-தஞ்சை வெ.கோபாலன்
பகுதி- 1.7

பாகம்-1; பகுதி- 8
வெள்ளையனை எதிர்த்து வாளேந்திய
மெளல்வி அகமது ஷா
1858-இல் நடந்த முதல் சுதந்திரப் போர் வட இந்தியாவையே குலுங்க வைத்தது. அதில் பங்கேற்றுத் தங்கள் இன்னுயிர் ஈந்த தேசபக்த சிங்கங்கள் ஏராளம்! ஏராளம்! வரலாற்றில் அழியாத இடம்பெற்றுவிட்ட நிகழ்வு இந்தப் புரட்சி.
ஆங்கிலேயர்களுக்கு அது சிப்பாய்க் கலகம். இந்திய தேசபக்தர்களுக்கு அது முதல் சுதந்திரப் போர். இந்த புனித யுத்தத்தில் தங்கள் நல்லுயிர் ஈந்த மாவீரர்களில் மெளல்வி அகமது ஷா மறக்க முடியாதவர்.
யார் இந்த மெளல்வி அகமது ஷா?
டல்ஹவுசியின் நாடு பிடிக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட சமஸ்தானங்களில் அயோத்தியும் ஒன்று. அந்த அயோத்தியின் உட்பிரிவுகளாக இருந்த பகுதிகளில் ஒன்று பைசாபாத் எனும் கோட்டம். அந்தக் கோட்டத்தின் சிற்றரசர் தான் இந்த அகமத் ஷா.
இவருடைய மூதாதையர்கள் சென்னை நகரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. பேஷ்வா பாஜிராவின் ராஜ்யத்தையும், ஜான்சியையும், அயோத்தியையும் கைப்பற்றிக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கு அயோத்தியின் உட்பிரிவான இந்த குட்டிப் பிரதேசத்தை கபளீகரம் செய்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்?
வெள்ளைக்காரர்களின் மோசடிக்குப் பலியான அகமது ஷா தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார்; அதிகாரத்தை இழந்தார்; ஆள், குடி, படை அனைத்தையும் இழந்தார்; அனாதையானார். அவர் மனதில் ஓர் உறுதி உருவானது; அது இந்த வெள்ளைக்காரர்களைப் பூண்டோடு இந்த நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமென்பது தான் அந்த வைராக்கியம்.
தன் தேசத்தையும், தான் பின்பற்றும் மதத்தையும் காக்க வேண்டுமானால், இந்த அன்னிய சக்தியை இந்த நாட்டைவிட்டுத் துரத்திட வேண்டுமென்கிற வெறி அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அயோத்தி (அவத்) ராஜ்யத்தின் தலைநகராக இருந்த இடம் லக்னோ. அங்கு ராஜ வம்சத்தில் மிகச் சிறந்த ராஜதந்திரியாக இருந்தவர் இந்த அகமது ஷா.
வெள்ளைக்காரர்களின் சதியால் தன் உடைமைகளைப் பறித்துக்கொண்ட பிறகு இவர் இந்த தேசம் முழுவதும் சென்று அவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி வந்தார். எங்கு திரும்பினாலும் புரட்சித் தீ வெடிக்கும் சூழ்நிலையை இவர் போகுமிடங்களில் எல்லாம் உருவாக்கி வந்தார்.
அப்படிப்பட்ட புரட்சிக்காரரை வெள்ளை ஆட்சி பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? அவரைப் பிடித்து விசாரணை எனும் பெயரால் ஒரு நாடகத்தை நடத்தி அவருக்குத் தூக்கு தண்டனை விதித்து, தண்டனை நிறைவேற்றும் காலம் வரையில் பைசாபாத் சிறையில் அடைத்து வைத்தார்கள்.
அயோத்தி மக்களுக்குத் தங்கள் அருமைத் தலைவர் அகமது ஷா சிறைபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கி சிறையில் இருக்கும் செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது. மக்கள் திரண்டெழுந்தனர். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து அகமது ஷா இருக்கும் சிறைக்கூடத்தை உடைத்தெறிந்து, அவர் கைவிலங்கையும் தூள் தூளாக்கி அவரை வெளிக்கொணர்ந்தனர். அவரும் வெளியில் உலாவி புரட்சி வித்தை எங்கும் தூவி வந்தார்.
