கொன்றைவேந்தன் (41-45)

-பத்மன்

கொன்றைவேந்தன்- மூலம் – ஔவையார்

கொன்றைவேந்தன் (36-40)

கொன்றைவேந்தன்- 41

துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

விளக்கம்: 

நுண்ணுணர்வு இல்லாத பெண்கள் தங்கள் மடியிலே நெருப்பை வைத்துக் கொண்டிருப்பதைப் போல அவதிப்பட நேரிடும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

துடிப்பு என்பது பரபரப்பு, சினம், உடலில் உயிர்ப்பு இருப்பதை உணர்த்தும் நாடித்துடிப்பு, நுட்பமான உணர்வு ஆகிய பொருள்களைத் தருகிறது. ஒரு பாதிப்புக்கு உடனடியாக ஆற்றும் எதிர்வினை என்றும் பொருள்.வலியால் துடிப்பது, நாட்டுக்குச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை நினைத்துத் துடிப்பது ஆகியவை இந்த நுண்ணுணர்வே.

இயற்கையாகவே இடர்கள் கூடுதலாக உள்ள மகளிருக்கு நுண்ணுணர்வும் முன்னெச்சரிக்கையும் கலந்த துடிப்பு இருக்க வேண்டும். ஒருவன் பார்க்கும் பார்வையிலேயே அவன் எந்த நோக்கோடு பார்க்கிறான் என்பதை அறிந்து எதிர்வினையாற்ற வேண்டும். சீற வேண்டிய இடத்திலே சீறியாக வேண்டும். அதற்கு இந்தத் துடிப்பு அவசியம். அவ்வாறான நுண்ணுணர்வு இல்லாத பெண்கள் தங்கள் மடியிலேயே நெருப்பைக் கட்டிக்கொள்வதைப் போலஅபாயத்தைச் சுமந்து செல்வார்கள். அதுமட்டுமல்ல, அவர்களது பெற்றோரும், கணவனும், குடும்பத்தாருமே மடியில் நெருப்பைப் போன்ற துயரத்துக்கு ஆட்படுவார்கள்.

துடிப்பு இருக்கும் பெண்களுக்கு மனஉறுதியும் வலிமையும் தானே வந்து சேரும்.

ஆகையால்தான் பெண்களுக்கு துடிப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தவே எதிர்மறையாக துடியாப் பெண்கள் மடியில் நெருப்பு என எச்சரிக்கிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 42

தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும்

விளக்கம்: 

பெண்களைத் தூற்றுதல் அழிவை உருவாக்கிவிடும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

ஆனால், இழிசொற்களைச் சொல்லும் பெண்கள் எமனுக்கு ஒப்பாவர் எனச் சிலர் பொருள் கூறுகின்றனர். அவ்வாறெனில் ஆண்கள் இழிசொற்களைக் கூறுவது ஏற்றம் தருமா?

தூற்றம் பெண்டிர் என்றுதான் ஔவையார் கூறியிருக்கிறார். தூற்றும் பெண்டிர் எனக் கூறவில்லை என்பதை உற்றுநோக்க வேண்டும்.

தகர வரிசையில் கொன்றைவேந்தனை அடுக்கிச் சொல்லும்போது வரிசைப்படி து எனத் தொடங்கும் சொல்லுக்குப்பின் ‘தூ’ எனத் தொடங்கும் சொல் வர வேண்டும் என்பதால் தூற்றம் என்பதை முன்னே சொல்லி ஆரம்பித்திருக்கிறார் ஔவையார். ஆகையால் பெண்டிரைத் தூற்றுதல் என்பது அழிவுக்கு வழிவகுக்கும் என்றுதான் பொருள் கொள்ளத்தகும்.

‘தையலை உயர்வுசெய்’ என்று புதிய ஆத்திச்சூடியில் புகழ்ந்து பாடினான் மகாகவி பாரதி. அந்த மகாகவிக்கு உத்வேகமாகவும் உள்ளங் கவர்ந்த ஆசானாகவும் திகழ்பவர் ஔவையார். அப்படிப்பட்ட பெண்பாற் புலவரான ஔவையார் கூறிய பல கருத்துகளுக்கு, பெண்குலத்தை இழிவுசெய்வதைப் போல திரித்துப் பொருள் கூறுவது வேதனை அளிக்கிறது. அத்தகைய திரிந்த பொருள் கொள்வதால், இந்தக் கொன்றைவேந்தன் அடியும் அடிவாங்கியுள்ளது.

