-மகாகவி பாரதி
பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை ‘சுதேச மித்திரன்’ காரியாலயமே நடத்தி வந்த ‘கதாரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது.

முதல் அத்தியாயம்
கலிங்க ராஜ்யத்திலே
முன்னொரு காலத்தில், கலிங்க தேசத்து ராஜதானியாகிய கடக நகரத்தில் வல்லபராஜன் என்ற வேந்தனொருவன் அரசு செலுத்தி வந்தான். அவன் தனக்கு வரும் அரசிறையில் ஒரு பகுதியை ‘தாஸி நிதி’ என்றொரு தனி நிதியாகப் பகுத்து வைத்தான், கோயில் நிதி, கல்வி நிதி, ராணுவ நிதி, விவசாய நிதி, தொழில் நிதி முதலிய மற்றெல்லா நிதிகளைக் காட்டிலும் அவ்வரசன் அந்த தாஸி நிதிக்கு அதிகத் தொகை ஏற்படுத்தினான். அந்த நிதிக்குத்தான் செலவும் அதிகம்.
வருஷத்துக்கு சுமார் நூறு, நூற்றிருபது தாஸிகளுக்குக் குறையாமல் அந்த ராஜா விலைக்கு வாங்குவது வழக்கம். அவர்களுக்குத் தன் அந்தப்புரத்தில் தனித் தனி வஸதிகள் செய்து கொடுத்தான். அவன் பட்டத்துக்கு வந்து பதினாறு வருஷங்களாயின. இது வரை சுமார் ஆயிரத்தெண்ணூறு தாஸிகள் அவன் அந்தப்புரத்தில் சேர்த்து விட்டான். தசரதன் அறுபதினாயிரம் ஸ்திரீகளை மணம் புரிந்து கொண்டதாகவும், துருக்கி ஸுல்தான்களில் பலரும், இந்தியாவில் பல நவாபுகள், ராஜாக்கள், நிஜாம்கள், திவான்கள் முதலியோர்களும் ஆயிரக்கணக்கான பெண்களை அந்தப்புரங்களில் சேர்த்து வைத்திருந்ததாகவும், புராணங்களிலும், சரித்திரங்களிலும், நவீன நடைகளிலும் அறிகிறோம்.
இதென்னடா சுத்த மோசமான வேடிக்கை! ஆயிரம் பெண்டாட்டிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் எப்படிக் குடித்தனம் பண்ணுவான் என்பதை நினைக்கும்போது, எனக்குப் பெரிய வியப்புண்டாகிறது.
ஒரு பெண்டாட்டியை வைத்துக்கொண்டு காலம் தள்ளுவது பெரும்பான்மையான ஜனங்களுக்குப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. அப்படி யிருக்க, நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் மனைவியரை ஒருவன் கட்டியாளத் துணிவு கொண்டதை எண்ணுமிடத்தே, எனக்கு நகைப்பும் துயரமும் கலந்து விளைகின்றன. இது நிற்க..
ஒருநாள், மேற்கூறிய வல்லபராஜன் கொலுவில் ஒரு கிழப் பிராமணன் இரண்டு அழகிய, இளமையுடைய தாஸிப் பெண்களை அழைத்துக் கொண்டு வந்தான். இது வரை அந்த ராஜா விலைக்கு வாங்கிய பெண்களை யெல்லாம் ஸாதாரண வயிரங்களுக்கும், மற்ற மணிகளுக்கும் ஒப்பிடலாமெனில், இவ்விரண்டு பெண்களையும் கீர்த்தி பெற்ற ‘கோஹினூர்’ (ஒளிக்குன்று) என்ற ராஜ வயிரத்துக் கொப்பிடலாம். இவர்களை நோக்கி அவ்வரசன் அளவில்லாத மகிழ்ச்சி படைத்தவனாய், “இவர்களுக்கு விலையென்ன சொல்லுகிறீர்?” என்று மேற்படி பிராமணனிடம் கேட்டான்,
“மூத்த பெண் மோஹனாங்கிக்கு விலை ஒன்பதினாயிரம் பொன், இளையவளாகிய லலிதாங்கிக்கு விலை பத்தாயிரம் பொன்” என்று பார்ப்பான் சொன்னான்.
இக்காலத்தில் சிலர் பல தேசத்துத் தபால் முத்திரைகள் சேகரித்து வைப்பதுபோல், அந்த ராஜா தாஸிகளைச் சேர்த்து வைத்துப் பழகி, அந்தத் தொழிலில் கை தேறியவனாய் விட்டபடியால் தாஸிகளுக்கு விலை நிர்ணயம் பண்ணுவதில் அவன் மஹா நிபுணனாயினன். ஆதலால், இப் பெண்களுடைய உண்மையான அருமை யுணராமல், அந்த நாட்டுப்புறத்துப் பார்ப்பான் இத்தனை ஸுந்தரமான மாதருக்கு இத்தனை குறைந்த விலை சொல்வதைக் கேட்டுக் களிப்பெய்தியவனாய்த் தன் கார்யஸ்த னொருவன் மூலமாகப் பொக்கிஷத்தினின்றும் அந்த க்ஷணமே இருபதினாயிரம் பொன் கொண்டு வரும்படி செய்து பிராமணன் கேட்டபடி விலை பத்தொன்பதினாயிரம் பொன்னும், அவனுக்கு இனாமாக ஆயிரம் பொன்னும் கொடுத்து, மேலே ஜோடி சால்வை, வயிரக் கடுக்கன், வயிர மோதிரம் முதலிய வரிசைகளும் கொடுத்து, அந்தப் பிராமணனை மரியாதை பண்ணி அனுப்பி விட்டு, தாஸிப் பெண்களிருவரையும், அந்தப்புரத்திலே சேர்ப்பித்து விட்டான்.
பிறகு, அந்தப் பார்ப்பான் அரசனிடமிருந்து வாங்கிய இருபதினாயிரம் பொன்னையுங் கொண்டு, தன் பிறப்பிடமாகிய நாகபுரத்துக்கு ஸமீபத்திலுள்ள கிராமமொன்றுக்குத் திரும்பிப்போய் அங்கு, மேற்கூறிய வேசைப் பெண்களை விலைப்படுத்தி வரும்படி தன்னிடம் ஒப்புவித்த தாய்க் கிழவியிடம், “உன் பெண்களைத் தலைக்கு மூவாயிரம் பொன் வீதம் விற்றேன். ஆறாயிரம் பொன் கிடைத்தது. அதில் ஆயிரம் பொன் எனக்குத் தரகெடுத்துக் கொண்டேன். மிச்சம் ஐயாயிரம் பொன்னை உனக்குக் கொடுக்கிறேன்” என்று பொய் சொல்லி அவளிடம் ஐயாயிரம் பொன்னைக் கொடுத்து, மிஞ்சிய பதினையாயிரம் பொன்னையும் தன் கையில் அழுத்திக் கொண்டான்.
