-ஔவையார்

கொன்றைவேந்தன்- 11
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
விளக்கம்:
வேதம் ஓதுகின்ற உயர்ந்த கடமையைச் செய்கின்ற வேதியர்களுக்கு அவ்விதம் ஓதுவதைவிட வேதம் உரைத்துள்ள அறஒழுக்கத்தைக் கடைபிடித்துச் செயலாற்றுவது கூடுதல் நன்மை தருவதாகும் என்கிறார் ஔவையார்.
வேதம் என்பது ‘வித்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. வித் என்பது அறிவின் அடிப்படை, ஞானத்தின் பிறப்பிடம். வாழ்வுக்கு அடிப்படையான அறிவை உரைப்பதால் அது வேதம் எனப்பட்டது. வாழ்வதற்கான தர்மத்தையும் அவ்வாறு வாழ்ந்து முக்தி என்னும் மேலான பதத்தையும் அடைவதற்கான வழிமுறைகளையும் வேதம் விண்டுரைக்கிறது. அந்த ஞானத்தை அறிவது, ஓதுவது வெறும் சொல்லாடல்அல்ல, செயலாற்றலுக்கானது.
இதைத்தான் பெரியோர்கள் ‘சத்யம்வத; தர்மம்சர’ -உண்மையைச்சொல், அறத்தைக் கடைபிடி -என்றார்கள். இந்தக் கருத்தையே ஔவையார் ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் என்றுரைத்திருக்கிறார். கடைபிடிக்காத அறஒழுக்கத்தால் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது? ஓதுதல் என்றால் ஒப்பித்தல், உரைத்தல், போதித்தல் எனப் பலபொருள் உண்டு. ஊருக்குத்தான் உபதேசம் எனக்கல்ல என்று இருந்துவிடக் கூடாதல்லவா? உபதேசிப்பவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்ட வேண்டும் அல்லவா?அதனால்தான் அறத்தை ஓதுகின்ற வேதியர்க்கு அதனைவிட அறத்தை நடைமுறைப்படுத்துவது மேலானது என்று ஔவையார் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளுவர் இதனையே ‘பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்’ என்று எச்சரித்துள்ளார். ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவர் எப்படி ‘பார்ப்பான் பிறப்பு’ என்று சிறப்பித்துச் சொல்லியிருக்கிறாரே என ஆச்சரியப்படுகிறீர்களா? அதன் பொருள் நுட்பமானது. பிராமணர்களுக்கு ‘துவிஜனர்கள்’ அதாவது இருபிறப்பாளர்கள் என்று பெயர். அவர்களும் எல்லா சாதியினரைப்போல சாதாரணமாகத்தான் பிறக்கிறார்கள். ஆனால், உபநயனம் செய்வித்து பிராமணன் என்ற தகுதியை அடைவது இரண்டாவது பிறப்பு. அத்தகைய உயர்ந்த பிறப்பானது, ஒழுக்கக்கேடு ஏற்பட்டால் கெட்டுப்போய் விடும், நீங்கிவிடும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இதன்மூலம் ஆதிகாலத்தில் பிராமணர் ஆவது பிறப்பின் அடிப்படையில் அல்ல, சிறப்பின் அடிப்படையில் அமைந்திருந்தது என்பது தெளிவாகிறது.
இதனால்தான் வேதம் ஓதுவதற்குரிய தகுதியைப் பெறுகின்ற ஒழுக்கம், ஓதுதலை விட மேலானது என்ற கருத்தின் அடிப்படையில், ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் என்று மொழிந்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 12
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு
விளக்கம்:
பொறாமைப்பட்டுப் பேசுவது ஆக்கத்திற்கு அழிவை ஏற்படுத்திவிடும்.
ஆக்கம் என்பது ஆக்கிவைத்த பொருள் ஆகும். இதுசெல்வம், உற்பத்தி ஆகியவற்றைக் குறிக்கும். ஆகுதல் என்ற பொருளில் புகழ், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றையும் குறிக்கும். பொறாமையால் இவையெல்லாம் அழிந்துவிடும் என எச்சரிக்கிறார் ஔவையார்.
அவர்கள் கண்பட்டது என் செல்வம் போயிற்று என்று பொதுவாகச் சொல்வது வழக்கம். பொறாமை பிறரது ஆக்கத்துக்கு அல்ல, நமது ஆக்கத்துக்கே அழிவை ஏற்படுத்திவிடும் என்றுதான் சான்றோர்கள் உரைக்கின்றனர்.
பிறர்மீது பொறாமைப்படுவதன் காரணமாக, பொறாமைப்படுவோரின் நிதானம், அறிவுக்கூர்மை, தன்னம்பிக்கை ஆகியவை மழுங்குகின்றன. ஆகையால் எதிராளியைவிட பொறாமைக்காரர்களுக்கே ஆக்கம் அழிய நேரிடும் என்றே ஔவையின் எச்சரிக்கைக்குப் பொருள்கொள்ள வேண்டும்.
‘அழுக்கா றெனவொரு பாவிதிருச் செற்று
தீயுழி உய்த்து விடும்’
-என திருவள்ளுவர் (குறள் – 161) எச்சரித்திருப்பதையும் இங்கே ஒப்புநோக்க வேண்டும்.
அழுக்காறு எனப்படும் பொறாமை என்ற பாவி, நமது செல்வத்தைத் துடைத்தெறிந்து தீயவழி என்ற நரகத்திலே தள்ளிவிடும் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.
அதே கருத்தையே பொறாமையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான ஔவியத்தைக் கொண்டு அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 13
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
விளக்கம்:
அஃகம் என்றால் தானியம், காசு என்றால் பணம். இவை இரண்டையும் சிக்கனமாக இருந்து சேமிக்க வேண்டும் என்கிறார் ஔவையார்.
