ஸ்வதந்திர கர்ஜனை- 1(9)

-தஞ்சை வெ.கோபாலன்

ஹஸ்ரத் மஹல் பேஹம்

பாகம்-1; பகுதி- 9

வீரர்கள் இருந்தும் வீரம் இருந்தும்

துரோகம் வென்றது!

தியாகி மங்கள் பாண்டே தொடங்கிவைத்து, மீரட்டில் பெண்கள் உசுப்பிவிட வெகுண்டெழுந்து வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டு  தில்லி வரை கொண்டுசென்று, அங்கிருந்து கான்பூர், லக்னோ, ஜான்சி என்று பரவி இறுதியில் காட்டுத்தீ போல எழுந்த புரட்சித்தீ முடிவுக்கு வந்தது.

பல்லாயிரக் கணக்கான இந்திய சுதேசி வீரர்களைக் களபலி கொடுத்தபின் ஒருவழியாக பாரத தேசம் முழுவதையும் தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

எப்பேர்ப்பட்ட நாடு, எப்படிப்பட்ட வீரர்கள்! அவர்களுடைய எழுச்சியையே குறைந்த காலத்தில் கட்டுக்குள் கொண்டுவந்து புரட்சியை அடக்கிய பிறகு, நம்மை வெல்ல இனி யார் எனும் எண்ணம் வந்ததோ ஆங்கிலேயருக்கு. அதனால் தான் இந்த முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு சுமார் நூறு ஆண்டுகள் நாம் காத்திருக்க நேர்ந்தது சுதந்திரக் காற்றை சுவாசிக்க!

புரட்சியை அடக்கிவிட்டார்கள் வெள்ளையர்கள், அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆயிரக் கணக்கான இந்தியச் சிப்பாய்களைக் கொன்று குவித்துவிட்டார்கள்,  அதையும் உலகம் அறியும். வீரத்தில் சிறந்து நின்ற எத்தனை எத்தனை வீரர்கள், வீராங்கனைகள், அத்தனை பேரையும் எமனுலகம் அனுப்பியாகிவிட்டது. இன்னொரு அகமது ஷாவையோ, தாந்தியா தோபேயையோ, ஜான்சி ராணி லக்ஷ்மி பாயையோ காண முடியுமா? அத்தனை பேரும் மண்ணோடு மண்ணாகி இந்தப் புண்ணிய பூமியில் பூந்துகளாகப் போய் மறைந்து போயினரே!

ஆனானப்பட்ட நானா சாஹேப் நேபாளத்துக்குப் போய் காட்டில் மறைந்து விட்டார் என்றெல்லாம் எழுதினார்களே, ஆங்கில சரித்திர ஆசிரியர்கள். அப்படியா ஓடிப் போனார், நானா சாஹேப்?  அவரைப் பற்றிய சுவையான செய்தியை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்…

பிழைத்திருந்த எந்தப் புரட்சிக்காரரையும் வெள்ளையர்கள் சிறைப்பிடிக்க முடியவில்லை. அப்படி ஓடிப்போய் எங்கோ மறைந்திருக்கும் அவர்கள், என்று, எங்கு, எப்படிப் பாய்ந்து மீண்டும் ஒரு புரட்சியைத் தோற்றுவிப்பார்கள், யாருக்குத் தெரியும்?

இனி முன்போல இந்தியர்களை புழுக்களைப் போல எண்ணினால் எத்தகைய ஆபத்தை எதிர்கொள்ள நேரும் என்பதை கிழக்கிந்திய கம்பெனியைவிட, இங்கிலாந்து அரசுக்குத் தெரிந்து போயிற்று. மகாராணி விக்டோரியா 1858-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். அந்தச் சட்டத்தின்படி இந்தியாவின் மீதான ஆதிக்கம், ஆட்சி அனைத்தும் கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து இங்கிலாந்து அரசுக்கு மாற்றப்பட்டது.

