-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
2. நான் பாடங்கேட்கத் தொடங்கியது
மறுநாட் காலையில் நாங்கள் இவரைப் பார்ப்பதற்குச் சென்றோம். அப்பொழுது கல்விமான்கள் சிலர் இவரிடம் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆறுமுக நாவலருடைய மாணாக்கர். நாவலர் சிதம்பரம் விட்டு யாழ்ப்பாணம் சென்றதையும் யாழ்ப்பாணத்துள்ள பிரபுக்களும் வித்துவான்களும் நாவலரை வரவேற்றுச் செய்த உபசாரங்கள் முதலிய நிகழ்ச்சிகளையும் அவர் விரிவாகச் சொன்னார். மற்றவர்கள் தங்கள் தங்களுக்குத் தெரிந்த வித்துவான்களுடைய செளக்கியங்களையும் அவர்கள் செய்வனவற்றையும் சொல்ல இவர் கேட்டு மகிழ்ந்தார். அப்பொழுது அநேகம் செய்திகளையறிந்தேன்.
யாப்பிலக்கணத்தில் என்னைப் பரீட்சித்தது
அன்று பிற்பகலிற் சென்றபொழுது திருநாகைக்காரோணப் புராணத்தை வருவித்து அதை என்பால் அளித்து அதில் நாட்டுப் படலத்திலுள்ள 38 – ஆம் செய்யுளாகிய “புன்மைசால்” என்பதையும் அடுத்த செய்யுளையும் படிக்கச் சொல்லி அவ்விரண்டிற்கும் பொருள் கூறித் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டார். ஜாக்கிரதையாகச் சொன்னேன். அவற்றிலுள்ள சொல்முடிபு பொருள்முடிபுகளைக் கேட்டார்; யோசித்துச் சொன்னேன். பின்பு, “வெண்பாக்களைச் சீர்பிரித்து அலகூட்டிச் சொல்வீரா?” என்று, “நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க, நல்லார்சொற் கேட்பதுவு நன்றே – நல்லார்”, “நெல்லுக் கிறைத்த நீர்வாய்க் கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம்” என்ற பாடல்களை இவ்வண்ணமே கூறி அலகூட்டச் சொன்னார். இவர் பிரித்துச் சொன்னபடி சொன்னால் தளை கெடுமென்பதை யறிந்து ஜாக்கிரதையாகப் பிரித்துக் காட்டினேன். அதனைக் கேட்டு எனக்கு யாப்பிலக்கணம் கற்பித்த நாட்டாரைப் பாராட்டியதுடன் அவரைப் பற்றிக் கேள்வியுற்றிருப்பதாகவுஞ் சொன்னார்.
பின் ஒரு தினம் என் தந்தையார், “இவன் இலக்கண நூற் பாடம் சிறிது சிலரிடத்துக் கேட்டிருந்தாலும் திருப்தியுண்டாகாமையால் முதலில் தாங்கள் ஏதாவது இலக்கண நூலைக் கற்பித்தால் நலமாக இருக்கும். இவனுடைய கருத்து இது” என்று தெரிவித்தனர். “பதினாயிரம் பாடலுக்குக் குறையாமற் பாடங் கேட்ட பின்பே இலக்கணபாடம் தொடங்குதல் நலம். இவருக்கு இப்போது உள்ள இலக்கண அறிவே இலக்கிய பாடங் கேட்டற்குப் போதுமானது. அதைப் பின்பு கவனித்துக் கொள்ளுகிறேன்” என்று இவர் விடையளித்தார்.
நல்ல தினத்திற் பாடங்கேட்க ஆரம்பித்தது
அப்பால் என் தந்தையார் குறிப்பிட்டுச் சொன்னபடி ஒரு நல்லதினத்திற் சென்றேன். இவர் நைடதத்தை வருவித்து அளித்துச் சில பாடல்களைப் படிக்கச் செய்து அவற்றிற்கு முறையே பொருள்களையும் செய்யுட்களில் அங்கங்கேயுள்ள விசேடக் கருத்துக்களையும் விளங்கச் சொன்னார். அதுவரையிலும் அவ்வண்ணம் கேளாதவனாகையால் இவருடைய போதனை எனக்கு மிக்க இன்பத்தை விளைவித்தது. பின்பு வினவிய பொழுது இவர் சொல்லிய வண்ணமே நான் விடை பகர்ந்தேன். அப்பால், “சில தினங்களில் விரைவாக இதை முடித்து விடலாம். இது முடிந்தவுடன் வேறு புதிய நூலொன்றை ஆரம்பிக்கலாம்” என்று சொல்லிவிட்டு எனக்குப் பாடஞ்சொல்லும்படி அங்கே வந்திருந்த பழைய மாணவரொருவருக்குக் கட்டளையிட்டார். அவ்வண்ணமே அவரிடம் அந்நூலை நாள்தோறும் கேட்டு வந்தேன்.
அப்பொழுது இக்கவிஞர் தலைவரிடம் படித்துக்கொண்டிருந்த மாணாக்கர்கள்: காரைக்காற் சவேரிநாத பிள்ளை, கூறைநாட்டுக் கனகசபை ஐயர், அவருடைய சகோதரராகிய சிவப்பிரகாசையர் (இவ்விருவரும் வீரசைவர்கள்) என்பவர்கள். திருமங்கலக்குடி சேஷையங்கார், வல்லம் கந்தசாமி பிள்ளை, மாயூரம் முத்துசாமி பிள்ளை, நாகம்பாடிச் சாமிநாத பிள்ளை, மூவலூர்ச் சாமிப் பிள்ளை, திட்டைச் சோமசுந்தரம் பிள்ளை, சீயாலம் சிதம்பரம் பிள்ளை முதலிய பழைய மாணாக்கர்கள் இவரிடம் அடிக்கடி வந்து தமக்குள்ள ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு போவார்கள்.
