-பத்மன்
கொன்றை வேந்தன் (21-25)

கொன்றைவேந்தன்- 26
சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
விளக்கம்:
ஒரு பரம்பரையின் வழித்தோன்றல்களுக்கு எது அழகென்றால் தங்களுக்குள் சண்டை செய்யாமைதான் என்று அழகாகச் சொல்கிறார் ஔவையார்.
ஆனால் வந்தி என்பதற்கு மலடு என்ற பொருளை வருவித்துக்கொண்டு சந்ததிக்கு அழகு மலடின்றி இருத்தல் என்று பலர் பொருள் சொல்கிறார்கள். இது தவறு.
வந்தி என்பது பல பொருள் தரும் ஒரு சொல். வந்தனை, மங்கலப் பாடகன், பாணன், சூதன், புகழ்வோன், ஏணி, முரண்டு, சண்டை எனப் பல்பொருள் வந்திக்கு உண்டு.
ஆனால் எந்த அகராதியிலும் மலடு என்ற பொருள் அகப்படவில்லை. அப்படியே கிடைப்பினும் இவ்விடத்தில் ஏற்பதற்கில்லை. மலடு என்பது நாமே செய்துகொள்வதா? பிள்ளைப்பேறு இல்லாமை இயற்கையின் குறைபாடு. அதையா இங்கு ஔவையார் குறிப்பிடுகிறார்? இல்லவே இல்லை.
வந்தி என்பதற்கு முரண்டு பிடித்து ஒருவரோடு ஒருவர் சண்டையிடுதல் என்ற பொருளே இங்கு ஏற்கத்தகும். ஒரு சந்ததியினரான கௌரவரும் பாண்டவரும் தங்களுக்குள் சண்டையிட்டதால் அழிந்தார்கள். மகாபாரதப் போருக்குப் பின் யது குலத்தவருக்கும் அவ்விதமே நிகழ்ந்தது. அவர்கள் எல்லாம் வம்சத்தின் பெயரைக் கெடுத்தனர்.
ஆகையால்தான் ஒரு சந்ததிக்கு அழகு, பெருமை என்பது தங்களுக்குள் சண்டை செய்யாமல் ஒற்றுமையாக இருத்தலே என்கிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன் -27
சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு.
விளக்கம்:
தம் பிள்ளைகள் சான்றோர் எனப் புகழும் வகையில் வாழ்வது அவர்களைப் பெற்றெடுத்த தாய்க்குப் பெருமை தருவதாகும்.
பொதுவாக பெற்றோருக்குப் பெருமை எனவும் எடுத்துக்கொள்ளலாம். எனினும் ஈன்றோளுக்கு என்றே ஔவையார் கூறியிருப்பதால் தாய்க்கே கூடுதல் பெருமை.
பத்து மாதம் வயிற்றிலே சுமந்து வலிதாங்கி பிள்ளைகளைப் பெற்றெடுப்பதோடு அதன்பின் பல மாதங்கள் பாராட்டிச் சீராட்டியும் இன்னல்களைத் தாங்கிக்கொண்டும் வளர்த்து ஆளாக்குபவள் தாய் தானே! ஆகையால் தம் மக்களைச் சான்றோர் எனக் கேட்பதில் தாய்க்கே பெருமை அதிகம்.
இதைத்தான்,
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
-என வள்ளுவப் பெருந்தகையும் (திருக்குறள்- 69) சொல்லியிருக்கிறார்.
வள்ளுவர் மகனை மட்டுமே குறிப்பிட்டுள்ள நிலையில் பெண்பாற் புலவரான ஔவையார் இருபாலரையும் குறிக்கும்வகையில் சான்றோர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
(மனிதன் என்று பொதுப்படையாகச் சொல்வது இருபாலரையும் குறிக்கும் என்பதைப் போல திருவள்ளுவர் மகன் என்று கூறியிருப்பதையும் இருபாலருக்கும் பொதுவாய் எடுத்துக்கொள்ளலாம்.)
சான்றோர் என்ற சொல்நுட்பம் வாய்ந்தது. அது அறிஞர் என்பதை மட்டுமே குறிப்பதல்ல. பண்பாளர், ஒழுக்கசீலர், உயர்ந்தோர், வழிகாட்டுவோர் எனப் பல பொருள்களை உள்ளடக்கியது. சான்று என்பது அத்தாட்சி, நிரூபணம், முன்மாதிரி, ஆதாரம் எனப் பல பொருள்தரும்.
ஆகவே தம் மக்கள் பிறருக்கு முன்மாதிரி என மெச்சத் தகுந்தவகையில் வாழ்கிறார்கள் என்பதே அவர்களை ஈன்று வளர்த்த தாய்க்குப் பெருமை தரும் என்கிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 28
சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு.
விளக்கம்:
இறை நினைப்பில் திளைத்திருப்பது தவத்துக்கு அழகாகும் என்கிறார் ஔவையார்.
தவம் என்பது ஒன்றைக் குறித்துத் தீவிரமாகவும் உன்னிப்பாகவும் சிந்தித்து அதனை அடைவதற்குத் தொய்வின்றி முனைவதாகும்.
