ஸ்வதந்திர கர்ஜனை- 2(2)

-தஞ்சை வெ.கோபாலன்

சுரேந்திரநாத் பானர்ஜி

பாகம்- 2; பகுதி- 2

‘இந்திய தேசிய காங்கிரஸ்’ பிறந்தது

இனி சுதந்திரத்துக்காகப் போராடிய ‘இந்திய தேசிய காங்கிரஸ்’  பிறந்து வளர்ந்த வரலாற்றைப் பார்ப்போம்.

‘காங்கிரஸ்’என்று இங்கு குறிப்பிடும் சொல்லுக்கும் இன்று இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். இங்கு ‘காங்கிரஸ்’ என்னும் சொல், முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுக் கொடுத்து சலுகை பெறும், படித்த இந்தியர்கள் தொடங்கிய ஒரு அமைப்பைக் குறிக்கும் சொல்.

1857-இல் நடந்த முதல் சுதந்திரப் போரிலிருந்து ஆங்கிலேயர்கள் கற்றுக்கொண்ட பாடம், இனியும் இந்தியர்களை ஒதுக்கிவிட்டு இந்த பரந்து விரித்த நாட்டில் ஆட்சி நடத்துவதென்பது இயலாது என்பது தான். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானது தான், லார்டு மெக்காலேயின் கல்வித் திட்டத்தின் மூலம் இந்தியர்கள் தங்கள் பாரம்பரியக் கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி, ஆங்கிலேயர்களுக்கு அடிமைத் தொழில் செய்ய புதிய தலைமுறை இந்தியர்களை உருவாக்க வேண்டும் எனும் திட்டம்.

மெக்காலே கல்வி முறை  மூலம் ஏற்பட்ட மாறுதல்கள்:

மெக்காலே கல்வி முறையால் இந்தியச் சமுதாயம் தொழில் ரீதியாகப் பிரிந்து அவரவருக்கு உரிய தொழில்களை முறை தவறாமல் செய்து கொண்டிருந்த நிலை மாறி, எல்லாப் பிரிவினரும் ஆங்கிலக் கல்வி கற்கத் தொடங்கினர். அப்படி ஆங்கிலக் கல்வி பயின்றவர்களில் பலர் அன்றைய ஆட்சியாளர்களுக்கு அடிமைத் தொழில் செய்ய விரும்பிச் சென்றனர்.

மறுபடியும் ஒரு சிப்பாய்க் கலகம் போன்றதொரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அரசாங்கப் பணிகளில் இந்தியர்களுக்கும் பங்கு கொடுத்து அவர்களைத் தன்பக்கம் ஈர்க்க முயன்றது ஆங்கில அரசு. கல்வி கற்ற இந்தியர்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டால் இந்தியாவை தொல்லையில்லாமல் ஆள்வது சிரமமான காரியமல்ல என்பது அவர்கள் கருத்து.

ஆனால் கல்வி கற்ற இந்தியர்களில் பெரும்பாலோர் சிந்திக்கத் தொடங்கினர். நம்மை எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர்கள் அடக்கி ஆள்வதா; ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உலகோர் வியந்து பாராட்டுமளவுக்கு கல்வியிலும், வீரத்திலும், நாட்டு நிர்வாகத்திலும், தான தர்மங்கள், இறைவழிபாடு இவற்றில் தலைசிறந்து விளங்கிய நாம் அன்னியர்களுக்கு அடிபணிந்து கிடப்பதா என்கிற எண்ணங்கள் ஏற்படலாயின.

ஆங்கிலக் கல்வி பயின்றவர்களில் சிலர் வெள்ளைக்காரர்களுக்குப் பணியாளர்களாகப்  போன போதும், பெரும்பாலானவர்கள் சுயசிந்தனையினால் நம்மை அன்னியர் வந்து அடக்கி ஆள்வதை ஏற்க முடியாது எனும் எண்ணமும் ஒரு பக்கம் வலுப்பெற்று வந்தது.

இதையெல்லாம் சிந்தித்த பிரிட்டிஷ் அரசு ஒரு முடிவுக்கு வந்தது. இந்தியர்களுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கும் இந்திய குடிமக்களுக்குமிடையே அது ஒரு பாலமாக இருந்தால் உரசல் இல்லாமல் இந்த நாட்டை ஆள முடியும் என்பது அவர்கள் எண்ணம்.

இந்திய நாட்டின் வளம், செல்வம் இவற்றைக் கவனத்தில் கொண்டு இங்கு வியாபாரம் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள், நாடு பிடிக்கத் தொடங்கி அதற்காகப் பல சூழ்ச்சிகளையும், படைபலம் முதலியவற்றாலும் ஒரு கட்டத்தில் பாரத தேசம் முழுவதையுமே அடிமைப்படுத்தி வைத்தார்கள். அந்த அடிமை வாழ்வுக்குப் பழகிப்போன சாதாரண இந்தியனுக்கு இந்தத் தேசம் வெள்ளைக்காரனுக்குச் சொந்தம், அதில் அவன் தயவால் நாம் வாழ்கிறோம் என்கிற அடிமைப் புத்தியும்கூடத் தோன்றி வளர்ந்துவிட்டது. அதனால்தான் மகாகவி பாரதி அடிமை இந்தியர்களின் மனதில் உறைக்கும்படிக்கு உரக்கச் சொன்னான்:

“நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்!”