என் தந்தையார் விடைபெற்றுச் சென்றது
மாயூரத்தில் இருப்பதற்குச் செளகரியப்படாமையால் தந்தையார் என்னுடைய உணவுச் செலவு முதலியவற்றிற்கு வேண்டியவற்றைக் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டுத் தாம் ஊருக்குப் போவதாக நிச்சயித்து ஒரு நாட்காலையிற் பிள்ளையவர்களிடம் வந்து, “நான் விடைபெற்றுக் கொள்கிறேன். என்னுடைய பூஜை முதலியவற்றிற்கு இவ்வூர் செளகரியப்படவில்லை. ஆதலால் இவனைப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கிறது. தனியே இருந்து வேண்டியவற்றைச் செய்துகொள்ளுவதில் இவனுக்கு வழக்கமில்லை. நானும் இவன் தாயும் இதுவரையில் இவனைப் பிரிந்து இருந்ததில்லை; தயை செய்து இவனை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று சொன்னார்; சொல்லும்பொழுது அவருக்குக் கண்ணீர் பெருகியது. அதைக் கண்ட இப் புலவர் கோமான் அவருடைய அன்பின் மிகுதியையும் பிரிவாற்றாமையையும் கண்டு மனமிரங்கி, “ஐயா, இவருடைய பாதுகாப்பைக் குறித்து நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக ஊருக்குப்போய் உங்களுடைய பூஜை முதலியவற்றை நடத்திக்கொண்டு சுகமாக இருங்கள். பார்க்க விரும்பியபொழுது இவரை உங்கள்பால் அனுப்பி வருவித்துக் கொள்ளுவேன். அவகாசமுள்ள காலங்களில் நீங்களும் வந்து பார்த்துவிட்டுப் போகலாம்” என்று அன்புடன் விடையளித்தார். இவர் அங்ஙனம் கூறிய வார்த்தைகள் எனக்கு அமுதம் போன்றிருந்தன. இவர் ‘பாதுகாப்பு’ என்று கூறிய சொல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அப்பால் தந்தையார் ஊருக்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன் ஒருநாள் என்னை மாயூரத்திலிருந்த கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் அழைத்துச் சென்று பிள்ளையவர்களிடம் தமிழ் கற்க என்னைச் சேர்ப்பித்திருத்தலைச் சொல்லி எனக்கு ஸங்கீதத்திலும் பழக்கமிருப்பதால் அவகாசமுள்ள காலங்களில் ஸங்கீதத்தில் பயில்விக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரும் அதற்கு உடன்பட்டார்.
எனக்கிருந்த குறை
எனக்குப் பாடஞ்சொல்லி வந்தவர் பின்பு நைடதத்தின் மேற்பகுதிகளைச் சொல்லி வந்தார். என்னுடைய ஆவலை நிறைவேற்றுந் தகுதி அவர்பாற் காணப்படவில்லை. ஆனாலும் நாள்தோறும் வேகமாகக் கேட்டு வந்தேன். அவரும் விரைவாகவே சொல்லி வந்தார். நான் அந்நூலை முன்னமே பாடங்கேட்டதன்றிப் பலமுறை படித்து ஆராய்ந்து வந்திருந்தமையால் அவர் பாடஞ் சொல்லுவதில் விசேடமொன்றையும் காணவில்லை. அதனால், ‘இவ்வளவுகாலம் முயன்று பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தும் அவர்களிடத்திலேயே பாடங்கேட்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே!’ என்ற குறை மேன்மேலும் வளர்ச்சியடைந்து வந்தது. அக்குறையை நான் தெரிவிக்கவாவது, இவரே தெரிந்து கொள்ளவாவது தக்க சமயம் வாய்க்கவில்லை. என்னுடைய கருத்தை இவரிடம் வெளிப்படுத்துவதற்கு அச்சமுற்றும் இருந்தேன். என்னைக் காணும்பொழுது இவர், “பாடம் நடந்துவருகிறதா?” என்று கேட்பார்; “நடந்து வருகிறது” என்று மட்டும் சொல்லுவேன். இவருடன் அதிகமாகப் பழகி இவரிடம் பாடங் கேட்பதற்கு நல்ல காலம் எப்பொழுது வாய்க்குமோவென்று அதனை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். அந்த விஷயத்தில் தக்கவாறு முயலும்படி என் மனம் என்னைத் தூண்டிக் கொண்டே வந்தது; நல்லூழும் அதற்குத் துணை செய்தது.
தளிரால் தளிர்த்த அன்பு
கவிஞர்களுக்குப் பூஞ்சோலைகளிலும் பிற இயற்கைக் காட்சிகளிலும் ஈடுபாடு அதிகம் என்பது பலரும் அறிந்ததே. மரங்கள், பூச்செடிகள் முதலியவற்றைக் கண்டு மகிழும் வழக்கம் இவருக்கு மிகுதியாக உண்டு. இவர் புதிதாகத் தாம் வாங்கிய வீட்டின் தோட்டத்தில் அவ்வூர் வழக்கப்படியே நாரத்தை முதலியவற்றின் பெரிய செடிகளையும் பூஜைக்குரிய வில்வம் முதலியவற்றின் பெரிய செடிகளையும் வேரோடு மண் குலையாமல் தோண்டி யெடுத்து அம்மண்ணின் மேல் வைக்கோற்புரி சுற்றிக் கூறைநாட்டிலிருந்து வருவித்து ஆழ்ந்த குழிகளில் வைப்பித்து நீர் வார்த்துப் பாதுகாத்து வரும்படி செய்வித்திருந்தார். வேலைக்காரர்கள் அவற்றைப் பாதுகாத்து வந்தார்கள். சில தினங்கள் சென்றபின் நாள்தோறும் காலை மாலைகளில் இவர் சென்று பட்டுப் போகாமலிருக்கின்றனவாவென்று அவற்றைக் கவனித்து வருவதுண்டு. இவர் தனியாகவேனும் யாரையாவது உடனழைத்துக் கொண்டேனும் காலையிற் சென்று எந்தச் செடியில் எந்தக் கிளையில் தளிர் உண்டாயிருக்கிறதென்று பார்த்து, தோன்றிய தளிரைக் கண்டு திருப்தி அடைவார். இவர் இங்ஙனம் செய்துவருவதைச் சில நாள் கவனித்த நான், ‘இவர்களுடைய அன்பை அதிகமாகப் பெறுவதற்கு இத்தளிர்களையே துணையாகக் கொள்வோம்’ என எண்ணினேன். அது முதல் விடியற்காலையில் எழுந்திருந்து இவர் செல்லும் முன்பே நேராகத் தோட்டத்திற்குச் சென்று ஒவ்வொரு செடியிலும் ஏதாவது புதிய தளிர் உண்டாகியிருக்கிறதா என்று கவனித்து அறிந்துவந்து நிற்பேன். இவர் வரும்போது மெல்ல அருகில் போய் நான் இவரை அழைத்துச் சென்று, இன்ன செடியில் இன்ன கிளை தளிர்த்திருக்கிறது, இன்ன கிளையில் இவ்வளவு தளிர்கள் உண்டாயிருக்கின்றனவென்று காட்டுவேன். இவர் ஆவலோடு என்னுடன் வந்து அவற்றை ஊன்றிப் பார்த்து அங்கங்கே நான் தெரிவித்தபடி தளிர்களிருத்தலைக் கண்டு மகிழ்வார். இப்படிச் சில தினங்கள் செய்து வந்தேன். இவரும் ஒவ்வொருநாளும் காலையில் வந்து அங்கே நின்ற என்னை முன்னிட்டுக்கொண்டு சென்று தளிர்களைப் பார்த்து மகிழ்ந்து வருவாராயினர்.
