-ஜி.இ.பச்சையப்பன்

மாணவர்களுக்கு பள்ளிப்பாடம் மட்டும் கற்பிக்காமல், புத்தகத்துக்கு வெளியில் உள்ள ஞானத்தையும் கற்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இயங்கும் அரசுப் பள்ளி ஆசிரியரான திரு. ஜி.இ.பச்சையப்பன், சமூக ஊடகத்தில் தீவிரமாகச் செயலாற்றுபவர். மகாகவி பாரதி குறித்த இவரது கட்டுரை இங்கே…
“தீப்பெட்டிகள் போல் சரளமாக என் நூல்கள் மக்களிடையே பரவ வேண்டும்!”
-மகாகவி பாரதி!
எழுதப்பட்டவை அனைத்தும் மை உலர்வதற்குள் அச்சுவாகனம் ஏறி இதழ்களில் வெளியாகும் வாய்ப்பு எந்த ஒரு படைப்பாளிக்கும் உவப்பானதுதான். பாரதி எழுதியவை அனைத்தும் ’சுதேசிமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா’ என பல்வேறு ஏடுகளில் உடனுக்குடன் வெளியாயின. எனினும், அவற்றை நூல்வடிவில் பார்க்க வேண்டும் என்ற நியாயமான – எல்லா இலக்கியவாதிகளுக்கும் இருக்கும் – ஆசை பாரதிக்கு முழுமையாக சாத்தியப்படவேயில்லை.
புதுவையில் பாரதி இருந்தபோது அவர் எழுதிய கவிதை வடிவிலான ‘கனவு’ என்ற சுயசரிதையும், ஒரு சிறுகதையும் மட்டுமே நூல்வடிவம் பெற்றன. சுதேசமித்திரனில் மாத வருமானமாக முப்பது ரூபாய் மட்டுமே கிடைக்கப்பெற்ற, இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பனான பாரதிக்கு தனது படைப்புகளை நூல் வடிவில் அச்சேற்றும் எண்ணம் வலிமையாக இருந்த அளவிற்கு பொருளாதாரம் இல்லை. ஒரு கட்டத்தில் தமிழ் மக்களிடம் பங்குப்பணம் திரட்டி நூல் வெளியிட்டு அதில் வரும் லாபத்தைப் பகிர்ந்து தரவுள்ளதாக இதழில் எழுதவும் செய்தார் பாரதி. வாசிப்பு என்பது பண்பாட்டில் ஓர் அங்கமாக மாறியிராத தமிழ்ச்சூழல், பாரதியின் கோரிக்கையை எவ்விதம் எதிர்கொண்டிருக்கும் எனச் சொல்ல வேண்டுமா?
பாரதியின் ‘ஸ்வதேஸ கீதங்கள்’ அவருடைய மறைவிற்குப் பிறகு நூல்வடிவம் பெற்றது. (இதிலுள்ள சில பாடல்கள் மட்டும் நீதிபதி கிருஷ்ணசாமி ஐயரின் முயற்சியால், பாரதி காலத்திலேயே சிறு புத்தகமாக வெளிவந்தன).
பாரதியின் பாடல்களுக்கான உரிமையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் விலை கொடுத்து வாங்கி தன்னிடம் வைத்திருந்தார். எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் போன்றோர் தலைமையில் இலக்கியவாதிகளின் முன்னெடுப்பில் பாரதியின் படைப்புகள் பின்னர் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. பாரதத்தில் – ஏன், உலகத்திலேயே ஒரு படைப்பாளியின் எழுத்து மக்கள் அனைவருக்கும் முதன்முதலில் உரிமையாக்கப்பட்டவை பாரதியின் படைப்புகள்தான்.
இதழ்களில் சிதறிக் கிடந்த பாரதியின் எழுத்துக்களை அரசே முன்னின்று பிழைகளோ, பாடபேதங்களோ இன்றித் தொகுத்திருக்க வேண்டும். ஆனால், தனக்கான தலைவர்களை திரையரங்க இருட்டில் தமிழர்கள் தேடிக் கண்டு அடைந்தமையால் அது சாத்தியப்படவில்லை.
நமது நல்லூழாக பாரதியின் எழுத்துகள், நல்ல பல ஆய்வாளர்களை உருவாக்கின. பாரதி எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்ட பல தொகுப்பாளர்கள் தமது வாழ்நாளை பாரதிக்காகவே ஒப்புக்கொடுத்தனர்.
புதுவையில் பாரதி வாசம் செய்துகொண்டிருந்த போது வ.ரா. (எ) வ.ராமஸ்வாமி பாரதியைச் சந்திக்கிறார். இருவருக்குமிடையே குரு – சிஷ்ய உறவு நிலவிற்று. மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவரான வ.ரா. அவர்கள் பாரதியுடனான தனது அனுபவங்களை ‘மகாகவி பாரதி’ என்ற தலைப்பில் சிறு நூலாக எழுதினார். பல பதிப்பகங்கள் வாயிலாக அச்சிடப்பட்டு இன்றும் வாசிக்கக் கிடைக்கும் இந்நூல் பாரதியைப் பற்றிய நல்லதொரு அறிமுகம் எனலாம். 1935இல் வ.ரா. நூலை எழுதுகிறார். 1944 ஆம் ஆண்டு சக்தி காரியாலய வெளியீடாக அந்நூல் வெளியிடப்பட்டது. அதிஷ்டவசமாக மின்னூலாகவும் இணையத்தில் இந்நூல் தற்போது கிடைக்கிறது.



