-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
3. திருவாவடுதுறை நிகழ்ச்சிகள்
திருவாவடுதுறை சென்றது
அங்ஙனமே இவர் திருவாவடுதுறை போகையில் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய பெருமையையும் வடமொழி தென்மொழிகளிலும் சைவசித்தாந்த சாஸ்திரங்களிலும் இசையிலும் அவருக்குள்ள பயிற்சி மிகுதியையும் அவற்றிற் பாண்டித்தியமுள்ளவர்களை அன்புடன் ஆதரிக்கும் அருமையையும் பாராட்டிக் கூறி என்னை நோக்கி, “உம்மைச் சில செய்யுட்கள் சொல்லும்படி ஸந்நிதானம் கட்டளையிடக் கூடும். அப்போது இன்ன இன்ன நூல்களிலிருந்து இன்ன இன்ன வகையான செய்யுட்களை இசையுடன் சொல்லும். பொருள்கேட்டாற் பொருளையும் தவறின்றிச் சொல்லும். சொல்லி உவப்பித்தால் அவர்களுடைய பேராதரவைப் பெறலாம்” என்று சொன்னதன்றிப் பின்னும் நான் அங்கே உள்ளவர்களிடத்து நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் மனத்திற்படும்படி போதித்துக் கொண்டே சென்றார்.
அப்பொழுது சாலையில் எதிரே வருபவர்களும் அயலிடங்களில் நிற்பவர்களும் பிள்ளையவர்கள் செல்லுகிறார்களென்று தம்முள் நன்மதிப்போடு பேசிக்கொள்ளுதலையும் சிலர் வந்து வந்து பார்த்து, “எங்களுடைய ஞாபகமிருக்க வேண்டும்” என்று விநயத்துடன் சொல்லுதலையும் பார்த்த எனக்குப் பின்னும் இவரிடத்து நன்மதிப்பு உண்டாயிற்று. அப்பால் இவர் திருவாவடுதுறையை யடைந்து மடத்திற்குச் சென்றார். மடத்து ஓதுவார்களிற் சிலர் இவரைக் கண்ட உடனே இவர் வரவை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பம் செய்ய, இவரை அழைத்துவரும்படி அவர் சொல்லி யனுப்பினார்.
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகராற் பாராட்டப் பெற்றது
அதைக் கேட்டு இவர் மிக விரைந்து சென்று இரண்டு கைகளையும் உச்சிமேற் குவித்து அவரைப் பணிந்தார். அவர் அப்பொழுது *1 ஒடுக்கத்தின் வடபுறத்தே தென்முகம் நோக்கி யிருந்தார். அருகில் வடமொழி தென்மொழிகளிலும் ஸங்கீதத்திலும் வல்ல வித்துவான்கள் இருந்தார்கள். வணங்கிய இவர் திருநீறு பெறுவதற்கு எழுந்து செல்லும்பொழுது தேசிகரைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலோடு இவர் பின்னே நின்ற யானும் சென்றேன். நெற்றியில் திருநீறு இட்டு இவரை இருக்கச்செய்துவிட்டுத் தேசிகர், “உங்களுக்குப் பின்னே வருகிற இவரோ முன்பு வந்த பொழுது பாடங்கேட்பதாகச் சொல்லிய சாமிநாதைய ரென்பவர்?” என்று விசாரித்தார். அப்பொழுது *2 ‘ஸ்வாமி’ என்று இவர் சொல்லவே எனக்கு உண்டான உவப்பிற்கு எல்லையே இல்லை. ஒரு பொருளாக என்னை நினைந்து தாம் வந்தபொழுது நான் பாடங்கேட்டு வருவதாக இப்புலவர்பிரான் சொல்லிய அருமையையும் அதனை ஞாபகப்படுத்திக் கொண்டு விசாரித்த தேசிகருடைய பெருமையையும் எண்ணி எண்ணி இன்பம் அடைந்து கொண்டே சென்று தேசிகர் இருக்கும்படி சொல்ல இவருக்குப் பின்னே இருந்தேன்.