தூற்றம் என்பது அபவாதம் பேசுதல், குற்றச்சாட்டுகளைச் சுமத்துதல், இழிவாகப் பேசுதல் எனப் பல்வேறு பொருள் தருகிறது. ஆகையால், பெண்களை மனம்போன போக்கில் இழிவுசெய்து பேசுதல், குறை கூறுதல் ஆகியவை அந்த நபருக்கோ, அந்தக் குடும்பத்துக்கோ, அந்த சமுதாயத்துக்கோ அழிவைத் தந்துவிடும் என்று ஔவையார் எச்சரிக்கிறார் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

$$$

கொன்றைவேந்தன்- 43

தெய்வம் சீறின் கைதவம் மாளும்

விளக்கம்:

தெய்வம் சீற்றம் கொண்டால் வஞ்சனைக்கு முடிவு கட்டப்படும் என்று அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார் ஔவையார்.

கைதவம் என்றால் வஞ்சனை, கபடம், சூது என்று பொருள். தெய்வம் கருணைக்கடல், மிகவும் பொறுமையானது. ஆயினும் உலகில் வஞ்சகக் கொடுமை மிகுந்துகொண்டே வந்தால், அந்த அசுரத்தனத்துக்கு முடிவுகட்ட தெய்வம் அறச்சீற்றத்தோடு பேரச்சம் தரும் உருவில் தோன்றும். அப்போது வஞ்சனை அழியும்.

‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பது மூத்தோர்மொழி. எடுத்த எடுப்பிலேயே தீமைக்கு அழிவை தெய்வம் தந்துவிடாது. தவறு செய்தவர்கள் திருந்த இடம் கொடுக்கும். தவறு செய்தவர்களை சான்றோர்கள் திருத்தவும் அவகாசம் கொடுக்கும். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, நல்லவர்கள், அப்பாவிகளின் எண்ணிக்கை நசிந்து, வஞ்சகர்கள், தீயவர்களின் எண்ணிக்கை மிகும்போது தெய்வம் சீற்றம் கொள்ளும். அந்தச் சீற்றத்தீயில் தீமை பொசுங்கும்.

அதிலும் விஷயம் தெரியாதவர்கள் தவறு செய்யும்போது தெய்வம் மிகவும் பொறுத்திருக்கும்.ஆனால் நன்கு சிந்திக்கத் தெரிந்தவர்கள் தவறு செய்யும்போதுதான் தெய்வத்துக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரும். வஞ்சனை என்பது அறிவற்றவர்கள் செய்கின்ற தவறோ, தெரியாமல் செய்துவிடுகின்ற குற்றமோஅல்ல. இதுபாவம், இது பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் என்று தெரிந்தே, தங்களது சுயலாபத்துக்காகவோ அல்லது குரூர மனப்பான்மையாலோ செய்கின்ற குற்றங்கள்தான் வஞ்சனை எனப்படுகிறது. கொள்ளை லாபமடித்தல், படுகொலைகள் செய்தல், நம்பிக்கைத் துரோகம் செய்தல், ஏமாற்றுதல், அப்பாவிகளைத் துன்புறுத்துதல், சாதி-மதவெறியால் கொடுமை இழைத்தல், அரசியலுக்காக பொய்ப்பித்தலாட்டம் செய்தல், இனத்துவேஷம் கொள்ளுதல் போன்றவை வஞ்சனைகளாகும். இவை மிகும்போது தெய்வம் சீறி அவற்றை மாய்க்கும். இதனைத்தான், மகாகவி பாரதி, ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்’ என்று நவீனக் கோணங்கியாக எச்சரித்துள்ளார்.

வஞ்சகம் மிகுவதால் கோபம் கொள்ளும் தெய்வம், எந்த வடிவிலும் வரும். புராணங்களில் கூறப்படுவதைப் போன்ற அதீதமானுட உருவில்தான் தெய்வம் வர வேண்டும் என்பதில்லை. சராசரி மானுடர் போன்றோ அல்லது நினைத்துப் பார்க்க இயலாத எந்தவொரு வடிவத்திலோ தெய்வம் வந்து, தீயவர்களையும் தீமையையும் துடைத்தெறியும்.

இதனைத்தான், தெய்வம் சீறின் கைதவம் மாளும் என்று ஊசி தைத்தாற்போல நறுக்கெனச் சொல்லிவைத்துள்ளார் ஔவையார்.

  • ஒப்பு நோக்குக: 32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்

$$$

கொன்றைவேந்தன்- 44

தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

விளக்கம்:

வாழ்வின் நிறைவாகிய இறையைத் தேடாது இந்த வாழ்வை அழிக்கின் பல பிறவிகளை எடுத்துத் துன்புறும் பாடு அதாவது அல்லலாக நம் வாழ்க்கை முடியும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

இந்தப் பிறவி என்பது இறைவன் நமக்கு வைத்துள்ள சோதனை; ஒரு தேர்வு. இந்தத் தேர்விலே நாம், வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை, இதற்கு விடையாகிய விடையேறும் பெருமானாம் இறைவனைத் தேடி அடைய வேண்டும். அதுவே நமது பிறவிப்பிணிக்கு விடையாக நிம்மதி தரும் நிறைவாக அமையும். இல்லையேல் சம்சார சாகரத்தில் உழன்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். இதனைத்தான்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடிசேராதவர்

-என்றார் திருவள்ளுவப் பெருமான் (திருக்குறள்- 10).