கலிங்க நாட்டு நிலை யறியாதவளாகிய அந்தத் தாய்க் கிழவியும், தன் பெண்களுக்கு இத்தனை உயர்ந்த விலை கொண்டு வந்த பிராமணனிடம் மிக நன்றியுணர் வுடையவளாய், அவனுக்கு ஒரு பசு மாடும், இரண்டு பட்டுக்கரை வேஷ்டிகளும், ஒரு பொற் கிண்ணமும் தானம் பண்ணினாள். இது நிற்க.
கலிங்க தேசத்தில் வல்லப ராஜன் தன் அந்தப் புரத்திலுள்ள ஆயிரத் தெண்ணூறே சில்லரை மாதர்களைக் காட்டிலும் லலிதாங்கியிடம் அதிக மோஹப் பைத்தியங் கொண்டு விட்டான். அரசன் இங்ஙனம் லலிதாங்கிக்கு அடிமையாய் விட்டதினின்றும், ராஜ்யத்தில் லலிதாங்கி இட்டதே சட்டமாய் விட்டது.
இதினின்றும் அந்த வேசைமகள் பொருள் சேர்ப்பதையே பெரிய வெறியாகக் கொண்டு ராஜ்யத்தைச் சூறாவளிக் கொள்ளையிடத் தொடங்கி விட்டாள். மந்திரி உத்யோக முதல் வீதி பெருக்கும் சக்கிலி உத்யோகம் வரை, ராஜ்யம் முழுதிலும், யாருக்கு எந்த வேலை வேண்டுமானாலும், லலிதாங்கிக்கு லஞ்சம் கொடுக்காத வரை, அந்த வேலை கிடைக்காது.
பாடகர், நாட்டியக்காரர், வாத்யக்காரர், குஸ்தி செய்வோர், கவிராயர், நாடகக்காரர், மந்திரவாதிகள், வித்வான்கள், விகடகவிகள், கனபாடிகள், கூத்தாடிகள் – ராஜாவிடம் ஸம்மானம் வாங்கும் பொருட்டு யார் வந்தாலும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய ஸம்மானத் தொகைகளில் மூன்றிலொரு பங்கு லலிதாங்கிக்குக் கொடுப்பதாக முதலாவது ஒப்புக்கொண்டா லொழிய, அரண்மனையில் அவர்களுக்கு மூன்று காசுகூடக் கிடைக்க வழியில்லாமல் போய்விட்டது.
வியாபாரிகளிடமும் தொழிலாளிகளிடமும் அவள் கொள்ளையிட்ட திரவியங்களுக்குக் கணக்கே யில்லை. மேலும், ராஜாங்கத்தின் ஸாமான்யத் தீர்வைப் பணத்திலும் பாதிக்குக் குறையாமல் அவள் தனக்குப் புதிய புதிய ஆபரணங்கள் பண்ணுவதில் செலவிட்டுக் கொண்டு வந்தாள்.
அந்த வல்லப ராஜனுக்கு நீதி சிகாமணி என்ற மந்திரி யொருவன் இருந்தான். அவன் அரசனுடைய நடைகளை யெல்லாம் கண்டு, மிகவும் மனம் நொந்து, பலமுறை கெஞ்சியும் இடித்துச் சொல்லியும் அரசனைச் சீர்திருத்த முயன்றான். ஆனால், மஹா மூடனாகிய வல்லபராஜன் தன் மந்திரியின் உயர்ந்த சற்போதனைகளைச் செவி கொடுத்துக் கேட்கவேயில்லை.
இதினின்றும், அந்த மந்திரி நிராசை கொண்டவனாய்ப் பின்வருமாறு தன் மனதுக்குள்ளே யோசிக்கலானான்:
“ஆஹா, இந்த அரசு நிச்சயமாகவே அழிந்து போய்விடும். அது உள்ளங்கை நெல்லிக்கனி போலவும், பசுமரத் தாணி போலவும் விளங்குகிறது. மூடனாகிய வல்லபன் நாம் எவ்வளவோ இடித் திடித்துச் சொல்லியும் கேளாமல், லலிதாங்கியின் மோஹ வலையில் வீழ்ந்து நாட்டைப் பெரும் பாழாக்குகிறான்.
நாட்டிலே பஞ்சமும், பிணிகளும், கொள்ளைகளும் தலைவிரி கோலமாகக் கூத்தாடுகின்றன. எந்தத் திசையிலும் நமக்குக் கடன் கொடுப்பாரில்லை. நாட்டுப் பொக்கிஷத்திலே காசென்ற லேசமே கிடையாது. தேசத்தை லலிதாங்கி யொருத்தி யிருந்து அட்டை உறிஞ்சுவதுபோலே உறிஞ்சுகிறாள். ஜனங்களைப் பஞ்சத்தின் வாயினின்று மீட்க வழியே இல்லை. சோறில்லாதவர்கள் கலகந் தொடங்குவார்கள்.
சென்ற சில மாஸங்களாக உள்நாட்டுப் போர் தொடங்குவதற்குரிய சூழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றன. இதுவரை வெளிப்படாத சூழ்ச்சிகள் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ, கடவுளுக்குத்தான் தெரியும். இந்த ராஜ்யத்தைக் கவிழ்க்கும் பொருட்டாகச் செய்யப்படும் வேறு சில சூழ்ச்சிகளைப் பற்றி நமக்கு உளவுகள் தெரிந்தாலும், நம்மால் அடக்க முடியாதபடி அவை அத்தனை வலியவரால் நடத்தப்படுகின்றன. இந்த அரசனுடைய நெருங்கிய சுற்றத்தார்களிலேயே சிலர் இவனுக்கு நாசந் தேடுகிறார்கள். நாமென்ன செய்யலாம்?
நாமே இந்த அரசனுக்கு முக்ய பலமாக இருப்பதை யுணர்ந்து இவனுடைய விரோதிகளிற் பலர் முதலாவது நம் உயிரைப் போக்கிவிட ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். இனி, இந்த நாட்டில் இருந்தால் நமதுயிருக்குச் சேதம் விளைவது திண்ணம்.
இந்த நாட்டின் பல திசைகளிலும் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாக நமக்குக் கிளைத்து வரும் சத்துருக்க ளனைவரிலும் அதி பயங்கரமான சத்துரு லலிதாங்கி. லலிதாங்கியின் பகை யென்றால் பிசாச லோகம் முழுதும் பகையாவதற் கொப்பாகும்.