அப்பொழுது தேசிகர் இவரைப்பார்த்து, ” இங்கே வந்திருந்த ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்கள் நேற்று மாலையில் ஸ்ரீ சோமாசிமாற நாயனார் சரித்திரம் கதை பண்ணினார்கள். அதற்காக அழைக்கப்பட்டுத் திருவிடைமருதூரிலிருந்து ராஜா கனபாடிகள், சுந்தர சாஸ்திரிகள், அண்ணா வாஜபேயர் முதலிய வித்துவான்களும், திருவாலங்காட்டிலிருந்து விசுவபதி தீக்ஷிதர், அப்பா தீக்ஷிதர், பெரியசாமி சாஸ்திரிகள், சின்னசாமி சாஸ்திரிகள், ராஜு சாஸ்திரிகள் முதலிய வித்துவான்களும், திருக்கோடிகா, திருவிசைநல்லூர் முதலிய ஊர்களிலுள்ள பண்டிதர்களும், செல்வவான்களிற் பலரும் வந்திருந்தார்கள். ஸதஸ் மிக நன்றாகவே இருந்தது. மகாவைத்தியநாதையரவர்கள் அந்தச் சரித்திரத்தைக் கதை பண்ணுகையில் சுருதி ஸ்மிருதி இதிஹாஸங்களிலிருந்தும், ஸ்ரீ ஹரதத்த சிவாசாரியார் அப்பைய தீக்ஷிதர் முதலிய பரமசாம்பவர்களுடைய வாக்கிலிருந்தும், தேவார திருவாசகங்கள் முதலியவற்றிலிருந்தும் அவ்வவ்விடத்திற்கேற்ப மேற்கோள்கள் காட்டிச் சபையை மகிழ்வித்ததுடன் உங்களுடைய வாக்காகிய சூத சங்கிதையிலிருந்தும் சில ஸ்தலபுராணங்களிலிருந்தும் வாட்போக்கிக் கலம்பகம் முதலியவற்றிலிருந்தும் உசிதமான செய்யுட்களை எடுத்துக் காட்டி உபந்யஸித்தார்கள். எல்லோரும் அளவற்ற மகிழ்வடைந்தார்கள். அவற்றுள் உங்களுடைய பாடல்கள் அவர்களுடைய சாரீரத்தோடு சேர்ந்து செயற்கையழகும் பெற்று எல்லாருடைய மனத்தையும் கவர்ந்தன. அவர்கள் ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லிவிட்டு, ‘இந்த விஷயமாகப் பிள்ளையவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று சொல்லிச் செல்லும்பொழுது கேட்டவர்கள் உங்களுடைய அறிவின் வன்மையையும் ஸாஹித்யத்தின் அழகையும் அறிந்து வியந்தார்கள். அது தொடங்கி உங்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறோம். மற்றவர்களும் அப்படியே இருக்கிறார்கள்” என்று சொன்னார்.
குணக் குன்றாகிய இவர் மிக்க பணிவுடன், “அடியேனுக்கு யாது செயலுளது? எல்லாம் ஸந்நிதானத்தின் திருவருளே” என்று விண்ணப்பம் செய்தனர். அங்கே உடனிருந்த மற்றப் பெரியோர்களும் பிள்ளையவர்களுடைய வரவால் தங்களுக்குண்டான மன மகிழ்ச்சியைத் தங்கள் முகங்களாற் புலப்படுத்தினார்கள்.
சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பரீட்சித்தது
அப்பால் தேசிகர் என்னை முன்னே வரச்செய்து, “படித்த நூல்களிலிருந்து ஞாபகமுள்ள எந்தப்பாடல்களையேனும் சொல்லிப் பொருளும் சொல்லும்” என்றார். நான் துறைசை யமகவந்தாதி, திருத்தில்லை யமகவந்தாதி, திருக்குற்றால யமகவந்தாதி, புகலூரந்தாதி யென்பவற்றுள் ஒவ்வொன்றிலிருந்தும் சில சில பாடல்களைச் சொல்லிப் பொருளும் சொன்னேன். பொருள் சொல்லுகையில் அச்சத்தால் நாக்குத் தழுதழுத்தது; அதனால் துன்புற்றேன். அதனையறிந்து தைரியமாகச் சொல்லும்படி பிள்ளையவர்கள் தூண்டினமையால் பின்பு அச்சமின்றிச் சொன்னேன்.
அப்போது தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்து, “சாரீரமும் சங்கீத ஞானமும் இவருக்குள்ளன. தங்களிடம் படித்துக்கொண்டு வந்தால் முன்னுக்கு வருவாரென்று தோற்றுகிறது. தங்களை அடைந்தவர்களுக்கு யாதொரு குறையுமிராது” என்று சொல்ல, இவர், “அடியேனால் ஆவது ஒன்றுமில்லை; ஸந்நிதானத்தின் திருவருளே எல்லோரையும் பாதுகாத்து வருகின்றது; இனிமேலும் பாதுகாத்தற்குரியது அதுவே; இவரும் அவ்விடத்துப் பிரியத்துக்குப் பாத்திரரே” என்று விண்ணப்பஞ் செய்தார்.
