-தஞ்சை வெ.கோபாலன்

பாகம் – 2: இந்திய சுதந்திர இயக்கம்
பகுதி- 1
காங்கிரஸ் உருவான பின்னணி
இந்திய சுதந்திரப் போர் வரலாறு மிக நீண்ட நெடிய வரலாறு. அதில் வீர வரலாறு படைத்த சுதந்திரப் போர் தியாகிகள் எண்ணற்றவர்கள். அவை அனைத்தையும் விவரமாகப் படிக்க விரும்புவோர் அது குறித்த பல நூல்களைப் படித்துணர வேண்டும்.
அது சாத்தியமில்லாக நிலையில் ஓரளவாவது நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் தெரிந்துகொள்ள சிலம்புச் செல்வர் திரு. ம.பொ.சிவஞான கிராமணியாரின் நூலைப் படிக்க வேண்டும்; ஈரோடு வழக்குரைஞர் திரு. ஸ்டாலின் குணசேகரன் தொகுத்த நூல்களைப் படிக்க வேண்டும்.
அல்லது பல தியாகிகளின் வரலாற்றைத் தனித்தனியே படிக்க வேண்டும். அவற்றைப் படிக்கும் முன் ஓரளவு சுருக்கமாக இங்கு பார்க்கலாம். முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள மேற்கண்ட நூல்களைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இனி இந்திய சுதந்திரப் போரில் நாம் கடந்து வந்த பாதையை தூரத்துப் பார்வையில் மேலோட்டமாகப் பார்க்கலாம். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் வியாபாரம் செய்ய இந்தியாவில் இடம் பிடித்து, இடத்தைக் கேட்டால் மடத்தைப் பிடுங்குவது போல இந்திய நாட்டைச் சிறிது சிறிதாக பல்வேறு காரணங்களைக் காட்டி, சட்டத்தைக் காட்டி, போர் தொடுத்து, ஏமாற்றி பல இந்தியப் பிரதேசங்களைத் தன்வசப் படுத்திக் கொண்டு ஒரு காலகட்டத்தில் இந்தியாவே அவர்களுக்குச் சொந்தம் போலவும், இந்தியர்கள் அவர்களுடைய தயவில் இந்தியாவில் வசிப்பது போலவும் நடந்து கொள்ளத் தொடங்கினார்கள்.
இந்தியர்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதைக் குறிப்பிட்டுத்தான் மகாகவி பாரதி ‘நாம் இருக்கும் நாடு நமது என்பதை அறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதை அறிந்தோம்’ என்று பாடினான். இந்த நாடு நம்முடையது எனும் அறிவு கூட இல்லாமல் நாம் வாழ்ந்த அறியாமையை என்னவென்பது?
ஆங்கிலேய ஆட்சிக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பியவர் பூலித்தேவன். 1757-இல் இவர் கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்துப் போராடி மறைந்தார்.
அதனைத் தொடர்ந்து பல பாளையக்காரர்கள் ஆங்கிலேய கம்பெனியாருக்கு அடிபணிய மறுத்துப் போராடி உயிர் துறந்தனர். பாளையக்காரர் என்றால் என்ன பொருள்? தில்லியில் இருந்து நாட்டை ஆண்ட முகலாய சக்கரவர்த்திக்கு தென்னக பிரதிநிதியாக நிஜாமும், அவருக்குக் கீழ் தமிழ்நாட்டுக்குப் பொறுப்பாளராக ஆற்காடு நவாபும் இருந்தனர். இந்த நவாபு வரிவசூல் செய்யவும், தங்கள் சார்பில் சிறு படைகளை வைத்துக் கொள்ளவும் ஆங்காங்கே சில பிரதிநிதிகளை நியமித்திருந்தார்கள். அவர்கள் தான் பாளையக்காரர்கள். அவர்களுக்கு சிறிய அளவில் குறுகிய நிலப்பரப்பை ஆண்டுகொண்டு, ஆங்கிலேயர்களுக்காக ஒரு சிறு படையையும் வைத்து அவர்களுக்காகத் தங்கள் சொந்த செலவில் நிர்வகித்துக் கொண்டும், வரிவசூல் செய்து கொண்டு ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்டிக் கொண்டும் ஆட்சி புரிந்த நிலைமை அது.
பூலித்தேவனை அடுத்து தென்னகத்தில் ஆங்கில கும்பினியாரை எதிர்த்தவர்களில், பாஞ்சாலங்குறிஞ்சி கட்டபொம்மு நாயக்கர், சிவகங்கை மருது சகோதரர்கள் முதலானோரைச் சொல்லலாம்.