இந்தப் புண்ணிய பூமி நம்முடையதப்பா! இது நமக்கு மட்டுமே முழு உரிமை உடையதப்பா! இங்கு பிழைக்க வந்த அந்நியன் இந்த பூமியைத் தனதாக்கிக் கொண்டு இங்கு அதிகாரம் செலுத்துகிறான். ஆகவே விழித்துக்கொள், இந்த நாடு நம்முடையது, நமக்கு மட்டுமே உரிமையுடையது என்பதைப் புரிந்துகொள் – என்கிறான்.

மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? அப்போது நம் இந்திய மக்களிடையே ஒற்றுமை இருந்திருந்தால், நம் நாடு, நம் தேசம், நம் மக்கள் எனும் உணர்விருந்திருந்தால் ஒருவரையொரு காட்டிக் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அந்நியரை உள்ளே அனுமதித்திருக்க மாட்டார்கள். நமக்கு நாமே துரோகிகளாக ஆகியிருக்க மாட்டார்கள்.

நம்முடைய பாரம்பரியப் பெருமைகளையும், மகோன்னதமான வாழ்க்கை முறைகளையும் மதித்திருப்பார்களானால், அந்நியர் விரித்த வலையில் விழுந்து அடிமைகளாகி இருக்க மாட்டார்கள். ஒற்றுமை எனும் சொல்லின் பொருள் புரியாமல் தான் இந்தியர்கள் அடிமை இந்தியர்களாக ஆனார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவை விட மிகச் சிறிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகள் இங்கு வந்து புகுந்துகொண்டு நம்மை அடிமை நாடாக ஆக்கியது, எலியொன்று யானையை அடிமைப்படுத்தியது போல இருந்தது எனலாம். நம்மை நன்றாகச் சுரண்டி அந்த நாட்டினர் தொழில்துறையில் நன்கு முன்னேறி முன்னணிக்கு வந்தார்கள்.

1833-ஆம் ஆண்டு தொடங்கி 1853 வரையிலான இருபதாண்டு காலத்திற்குள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பஞ்சாப், சிந்து ஆகிய பிரதேசங்களை முழுமையாகக் கைப்பற்றி விட்டது. வாரிசுகள் இல்லாமல் போன சமஸ்தானங்களை அராஜகமாகப் பிடுங்கிக் கொண்டது. சில சமஸ்தானங்களின் ஆட்சிமுறை சரியில்லை என்று அந்தந்த மன்னர்களை விலக்கிவிட்டுத் தாங்களே முடிசூட்டிக் கொண்டார்கள்.

இந்த அநியாயங்களாலும், வீரர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாலும் தான் இந்திய சிப்பாய்கள் அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு மாபெரும் புரட்சியைத் தோற்றுவித்தார்கள். எனினும் அந்தப் புரட்சி ஆங்கிலேயர்களின் மிருக பலத்தால் வெற்றி கொள்ளப்பட்டது என்பதை முன் பகுதிகளில் பார்த்தோம்.

சிப்பாய்கள் செய்த கலவரங்களையடுத்து, பிரிட்டிஷ் அரசியார் இந்திய நிர்வாகத்தைத் தன் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். எனினும் முந்தைய கம்பெனி ஆட்சியின் முறைகளே கடைபிடிக்கப்பட்டதால் இவ்விரு ஆட்சிக்கும் ஒன்றும் வித்தியாசமில்லாமல் தான் இருந்தது. இந்திய மக்கள் சிறகொடிந்த பறவை போல செயலற்றுக் கிடக்கும்படி ஆயிற்று. சக்தி இல்லாமல் போன இந்திய சமுதாயம், ஆங்கில ஆட்சி  ‘இறைவன் நமக்களித்த தண்டனை’ என்று கருதி விருப்பமில்லாமலே ஏற்றுக் கொள்ள நேரந்தது.

முதல் சுதந்திரப் போர் வெற்றி பெறவில்லை என்பதால் இந்திய மக்கள் சோர்வடைந்து போனாலும், பயந்து அடங்கிக் கிடக்கவில்லை. சுதந்திர உணர்வு பெற்ற பல்லாயிரம் இந்தியர்கள் தோன்றிக்கொண்டே இருந்தார்கள்.