பின்பு தேசிகர், “இங்கே வழங்காத திருக்குற்றால யமகவந்தாதி இவருக்கு எப்படிப் பாடமாயிற்று?” என்று கேட்க இவர், “அந்நூலை இதுவரையில் அடியேன் பார்த்ததில்லை; அடியேன் வருவித்துக் கொடுக்க வேண்டுமென்று சொன்னமையால் மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயர் அதனையும் திருக்குற்றாலப்புராண ஏட்டுப் பிரதியையும் வருவித்துக் கொடுத்தார். அந்தாதியை ஒருமுறை முற்றும் படித்துப் பொருள் வரையறை செய்துகொண்டு பாடஞ் சொன்னேன். அந்நூல் பலவகையிலும் சிறப்புற்று விளங்குகின்றது. புராணத்தையும் படிப்பித்துக் கேட்டுவருகிறேன்; அதுவும் அழகாகவே இருக்கின்றது” என்று சொன்னார்.
அப்பால் நெடுநேரம் வரையில் சில அரிய விஷயங்களைப் பற்றிய ஸல்லாபம் நடந்து கொண்டேயிருந்தது. “நேரமாய் விட்டது; தாங்கள் பூஜையை முடித்துக்கொண்டு இங்கே *3 பூஜையின் தரிசனத்திற்கு வரவேண்டும்” என்று தேசிகர் சொல்லவே இவர் எழுந்து மீட்டும் பணியத் தொடங்கியபொழுது இவருக்குச் சிரமம் ஏற்படக் கூடாதென்று நினைந்து, *4 “ஒருமுறை வந்தனம் செய்ததே போதும்; பிற்பாடும் செய்ய வேண்டாமென்று முன்னமே நாம் சொல்லியிருக்கிறோமே? இனி அவ்வண்ணமே நடக்க வேண்டும்” என வற்புறுத்தினார்.
திருவாவடுதுறைக் காட்சிகள்
அப்பால் இவர் ஸ்நானஞ் செய்தற்குத் தெற்குக் *5 குளப்புரைக்கு வந்தார். வருங்காலத்தில் பெரிய தம்பிரான்கள், குட்டித்தம்பிரான்கள், மடத்துக் காரியஸ்தர்கள், ஓதுவார்கள் முதலியவர்கள் நல்வரவு கூறி இவரைப் பாராட்டித் தொடர்ந்து வந்து அனுப்பினார்கள். இவர் போவதற்கு முன் குளப்புரையில் வெந்நீர் போடப்பட்டிருந்தது. ஸ்நானம் செய்துவிட்டுப் பூஜைக்குச் சென்றார். அங்கே வடபாலுள்ள பூஜை மடத்தில் தம்பிரான்களிற் சிலர் நியமத்தோடு பூஜை செய்தலையும் சிலர் பூஜையை முடித்துக் கொண்டு புறப்படுதலையும் பூஜை செய்வதற்குச் சிலர் அங்கே வருதலையும் அவரவர்களுக்குத் தக்கபடி தூய்மையோடுகூடிய *6 தவசிப் பிள்ளைகள் வேண்டிய பணிவிடை செய்து கொண்டு நிற்றலையும் படித்துறையின் மேல்பாலுள்ள பூஜை மடத்தில் வரிசையாக இருந்து சிலர் உடையவர் பூஜை செய்து கொண்டிருத்தலையும் தவசிப்பிள்ளைகள் தனித்தனியே மல்லிகை முல்லை முதலிய நறுமணங் கமழும் மலர் வகைகளையும் வில்வ முதலிய பத்திரவகைகளையும் வேறு வேறாக வெள்ளித்தட்டங்களில் தொகுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் உதவுதலையும் அங்கே வந்து செல்லும் அயலார்கள் பக்தியோடு, அவர்களுக்கு அஞ்சலிசெய்து கொண்டு ஒதுங்கிச் செல்லுதலையும் தம்பிரான்களுட் பெரியவர்களைக் காணுமிடத்து ஏனையோர் வந்தனம் செய்துவிட்டேனும் அஞ்சலி செய்துவிட்டேனும் செல்லுதலையும், நிருமாலியங்கள் கால்படாத இடங்களிற் குவியல் குவியலாகச் சேர்க்கப்பட்டிருத்தலையும் கண்டு விம்மிதமுற்று ஒன்றும் தோன்றாமல் நின்றேன்.
