-பத்மன்

கொன்றைவேந்தன்-36
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
விளக்கம்:
சோம்பலால் முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் வாழ்க்கையில் மிகத் துயரங்களுக்கு ஆளாகி அழுது புலம்பிக் கொண்டிருப்பார்கள் என்று எச்சரிக்கிறார் ஔவையார்.
இது சாதாரணப் பார்வைக்கு வெளியே தோன்றும் கருத்து. இது சரிதான். அதேநேரத்தில் ஆழ்ந்து நோக்கினால், இதன் உட்பெருளில் யோகத்தின் பரமரகசியத்தை வெளிப்படுத்துகிறார் ஔவையார்.
சோம்பர் என்பது வேறேதும் உணர்ச்சிகளற்று இறைநினைப்பில் மூழ்கியிருக்கும் சிவயோகிகளை, சித்தர்களைக் குறிக்கும் சொல்.
தேம்புதல் என்பதற்கு வருந்துதல் என்பது தவிர மெலிதல், வலிகுறைதல் என்ற பொருள்களும் உள்ளன. யோகத்தில் திளைப்பவர்கள் உடலின் எடை குறைந்து, மெலிந்து வற்றலாய்க் காணப்படுவர். யோகநிஷ்டையிலும், வாழ்வின் நிறைவிலும் பூதஉடலற்ற ஆவிஉருவில் பெருவெளியில் மிதப்பர். திரிதல் என்பதற்கு மிதத்தல் என்ற இப்பொருள் தவிர மாற்றம்அடைதல் என்ற மற்றொரு பொருளும் உள்ளது. அதன்படி வேறு உணர்வற்று இறைநினைப்பிலேயே மூழ்கிக் கிடக்கும் தவயோகிகள், தமது உடலை மட்டுமின்றி தமது கர்மவினைகளையும் வருத்தி, நசிவடையச் செய்து தாம் – தனி என்ற நிலை திரிபுற்று இறையுடனேயே ஒன்றி இருப்பர் என்ற வேதாந்தக் கருத்து வெளிப்படுகிறது.
சோம்பர் இருப்பது சுத்தவெளியிலே சோம்பர் கிடப்பது சுத்தவெளியிலே சோம்பர் உணர்வு சுருதிமுடிந்திடஞ் சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே
-என இதனைத் தெளிவுறுத்துகிறார் திருமூலர்.
யோகிகள் இருப்பதும் மூழ்கிக் கிடப்பதும் தூய பெருவெளியிலே, அவர்களது உணர்வு வேதத்தின் முடிவான வேதாந்தத்திலே (வேதத்துக்கும் எட்டாத இடத்திலே என்றும் பொருள் கொள்ளலாம்) நிலைத்திருக்கும்.
ஆகையால் அவ்வேதத்தின் பாற்பட்டிருப்போர்தான் என்ற தனி நினைப்பையும் பிற நினைப்புகளையும் மறந்து இருப்பர். (வேதம் என்பது நாம் அறிவது. அதையும் தாண்டிய இடத்தை அடையும் யோகிகள் அறிதல் என்ற இந்நிலையையும் மறந்திருப்பர் எனவும் பொருள்).
இந்த யோக ரகசியத்தைத் தான் சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் என ஔவையார் மொழிந்துள்ளார்.
ஆக, சாதாரண மக்களுக்கு சோம்பலின்றி முயற்சி செய் என்றும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளோருக்கு வேறு நினைவின்றி இறைநினைப்பில் ஒன்றப் பழகு என்றும் உபதேசித்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்-37
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
விளக்கம்:
தந்தையின் சொல்லை மதித்து நடப்பதைவிட மிகச் சிறந்த மந்திரம் வேறு எதுவும் இல்லை என்கிறார் ஔவையார்.
மந்திரம் என்பது மனத்திரம். திரம் என்றால் வலிமை, உறுதி எனப் பொருள். மனத்தில் கருதுவதால், தொடர்ந்து உச்சரிப்பதால் எது நமக்கு வலிமையையும் உறுதிவாய்ந்த பாதுகாப்பையும் தருகிறதோ அதுவே மந்திரம். மனத்திறம் என்றும் சொல்லலாம். அவ்வகையில் மனத்துக்கு ஆற்றல் தருவது எனப் பொருள்படும்.
