-தஞ்சை.வெ.கோபாலன்

பாகம்-1; பகுதி- 10
சென்னை நகரில் நானா சாஹேப்
நானா சாஹேப் நேபாளத்துக்குப் போய்விட்டார் என்றுதான் வரலாற்றாசிரியர்கள் சொன்னார்களே தவிர, அதற்குப் பின் அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்பதையெல்லாம் சொல்லாமல், அங்கேயே இருந்து அவர் இறந்து போயிருக்க வேண்டுமென்று முடித்துவிட்டனர். ஆனால் நமக்குத் தெரியவரும் ஒரு செய்தியை இங்கு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
மகாகவி பாரதி சென்னையில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அவருக்கு பண்டிட் எஸ்.நாராயண ஐயங்கார் என்பவர் நண்பர். பாரதி காசியில் இருக்கும்போதே இந்த நாராயண ஐயங்காருடன் அங்கு தொடர்பு ஏற்பட்டிருந்தது. நாராயண ஐயங்கார் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல புலமை வாய்ந்தவர். ஆயுர்வேத சாஸ்திரம் நன்கு கற்றுணர்ந்தவர். தமிழ்நாட்டிலுள்ள பல ஆயுர்வேத வைத்திய சாஸ்திர நிபுணர்களும் இவருடைய சீடர்களாக இருந்தவர்கள். இந்த நாராயண ஐயங்கார் மகாகவி பாரதியாருக்கும் தனக்குமிருந்த பழக்கம் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்த கட்டுரை ‘தினமணி சுடர்’ 8-9-1956, 16-9-1956 ஆகிய இதழ்களில் இருந்து, பாரதி ஆய்வாளர் திரு ரா.அ.பத்மநாபன் அவர்களால் வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரையில் நாராயண ஐயங்கார் சொல்லும் இந்த செய்தி நானா சாஹேப் சம்பந்தப்பட்டது என்பதால் இங்கு அந்தப் பகுதியைத் தருகிறேன்.
பண்டிட் திரு நாராயண ஐயங்காரின் கட்டுரையின் பகுதி:
“அந்தக் காலத்தில் ஒரு நாள் சென்னை ‘தி ஹிந்து’ பத்திரிகையில் ஒரு விளம்பரத்தைப் படித்தேன். மைலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் ஒரு கனவான் தங்கியிருப்பதாகவும், அவர் சோப்பு, மெழுகுவத்தி போன்றவற்றை செய்யும் முறைகளைக் கற்றுக்கொடுக்கும் கைத்தொழில் நிபுணர் என்றும், விருப்பமுள்ளவர்கள் செலவின்றி அவரிடம் அத்தொழில்களைக் கற்றுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அந்த விளம்பரத்தில் காணப்பட்டது. என் தகப்பனார் இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு எனக்குத் தகவல் தராமலே சென்னைக்கு வந்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விலாசத்துக்குச் சென்று குறிப்பிட்ட அந்த நபரைச் சந்தித்து ஏதாவது கைத்தொழிலொன்றை கற்றுக்கொள்வது பற்றி விசாரிக்கச் சொன்னார். அப்போது நான் முத்தியாலுப்பேட்டை ஹைஸ்கூலுக்குச் சமீபத்தில் வசித்து வந்தேன். மைலாப்பூர் சென்று அந்த விலாசத்தைக் கண்டுபிடித்து குறிப்பிட்ட அந்த நபரிடம் சென்று விசாரித்துவிட்டு வரலாம் என்று அந்த இடத்தைத் தேடிப் போனேன். அந்த வீட்டின் எண் இப்போது எனக்கு நினைவில் இல்லை. ‘ஹிந்து’ பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்தால் தெரியலாம். அந்த வீட்டில் சென்று விசாரித்ததில், அங்கு தமிழ் தெரியாத ஒருவர் வந்து நான் என்ன காரியமாக வந்திருக்கிறேன் என்று கேட்டார். நான் பத்திரிகையில் கண்டபடி ஏதேனும் கைத்தொழில் கற்றுக் கொள்ளலாமென்று வந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர் அந்த விளம்பரம் கொடுத்த கனவான் மாலை ஏழு மணிக்குத் தான் வருவார் என்று கூறினார். அவ்விதமே நான் அன்று மாலை என் தகப்பனாரையும் அழைத்துக்கொண்டு ஏழு மணிக்கெல்லாம் அவர் வீட்டிற்குச் சென்றேன். அந்த