சிக்கென என்பதற்குத் தப்பிக்கவிடாமல் என்று பொருள். சிவபெருமானைச் சிக்கெனப் பிடித்தேன் என்கிறார் மாணிக்கவாசகர். ஆக நம்மிடமுள்ள தானியங்களையும் தனத்தையும் தவறாகவோ அவசியமின்றியோ செலவழித்துவிடாமல் இறுக்கமாக இருந்து பாதுகாத்து, அவற்றின் வளத்தைப் பெருக்க வழிவகை தேட வேண்டும் என்கிறார் ஔவையார்.
சிக்கனத்தைப் பற்றிப் பேசுவதால் இத்துடன் (சிக்கனமாக) முடித்துக் கொள்கிறேன்.
$$$
கொன்றைவேந்தன்- 14
கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
விளக்கம்:
கற்பு எனப்படுவது சொல்லில் இருந்து பிறழாமல் நடத்தல் ஆகும் என்கிறார் ஔவையார்.
கற்பு என்றால் கல்போல உறுதியாக விளங்குதல் எனப் பொருள். கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான கல்வியானது கற்ற ஒருவரை அறிவுத் தடுமாற்றமின்றி உறுதியாக விளங்கச் செய்கிறது. அதேபோல கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த கற்பு என்ற இன்னொரு சொல், ஒழுக்கத்தால் ஒருவர் நெறிமுறையில் உறுதியாக நிற்றலைக் குறிக்கிறது.
சொல் என்பது மூத்தோர் சொல், சான்றோர் சொல், மேலோர் சொல் ஆகியவற்றுடன் ஆதியில் எழுத்தாய் அன்றி சொல்லால் அமைந்த வேதத்தையும் குறிக்கிறது.
திறம்புதல் என்றால் பிசகுதல், வழிமாறி நடத்தல் எனப் பொருள்தரும்.
ஆக, சான்றோரும் வேதமும் எடுத்துரைக்கும் உயர்ந்த நெறிகளாகிய ஒழுக்கத்தில் இருந்து பிசகாமல் நடப்பதே கற்பு என்கிறார் ஔவையார்.
இந்தக் கற்பு ஆண்- பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.
இதைத் தான் ‘கற்புநிலையெனச் சொல்ல வந்தார் இருகட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’ என்றார் மகாகவி பாரதியார். அதைவிடுத்து, கணவன் சொல்லில் இருந்து பிறழாமல் நடப்பதே கற்புநிலை எனப் பெண்களுக்கு மட்டுமே போதிப்பது ஏற்புடையதல்ல. ஆண்கள் கற்புநிலையில் இருந்து தவறினால் அதன் காரணமாக பெண்களும் எவ்விதம் கற்புநிலை கெடக்கூடும் என்பதை காரண காரிய விளக்கங்களோடு ‘பதிவிரதை’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதி எடுத்துரைத்திருப்பார்.
எனவே ஔவை கூறியதன் பொருளை, மேலோர் சொன்ன ஒழுக்கநெறியில் இருந்து பிறழ்ந்து விடாமல் உறுதியாக நடந்துகொள்ளுதலே கற்பென்பதாகும் என இருபாலரும் எடுத்துக்கொள்வதே சரி.
$$$
கொன்றைவேந்தன்- 15
காவல் தானே பாவையர்க்கு அழகு
விளக்கம்:
பாதுகாப்போடு இருத்தல் பெண்களுக்கு அழகு சேர்ப்பதாகும். அதாவது நன்மை தரக் கூடியதாகும்.
ஆண்களைவிடப் பெண்களுக்கு அபாயம் ஏற்படும் சூழல் அதிகம். ஆகையால் பெண்கள் முன்னெச்சரிக்கை உணர்வோடும், உரிய பாதுகாப்புகளோடும் இருப்பதுதான் அவர்களுக்கு நன்மை பயக்கும் என்கிறார் ஔவையார்.
‘நிர்பயா’ விவகாரங்கள் மலிந்துவிட்ட தற்காலச்சூழலில் இது மிகவும் ஏற்புடையதாகவே இருக்கிறது. காவல் என்பதற்கு வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்தல், முக்காட்டுக்குள் முடக்கிவைத்தல் போன்ற மூடத்தனமான அர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். புதுமைப்பெண்களாக அவர்கள் சாதிக்கின்ற போதிலும் பாதுகாப்பில் கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம் என்றே பொருள்கொள்ள வேண்டும்.
‘காவல்தானே’ என்று ஔவையார் ஏகரமாகக் கூறியிருப்பதால் பெண்கள் தாங்களாகவே மேற்கொள்ளும் பாதுகாப்புகள், கட்டுப்பாடுகள் ஆகியவை என்றும் பொருள்கொள்ளத் தகும். பிறரது காவல் என்ற பொருளில் இதைப் பார்த்தாலும்கூட அது அடக்குமுறைக் காவலாக அன்றி அனுசரணையான ஆதரவுக்காவலாக இருக்க வேண்டும்.
அதேநேரத்தில் ஆண்மை என்னும் அடக்கியாளும் திறனில் பிறரை மட்டுமல்ல தன்னைத்தானே அடக்கி ஆள்வது மிக மிக முக்கியம் என்பதை ஆண்கள் முழுமையாக உணர்கின்ற வரையில், குடும்பத்தையும் சமூகத்தையும் அன்பாலும் பண்பாலும் பேணுகின்ற பெண்களை உரிய காவலால் குடும்பமும் சமூகமும் பேணுகின்ற அவசியம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
$$$
2 thoughts on “கொன்றைவேந்தன் (11-15)”