பின்பு அங்கே வந்த ஒருவரைக் கண்டு, “இந்தக் காட்சி ஆனந்தத்தை விளைவிக்கின்றது. இந்த மாதிரி எந்த இடத்தும் இதுவரையிற் கண்டதில்லை” என்று சொன்னேன். அதற்கு அவர், “என்ன ஆச்சரியம் இது? மேல் பக்கத்துள்ள அபிஷேகக் கட்டளை மடம், வடக்கு மடம், அதன் பின்பாலுள்ள குளப்புரை, மறைஞான தேசிகர் கோயில், காவிரியின் படித்துறை ஆகிய இடங்களைப் பார்த்தால் உமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்குமே” என்று சொன்னார்.
அப்பால் நான் ஸ்நானம் செய்துவிட்டு நியமங்களை முடித்துக்கொண்டு ஆகாரம் செய்யவேண்டிய இடத்திற்குச் சென்றேன். சென்று பார்த்தபொழுது அங்கே ஸம்ஸ்கிருத வித்துவான்களிற் சிலரும், ஸங்கீத வித்துவான்களிற் சிலரும் தனித்தனியே இருவர் மூவராக இருந்து சுலோகங்களைச் சொல்லிக் கொண்டும் கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டும் இடையிடையே சுப்பிரமணிய தேசிகருடைய அருமையான குண விசேடங்களைப் பாராட்டிக் கொண்டும் இருந்தார்கள். ‘இங்கே வந்தமையால் இனி நமக்கு யாதொரு கவலையும் இராது’ என்று நினைந்து நான் அவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டே நின்றேன். அப்போது அவர்களுள் ஒருவர் என்னை அழைத்து, “காலையில் நீர் பிள்ளையவர்களோடு ஸந்நிதானத்தைக் காண்பதற்கு வந்தபோது நாங்கள் அங்கிருந்தோம். ஸந்நிதானம் உம்மைப் பரீட்சித்த காலத்தில் நீர் உத்தரம் சொன்னதையெல்லாம் கேட்டோம். மிகவும் சந்தோஷமாக இருந்தது. பிள்ளையவர்களிடம் நீர் பாடங்கேட்டுக்கொண்டு வருவதும் ஸந்நிதானத்தை இன்று பார்த்ததும் உம்முடைய பெரும்பாக்கியமென்றே எண்ணுகிறோம். அவர்கள் நேத்திரங்களுக்கு நீர் எப்பொழுது விஷயமானீரோ அப்பொழுதே பாக்கியசாலியாக ஆனீர். அவர்களுடைய அன்புக்கு நாங்கள் பாத்திரமான காலந்தொடங்கிப் பரம ஸெளக்கியத்திலேயே இருந்து வருகிறோம். இப்பொழுது யாதொரு கவலையும் எங்களுக்கு இல்லை. பிறருடைய யோக்கியதையை அறிந்து ஸம்மானஞ் செய்தலில் அவர்களுக்குச் சமானமாக இப்பொழுது யாரிருக்கிறார்கள்?” என்று சொன்னார். அவற்றை யெல்லாம் காது குளிரக் கேட்டேன். சிலர் என்னைச் சில பாடல்கள் சொல்லிப் பொருள் சொல்லச் சொன்னார்கள். அங்ஙனமே சொல்லி ஆகாரம் செய்துவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
தம்பிரான்கள் சந்தேகங் கேட்டது