பாரதியின் படைப்புகளை காலவரிசைப்படி தொகுக்கும் பெரும்பணியில் தன் வாழ்வையே முற்றளித்தவர் சீனி.விசுவநாதன். தகவல் தொடர்பு பெருகி மேம்பட்ட இக்காலகட்டத்திலேயே சில புத்தகங்கள் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வரலாற்றுணர்வு அற்ற தமிழகத்தில், நூலகங்களின் இருண்ட அறைகளிலிருந்தும், இதழ்களின் அலுவலகப் பொதிகளிலிருந்தும் பாரதியை மீட்டெடுத்து ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’என்ற தலைப்பில் தமிழர்களின் கரங்களில் கொண்டு சேர்த்தார் பெரியவர் சீனி. விசுவநாதன். 11 பாகங்களாகத் தொகுக்கப்பட்ட பாரதியின் படைப்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அப்பணி எவ்வளவு உழைப்பைக் கோரி இருக்கும் என்ற மலைப்பு ஏற்படுவது திண்ணம்.
‘கவிஞர் ’ என்று மட்டும் பாரதியைப் புரிந்துகொள்வது அவருடய ஆளுமையை சுருக்கிப் பார்ப்பதாகும். ஓர் இதழாசிரியராக, ‘அரசியல் வியாஸங்கள்’ எழுதுவதில் முன்னோடியாக பாரதி இயங்கியிருப்பதை நூற்தொகுப்புக்களை வாசிக்கும் போது நாம் புரிந்துகொள்ள இயலும்.
தமிழில் கேலிச்சித்திரங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதி! ‘புரட்சி’ என்று சொல்லை தமிழில் முதலில் பயன்படுத்தியவரும் அவரே. அரசியல் கட்டுரைகளை எழுதுவதில் பாரதிக்கு முன்னோடிகள் இல்லை! பாரதி ஒரு சுயம்பு. சான்றாக, வ.உ.சி அவர்கள் சிறையில் அனுபவித்த கொடுமைகள் பற்றிக் கண்டித்து எழுதும்போது – இங்கிலாந்தில் சிறைக் கைதிகள் பெற்றிருந்த வசதிகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார். அதிகாரத்தை நோக்தி கேள்வி எழுப்பும்போது எத்தகைய அணுகுமுறையை எழுத்தாளன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்குச் சான்று அக் கட்டுரை!
சீனி, விசுவநாதன் படைப்புகளைத் தொகுத்தார் எனில், அவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு ‘பாரதி படைப்புகளில் வேத இலக்கியத்தின் தாக்கம்’ போன்ற கனமான கட்டுரைகளை அளித்தவர் பெ.சு.மணி. இன்றும் பெ.சு.மணியின் பாரதியியல் நூல்கள் அச்சில் கிடைக்கின்றன என்பது நம் நல்லூழ்.
தமிழில் சித்தர் மரபு குறித்த ஆய்வுப்பூர்வமான, துல்லியமான முடிவுகளை எழுத்தாக்கியுள்ள பெரியசாமி தூரன், பாரதியை முதன்முதலில் இதழ்களின் பக்கங்களிலிருந்து மீட்டெடுத்தவர். 1904 முதல் 1921 வரை ஆண்டிலான சுதேசமித்திரன் இதழ்களை ‘பாரதி தமிழ்’ என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியவர் பெ.தூரன் அவர்களே!

தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய பெ.தூரனின் பாரதி பற்றிய நூல்கள் மின்னூல் வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன. (பொருள் புதிது தளத்தில் ‘பாரதியின் உலகம்’ நூல் இருக்கிறது).
ரா.அ.பத்மநாபன், ய.மணிகண்டன் என மேலும் பல ஆய்வாளர்கள் பாரதியியலில் இன்றும் பெரும் பணி ஆற்றி வருகிறார்கள்.
தான் காலமாவதற்கு முன், ஈரோட்டில் பாரதி இறுதியாக ஆற்றிய சொற்பொழிவின் தலைப்பு ‘மனிதனுக்கு மரணமில்லை’! பாரதி போன்ற யுகபுருஷர்கள் அவர் மொழியிலேயே சொல்வதானால் பார்மீது சாகாதிருப்பர்!
$$$
One thought on “காலந்தோறும் பாரதி”