கனவான் வசித்து வந்த வீட்டின் வீதி திண்ணை மிக குறுகலானது. கடப்பா கல்லால் கட்டப்பட்டது. நான் காலையில் சந்தித்த மனிதர் வந்து கதவைத் திறந்து பார்த்துவிட்டு, அந்தத் திண்ணையில் உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். சிறிது நேரம் கழிந்தபின் அவர் உள்ளேயிருந்து ஒரு வயோதிகரை அழைத்து வந்தார். வீட்டினுள்ளிருந்து வெளியே வரும்போது அந்த முதியவர் நிதானமாகத் தான் வந்தார். தலையில் மராத்திய பாணியில் பெரிய முண்டாசு கட்டியிருந்தார். சாதாரணமான நிஜாரும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். கால்களில் சடா போட்டிருந்தார். (‘சடா’ என்பது என்னவென்று தெரியவில்லை காலணியாக அல்லது காப்பு போன்ற ஏதாவது அணிகலனாக இருக்கலாம்). எங்கள் பக்கத்திலேயே ஒரு திண்ணையில் அவரும் உட்கார்ந்தார். தெரு வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் அங்கு இல்லை. சரீரம் மெலிந்து சுமாரான உயரத்துடன் காணப்பட்டார். அந்த இருட்டு நேரத்தில் வேறொன்றும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் ஆங்கிலத்தில் தான் பேசினார். உரத்த குரலில் பேசியிருக்கலாம். ஆனால் அவர் மெல்லிய ரகசியமான குரலிலேயே பேசினார். வெகு நிதானமாகப் பேசினார். சோப்பு செய்வது, மெழுகுவத்தி செய்வது போன்ற எதையோ தான் அவர் பேசினார். ஆனால் அவர் பேச்சில் திட்டவட்டமாக எதுவும் இல்லை. அவர் பேசிய விதத்திலிருந்து அந்த கைத்தொழில் பற்றி எதுவும் தெரிந்தவரா அல்லது கற்றுக் கொடுக்கத் தான் தெரியுமா என்பது தெரியவில்லை. ஒருக்கால் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றப் பார்க்கும் யாரோ ஒரு வடதேசத்தவர் என்று கருதி, இது ஒன்றும் வேண்டாம் என்று வீட்டுக்குத் திரும்பிவிட்டோம். அதற்குப் பிறகு பாரதியாரை நான் சந்தித்த போது இந்த விளம்பர ஆசாமியைப் பற்றிச் சொன்னேன். அதைக் கேட்டுச் சிரித்துவிட்டு பாரதியார் சொன்னார், “என்னிடம் சொல்லாமல் ஏன் மைலாப்பூர் போனீர்? அந்த கனவான் யார் என்பது உமக்குத் தெரியுமா? அவர் சோப்பும், மெழுகுவத்தியும் கற்றுக் கொடுக்கவா இங்கு வந்திருக்கிறார்? அவருக்கு அவை பற்றி என்ன தெரியும்? வெடிகுண்டைப் பற்றிக் கேட்டிருந்தால் அவர் விவரமாகச் சொல்லியிருப்பார்” என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. ரகசியமாக அந்தக் கனவானைப் பற்றி பாரதியாரிடம் கேட்டேன். அதற்கு பாரதியார் சொன்னார், ‘அவர்தான் நானா சாஹேப், வடநாட்டில் நடந்த சிப்பாய் கலகத்தில் முன்னணியில் இந்தவர். சர்க்காரிடம் பிடிபடாமல் இருக்க தலைமறைவாக இருந்து வருகிறார்’ என்று சொன்னார். இதைக் கேட்ட பிறகு மறுபடி ஒரு முறையாவது பகலில் அவரை சந்தித்துவிட வேண்டுமென்ற விருப்பம் உண்டாகியது. பாரதியாரிடம் கேட்டேன், அவரும் என்னை அவர் இருக்குமிடத்துக்கு அழைத்துப் போவதாக வாக்களித்தார். இரண்டு நாட்கள் கழித்து அது பற்றி பாரதியாரிடம் ஞாபகப்படுத்தினேன். அப்போது அவர், ‘நானா சாஹேப் ஊரை விட்டு திடீரென்று புறப்பட்டுப் போய்விட்டதாகவும், போலீசார் தம்மைப் பின்தொடர்வதாக அவருக்கு மனதில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது தான் அப்படி அவர் காணாமல் போகக் காரணம் என்றும்’ கூறினார். பின்னர் வேறொரு சமயம் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் சொன்னார். எனக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது.”