இவளுடைய கையாட்கள் எந்த இடத்தில் நம்முடைய விழிகளில் அக்னித் திராவகத்தை ஊற்றுவார்களோ? எந்த இடத்தில் நம்முடைய செவிகளை விஷந் தோய்த்த கத்தியால் அறுப்பார்களோ? எந்த நிமிஷத்தில், எங்கே, நம்முடைய சிரம் துண்டிக்கப்படுமோ? எங்கே, எந்த ஸபையில், எந்த விருந்தில், எந்த நேரத்தில் நம்மை விலங்கிட்டுக் கொண்டு போக ஏற்பாடு செய்வாளோ? எங்கே, நம்மைச் சித்திரவதை புரிய ஏற்பாடு செய்வாளோ? என்று பலவிதமாக யோசனை பண்ணி, ஓரிரண்டு தினங்களுக்குள்ளே தனக்குரிமையான நகைகளையும் பணங்களையும் எடுத்துக்கொண்டு, ரஹஸ்யமாக இரவிலேயே புறப்பட்டுத் தன் குடும்பத்தாருடன் காசிக்குப் போய்விட்டான்.
காசிக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, தைர்ய மடைந்தவனாய்த் தான் புறப்பட்டு வந்ததற்குரிய காரணங்களை யெல்லாம் விஸ்தாரமாக எழுதி வல்லபராஜனுக்கோர் ஓலை விடுத்தான்.
வல்லபராஜனுக்கு மேற்படி நீதி சிகாமணி யென்ற மந்திரி ஒருவனே முக்கிய பலமாக இருந்தான். அவனைத் தவிர ஓருயிர் கூட வல்லபராஜன் மீது இரக்கஞ் செலுத்தவில்லை. நாட்டார் அனைவரும் அவனையும் லலிதாங்கியையும் ஒழித்து விடவேண்டுமென்ற எண்ணங் கொண்டிருந்தார்கள்.
எனவே, மந்திரி நாட்டை விட்டோடிய பின் ஒரு வாரத்துக்குள் தேசத்தில் பெருங் கலகம் விளைந்தது. ஜனங்கள் வல்லபராஜனை ராஜ்யத்தினின்றும் நீக்கி அவனுடைய தாய் பாகஸ்தனாகிய மற்றொருவனைப் பட்டத்துக்கு வைத்தார்கள். அப்போது வல்லபராஜன் ஒரு வாளால் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு மாய்ந்தான்.
குலத் தொழிலிலே சித்தம் இயல்பாகப் பாயும். ஆதலால் வல்லபராஜன் மடிந்தவுடன் மோஹனாங்கியும் லலிதாங்கியும் தத்தம் உடைமைகளை யெடுத்துக் கொண்டு கலிங்க ராஜ்யத்தினின்றும் தப்பியோடிப் போய் பிற நாடுகளுக்குச் சென்று, அங்கு தம்முடைய பரம்பரைத் தொழிலாகிய வேசைத் தொழிலையே நடத்த வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
மோஹனாங்கியிடம் லக்ஷக்கணக்காகவும், லலிதாங்கியிடம் கோடிக் கணக்காகவும் திரவியங்கள் இருந்தன. கலிங்க நாடு பஞ்சத்தினால் அழிய, அதன் செல்வத்தின் பெரும் பகுதியை இவ்விரண்டு தாசிகளும் வாரிக்கொண்டு போயினர்.
மோஹனாங்கி காசிக்குப்போய் அங்கு ஹரிச்சந்திர மஹாராஜன் சந்திரமதியை விலை கூறிய கடைத்தெருவில் ஒரு பெரிய மாளிகை கட்டிக் கொண்டு, அங்கு வேசைத் தொழில் புரிந்து வந்தாள்.
இளையவளாகிய லலிதாங்கியின் சரிதையை அடுத்த அத்யாயத்தில் விஸ்தாரமாகச் சொல்லுகிறோம்.
$$$
இரண்டாம் அத்தியாயம்
லலிதாங்கி அமிர்த நகரத்தில் குடியேறியது
தெற்குக் கடலினிடையே சந்திரோதயத் தீவு என்றொரு விடமிருக்கிறது. அதற்கு இக்காலத்தில் மலேய பாஷையில் ‘பூலோ பூலாங்’ என்று பெயர் – சொல்லுகிறார்கள். அந்தத் தீவின் ராஜதானிக்கு அக்காலத்தில் அமிர்த நகரம் என்று பெயர். அங்கு நமது கதை நடைபெற்ற காலத்தில் சந்திர வர்மன் என்ற தமிழ்வேந்தன் அரசு செலுத்தி வந்தான். சுற்றி, ஆயிரம் தீவுகள் அவனுடைய ஆட்சியின் கீழே யிருந்தன. எல்லாப் பக்கத்து மன்னர்களிடமிருந்தும் அவனுக்குக் காணிக்கைகள் வந்தன, ‘தென் கடல் தலைவன்’ என்ற விருதுடன் வாழ்ந்தான். பூமண்டலத்தில் வியாபாரக் கப்பல் வீதிக்கு அவனே தனிப் பெருங் காவலனாக விளங்கினான்.
அக்காலத்தில், கலிங்க ராஜ்யத்தினின்றும் கப்பலேறி, லலிதாங்கி நேரே சந்திரோதயத் தீவில் அமிர்த நகரத்தில் வந்திறங்கினாள். கப்பலை விட்டிறங்கி அந் நகரத்தில் ஒரு தர்மசாலைக்குப் போய், அங்கே தனக்கென்று சில அறைகள் வாங்கிக்கொண்டு குடி புகுந்தாள்.
நகரத்தின் விசேஷங்களையும் வியாபாரப் பாங்குகளையும், அங்குள்ள விசேஷச் செல்வர்களின் குணம், நடை முதலிய விவரங்களையும் பற்றி விசாரணை செய்துகொண்டு, அந்த தர்மசாலையிலேயே சிறிது காலந் தங்கி யிருந்தாள். அப்பால், மாதம் முந்நூறு பொன் சம்பளம் கொடுத்து விதுரப்பிள்ளை யென்ற வேளாளன் ஒருவனைத் தனக்குக் கார்யஸ்தனாக நியமனம் செய்தாள்.
அப்பால் அவள் விதுரனைக் கொண்டு சில உயர்ந்த வியாபாரிகளைத் தருவித்துத் தன்னிடமிருந்த நகைகள், பொன், மணி, ரொக்க நாணயம் – எல்லாவற்றுக்கும் மொத்த மதிப்புப் போடுவித்தாள். கலிங்க நாட்டிலிருந்து அவள் கொள்ளை யிட்டுக்கொண்டு வந்த செல்வத்துக்கு மொத்த மதிப்பு முந்நூறு கோடிப் பொன் விழுந்தது.
முதலாவது, ஐந்து கோடிப் பொன் செலவிட்டு நகர் நடுவிலே அந் நாட்டரசனுடைய மாளிகையைக் காட்டிலும் மிகவும் அற்புதமான காட்சி யுடைய பெரிய மாளிகை யொன்று, கூட கோபுரங்கள், ஏழு விஸ்தாரமான மாடிகள் – அதாவது, உப்பரிகைகளுடன் கட்டுவித்தாள்.