கட்டபொம்முவும், அவர் தம்பி ஊமைத்துரையும் மிகக் கடுமையாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டி போர்க்களத்தில் தோற்று தூக்கு மேடையில் உயிரை நீத்தனர். மருது சகோதரர்களும் போராடியதன் விளைவு பெரிய மருதுவின் தலை வெட்டப்பட்டு காளையார்கோயிலின் எதிரில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
தீரன் சின்னமலை கொங்கு நாட்டில் வீரத்துடன் போராடிய வரலாறும் இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் பிள்ளைகளை முன்வைத்தும், இந்திய சிப்பாய்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டித்தும் 1808-ல் வேலூர் புரட்சி நடந்தது. இந்த புரட்சிக்குப் பிறகு திப்புவின் வாரிசுகள் வங்காளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர். அங்கு அவர்களின் வாரிசுகள் கொல்கத்தாவில் ஒரு காலணிக் கடை வைத்துப் பிழைத்து வந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.
1800 வாக்கில் நடைபெற்ற இந்த போராட்டங்களுக்குப் பிறகு நீண்ட நெடிய தூக்கம் இங்கு நிலவி வந்திருக்கிறது. ஆங்காங்கே சில சலசலப்புகள் நடந்தனவே தவிர, பொதுவாக ஆங்கிலேயர்களுக்கு எந்தவித பெரிய எதிர்ப்பும் இல்லாமலேயே ஒரு நூற்றாண்டுக் காலத்தை ஓட்டிவிட்டனர்.
1800 முதல் ஓரு நூற்றாண்டு காலம் இந்திய மக்கள் உறங்கிக் கிடந்தனர் என்று சொல்லும்போது, 1857-இல் நடந்த சிப்பாய்க் கலகம் விழிப்புணர்வின் வெளிப்பாடு இல்லையா எனும் கேள்வி எழலாம்.
ஆம்! நியாயமான கேள்வி. ஆனால் 1857-இல் நடந்தது இந்திய சிப்பாய்கள் மட்டத்தில் மட்டுமே. அதில் இந்திய மக்கள் கலந்து கொள்ளவில்லை. அப்படி அவர்களும் கலந்து கொண்டிருப்பார்களானால், வெள்ளைக்காரர்கள் அன்றே நாட்டைவிட்டு ஓடியிருப்பார்கள்.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் நம்மவர்கள் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று தத்தமது வயிற்றுப் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு, அன்னியனுக்குச் சேவகம் செய்து கொண்டு அடிமை வாழ்வை துன்பமாக எண்ணாமல் வாழ்ந்த கொடுமையை என்னவென்று சொல்லுவது?
ஆங்காங்கே சிறு சிறு சலசலப்புகள் இருந்திருக்கலாமேயொழிய, பெரிய அளவில் மக்களிடமிருந்து எதிர்ப்புத் தோன்றியதாகக் கூற முடியாது. அதனால் தான் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியா வெள்ளையர்களின் ஆதிக்கத்தை முணுமுணுப்பின்றி அனுபவித்திருக்கிறார்கள்.
சிப்பாய்கள் நடத்திய எழுச்சிப் போருக்குப் பின்னணியும் காரணிகளும் வேறானவை என்பதால் அதை மக்கள் எழுச்சியாகப் பார்க்க முடியாது போகிறது.
அந்த இடைவெளியில் இந்தியப் பண்பாடு, நாகரிகம், கல்வி முறை, வாழ்க்கை முறை அனைத்துமே தலைகீழாக மாறி நாம் அடிமைகள் போல, நாகரிகத்தில் நலிந்தவர்கள் போல, ஆங்கிலேயர்களின் முன்பாக நாம் கல்வி, நாகரிகம் இவற்றில் தாழ்ந்தவர்கள் போல வாழும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. நமது பாரம்பரியக் கல்வி முறை நீக்கப்பட்டு, லார்டு மெக்காலே என்ற ஆங்கிலேய பிரபு கொண்டு வந்த கல்வித் திட்டம் புகுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்து சேவகம் செய்வதற்கான அடிமைச் சாசனம் தான் மெக்காலேயின் கல்வித் திட்டம்.
