சத்திய சோதனை- 4 (42-47)

-மகாத்மா காந்தி

நான்காம் பாகம்

42. நோய்க்குச் சிகிச்சை


     நுரையீரலுக்கு அருகில் இருந்த ரணத்தினால் ஏற்பட்ட என் நோய், குணமாகாமல் இருந்துவந்தது, கொஞ்சம் கவலையை அளித்தது. ஆனால், உள்ளுக்கு மருந்து சாப்பிடுவதனால் இது குணமாவதில்லை என்பதையும் உணவில் செய்து கொள்ளும் மாறுதல்களினாலும் வெளி பரிகாரங்களினாலும் குணமாகும் என்பதையும் அறிவேன்.

டாக்டர் அல்லின்ஸன் பிரபலமான சைவ உணவுவாதி. அவரை அழைத்து வரச் செய்தேன். அவர் உணவு மாறுதல்களின் மூலமே பல நோய்களுக்குச் சிகிச்சை செய்துவந்தார். 1890-ஆம் ஆண்டிலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர் என்னை முற்றும் பரிசோதனை செய்து பார்த்தார். பால் சாப்பிடுவதே இல்லை என்று நான் விரதம் எடுத்துக் கொண்டிருப்பது பற்றியும் அவரிடம் சொன்னேன். அவர் என்னை உற்சாகப்படுத்திவிட்டுச் சொன்னதாவது: “நீங்கள் பால் சாப்பிட வேண்டியதே இல்லை. உண்மையில், சில நாட்களுக்கு நீங்கள் கொழுப்புச் சத்து எதையுமே சாப்பிடக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.” சாதாரணப் பழுப்பு ரொட்டி, பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், மற்றும் கிழங்குகள் போன்றவற்றைப் பச்சையாகவும், கீரைகளையும், பழங்களையும் முக்கியமாக ஆரஞ்சுப் பழங்களையும் சாப்பிட்டு வருமாறு அவர் எனக்கு யோசனை கூறினார். கறிகாய்களைச் சமைக்கக் கூடாது; அப்படியே பச்சையாக மென்று தின்ன என்னால் முடியாவிட்டால் நுட்பமாகத் திருகி வைத்துக்கொண்டு சாப்பிடச் சொன்னார்.

இதன்படி மூன்று நாட்கள் சாப்பிட்டேன். ஆனால், பச்சைக் காய்கறிகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்தப் பரீட்சையை முற்றும் அனுசரித்துப் பார்க்கும் வகையில் என் உடல்நிலை இல்லை. பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடுவதற்கு எனக்குப் பயமாகவே இருந்தது.

அதோடு, என் அறையின் சன்னல்களை யெல்லாம் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும்படியும், வெதுவெதுப்பான நீரில் குளிக்குமாறும், நோயுள்ள பகுதிகளில் எண்ணெய் தடவித்தேய்க்கும் படியும், பதினைந்து நிமிடங்களிலிருந்து முப்பது நிமிட நேரம் வரை திறந்தவெளியில் நடக்கு மாறும் டாக்டர் அல்லின்ஸன் எனக்குக் கூறினார்.

என் அறையின் சன்னல்கள், பிரெஞ்சு முறையிலானவை. ஆகவே, முழுவதும் திறந்து வைத்துவிட்டால் மழை நீரெல்லாம் உள்ளே வந்துவிடும். விசிறி போன்றிருந்த சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. ஆகவே, நல்ல காற்று உள்ளே வரட்டும் என்பதற்காக அதன் கண்ணாடிகளை உடைத்துவிட்டேன். மழை நீர் உள்ளே வராத வகையில் ஒருவாறு சன்னலையும் திறந்து வைத்தேன். இந்த முறைகள் எல்லாம் ஓரளவுக்கு என் தேக நிலையில் அபிவிருத்தியை அளித்தன. என்றாலும், பூரணமாகக் குணமாகிவிடவில்லை.

 அச்சமயம் லேடி செஸிலியா எப்பொழுதாவது என்னைப் பார்க்க வருவதுண்டு. நாங்கள் நண்பர்களானோம். நான் பால் சாப்பிடும்படி செய்துவிட வேண்டும் என்று அவர் மிகவும் முயன்றார். ஆனால், நான் பிடிவாதமாக மறுத்து விடவே பாலுக்குப் பதிலாகச் சாப்பிடக்கூடிய ஒன்றைத் தேடிப் பிடிப்பதற்காக அலைந்தார். பாலும் தானியச் சத்தும் கலந்ததான ‘மால்ட்டட் மில்க்’ சாப்பிடலாம் என்று யாரோ ஒரு நண்பர் அவருக்குக் கூறினார். அதில் பால் கலப்பே கிடையாது என்றும், பால் சத்து இருக்கும் வகையில் ரசாயன முறையில் அது தயாரிக்கப்பட்டது என்றும், உண்மையை அறியாமலேயே அந்த நண்பர் அவருக்கு உறுதி கூறிவிட்டார். லேடி செஸிலியா, என்னுடைய சமயக் கொள்கை சம்பந்தமான நம்பிக்கைகளை மதித்து நடப்பவர் என்பதை அறிவேன். ஆகவே, அவர் சொன்னதை அப்படியே நம்பிவிட்டேன். அந்தப் பொடியை நீரில் கலந்து சாப்பிட்டேன். அதன் சுவை பாலின் சுவை போன்றே இருக்கக் கண்டேன். பிறகு புட்டியின் மீது ஒட்டியிருந்த சீட்டில் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்தேன். பாலிலிருந்து தயாரிக்கப் படுவதே அது என்பதை அறிந்தேன். சாப்பிட்ட பிறகுதான் இதெல்லாம் தெரிந்தது. ஆகவே, அதைச் சாப்பிடுவதை விட்டு விட்டேன்.

நான் கண்டுபிடித்துவிட்டதைக் குறித்து லேடி செஸிலியாவுக்கு அறிவித்து, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அவரோ, தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரைந்தோடி வந்தார். அவருக்குச் சொன்ன நண்பர், புட்டி மீது ஒட்டியிருந்த சீட்டைப் படித்துப் பார்க்கவே இல்லை. இதைக் குறித்து கவலைப்படவே வேண்டாம் என்று அவரை மிகவும் வேண்டிக் கொண்டேன். எவ்வளவோ சிரமப்பட்டுத் தேடிக்கொண்டு வந்தவைகளை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாமைக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். தெரியாததனால் தவறாகப் பால் சாப்பிட்டு விட்டதற்காக, குற்றம் செய்து விட்டதாக எண்ணி நான் வருத்தப்படவில்லை என்றும் அவருக்கு உறுதி கூறினேன்.

