-பத்மன்

கொன்றைவேந்தன்- 21
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
விளக்கம்:
இன்னல் வந்தபோதிலும் இளகிவிடாமல் உறுதியாகச் செயலாற்றுவது நமது செல்வத்தைப் பெருக்கும் என்கிறார் ஔவையார்.
கேடு என்பது கெடுதி, துயரம், இழப்பு, உடல்நோவு எனப் பல பொருள்களைக் குறிக்கும். இவை ஏற்படும்போது உறுதி குன்றிவிடக் கூடாது.
உறுதி என்பது கொண்டகொள்கையில் தளராமல் இருத்தல்ஆகும். இது மனஉறுதியை மட்டுமின்றி, அறஉறுதியையும் குறிக்கிறது. தொடர்துன்பம் வரும்போதுதான் மனம் துவளுதல், கொள்கையில் இருந்து பிறழுதல், அறத்தைக் கைவிடுதல், ஆண்டவனை நிந்தித்தல் ஆகியன தோன்றும். ஆகையால் அவற்றுக்கு இடம்தராமல் ஊக்கத்தோடு தொடர்ந்து இயங்குதல் நமக்கு ஆக்கத்தைத் தருவதால் இழந்ததை மீட்பதோடு புதிதாகவும் நமக்கு உடைமைகள் சேரும்.
உடைமை என்பது நமக்கே உரியவை ஆகுவது. அறிவுடைமை, பண்புடைமை, சொத்துடைமை, அருளுடைமை எனப் பல உடைமைகளுக்கு இது பொருந்தும்.
‘ஆக்கம்அதர்வினாய்ச் செல்லும்அசைவிலா
ஊக்க முடையா னுழை’
அதாவது தளராத உறுதி கொண்டவரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து ஆக்கம் வந்துசேரும் என திருவள்ளுவர் (குறள்- 594) உரைத்திருப்பதை இங்கு ஒப்புநோக்க வேண்டும்.
பக்திப்பூர்வமாகச் சிந்தித்தால், தொடர்துன்பங்கள் வந்தபோதிலும் உறுதியாக தெய்வம்தொழல், அந்த இறைவனையே நமது உடைமையாக்கி விடுவதை கைகூடச் செய்யும் என்றும் ஔவையார்உபதேசிக்கிறார்.
$$$
கொன்றைவேந்தன்- 22
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
விளக்கம்:
நமக்குக் கைவசமாகும் பல்வேறு பொருள்களில் உண்மையான பொருள் என்னவென்று பார்த்தால் அது கல்வி மாத்திரமே என்கிறார் ஔவையார்.
பொருள் என்பதன் பொருள், நமது பயன்பாட்டுக்கு உதவுவது. நமக்குப் பயனைத் தருகின்ற விஷயம் பொருள்ஆகும். ஆகையால் நாம் பொருள்படுத்த வேண்டிய, அக்கறை செலுத்த வேண்டிய விஷயமாகப் பொருள் இருக்கிறது.
ஆக, பொருள் என்றால் செல்வம் மாத்திரம்அல்ல. மேலும் ஜடப்பொருள் மாத்திரமல்ல, நுண்பொருள்களுமாகும். இப்படிப்பட்ட பல்வேறு பொருள்களிலே மெய்யான பொருள், ஒருவர் பெறுகின்ற தரமான கல்வி மாத்திரமே.
கல்விக்கு ஏன் ஔவையார் முக்கியத்துவம் தந்திருக்கிறார்? ஏனெனில் நமது செல்வம், உடைமை மாத்திரம் அல்ல அறிவு, ஞானம் ஆகியவையும் உறுதி பெறுவது கல்வியில்தான். பள்ளி, கல்லூரிகளில் போய்ப் படிப்பது மாத்திரமல்ல கல்வி. குருமுகமாக நாம் கசடறப் பெறுகின்ற எவ்வகை அறிவும் கல்வியே. கல்போல நம்மை உறுதியாக விளங்கச் செய்வதே கல்வி. அதற்கு அறிவும் வேண்டும்; பயிற்சியும் வேண்டும். ஆகையால்தான் அதற்கு ‘சிக்ஷை’ என்று பெயர். அதனைத் தகுந்த குருவிடம் இருந்து பெறுபவன் சீடனாகிறான்.