தம்முடைய மனத்திற்கு உவப்பான இச் செயலை நான் மேற்கொண்டதை இவர் அறிந்து பின்னொரு நாள் என்னை நோக்கி, “இவற்றை முன்னதாக நீர் பார்த்து வைத்துக் கொண்டது எதனால்?” என்று வினவினார். “*1 ஐயா அவர்களுக்கு இதில் மிக்க விருப்பம் இருப்பதை அறிந்து இவ்விடத்துக்கு (தங்களுக்கு) அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாதென்றெண்ணி முதல் நாள் பிற்பகலிலும் மறுநாட் காலையிலும் பார்த்து வைத்துக் கொண்டேன்” என்றேன். இவர், “யாரேனும் பார்த்து வைக்கும்படி சொன்னார்களா?” என்று வினவவே நான், “ஒருவரும் சொல்லவில்லை. இவ்விடத்திற்கு உவப்பாக இருக்குமென்று இவ் வேலையை நானாகவே செய்து வருகிறேன்” என்றேன். இவர், “நாள்தோறும் இப்படியே நீர் முன்னதாகவே கவனித்து நான் வரும்போது சொன்னால் நலமாயிருக்கும்” என்று சொன்னார். அவ்வண்ணமே நாள்தோறும் செய்து வந்தேன். இவரும் பார்த்து வந்தார். இங்ஙனம் இவர் பார்த்துச் சென்ற பின்பே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் தந்த சுத்தி முதலியவற்றைச் செய்யச் செல்வேன். இவர் அப்பொழுது பாடத்தைப் பற்றியும் விசாரிக்கத் தொடங்கினார். இங்ஙனம் நாடோறும் இவரைச் சந்தித்துப் பேச நேர்ந்ததற்கு ஒரு காரணமாக இருந்த தளிர்களை வாழ்த்தினேன்.
இவர்பால் நான் நேரே பாடங் கேட்டது
பின்பு ஒருநாள் நான் படிக்கும் பாடங்களைப் பற்றி இவர் விசாரிக்கையில், “இவ்விடத்திலேயே பாடங் கேட்கவேண்டுமென்னும் விருப்பம் எனக்கு மிகுதியாக இருக்கின்றது” என்பதை அச்சத்துடன் தெரிவித்தேன். கேட்ட இவர், “அவ்வாறே செய்யலாம்; இப்போது நடக்கும் நைடதப் பாடம் பூர்த்தியாகட்டும்” என்று விடையளித்தார். அது சில தினங்களில் ஒருவாறு முடிந்தது. அதை இவருக்குத் தெரிவித்தேன். மறுநாட் காலையில் என்னை வலிந்தழைத்து, “இனிமேல் பிரபந்தங்களைப் படிக்கத் தொடங்கலாம்” என்று சொல்லித் திருக்குடந்தைத் திரிபந்தாதிச் சுவடியை வருவித்துக் கொடுத்துப் படிக்கும்படி சொன்னார். அந்தப்படியே நானும் மற்றவர்களும் வாசித்துப் பொருள் கேட்டு வந்தோம். அந் நூல் இரண்டு தினத்தில் முற்றுப் பெற்றது. யமகம் திரிபுகளாகிய நூல்களில் ஐந்து ஆறு பாடல்களுக்கு மேல் கேட்க முடியாமல் அதுவரையில் வருந்திக்கொண்டிருந்த எனக்கு மிகக் கடினமாகிய அந்நூல் இரண்டு தினங்களில் முற்றுப் பெற்றதும், பாடம் சொல்லுகையில் இவர் யாதொரு வருத்தமுமின்றி முகமலர்ச்சியோடு மனமுவந்து சொல்லியதும், மாணாக்கர்களுக்கு விளங்காதவை இன்னவையென்று அறிந்து அந்தப் பாகங்களுக்கு மட்டும் பொருள் சொல்லிக் கடினமான தொடர் மொழிகளைப் பிரித்துக் காட்டி விளக்கியதும், இன்றியமையாத சரித்திரங்களை விளக்கமாகக் கூறியதுடன் இலக்கணக் குறிப்புக்களைச் சுருங்கச் சொல்லித் தெரிவித்ததும் எனக்கு வியப்பையும் இன்பத்தையும் உண்டுபண்ணின. பாடம் முற்பகல் பிற்பகல் இரண்டு வேளைகளிலும் நடைபெற்றது. முற்கூறிய சவேரிநாத பிள்ளையும் கனகசபை ஐயரும் என்னோடு பாடங் கேட்டு வந்தார்கள். அவர்கள் பழக்கம் எனக்கு மிக்க உதவியாக இருந்தது.
அப்பாற் பழமலைத் திரிபந்தாதி, திருப்புகலூர்த் திரிபந்தாதி, மருதூர் யமகவந்தாதி, தில்லை யமகவந்தாதி, திருவேரகத்து யமகவந்தாதி, துறைசை யமகவந்தாதி, மறைசையந்தாதி முதலிய அந்தாதிகளும், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் முதலிய சில பிள்ளைத் தமிழ்களும், அஷ்டப்பிரபந்தத்துள் சில பிரபந்தங்களும் கேட்டு முடித்தோம். மறைசை யந்தாதி மட்டும் ஒரே நாளில் முற்றுப் பெற்றது.
இவ்வளவு நூல்களில் உள்ள பாடல்களும் இப் புலவர்சிகாமணிக்கு ஞாபகத்திலேயே இருந்தன. அதற்குக் காரணம் இடைவிடாமற் பாடஞ் சொல்லி வந்தமையே. உரிய இடங்களில் இவர் சொல்லி வரும் பதசாரங்கள் இன்பத்தை விளைவிக்கும். ஓய்வு நேரங்களில் நாங்கள் கேட்ட பாடங்களை மீட்டும் படித்துச் சிந்தனை செய்து வைத்துக்கொள்வோம். பாடங்கேட்கும் காலமன்றிச் சிந்திக்கும் காலத்திலும் இவரை விட்டுப்பிரிவதற்கு மனமில்லாமற் பக்கத்திலிருந்தே மெல்லப் படித்து வருவோம். தம்மிடம் வருகிற தக்கவர்களோடு இவர் பேசிக்கொண்டிருக்கும்போது பல அருமையான விஷயங்களை நாங்கள் எளிதில் அறிந்துகொள்ளுவோம். நாங்கள் படித்த நூல்களிலிருந்து நல்ல பாடல்களை வந்தவர்களுக்குச் சொல்லிக்காட்டிப் பொருள் சொல்லும்படியும் செய்வார். அங்ஙனம் செய்துவந்தமையால் எங்களுக்குத் தமிழ்ப்பயிற்சியும், ஊக்கமும், கூச்சமின்றிப் பேசும் வழக்கமும், நாளடைவில் அதிகரித்து வந்தன.
