-தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இந்தியா ஒரு வளரும் நாடு; நாளும் வளர்ந்து வரும் நாடு. பல துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் சாதனையாக விளங்குகின்றது. ஆயினும் முன்னேற்றம் முழுமை பெறவில்லை. முழுமை பெறாதது மட்டுமல்ல, முழுமை பெறுமா என்ற ஐயம் தோன்றுகிறது. ஏன்?
வளர்ச்சி, மாறுதல்கள் என்பன பிரச்னைகளுக்குரியன தான்! முரண்பாடுகளுக்கிடையில் தான் முன்னேற்றம் நிகழும்; நிகழ வேண்டும். ஒரு வளரும் நாட்டுக்குரிய பிரச்னைகள் இந்தியாவுக்கும் உள்ளன. இது இயற்கை.
ஆனால், இப்பிரச்னைகளுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வு காண்பார்களா? அல்லது பிரச்னைகள் அவர்களை ஆட்கொண்டு துன்பங்களைத் தொடரச் செய்யுமா? இதுவே இன்றைய இந்திய இளைஞர்களின் முன்னுள்ள கேள்வி.
இன்று இந்தியாவில் கல்வி வளர்கிறது. ஆயினும், வளர்ந்து வரும் கல்வி அகலமாகிறது; ஆழமாக இல்லை. புத்தகப் படிப்பாக அமைகிறது; புத்தியைக் கூர்மைப்படுத்தவில்லை. சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் ஆன்மிகக் கல்வி அமையவில்லை.
கல்வியை அறிவாக மாற்றி ஆளுந்திறமை வழங்கப் பெறவில்லை! ஏன், சுதந்திரமாக வாழவே இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படவில்லை; பயப்படுகிறார்கள்!
தற்சார்பான வாழ்நிலைகளிலும் ஆர்வம் இல்லை. ஏன்? பிறந்து மொழி பயிலத் தொடங்கிய காலம் முதல் இளைஞர்கள் பெறும் கல்வி எதிர்மறைக் கல்வியே!
இதனை சுவாமி விவேகானந்தர், “இளமையிலிருந்து நாம் பெறுவது எதிர்மறையான கல்வி; தவறான கல்வி; நம்மை நாம் உதவாக்கரைகள் என்றே கற்று வருகிறோம்” என்று கூறுகின்றார்.
ஆம்! நாம் உடன்பாட்டுக் கல்வியைப் பெற்றதே இல்லை! நமக்கு நமது இளைஞர்களுக்குத் தெரிந்திருப்பது எல்லாம் பலவீனமே!
நமது கல்விமுறை, நமது நாட்டுச் செல்வந்தர்களின் உதவும் பாங்கு, நம்முடைய அரசுகள் நமது பலவீனத்தை அணுகும்முறை நமக்குச் சாதகமாக இல்லை!
இன்றைய இளைஞர்கள் நாளையத் தலைவர்கள்! ஆனால், தலைமைக்குரிய ஆளுமையுடன் – தன்னம்பிக்கையுடன் இளைஞர்கள் வளர்க்கப்படுகிறார்களா?
சுவாமிஜி, “பிரச்னைகளுக்குத் தீர்வு காண சிரத்தை வேண்டும்” என்று நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.
நாம் வேண்டுவது – நமது இளைஞர்களுக்கு வேண்டுமென விரும்புவது – முதலில் அவர்கள் மனிதர்களாக வேண்டும் என்பது தான்!
“மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? எனவே மனிதர்களை உருவாக்குங்கள்” என்றார் விவேகானந்தர். நமது நாட்டு மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் இளைஞர்கள்! ஆனால் இவர்களுள் எத்தனை பேர் மனிதர்கள்?
நம் பல்கலைக்கழகங்கள், பட்டதாரிகளை உருவாக்குவது என்னவோ உண்மை. அதிலும் முழு வெற்றி இல்லை! இருப்பினும் நமது நாட்டில் பெரும்பான்மையினர் எழுத்தறிவற்றவர்கள்! படித்தவர்களோ, மூடத்தனத்திலேயே தடம் மாறாமல் வாழ்கிறார்கள்!
அரசு என்ன செய்கிறது? ‘நன்னடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே! ‘ என்ற புறநானூற்று வரிக்கும் இன்றைய நடைமுறைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
எங்கும் களியாட்டத் தன்மை உள்ள பொழுதுபோக்குத் திரைப்படங்கள்! பரிசுச் சீட்டுகள்! மனிதனை மிருகமாக்கும் போதைப் பொருள்களின் புழக்கம்! வெற்று விவாதங்கள்! சந்தைப் பேச்சுகள்! கலகங்கள்!
இவை யாவும் மனிதனை உருவாக்கும் அடையாளங்களா? அல்லது களங்கங்களா? அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள்! “முதலில் மனிதனை உருவாக்குங்கள்!” என்றார் சுவாமி விவேகானந்தர்.