சிப்பாய்க் கலகம் உச்ச நிலையை அடைந்தபின் வெள்ளையன் பெரும்படை கொண்டு அதனை அடக்க முற்பட்டான். இந்தியச் சிப்பாய்களின் விடுதலைக் கனவு சில காலத்திற்குள் பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனது. சூழ்ச்சியும் துரோகமும் இந்திய வீரர்களுக்குத் தோல்வியைக் கொடுத்தன. தில்லி கைவிட்டுப் போயிற்று. கான்பூரும் சிப்பாய்களிடமிருந்து வெள்ளையர்களுக்கே மீண்டும் போய்விட்டது; அப்படி வெள்ளையர்களிடம் தோற்ற இந்திய சிப்பாய்கள் கூட்டம் கூட்டமாக லக்னோ நகருக்கு வந்து குழுமலாயினர்.
அகமது ஷாவின் தலைமையில் பெரும்படை ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பல இடங்களிலும் போரில் ஈடுபட்டது. வீரத்துடன் போரிட்ட அகமது ஷாவின் கையில் வெள்ளையன் சுட்ட குண்டு ஒன்று பாய்ந்தது. காயம்பட்ட அகமது ஷாவை அவரது வீரர்கள் பத்திரமாக டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்தனர்.
“அன்னிய சக்திக்கு அடிபணிந்து வாழ்வதினும், வீரமரணம் ஆயிரம் மடங்கு உயர்ந்தது” என்பது அவரது கருத்து. தனது காயம் ஆறுவதற்கு முன்னதாகவே அவர் மீண்டும் போர்க்களம் புகுந்தார். கான்பூரில் கிளம்பி ஆங்கிலேயத் தளபதி காலின் கேம்ப்பெல் என்பான் இவரைப் பிடிக்க வந்து கொண்டிருந்தான். அவனைத் தடுத்து நிறுத்த முயன்ற அகமது ஷாவின் முயற்சிகளுக்கு உள்ளூர் துரோகிகளும், காட்டிக் கொடுக்கும் நயவஞ்சகர்களும் தடையாக இருந்தார்கள்.
இறுதிப் போர் லக்னோவில் நடைபெற்றது. இருபுறத்திலும் கடுமையானதொரு போருக்கு ஆயத்தமானார்கள். இந்திய சிப்பாய்கள் முப்பதாயிரம் பேரும், அவர்களுக்கு உதவி செய்ய எண்பதாயிரம் பேருக்கு மேலான மக்களும் தயார் நிலையில் இருந்தனர். தளபதி கேம்ப்பெல் தலைமையில் முப்பதாயிரம் ஆங்கில படைவீரர்கள் போருக்குத் தயாராக இருந்தனர். இந்தியப் படைகள் எல்லாப் புறங்களையும் பலப்படுத்திக் கொண்டனர். வடபுறமுள்ள கெளதமி நதி பாதுகாப்பாக இருக்குமென இவர்கள் நம்பினர்.
லக்னோ நகரம் முழுவதும் தேசபக்தர்கள் எல்லாவிடங்களிலும் பரவி நின்று கடுமையானதொரு போருக்கு ஆயத்தமானார்கள். ஆங்காங்கே எதிரிப் படைகள் சுலபமாக முன்னேற விடாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள்ளிருந்து துப்பாக்கியால் சுடுவதற்கு சுவர்களில் துவாரங்கள் போடப்பட்டு அங்கெல்லாம் சிப்பாய்கள் தயாராய் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள்.
இந்திய சுதேசிப் படையினர் இத்தனை ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும், கிழக்கிந்திய கம்பெனியாரின் படைகள் பல பிரிவுகளாகப் பிரிந்து நகரினுள் நுழைந்து எதிரிகளை துவம்சம் செய்துகொண்டே முன்னேறினர். நகரின் நடுப்பகுதியில் சுதேசி வீரர்கள் மாட்டிக் கொள்ள சுற்றிலும் ஆங்கிலப் படை சுற்றி வளைத்து விட்டது. அந்த நிலையிலும் பத்து நாட்கள் இரு தரப்பாருக்குமிடையே கடுமையான யுத்தம் நடந்தது. இந்த யுத்தத்தில் ஒரேயொரு ஆறுதலளிக்கும் செய்தி என்னவென்றால், கடைசி தில்லி சுல்தான் பகதூர் ஷாவின் மகன்களைக் கொன்ற ஆங்கிலேயத் தளபதி ஹட்சன் என்பான் இந்திய வீரர்களால் லக்னோவில் கொலை செய்யப்பட்டான்.