அச்சுப் புத்தகங்கள் அக்காலத்துப் பெரும்பாலும் அகப்படா; ஆதலாற் படிக்கும் நூல்களை ஏட்டிலேயே எழுதிப் படித்து வந்தோம். அப்படி எழுதுவதற்கு முன்பு பனையோலைகளை வருவித்து வாரித் துளையிட்டுச் சேர்த்துப் புத்தகமாக்கி எங்களிடம் கொடுத்து எழுதச் செய்வார். ஓய்வு நேரங்களில் பழைய கவிஞர்களுடைய சரித்திரங்களை விளங்கச் சொல்லி ஒவ்வொரு சமயத்தில் அவர்கள் செய்த இனிய தனிப்பாடல்களைப் பொருளுடன் கூறி எங்களை எழுதிக்கொள்ளும்படி செய்வார்.
ஒரு தவசிப் பிள்ளை
இவரிடம் தவசிப்பிள்ளையாக உள்ள பஞ்சநதம் பிள்ளையென்பவர் இவரிடம் நெடுங்காலமாக இருந்து பணிவிடை செய்து வந்தவர். சிலவகையில் இவருடைய மனம் போல அவர் நடப்பதில்லை. அநாவசியமாக மாணவர்களைக்கூட்டி வைத்துக்கொண்டு இவர் கஷ்டப்படுகிறாரென்பது அவருடைய எண்ணம். படித்தவரிடத்திலாவது படிக்கும் மாணாக்கரிடத்திலாவது சிறிதும் அன்பே இல்லாதவர். முகந்திரிந்து நோக்கலும் கடுஞ்சொற் சொல்லுதலும் அவரிடம் இல்லாத வேளை பெரும்பாலும் இராது. நாங்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றித்தான் செல்ல வேண்டும். இல்லாவிடின் ஏதாவது ஒரு கோளைச் சொல்லி இவர் மனத்தை வேறுபடுத்திவிடுவார். திருவாவடுதுறை மடத்துத் தவசிப்பிள்ளை யாதலாலும் பல வருடங்களாக இருந்து வருபவராதலாலும், அவரை இவர் கடிந்து பேசுவதில்லை. இவருடைய நண்பர்களிடம் அவர், “இவர் மாணாக்கர்களிடம் எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்? தொண்டைத் தண்ணீர் வற்றும்படி கத்துவதனால் என்ன லாபம்? இந்த மாணாக்கர்களால் ஏதாவது பயனுண்டா? ஒரு தம்படிக்குக்கூடப் பிரயோசனமில்லையே. காலத்தை வீணாகப் போக்கிக் கொண்டேயிருக்கிறார்” என்று அடிக்கடி சொல்வதுண்டு. அவர்களால் இவரும் கேள்வியுற்று மெளனமாயிருந்து விடுவது வழக்கம். அவர் எது செய்தாலும் இவர் பொறுத்துக் கொண்டேயிருப்பார். நாங்கள் இரவில் படிக்கும்பொழுது அங்கே படிப்பதற்காக வைக்கப்பெற்றுள்ள விளக்கை அவர் விரைவாக வந்து சமையற்கட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார். இவர், “எடுக்க வேண்டாம்; படிக்கிறவர்களுக்கு இடையூறு செய்வது தவறு” என்று மென்மையாகச் சொல்லி அவருடைய வேகத்தைத் தணிப்பார். அவரைப் போகச் செய்துவிட்டுப் பின்பு தம்பால் உள்ளவர்களில் இன்னார் இன்னாரிடம் இன்ன இன்னவாறு பழக வேண்டுமென்றும், இன்ன இன்ன மாதிரி பேச வேண்டுமென்றும், இல்லையாயின் எங்களுடைய நிலைமையை அறிந்துகொள்ளாமற் சிலர் துன்புறுத்தல் கூடுமென்றும், அச்செயல் தமக்கும் எங்களுக்கும் அதிக வருத்தத்தை யுண்டுபண்ணுமென்றும், ஆதலால் அவர்களுக்குப் பிரீதியுண்டாகும்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும் இவர் எங்களுக்குப் புத்தி புகட்டுவார். படிக்கப் போனவுடன் தவசிப்பிள்ளை தானேயென்று எண்ணி அவரை ஒருநாள் பஞ்சநதமென்று ஒருமையாக அழைத்தேன். அதனைக் கேட்ட இவர் அவர் போன பின்பு, “பஞ்சநதம் பிள்ளையென்று அழையும். அவனை அலட்சியம் செய்தால் ஏதாவது விபரீதத்தை விளைவித்து விடுவான்; பிறரைக்கொண்டும் துன்புறுத்துவான்” என்று அவரிடத்தும் ஏனையோரிடத்தும் நடந்துகொள்ள வேண்டிய முறையைத் தனியே எனக்குச் சொன்னார்.
உள்ளன்பு
நான் போகுங்காலங்களிலெல்லாம் கண்டவுடன், “ஆகாரம் ஆயிற்றா?” என்றும், “செளகரியமாக இருக்கிறதா?” என்றும் விசாரிப்பார். ஏதேனும் வேண்டியிருந்தால் வருவித்துக் கொடுப்பார். நான் ஆகாரம் பண்ணிக்கொண்டு வருவதற்கு நேரமானால் என்ன காரணத்தால் வரவில்லையோ வென்று கவலையுற்று நான் வரும் வழியையே நோக்கிக்கொண்டு தெருத்திண்ணையில் இருந்ததை நான் சிலமுறை கண்டிருக்கிறேன்.
