ஈ.வெ.ரா. குறித்த நேருவின் கடிதம்

-சேக்கிழான்

தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாகச் செய்யப்பட்டு வரும் பிராமண வெறுப்புப் பிரசாரம், ஜெர்மனியின் ஹிட்லர் செய்து வந்த யூத வெறுப்புப் பிரசாரத்திற்கு சற்றும் சளைத்ததல்ல. இதனை சமுதாயத்தில் விஷமாகப் பரப்பியதில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியாருக்கு பெரும் பங்குண்டு.

ஆரிய- திராவிட இனவாதம், பிராமண வெறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து சமயத்தைக் கேலி செய்வது என திராவிடர் கழகத்தின் பிரசார அரசியல் அலாதியானது. எந்த ஒரு பகுத்தறிவு அடிப்படையும் இல்லாத, வரலாற்று ஆதாரம் இல்லாத, போகிற போக்கில் வெறுப்புணர்வை உமிழும் சொற்களால் ஆனது ஈ.வெ.ரா.வின் பிரசாரம். அதன் தீய விளைவுகளை இன்றும் நாம் தமிழகத்தில் காண்கிறோம்.

நமது துரதிர்ஷ்டம், தமிழகத்தை 1967 முதல் ஆண்டு வரும் திராவிட அரசியல் சார்ந்த திமுகவும், அதிமுகவும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு, ஈ.வெ.ரா.வை பெரும் நாயக அந்தஸ்துடன் முன்னிறுத்தி வருகின்றன. (தேர்தல் காலங்களில் மட்டும் ஈ.வெ.ரா.வைப் பற்றி இவர்கள் மூச்சுக்கூட விட மாட்டார்கள். அது பற்றி தனியே நாம் ஆராய வேண்டும்).

ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் ஆரம்பகால அரசியல் காங்கிரஸ் கட்சியில் தான் அமைந்தது. அப்போது அவர் தெய்வ நம்பிக்கையும் தேசபக்தியும் மிகுந்தவராகவே இருந்தார் என்று அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது. அவர் நடத்திய ‘குடி அரசு’ இதழின் முதல் இதழில் (02.05.1925) பாரத அன்னை படமும் மகாத்மா காந்தி படமும் இடம்பெற்றுள்ளன. 1925ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காங்கிரஸில் இருந்து அவர் விலகிய பிறகே அவரது தடம் மாற்றமும் தடுமாற்றமும் தொடங்குகிறது.

சமூக சீர்திருத்தவாதியாக அவரது தொடக்கக் கால வாழ்க்கை அமைந்திருந்தாலும், அவரது பிற்கால பிரசாரப் பேச்சுகள், எழுதும் தகுதி கூட இல்லாதவை. அவரது பிராமண வெறுப்பு, ஹிந்து சமய வெறுப்பாகவும், இந்திய வெறுப்பாகவும் பரிணாமம் பெற்றது. ஆனாலும், அவரை இன்றும் தமிழகத்தில் ஒரு பெரும் கும்பல் வியந்தோதிக் கொண்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் ஈ.வெ.ரா.வைக் கொண்டாடுவது தான்.

அமரர்களாகிவிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி ஆகியோர் தங்கள் வாழ்நாளில் ஈ.வெ.ரா.வை எதிர்த்து நேருக்கு நேராக நின்று போராடினர் என்ற வரலாறு கூடத் தெரியாத அறிவிலிகளாக இன்றைய கம்யூனிஸ்டுகள் இருப்பது வெட்கக்கேடு.

அதேபோல, “ஈ.வெ.ரா.வை பைத்தியகார விடுதியில் வைத்து (மனநல மருத்துவமனை) சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே அன்றைய தமிழக முதல்வர் காமராஜருக்கு கடிதம் எழுதி இருப்பதை இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் சந்தேகமே.

அவர்கள் (இந்தியா கூட்டணிக் கட்சிகள்) அறிவதற்காகவே, முதல் பிரதமர் திரு. நேருவின் கடிதம் இங்கு தமிழாக்கத்துடன் பதிவிடப்படுகிறது….