இங்கிலாந்தின் வியாபாரிகள் கையிலிருந்த இந்தியா, இங்கிலாந்து அரசாங்கத்துக்கு மாறிவிட்டது. இங்கிலாந்துக்கு மகாராணியாக இருந்த விக்டோரியா இனி முப்பது கோடி இந்தியர்களுக்கும் மகாராணி. இனி இந்தியர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? வாழ்க்கை எப்படி இருக்கும்? மக்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

இந்தியாவை ரத்தக்கறை படிந்த தங்கத் தாம்பாளத்தில் வைத்து கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்துவிட்டது. இந்த வரலாற்று நிகழ்வைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டாமா? அப்படிப்பட்ட கொண்டாட்டத்தில் பிரிட்டிஷ்காரர்களைக் காட்டிலும் இந்திய சுதேச சமஸ்தானாதிபதிகள், ஜமீந்தார்கள், பிரிட்டிஷ் அடிவருடிகள் இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டாட முடிவு செய்தனர். அந்தக் கொண்டாட்டத்திற்கான இடமாக அலகாபாத் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியக் குடிமக்களுக்கு எத்தகைய மாற்றம்? இதனைக் கொண்டாடும் விதமாக மகாராணி ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

“ஆட்சியின் தலைமை மட்டும் தான் மாறியிருக்கிறது. முந்தைய கம்பெனியார் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் அப்படியே தொடரும். இந்திய சுதேச சமஸ்தானாதிபதிகள் இப்போது அனுபவித்து வரும் சுகபோக வாழ்வையும், அரசாங்கம் அளிக்கும் ஆதரவும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமானால், அவர்கள் எல்லாம், தாங்கள் மட்டுமல்ல, அவர்களது சமஸ்தானத்துப் பிரஜைகளும் பிரிட்டிஷ் ராஜாங்கத்துக்கு விசுவாசமுடையவர்களாக என்றென்றும் இருந்துவர வேண்டும். அவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை அனைத்தும் தொடர்ந்து கிடைத்து வரும்.

இந்தியச் சிப்பாய்கள் செய்த புரட்சியின் போது தங்களுக்கு ஒத்துழைப்பு தந்து ஆதரவுப் படைகளை அனுப்பிய ராஜாக்களுக்கு சலுகைகள் மேலும் அதிகரிக்கப்படும். முந்தைய கம்பெனி ஆட்சியின்போது டல்ஹவுசியின் ‘நாடுபிடிக்கும் திட்டத்தின்’படி சுதேச சமஸ்தானங்கள் பிடுங்கப்பட்டதைப் போன்ற நிகழ்ச்சிகள் இனி நடைபெறாது. கிழக்கிந்திய கம்பெனியில் கூலிக்குப் பணியாற்றியவர்கள் அவரவர் வேலையில் தொடர்ந்து பணிபுரியலாம்.

எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி,  ‘மன்னரும் ராணியும் நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துவோர் அனைவரும் இங்கு எல்லா நலத்தோடும் மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டுமென்றே பிரிட்டிஷ் அரசு விரும்புகிறது. உங்களுக்குத் துன்பங்கள் என்று எதுவும் இருக்காது, அப்படி ஏதேனும் இருக்குமானால் அது களையப்படும். இந்திய மக்களின் வாழ்க்கை முறை, இங்கு நிலவும் ஜாதி, மதம் போன்ற விஷயங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடாது.

புரட்சியின் போது எங்கள் பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொன்றவர்களைத் தவிர மற்ற குற்றவாளிகளை இரக்க உணர்வோடு, மன்னித்து விட்டுவிடுகிறோம். கலகத்தில் ஈடுபட்டு பாரத நாட்டுக்காகப் போராடியவர்கள் தாங்களாகவே முன்வந்து எங்களிடம் சரண் அடைந்துவிட்டால், அவர்கள் மீது விசாரணை நடத்திப் பின் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். தப்பித்துவிடலாம் எனக் கருதி மறைந்திருந்தால், அவர்கள் பிடிக்கப்பட்டு தண்டனை அடைவார்கள்.”