திருக்குற்றால யமக அந்தாதி படித்தது
இவராற் பார்க்கப்படாத நூல்கள் எவையேனும் கிடைக்குமாயின் அவற்றைத் தாமே வைத்துக்கொண்டு நன்கு ஆராய்ந்து படித்து வருவார். விளங்காத விஷயங்களை யார் சொன்னாலும் விருப்பத்தோடு கேட்டு அறிந்து கொள்வார்; விஷயம் தெரிய வேண்டுமென்னும் நோக்கத்தையன்றி, இன்னாரிடம் கேட்கலாம், இன்னாரிடம் கேட்கக் கூடாதென்னும் வேற்றுமை இவர்பால் இல்லை. அப்பொழுது இவர் நூதனமாகக் கிடைத்த திருக்குற்றால யமகவந்தாதிச் சுவடியைத் தாமே கையில் வைத்துப் படித்துப் பொருளாராய்ந்து வந்தார். தலசம்பந்தமாக அதிலே வந்துள்ள சண்பகக் கற்பக விநாயகர், இலஞ்சிக்குமாரர், சங்கவீதி, சங்கக் கோயில் முதலிய விஷயங்களை மாயூரத்திற்கு வந்து தங்கியிருந்த இவருடைய மாணாக்கரான திருநெல்வேலிச் சந்திரசேகரம் பிள்ளை யென்பவரிடம் வினவி அறிந்து கொண்டார். அவரும் அன்புடன் தெளிவாகச் சொல்லிவந்தனர். அந்த அந்தாதியின் நடையைக் குறித்து அடிக்கடி இவர் பாராட்டுவதுண்டு.
என் பெயரை மாற்றியது
என்னுடைய இயற்பெயர் வேங்கடராமனென்பது; அதுவே சர்மா நாமம். இவரிடம் என் தந்தையார் சொல்லியதும் வேங்கடராமனென்பதே. அப்பெயராலேயே என்னை அழைத்துவந்த இவர் சில தினங்களுக்குப்பின் ஒருநாள் என்னை நோக்கி, “வீட்டார் உம்மை அழைப்பது இந்தப் பெயராலேயா? அன்றி உமக்கு வேறு பெயருண்டோ?” என்று கேட்டார். நான், “வேங்கடராமனென்பது மூதாதையின் பெயராதலின் தாய் தந்தையர்கள் அவ்வாறு அழையாமல் சாமிநாதனென்பதன் திரிபாகிய ‘சாமா’ என்று அழைப்பார்கள்” என்றேன். “சாமிநாதனென்ற பெயரே நன்றாக யிருக்கிறது. இனி அப்பெயராலேயே உம்மை அழைக்கிறேன்!” என்று கூறி அன்றுமுதல் அப்பெயராலேயே அழைத்து வருவாராயினர். இவருடைய விருப்பத்தின்படி பிறரும் அங்ஙனமே செய்துவந்தார். அப்பெயரே நிலைத்துவிட்டது.
என் இசைப்பயிற்சியை நிறுத்தியது
நான் இவரிடம் படிக்கத்தொடங்கிய நாள் முதல் என் தந்தையாருடைய கட்டளையின்படியே ஒவ்வொரு தினத்தும் ஓய்வு நேரத்திற்சென்று அவ்வூரிலிருந்த முடிகொண்டான் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் ஸங்கீதம் கற்றுக்கொண்டு வந்தேன். நான் முன்னரே பயிற்சி பண்ணியிருந்த கீர்த்தனங்களை மறவாமலிருத்தற்கு இங்ஙனம் செய்தல் நலமென்று என் பிதா எண்ணினர். பாரதியாரும் அன்புடன் கற்பித்துவந்தார். அவர் இயற்றிய சில கீர்த்தனங்களும் பிற பெரியோர்கள் இயற்றிய சில பழைய உருப்படிகளும் எனக்கு அக்காலத்திற் பாடமாயின. பிள்ளையவர்களும் அவரும் அதிகப் பழக்கமுடையவர்களாகையால் எப்பொழுதேனும் சந்திக்கும்படி நேர்ந்தால் இருவரும் மனங்கலந்து சில நேரம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். ஒருநாட் காலையில் இருவரும் சந்தித்தபொழுது தம்மிடம் நான் படிக்க வந்திருப்பதாகவும் பாடல்களை இசையுடன் படிப்பதாகவும் அப்படிப் படிப்பதை ஒருநாள் வந்து கேட்க வேண்டுமென்றும் இவர் அவருக்குச் சொல்லவே அவர், “அந்தப் பையனுடைய தகப்பனார் ஸங்கீத வித்துவானாதலால் அவருக்கும் எனக்கும் பல நாளாகப் பழக்கம் உண்டு. அவனுக்கு ஸங்கீதப் பயிற்சி மேன்மேலும் பெருகும்படி கற்பிக்க வேண்டுமென்று என்னிடம் அவர் சொல்லிவிட்டுப் போனார். அவன் அந்தப்படியே என்னிடம் தினந்தோறும் வந்து சிக்ஷை சொல்லிக்கொண்டு போகிறான். சில கீர்த்தனங்கள் அவனுக்குப் பாடமாயிருக்கின்றன. தங்களிடம் பாடங்கேட்டு வருவதாகவும் சொன்னான்” என்று சொன்னதன்றி, “அந்தப் பையனைக் கவனித்துப் படிப்பிக்க வேண்டுமென்று நானும் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றனர்.
அப்பால் இவர் அவருடன் அதிகம் பேசாமல் அவரிடம் விடைபெற்று நேரே விரைவாக வீட்டிற்கு வந்து அங்கே படித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, “நீர் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் சென்று இசைப்பயிற்சி செய்து வருவதுண்டோ?” என்று கேட்டார். கேட்ட குறிப்பையறிந்து நான் மிகவும் அஞ்சி, “என்னுடைய தகப்பனாருக்கும் அவருக்கும் அதிகப் பழக்கம் உண்டு. இவ்வூரிலிருக்கையில் பாரதியாரிடம் சென்று ஸங்கீதத்தையும் விருத்தி பண்ணிக்கொள்ளும்படி அவர் சொன்னமையால் இதுவரையிற் கற்றவற்றை மறவாமலிருத்தற் பொருட்டுச் சென்று பயின்று வருகிறேன்” என்று விநயத்துடன் சொன்னேன். இவர், “நீர் அங்ஙனம் செய்து வருவதை நான் இதுவரையில் தெரிந்து கொள்ளவில்லை. இசையில் அதிகப் பழக்கம் வைத்துக்கொண்டால் இலக்கிய இலக்கண நூல்களில் நன்றாகப் புத்தி செல்லாது. நூல்களின் கருத்தை நன்றாக ஆராய்ந்து படிப்பதையும் அது தடுத்துவிடுமே” என்று சொன்னார். இவருடைய நோக்கத்தை அறிந்து மறுநாள் முதல் அம் முயற்சியை அடியோடே நிறுத்திக்கொண்டேன். பாரதியாரிடத்து வேறொன்றும் சொல்லாமல், “இங்கே வருவதற்கு எனக்கு ஓய்வு நேரம் இல்லை” என்று சொல்லிவிட்டு நேர்ந்த காலங்களில் அவரிடம் சாதாரணமாகப் பழகி வந்தேன்.