அந்த மாளிகை கட்டும் பொருட்டு, யவன தேசத்தினின்றும் கைதேர்ந்த சிற்ப சாஸ்திரி யொருவனை வரவழைத்தாள், மாளிகை முழுதும் பளிங்கு வேலை, உச்சத்திலே ஏழாம் உப்பரிகையிலிருந்த லீலா மண்டபத்தில் மாத்திரம் விதானத்திலும், தூண்களிலும், பொன்னும் விலையுயர்ந்த ரத்தினங்களும் இழைக்கப்பட்டிருந்தன.
எல்லா உப்பரிகைகளிலும் பல லீலா மண்டபங்களும், விருந்துக் கூடங்களும், நாடகசாலைகளும், சித்திர சாலைகளும் மிகவும் அழகாக நிர்மிக்கப்பட்டிருந்தன. மாளிகையைச் சுற்றிச் சதுரமாக, மிக விஸ்தாரமான தொரு பூஞ்சோலை செய்வித்தாள். அதில் பல நீரோடைகளும், சுனைகளும், பளிங்குத் தடாகங்களும், அருவிகளும், புஷ்பமாரி போலே நீர் தூவும் பொறிகளும் சமைப்பித்தாள்.
உலக முழுதிலுமுள்ள பல பல தேசங்களினின்றும் இனிய கனிதரு மரங்களும், அருமையான மருந்துப் பூண்டுகளும், மூலிகைகளும், பூச்செடிகளும், கொடிகளும் வரவழைத்து அத் தோட்டத்தில் வைத்தாள். அது தேவேந்திரனுடைய நந்தவனத்தைப் போல் விளங்கிற்று, அதற்கு ‘நந்தனம்’ என்றே பெயருமிட்டாள்.
அப்பால், லலிதாங்கி தன் கார்யஸ்தனாகிய விதுரனை அழைத்து, “இந்தத் தீவு முழுமையிலும் தனக்கு நிகரில்லாத திறமை கொண்ட வைத்யன் ஒருவனை மாஸம் ஐந்நூறு பொன் சம்பளத்தில் நம்மிடம் வேலை பார்க்கும்படி திட்டம் பண்ணிக் கொண்டுவா” என்றாள்.
விதுரனும் அங்ஙனமே ஸாக்ஷாத் தன்வந்திரி முனிவருக்கு நிகரான லங்காபுத்ரன் என்ற மருத்துவனைத் திட்டம் பண்ணிக் கொடுத்தான்.
பிறகு, லலிதாங்கி விதுரனை நோக்கி, “ஆளுக்குப் பதினாறு பொன் மாஸச் சம்பளமாக, மாளிகை வாயில் காப்பதற்குப் பன்னிரண்டு வாட் சேவகரைத் திட்டம் பண்ணிக் கொடு” என்றாள்.
அவனும் அங்ஙனமே சுத்த வீரராகிய பன்னிரண்டு காவலாளர் திட்டம் பண்ணினான்.
அதன்பின் லலிதாங்கி, விதுரனை நோக்கி, “இருபது தாஸிப் பெண்களைத் தயார் செய்து கொண்டு வா. எல்லாருக்கும் ஏறக்குறையப் பதினான்கு அல்லது பதினைந்து மட்டத்தில் ஸம வயதாக இருக்க வேண்டும், ஏறக்குறைய ஸமான உயரமும் அகலமும் உடையோராய், ஒரே சாயலுடையோராக இருக்க வேண்டும். ஒவ்வொருத்தியும் அருமையான அழகுடையவளாகவும் ஸங்கீதம், பரதம், எழுத்துப் படிப்பு முதலியவற்றில் மிக்க தேர்ச்சி யுடையவளாகவும் இருக்க வேண்டும். தலைக்கு நூறு பொன் சம்பளம் கொடுப்போம்” என்றாள்.
இது கேட்டு விதுரனும் அவள் சொல்லிய லக்ஷணங்க ளெல்லாம் பொருந்திய இருபது தாசிப் பெண்களைத் தயார் செய்து கொடுத்தான்.
அப்பால் லலிதாங்கி ஒரு பொற் பலகையில் வயிர எழுத்துக்களாலே பின்வருமாறு விளம்பரம் பெரிதாக எழுதுவித்து, வீதியிலே போவோருக் கெல்லாம் நன்றாகத் தெரியும்படி தன் மாளிகையின் வெளிப்புறத்திலே தொங்கவிட்டாள்.
"பூலோக ரம்பை" விளம்பரம் கலிங்க தேசத்து ராணியும், பூமண்டல முழுமையிலும் அழகிலே நிகரற்றவளுமாகிய ஸ்ரீமதி லலிதாங்கி தேவி இந்த மாளிகையில் வந்து தாஸியாக வசிக்கிறாள், இங்கே இந்திர போகங்களுக் கிணையான பலவகை இன்பங்கள் பெறலாம். இரவொன்றுக்குக் கூலி ஆயிரம் பொன்.
-இங்ஙனம் விளம்பரம் நாட்டி, தன் குலத்துக்குரிய வியாபாரம் தொடங்கினாள்.
அவளுடைய செல்வம் நாளுக்கு நாள் காட்டுத் தீயைப்போலே மிகுதிப்பட்டுக் கொண்டு வந்தது.
***
சொக்கநாதன் செட்டி தாஸி வீட்டிலே பட்ட பாடு
அப்போது, தமிழ் நாட்டிலிருந்து சந்திரோதயத் தீவுக்குப் போய் வியாபாரம் செய்துகொண்டிருந்த சொக்கநாதன் செட்டி என்ற தனவைசிய னொருவன் லலிதாங்கியின் வீட்டுக்குப் போக வேண்டுமென்று நிச்சயித்து, ஒரு நாள் மாலையில், ஆயிரம் பொன் முடிப்புக் கட்டி யெடுத்துக்கொண்டு, மிகவும் டம்பமாக உடை உடுத்துக்கொண்டு, அதிக படோபமான குதிரை வண்டியிலேறிப் போய், அவள் மாளிகையின் வாயிலுக் கெதிரே இறங்கினான்.
அங்கே காவல் காத்துக் கொண்டு நின்ற வாட் சேவக னொருவனை நோக்கிச் சொக்கநாதன் செட்டி, “ஆரங்கே? சேவகா, இப்படி வா. உள்ளே லலிதாங்கியிடம் போய்ச் சொக்கநாதன் செட்டியார் விஜயம் செய்திருப்பதாகத் தெரிவி” என்றான்.
சேவகன் உள்ளே போய், விதுரனிடந் தெரிவித்தான். உடனே கார்யஸ்தனாகிய விதுரப் பிள்ளை வெளியே வந்து, செட்டியை மிகவும் மரியாதையுடன் மாளிகைக்குள் அழைத்துச் சென்றான்; செட்டியிடம் ஆயிரம் பொன்னை வாங்கிப் பணப் பெட்டியில் வைத்துக் கொண்டான்; லலிதாங்கியின் உருவம் மிகவும் அழகாகவும், நுட்பமாகவும் வரையப்பட்டிருந்த மோதிர மொன்றைச் செட்டியிடம் கொடுத்தான்.