காமராஜ் நாடாருக்கு கடிதம் 1

புது தில்லி

நவம்பர் 5, 1957

அன்பிற்குரிய காமராஜருக்கு 2,

தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் தொடர்ந்து நடத்தப்படும் பிராமண வெறுப்புப் பிரசாரம் என்னை மிகவும் மன உளைச்சல் அடையச் செய்கிறது.3 சில காலத்திற்கு முன்னர் இதுகுறித்து உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன் என நினைக்கிறேன். அப்போது இதுதொடர்பாக அரசு பரிசீலிப்பதாக என்னிடம் கூறப்பட்டது.4 ராமசாமி நாயக்கர் மீண்டும் அதே விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதையும், சரியானதொரு நேரத்தில் மக்களைக் குத்திக் கொல்லுமாறு தூண்டுவதையும் நான் காண்கிறேன். அவர் சொல்வது போன்ற ஒரு கருத்தை, ஒரு குற்றவாளி அல்லது பைத்தியக்காரனால் மட்டுமே சொல்ல முடியும்.

அவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வகையான விஷயம் நாட்டில் மிகவும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது. (இதனைப் பார்க்கும்) எல்லா சமூக விரோதிகளும், குற்றவாளிகளும் இப்படியும் (இவரைப் போலவே) செயல்படலாம் என்று நினைக்கக் கூடும்.

எனவே, இந்த விவகாரத்தில் காலதாமதம் செய்யக் கூடாது என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். அவரை ஒரு பைத்தியக்கார விடுதியில் வைத்து அவருடைய வக்கிர மனதுக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

உண்மையான கொலை நடந்தால் ஒழிய நடவடிக்கை எடுக்க சட்டம் அனுமதிக்காது என்று சிலர் என்னிடம் கூறுவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சட்டம் சில நேரங்களில் மிகவும் முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் (ஒரு மக்கள் குழுவை) கொலை செய்யத் தூண்டும் பிரசாரத்தை அனுமதிக்கும் அளவுக்கு சட்டம் முட்டாள்தனமானது அல்ல.

தங்கள் உண்மையுள்ள,

ஜவஹர்லால் நேரு

அடிக்குறிப்பு விளக்கங்கள்:

  1. ஜவஹர்லால் நேரு தொகுப்பு.
  2. மதராஸ் மாநிலத்தின் முதமைச்சர்
  3. ஜாதிகளை ஒழிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்காக என்ற கருத்துடன், தஞ்சாவூரில் 1957 நவம்பர் 3ஆம் தேதி, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலைமையில் திராவிடர் கழகம் ஒரு மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில்  “இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத சுதந்திரம் தொடர்பான  ஷரத்துகளை மத்திய அரசு 15 நாட்களுக்குள் நீக்க வேண்டும்; இல்லாவிட்டால் இந்திய அரசியல் சாசன புத்தகத்தின் நகல்கள் எரிக்கப்படும்; அரசு அலுவலகங்களில் உள்ள மகாத்மா காந்தியின் படங்கள், சிலைகள் அகற்றப்பட்டு உடைக்கப்படும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “அப்போதும் பயனில்லை என்றால் (தமிழகத்தில் உள்ள) பிராமணர்களைக் கொல்லுமாறும், அவர்களின் வீடுகளைக் கொளுத்துமாறும் திராவிடர் கழக உறுப்பினர்களுக்கு உத்தரவிட வேண்டிய நிலை வரும்” என்றும் அந்தத் தீர்மானம் குறிப்பிட்டது. இந்திய அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திர உரிமையே, இந்தியாவில் ஜாதி வேற்றுமைகளுக்குப் பாதுகாவலனாக இருப்பதாகவும், குறிப்பாக பிராமணர்களைக் காத்து வருவதாகவும், திராவிடர் கழகம் வாதிட்டு வருகிறது.
  4. 1957 அக்டோபர் 23இல் நேரு எழுதிய கடிதத்தைக் காண Selected Works (Second Series) Vol. 39, p 383 காணவும்.

ஆதாரம்:

# SELECTED WORKS OF JAWAHARLAL NEHRU (Second Series)- 40 (1 November - 31 December 1957) / PAGE 387 / STATES AND CENRALLY ADMINISTERED AREAS / V. MADRAS

# தமிழக முதலமைச்சர் காமராஜருக்கு இதே விஷயமாக இன்னொரு கடிதத்தையும் பிரதமர் நேரு, டிசம்பர் 4, 1957இல் எழுதி இருக்கிறார். அக்கடிதம், இதே தொகுப்பில் 388ஆம் பக்கத்தில் உள்ளது. அதுகுறித்து தனியே காண்போம்.

$$$

Leave a comment