-பத்மன்

கொன்றைவேந்தன்-31
சூதும் வாதும் வேதனை செய்யும்
விளக்கம்:
வஞ்சமும் வீண்பிடிவாதமும் வேதனை தரக்கூடியவை என எச்சரிக்கிறார் ஔவையார்.
மகாகவி பாரதி இதனை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்று புதிய கோணங்கியாய் வந்து கூடுதலாய் எச்சரித்தார்.
சூது என்பது குயுக்தி, வஞ்சம், வஞ்சனை என்பதோடு சூதாட்டத்தையும் குறிக்கும்.
சூதாட்டத்தால் தான் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து அவமானத்துக்கு ஆளானான் தருமன். ஆகையால் சூதாட்டம் கூடாது என ஔவை எச்சரிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
வாது என்பது பிடிவாதத்தை மட்டுமின்றி சண்டை, வீண்வாக்குவாதம் ஆகியவற்றையும் குறிக்கும். இவையும் வேதனை தரக்கூடியவையே. பாண்டவர்களுக்கு சமாதானப்பேச்சில் 5 ஊர் என்ன, 5 வீடும்கூடத் தர மாட்டேன் என துரியோதனன் பிடித்த பிடிவாதமும், அதனால் எழுந்த சண்டையுமே மகாபாரதப் போர் என்ற மாபெரும் துயரத்துக்குக் காரணம்.
ஆகையால்தான் அடுத்தவருக்கு மட்டுமின்றி தனக்குமே சூதும் வாதும் வேதனை தரும்; எனவே அவற்றை ஒதுக்கு என்கிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 32
செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
விளக்கம்:
நாம் செய்ய வேண்டிய தவத்தை மறந்தால் துன்பம் நம்மை ஆட்கொள்ளும் என எச்சரிக்கிறார் ஔவையார்.
தவம் என்பது ஆன்ம மேன்மைக்காக நாம் உடல், வாக்கு, செயல் ஆகியவற்றை வருத்தி மேற்கொள்ளும் பயிற்சி. நம்மை வருத்தி மேற்கொள்ளும் இப்பயிற்சியால் உடல், மனம், ஆன்மா மூன்றும் வலுப்பெறுகிறது. நோன்பு, தியானம், உடல்- மனக்கட்டுப்பாடு, தீர்த்த யாத்திரை ஆகிய அனைத்தும் தவத்தில் அடங்கும்.
கைதவம் என்பதற்கு அறியாமை எனச் சிலர் பொருள் சொல்கின்றனர். ஆனால் அதன் நுட்பமான பொருள் துன்பம், வஞ்சனை என்றே உள்ளது. நாம் செய்யக்கூடிய, செய்து வருகின்ற நெறிசார்ந்த தவத்தை மறந்தோமானால், செய்யத் தவறினோமானால், நம்மை துன்பம் ஆட்கொண்டு விடுவதோடு வஞ்சகமும் நம்முள் குடியேறி ஆட்சிசெய்யத் தொடங்கிவிடும்.
நான்கு நாள் குளிக்காத உடம்பே நாறிப்போகிறது. உடற்பயிற்சியைக் கைவிட்டால் உடல் உரமற்றுப் போகிறது. இப்படியிருக்க செய்தவமாகிய நெறிசார் பயிற்சியை மறந்தால் என்னவாகும்?
ஆகையால்தான் செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் என எச்சரிக்கிறார் ஔவை மூதாட்டி.
- ஒப்பு நோக்குக: 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
$$$
கொன்றைவேந்தன்-33
சேமம் புகினும் யாமத்து உறங்கு
விளக்கம்:
பாதுகாப்பாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டாலும், நள்ளிரவு நேரத்தில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.
சேமம் என்றால் பாதுகாவல், காவல், அரண், சிறைச்சாலை, சேமிப்பு, நலம் எனப் பலபொருள் உள்ளது. அபாயங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் அரண், கோட்டை அல்லது கட்டுக்காவல் மிகுதியான இடத்தில் சென்று இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோதிலும் தூக்கத்துக்குரிய நள்ளிரவு நேரத்தில் கவலைகளை மறந்து அல்லது சற்றுநேரம் ஒத்திவைத்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு வழங்கும் உறக்கம் என்பது ஊக்கம் தரும் மருந்து போன்றது. உரியநேரம் உறங்காவிடில் உடலியல், உளவியல் பிரச்னைகள் தோன்றும். கவலைகளை மறக்க தூக்கம் சரியாக இருக்க வேண்டும்.
உறக்கத்தையும், மறதியையும் தருகின்ற ஜேஷ்டாதேவி எனப்படும் மூத்தோள் வழிபாடே பழங்காலத்தில் இருந்தது. ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்றார் திருவள்ளுவர். ஒழுங்காக உறங்காவிட்டால்அதுவே சாக்காடாக ஆகிவிடும்.
ஆகையால் நள்ளிரவு உறக்கம் தவிர்க்கக் கூடாத அவசியம் என்கிறார் ஔவையார்.