“இது எனக்கு இனாமா?” என்று செட்டி கேட்டான்.
அதற்கு விதுரன், “அப்படி யன்று; செட்டியாரே இந்த மோதிரம் தங்களிட மிருந்து நான் ஆயிரம் பொன் பெற்றுக் கொண்டதன் அடையாளம். இதை உள்ளே ஒவ்வொரு அறையிலும் காண்பிக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு ஒரு கைம்மணியைக் குலுக்கினான்.
அந்த வெள்ளி மணியின் ஒலி சன்னமாக இருந்தாலும், அந்த மாளிகை முற்றிலும் கேட்கும். அந்த ஒலியைக் கேட்ட மாத்திரத்திலே, லலிதாங்கியின் இருபது சேடியர்களில் ஒருத்தியாகிய ரமா என்பவள் வந்து தோன்றினாள், இவள் செம்பட்டுப் புடவையும், செவந்த பட்டு ரவிக்கையும், மாணிக்க பூஷணங்களும், செந்நிற மலர்களும் அணிந்தவளாய் அக்கினிதேவனுடைய சக்திபோலே வந்து நின்றாள்.
அவளைக் கண்டவுடனே சொக்கநாதன் செட்டி இவள்தான் லலிதாங்கி யென்ற தவறெண்ணத்தால் “அடீ, லலிதாங்கி” என்று பெருங் குரலிட்டுக் கூவி அவள் மேலே போய் விழுந்தான். விதுரன் “கூ., கூ,” என்று கத்தினான், அந்தப் பெண் கலீரென்று நகைத்தாள். செட்டி ஆந்தையைப்போல் விழித்தான்.
அப்போது விதுரன் சொல்லுகிறான்: “பொறும், ஐயா, செட்டியாரே; பொறுத்திரும். இவள் லலிதாங்கி யில்லை, இவளுடைய பெயர் ரமா. இவள் சேடிகளில் ஒருத்தி, இவளுடன் உள்ளே போம். மேல் நடக்க வேண்டிய விஷயங்களை இவள் தெரிவிப்பாள்” என்றான்.
இதைக் கேட்டுச் செட்டி, “ஏன்? லலிதாங்கி இந்த ஊரில் இருக்கிறாளோ? இல்லையோ?” என்று வினவினான்.
ரமா மீண்டும் நகைத்தாள். அப்போது விதுரன், “பயப்படாதேயும் செட்டியாரே, லலிதாங்கி இங்கேதான் இருக்கிறாள். ஆனால், நீர் அவளைப் பார்க்கு முன்பு பல கார்யங்கள் நடந்தாக வேண்டும்; நேரத்தை வீண்போக்காதேயும். இவளுடனே போம். நடக்க வேண்டிய கார்யங்களை யெல்லாம் இவள் அறிவிப்பாள்” என்றான்.
நல்லதென்று சொல்லிச் சொக்கநாதன் செட்டி ரமாவுடன் உள்ளே சென்றான். ரமா இவனைப் பல அறைகளின் வழியே கடத்திச் சென்று கடைசியில் ஸ்நாந அறையிலே கொண்டு சேர்த்தாள். அங்கு பொன்னால் செய்த ஒரு பெரிய கைம்மணியை எடுத்துக் குலுக்கினாள்.
உடனே, இரண்டு புதிய பெண்கள் வந்தனர். இவ்விருவரும் பச்சைப் பட்டுடுத்து பச்சை ரவிக்கையும், பச்சை அணிகளும், பசுந்துழாய், மருக்கொழுந்தும் புனைந்திருந்தனர். இவர்களைப் பார்த்தவுடனே செட்டி இவ்விருவரில் யார் லலிதாங்கி என்று தெரிந்துகொள்ள முடியாதவனாய், ரமாவை நோக்கி, “லலி- லலி- லலிதாங்கி யார்?” என்று கேட்டுப் பைத்தியம் பிடித்த ஆந்தையைப் போல் விழித்தான்.
அப்போது ரமா, “உளறாதேயும். இவ்விருவரும் என்னைப்போலே சேடிகள். விதுரன் கொடுத்த மோதிரத்தை இவர்களிடம் காண்பியும்” என்றாள். செட்டி மோதிரத்தைக் காண்பித்தான். அவ்விருவரும் அதைக் கண்டு ஸலாம் செய்து விட்டு “ஸ்நாநம் செய்ய வாருங்கள்” என்றனர்.
இதைக் கேட்டவுடன் செட்டி அவ்விருவரையும் நோக்கி, “உங்கள் பெயரென்ன?” என்று வினவினான். அவ்விருவரில் ஒருத்தி சொல்லுகிறாள்: “என் பெயர் மரகதவல்லி; இவள் பெயர் மரகதமாலை” என்றாள். “அட! பெயருக்கேற்ற அலங்காரமா” என்று சொல்லிச் செட்டி வியப்பெய்தினான்.
ரமா அந்த அறையினின்றும் வெளியேறிச் சென்றாள், பச்சை மகளிர் இருவரும் மறுபடி செட்டியை நோக்கி “ஸ்நாநத்துக்கு வாரும்” என்று கூப்பிட்டார்கள்.
அப்போது செட்டி “ரமா, மரகதவல்லி, மரகதமாலை, ரமா, மரகதவல்லி, மரகதமாலை. . .” என்று அந்தச் சேடிகளின் பெயரை யெல்லாம் உருப்போட்டுக் கொண்டிருந்தான். பின்னர் தன்னுடைய நண்பர்களிடம் தான் லலிதாங்கி வீட்டுக்குப் போன வைபவங்களைச் சொல்லும்படி நேர்ந்தால், அப்போது சேடிகளின் பெயர்கள் மறந்து போகாமலிருக்க வேண்டு மென்பதை உத்தேசித்துச் செட்டி அங்ஙனம் ஜபம் பண்ணினான்.
“ஸ்நானம் பண்ண வருவீரா, மாட்டீரா?” என்று பச்சை மகளிர் செட்டியை மறுபடி கேட்டார்கள்.
அப்போது செட்டி மஹா கோபாவேச மெய்தியவனாய், “அவள் ஊரில் இருக்கிறாளா, இல்லையா, அந்த லலிதாங்கி? ஒரே வார்த்தையில் உண்மை சொல்லி விடுங்கள். நான் வந்த நோக்க மென்ன? எனக்காவது ஸ்நாநம் பண்ணி வைப்பதாவது? எங்கள் வீட்டிலே கிணறில்லையா? தொட்டி யில்லையா? எனக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கப் பெண்டாட்டி யில்லையா?” என்றான்.
அந்தப் பச்சை மகளிர் இருவரும் கணீரென்று நகைத்தார்கள்.
“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று சொக்கநாதன் செட்டி வினவினான்.