லேடி செஸிலியாவுடன் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிய மற்றும் பல இனிய ஞாபகங்களெல்லாம் உண்டு. அவற்றையெல்லாம் கூறாமல் மேலே செல்ல வேண்டியவன் ஆகிறேன். எத்தனையோ சோதனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே எனக்குப் பெரும் ஆறுதல் அளிப்பவர்கள் ஆக இருந்து வந்த அநேக நண்பர்களைப் பற்றி நான் எண்ணிப் பார்க்க முடியும். இவ்விதம் கடவுள், துயரங்களையும் இன்பமானவைகளாக்கி விடுகிறார். இதில் நம்பிக்கையுள்ளவர்கள், கருணைக் கடலான கடவுளின் அந்த அருளையே அந்நண்பர்களிடமும் காண்பார்கள்.

 டாக்டர் அல்லின்ஸன் அடுத்த முறை என்னைப் பார்க்க வந்த போது, ஆகாரத்தில் எனக்கு விதித்திருந்த கட்டுத் திட்டங்களைத் தளர்த்தி விட்டார். கொழுப்புச் சத்துக்காக நிலக்கடலை, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளும் படியும், கறிகாய்களைச் சமைத்து, நான் விரும்பினால் அரிசிச் சாதத்துடன் சாப்பிடுமாறும் கூறினார். இந்த மாறுதல்கள் எனக்குப் பிடித்தன. ஆனால், இவைகளினாலும் பூரண குணம் ஏற்படவில்லை. அதிக ஜாக்கிரதையான பணிவிடை அவசியமாகவே இருந்தது. பெரும்பாலும் நான் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது.

என்னைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக டாக்டர் மேத்தா அவ்வப்போது வருவதுண்டு. தாம் சொல்லுகிறபடி கேட்பதாய் இருந்தால், என் நோயைக் குணப்படுத்தி விடுவதாக அவர் எப்பொழுதும் சொல்லி வந்தார்.

நிலைமை இவ்வாறு இருந்து வரும்போது ஒருநாள், ஸ்ரீ ராபர்ட்ஸ் என்னைப் பார்க்க வந்தார். தாய்நாட்டுக்குத் திரும்பி விடுமாறு அவர் வற்புறுத்திச் சொன்னார். “இந்த நிலைமையில் நீங்கள் நெட்லிக்குப் போவது சாத்தியமே இல்லை. இனி வரப்போவது கடுமையான குளிர்காலம். இந்தியாவில் தான் நீங்கள் பூரணமாகக் குணமடைய முடியுமாகையால் அங்கே நீங்கள் போய்விட வேண்டும் என்று உங்களுக்குக் கண்டிப்பாகக் கூறுகிறேன். அங்கே நீங்கள் குணமடைந்த பிறகு அப்பொழுதும் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால், நீங்கள் உதவி செய்ய அங்கே அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. இப்பொழுதுகூட, நீங்கள் இது வரை செய்து இருப்பது எந்த விதத்திலும் அற்பமானது என்று நான் கருதவில்லை.”

அவருடைய யோசனையை ஏற்றுக்கொண்டேன். இந்தியாவுக்குத் திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன்.

$$$

43. தாய்நாடு நோக்கி


     இந்தியாவுக்குப் போவதற்காக ஸ்ரீ கால்லென்பாக் என்னுடன் இங்கிலாந்துக்கு வந்தார். இருவரும் ஒன்றாகவே வசித்து வந்தோம். ஒரே கப்பலிலேயே புறப்படவும் விரும்பினோம். அப்பொழுது ஜெர்மானியர் மீது கண்காணிப்புக் கடுமையாக இருந்து வந்தது. ஆகையால், ஸ்ரீ கால்லென்பாக்குக்குப் பிரயாண அனுமதிச் சீட்டுக் கொடுப்பதற்கு ஸ்ரீ ராபர்ட்ஸ் ஆதரவாக இருந்தார். இதைக் குறித்து வைசிராய்க்கும் அவர் தந்தி கொடுத்தார். “வருந்துகிறோம். அத்தகைய அபாயம் எதற்கும் உட்பட இந்திய அரசாங்கம் தயாராயில்லை” என்று லார்டு ஹார்டிஞ்சிடமிருந்து நேரடியான பதில் வந்துவிட்டது. அந்தப் பதிலில் அடங்கியிருந்த நியாயத்தை நாங்கள் எல்லோரும் உணர்ந்து கொண்டோம்.

ஸ்ரீ கால்லென்பாக்கை விட்டுப் பிரிவது எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அவருக்கு இருந்த துயரம் இன்னும் அதிகம் என்பதைக் கண்டேன். அவர் இந்தியாவுக்கு வர முடிந்திருந்தால், அவர் இன்று ஒரு குடியானவனாகவும், நெசவாளியாகவும் இன்பமான எளிய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார். இப்பொழுது அவர் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார். அவர் பழைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு கட்டிடச் சிற்பியாக நல்ல வருமானத்துடன் தொழில் நடத்தி வருகிறார்.

கப்பலில் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யவே விரும்பினோம். ஆனால், பி. அண்டு ஓ. கம்பெனிக் கப்பல்களில் மூன்றாம் வகுப்பு இல்லாததால் இரண்டாம் வகுப்பில் சென்றோம். தென்னாப்பிரிக்காவிலிருந்து நாங்கள் கொண்டு வந்திருந்த உலர்ந்த பழங்களை உடன்கொண்டு போனோம். இவை கப்பலில் கிடைக்க மாட்டா. ஆனால், புதுப் பழங்கள் தாராளமாகக் கிடைக்கும்.

என் விலா எலும்புகளுக்கு டாக்டர் ஜீவராஜ மேத்தா, ‘மெடேஸ் பிளாஸ்திரி’ போட்டுக் கட்டி விட்டதோடு செங்கடல் போகும் வரையில் அதை நீக்கக் கூடாது என்றும் சொன்னார். இதனால் உண்டான தொல்லையை இரண்டு நாள் சகித்துக் கொண்டுவிட்டேன். அதற்கு மேல் என்னால் சகிக்க முடியவில்லை. அதிகச் சிரமப்பட்டே அந்த பிளாஸ்திரியை அவிழ்க்க என்னால் முடிந்தது. அதன் பிறகு உடம்பைச் சுத்தம் செய்து கொள்ளவும் குளிக்கவும், மீண்டும் சுதந்திரம் பெற்றேன்.

