியார் இந்தியாவுக்கும் மகாராணி என்று ஆனதைக் கொண்டாடும் விதத்தில் 1877-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏக சக்ரவர்த்தினியாக முடிசூட்டிக்கொள்ள ஏற்பாடுகளைச் செய்தார். இந்தியாவில் நடக்கும் பிரிட்டிஷ் மகாராணியின் முடிசூட்டு விழாவை கோலாகலமாக நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்திய சமஸ்தான குறுநில மன்னர்கள் அனைவரும் வந்து குவிந்தனர். குறிப்பிடத்தக்க செல்வந்தர்களும், பெரும் பிரமுகர்களும் இந்த முடிசூட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டனர். அப்படி அழைக்கப்பட்டவர்களில் இந்தியர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்த சுரேந்திரநாத் பானர்ஜியும் ஒருவர்.

ஒரு பக்கம் மகாராணியின் முடிசூட்டு விழா.  மற்றொரு பக்கம் இந்தியா மிகக் கொடுமையான தாது வருஷத்து பஞ்சத்தால் பல்லாயிரம் பேர் மடிந்து இந்தியா சுடுகாடாக மாறியிருந்தது. அப்படி பஞ்சத்தால் வாடிய மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடாமல் அலட்சியப்படுத்திவிட்டு, மகாராணியின் முடிசூட்டு விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

இந்திய மக்களின் வரிப்பணம் அவர்களுடைய நலனுக்காகச் செலவிடப்படாமல் வீணாகிக் கொண்டிருப்பதைக் கண்டு தேசபக்தர்கள் வருத்தம் அடைந்தனர். அப்படி மனம் வருந்திய சுதேசிகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு அமைப்பை உருவாக்கினால் என்ன என்று எண்ணினார் சுரேந்திரநாத் பானர்ஜி.

அவருடைய திட்டம் செயல் வடிவம் பெற்றது. 1881-ஆம் ஆண்டு சென்னையில்  ‘மகாஜன சபை’  எனும் பொதுமக்கள் அமைப்பு ஒரு மாநாட்டைக் கூட்டியது. அந்த மாநாட்டில் அரசியல் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

1883-ஆம் ஆண்டில் கல்கத்தா நகரிலுள்ள ஆல்பர்ட் ஹால் எனும் பெயருடைய மண்டபத்தில் ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. அந்த மாநாடு மூன்று நாட்கள் நடந்தது. அதிலும் இந்தியா, இந்திய மக்கள், அந்நியர் ஆட்சி அதன் விளைவுகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டன. இப்படிப்பட்ட மாநாடுகள், கருத்துப் பரிமாற்றம் ஆகியவை காரணமாக இந்திய மக்களுக்கென்று ஒரு பொது அமைப்பு தேவை என்று உணரப்பட்டது.

இந்தியர்களுக்கென்று ஒரு தனி அமைப்பின் தேவையை உணர்ந்தவர்களில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஒரு ஆங்கிலேயரும் அதன் அவசியத்தை உணர்ந்தார். அவர் தான் இந்திய சிவில் சர்வீசில் இருந்து ஓய்வு பெற்றிருந்த சமூக ஆர்வலர் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பார்.

இது சம்பந்தமாக ஹியூம் பல இந்தியத் தலைவர்களுடனும்,  அப்போதைய வைஸ்ராய் டப்ரின் பிரபுவிடமும் விவாதித்தார். இதில் ஆங்கிலேயர்களும் ஆர்வம் காட்ட முக்கிய காரணம் இருந்தது. படித்த இந்தியர்களையும் இந்திய அரசு நிர்வாகத்தில் ஈடுபடுத்தினால், அவர்கள் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்யவும், மக்களை சமாதானப் படுத்தவும் முடியும் என்று –  சிப்பாய்க் கலகம் கொடுத்த பாடம் காரணமாக – ஆங்கிலேயர்கள் நினைத்தனர்.

அப்படி உருவாகும் அமைப்பு சமூக, அரசியல் நோக்கமுடையதாக இருத்தல் அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்ததால் வைஸ்ராயும் இதில் ஆர்வம் காட்டினார்.

சிப்பாய்க் கலகத்தினால் ஏற்பட்டிருந்த ரணம், அதைச் சரிசெய்ய எடுக்க வேண்டியிருந்த அவசர அவசிய நடவடிக்கைகள், மக்கள் உணர்வில் ஏற்பட்டிருந்த சுதேசிச் சிந்தனைகள், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், மற்ற பல இந்திய ஞானியர்களின் பிரசாரங்கள், இந்தியாவில் ஏற்பட்டிருந்த பஞ்சமும், அதனால் விளைந்த கேடுகளும் போன்ற காரணங்கள்,  ஆங்கிலேயர்களை இந்தியர்களிடையே அமைதியை ஏற்படுத்த வேண்டி இப்படிப்பட்டதொரு அமைப்பைத் தோற்றுவிக்கத் தூண்டின.

இவற்றையெல்லாம் தீர்க்கமாக ஆலோசித்த பின், ஹியூம் இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த ஆங்கில மொழி அறிவு பெற்றிருந்த இந்தியர்களுக்கு ஓர் அழைப்பை அனுப்பினார். பூனா நகரில் அனைவரையும் கூட்டி ஒரு மாநாடு நடத்த அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நேரத்தில் பூனாவில் பிளேக் நோய் பரவியதால், மாநாடு நடக்குமிடம் பம்பாய் நகரத்துக்கு மாற்றப்பட்டது.