குரு என்றால் வழிகாட்டி. ஆச்சார்யர் என்றால் வழிநடத்துபவர். ஆசிரியர் என்றால் ஆசுகளை அதாவது குறைகளைக் களைபவர். ஆகவே தகுந்த ஆசான் மூலம் பெறுகின்ற அறிவும், பயிற்சியுமே கல்வி ஆகும். அந்தக் கல்வியே நம்மை வழிநடத்துகின்ற மெய்ப்பொருளாகும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் ஔவையார்.
‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை’
-என்று திருவள்ளுவர் (குறள்- 400) மொழிந்திருப்பதை ஒப்புநோக்க வேண்டும்.
இதையேதான் கெடமுடியாத, ஈடுஇணையற்ற சிறந்த செல்வமாகிய கல்வியே மெய்ப்பொருள் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 23
கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி
விளக்கம்:
அரசாட்சி செய்யும் அரசன் அன்றாட நாட்டு நடப்புகளை அறிந்துகொண்டு உரியவர்க்கு உரியநேரத்தில் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்கிறார் ஔவையார்.
கொற்றவன் என்ற சொல் அரசன், அரசாட்சி செய்பவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அதன் மிகச் சரியான பொருள் வெற்றியாளன். கொற்றம் என்றால் வெற்றி. கொற்றவை என்றால் வெற்றித் திருமகளான துர்க்கை. எனவே கொற்றவன் என்றிட வெற்றியாளன்.
வாழ்க்கையில் ஒருவர் வெற்றியாளராக வலம்வர வேண்டுமெனில், அவர் அறிந்துகொள்ள வேண்டியது பிறருக்கு உரிய நேரத்தில் உரிய உதவிகளைச் செய்தல் என இதற்குப் பொருள் கொள்ளலாம். அனைவருக்கும் உதவி செய்பவன் வெற்றியைத் தவிர வேறு எதனைப் பெறுவான்?
ஔவையின் இந்த அறிவுரை ஆட்சியாளருக்கு என எடுத்துக்கொள்ளுதலும் தகுமே. சிறந்த ஒரு ஆட்சியாளன் என்பவன் அடக்கி ஆளுபவன் மட்டுமல்ல, அன்போடு பேணுபவனும் ஆவான். எனவே, ஒரு சிறந்த ஆட்சியாளன் அறிய வேண்டியது, தனது ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்குத் தகுந்த நேரத்தில் தகுந்த உதவிகளைச் செய்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.
இதையே திருவள்ளுவர்,
‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்’
-என ஒரு குறளிலும் (குறள்- 582),
‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்’
-என மற்றொரு குறளிலும் (குறள்- 388) எடுத்துரைத்துள்ளார்.
எல்லோருக்கும் எக்காலத்திலும் நிகழ்பவை அனைத்தையும் திறமையாக அறிய வேண்டியது அரசனின் கடமை, இவ்வாறு அறிந்துகொண்டதை வைத்து மக்களுக்குத் தேவையானவற்றை முறையாகச் செய்து காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு இறைவன் போன்றவனாக மதிக்கப்படுவான் என திருவள்ளுவர் இந்த இரண்டு குறள்களில், நான்கு அடிகளில் விளக்கியுள்ளார்.
அக்கருத்துகளை ஒரேயடியாக, ‘கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி’ என மிக எளிமையாகவும் வலிமையாகவும் மொழிந்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 24
கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
விளக்கம்:
பிறரைப் பற்றிக் கூறப்படும் கோளுக்குச் செவிமடுக்கும் குறுகிய மனப்பான்மையானது காற்றின் உதவியால் வேகமாகப் பரவிடும் நெருப்பைப்போல நம்மை அழித்துவிடும் என எச்சரிக்கிறார் ஔவையார்.
இதற்குப் பொருள் சொல்லும் பலரும், கோள்மூட்டி கலகம் செய்பவன் காதிலே கோள் சொல்வது காற்றுடன் கலந்த நெருப்பைப் போன்றதாகும் எனக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. அவ்வாறெனில் மற்றவர் செவிகளில் நாம் கோள் சொல்லலாமா? எவ்வகையிலும் புறங்கூறல் அறமா?