பெரும்பாலும் பழங்களையும் கொட்டைப் பருப்புகளையுமே சாப்பிட்டு வந்தேன். நாளுக்கு நாள் குணம் அடைந்து வருவதாக உணர்ந்தேன். சூயஸ் கால்வாய்க்குள் பிரவேசித்த போது, அதிக தூரம் குணமடைந்து விட்டதாக எனக்குத் தோன்றிற்று. நான் பலவீனமாகவே இருந்தேனாயினும் ஆபத்தைக் கடந்துவிட்டதாக எண்ணினேன். என் தேகாப்பியாசத்தையும் நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டு வந்தேன். நடுத்தரமான வெப்பமுள்ள பிரதேசத்தின் சுத்தமான காற்றே என் தேக நிலையில் ஏற்பட்ட அபிவிருத்திக்குக் காரணம் என்று கருதினேன்.

     கப்பலிலிருந்து இந்தியப் பிரயாணிகளும் ஆங்கிலப் பிரயாணிகளும் நெருங்கிப் பழகாமல் தொலைவாகவே இருந்து வந்ததைக் கவனித்தேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் கப்பலில் சென்ற சமயங்களில் கூட, இப்படி இருந்ததாக நான் கண்டதில்லை. எனக்கு இவ்விதம் தோன்றியது முந்திய அனுபவங்களினாலா, வேறு காரணத்தினாலா என்பது எனக்குத் தெரியாது. சில ஆங்கிலேயருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், அது வெறும் சம்பிரதாயப் பேச்சே. தென்னாப்பிரிக்கக் கப்பல்களில் சென்றபோது இருந்ததைப் போன்ற அன்னியோன்யமான சம்பாஷணைகளே இந்தத் தடவை இல்லை. இதற்கு ஒன்று காரணமாக இருக்கக் கூடும் என்று நான் எண்ணுகிறேன். தாங்கள் ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிந்தோ அறியாமலேயோ, ஆங்கிலேயரின் உள்ளத்திற்குள் இருந்திருக்கக் கூடும். அடிமைப்பட்ட இனத்தினர் தாங்கள் என்ற எண்ணம் இந்தியரின் உள்ளத்திற்குள்ளும் இருந்து இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்து விடவேண்டும் என்று நான் அதிக ஆர்வத்துடனிருந்தேன்.

ஏடன் சேர்ந்ததுமே தாய்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போன்ற உணர்ச்சி எங்களுக்கு உண்டாயிற்று. ஸ்ரீ கெகோபாத் காவாஸ்ஜி தின்ஷா, ஏடனைச் சேர்ந்தவர். அவரை டர்பனில் சந்தித்திருக்கிறோம். அவருடனும் அவர் மனைவியோடும் நெருங்கிப் பழகியும் இருக்கிறோம். ஆகையால், ஏடன் வாசிகளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

சில தினங்களுக்கெல்லாம் பம்பாய் வந்தடைந்தோம். பத்து ஆண்டுகள் பிற நாடுகளில் இருந்துவிட்ட பின்பு தாய்நாட்டிற்குத் திரும்பியது பெரிய ஆனந்தமளித்தது.

கோகலேயினுடைய யோசனையின் பேரில் பம்பாயில் எனக்கு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். தமது தேக நிலை சரியாக இல்லாதிருந்தும் கோகலேயும் பம்பாய்க்கு வந்திருந்தார். அவரோடு நான் ஐக்கியமாகி விடுவதன் மூலம் கவலையற்றிருக்கலாம் என்ற திடமான நம்பிக்கையுடனேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். ஆனால், விதியோ முற்றும் வேறுவிதமாக இருந்துவிட்டது.

$$$

44. வக்கீல் தொழில் பற்றிய நினைவுகள்


     இந்தியாவில் என் வாழ்க்கை எந்தப் போக்கில் போயிற்று என்பதைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்பு, இதுவரையில் வேண்டுமென்றே நான் கூறாமல் இருந்து வந்திருக்கும் தென் ஆப்பிரிக்கா பற்றிய மற்றும் சில செய்திகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

வக்கீல் தொழிலைப் பற்றிய என் நினைவுகளைக் கூறுமாறு சில வக்கீல் நண்பர்கள் கேட்கிறார்கள். அத்தகைய நினைவுகள் ஏராளமானவை. அவைகளையெல்லாம் சொல்லுவதானால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அது என் நோக்கத்திற்கும் மாறானது. ஆனால், அவைகளில் உண்மையைக் கடைபிடிப்பது சம்பந்தமான சில நினைவுகளை மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும் இருக்கக்கூடும்.

எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது வக்கீல் தொழிலில் பொய்யை அனுசரித்ததே இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன். நான் நடத்திய வழக்குகளில் பெரும் பகுதி பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என் கையை விட்டுச் செலவு செய்த பணத்திற்கு அதிகமாக அந்த வழக்குகளுக்கு நான் பணம் வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என் சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு. இதை முன்பே சொல்லிவிட்டதன் மூலம், என் வக்கீல் தொழிலைக் குறித்துச் சொல்லுவதற்கு அவசியமானவைகளை யெல்லாம் நான் சொல்லி விட்டதாகவே எண்ணினேன். இன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர். வக்கீல் தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில் சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச் சொன்னால் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர் அதனால் பயனடையக் கூடும் என்று அந்த நண்பர்கள் நினைக்கிறார்கள் என்று தெரிகிறது.

வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழில் என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய்சொல்லிப் பணத்தையோ, அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றி விடவே இல்லை.

தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள் பன்முறைகளிலும் சோதனைக்கு உள்ளானது உண்டு. என் எதிர்க்கட்சிக்காரர்கள், சாட்சிகளுக்குச் சொல்லிக் கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள் என்பதைப் பல தடவைகளிலும் நான் அறிந்திருக்கிறேன். என் கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோ பொய் சொல்ல மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால், நாங்கள் சில வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம். ஆனால், அத்தகைய ஆசையை நான் எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். ஒரு வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகு என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த ஒரே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் கட்சிக்காரரின் வழக்கில் நியாயமிருந்தால்தான் அதில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன். வழக்குக்கு என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட, அதில் வெற்றிபெற்றால் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நான் நிபந்தனை போட்டதாகவும் எனக்கு நினைவில்லை. கட்சிக்காரர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும், என் கட்டணத்திற்கு அதிகமாகவோ, குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை.

பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக் கொடுத்துத் தயார் செய்வோன் என்றோ என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக, எனக்கு ஒரு பெயர் ஏற்பட்டு என்னிடம் பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டுவந்து, சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு வக்கீல்களை அமர்த்திக் கொள்ளுவார்கள்.

ஒரு வழக்கு மிகவும் கடுமையான சோதனையாகிவிட்டது. என்னுடைய கட்சிக்காரர்களில் மிகச் சிறந்தவரான ஒருவருடைய வழக்கு அது; அதிகச் சிக்கலான கணக்கு வழக்குகளைப் பற்றிய நடவடிக்கை அது; நீண்ட காலம் நடந்து வந்தது. பல கோர்ட்டுகளும் அவ்வழக்கைக் கொஞ்சம் கொஞ்சம் விசாரித்திருந்தன. முடிவாக அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணக்குத் தகராறுகளைத் தகுதி வாய்ந்த கணக்கர்களின் மத்தியஸ்தத்திற்குக் கோர்ட்டு விட்டு விட்டது. இந்த மத்தியஸ்தர்களின் முடிவு என் கட்சிக்காரருக்குச் சாதகம் ஆயிற்று. ஆனால், மத்தியஸ்தர்கள் கூட்டிப் போட்டதில் அறியாமலேயே ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தவறு சிறியதேயாயினும், பற்று வைக்க வேண்டிய தொகை வரவாக வைக்கப்பட்டு விட்டதால் அது முக்கியமான தவறேயாயிற்று. இத்தீர்ப்பை, எதிர்த்தரப்பினர் இக்காரணத்திற்காக ஆட்சேபிக்காமல் வேறு காரணங்களைக் கூறி ஆட்சேபித்தார்கள். இவ்வழக்கில் என் கட்சிக்காரருடைய பெரிய வக்கீலின் கீழ் நான் உதவி வக்கீலாகவே இருந்தேன். நடந்து இருந்த தவறைப் பெரிய வக்கீல் அறிந்ததும், அதை ஒப்புக்கொள்ள எங்கள் கட்சிக்காரர் கடமைப் பட்டவரல்ல என்று கூறினார். தம் கட்சிக்காரருக்கு விரோதமான எதையும் ஏற்றுக்கொண்டுவிடும் கடமை எந்த வக்கீலுக்கும் இல்லை என்பது அவருடைய தெளிவான அபிப்பிராயம். நானோ, தவறை ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்றேன்.

ஆனால், பெரிய வக்கீல் பின்வருமாறு விவாதித்தார்: “தவறு நடந்திருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டால், மத்தியஸ்தர்களின் தீர்ப்பு முழுவதையுமே கோர்ட்டு ரத்து செய்துவிடக்கூடும். சித்த சுவாதீனமுள்ள எந்த வக்கீலும் தம் கட்சிக்காரனின் வழக்குக்கு அந்த அளவுக்கு ஆபத்தை உண்டாக்கிவிட மாட்டார். எப்படியானாலும் சரி, அத்தகைய அபாயத்திற்கு நான் உடன்படவே மாட்டேன். திரும்பவும் புதிதாக விசாரிக்கும்படி வழக்கு அனுப்பப்பட்டு விட்டால் நம் கட்சிக்காரருக்கு எவ்வளவு பணம் செலவாகும், முடிவு என்னவாகும் என்று யார்தான் சொல்ல முடியும்?” இவ்விதம் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது கட்சிக்காரரும் அங்கிருந்தார்.

நான் கூறியதாவது: “இதில் ஆபத்திருந்தாலும் அதற்கு நாமும் நமது கட்சிக்காரரும் உடன்பட வேண்டியதே என்றுதான் நான் கருதுகிறேன். நடந்திருக்கும் ஒரு தவறை நாம் ஏற்றுக் கொள்ளாததனாலேயே தவறானதோர் தீர்ப்பைக் கோர்ட்டு அங்கீகரித்து விடும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? நாம் தவறை ஏற்றுக் கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன தீங்கு நேர்ந்துவிடும்?”

“ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார், பெரிய வக்கீல்.

“அத்தவறை கோர்ட்டு கண்டுபிடித்து விடாது, எதிர்த் தரப்பினரும் கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்றேன், நான்.

 “ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள் தயாரா? நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான் தயாராயில்லை” என்று தீர்மானமாகப் பதில் சொன்னார் பெரிய வக்கீல்.

இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்: “நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம் கட்சிக்காரர் விரும்பினால், நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தவறை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த வழக்கில் நான் எந்தவித சம்பந்தமும் வைத்துக்கொள்ளப் போவதில்லை.”

இவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர் நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆரம்பத்திலிருந்தே நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக நன்றாக அறிவார். அவர் சொன்னார்: “அப்படியானால் சரி, வழக்கில் கோர்ட்டில் நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நம் கதி என்றால் இதில் தோற்றுப் போனாலும் போகட்டும். நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார்.”

நான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர வேறு எதையும் என் கட்சிக்காரரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய வக்கீல் என்னை மீண்டும் எச்சரிக்கை செய்தார். என் பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில் எனக்கு வாழ்த்தும் கூறினார்.

கோர்ட்டில் என்ன நடந்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.

$$$

45. மோசடியான வேலையா?


     நான் கூறிய யோசனை சிறந்தது என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை. ஆனால், இந்த வழக்கைச் சரியானபடி நடத்திவிட என்னால் முடியுமா என்று அதிக தூரம் ஐயுற்றேன். சுப்ரீம் கோர்டின் முன்பு இத்தகையதொரு கஷ்டமான வழக்கில் விவாதிக்க முற்படுவது மிகுந்த துணிச்சலான காரியமே என்று எண்ணினேன். பயத்துடன் நடுங்கிக் கொண்டே நீதிபதிகளின் முன்பு எழுந்து நின்றேன்.

கணக்கில் ஏற்பட்டுவிட்ட தவறைப் பற்றி நான் கூறியதும் நீதிபதிகளில் ஒருவர், “இது மோசடியான வேலையல்லவா, ஸ்ரீ காந்தி?” என்று கேட்டார்.