செய்க தவம் செய்க தவம் தவம் செய்தால் எண்ணிய யாவும் எய்தலாம்
-என்கிறார் மகாகவி பாரதி.
இவ்வாறான தீவிர முயற்சியில் எல்லாம் வல்ல இறையை அடைவதற்கான தவம் மிகப் பெருமை படைத்ததாகும்.
மேலும் சிவம் என்பது பால்பாகுபாடற்ற பொதுச்சொல்.சிவ (சிவன்) என்பது ஆண்பால் இறைவனையும் சிவா (சிவை) என்பது பெண்பால் இறைவியையும் குறிக்கும். எனவே சிவம் என ஔவை கூறியிருப்பது எவ்விதப் பாகுபாடுமற்ற இறையாகும்.
அத்துடன் சிவம் என்பது நன்மை, மங்கலம், சீலம், விடுதலைக்கு (முக்திக்கு) விழைதல் எனப் பல பொருள் தரும்.
ஆகையால், தவம் இருப்போர் நன்மை, சீலம், மங்கலம், முக்திக்கு விழைதல் ஆகியவற்றைப் பேணுவது அழகாகும்; பெருமை தரும் எனவும் ஔவையின் உரைபொருள் கொள்கிறது..
$$$
கொன்றைவேந்தன்-29
சீரைத் தேடின் ஏரைத் தேடு.
விளக்கம்:
நன்மை வேண்டும் எனில் உழவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு என்கிறார் ஔவையார்.
எக்காலத்துக்கும் பொருத்தமான அறிவுரை இது. உழவு இல்லையேல் உலகம் இல்லை ‘வயிற்றுக்குச் சோறிடல்வேண்டும்- இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என மகாகவி பாரதி சொன்னாரே, அதை நனவாக்குவதற்கு அடிப்படைத் தேவை, உழவுத்தொழிலே.
ஈகின்ற மனம் இருந்தாலும் கொடுப்பதற்குப் பொருள் வேண்டுமே! அதைக் கொடுப்பது உழவல்லவா! வேறு எந்தப் பொருளை ஆக்குவதற்கும் வேளாண் விளைபொருளே பெரிதும் மூலப்பொருளாகவும் இருக்கிறது. எனவே எவ்வகைத் தொழில்வளர்ச்சிக்கும் கூட ஏர்ப்பூட்டி நடத்துகின்ற உழவுத்தொழிலே ஆதாரம்.
அதனால்தான் ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றார் திருவள்ளுவர். எத்தனை வகைத் தொழில்களால் இவ்வுலகம் சுழன்றாலும் உழவுத்தொழிலை முன்னேவைத்து அதன் பின்னேதான் உலகம் இயங்குகிறது என்கிறார் குறள்நாயகர். அதைத்தான் ‘சீரைத் தேடின் ஏரைத்தேடு’ என்றுள்ளார் ஔவை.
அதேநேரத்தில் நுட்பமாகப் பார்த்தால், மற்றொரு அரிய பொருளையும் இது தருகிறது.
‘மதிப்பு வேண்டுமெனில் எழுச்சி பெறு’ என்பதே அந்த மேலான மற்றொரு உட்பொருள்.
சீர் என்பதற்கு நன்மை, செல்வம், மதிப்பு, சமம், அழகு, புகழ், பெருமை எனப் பலபொருள் உண்டு. அதுபோலவே ஏர் என்பதற்கு கலப்பை, உழவுமாடு, உழவுத்தொழில் என்பவை போக எழுச்சி என்ற மாற்றுப்பொருளும் உண்டு.
ஆக, ஒருவர் சமுதாயத்தில் மதிப்பும் புகழும் செல்வவளமும் பெற வேண்டுமெனில், அவர் மனஎழுச்சி, செயல்எழுச்சி, அறஎழுச்சி பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்-30
சுற்றத்திற் கழகு சூழயிருத்தல்.
விளக்கம்:
சுற்றத்தார் என்பதற்கு அழகு எத்தகைய நிலையிலும் ஒன்றுகூடி இருத்தலே என்கிறார் ஔவையார்.
சுற்றத்தார் என்போர் நம்மைச்சுற்றி இருப்பவர்கள். உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார் எனப் பலரும் சுற்றத்தாரே.
சுற்றம் என்பது புறத்தே காணும் நிலை மாத்திரமல்ல, அகத்தே காணும் நிலையுமாகும். அருகருகே இருந்தாலும் அன்பும் ஆதரவும் அற்று வாழுதல் சுற்றமாகுமா? தொலைவில் இருந்தாலும் தொலையாத நேசம் சுற்றந்தானே!
ஆகையால் சுற்றத்தார் என்போர், ஒருவரின் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து உறுதுணையாக இருப்பவர்களே ஆவர்.
அதனைத்தான் சுற்றம் என்பதற்குப் பெருமை சூழ இருத்தல்- ஒன்றுகூடி இருத்தல் என்கிறார் ஔவையார்.
$$$
- கொன்றைவேந்தன் (31-35)
2 thoughts on “கொன்றைவேந்தன் (26-30)”