ஆகையால் கூர்ந்துநோக்க வேண்டும். குறளை என்றால் குறுகிய எனப் பொருள். கோள்செவி என்பது கோளுக்கு, புரளிக்கு இடம்கொடுக்கும் செவி எனப் பொருள்படும். காற்றுடன் நெருப்பு என்பது ஓர் எச்சரிக்கை. பிறர் மீதான கோபம், சந்தேகம், வெறுப்பு, பொறாமை போன்றவை நமது மனத்தின் ஓரத்தில் எங்காவது சிறுபொறிபோல ஒளிந்து கொண்டிருக்கும். அதனை இந்தக் கோள் ஆனது ஊதிப் பற்றவைத்து நாசம் விளைவித்துவிடும்.
உதாரணத்துக்கு, கூனியின் கோளுக்குச் செவிமடுத்ததால்தான் கைகேயி பெருமை இழந்தாள். சகுனியின் கோள்களுக்குச் செவிகொடுத்ததால் கௌரவர்கள்அழிந்தனர்.
கோளுக்கு இடம்கொடாமல் இருந்திருந்தால் அவர்களது உள்ளத்தின் பொறாமைத்தீ காலப்போக்கில் தானாகவே அவிந்து போயிருக்கும்; இடம்கொடுத்ததால் காட்டுத்தீயாக மாறி நாசம் விளைவித்தது.
ஆகையால்தான், நெருப்பை ஊதி எரியவைக்கும் காற்றைப் போன்ற கோளுக்குச் செவிமடுத்தல் என்ற குறுகிய மனப்பான்மை வேண்டாம் என ஔவையார் எச்சரிக்கிறார்.
$$$
கொன்றைவேந்தன்- 25
கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
விளக்கம்:
பழிசொல்லிப் புறம்பேசிக் கொண்டிருந்தால் எல்லோருடைய பகையையும் சம்பாதிக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார் ஔவையார்.
குறையிருப்பின் இதமாக எடுத்துரைப்பது வேறு. எல்லா விஷயத்திலும் குறை கண்டுபிடித்து எல்லோரையும் பழிசொல்லித் திரிவதென்பது வேறு. இவ்வாறு புறம் பேசுபவர் அனைவருக்கும் விரைவில் பகைவராகி விடுவர்.
சமூக வலைதளங்களில்முக்கியமாக வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற குறுஞ்செய்திகள் கோலோச்சும் இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமான அறிவுரைஇது. ஆட்சியாளர்களை மட்டுமல்ல, அக்கம்பக்கத்து வீட்டாரைக்கூட விட்டுவைக்காமல் பழிதூற்றும் செயல்கள் குறுந்தகவல்களில் கொடுந்தகவல்களாய்ப் பரவி வருகின்றன. இதுபோன்ற பழிப்பேச்சுகள் பகையை வளர்த்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
புறங்கூறுதல் என்பது பிறரின் துன்பத்தில் மகிழும் குரூரத்தின் வெளிப்பாடு. அது ஒருவித மனநோய். பொறாமையில் பிறந்த பிள்ளை. வெறுப்பின் வேறு வடிவம். இயலாமையில் முளைக்கும் இழிசெயல்.
புறம்பேசுதலை முதலில் ஒருசிலர் ரசிப்பதைப் போலத் தோன்றினாலும், அவ்வாறு ரசிப்பதுபோலத் தோன்றுபவர்கூட உள்மனதில் நம்மைப்பற்றி இவன் பிறரிடம் என்னென்ன சொல்லியிருப்பானோ என்றுதான் எண்ணுவர். அவர்களும் இதுபோன்ற நபர்களை தங்களது எதிரியாகவே காண்பர்.
எனவே, பிறரைப் பழிதூற்றுபவன் எளிதில் பெரும்பகைக்கு ஆளாகிறான். இதைத்தான் இந்த ஒற்றைவரியில் ஓங்கி உரைத்துள்ளார் ஔவையார்.
$$$