ஒரு மாணாக்கர் எண்ணெய் வாங்கி வந்தமை
ஒருநாள் எங்களுக்குக் காலைப் பாடமானவுடன் இவர் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதற்குச் சென்று ஒரு பலகையில் இருந்தார். எப்பொழுதும் பாடஞ் சொல்லுவது இவருக்கு வழக்கமாதலால், பாடங் கேட்பவர்கள் புஸ்தகமும் கையுமாக அருகில் வந்திருந்தார்கள். எண்ணெய் தேய்க்கும் வேலைக்காரன் உள்ளே சென்று சமையற்காரனைக் கேட்டபொழுது அவன் எண்ணெய் இல்லையென்றான். அயலில் நின்ற மாணாக்கர் ஒருவர் அதனையறிந்து விஷயம் இவருக்குத் தெரியாதபடி தம்மிடமிருந்த ரூபாயொன்றை எடுத்துக்கொண்டு காவிரியாற்றின் கரையோரத்திலிருந்த கடைத்தெருவிற்கு வேகமாக ஓடிச் சென்று எண்ணெய் வாங்கி வந்து சமையற்காரனிடம் சேர்ப்பித்துவிட்டு யாதும் அறியாதவர் போல் வந்து இருந்தனர். எண்ணெய் தேய்த்துக்கொள்ளவெண்ணி, ஆசனத்தில் இருந்தும் உடனிருந்தவர்களுக்கு வழக்கம் போலவே பாடஞ்சொல்லிக்கொண்டிருந்தமையால் எண்ணெய் வாராமையின் காரணத்தை இவர் அறிந்து கொள்ளவில்லை.
மூன்று சமஸ்யைகள்
பின் ஒருநாள் மாலையில் அனுஷ்டானம் செய்துவிட்டு வந்து வீட்டின் மேல்புறத் திண்ணையில் இவர் இருந்தார். கனகசபை ஐயர், சவேரிநாத பிள்ளை, நான் ஆகிய மூவரும் கீழ்புறத் திண்ணையின்கீழே வரிசையாக இவரை நோக்கிய வண்ணமாக நின்றோம். அப்பொழுது எங்களை நோக்கி இவர், “உங்களுக்குச் செய்யுள் செய்யும் பழக்கமுண்டா?” என்று கேட்டார். “உண்டு” என்றோம். “வெண்பாவின் ஈற்றடியைக் கொடுத்தால் ஏனை மூன்றடிகளையும் பாடி முடிப்பீர்களா?” என்று வினாவினார். “ஏதோ உழைத்துப் பார்க்கிறோம்” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சொன்னோம். சொன்னவுடன், “தேவா வெனக்கருளைச் செய்” என்பதைச் சவேரிநாத பிள்ளைக்கும், “சிந்தா குலந்தவிரச் செய்” என்பதைக் கனகசபை ஐயருக்கும், ‘கந்தா கடம்பாகு கா” என்பதை எனக்கும் ஈற்றடிகளாக அளித்தார். நாங்கள் மூவரும் ஏனை மூன்றடிகளையும் முடித்து முறையே தெரிவித்தோம். கேட்ட இவர், “இப்படியே பாடிப் பழகுவது நல்லது. பாடப்பாட உங்களுக்கு நல்ல வாக்கு உண்டாகலாம்; ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது ஒளவையார் திருவாக்கன்றோ?” என்று கூறிவிட்டு என்னை நோக்கி, “உமக்குக் கொடுத்த இறுதி அடியை வைத்து நானும் ஒரு செய்யுள் செய்து முடித்திருக்கிறேன்” என்று,
(வெண்பா) *2 “பாடப் படிக்கப் பயனா நினக்கன்பு கூடக் கருணை கொழித்தருள்வாய் - தேடவரும் மந்தா னிலந்தவழு மாயூர மாநகர்வாழ் கந்தா கடம்பாகு கா”
என்ற செய்யுளைச் சொன்னார். நாங்கள் செய்த மூன்று பாட்டுக்களும் எனக்கு ஞாபகம் இல்லை. அதுமுதல் நாங்கள் செய்யுள் செய்யும் முயற்சியை மேற்கொண்டு வந்தோம்.
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்
தமிழில் நல்ல அறிவுண்டாக வேண்டுமென்று கருதி நாள்தோறும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை முற்றும் பாராயணம் செய்துவருவது எனக்கு வழக்கமாக இருந்தது. அதனைக் கண்ட இவர் ஒருநாள், “இப்படியே நாள்தோறும் முற்றும் பாராயணம் செய்துவந்தால் உமக்குச் சிரமமாக இருக்கும். மற்றவர்களோடு சேர்ந்து படிப்பதற்கும் இயலாது. முருகக்கடவுளை வழிபடுதல் தமிழ்ப் பயிற்சிக்கு மிகவும் நல்லதே. அப்பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் இரண்டு பாடல்களை மட்டும் மனனம் செய்துகொண்டு வந்தாற் போதும்” என்றார். அது தொடங்கி அவ்வண்ணமே செய்து வருவேனாயினேன்.
பெரிய புராணப் பாடம்
சில மாதங்களுக்குப் பின் இவர்பால் விடைபெற்றுக்கொண்டு சொந்த ஊருக்குப் போனேன். அங்கே என் தகப்பனாரும் பிறரும் இவர்பால் நான் பாடம் கேட்டுவரும் முறைகளையும் இவருடைய குணவிசேஷங்களையும் நான் விவரமாகச் சொல்லக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார்கள். அங்கே சில தினமிருந்து திரும்பிவந்தேன். அதற்குள் மாயூரங்கோயிற் கட்டளைப்பணியை அப்போது நடத்தி வந்த ஸ்ரீ பாலசுப்பிரமணியத் தம்பிரானென்பவரும் வேறு சிலரும் இவரிடம் முதலிலிருந்து பெரிய புராணத்தைப் பாடங்கேட்டு வருவாராயினர். நான் திரும்பி வந்த தினத்தில் தொடங்கிய பாடம் எறிபத்த நாயனார் புராணம். என்னைக் கண்டவுடன் அவர்களுடன் சேர்ந்து அப்புராணத்தைக் கேட்டு வரும்படி இவர் சொன்னார். அங்ஙனமே செய்து வந்தேன். என் தகுதிக்கு அந்நூல் எத்தனையோ மடங்கு மேற்பட்டதாக இருந்தாலும், இவர் பாடஞ் சொல்லும் பக்குவத்தால் அந்நூற் செய்யுட்கள் எளியனவாகவே இருந்தன. அவற்றிலுள்ள நயங்களும் புலப்பட்டன.