அவர் இவ்வாறு கூறக் கேட்டதும் என் உள்ளம் கொதித்து விட்டது. காரணம் எதுவுமே இல்லாதபோது, மோசடியான வேலை செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுவது சகிக்க முடியாதது. ‘இவ்விதம் ஆரம்பத்திலேயே ஒரு நீதிபதி துவேஷம் கொண்டிருக்கும்போது இந்தக் கஷ்டமான வழக்கில் வெற்றி பெறுவதற்குச் சந்தர்ப்பமே இல்லை’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். என்றாலும், மனத்தைச் சாந்தப்படுத்திக் கொண்டு, “நான் கூறுவதை முழுவதும் கேட்டுக் கொள்ளாமலேயே இதில் மோசடியான வேலை இருப்பதாக நீதிபதியவர்கள் சந்தேகிப்பதைக் குறித்து ஆச்சரியமடைகிறேன்” என்றேன்.

 “அப்படி நான் குற்றம் சாட்டவில்லை. அது மாதிரி இருக்குமா என்ற யோசனைதான்” என்றார் நீதிபதி.

“அப்படி யோசிப்பது இந்த இடத்தில் குற்றச்சாட்டுக்கே சமமானதாகும் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் சொல்லப் போவது முழுவதையும் கேட்டுவிட்டு அதன் பிறகு காரணம் இருந்தால் என் மீது குற்றம் சாட்டும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்” என்றேன்.

அதற்கு நீதிபதி, “இடையில் குறுக்கிட்டதற்காக வருந்துகிறேன். கணக்கில் ஏற்பட்டிருக்கும் தவறைக் குறித்து உங்கள் சமாதானத்தைத் தொடர்ந்து சொல்லுங்கள்” என்றார்.

நான் கூறவேண்டிய சமாதானத்திற்குப் போதுமான ஆதாரங்கள் என்னிடம் இருந்தன. நீதிபதி இந்தப் பிரச்னையைக் கிளப்பியது நல்லதாயிற்று. ஆரம்பம் முதலே என்னுடைய வாதங்களை நீதிபதிகள் கவனிக்கும்படி செய்வதும் எனக்குச் சாத்தியமாயிற்று. நான் அதிக உற்சாகமடைந்ததோடு என்னுடைய சமாதானத்தை விவரமாக எடுத்துக் கூற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். நீதிபதிகளும் நான் கூறியதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள். கணக்கில் ஏற்பட்ட தவறு, கவனக் குறைவினால் ஏற்பட்டதே அன்றி வேறல்ல என்பதை நீதிபதிகள் ஒப்புக்கொள்ளும்படி செய்வதும் என்னால் முடிந்தது. ஆகையால், அதிகச் சிரமப்பட்டுச் செய்யப்பட்ட மத்தியஸ்தர் தீர்ப்பு முழுவதையுமே தள்ளிவிட வேண்டும் என்று அவர்கள் கருதவில்லை.

தவறு ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டபடியால் தாம் அதிகமாக வாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கையில் எதிர்த் தரப்பு வக்கீல் இருந்தார் என்று தோன்றியது. ஆனால், நேர்ந்துவிட்ட கணக்குத் தவறு கைத்தவறே என்றும், அதைச் சுலபத்தில் திருத்திக் கொண்டு விடலாம் என்றும் நீதிபதிகள் கருதினர். இதனால் எதிர்த் தரப்பு வக்கீலை அடிக்கடி இடைமறித்துக் கேள்விகள் கேட்டனர். மத்தியஸ்தர் தீர்ப்பே தவறானது என்று கூறி அதைத் தாக்க அந்த வக்கீல் அதிகச் சிரமம் எடுத்துக்கொண்டார். ஆனால், ஆரம்பத்தில் என்னிடம் சந்தேகம் கொண்ட நீதிபதி, இப்பொழுது நிச்சயமாக என் கட்சிக்குத் திரும்பி விட்டார்.

 “கணக்கிலிருந்த தவறை ஸ்ரீகாந்தி, ஒப்புக் கொண்டிருக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுவோம். அப்பொழுது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?” என்று நீதிபதி, அவரைக் கேட்டார்.

 “நாங்கள் நியமித்தவரைவிட அதிகத் திறமை வாய்ந்த, யோக்கியமான கணக்கர் வேறு யாரும் எங்களுக்குக் கிடைத்திருக்க மாட்டார்” என்றார், அந்த வக்கீல்.

“உங்கள் கட்சி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்றே கோர்ட்டு எண்ண வேண்டும். நிபுணராக உள்ள எந்தக் கணக்கரும் செய்துவிடக்கூடிய தவறைத் தவிர வேறு எதையும் உங்களால் குறிப்பிட முடியவில்லை என்றால், வெளிப்படையான இந்தத் தவறுக்காகத் திரும்பவும் புதிதாக வழக்கை நடத்தும் படியும், புதிதாகச் செலவு செய்யுமாறும் கட்சிக்காரர்களைக் கட்டாயப்படுத்த கோர்ட்டு விரும்பவில்லை. இச்சிறு தவறை எளிதில் திருத்திவிடலாம் என்று இருக்கும்போது இவ்வழக்கை மறு விசாரணைக்கு அனுப்ப நாங்கள் உத்தரவிட வேண்டியிருக்காது” என்று தொடர்ந்து சொன்னார், நீதிபதி.

இவ்வாறு எதிர்த் தரப்பு வக்கீலின் ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டது. கணக்குத் தவறைத் தானே திருத்திவிட்டு மத்தியஸ்தர் தீர்ப்பைக் கோர்ட்டு ஊர்ஜிதம் செய்ததா அல்லது திருத்தும்படி மத்தியஸ்தருக்கு உத்தரவிட்டதா என்பது எனக்குச் சரியாக நினைவில் இல்லை.

நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என் கட்சிக்காரரும், எங்கள் பெரிய வக்கீலும்கூட, மகிழ்ச்சி அடைந்தனர். உண்மைக்கு விரோதமில்லாமல் வக்கீல் தொழிலை நடத்துவது அசாத்தியமானது அல்ல என்ற என் நம்பிக்கையும் உறுதியாயிற்று.

