-மது.ஜெகதீஷ்
சிற்பக்கலை ஆர்வலரும், கானுயிர் புகைப்படக் கலைஞருமான, பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ், கணினிப் பொறியாளரும் கூட. நாடு முழுவதும் உள்ள தொன்மையான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை புகைப்படத்தில் பதிவு செய்யும் அரும்பணி ஆற்றிவரும் இவரது சிற்பக் கட்டுரை இங்கே....
பொழில்வாய்ச்சி:
இயற்கை எழில், செழித்து வளர்ந்த சோலைகள் சூழ்ந்த, பொழில் வாய்ந்த இப்பகுதி
‘பொழில்வாய்ச்சி’ என்ற பழங்கால பெயர் கொண்டு அழைக்கப்பட்டு, பின்னர் நாளடைவில் மருவி ‘பொள்ளாச்சி’ என்றாகியது. தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இப்பகுதி இன்றும் பசுமை மாறாத சோலைப்பகுதியாகவே காட்சி தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
வளமான பகுதிகள் நிறைந்த இவ்வூர் ‘முடிகொண்ட சோழநல்லூர்’ என்று மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அழைக்கப்பட்டது. இங்குள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் என்று தற்போது அழைக்கப்படும் புராதனக் கோயிலையே இங்கு நாம் காணப் போகிறோம்.
அழகு மிகு அகத்தீஸ்வரமுடையார் ஆலயம்:
கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும், பின்னர் சுந்தர பாண்டியன் காலத்திலும் (12-13 ஆம் நூற்றாண்டு) திருப்பணி செய்யப்பட்டு ‘திரு அகத்தீஸ்வரமுடையார்’ என்ற பெயர் கொண்ட சிவாலயம், பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது. ‘பொழில்வாய்ச்சி’ என்ற பழமையான பெயர் கூறும் கல்வெட்டு இவ்வாலய சுற்றுச்சுவரில் காணப்படுகிறது.

இக்கோயிலின் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சன்னிதிகள் முன்புள்ள 24 தூண் மண்டபத்தில் உள்ள எழில் வாய்ந்த அரிய சிற்பங்கள், கலை ஆர்வலர்களின் கண்களுக்கு விருந்து. தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக கங்காளர், துர்க்கை, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், தசாவதாரக் காட்சிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
வியக்க வைக்கும் விதானம்:

மேற்கூரையில் ஒரே கல்லிலான கற்சங்கிலி, 12 ராசிகளின் வடிவங்கள் கொண்ட சிற்பங்கள் ஆகியவை, காண்போரைக் களிப்புற வைக்கின்றன.
சிவன் சன்னிதிக்கு முன்புறம் உள்ள மண்டபத்தின் விதானத்தில், சிம்மத்தின் வாயிலிருந்து தொங்கும் ஒரே கல்லால் ஆன பிரம்மாண்டமான கற்சங்கிலி சிற்பம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.
ஒற்றைக்கல் கற்சங்கிலி:


மேற்கூரையில் உள்ள சிம்ம யாளி மிகுந்த கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கொடி போன்ற பூ வேலைப்பாடுகள், சிம்மத்தின் முன்னங்கால் பகுதி, பின்னங்கால் தொடைப்பகுதி, வால் பகுதிகளில் நுணுக்கமாக செதுக்கப் பட்டுள்ளது சிறப்பு.
நான்கு கல் வளையங்கள் கொண்ட கற்சங்கிலியை சிம்ம யாளி வாயில் கவ்விப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சங்கிலியின் கடைசி வளையத்தின் அடியில் அழகிய தாமரை மலர் நுட்பமான வேலைபாடுகளுடன் காணப்படுகிறது.
தடாதகைப் பிராட்டியார் (மும்முலை அம்மன்):

ஸ்ரீ மீனாட்சி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் அரிய சிற்பம் இவ்வாலயத் தூணில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
“ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்தவெம் புலித் தோலும் கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும் கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும் பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள். கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம் கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப் பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக் கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்”. (641-642 திருமணப் படலம், திருவிளையாடல் புராணம்)
என்ற திருவிளையாடல் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன இந்தச் சிற்பங்கள்.
மரங்களிடையே சிக்கிய கண்ணன் இழுத்த உரல்:

நாரதர் அளித்த சாபத்தினால் இரு தேவர்கள், மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக்கொண்டே கண்ணன், அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்த போது, மரங்கள் வேரோடு சாய்ந்து, அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள்.

இது ஸ்ரீமத் பாகவத கதை.
இந்த நிகழ்வை விளக்கும் சிற்பமும் மண்டபத் தூணை அலங்கரிக்கிறது.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தூண்களில் இருக்கும் இது போன்ற பல பேரழகு புடைப்புச் சிற்பங்கள், உள்ளூர் மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கா விட்டாலும், தொல்லியல் ஆர்வலர்களைக் கவர்ந்திழுக்கிறது.
பொள்ளாச்சி வரும் அன்பர்கள், கடைவீதி அருகில் உள்ள இக்கோயிலையும், இங்குள்ள சிற்பக் கலைக் கருவூலங்களையும் கண்டு களிக்க வேண்டும். இது எனது அவா.
$$$
One thought on “பொழில்வாய்ச்சியின் எழில் கோயில்”