புதிய விழிப்புணர்வு இந்திய தேசத்தில் ஏற்படலாயிற்று. கலாசார இயக்கங்களும், கல்வி நிலையங்களும் எல்லா இடங்களிலும் தோன்றலாயின. இந்திய இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

ஆட்சியாளர்களின் ஆதரவோடு மதமாற்றம் நடந்து கொண்டிருப்பதை நிறுத்த ஆங்காங்கே கலாசார இயக்கங்கள் தோன்றின. இந்த மண்ணின் மைந்தர்களான இந்துக்கள்,  பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற இயக்கங்களைத் தோற்றுவித்தார்கள். இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தைக் காக்க பல இயக்கங்களைத் தோற்றுவித்தனர். பழைய பிற்போக்குக் கொள்கைகளைத் துடைத்தெறிந்து விட்டு புதிய சீர்திருத்த எண்ணங்கள் தோன்றலாயின.

வங்காளத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றி வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பினார். அவருடைய சீடரான சுவாமி விவேகானந்தர் உலகளாவிய அளவில் இந்து மதப் பெருமைகளைப் பறைசாற்றினார். மதம் சார்ந்த தேசபக்தி உணர்வு அவரால் பரப்பப்பட்டது.

தமிழ்நாட்டில் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் பணி புத்துணர்வை ஏற்படுத்தியது. அவருடைய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் மக்களிடையே நன்னெறியையும், புலால் நீக்கி அருள் வழி வாழவும் வழிகாட்டியது. நாம் அடிமைகளாக வாழ்கிறோம் என்கிற குற்ற உணர்வு ஒவ்வொரு இந்தியனுக்கும் தோன்றும்படியாக பல தலைவர்கள் உரையாற்றத் தொடங்கினார்கள்.

‘செப்பு மொழி பதினெட்டுடையாள்’ என்று பாரத அன்னையை மகாகவி பாரதி வர்ணிக்கிறார். அந்த பதினெட்டு மொழிகளிலும் புதிய இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. வங்காளத்தில் பக்கிம் சந்திரரும், மராட்டியத்தில்  ‘கேசரி’,  ‘மராட்டா’ எனும் ஏடுகளும், தமிழகத்தில் ஜி.சுப்பிரமணிய ஐயர் தொடங்கிய  ‘இந்து’,  ‘சுதேசமித்திரன்’ ஏடுகளும் சுதேச உணர்வுகளைத் தட்டி எழுப்பின.

1882-இல் வங்கத்தில் வெளியான ‘ஆனந்த மடம்’ எனும் நூலில் சந்நியாசிகளின் கலகம் பற்றி பக்கிம் சந்திர சட்டோபாத்யாயா எழுதி,  மக்கள் மத்தியில் உரிமைக்காகப் போராடும் உத்வேகத்தை எழுப்பினார். இந்த நூலில் வந்த ‘வந்தேமாதரம்’  பாடல் தான் சுதந்திரப் போரின் தாரக மந்திரமாக முழங்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சுதேச எண்ணங்களைப் பரப்பும் ஏடுகளை ஆங்கிலேயர்கள் தடைசெய்ய முற்பட்டனர். எந்தவொரு செயலும் அடக்க அடக்க மேலெழும் என்பதால், சுதந்திர உணர்வு அடக்குமுறைகளை உடைத்தெறிந்து எழத் தொடங்கியது.

ஆங்கிலக் கல்வி பயின்ற இந்தியர்கள் நாட்டுப் பணியில் ஆர்வம் கொண்டனர். பிரிட்டிஷ் இந்திய அசோசியேஷன் எனும் அமைப்பு தோன்றியது. பம்பாயிலும் தாதாபாய் நௌரோஜி, சிப்ளங்கர் போன்றோர்  ‘சர்வ ஜனசபா’ எனும் அமைப்பை தோற்றுவித்தனர். படித்தவர்கள் விழிப்புணர்வு இயக்கங்களைத் தோற்றுவித்த பின்னர் மக்கள் மெல்ல மெல்ல விழிப்புணர்வு பெறலாயினர்.

அப்போதைய தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் மகாஜன சபா என்றொரு அமைப்பு தோன்றியது. மக்கள் மத்தியில் தேசிய உணர்வை தட்டி எழுப்பிட புதிதாக இந்தியர்களே நடத்தும் சுதேசி பத்திரிகைகள் தோன்றின. குறிப்பாக ஜி.சுப்பிரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார், ரெங்கய்ய நாயுடு, சுப்பராய பந்துலு ஆகியோர் கூடி இந்த நாட்டைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.

வங்காளத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி என்பார் இந்தியாவில் இந்தியன் எனும் சுதேசி உணர்வை ஏற்படுத்துவதற்காக ‘இந்தியன் அசோசியேஷன்’ எனும் அமைப்பை உருவாக்கினார். இந்தியன் சிவில் சர்வீசில் பணியாற்றிய சுரேந்திரநாத் பானர்ஜி தன் பதவியைத் தூக்கி ஏறிந்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அங்கெல்லாம் தேசபக்தி விதையை இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர். மற்றொரு சிறப்பும் இவருக்கு உண்டு. அது தான் அரசியல் காரணங்களுக்காக முதன்முதல் சிறை சென்றவரும் இந்த சுரேந்திரநாத் பானர்ஜி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(2)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s