ஆனால், ஒரு விஷயத்தை வாசகர் நினைவில் வைக்க வேண்டும். வக்கீல் தொழிலை நடத்துவதில் உண்மையோடு நடந்துகொண்டாலும், அத்தொழிலைச் சீரழித்துவரும் அடிப்படையான குறைபாட்டைப் போக்கிவிட முடியாது.

$$$

46. கட்சிக்காரர்கள் சகாக்களாயினர்


     நேட்டாலில் வக்கீல் தொழில் நடத்துவதற்கும், டிரான்ஸ்வாலில் அத்தொழிலை நடத்துவதற்கும் வித்தியாசம் உண்டு. நேட்டாலில் வக்கீல் தொழில் கூட்டானது. ஓர் அட்வகேட்டின் ஸ்தானத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பாரிஸ்டர், அட்டர்னியாகவும் அங்கே தொழில் நடத்தலாம். ஆனால், டிரான்ஸ்வாலிலோ பம்பாயில் இருப்பதைப் போல, அட்டர்னிகளுக்கும் அட்வகேட்டுகளுக்கும் உள்ள பொறுப்புக்கள் வெவ்வேறானவை. ஒரு பாரிஸ்டர், தம் இஷ்டப்படி அட்டர்னியாகவோ, அட்வகேட்டாகவோ தொழிலை நடத்தலாம். ஆகவே, நேட்டாலில் நான் அட்வகேட்டாக ஏற்றுக்கொள்ளப் பட்டேன். ஆனால், டிரான்ஸ்வாலில் அட்டர்னியாக இருக்க அனுமதிக்குமாறு கோரினேன். ஏனெனில், அட்வகேட் என்ற முறையில் நான் இந்தியருடன் நேரடியான தொடர்பு வைத்துக் கொள்ளுவதற்கில்லை. தென்னாப்பிரிக்காவிலிருக்கும் வெள்ளைக்கார அட்டர்னிகள் என்னை வக்கீலாக அமர்த்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், டிரான்ஸ்வாலில் கூட அட்டர்னிகள், மாஜிஸ்டிரேட்டுகளுக்கு முன்னால் ஆஜராகி விவாதிக்கலாம். ஒரு சமயம் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு மாஜிஸ்டிரேட்டின் முன்னால் நான் ஒரு வழக்கை நடத்திக் கொண்டிருக்கையில், என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்பதைக் கண்டுகொண்டேன். சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரித்தபோது அவர் திக்குமுக்காடியதைப் பார்த்தேன். ஆகவே, அந்த வழக்கின்மீது நான் விவாதிக்காமல் அவ்வழக்கைத் தள்ளி விடுமாறு மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன். இதைப் பார்த்து எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சரியப்பட்டுப் போனார். மாஜிஸ்டிரேட் திருப்தியடைந்தார். என்னிடம் பொய் வழக்கைக் கொண்டு வந்ததற்காக என் கட்சிகாரரைக் கண்டித்தேன். பொய் வழக்குகளை நான் எடுத்துக் கொள்ளுவதே இல்லை என்பது அவருக்குத் தெரியும். இதை அவருக்கு நான் எடுத்துச் சொன்னபோது அவர் தமது தவறை ஒப்புக்கொண்டார். தனக்கு விரோதமாகத் தீர்ப்புக் கூறி விடும்படி நான் மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டதைக் குறித்தும் அவர் என்மீது கோபம் அடையவில்லை என்பது எனக்கு ஞாபகம். அது எப்படியாயினும் இந்த வழக்கில் நான் நடந்துகொண்ட விதத்தினால் என் தொழிலுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டு விடவில்லை. உண்மையில் இதனால் என் வேலை மிக எளிதாயிற்று. உண்மையினிடம் நான் கொண்டிருந்த பற்று மற்ற வக்கீல்களிடையே என் மதிப்பை அதிகப்படுத்தியது என்பதையும் கண்டேன். நிறத்தின் காரணமாக எனக்கு இடையூறுகள் இருந்தபோதிலும், சில சந்தர்ப்பங்களில் அவர்களுடைய அன்பைப் பெறுவதும் எனக்குச் சாத்தியமாயிற்று.

வக்கீல் தொழில் சம்பந்தமான வேலையில் கட்சிகாரர்களிடமும் சகாக்களிடமும் என் அறியாமையை ஒளிக்கும் வழக்கமே எனக்கு இல்லை. எனக்குத் தெரியாது என்று நான் உணரும்போது வேறு யாராவது வக்கீலிடம் கலந்து ஆலோசிக்கும்படி கட்சிக்காரரிடம் கூறிவிடுவேன். என்னையே வக்கீலாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்சிக்காரர் பிடிவாதமாக விரும்பினால் பெரிய வக்கீலை உதவிக்கு வைத்துக்கொள்ள அக்கட்சிக்காரரிடம் அனுமதி கேட்பேன். ஒளிவு மறைவில்லாத என்னுடைய இந்த நடத்தையினால் கட்சிக்காரர்களின் அளவற்ற அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானேன். பெரிய வக்கீலின் யோசனையைக் கேட்பது அவசியம் என்று இருக்கும் போதெல்லாம் அதற்குள்ள கட்டணத்தைக் கொடுக்க அவர்கள் எப்பொழுதும் தயாராய் இருந்தார்கள். இந்த அன்பும் நம்பிக்கையும் பொது வேலைகளில் எனக்கு அதிக உதவியாக இருந்தன.

தென்னாப்பிரிக்காவில் நான் வக்கீல் தொழில் செய்து வந்ததன் நோக்கம் சமூகத்திற்குச் சேவை செய்வதே என்பதை முந்திய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இக்காரியத்திற்கும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இன்றியமையாததாகும். பணத்திற்காக வக்கீல் தொழில் நான் செய்த வேலைகளையும், சேவை என்றே, பெரிய மனம் படைத்த இந்தியர் மிகைப்படுத்திக் கொண்டனர். தங்களுடைய உரிமைகளுக்காகச் சிறைவாசக் கஷ்டத்தையும் ஏற்குமாறு நான் அவர்களுக்கு யோசனை கூறியபோது, அவர்களில் அநேகர் என் யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் இவ்விதம் செய்தது, என் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையினாலும் அன்பினாலுமே அன்றி, அம் முறையே சரியானது என்று அவர்கள் ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வந்ததனால் அன்று.