-இப்படி எழுதுகிறார் பண்டிட் நாராயண ஐயங்கார். இது நடந்தது சென்னையில், பாரதி சென்னையில் வசித்தபோது. நானா சாஹேப் தனது முதிய வயதிலும் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் தலைமறைவாகச் சுற்றித் திரிந்திருக்கிறார் என்பது இதன்மூலம் புலனாகிறது.
1857-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வங்காளத்தைச் சேர்ந்த பாரக்பூரில் இந்திய சிப்பாய் மங்கள் பாண்டேயால் தொடங்கி வைக்கப்பட்ட புரட்சித் தீ, அங்கிருந்து அம்பாலாவுக்கும், அங்கிருந்து தில்லிக்கும் பரவி, மீரட்டில் சிப்பாய்கள் ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்க, அந்த மாவீரர்கள் அங்கிருந்து தில்லிக்குச் சென்று அங்கு வெள்ளைக்காரர்களால் ஒதுக்கப்பட்டு செங்கோட்டையின் ஒரு ஓரமாக வசித்து வந்த கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவை இந்தியாவின் மன்னராகப் பிரகடனப்படுத்தினார்கள்.
இந்த வீரப் போராட்டத்தின் நாயகர்களாக இருந்தவர்கள், தாந்தியா தோபே, மெளல்வி அகமது ஷா, குமாரசிம்மன், ஜான்சி ராணி லக்ஷ்மிபாய், நானா சாஹேப் போன்ற மகான்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம். இன்றைய சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்கத் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த பெருமக்களை என்றும் நினைவில் கொள்வோம்.
அன்று இந்த முதல் சுதந்திரப் போர் (1857) பிரிட்டிஷ் அடக்குமுறைகளாலும், ராணுவ பலத்தாலும் அடக்கி ஒடுக்கப்பட்டது. வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர், அவர்கள் செய்த குற்றம் தேசபக்தி கொண்டிருந்ததுதான். இப்படி வீரர்கள் அழித்தொழித்த பின்னும் சுதந்திர தாகம் அடங்கியதா என்றால் இல்லை. அது மேலும் மேலும் வலுப்பெற்று எழுந்தது.
இந்தியர்களை மேலும் அடிமைகளாக வைத்திருக்க முடியாது எனக் கருதி ஆங்கிலேயர்கள் மெக்காலேயின் திட்டப்படி ஆங்கிலக் கல்வியை இந்தியர்களுக்குப் புகட்டி, இந்தியர்களுக்கும் வேலை கொடுத்து, மேன்மை தங்கிய மன்னரின் ஆங்கில ஆட்சிக்கு அவர்கள் பணிபுரிய வாய்ப்பினைக் கொடுத்ததன் மூலம் இனி வருங்காலங்களில் புரட்சிகளைத் தவிர்த்துவிடலாம் என பகல்கனவு கண்டனர்.
விளைவு? புதிய தலைமையில் புதிய எண்ணங்கள் தோன்றின. காங்கிரஸ் உருவாயிற்று. பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் போன்றோர் வடநாட்டிலும், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி போன்றோர் தென்னாட்டிலும் தோன்றினர். அவர்களின் வழித்தோன்றல்களாகப் பற்பல தலைவர்கள் உருவானார்கள்.
தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கெதிராகப் புதியதொரு அகிம்சை வழியில் போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியாவுக்கு வந்தார். கோபாலகிருஷ்ண கோகலேயின் வழிகாட்டுதல்படி இந்தியா முழுதும் சுற்றி, இந்திய மக்களின் நிலைமையைக் கண்கூடாகக் கண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கினார்.
அடுத்த முப்பது ஆண்டுகளில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா காந்தியாகி இந்திய விடுதலைக்குப் பல்வேறு போராட்டங்கள் மூலம் வழிவகை கண்டது மகத்தான வரலாறு.
இனி அடுத்து 1885-இல் தோன்றிய இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம் தொடங்கி வரலாற்றைத் தொடரலாம்….
(கர்ஜனை தொடர்கிறது…)
$$$
One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 1(10)”