அங்ஙனம் இருக்கையில் என்னை அழைப்பதற்கு மடத்திலிருந்து ஒருவர் வந்தார். உடனே விரைந்து சென்றேன். சென்றபொழுது ஒடுக்கத்தின் தென்பாலுள்ள மேல்மெத்தையில் மேற்கு முகமாக ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் வீற்றிருந்தார். பிள்ளையவர்களோடு *7 குமாரசாமித் தம்பிரான் முதலிய சில தம்பிரான்களும் வேறு சிலரும் அயலில் இருந்தார்கள். அவர்கள் எழுத்திலக்கணம் முதலிய ஐந்தினையும் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடங்கேட்டு முடித்தவர்கள். ஆதலால், அவற்றிலுள்ள மேற்கோள் சிலவற்றிற்கு இப்புலவர் சிகாமணிபாற் பொருள் வினாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதப்பொழுது இன்ன இன்ன விஷயத்தைக் கேட்க வேண்டுமென்று தேசிகர் சொல்ல அப்படியே அவை அவர்களால் கேட்கப்பட்டன. அவர்கள் வினாவுதலும் அதற்குப் பிள்ளையவர்கள் யாதொரு வருத்தமுமின்றி விடையளித்தலும் எனக்கு வியப்பை விளைவித்தன. அப்பால் தண்டியலங்காரத்துள்ள அஷ்டநாகபந்தச் செய்யுளை அடக்குவதற்கு நாகங்களைப் போட்டுக் காட்டும்படி குமாரசாமித் தம்பிரான் கேட்டபொழுது பிள்ளையவர்கள் எழுதுகோலையும் கடிதத்தையும் வருவித்துப் போடத் தொடங்குமுன் நான் ஒரு கடிதத்தில் அந்த நாகங்களைப் போட்டுக் காட்டினேன். நான் வலிந்து செய்த செய்கை பெருந் தவறாக இருந்தும் அதனைப் பொறுத்துக் கொண்டு, “நீர் இதை எங்கே கற்றுக்கொண்டீர்?” என்று இவர் கேட்டார். “செங்கணம் விருத்தாசல ரெட்டியாரவர்களிடத்துத் தெரிந்து கொண்டதுண்டு. இன்னும் ரத பந்தம் முதலியவற்றையும் போடுவேன்” என்று சொன்னேன்.
சுப்பிரமணிய தேசிகர் எனக்குப் புஸ்தகங்கள் அளித்தது
அப்பொழுது இவர் அன்பு பாராட்டியதைக் கண்டு சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பார்த்து, “பிள்ளையவர்களிடம் நீர் நன்றாகப் படித்துக்கொள்ளும். அவர்கள் இங்கு வரும்பொழுது உடன்வாரும். உமக்கு வேண்டிய அனுகூலங்கள் கிடைக்கும். உமக்கு வேண்டிய புஸ்தகங்களெல்லாம் கொடுப்போம்” என்று சொல்லிவிட்டு உடனே எழுந்து சென்று அங்கே மேல்பக்கத்திலிருந்த பீரோ ஒன்றைத் திறப்பித்து கம்பரந்தாதி, துறைசையந்தாதி, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைச் சிலேடை வெண்பா முதலிய பிரபந்தங்களுள் ஒவ்வொன்றிலும் நந்நான்கு அச்சுப்பிரதிகளுக்குக் குறையாமல் எனக்கு அளித்து, “இவற்றில் ஒவ்வொன்றை நீர் எடுத்துக்கொண்டு மற்றவற்றை உடன்படிக்கிற பிள்ளைகளுக்குக் கொடும்” என்றார். பின்பு என்னைச் சில பாடல்களை இசையுடன் சொல்லச் செய்து கேட்டுவிட்டு இப்புலவர்திலகரை நோக்கி, “நேர்ந்த காலங்களில் ஸங்கீதத்திலும் இவரைப் பழக்க வேண்டும்” என்று சொன்னார். அவர் அங்ஙனம் பிரீதியைப் புலப்படுத்தியது என்பால் இயல்பாகவே அன்புவைத்திருந்த என் ஆசிரியருக்கு அதனை எத்தனையோ மடங்கு அதிகமாக்கிவிட்டது. அக் குறிப்பை அந்த நிமிஷத்திலேயே அறிந்து நான் உள்ளம் குளிர்ந்தேன்.