அதற்கு மரகதவல்லி, “வீட்டில் பெண்டாட்டிக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கும் உத்யோகந்தான் வைத்திருக்கிறீர் போலும்! நீர் இப்படி எங்களிடம் வந்து சொல்வதை உம்முடைய மனைவி கேட்டால் உம்மை என்ன பாடு படுத்துவாளோ என்பதை யெண்ணிச் சிரிக்கிறோம்” என்று சொன்னாள்.
“சரி; அதெல்லாம் போகட்டும். நான் இப்போ ஸ்நாநம் செய்ய மாட்டேன். என்னை நேரே லலிதாங்கி யிருக்கு மிடத்திலே கொண்டு விடுங்கள்” என்றான் செட்டி.
பச்சை மகளிருவரும் மறுபடி திசைகளி லெல்லாம் எதிரொலி யெழும்படி நகைத்தார்கள்.
செட்டி மஹா கோபத்துடன், “என்ன! நான் பேசுவது உங்களுக்குக் கேலியாய் விட்டதா? என்னை யாரென்று நினைத்தீர்கள்? என் பெயர் சொக்கநாதன் செட்டியார். எங்கள் சிறிய தகப்பனாருடைய மைத்துனராகிய பெரியண்ண செட்டியாருடைய மாமனாருக்குத் தம்பிதான் கோடிக்க கரையில் கோடிசுரராக இருக்கும் ஆநா, ஆவந்நா ஆண்டியப்ப செட்டியார். என்னை இந்த அமிர்த நகரத்துக் கடைத் தெருவில் அறியாதார் யாருமில்லை. பணம் வட்டிக்கு விடுவது நம்முடைய வியாபாரம். அதிலே நமக்கு கனலாபம். அப்படிப்பட்ட நானாகிய சொக்கநாதன் செட்டியார் பேசிக்கொண்டிருக்கையிலே நீங்கள் மூடத்தனமாக நகைக்கிறீர்களே, நான் பணங் கொடுக்க வில்லையா? இதோ, பாருங்கள், மோதிரம் – அடையாளம். என்னை லலிதாங்கி இருக்கு மிடத்தில் கொண்டு விடுங்கள். எனக்கு இப்போது ஸ்நாநம் அவசியமில்லை” என்று செட்டி ஒரே ஸாதனையாக ஸாதித்தான்.
அந்தப் பெண்கள் மறுமொழி சொல்லாமல் நின்றார்கள்.
அப்போது செட்டி, “என்ன, சும்மா, மறுமொழி சொல்லாமல் நிற்கிறீர்களே; இதெல்லாம் ஏதோ ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது. ஏதோ ஏமாற்று; ஏதோ சூது; ஏதோ வஞ்சனை யிருக்கிறது! லலிதாங்கியை உடனே எனக்குக் காட்டுங்கள். அல்லது மறுபடி விதுரப்பிள்ளை இருக்கு மிடத்திலே என்னைக்கொண்டு விடுங்கள். என் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்கிறேன். ஐயோ! அருமையான பணம்; மிகவும் கஷ்டப் பட்டு ஸம்பாதித்தது. ஆயிரம் பொன்; ஆயிரம் பொன்னென்றால் தெருவிலே கிடக்கிறதா? ஆயிரம்பொன்! ஆயிரம் பொன்! ஆயிரம் பொன்! ஆயிரம் பொன் கொடுத்து ‘நான் இங்கு ஸ்நாநம் பண்ணவா வந்தேன்?” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தான்.
அப்போது மரகதமாலை சொல்லுகிறாள்: “செட்டியாரே, காலத்தை வீணாகக் கழிக்கிறீர். இப்படி வீண் பேச்சில் நேரம் போக்கிக் கொண்டிருந்தால், கடைசியாக இன்றிரவு நீர் லலிதாங்கியைப் பார்ப்பதே துர்லபமாய் விடும். இங்கு வந்தால், இவ்விடத்து விதிகளுக் கெல்லாம் உட்பட்டுத் தீரவேண்டும். இவ் விதிகள் எவர் பொருட்டாகவும் மாற்றப்பட மாட்டா. முதலாவது, இங்கே ஸ்நாநம் பண்ண வேண்டும். அப்பால் இரண்டாம் மாடிக்குப் போய் போஜனம் முடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் மாடியிலே புதிய வஸ்திரங்கள் காண்பிக்கப்படும்; அவற்றுள் இஷ்டமானதை தரித்துக் கொள்ள வேண்டும். நான்காம் மாடியில் சந்தனம், தாம்பூலம், ஸ்கந்தங்கள் முதலிய உபசாரங்கள் நடக்கும். ஐந்தாம் உப்பரிகையில் நாட்டியம், ஸங்கீதம் இவற்றை ரமித் தின்புற வேண்டும். ஆறாம் உப்பரிகையில் அரமனை வைத்தியர் உம்முடைய தேக ஸ்திதியைப் பரிசோதனை செய்து தக்க மருந்துகள் கொடுப்பார். ஏழாம் உப்பரிகையிலே லலிதாங்கியைக் காணலாம்.
இரவில் மூன்று ஜாமங்களையும் ஆறு உப்பரிகைகளில் கழித்துக் கொண்டு, நான்காம் ஜாமத் தொடக்கத்திலேதான் லலிதாங்கி யிருக்கு மிடம் போய்ச் சேரலாம். இவ்விடத்து விதிகளை ஹரிஹரப் ப்ரஹ்மாதிகளுக்காகக்கூட மாற்றுவதில்லை. வாயை மூடிக்கொண்டு நடப்பதை யெல்லாம் கண்டு ஸ்கிக்க வேண்டும். ஸ்நாநம் பண்ணுவித்தால் பண்ண வேண்டும்” என்றாள்.
“தடியைக் கொண்டடித்தாலோ?” என்று செட்டி கேட்டான்.
“பட வேண்டும்” என்று மரகதவல்லி சொன்னாள்.
இத்தனைக் கப்பால் செட்டி ஸ்நாநம் பண்ணுவதாக ஒப்புக்கொண்டான். வேஷ்டியை அவிழ்த்து வைத்து, அரையில் ஒரு சிறு துணியைக் கட்டிக்கொண்டு, ஒரு பலகையின் மேல் உட்காரச் சொன்னார்கள் “முருகன் துணை” என்று சொல்லிச் செட்டி பலகைமீதேறி யுட்கார்ந்து கொண்டான்.
மரகதவல்லி செட்டி தலையில் எண்ணெயை வைத்தாள்.
“எண்ணெய்க் குளியா?” என்று சொக்கநாதன் செட்டி கேட்டான்.
“ஆம்” என்றாள் மரகதவல்லி.