இதை நான் எழுதும்போது இனிமையான நினைவுகள் எத்தனையோ என் உள்ளத்தில் எழுகின்றன. நூற்றுக்கணக்கான கட்சிக்காரர்கள் என் நண்பர்களாகவும் பொதுச் சேவையில் சக ஊழியர்களாகவும் ஆயினர். துன்பங்களும் அபாயங்களும் நிறைந்திருந்த வாழ்க்கையை அவர்களின் கூட்டுறவு இனிதாக்கியது.

$$$

47. கட்சிக்காரரைக் காப்பாற்றிய விதம்


     பார்ஸி ருஸ்தம்ஜியின் பெயர் இதற்குள் வாசகருக்குப் பழக்கமான பெயராகியிருக்கும். அவர் உடனடியாக என் கட்சிக்காரராகவும் சக ஊழியராகவும் ஆகிவிட்டவர்களில் ஒருவர். முதலில் அவர் என் சக ஊழியராகி, அதன் பிறகு என் கட்சிக்காரரானார் என்று சொல்வதே உண்மையாகவும் இருக்கலாம். அதிக அளவு நான் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகி விட்டேன். அதனால், அவர் தமது சொந்தக் குடும்ப விஷயங்களில் கூட என் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து வந்தார். எங்கள் இருவரின் வாழ்க்கை முறைக்கும் அதிக வித்தியாசம் இருந்த போதிலும் அவர் நோயுற்றிருக்கும்போது, என் உதவியைத் தான் நாடுவார். அரை குறை வைத்தியனான என்னுடைய சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்ளவும் அவர் தயங்குவதில்லை.

இந்த நண்பர் ஒரு சமயம் பெரிய சங்கடத்தில் சிக்கிக் கொண்டார். அநேகமாக தாம் செய்துவரும் காரியங்களை எல்லாம் அவர் என்னிடம் கூறி வந்தாரெனினும், ஒரு விஷயத்தை மாத்திரம் என்னிடம் சொல்லாமல் சாமர்த்தியமாக மறைத்து வைத்திருந்தார். பம்பாயிலிருந்தும், கல்கத்தாவில் இருந்தும் ஏராளமாகச் சாமான்களைத் தருவித்து வரும் பெரிய வியாபாரி அவர். அடிக்கடி சுங்கவரி கொடுக்காமல் திருட்டுத்தனமாகச் சாமான்களை அவர் கடத்திவிடுவதும் உண்டு. ஆனால், சுங்க அதிகாரிகளுடன் நல்ல நட்பிருந்ததால் அவர்மீது யாரும் சந்தேகப்படுவதில்லை. தீர்வை விதிக்கும் போது அவர் காட்டும் பட்டியல்களை நம்பி, அதன்படியே தீர்வையும் விதிப்பார்கள். அவருடைய திருட்டுத்தனம் தெரிந்தும் சிலர் அதற்கு உடந்தையாகவும் இருந்திருக்கக் கூடும்.

குஜராத்திக் கவியான அகோ என்பவர் கூறியிருக்கும் சிறந்த உவமையோடு சொல்லுவதென்றால் பாதரசத்தைப் போலவே திருட்டையும் வெகுநாளைக்கு மறைத்துவிட முடியாது. பார்ஸி ருஸ்தம்ஜி விஷயத்திலும் அது உண்மையாயிற்று. அந்த நல்ல நண்பர் ஒருநாள் என்னிடம் ஓடி வந்தார். கன்னத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “பாய்! நான் உங்களை ஏமாற்றி விட்டேன். என் குற்றத்தை இன்று கண்டுபிடித்து விட்டார்கள். நான் திருட்டுத்தனமாகச் சாமான்களை இறக்குமதி செய்து அகப்பட்டுக் கொண்டேன். என் கதி அதோகதிதான். நான் சிறைசென்று அழிந்தே போய் விடுவேன். இந்த ஆபத்திலிருந்து நீங்கள் ஒருவர்தான் என்னைக் காப்பாற்றக் கூடும். இதைத் தவிர வேறு எதையுமே உங்களிடம் கூறாமல் நான் ஒளித்ததில்லை. ஆனால், வியாபார தந்திரங்களைப் பற்றிய இந்த விஷயங்களை எல்லாம் உங்களிடம் சொல்லி, உபத்திரவப்படுத்த வேண்டாம் என்று எண்ணியே இந்தக் கள்ளக் கடத்தலைப்பற்றி உங்களுக்கு நான் சொல்லவில்லை. அதற்காக நான் இப்பொழுது மிகமிக வருந்துகிறேன்” என்றார்.

அவரைச் சாந்தப்படுத்தினேன். “உங்களைக் காப்பதும் காவாததும் கடவுள் கையில் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் என் வழி இன்னது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுவதன் மூலமே உங்களைக் காப்பாற்ற நான் முயலக் கூடும்” என்று அவருக்குக் கூறினேன்.

இதைக் கேட்டதும் அந்த நல்ல பார்ஸி அடியோடு மனம் இடிந்து போய்விட்டார். “உங்கள் முன்பு நான் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டது போதாதா?” என்று கேட்டார்.

“நீங்கள் தவறிழைத்தது அரசாங்கத்திற்கேயன்றி எனக்கு அன்று. அப்படியிருக்க என்னிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ளுவது மாத்திரம் எப்படிப் போதும்?” என்று சாந்தமாக அவருக்குப் பதில் சொன்னேன்.

“உங்கள் புத்திமதியின்படியே நடக்கிறேன். ஆனால், என்னுடைய பழைய வக்கீலான ஸ்ரீ …… என்பவரிடம் நீங்கள் கலந்து ஆலோசிப்பீர்களா? அவரும் நண்பரே” என்றார் பார்ஸி ருஸ்தம்ஜி.

விசாரித்ததில், திருட்டுத்தனமாகச் சரக்குகளை இறக்குமதி செய்வது நீண்ட காலமாகவே நடந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது. ஆனால், இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது ஒரு சிறு தொகையைப் பொறுத்ததேயாகும். அவருடைய வக்கீலிடம் போனோம். அவர் தஸ்தாவேஜுகளைப் படித்துப் பார்த்தார். அவர் கூறியதாவது: “இந்த வழக்கு ஜூரிகளின் முன்னால் விசாரிக்கப்படும். நேட்டால் ஜூரிகள் இந்தியரைத் தண்டிக்காமல் விட மாட்டார்கள். ஆயினும், நான் நம்பிக்கையை இழந்து விடவில்லை” என்றார்.

இந்த வக்கீலை எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. பார்ஸி ருஸ்தம்ஜி குறுக்கிட்டு, “உங்களுக்கு என் நன்றி. இந்த வழக்கில் ஸ்ரீ காந்தி கூறும் யோசனையின்படி நான் நடந்துகொள்ள விரும்புகிறேன். அவர் என்னை நன்றாக அறிவார். அவசியமாகும்போது நீங்கள் அவருக்கு ஆலோசனை கூறுங்கள்” என்றார். வக்கீல் விஷயத்தை இவ்விதமாக முடிவுசெய்து கொண்டு நாங்கள் பார்ஸி ருஸ்தம்ஜியின் கடைக்குச் சென்றோம்.

