சுடரொளி தொடரும்! (கவிதை)

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதியுள்ள உருவகக் கவிதை இது. சுடரொளி தொடர இறைவனைப் பிரார்த்திப்போம்! சிறு சுடரொளி மட்டுமல்ல, அக்கினிக்குஞ்சு இது.

.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போரில்

எந்தப் பக்கம் நிற்க என்பதில் 

எந்தக் குழப்பமும் வந்ததில்லை தெய்வங்களுக்கு.

தேவர்களுக்கு இடையிலான சகோதர யுத்தத்திலும்

யாரை ஆதரித்தாலும்

தர்மமே வெல்லும் என்பதால்

எந்தக் குழப்பமும் வந்ததில்லை.

.

அசுரர்களுக்கு இடையிலான போரிலும்

யாரை அழித்தாலும் 

அதர்மமே அழியும் என்பதால்

எந்தக் குழப்பமும் வந்ததில்லை.

.

யுகங்களின் வரலாற்றில் முதல்முறையாக

அசுரன்களுக்கும்

அசுரனாக மாறிக் கொண்டிருக்கும் தேவர்களுக்கும்

இடையில் நடக்கிறது குருக்ஷேத்ரப் போர்.

.

இதில் அசுரன்களை அழிக்கத் துணை போனாலும்

வெல்லப் போவது தேவர்கள் அல்ல;

அரை அசுரன்களே.

.

அந்த  அரை அசுரக் கும்பலை அழிக்கலாம் என்றால் 

இருக்கும் அரை குறை தர்மமும் அழிந்துவிடும்.

ஏனென்றால், 

அவர்கள்தான் அரை தேவராகவும் இருக்கிறார்கள்.

.

பாற்கடல் தெய்வம் படு குழப்பத்தில் 

பாம்பணையில் படுத்திருக்கிறது.

.

கால் மாட்டில் அமர்ந்திருப்பவனைக் கண் திறந்து பார்ப்பதா,

தலைமாட்டில் அமர்ந்திருப்பவனைக் கண் திறந்து பார்ப்பதா?

.

தன் படைகளை யாருக்கு அனுப்ப?

ஆயுதமேந்தாமல் யார் பக்கம் நின்று வழிகாட்ட?

.

அடுத்த அவதாரம் வந்து பார்த்துக் கொள்ளட்டும் என்று

அனந்த சயனத்திலேயே முடிவற்று ஆழ்ந்துவிடலாமா?

.

அதர்மம் தலை தூக்கும்போது 

தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கலாம்.

.

அதர்மத்தின் இடத்தில் 

அரை அதர்மத்தைக் கொண்டுவர

அவதரிக்கலாமா?

.

தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று

தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்கிறார்.

.

அவருடைய கஷ்டம் அவருக்கு,

நம் கஷ்டம் நமக்கு.

.

பாரம்பரிய அரக்கர்களைக் கொல்லத் தெரிந்த தெய்வத்தால்

நவீன அரக்கர்களை அழிக்க முடியுமா?

.

ஓர் அவதார வலிமையினால்

இன்னோர் அவதாரக் கடமையை நிறைவேற்ற முடியுமா?

.

பூதகியைக் கொல்ல வாமனரால் முடியுமா?

பத்து தலை ராவணைனைக் கொல்ல 

பலராமரால் முடியுமா?

.

தவறான தெய்வத்தை நோக்கித் தவம் செய்தால்

கிடைக்கும் வரம் என்னவாக இருக்கும்? 

.

யாரைக் காக்க அவதரிக்க என்று தெய்வத்துக்குக் குழப்பம்;

எந்த அவதாரத்தை வரச் சொல்ல என்று பக்தனுக்குக் குழப்பம்!

.

பால்வீதியில் ஒரு நட்சத்திரம் 

மெள்ளக் கண் மூடப் போகிறதா?

.

பாவங்கள் மலியும் பூமியில்

ஒரு பண்பாடு என்றென்றைக்குமாக மறையப்போகிறதா?

.

அடர் கானகத்தில்

ஓர் உயிரினம்  நிரந்தர அழிவுக்குள் போகப் போகிறதா?

.

பி.ஆர்.மகாதேவன்

எல்லையற்றுப் பெருகும் இருளின் முன்

இறுதிச் சொட்டையும் உறிஞ்சியபடி எரியும்

ஒற்றை அகலின் சிறு சுடரும்,

எந்தப் பக்கம் நின்றெரிய என்று தெரியாமல்

அல்லாடிக் கொண்டிருக்கிறது இடமும் வலமுமாக.

.

இருந்தும்,

ஒளி என்பது குறைந்த இருளே என்றாலும்,

இரு பக்க இருளையும் அகற்றிக்கொண்டு

முடிந்த வரை 

முழுவதுமாக எரியத் துடிக்கிறது  

முன் மாடச் சிறு சுடர்.

$$$

.

One thought on “சுடரொளி தொடரும்! (கவிதை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s