அதேநேரத்தில் இகவாழ்வுக்கு ஏற்ற மற்றொரு பொருளையும் இது தருகிறது. செல்வத்தைத் தேடாமல், இருக்கின்ற செல்வத்தை அழித்தால் துன்பமாக முடியும் என்பதே அப்பொருள்.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு

-என வள்ளுவப் பெருந்தகை ஈரடியில் (திருக்குறள்- 247) கூறியதை ஔவைப் பிராட்டியார் ஓரடியில் உரைத்துள்ளார்.

ஆக, இவ்வுலக வாழ்வுக்கான பொருட்செல்வத்தையும் அழித்திடாமல் தேடிச்சேர்க்க வேண்டும், இறைவனோடு இரண்டறக் கலப்பதற்கு வழிவகுக்கும் அவ்வுலக வாழ்வுக்கான அருட்செல்வத்தையும் அழித்திடாமல் மென்மேலும் தேடிச்சேர்க்க வேண்டும் என்று ஔவையார் அறிவுறுத்துகிறார்.

$$$

கொன்றைவேந்தன்- 45

தையும் மாசியும் வையகத்து உறங்கு

விளக்கம்:

தை, மாசி ஆகிய மாதங்களில் வைக்கோல் குடிலில் உறங்கு என்கிறார் ஔவையார்.

தை முன்பனிக்காலம் முடியும் மாதம். மாசி பின்பனிக்காலம் தொடங்கும் மாதம். இந்த இரு மாதங்களிலுமே குளிர் மிகஅதிகமாக இருக்கும். 

‘வை’ என்றால் வைக்கோல் எனப் பொருள். அகம் என்றால் வீடு. எனவே வையகம் என்பது வைக்கோல் கூரை வேய்ந்த வீடு. வைக்கோல் என்பது குளிரை அண்டவிடாமல் கதகதப்பாக வைக்கும். அக்காலத்திலே ஓட்டுவீடும், வைக்கோல்வீடுமே அதிகம். இதிலே ஓட்டுவீடுகூட குளிரை உள்நுழைய விடும். வைக்கோல்வீடு குளிரை உள்நுழைய விடாது. ஆகையால் சுற்றுச்சூழல் அறிவுறுத்தலாக தை, மாசி ஆகிய மாதங்களில் வைக்கோல் குடில்களில் குடியிருக்குமாறு ஔவையார் கூறுகிறார் எனலாம்.

அதேநேரத்தில் நுட்பமான வேறுபொருள்களும் உள்ளன. தைமாதம் அறுவடை மாதம். அப்போது அறுவடைப் பணிகளுக்காக வயல்களில் வைக்கோல் வேயப்பட்ட குடில்களில்தான் தங்க நேரிடும். இந்த அறுவடைப்பணிகள் அடுத்த மாதமான மாசியிலும் நீடிக்கலாம். ஆகையால் குளிருக்கு அடக்கமாகவும் அறுவடைப் பணிகளுக்காகவும் வைக்கோல் குடில்களில் தங்குமாறு ஔவையார் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

வைக்கோல் என்பதற்கு கூண்டுவண்டி, ஊர்தி, பல்லக்கு, விலங்குகள் இழுக்கும் வண்டி என்றும் பொருள் உள்ளது.

தைமாதம் அறுவடைமாதம் என்பதால் கையிலே காசு புழங்கும். சூரியன் உத்தராயண புண்யகாலம் என்ற ஒளிமிகும் வடதிசைப் பயணத்தைத் தொடங்கும் புனித மாதம் தை. அடுத்த மாதமான மாசி, சிவராத்திரியும், மாசிமகமும் கொண்டாடப்படும் மாதம். தீர்த்த யாத்திரைக்கும், புனித நீராடலுக்கும் உகந்த மாதம். ஆகையால் புனிதமான தை, மாசி ஆகிய மாதங்களில் புனிதத்தலங்களுக்கு, புனித நீராடலுக்குச் செல்லப் பயணம் மேற்கொள்ளுதல் மரபு.

அக்காலத்தில் மாட்டுவண்டி, குதிரைவண்டி, பல்லக்கு ஆகியவற்றில்தான் பயணம் மேற்கொள்வது வழக்கம். அப்போது பாதுகாப்புக்காகவும், குளிருக்கு அடக்கமாகவும் இரவுநேரத்தில் இத்தகைய வண்டிகளில்தான் உறங்க நேரிடும்.

இதைக் கருத்தில் கொண்டே தை, மாசி ஆகிய மாதங்களில் புனிதப்பயணம் மேற்கொள் என்பதைக் குறிக்கும்வகையில் வையகத்து உறங்கு என்று ஔவையார் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

$$$

2 thoughts on “கொன்றைவேந்தன் (41-45)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s