கண்ணப்ப நாயனார் புராணம்
இவ்வாறு பாடம் நடந்து வருகையில் ஒருநாள் திருவாவடுதுறை மடத்துக் காறுபாறாக இருந்த ஸ்ரீ கண்ணப்பத் தம்பிரானென்பவர் அங்கே வந்தார். தற்செயலாக அன்றைப்பாடம் கண்ணப்ப நாயனார் புராணமாக இருந்தமையால், பெயரொற்றுமை பற்றி அதனை அவர் முன்னிலையில் படித்து அன்றைத் தினமே பூர்த்திசெய்து விடவேண்டுமென்ற எண்ணம் இவருக்கும் பிறர்க்கும் உண்டாயிற்று. அக்குறிப்பையறிந்து விரைவாகப் படித்து நாங்கள் பொருள் கேட்டுக்கொண்டு வந்தோம். கண்ணப்ப நாயனாருடைய அன்பின் மிகுதியையும் அவர்பால் தமக்குள்ள அருளின் மிகுதியையும் ஸ்ரீ காளத்திநாதர் சிவகோசரியாருடைய கனவிற் கட்டளையிடும் பகுதியாகிய செய்யுட்கள் நாங்கள் படிக்கும் அச்சுப் புத்தகங்களுள் ஒன்றிலேனும் காணப்படவில்லை. உடனே இவர், “அங்கே ஐந்து பாடல்கள் இருக்க வேண்டுமே; அவை நிரம்ப நன்றாக இருக்கும். உங்கள் புஸ்தகத்தில் அச்செய்யுட்களில்லாமை வியப்பை உண்டு பண்ணுகின்றது” என்று சொல்லித் தம்முடைய புத்தகப் பெட்டியின் திறவுகோலைக் கொடுத்து அதைத் திறந்து பெரிய புராண ஏட்டுப் பிரதியை எடுத்துக்கொண்டு வரும்படி என்னை அனுப்பினார். உடனே சென்று அதை எடுத்து வந்தேன். பிரித்து அந்த இடத்தைப் பார்க்கையில் மிக்க அருமையான ஐந்து பாடல்கள் அப்பிரதியிற் காணப்பட்டன. அவை, “பொருப்பினில்”, “உருகியவன்பு”, “இம்மலைவந்து”, “வெய்யகனல்”, “மன் பெருமா” என்ற முதற்குறிப்புடையவை. அவற்றைப் படிப்பிக்கச் செய்து கேட்பித்து எல்லாருக்கும் மகிழ்வளித்தார். கேட்டவர்கள் இவருடைய ஞாபக சக்தியை மிகவும் பாராட்டினார்கள்.
‘இன்று நெய் கிடைத்தது’
அப்புராணத்தைப் படித்து முடிக்கும்பொழுது இரவு 15 நாழிகைக்கு மேலாயிற்று. மடத்திலே ஆகாரம் பண்ணிக்கொள்ளும்படி தம்பிரான்மார்கள் சொன்னமையால் இவர் அவ்வண்ணமே செய்தார். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தம் வீட்டிற்கு இவர் செல்லும்பொழுது நானும் உடன் சென்றேன்; இவர் என்னைப் பார்த்து, “மடத்தில் ஆகாரம் பண்ணினமையால், இன்று நெய் கிடைத்தது” என்றார்; அதற்கு முதன் மூன்று நாளும் நெய்யில்லாமல் இவர் உண்டதை நான் அறிந்தவனாதலால் என்னிடஞ் சொன்னார். இவர்பால் அன்பும் மதிப்புமுள்ளவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்தும் இவருடைய குடும்பநிலைமையை ஒருவரும் கவனிக்கவில்லையே யென்ற எண்ணம் அப்பொழுது உண்டாகி என்னை மிக வருத்தியது. அந்த வறுமை நிலையை ஒருகாலத்தும் இவர் புலப்படுத்தினாரல்லர். சிறந்த கல்விமான்களுக்கு வறுமைத் துன்பமுண்டென்பதை,
(கட்டளைக் கலித்துறை) “கொடுக்கச் சடைவற்ற வுன்னையும் பாடிக் குலாமர்முன்போய் இடுக்கட் படுவ தழகல்ல வேயென்னை யீடழிக்கும் நடுக்கத்தை யாற்றப் படாதுகண் டாயெந்த நாளுமுண்ண உடுக்கக் குறைவருத் தாதேகுற் றாலத் துறைபவனே”
என்னும் அருமைச் செய்யுளாலறியலாகும். உடனிருந்தமையால், இதைப் போன்ற சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் அறிந்திருப்பதுண்டு.
சடகோப ஐயங்காரைப் பாராட்டியது
ஒரு தினம் நான் உடன் படிப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்கையில், அரியலூர்ச் சடகோபையங்கார் தம்மிடம் வருவோரிடத்துச் சமயோசிதமாகச் செய்யுட்களைக் கூறி அவற்றிற்குப் பொருள் சொல்லி உபந்யஸித்தல் நயமாக இருக்குமென்றும் அக் கேள்வியாலும் என் மனம் தமிழ்ப்பாஷையில் ஈடுபட்டதுண்டென்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே வந்த இவர், “சடகோபையங்காரைப் பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்க, உடனிருந்த ஒருவர் நிகழ்ந்ததைச் சொன்னார். அப்பொழுது இவர் என்னைப் பார்த்து, “அவர் சொல்லியவற்றுள் ஏதாவது ஒரு செய்யுளைச் சொல்லி அதற்கு அவர் சொல்லிய விசேஷ அர்த்தத்தையும் சொல்லும்” என்றார்.