செட்டி பெரு மூச்செறிந்தான். ஒரு மணிநேரம் பலவிதமான ஸம்பாஷணைகள் செய்து செட்டி ஸ்நாநம் பண்ணி முடித்தான். பிறகு போஜனசாலைக்குச் சென்றான். அங்கு நளபாக மென்றால் ஸாக்ஷாத் நளபாகமாக ஆறுவிதச் சுவைகளிலும் சுமார் நூறு வகைப் பக்குவங்களும், பக்ஷணங்களும் செய்து வைக்கப் பட்டிருந்தன.
செட்டி இத்தனை ருசியான பக்குவங்களை இதுவரை எப்போதும் உண்டது கிடையாது. கண்ணால் கண்ட தில்லை, காதால் கேட்டதில்லை; கற்பனையால் எட்டியது மில்லை. எனவே, இரண்டாம் உப்பரிகையிலும் நெடும் பொழுது கழித்து விட்டான்.
சமையலின் ருசியிலும், பரிமாற வந்த புதிய பெண்களாகிய நீலலோசனி என்பவளும், நீலமணி என்பவளும் நீலப் பட்டுடுத்து, நீல அணி தரித்து, நீலப் பொட்டிட்டு, நீல மலர் சூட்டி நின்ற அழகிலும் மயங்கிப்போய்ச் செட்டி பொழுது போவதைக்கூடக் கவனியாமல் இருந்துவிட்டான். இவர்களுடைய பெயர்களையும் செட்டி விசாரித்துக் கொண்டான்.
போஜனம் முடிந்த வுடனே வஜ்ரரேகை, வஜ்ராங்கி என்ற இரண்டு புதிய மாதர் வந்து தோன்றினர். இவர்கள் முழுமையும் வெள்ளையிலே அலங்காரம் பண்ணிக்கொண்டு வந்தனர்.
செட்டி இவர்களுடைய பெயர்களையும் விசாரித்து வைத்துக் கொண்டான்.
இவர்கள் அவனை மூன்றாம் உப்பரிகைக்கு அழைத்துச் சென்றார்கள்,
போகும் வழியில் செட்டி “ரமா, மரகதவல்லி, மரகதமாலை, நீலலோசனி, நீலமணி, வஜ்ரரேகை, வஜ்ராங்கி, வஜ்ராங்கி, ரமா, ரமா, மரகதவல்லி, மரகதவல்லி, மரகதமாலை, மரகதமாலை, நீலலோசனி, நீலலோசனி, நீலமணி, நீலமணி, வஜ்ரரேகை, வஜ்ரரேகை, வஜ்ராங்கி, வஜ்ராங்கி, ரமா, ரமா, ரமா, . . என்று ஜபம் பண்ணிக் கொண்டே போனான்.
மூன்றாம் மாடியிலே பட்டுக்களிலும், ஜரிகைகளிலும், ரத்னங்களிழைத்தனவும், பூக்கள் சித்திரித்தனவுமான வேஷ்டிகள், உத்தரீயங்கள், பாகைகள், நிஜார்கள், சட்டைகள், துண்டுகள், பதினாயிர விதமென்றால் பதினாயிரம் விதம். ஒன்றைக் காட்டிலும் ஒன்று கண்ணைப் பறிக்கும்படியான அழகுடையனவாய், வரிசை வரிசைாக வெள்ளிக் கம்பிகளால் செய்த கொடிகளின் மீது தொங்க விட்டிருந்தன.
திரும்பிப் பார்த்த பக்க மெல்லாம் நிலைக் கண்ணாடி! அந்த நிலைக் கண்ணாடிகளை நிறுத்தி யிருந்த மாதிரியில் இந்த வஸ்த்ரங்களின் பிரதி பிம்பங்கள் ஒன்று, பத்து, நூறாகத் தெரிந்தன.
செட்டி போய்ப் பார்த்தான். அவனுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. மயங்கிப் போய் விட்டான், மயங்கி! தேடித் தேடிப் பார்த்து, ஒரு பாகை மிகவும் அழகிய தென்று கருதித் தலையில் அணிவான். பிறகு அதோ, அந்த மூலையில் மற்றொன்று இதைக் காட்டிலும் அழகாகத் தோன்றும். தூரத்துப் பார்வை கண்ணுக் கழகு. அங்கே போய் அதை எடுத்து வைப்பான். பிறகு மற்றொன்று அதைக் காட்டிலும் அழகாகத் தென்படும். நிஜார், சட்டை , கைத்துண்டு, எல்லாம் இப்படியே.
நெடுநேரம், நெடுநேரம் போட்டுப் போட்டு மாற்றிய பின் கடைசியாகச் செட்டி ஒரு பால் வெளுத்த சரிகை வேஷ்டி, வஜ்ர மணிகளிழைத்த அங்கி, பொன் மலர்கள் உத்தரீயம், மாணிக்கச் சரங்கள் தொங்கவிட்ட மஸ்லின் தலைப்பாகை இத்தனையையும் தரித்துக் கொண்டான்.
“உடைகள் உடுத்தாய் விட்டதா?” என்று வஜ்ரரேகை கேட்டாள். “ஆயிற்று” என்றான் செட்டி.
அப்பால், அங்கிருந்து, அவனை அடுத்த தாம்பூலாதிகள் வழங்கும் மாடிக்குக் கொண்டு செல்லும் பொருட்டாக ஸுவர்ணாம்பாள், ஸுவர்ணமாலை என்ற புதிய சேடிகள் இருவர் வந்தனர். செட்டி, இவர்களுடைய பெயரையுங் கேட்டுத் தெரிந்துகொண்டு, உருப்போட்டு உருப்போட்டு நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டான்.
இதற்குள்ளே பொழுது விடிந்து விட்டது. அவ்விரண்டு பெண்களும் செட்டியை நான்காம் உப்பரிகைக்குக் கொண்டு போகாமல் கீழே அழைத்துக் கொண்டு போய் விதுரப் பிள்ளை யிருந்த இடத்தில் கொண்டு விட்டார்கள்.
போகும் வழியில் செட்டி, “ஏன் என்னை நான்காம் மாடிக்குக் கொண்டு போகாமல் கீழே அழைத்துச் செல்கிறீர்களே, விஷயமென்ன?” என்று கேட்டான்.
“பொழுது விடிந்துவிட்டது. இனி இரவில்தான் வரலாம்” என்று ஸுவர்ணமாலை சொன்னாள்.
“இன்றிரவு நான் லலிதாங்கியைப் பார்க்க முடியாதோ?” என்று செட்டி கேட்டான்.
“இன்றிரவு பொழுதுதான் விடிந்து விட்டதே. நேற்றிரவு என்று சொல்லும். இப்போது வீட்டுக்குப் போய் மறுபடி இன்றைக்கிரவில் வரலாம்” என்றாள் ஸுவர்னமாலை.
“பணம்” என்று செட்டி கேட்டான்.
“அதெல்லாம் விதுரப் பிள்ளையிடங் கேட்டுக் கொள்ளும்” என்று ஸுவர்ணமாலை சொன்னாள்.