அதேநேரத்தில், சேமம்புகினும் என்பதை காவல்வேலைக்குப் போனாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும் எனச் சிலர் பொருள் சொல்கின்றனர். யாராக இருந்தாலும் நள்ளிரவில் உறங்குதல் நல்லது. ஆயினும் காவல், பாதுகாவல் வேலையில் ஈடுபடுவோர் உறங்கினால் காரியம் கெட்டுவிடும். கொள்கைரீதியில் நள்ளிரவு உறக்கம் அவர்களுக்கும் தேவை என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லை.எனவே அவர்களுக்கு இந்த அறிவுரை முழுமையாகப் பொருந்த இயலாது. அவர்களும்கூட பணியில்லாத நேரத்தில் யாமத்தில் உறங்குவது சேமம் தரும்.
$$$
கொன்றைவேந்தன்- 34
சைஒத்து இருந்தால் ஐயமிட்டு உண்
விளக்கம்:
இழிவவென்னும் எண்ணம் விலகி இருக்குமானால், வறியவர்க்கு உணவளித்துவிட்டு உண் என்று உபதேசிக்கிறார் ஔவையார்.
போதுமான அளவு பொருள் இருந்தால் பிறருக்கு உணவளித்துவிட்டு உண் என்பதுபோல பலர் பொருள் சொல்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை. உயர்ந்த நீதி சொல்லும் ஔவையார், பசித்திருக்கும் பிறருக்கு உணவளித்துவிட்டு நீ உண் என்று சொல்லும்போது, அதற்கு முரணாக, முதலில் உன்பாட்டைப் பார்த்துக்கொள் என்றவகையிலா அறிவுறுத்துவார்?
ஆகவே மாற்றுப்பொருள் தேட வேண்டியுள்ளது.
சை என்பதற்கு அகராதியில் இழிவுக்குறிப்பு என்பதைத் தவிர வேறுபொருள் அகப்படவில்லை. ஒத்து என்பதற்கு விலகு என்ற பொருளும் உள்ளது.
எனவே சைஒத்து என்பதற்கு இழிவான எண்ணம் விலகியிருத்தல் என்பதே சரியான பொருளாக அமைகிறது. அதாவது நம்மிடம் இவர் பிச்சை எடுக்கிறார் என்ற இழிவான எண்ணம் நம் உள்ளத்தில் இருந்து விலகி இருக்கும்பட்சத்தில் வறியவர்க்கு தானம் அளித்துவிட்டு உண் என்றே இதற்குப் பொருள் கொள்ளத்தகும்.
ஐயமிட்டு உண்ணுதல் சிறப்பானது, அதைவிடச் சிறப்பானது தானமளிக்கும் நாம் உயர்வானவர், தானம் வாங்கும் இவர் தாழ்வானவர் என்ற இழிவான எண்ணம் விலகியிருக்க தானம் அளிப்பது.
ஆகையால்தான் இழிவெண்ணம் விலகியிருத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து சைஒத்து இருந்தால் ஐயமிட்டு உண் என்று மொழிந்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்-35
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
விளக்கம்:
முயற்சி உடையவர்கள் பொருளைப் பெறுவர் என்ற மிக உயர்ந்த தத்துவத்தை மிக நுட்பமாகக் கூறியுள்ளார் ஔவையார்.
சொக்கு என்ற சொல்லுக்கு உள்ள பல பொருள்களிலே வளைதல் என்ற பொருளும் ஒன்று. சொக்கவைப்பவன் அதாவது நம்மை வளையவைக்கும் அழகன் என்பதால் ஈசன் சொக்கன் ஆனார். வளைந்த உடல் கொண்டது என்பதால் குரங்குக்கு சொக்கு என்றும் பெயர் உண்டு.
ஔவையார் கூறியுள்ள சொக்கர் என்பதற்குப் பொருள், கடும் முயற்சிகளுக்கு உடலையும் உள்ளத்தையும் வளைப்பவர் என்பதே பொருத்தம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்பதில் உள்ள வளைதல் இளமையிலேயே உரிய பயிற்சிகளை, முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்பதைக் குறிக்கிறது. கடுமையான முயற்சிசெய்து சாதிப்பவனை, வில்லாக வளைத்துவிட்டான் எனப் பாராட்டுகிறோம்.
அத்தம் என்பதற்கு அர்த்தம் என்றும் ஒருபொருள் இருக்கிறது. முடிவு, நிறைவு, பொருள் என்றும் பொருள்கள் உள்ளன.
ஆகவே, முயற்சி உடையவன் செல்வமாகிய பொருளைப் பெறுவான், வாழ்வின் நிறைவைப்பெறுவான், நல்முடிவை எய்துவான் என்ற பொருளில் தான் ’சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்’ என உரைத்துள்ளார் தமிழ் ஞானப்பழமான ஔவையார்.
$$$
One thought on “கொன்றைவேந்தன் (31-35)”