தமிழைப் போலவே சம்ஸ்கிருதத்திலும் மந்திரம் என்ற சொல் இதேபொருளைக் கொண்டுள்ளது.
“மனனாத் த்ராயதே இதிமந்த்ர:”
அதாவது மனத்தால் நினைப்பதாலேயே, நினைப்பவரை அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பாற்றுவதால் மந்திரம் எனப் பெயர்பெற்றது.
மேலும் ‘மனனாத்தத்வ பதஸ்யத்ராயத இதிபயத:’ என்றும் மந்திரத்துக்கு விளக்கம் உண்டு. அதாவது, எவற்றின் தத்துவத்தை அதாவது உட்பொருளை அறிந்துகொண்டால், நாம் அனைத்துவிதமான அச்சங்களில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் காப்பாற்றப்படுவோமோ, அதற்கே மந்திரம் என்றுபெயர்.
தந்தை என்பவர் வாரிசுகளின் வளர்ச்சியில், மேன்மையில் உண்மையான அக்கறை காட்டுபவர். அவர் சொல்கின்ற வார்த்தைகள், ஆலோசனைகள் அவர்தம் மக்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்புக் கேடயமாகவும் ஆற்றல் தருவதாகவும் அமையும். தனது அனுபவத்தில் இருந்தும், தாம் அறிந்தவற்றில் இருந்தும், தந்தை உதிர்க்கும் வார்த்தைகள், பிள்ளைகளுக்கு தீயஅனுபவங்களைத் தவிர்ப்பதற்கும் நல்அனுபவங்களைத் துய்ப்பதற்கும் வழிகாட்டும்.
அதனால்தான் தந்தையின் சொல்லைவிட மிக உயர்ந்த மந்திரம் வேறு எதுவும் இல்லை என்கிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 38
தாயிற் சிறந்தவொரு கோயிலுமில்லை
விளக்கம்:
தாயை விடச் சிறந்த கடவுள் வாழும் ஆலயம் வேறு எதுவும் இல்லை என்கிறார் ஔவையார்.
கடவுள் உலகத்தைப் பெற்றெடுத்து உயிரினங்களைப் பேணிக் காக்கிறார். தாயார் நம்மைப் பெற்றெடுத்துப் பேணிக் காக்கிறார். இந்த உலகத்துக்கு நாம் வருவதற்கு முதற்காரணம் தாய். தாயின் கருவறையில்தான் உயிர் உருவாகி வளர்கிறது. உள்ளிருக்கும்போது தாயின் உணவே நமக்கும் உணவாகிறது. பிறந்தவுடன் தாயின் ரத்தமே நாம் அருந்தும் பாலாகச் சுரக்கிறது.அதற்குப் பின்னரும் அமுதோடு சேர்ந்து அன்னையின் அன்பும் நமக்கு ஊட்டப்படுகிறது.
பிள்ளைகளுக்குத் தெய்வமாய் விளங்கும் தாயைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கோயில் வடிவமைப்பும் திகழ்கிறது.
தாயின் பாதங்களே கோபுரங்கள். சீவனைச் சுமக்கும் தாயின் கருவறையே தெய்வம் குடியிருக்கும் கர்ப்பக்ருஹம்.
கோயில்கள் ஆன்மிகத்தோடு பாரம்பரியக்கலைகளையும் பாதுகாக்கும் பொக்கிஷங்கள். தாயும் அதுபோல நமக்கு ஜீவன் கொடுப்பதோடு பாரம்பரியக் கலைகள், அறிவையும் நமக்கு ஊட்டுகிறார்.
