தமிழ்

-மகாகவி பாரதி

 “இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும்” 

-மேற்படி சாட்டையடி வார்த்தைகள் மகாகவி பாரதியின் எழுதுகோலில் வெளிவந்தவை. காரணம் என்ன? படியுங்கள், தொடர்ந்து....

.

3 ஏப்ரில் 1916                                           ராக்ஷஸ பங்குனி 22

கல்கத்தாவிலிருந்து வெளியிடப்படும் ‘மாடன் ரெவ்யூ’ என்ற மாதப் பத்திரிகையின் தை-மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுதுபோக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் ஸ்ரீ நீலகண்டையர் ஒரு சிறிய கடிதமெழுதியிருக்கிறார். ஏற்கெனவே மேற்படி பத்திரிகையில் ஸ்ரீயதுநாத ஸர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து ஸ்ரீ ஐயர் தமது கருத்துக்களை வெளியிடுகிறார்.

கலாசாலையில் சரித்திரப் பாடங்களை இங்கிலீஷில் கற்றுக் கொடுப்பது பயனில்லாத வீண் தொல்லையாக முடிகிறதென்றும் தேச பாஷைகளிலே கற்றுக் கொடுத்தால் நல்ல பயன் விளையுமென்றும் ஸ்ரீ சர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட செய்திகளைச் சொன்னார். அதற்கு நமது திருநெல்வேலிப் பண்டிதர் சொல்கிறார்:- “பாஷைத் தொல்லை பெருந் தொல்லையாகவே இருக்கிறது. ஆனால் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக் கொடுப்பது அதிக பயன்படுமென்று சொல்வதற்கில்லை. எனது மாணாக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வழக்குப் பிழைகளும் நிறையச் செய்த போதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலீஷை நன்றாக எழுதுகிறார்கள். சரித்திர விஷயங்களை வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ் தான் தமிழைக் காட்டிலும் நன்றாகச் சொல்ல வருகிறது.”

இங்ஙனம் எழுதுகிற ஸ்ரீ நீலகண்டையரின் நிலைமையை நினைத்து நான் மிகவும் வருத்தப் படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை!! புதுமை!!!

மேலும் இவர் தமக்குத் தாய்மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப் போனார் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை. ஜப்பானியர், சீனர், நார்வேக்காரர், ஸ்விஸ் ஜாதியார், இத்தாலி தேசத்தார், ஹாலாந்துக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் நம்மை அறிவிலும் சாஸ்திரங்களிலும் பாஷைத் திறமையிலும் தாழ்வென்று நினைத்து வந்தார்கள். இப்போது தான் ஹிந்து ஜாதியாராகிய நாம் காட்டு மனிதரில்லை, வாலில்லாத குரங்குகளில்லை, நமக்குப் பாஷைகள் இருக்கின்றன; நமக்குள்ளே சாஸ்திர விற்பன்னர்கள் இருக்கிறார்கள்; கவிகள் இருக்கிறார்கள் என்று நம்மவரிலே சிலர் வெளியுலகத்தார் தெரிந்துகொள்ளும்படி செய்து வருகிறார்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தானத்து வகுப்புகளைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மிலே சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்புண்டாக்குகிறது.

என்னுடைய சொந்த அபிப்பிராயாத்தைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும், திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை.

இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸ்த்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s