இது சம்பந்தமாக என் கருத்தை விளக்கி அவரிடம் பின்வருமாறு கூறினேன்: “இந்த வழக்கு கோர்ட்டுக்கே போகக் கூடாது என்று நினைக்கிறேன். உங்கள் மீது வழக்குத் தொடருவதோ, தொடராமல் விட்டுவிடுவதோ சுங்க அதிகாரியைப் பொறுத்திருக்கிறது. அவரோ, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியவராக இருக்கிறார். இந்த இருவரையும் சந்தித்துப் பேச நான் தயாராயிருக்கிறேன். அவர்கள் விதிக்கும் அபராதத்தைச் செலுத்திவிட நீங்கள் தயாராயிருக்க வேண்டும். அநேகமாக இந்த ஏற்பாட்டிற்கு அவர்கள் சம்மதித்து விடக்கூடும். இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் சிறை செல்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டியதுதான். அவமானம் குற்றம் செய்வதில்தான் இருக்கிறதேயன்றி, அக்குற்றத்திற்காகச் சிறை செல்லுவதில் அல்ல என்பதே என் அபிப்பிராயம். அவமானத்திற்கான காரியமோ முன்பே செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பிராயசித்தம் என்றே சிறைவாசத்தை நீங்கள் கருத வேண்டும். இதில் உண்மையான பிராயச்சித்தம், இனி திருட்டுத் தனமாகச் சரக்குகளைக் கடத்துவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டு விடுவதேயாகும்.”

நான் கூறிய இந்தப் புத்திமதி முழுவதையும் பார்ஸி ருஸ்தம்ஜி சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார் என்று நான் சொல்லுவதற்கில்லை. அவர் மிகுந்த தைரியசாலியே. ஆனால், அந்தச் சமயத்தில் அவருக்குத் தைரியமே இல்லை. அவருடைய நற்பெயருக்கும் கீர்த்திக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது. எவ்வளவோ கவனமாகவும் சிரமப்பட்டும் அவர் கட்டியிருந்த அக்கட்டிடம் சுக்குச்சுக்காகச் சிதறிவிடுவதென்றால் பிறகு அவர் கதி என்ன?

“சரி, என்னை உங்களிடம் முற்றும் ஒப்படைத்துவிட்டேன் என்று உங்களிடம் சொல்லிவிட்டேன். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்” என்றார்.

பிறரிடம் விவாதித்து என் பக்கம் திருப்புவதற்கு எனக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவையும் நான் இந்த வழக்கில் உபயோகித்தேன். சுங்க அதிகாரியைப் போய்ப் பார்த்தேன். அவரிடம் முழுவதையும் தைரியமாக எடுத்துக் கூறினேன். கணக்குப் புத்தகங்கள் முழுவதையும் அவரிடமே ஒப்படைத்து விடுவதாகவும் வாக்களித்தேன். தாம் செய்து விட்ட தவறுக்காக பார்ஸி ருஸ்தம்ஜி எவ்வளவு வருத்தப்படுகிறார் என்பதையும் எடுத்துக்கூறினேன்.

சுங்க அதிகாரி கூறியதாவது: “அந்தப் பார்ஸியிடம் எனக்குப் பிரியம் உண்டு. இவ்விதம் முட்டாள்தனமான காரியத்தை அவர் செய்துவிட்டதற்காக வருந்துகிறேன். இதில் என் கடமை இன்னது என்பது உங்களுக்கே தெரியும். அட்டர்னி ஜெனரல் கூறும் வழியில் நான் நடக்க வேண்டியவன். ஆகவே, உங்கள் முயற்சியையெல்லாம் அவரிடம் செய்யும்படி உங்களுக்கு யோசனை கூறுகிறேன்.”

 “பார்ஸி ருஸ்தம்ஜியைக் கோர்ட்டுக்கு இழுத்து விடவேண்டும் என்று நீங்கள் பிடிவாதம் செய்யாமல் இருந்தால் நன்றியறிதல் உள்ளவனாவேன்” என்றேன்.

இந்த வாக்குறுதியை அவரிடம் பெற்றுக்கொண்டு பிறகு அட்டர்னி ஜெனரலுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினேன். அவரை நேரிலும் போய்ப் பார்த்தேன். நான் கபடமின்றி நடந்து கொண்டதை அவர் பாராட்டினார் என்று கூறச் சந்தோஷமடைகிறேன். நான் எதையுமே மறைக்கவில்லை என்பதை அவர் நிச்சயமாக அறிந்துகொண்டார். “இல்லை என்ற பதிலை நீங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டீர்கள் என்பதைக் காண்கிறேன்” என்று அவர் சொன்னார். என்னுடைய விடாமுயற்சியையும் கபடமின்மையையும் குறித்து அவர் இவ்விதம் கூறியது, இந்த வழக்கில்தானா அல்லது வேறு வழக்கிலா என்பது இப்பொழுது எனக்கு ஞாபகமில்லை.

பார்ஸி ருஸ்தம்ஜி மீதிருந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டது. தீர்வை செலுத்தாமல் கடத்தியதாக அவர் ஒப்புக்கொண்ட தொகைக்கு இரு மடங்கான தொகையை அவர் அபராதமாகச் செலுத்தினார். இந்த வழக்குச் சம்பந்தமான முழு விவரங்களையும் அவர் எழுதினார். அப்படி எழுதியதை கண்ணாடி போட்டுத் தமது அலுவலகத்தில் தொங்கவிட்டார். தமது சந்ததியாருக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் நிரந்தரமான எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவே அவர் இவ்விதம் செய்தார்.

செய்துவிட்ட குற்றத்திற்காக பார்ஸி ருஸ்தம்ஜி வருந்துவது தாற்காலிகமானதே அன்றி நிரந்தரமானதாக இராது என்று அவருடைய நண்பர்கள் என்னை எச்சரிக்கை செய்தனர். இந்த எச்சரிக்கையைக் குறித்து நான் ருஸ்தம்ஜியிடம் கூறியபோது, “உங்களை நான் ஏமாற்றினால் என் கதி என்ன ஆவது?” என்று கூறினார்.

$$$

(நான்காம் பாகம் முற்றிற்று)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s