விதுரனிடம் வந்தவுடன் புதிய உடைமைகளைக் களைந்து விட்டுச் செட்டிக்கு அவன் அணிந்து கொண்டு வந்த அவனுடைய சொந்த உடைகளைத் கொடுத்தனர்.
“என் பணத்தைத் திரும்பக் கொடும்” என்று செட்டி விதுரனிடம் கேட்டான்.
விதுரன் ஸுவர்ணமாலையை நோக்கி, “என்ன விஷயம்?” என்று விசாரித்தான்.
அவள் நடந்த வரலாற்றை யெல்லாம் சொல்ல, செட்டி மண்டபத்திலும் போஜனசாலையிலும் வஸ்த்ர சாலையிலும் வீணாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தா னென்றும், அதற்குள் பொழுது விடிந்து விட்டதென்றும், ஆதலால் அவன் லலிதாங்கியைப் பார்க்க இடமில்லாமல் போய்விட்டதென்றும் தெரிவித்தாள்.
இதைக் கேட்டு விதுரன், “நேற்றிரவு உம்முடைய பிழையால் லலிதாங்கியைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. இன்று மறுபடி ஆயிரம் பொன் கொண்டு வாரும்” என்றான்.
செட்டி பணம் வேண்டுமென்று கட்டாயப்படுத்திக் கூச்சல் போடத் தொடங்கினான், அப்போது விதுரன் வாட் சேவகரை அழைத்தான்.
ஆறு சேவகர் உருவிய கத்தியுடன் வந்து நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடன் செட்டி புத்தி தெளிந்து ஒரு வார்த்தையும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தான்.
மறுநாள் செட்டி, மறுபடியும் ஆயிரம் பொன்னெடுத்துக் கொண்டு லலிதாங்கியின் வீட்டுக்குப் போனான். ‘இன்றைக்கு நாம் யாரிடத்திலும் அநாவசிய வார்த்தை பேசவே கூடாது. மெளனமாக மூன்று ஜாமங்களையும் கழித்து, நான்காம் ஜாமத்தில் அவசியம் லலிதாங்கியைப் பார்த்தே தீர வேண்டும்’ என்று செட்டி நிச்சயம் பண்ணிக் கொண்டு போனாள்.
ஆனால், நேற்றைப்போலே, எண்ணெய் ஸ்நாந கட்டத்திற்குப் போனவுடன் கலகந் தொடங்கி விட்டது. “நேற்றுத்தான் எண்ணெய் ஸ்நாநம் பண்ணியாய் விட்டதே; இன்று வெறுமே குளித்தால் போதாதா? சேர்ந்தபடியாக இரவுதோறும் எண்ணெய்க் குளித்தால் உடம்புக் காகுமா?” என்று செட்டி வாதாடினான்.
அந்தப் பெண்கள் இணங்கவில்லை. செட்டிக்குக் கோபம் வந்தது. அவர்கள் சிரித்தார்கள். மற்றதெல்லாம் நேற்றைக் கதை மாதிரி தான், செட்டி போஜனாதிகளைக் கண்டவுடன், மயங்கிப் போய் பொழுது கழிவதுணராமல் தாமஸப் பட்டது முதல், விதுரனிடம் வந்து சண்டை போட்டது, விதுரன் வாட் சேவகரை யழைத்தது என்ற கட்டம் வரை முதல் நாள் மாதிரியாகவே ஆயிற்று. லலிதாங்கியின் தரிசனம் கிடைக்கவில்லை.
மூன்றாம் நாட் காலையில் சொக்கநாதன் செட்டி கடையில் மாதாந்தரக் கணக்கு வரவு சிலவு பார்த்தார்கள்,
“பெட்டியில் இரண்டு ஆயிரம் பொன் குறைகிறதே அதை எந்தக் கணக்கில் எழுதுவது?” என்று செட்டியை நோக்கி குமாஸ்தா கேட்டான்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் செட்டியின் கண்ணிலிருந்து ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிற்று.
தன்னை மறந்து வாய் விட்டு, “ஐயோ, இரண்டாயிரம் பொன் தொலைந்து விட்டதே” என்று சொக்கநாத செட்டி விம்மி அழுதான்.
குமாஸ்தா இங்ஙனம் அபூர்வமாக செட்டி அழுவதைக் கண்டு வியப்பெய்தி, “என்ன செட்டியாரே, புத்தி ஸ்வாதீனமில்லையா? எவ்வளவோ போகிறது; எவ்வளவோ வருகிறது. இரண்டாயிரம் பொன்னுக்கு அழலாமோ! பெரிய பெரிய நஷ்டங்கள் வந்தாலும் நீங்கள் அழ மாட்டீர்களே? இந்த இரண்டாயிரம் பொன் மலையா! இதற்கேன் அழுகிறீர்கள்?” என்று கேட்டான்.
செட்டி குமாஸ்தாவிடம் கைத் தொகையை ஒரு பையிலே கட்டித் தன் வீட்டு வாயில் திண்ணையில் பக்கத்திலே வைத்துக்கொண்டிருந்ததாகவும், வீட்டுக்குள் ஏதோ அவஸர நிமித்தமாகப் போக நேர்ந்ததில் மறதியினால் அதை வாயிலிலேயே வைத்துவிட்டுச் சென்றதாகவும் திரும்பிவந்து பார்க்கு முன்னே அந்தப் பணம் களவு போய்விட்டதாகவும் ஏதோ பொய்க் கதை சொல்லி விட்டு, அழுகையை நிறுத்திக் கொண்டான்.
அது முதல் லலிதாங்கியை மறந்து விட்டது மட்டுமே யன்றி, சொக்கநாதன் செட்டி எங்கேனும் தாஸி வீடென்று பெயர் கேட்ட அளவிலே உடம்பெல்லாம் நடுங்கலானான்.
வேசையர் யமனுடைய தூதரென்றும், அவர்களைக் கோயிற் பணி முதலியவற்றில் வைத்திருப்பதே குற்றமென்றும், கலியாண காலங்களில் தாஸிகளை அழைத்து நாட்டியம் பார்ப்பது பெருந்தீமைக் கிடமென்றும் தன்னுடைய நண்பர்களுக் கெல்லாம் உபதேசஞ் செய்யத் தொடங்கினான். தாஸிகளைப் பழித்து யாரேனும் புலவர்கள் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான ஸம்மானங்கள் செய்யத் தொடங்கினான், லலிதாங்கி யிருந்த தெருவழியாகப் போவதையே நிறுத்தி விட்டான்.
அப்பால் அந்தச் செட்டி வியாபாரத்தில் ஏராளமான திரவியங்கள் சேர்த்து ஏழைகளுக்கும் கோயில்களுக்கும் கொடுத்துப் பெரிய புண்யவா னென்றும், தர்மிஷ்ட னென்றும் பெயர் பெற்று வாழ்ந்தான்.-
- ‘கதாரத்னாகரம்’ மாதப் பத்திரிகை (1920 ஜூலை, ஆகஸ்ட்)
$$$