நமது பாரம்பரியமான கல்வி முறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஆங்கில மோகத்தால் அவர்கள் கல்வியைப் படிக்கத் தொடங்கியதன் மூலம் சிலர் அவர்களுக்கு அடிமைத் தொழில் புரியவும், பலர் அவர்களுக்கு எதிரான உணர்வுகளை வளர்த்துக் கொள்ளவும் தொடங்கினர்.
மகாகவி பாரதி தன்னுடைய இளமைக்கால அனுபவத்தைப் பற்றி சொல்லும்போது, தான் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆங்கிலக் கல்வி பயின்ற கொடுமையைத் தன் சுயசரிதையில் விளக்குகிறார். அதை சற்று இங்கு பார்ப்போம்.
“நெல்லையூர் சென்று அவ்வூணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன் புல்லை உண்க என வாளரிச் சேயினைப் போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம் நல்லது என்று ஒரு பார்ப்பனப் பிள்ளையை நாடுவிப்பது போலவும், எந்தைதான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை நரியுயிர்ச் சிறு சேவகர், தாதர்கள் நாயெனத் திரி ஒற்றர், உணவினைப் பெரிதெனக் கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர், பிறர்க்கு இச்சகம் பேசுவோர் கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்கென என்னை விடுத்தனன். அருமை மிக்க மயிலைப் பிரிந்து இவ் அற்பர் கல்வியில் நெஞ்சு பொருந்துமோ? கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர், பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார், அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலார்; வணிகமும், பொருள் நூலும் பிதற்றுவார்; வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார்; துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எட்டுணைப் பயன் கண்டிலார். கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் நம்பரும் திறலொடு ஒரு பாணினி ஞான மீதில் இலக்கணம் கண்டதும் இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்; சேரம் தம்பி சிலம்பை இசைத்ததும், தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார் அளித்துத் தர்மம் வளர்த்ததும் பேரருட் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்; அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்; முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள், என்ன குறி மற்றெங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கெனது உள்ளம் எரிவதே!
-பாரதம் தன் மகோன்னதத்தை இழந்து ஆங்கில மோகத்தால் அடிமைப்பட்டு, சிறுமைப்பட்டு, தன்னிலை இழந்து கீழோராகித் தவிக்கும் நிலைமையை நம்மவர் ஒரு நூற்றாண்டுக் காலம் உணரவே இல்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் சமூகத்தின் நிலவிய ஒற்றுமை, ஒழுக்கம், கல்வி, நாகரிகம், பண்பாடு இவை அனைத்துமே சிதறுண்டு போய், அன்னியன் வகுத்த வழியே வழி என்று வீழ்ந்து கிடந்தனர். அதன் பயனாய், வெள்ளையன் ஆளப்பிறந்தவனாகவும், இந்தியன் அடிமைசெய்யப் பிறந்தவனாகவும் ஆனதோடு, நம்மையும் அதுவே உண்மை என நம்பவும் வைத்துவிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் தான் சில அறிவாளிகள், ‘நாம் யார், எப்படிப்பட்ட மக்கள்’ என்பதைப் புரிந்து கொண்டு ஆங்கிலேயரில் சிலரும், நம் சகோதர் இந்தியர்களும் நம் மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்ட முயன்றனர். அவர்கள் அத்தனை பேருடைய வரலாற்றையும் முழுமையாகப் படிக்காவிட்டாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருடைய பெயர்களையாவது ஒரு முறை உச்சரித்து அவர்களை மரியாதை செய்வோமே!
ஆங்கிலேயர்களில் சிலர்: ஜான் புரூஸ் நார்ட்டன், எர்ட்லி நார்ட்டன். இந்தியர்களான சர் டி.முத்துசாமி ஐயர், பி.ரங்கைய நாயுடு, இந்து, சுதேசமித்திரன் தொடங்கிய ஜி.சுப்ரமணிய ஐயர், எஸ்.சுப்பிரமணிய ஐயர், சி.ஜம்புலிங்க முதலியார், சேலம் ராமசாமி முதலியார், எம்.வீரராகவாச்சாரியார், சி.கருணாகர மேனன் ஆகியோரை முன்னோடிகளாகச் சொல்லலாம்.
அந்த ஒரு நூற்றாண்டு முடிந்து சுதந்திர உணர்வு ஊட்டப்பட்ட இந்திய மக்களில் முன்னோடிகளாகத் திகழ்ந்த ஏராளமான சுதந்திரப் போர் தியாகிகளை மறவாமல் நினைவில் கொள்ள வேண்டியது நம் கடமை.
(கர்ஜனை தொடர்கிறது…)
$$$
One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(1)”