சுவாமிஜி ‘சிரத்தை’ என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார்! ‘சிரத்தை’ என்ற சொல்லுக்கு அக்கறை என்று பொருள். இன்று சிரத்தையுடன் அக்கறையுடன் கூடிய வாழ்க்கை எங்கிருக்கிறது? யாரிடமிருக்கிறது? ஏனோதானோ என்று வாழ்கிறார்கள். எந்த ஒன்றிலும் அழுந்திய எண்ணம் இல்லை! ஆழங்கால்பட்ட முயற்சி இல்லை!
மீண்டும் சுவாமி விவேகானந்தர் கேட்கிறார். “சிரத்தையில்லாமல் எப்படி மனிதன் உருவாக முடியும்?” என்று!
நமது பிரச்னைகள் – அறியாமை, வறுமை, ஏழ்மை, சாதிப் பிரிவினைகள், சமயச் சண்டைகள் எல்லாம் பல நூறு ஆண்டுகளாக நம்மை வருத்தி வருகின்றன. நாம் இன்னமும் புத்திக் கொள்முதல் செய்தபாடில்லை; நல்லறிஞர்கள், சான்றோர்கள் சொன்னதையும் கேட்டு நடப்பதில்லை. நாமாகவும் தெரிந்துகொள்வதில்லை.
ஏன் இந்த அவலம்?
மேலும் அரசுகள் ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்பதுபோல், மனிதன் வளர்ச்சியடையாமல் போகச் செய்யும் இலவசங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. மக்கள் பிச்சைக்காரர்கள் ஆக்கப்படுவதன் மூலம் பிரச்னை தீருமா? ஒருபோதும் தீரா. அது மட்டுமல்ல. அரசு வழங்குவதைப் பேணிக் காத்துக் துய்க்கக்கூடத் தெரியாமல் போய்விடும்.
‘உள்ளவர்களுக்கு மேலும் தரப்படும்; இல்லாதவர்களிடம் உள்ளதும் எடுக்கப்படும்’ என்ற அறிவுரையை – எச்சரிக்கையை – எண்ணிப் பாருங்கள்! இங்கு உள்ளவர், இல்லாதவர் என்ற சொற்கள் செல்வத்தையோ, பணத்தையோ குறிப்பன அல்ல. மனித மதிப்பீட்டுக் கொள்கையே ஆகும்.
ஆம்! மானுடம் வெற்றி பெற வேண்டும். மனிதன் வென்று விளங்க வேண்டும். முதலில் மனிதனை உருவாக்க வேண்டும். இந்த மாபெரும் உலகியல் வரலாற்றையே இயக்கிப் புவியை நடத்தும் ஆற்றலை மனிதன் பெற்றாக வேண்டும்.
இதற்கு சிரத்தை தேவை, ‘சிரத்தைக் குறைவே நம்மிடம் மேலும் மேலும் துன்பங்களை வளர்க்கின்றன’ என்பது சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கை, ஆதலால், இன்றைய இந்திய சமுதாயத்திற்கு முதல் தேவை சிரத்தையே.
சுவாமி விவேகானந்தர், “நாம் வேண்டுவது சிரத்தையும் தன்னம்பிக்கையுமே” என்று அருளிச் செய்துள்ளமையை நமது இளைய பாரதம் உணர்தல் கடமை.
மீண்டும் சுவாமி விவேகானந்தர், ‘பலமே வாழ்வு; பலவீனமே மரணம்’ என்று கூறி அறிவைச் சுடர்விடச் செய்கிறார்.
இன்று நாட்டில் பலம் யாருக்கு உள்ளது? சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் மீது பழி போட்டுவிட்டு வாளா முடங்கிக்கிடக்கும் மனிதர்களே இன்று மிகுதி. சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் பலவீனனைப் பாதிக்கும். ஆனால், பலம் உள்ளவன் சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் தனது முன்னேற்றத்திற்குக் கருவியாக்கிக் கொண்டு முன்னேறுவான்!
ஆக, இன்று தேவை பலம்! இதுவே விவேகானந்தர், இந்தியா வீறுடன் விளங்க நமக்குத் தந்த தாரக மந்திரம்.
இன்று விரிந்த பார்வையே இல்லாமல் போய்விட்டது. சமுதாயச் சீர்த்திருத்தங்கள்கூட எல்லைகள் – சாதிகளுக்குள்ளேயே முடங்கிவிட்டன. இந்தச் சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின் அடிச்சுவட்டில் இந்த பாரதம் நடைபோட வேண்டும்.
சுவாமிஜியின் சிந்தனைகளுக்குச் செயலாக்கம் கொடுத்தால் புதிய பாரதம் – வலிவும் வளமும் உடைய பாரதம் தோன்றும் . இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் .
மீண்டும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையைப் படியுங்கள்! ‘நாம் வேண்டுவது சிரத்தையும் தன்னம்பிக்கையுமே! ‘ பலம் வேண்டும். சிரத்தையோடு கூடிய நல்முயற்சி வேண்டும்.
.
நன்றி: விவேகானந்தரைக் கற்போம் தொ.ஆ: சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு- 2012
$$$