அடுத்த நான்காம் நாள் அத்தனை தடைகளையும் உடைத்துக் கொண்டு ஆங்கிலப் படை லக்னோ அரண்மனைக்குள் நுழைந்துவிட்டது. அயோத்தி மன்னரும் அவர் பாதுகாவலர்களும் சுதேச வீரர்களும் ஆங்கிலப் படையுடன் மிகக் கடுமையாகப் போர் புரிந்தனர். இந்த சமயத்தில் அகமத் ஷா தனது வீரர்களுடன் புகுந்து லக்னோவில் மிகக் கடுமையாகப் போர் புரிந்தார். இந்திய வீரர்களுக்கு மனதில் இப்போது தைரியமும் தாங்கள் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையும் உண்டாகியது. அவருடைய தாக்குதலில் ஏராளமான ஆங்கில படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து உயிர் துறந்தனர். இந்த யுத்தம் பற்றி ஒரு ஆங்கில தளபதி குறிப்பிடும் செய்தி இது:
“லக்னோ நகரம் முழுவதும் ஆங்கிலேயர் வசம் விழுந்துவிட்ட பிறகும் கூட அவர்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. புரட்சிக்காரர்களின் தலைவர் மெளல்வி அகமத் ஷா நகருக்குள் புகுந்துகொண்டு தன் படையினருடன் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருக்கிறார். பீரங்கிகளால் ஆங்கிலேயப் படையை சரமாரியாக சுட்டு பலத்த இழப்பை ஏற்படுத்துகிறார். இந்த யுத்தத்தில் மெளல்வி அகமத் ஷாவைக் கைது செய்ய ஆங்கிலேயர்கள் எவ்வளவு முயன்றும் காரியம் கைகூடவில்லை. இத்தனை காவல் இருந்தும் அவர் தீரத்துடன் எப்படி ஊரினுள் நுழைந்தாரோ, அதேபோல பலத்த சேதத்தை ஆங்கிலேயர்களுக்கு உண்டாக்கிவிட்டு சாமர்த்தியமாகத் தப்பியும் சென்றுவிட்டார்.”
என்ன முயன்றும் லக்னோ ஆங்கிலேயர் கரங்களில் விழுவதை இந்திய வீரர்களால் தடுக்க முடியவில்லை. லக்னோவை அடுத்து ரோஹில்கண்ட், அயோத்தி ஆகியவை எளிதில் விழுந்துவிட்டன. இந்திய சிப்பாய்கள் எதிரிகளோடு நேருக்கு நேர் போரிடுவதை நிறுத்திவிட்டு கொரில்லா போரில் இறங்கிவிட்டனர். புரட்சிக்காரர்கள் அனைவரும், லக்னோ வீழ்ந்த பின்னர் ஷாஜஹான்பூரில் வந்து சேர்ந்தனர். நானா சாஹேபும் அங்கு வந்துவிட்டார். இதுதான் நல்ல சமயம் என்று, ஆங்கிலேயர்கள் ஷாஜஹான்பூரில் மெளல்வியையும் நானாவையும் ஒருசேரக் கைது செய்துவிடத் துடித்தனர்.
மெளல்வி ஷாஜஹான்பூரை விட்டு ரகசியமாக வெளியேறி மீண்டும் அயோத்தியினுள் சென்றார். இப்படி வெள்ளையர்கள் துரத்தத் துரத்த மெளல்வியும் பல்வேறு இடங்களுக்கு மாற்றி மாற்றிச் சென்று அவர்கள் கைகளில் சிக்காமல் இருந்தார். இந்தச் சூழ்நிலையில் தங்களால் மெளல்வியைப் பிடிக்கவோ, கொல்லவோ முடியாது, இதற்கு ஒரே வழி இந்தியர்களுள் துரோகிகளைத் தூண்டிவிட்டு அவர்களைக் கொண்டு அவரைப் பிடிக்க, அல்லது கொல்ல வேண்டுமென முடிவு செய்தனர்.