இப்படிப்பட்ட கருத்துக்களைச் சுமந்துவந்த ஒரு பிரகடனம். பிரிட்டீஷ்காரர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும்,  ஆஹா ஒஹோ என்று புகழ்ந்து பாராட்டிய பிரகடனம். அலகபாத் நகரில் வெளியிடப்பட்ட,  காருண்யம் மிக்க இங்கிலாந்து அரசியார் வெளியிட்ட பிரகடனம்.

இந்திய மக்கள்,  அடடா! இங்கிலாந்து நாட்டின் ராணிக்கும், அவர்தம் அரசாங்கத்துக்கும், அந்த அரசாங்கத்தின் அங்கமாக இப்போது ஆகிவிட்ட பழைய கிழக்கிந்திய கம்பெனியின் விசுவாசம் மிக்க அரக்க குணம் படைத்த அதிகாரிகளுக்கும் நன்றியோடும், விசுவாசத்தோடும் அடிபணிந்து தங்களைக் காலாகாலத்துக்கும் காத்து ரட்சிக்க வேண்டுமென்று வாழ்த்துப்பா பாடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்துவிட்டார்கள். ஆனால் இந்தியாவின் மானத்தைக் காக்க அயோத்தியின் ராணியான ஹஸ்ரத் மஹல் பேஹம் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அதில் ஹஸ்ரத் மஹல் இங்கிலாந்தின் பிரகடனத்தை ஏற்க மறுத்தார். கிழக்கிந்திய கம்பெனியார் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் செய்துகொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும், பிரிட்டிஷ் அரசு அப்படியே தொடரும் என்றால், இந்த மாற்றம் எதற்காக? அந்த கம்பெனியே ஆட்சியை நடத்திவிட்டுப் போயிருக்கலாமே! அரசாங்கத்தின் தலையீடு எதற்காக?

நியாயத்துக்குப் புறம்பாக வாரிசு இல்லை என்பதற்காக ஆங்கிலேயர்கள் அபகரித்துக் கொண்ட பேஷ்வா பாஜிராவின் ராஜ்யம், அயோத்தி ராஜ்யம், ஜான்சி ராஜ்யம் என்று கொள்ளையடித்துக் கொண்ட ராஜ்யங்களைத் திரும்ப அல்லவா அளித்திருக்க வேண்டும்? அவை பிடுங்கிக் கொண்டது பிடுங்கிக் கொண்டதுதான் என்பதற்கு எதற்காக இந்தப் பிரகடனம்? இந்தப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்வதால், பிரிட்டிஷார் இங்கு அநியாயமாக வந்து குடியேறி, நம்மையெல்லாம் அடிமைப்படுத்தி ஆண்டு வருவதையல்லவா நியாயப்படுத்துவதாக இருக்கும்? அதுவா நம் குறிக்கோள்?

ஆனால் பாவம்! அயோத்தி ராணியின் குரல், இங்கிலாந்து ராணியின் காதுகளில் விழவில்லை. இந்திய சமஸ்தானாதிபதிகள் விழ விடவில்லை. புரட்சி செய்த தலைவர்களில் மிச்சமிருப்போருக்கு தண்டனை மட்டும் நிச்சயம் என்பது அந்த பிரகடனத்தின் மூலம் தெரியவந்தது.

நேபாளத்திற்கு ஓடிப்போய் காட்டில் மறைந்து வாழ்வதாகச் சொல்லப்பட்ட நானா சாஹேபின் கதி என்னாவது? அவரைப் பிடித்து வந்து விசாரணை எனும் ஒரு நாடகத்தை நடத்தி அவர் உயிரையும் தூக்கில் பலிகொடுக்கும் எண்ணமா? இதை ஏற்றுக் கொள்வதா? இதுதான் தர்மமா? மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் என்ன செய்ய முடியும்?