திருவாவடுதுறையிலிருந்து பாடஞ்சொல்லும்படி கட்டளையிட்டது
பின்பு தேசிகர் இவரை நோக்கி, “இங்கே சில தம்பிரான்களுக்கும் வேறு சிலருக்கும் பாடங்கேட்க வேண்டுமென்னும் ஆவல் அதிகமாக இருக்கிறது. பாடஞ் சொல்வதற்கு நமக்குச் சிறிதும் நேரமில்லை. வித்துவான்கள் பலரும் பிரபுக்கள் பலரும் அடிக்கடி வருதலினால் அவர்களை முறையே விசாரித்து அனுப்புவதற்குத்தான் பொழுது சரியாக இருக்கிறது. ஆதலால் வழக்கம் போலவே இங்கிருந்து அவர்களுடைய எண்ணத்தைப் பூர்த்தி பண்ண வேண்டும். அது நமக்கும் சந்தோஷத்தை விளைவிக்கும். சிரமத்தைப் பாராட்டக் கூடாது” என்றார். உடனே இவர், “ஸந்நிதானத்தின் திருவுளப்பாங்கின்படியே செய்யக் காத்திருக்கிறேன்” என்று சொல்லவே அங்கே உடன் வந்திருந்த ஆறுமுகத்தா பிள்ளை திடீரென்று எழுந்து அஞ்சலி செய்து நின்று, “ஐயா அவர்களை அழைத்துக்கொண்டு சென்று பட்டீச்சுரத்திற் சில காலம் வைத்திருந்து அடியேனுடைய குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சில குறைகளைத் தீர்த்துக்கொள்ள எண்ணியிருக்கிறேன். அதன் பொருட்டுத்தான் மாயூரம் சென்றேன். சில காலம் பட்டீச்சுரத்தில் இருந்துவரும்படி ஐயா அவர்களுக்குக் கட்டளையிட்டருள வேண்டும்” என்று வணக்கத்துடன் விண்ணப்பம் செய்து கொண்டார். தேசிகர், “அப்படியே செய்யலாம்; பட்டீச்சுரம் போய்ச் சில காலமிருந்துவிட்டு இங்கே வந்துவிட வேண்டும்” என்று கூறவே, எழுந்து பணிந்து விடைபெற்று விபூதிப்பிரஸாதம் வாங்கிக்கொண்டு இவர் புறம்போந்து வீதிக்கு வந்தார்.
திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்டது
அப்பொழுது அங்கே படித்துக் கொண்டிருக்கும் தம்பிரான்களுட் சிலர் இக்கவிஞர்பெருமானைச் சூழ்ந்து கொண்டு *8 கோட்டுமாங்குளம் வரையில் வந்து வழியனுப்பினார்கள். அவர்களில் ஒருவர் என்னையணுகி, நான் பாடங்கேட்டிருந்த நூற்பெயர்களை வினாவி அவற்றிலுள்ள சில கடினமான பாடல்களுக்குப் பொருள் கேட்டார். கேட்டவற்றிற்குத் தெரிந்த அளவு சொல்லிவிட்டு, ‘இந்த மகானை அடுத்துச் சில மாதங்களாகப் பாடங் கேட்டதனாலல்லவோ ஒரு பொருளாக நினைந்து இவர் நம்மைக் கேட்கிறார்! காலையிற் சுப்பிரமணிய தேசிகரவர்களைப் பார்த்தோம்; அவர்களுடைய பிரீதியையும் பெற்றோம்’ என்றெண்ணி மகிழ்ந்தேன். இவரிடம் பல வருடங்கள் இருந்து படித்துக் கொள்ள வேண்டுமென்று எனக்கு இருந்த எண்ணம் பின்னும் உறுதியுற்றது. உடன் வந்தவர்கள், “விரைவில் இங்கே வரவேண்டும்” என்று இவரைக் கேட்டுக்கொண்டு விடைபெற்று மீண்டு சென்றார்கள்.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:1. ஆதீனத்தலைவர்கள் ஏகாந்தமாக இருக்குமிடம்.
2. ஸ்வாமியென்பதற்கு இந்தச் சமயத்தில் ஆமென்பது பொருள்.
3. மடத்தில் நடைபெறும் சபாபதி பூஜை முதலியன.
4. வந்தவுடனும் விடைபெற்றுக்கொண்டு போகும்பொழுதும் பணிதல் அடியார்கள் வழக்கம்.
5. குளக்கரையிலுள்ள ஒரு கட்டிடம்; புரை – வீடு; இது மலைநாட்டு வழக்கு.
6. தவசிப்பிள்ளைகள் – தம்பிரான்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பவர்கள்; தவசி – துறவி, “ஐயம் புகூஉந் தவசி” (நாலடி.) இப்பெயர் பிற்காலத்தில் மடைத்தொழில் செய்பவர்கள் முதலியோர்க்கு வழங்கலாயிற்று.
7. இவர் ஸ்ரீ ஆதிகுமரகுருபர ஸ்வாமிகள் சரித்திரத்தை இயற்றுவித்த ஸ்ரீ இராமலிங்கத் தம்பிரானவர்களால் நியமிக்கப்பெற்று அவர்களுக்குப் பிற்காலத்தில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவராக இருந்து விளங்கியவர்.
8. திருவாவடுதுறையின் மேற்கேயுள்ளதொரு பெரிய தாமரைக் குளம்.
$$$