போர்க்காலங்களில் கோயில்கள் பாதுகாப்பு அரண்களாகவும், பஞ்சக்காலங்களில் உணவுதானியங்களை வழங்கிக் காப்பாற்றும் கிடங்குகளாகவும் செயல்பட்டுள்ளன. கோயில் வளாகங்கள் நீதிபரிபாலன சபைகளாகவும் விளங்கியுள்ளன. இதேபோல தாயாரும் குழந்தைகளைப் பாதுகாப்பவராகவும் போஷிப்பவராகவும் குழந்தைகளுக்குள் ஏற்படும் சச்சரவுகளை கருணையோடு தீர்ப்பவராகவும் விளங்குகிறார்.
ஆகையால் தாய் என்பவர் தெய்வம் உறையும் கோயில் போன்றவர். கோயில் இறைவனுக்காக மனிதன் வடிவமைத்த ஆலயம். தாயார் உயிரினங்களுக்காக இறைவனே வடிவமைத்த ஆலயம்.
அதனால்தான் தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை என நவில்கிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 40
தீராக் கோபம் போராய் முடியும்
விளக்கம்:
கோபத்தைத் தணிக்காமல் வளர்த்துக்கொண்டே இருந்தால் அது பெரிய போரில் போய்த்தான் முடியும் என்று எச்சரிக்கிறார் ஔவையார்.
கோபம் ஏற்படுவது மனித இயல்பு. ஆனால் அதற்குத் தீர்வு காணாமல் வளரவிடுவது நமது மனநிலையைப் பாதிப்பதோடு நல்ல சூழ்நிலையையும் பாதிக்கும். கோபம் நமது சிந்தனை ஆற்றலை மழுங்கடித்து தவறான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.
தீராக் கோபமானது, ஒரு தீப்பொறி பல இடங்களில் பற்றுவதைப் போல, ஓரிடத்தில் இருந்து வேறு இடங்களிலும் வேறு மனிதர்களிடமும் பாய்ந்து பகையை ஏற்படுத்தும். இதன் விளைவு, மிகப் பெரிய சண்டையில் போய் முடியும்.
பீமன் மீதும் அர்ச்சுனன் மீதும் எழுந்த சிறுவயது கோபத்தை கௌரவர்கள் தணிக்காததால் பாண்டவர்களோடு பகைமூண்டு மிகப்பெரிய மகாபாரத யுத்தம் என்ற சர்வநாசத்தில் போய் முடிவடைந்தது. இதேபோல பாண்டவர்கள் மீது அஸ்வத்தாமன் கொண்டிருந்த தீராக்கோபம் சிறுகுழந்தைகளான உபபாண்டவர்கள் உட்பட பலரையும் அநியாயமாக இரவுநேரத்தில் படுகொலை செய்யவைத்து படுபாதகன் என்ற தீராப்பழியை மாவீரனும் சிரஞ்சீவியுமான அவனுக்குக் கொடுத்தது.
இதே ஔவையார் ஆத்திசூடியில் ‘ஆறுவது சினம்’ என்று மென்மையாகவும் அறிவுறுத்துகிறார். பழத்துக்காக கோபம்கொண்டு முருகப்பெருமான் பழநிமலை மீது நின்றபோது ஔவையார் அவரைப் பாடிப் பரவசப்படுத்தி கோபத்தைத் தணித்தார் என்று கூறப்படும் நாட்டுப்புற ஆன்மிகக்கதையில் கூட ஔவை, கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார்.
தணியாமல் நீடிக்கும் தீராக்கோபம்தான் நாடுகள் இடையேயான போருக்கும், பிரிவினைகளுக்கும், பயங்கரவாதப் பாதகங்களுக்கும் காரணமாக அமைகிறது. கொடுங்கோலர்களும் சர்வாதிகார்களும் மதவெறியர்களும் உருவாவது தீராக்கோபத்தால்தான். மனித சமுதாயத்துக்குப் பேரழிவைத் தரும் போரைத் தூண்டுவது இத் தீராக்கோபமே.
ஆகையால்தான் கொன்றைவேந்தனில் சற்று கடுமை கூட்டி தீராக் கோபம் பேராய் முடியும் என எச்சரிக்கிறார் ஔவையார்.
$$$
2 thoughts on “கொன்றைவேந்தன் (36-40)”