தனக்கு உதவி செய்வான் என்று எண்ணி மெளல்வி அகமது ஷா ஒரு சிற்றரசனுக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். ஆனால் அந்த சிற்றரசன் ஒரு கோழை. மெளல்விக்கு உதவி செய்வதைப் போல அவரை ஒழித்துக் கட்ட ஆங்கிலேயருக்கு துணை போவதென்று முடிவெடுத்தான். தான் உதவி செய்வதாகவும், உடனே மெளல்வியைத் தன்னைக் காண வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தான்.
அவன் அழைப்பை உண்மை என்று நம்பி மெளல்வி அகமது ஷா தன் யானையின் மீதேறிக் கொண்டு அவன் ராஜ்யத்தினுள் நுழைந்தார். அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் சாத்தப்பட்டன. எதிரில் ராஜா ஜெகநாத் சிங் என்பான் நின்று கொண்டிருந்தான். மெளல்விக்குப் புரிந்துவிட்டது, தான் சூதுவலையில் சிக்கிவிட்டோம் என்று. இருந்தாலும் சூழ்ந்திருக்கும் ஆபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெளல்வி மன்னனோடு சகஜமாகப் பேசத் தொடங்கினார். சூதுவலை பின்னிய அந்த மன்னன் மெளல்வியைப் பிடிக்க எத்தனிக்கையில் அவர் தன் யானையைக் கொண்டு கோட்டை கதவை உடைக்கத் தூண்டினார். அந்த யானையும் தன் பலம் கொண்ட மட்டும் கோட்டைக் கதவை உடைக்க முயன்றும் முடியவில்லை.
அந்தச் சமயம் பார்த்து அந்த மன்னனின் தம்பி தன் துப்பாக்கியை எடுத்து மெளல்வி அகமத் ஷாவைக் குறிவைத்துச் சுட்டுவிட்டான். ஒரே ஒரு கணம், இந்த நாட்டை சிந்தித்திருப்பாரா, அல்லது இப்படியொரு துரோகியின் கையில் மாட்டிக்கொண்டு உயிரை இழக்கிறோமே என்று வருந்தியிருப்பாரா தெரியாது, அந்த மாவீரனின் உடல் சரிந்து விழுந்தது பிணமாக.
துரோகத்தால் ஒரு மாவீரனைக் கொன்றது போதாதென்று அந்த மன்னனும் அவன் தம்பியும் ஓடிவந்து பிணமாக விழுந்துவிட்ட மெளல்வியின் கழுத்தை வாளால் வெட்டி, அதை ஒரு துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு, அதைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து பதிமூன்று மைல்களுக்கப்பால் இருந்த பிரிட்டிஷ் ராணுவ முகாமுக்குக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு ஆங்கிலேயத் தளபதிகள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்குத் தாங்கள் கொண்டு வந்திருக்கும் விலை மதிக்கமுடியாத அரியதொரு பரிசு என்று மெளல்வியின் தலையை அவர்கள் முன்பாக உருட்டிவிட்டனர். என்ன கொடுமை இது! அரக்கர்களான அந்த ஆங்கில ராணுவ தளபதிகள் அந்தத் தலையை ஒரு ஈட்டியில் சொருகி கோட்டை வாசலில் கொண்டு போய் நட்டு வைத்தனர். இந்த மாபெரும் பரிசைக் கொண்டுவந்து கொடுத்த ஜகநாத் சிங் எனும் அந்த இந்திய துரோகிக்கு ஆங்கிலேயர்கள் முப்பதினாயிரம் ரூபாய் வெகுமதி அளித்தனர்.
நல்ல ஆஜானுபாகுவான, உடல் முறுக்கேறிய, வைரம் பாய்ந்த தோள்களையுடைய, பாரதத்தாய் பெற்ற அந்த வீரமகனை, கேவலம் முப்பதினாயிரம் வெள்ளிப் பணத்திற்காகக் காட்டிக் கொடுத்த கேவலப் பிறவிகளும் இந்த நாட்டில் வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து வெட்கப்பட வேண்டும். ஆனால் அதுதான் நிதர்சனம். இந்தியாவில் அந்நியர்கள் இவர்கள் போன்ற துரோகிகளின் துணையால்தான் அத்தனை ஆண்டுகள் ஆள முடிந்தது.
(கர்ஜனை தொடர்கிறது…)
$$$
One thought on “ஸ்வதந்திர கர்ஜனை-1(8)”