1885 டிசம்பர் 20 – இந்திய வரலாற்றில் ஒரு சிறப்பான நாள். அன்று தான் பிற்பகல் 12 மணிக்கு பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் இந்திய பிரமுகர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாடு தொடங்கியது. அன்று முளைவிட்டு எழுந்த அந்தச் செடி பின்னாளில் பிரம்மாண்டமான ஒரு தேசிய இயக்கமாக உருவாகுமென்பதை எத்தனை பேர் கணித்திருப்பார்களோ தெரியவில்லை.

அங்கு கூடிய இந்திய பெருமக்களின் மாநாட்டுக்கு வங்கத்தைச் சேர்ந்த உமேஷ் சந்திர பானர்ஜி என்பார் தலைமை ஏற்றார். பல மாகாணங்களிலிருந்தும் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை 72. சென்னையிலிருந்து 21 பேர்; பம்பாயிலிருந்து 38 பேர்; வங்காளத்திலிருந்து 11 பேர், மற்ற இருவரும் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இது மாநாடு அல்ல, ஒரு சிறு கூட்டம் அவ்வளவு தான்.

இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் வைஸ்ராய் டப்ரின் பிரபுவின் வாழ்த்து படிக்கப்பட்டது.  ஏ.ஓ.ஹியூம் முன்மொழிய, ஜி.சுப்பிரமணிய ஐயர் (1891-இல் சென்னையில் ’சுதேசமித்திரன்’ பத்திரிகையை நிறுவியவர்) வழிமொழிய, கே.டி.டெலாங் என்பவர் ஆதரிக்க, டபிள்யூ.சி.பானர்ஜி கூட்டத்திற்கு தலைமையேற்றார்.

அந்தக் கூட்டத்தின் நோக்கங்கள் பற்றி தலைவர் டபிள்யூ.சி.பானர்ஜி குறிப்பிட்ட விஷயங்கள்:

1. நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் தேசபக்தர்களை ஒருங்கிணைத்தல்.

2. ஜாதி, மத, பிராந்தியங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் அனைவரையும் ஒன்று சேர்த்தல்.

3. அன்றைய அதிமுக்கிய சமூகப் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணுதல்.

4.  அடுத்த ஓராண்டுக் காலத்துக்கான செயல் திட்டங்களை வகுத்தல்.

மேற்கண்ட குறிக்கோள்களில் இந்திய சுதந்திரம் பற்றியோ, ஆண்டான் அடிமைக் கோட்பாட்டிற்கு எதிராகவோ, இந்தியர்களின் உரிமைகள் குறித்தோ எதுவும் இல்லை என்பதைக் கவனிக்கலாம்.

அன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அதில் வியப்படைய ஒன்றுமில்லை. இந்த அளவுக்காவது நம் இந்தியர்களுக்கிடையே ஒரு தேசிய உணர்வு ஏற்பட்டதைப் பாராட்டலாம்.

இந்த முதல் கூட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணிக்கும், பிரிட்டிஷ் ஆட்சிக்கும் விசுவாசமாக இருப்பதென்பது தான் முதல் தீர்மானம்.

பின்னர் நிறைவேறிய தீர்மானங்கள், ஆங்கிலக் கல்வி பயின்ற இந்திய உயர் வர்க்கத்தினரின் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவையே!

அப்படிப்பட்ட பல தீர்மானங்களின் இறுதியில் ஒவ்வோராண்டும் டிசம்பரில் காங்கிரஸ் மகாநாடு நடத்துவதென்றும், அடுத்த மாநாடு கல்கத்தாவில் 1886 டிசம்பர் 28-இல் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இப்படிப்பட்டதொரு அமைப்பு இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அமைந்தது தானா? இது சாதிக்கப்போவது என்ன? என்பது போன்ற வினாக்கள் எழுவது இயல்பே! ஆனால் அந்த மாற்றமும் நிகழ்ந்தது. எப்படி? எப்போது? என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களுக்கென்று ஓர் அமைப்பை ஏ.ஓ.ஹியூம் என்கிற ஆங்கிலேயர் தொடங்கக் காரணங்கள் என்ன? இதற்கு விடையளிக்கும் விதமாக எஸ்.ஆர்.மெஹத்ரா எனும் செய்தியாளர் சொல்வதைப் பார்ப்போம்:

 “இந்தியாவை சாம்ராஜ்யப் பிடியில் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் ஹியூம் தீட்டிய திட்டத்தின் விளைவு தான் காங்கிரஸ் உருவானது. இந்தியர்களின் கொந்தளிப்பு எனும் எழுச்சியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் நோக்கத்தில்தான் ‘காங்கிரஸ் மகாசபை’யை டப்ரின் பிரபுவும், அவரது நண்பராக விளங்கிய ஹியூமும் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தனர்.”

ஆனால்  ‘காங்கிரஸ் மகாசபை சரித்திரம்’ எழுதிய பட்டாபி சீதாராமையா எனும் ஆந்திரத்துக் காங்கிரஸ்காரர் சொல்லுகிறார்: “இந்தியாவின் பொருட்டு ஹியூம் துரை ஆற்றிய பணிக்காக, இந்தியர்கள் அவருக்குத் தனிக் கோயில் அமைத்து வழிபடாவிட்டால், தங்கள் நன்றியறிதலை முழுமையாக வெளிப்படுத்தியதாகாது.”

அடடா! என்ன ராஜ விசுவாசம்! இதே விஷயத்தைப் பற்றி மகாத்மா காந்தி வட்டமேஜை மகாநாட்டில் பேசும்போது சொன்னது:  “இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டது என்பதை உங்களிடம் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். காங்கிரசுக்கு சர் ஆக்டோவியன் ஹியூம் தந்தையாக விளங்கினார்.”  மேற்கண்ட கருத்துக்களிலிருந்து ஹியூமின் நோக்கம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தது நமக்குப் புலனாகிறது.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(3)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s