கலகம் செய்தவர்கள் மட்டுமா? கலகத்துக்கு ஒத்துழைத்தவர்கள் அனைவருக்கும் தண்டனை நிச்சயம் என்கிறது பிரகடனம். நானா சாஹேப் ஏற்கனவே காணாமல் போய்விட்டார். இப்போது அயோத்தி ராணியும் காணாமல் போனார். இன்னமும் உடலில் வீரமும், சுதந்திர வேகமும் உள்ள இந்திய வீரர்கள் வெள்ளையன் கைகளில் மாட்டாமல் மறைந்தே இருந்தனர். இந்தக் காரணத்தால் நேபாள நாட்டின் ஜனத்தொகை திடீரென்று அதிகரித்துவிட்டது, இந்திய புரட்சி வீரர்கள் தஞ்சம் புகுந்துவிட்டதால்.

அங்கெல்லாம் போக முடியாமல் இங்கேயே தங்கிவிட்ட புரட்சிக்காரர்கள், வெள்ளையரிடம் அடிபணிந்து அவர்கள் கொடுத்த தண்டனைகளைத் தாங்கிக் கொண்டார்கள். தங்கள் நாட்டில் வந்து புகுந்துகொண்ட புரட்சிக்காரர்களை அரவணைத்து பாதுகாப்புக் கொடுக்கவோ, மறுபடியும் பிரிட்டீஷாருக்கு எதிராக புரட்சி செய்யும் எண்ணமிருந்தால் படையுதவி செய்யவோ நேபாள ராஜா கண்டிப்பாக மறுத்துவிட்டார். பிரிட்டீஷ் அரசின் நல்லுறவையும், ஆதரவையும் நாடி நிற்கும் மன்னர்கள் வேறு என்னதான் செய்வார்கள் பாவம்!

குதிரை கீழே தள்ளியது போதாதென்று புதைக்கக் குழியையும் தோண்டியதாம், அதைப் போல நேபாள ராஜாவாக இருந்த ஜங் பகதூர் இந்திய புரட்சி வீரர்களை பிரிட்டிஷ் அரசிடம் சரணடைந்துவிடும்படி அறிவுரை கூறினார். அப்படி நீங்களே போய் சரணடையாவிட்டால், நாங்கள் பிடித்து உங்களை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று எச்சரிக்கையும் விடுத்தார். என்ன கொடுமை?  சொன்னபடியே செய்தார் அந்த ராஜா. பல புரட்சிக்காரர்களைப் பிடித்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைத்தார்.

இதற்கிடையே நானா சாஹேபுக்கு ஒரு சபலம். பிரிட்டிஷ் அரசு மன்னித்துவிட்டால் இந்தியாவுக்கே திரும்பி விடலாமே என்று அவர்களுக்குக் கடிதம் எழுதினார். கூண்டில் சிக்கிக்கொண்ட புலியாக இருந்த அவருக்கு வேறு வழியில்லை. ஆங்கிலேயர்களிடம் அகப்பட்டுக் கொண்டு தூக்கில் தொங்கவும் விருப்பமில்லை. தொடர்ந்து அவர்களோடு போராட வீரர்களோ, ஆதரவோ, செல்வமோ இல்லை என்ன செய்வார் பாவம்?

அதன் பின் அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்றெல்லாம் தெரியவில்லை என்றே சரித்திர ஆசிரியர்கள் எழுதிவிட்டார்கள். நாமும் அப்படித்தான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியில்லை, அவர் உயிர் வாழ்ந்தார். தொண்ணூறு வயதாகியும் இந்திய அரசுக்கு எதிராக புரட்சிப் பயணம் செய்து கொண்டுதான் இருந்தார் என்கிறது நம் தமிழ்நாட்டுச் செய்தியொன்று. அது என்ன செய்தி? தொடர்ந்து படிப்போம்.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 1(9)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s