“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவற் கேற்ப நயம்பட வுரைத்த நாவும் தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமுங் களத்தே போட்டு வெறுங்கையோ டிலங்கை புக்கான்” (கம்ப. கும்பகருணன். 1)
என்ற பாடலைச் சொல்லிவிட்டு நான் அதற்கு அவர் சொல்லியபடி முதலிலிருந்தே பொருள் சொல்லத் தொடங்கினேன். இவர், மார்பு முதலியவற்றைக் களத்தில் அவன் போடாமலிருக்கையில் அவற்றை அவன் போட்டுவிட்டதாகச் சொல்லிய பகுதிகளுக்கு மட்டும் பொருளை விளக்கி இன்னவற்றைச் சொன்னாரென்பதைச் சொன்னாற் போதும்” என்றார். “இராவணன் மார்பில் தைத்திருந்த திக்குயானைகளின் கொம்புகள் அவன் மார்பில் அனுமான் குத்திய பொழுது அவன் முதுகுவழியே உதிர்ந்து போனமையால் மார்பின் வன்மையையும், வேலால் மூர்ச்சித்து விழுந்த இலக்குவனை அவன் தூக்கிக்கொண்டு செல்வதற்கு மிக முயன்றும் எடுக்க முடியாமல் சலித்து நின்றமையால் தோள்வலியையும், ‘ஊர்க்குப் போய்ப் படைகளைத் தொகுத்துக்கொண்டு யுத்தம் பண்ணுதற்கு நாளை வர எண்ணுகின்றனையா? சீதையை விட்டு விடுதற்கு எண்ணுகின்றனையா? உன் கருத்து யாது?’ என்று இராமன் கேட்ட பொழுது அவன் மெளனமாகவே இருந்துவிட்டமையின் நாவின் வன்மையையும், அவன் கிரீடத்தை இராமபாணம் வீழ்த்திவிட்டமையால் கிரீடத்தையும், ‘நல்ல சமயத்தில் நம்மை உபயோகியாமல் இருந்து விட்டானே; இனி இவனிடமிருப்பதில் யாதும் பயனில்லை’ என்று அவனை இகழ்ந்து, ஈசன் அளித்த கொற்றவாள் அவனை நீங்கி அவரிடஞ் சென்று விட்டமையால் வாளையும் இழந்தானென்றும், மார்பு, தோள், நா என்பவை ஆகு பெயர்களென்றும் அவர் சொன்னதாக எனக்கு ஞாபகமிருக்கிறது” என்று சொன்னேன். அவர் கூறிய பொருள் பொருத்தமாக இருக்கிறதென்று இவர் பாராட்டியதோடு அவரைத் தாம் முன்னமே அறிந்திருப்பதாகவும் சொன்னார்.
ஆனிக் குருபூஜைக்குத் திருவாவடுதுறை சென்றுவந்தது
இங்ஙனம் சில நாட்கள் சென்றன; திருவாவடுதுறையில் நடக்கும் *3 ஆனிக் குருபூஜைக்கு வர வேண்டுமென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களுடைய திருமுகம் இவருக்குக் கிடைத்தமையால் மாயூரத்திலிருந்த சில அன்பர்களுடன் இவர் திருவாவடுதுறைக்குச் சென்றார். நாங்கள் மட்டும் இவர் சொல்லியபடி மாயூரத்திலிருந்தே பழைய பாடங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். சில தினம் இவர் திருவாவடுதுறையில் இருந்துவிட்டு மாயூரம் வந்து வழக்கப்படியே எங்களுக்குப் பாடஞ்சொல்லி வந்தார். ஒரு நாள் பாடஞ் சொல்லிவருகையில் அங்கே வந்த ஒரு கனவானிடம் தாம் திருவாவடுதுறைக்குப் போன காலத்தில் நிகழ்ந்த செய்திகளை இவர் கூறுபவராகி, ‘ஸந்நிதானம் திருவாவடுதுறையிலேயே வந்திருந்து பாடஞ் சொல்லும்படி கட்டளையிட்டது; சீக்கிரம் வர வேண்டுமென்று அங்கேயுள்ள குட்டிகளும் வற்புறுத்தியதுண்டு. அங்கே நான் போனால் இந்தப் பிள்ளைகள் பாடங் கேட்பதற்கும் பிறவற்றிற்கும் மிகுந்த செளகரியமாயிருக்கும்” என்று சொன்னார். அதைக் கேட்ட எங்களுக்கு மிக்க ஆறுதலுண்டாயிற்று. எனக்குமட்டும் ‘குட்டிகள்’ என்ற சொல்லுக்குப் பொருள் சரியாக விளங்காமையால் சிறு பெண்களென்று அர்த்தம் செய்துகொண்டு, ‘துறவிகளிருக்கும் மடத்தில் பெண் பாலாரிருப்பதற்கு நியாயமில்லையே. இருந்தாலும் அவர்களைப் படிப்பித்தற்கு இயலாதே’ என்று என்னுள் நினைந்து பக்கத்திலிருந்தவரை மந்தணமாக வினவத் தொடங்கினேன். அப்பொழுது அதனை அறிந்த இவர், “சிறிய தம்பிரான்களைக் குட்டிகளென்று சொல்லுவது மடத்து வழக்கம்” என்று சொன்னார்.
ஆறுமுகத்தா பிள்ளை பட்டீச்சுரத்துக்கு அழைத்தது
ஒரு நாள் பட்டீச்சுரம் ஆறுமுகத்தாபிள்ளை மாயூரம் வந்தார். இவரை அழைத்துச் சென்று தம்முடைய வீட்டில் வைத்திருந்து உபசரித்து இவருடைய உதவியால் தம்முடைய குடும்பத்திலுள்ள சில முட்டுப்பாடுகளைப் போக்கிக்கொள்ள எண்ணி அவர் வந்து அழைப்பதும், இவர் அடிக்கடி பட்டீச்சுரம் சென்று சில நாள் இருந்து வருவதும் உண்டு.
இரண்டு தினம் சென்ற பின்பு ஆறுமுகத்தா பிள்ளை பட்டீச்சுரம் வந்து சில தினம் இருக்க வேண்டுமென்று இவரைக் கேட்டுக் கொண்டார். அதற்கு இவர் இசைந்து மாணாக்கர்களில் என்னையும் தவசிப்பிள்ளை பஞ்சநதம் பிள்ளையையும் உடனழைத்துக் கொண்டு அவரோடு புறப்பட்டார்; இடையில் திருவாவடுதுறையில் தங்கி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து விடைபெற்றுச் செல்ல எண்ணினார்.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. படிப்பவர்களும் ஏனையோரும் இவர்களை, ‘ஐயா அவர்கள்’ என்று சொல்லுவது வழக்கம்.
2. இச்செய்யுளை அப்பொழுது கேட்டு மகிழ்ந்து மனனம் செய்திருந்த நான் என்ன காரணத்தாலோ மறந்துவிட்டேன். பல வருடங்களுக்குப் பின், திருவாவடுதுறையிலிருந்தவரும் இவர் மாணாக்கரும் சிறந்த கவிஞருமாகிய இராமலிங்கத் தம்பிரானென்னும் நண்பரால் அறிந்து அப்பால் நாள்தோறும் சொல்லி வருவேனாயினேன்.
3. இஃது அந்த மடத்தில் 15 – ஆம் பட்டத்திலிருந்து விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்குரியது; குருபூஜை நடக்கும் தினம் ஆனி மாதம் பூர நட்சத்திரம்.
$$$