வேப்ப மரம்

-மகாகவி பாரதி

இக் கதையை முதன்முதலாகக் கண்டறிந்து தமது  ‘பாரதி தமிழ்’ நூலில் திரு. பெ.தூரன் அவர்கள் பதிப்பித்தார். வேப்ப மரம் பேசுமா? பேசினால் என்ன பேசும்? அற்புதமான கற்பனை... அகஸ்த்ய மஹரிஷியும், தாம்ரபர்ணி யம்மனும் ஜலக்கிரீடை செய்வதாக எழுதும் கற்பனைவளத்தை மீறும் வகையில், மகாகவி பாரதிக்கே உரித்தான வேதாந்தச் சாயல் இக்கதையில் உண்டு.

இளவேனிற் காலத்தில் ஒரு நாள், காலை வேளையில் நான் மலயகிரிச் சார்பிலே தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். நெடுந்தூரம் சுற்றிய பிறகு என் உடம்பில் சற்றே இளைப்புண்டாயிற்று. அந்த இளைப்புத் தீரும் பொருட்டாக அங்கொரு தோப்புக்குள்ளே போய் ஒரு வேப்ப மரத்தடியில் படுத்துக் கொண்டேன், இன்பமான காற்று வீசிற்று. சிறிது நேரத்துக்குள் கண்ணயர்ந்து நித்திரையில் ஆழ்ந்து விட்டேன். அப்போது நான் கண்ட அபூர்வமான கனவை இங்கெழுதுகிறேன்.

நான் தூங்கிக் கொண்டிருக்கையில் “ஏ மனிதா, ஏ மனிதா, எழுந்திரு; எழுந்திரு” என்று அமானுஷிகமாக ஒலி யொன்று கேட்டது.

இந்த ஒலியைக் கேட்டவுடன் கண்ணை விழித்தேன். உண்மையாகவே விழிக்கவில்லை. கனவில் விழித்தேன். அதாவது, விழித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன்.

விழித்து, “யார் கூப்பிட்டது?” என்று கேட்டேன்.

“நான்தான் வேப்ப மரம்; நான்தான் கூப்பிட்டேன். எழுந்திரு” என்று மறுமொழி உண்டாயிற்று.

உடனே நான் யோசிக்கலானேன். ‘ஓஹோ, ஓஹோ! இது பேயோ, பிசாசோ, யக்ஷர், கிந்நரர், கந்தர்வர் முதலிய தேவ ஜாதியாரோ, வன தேவதைகளோ – யாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் வேப்ப மரம் எங்கேனும் பேசுவதுண்டோ ? அட, போடா, பேயாவது? அதெல்லாம் சுத்தக் கட்டுக் கதை யன்றோ? நாம் உண்மையாகவே கண்ணை விழித்து ஜாக்ரத நிலை யடையவில்லை. இன்னும் கனவு நிலையிலே தானிருக்கின்றோம். இந்த ஒலி கனவில் கேட்கும் கற்பனை யொலி:

இங்ஙனம் நான் யோசனை செய்து கொண்டிருக்கையில், “ஏ மனிதா, ஏ மனிதா, எழுந்திரு” என்று மறுபடி சத்தமுண்டாயிற்று.

“நீ யார்?” என்று பின்னுங் கேட்டேன்.

“நான் வேப்ப மரம். என் அடியிலேதான் நீ படுத்திருக்கிறாய். உனக்குச் சில நேர்த்தியான விஷயங்கள் கற்றுக் கொடுக்கும் பொருட்டாக எழுப்புகிறேன்” என்று மறுமொழி வந்தது.

அப்போது நான் ‘சரி, நமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லி யிருக்கிறார். அந்தப்படி மரங்களுக்குப் பேசும் சக்தி இருக்கலாம். அவ் விஷயம் நமக்கு இதுவரை தெரியாம லிருக்கலாம். ஆதலால், இந்த மரத்துடன் ஸம்பாஷணை செய்து விஷயத்தை உணர்ந்து கொள்வோம்’ என்றெண்ணிக் கண்ணைத் திறந்து கொண்டெழுந்து நின்றேன். (உண்மையாகவே எழுந்து நிற்கவில்லை. எழுந்து நின்றதாகக் கனவு கண்டேன்.)

எழுந்து நின்று கொண்டு, “வேப்ப மரமே, உனக்கு மனித பாஷை எப்படித் தெரிந்தது? மனிதரைப்போல் நெஞ்சு, வாய், தொண்டை , அண்ணம், நாக்கு, பல், உதடு என்ற கருவிகளில்லாதபோது மனித பாஷை பேசுவது ஸாத்யப்படாதே! எங்களிலே பல் மாத்திரம் விழுந்தவர்களுக்கும் உச்சரிப்பு நேரே வராமல் போகிறதே, அடி நாக்கில்லாதவர்கள் ஊமையாய்ப் போகிறார்களே. அப்படி யிருக்க, நீ மனித சரீரமே யில்லாமல் மனித பாஷை எங்ஙனம் பேசுகிறாய்?” என்று கேட்டேன்.

அப்போது வேப்ப மரம் சொல்லுகிறது: “கேளாய், மானுடா, மனிதனுக்கு ஒரே வாய் தானுண்டு, எனக்கு உடம்பெல்லாம் வாய். மனித பாஷை பேசுவதற்கு வாய் முதலிய புறக் கருவிகள் மனிதரைப் போலவே யிருத்தல் அவசியமென்று நீ நினைக்கிறாய். ஸாதாரண ஸ்திதியில் அவை அவசியந்தான். ஆனால், நான் ஸாதாரண மரமில்லை , நான் அகஸ்திய முனிவரின் சிஷ்யன். தமிழ்ப் பாஷையில் எனக்குள்ள ஞானம் இக்காலத்தில் அகஸ்த்யரைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது.”

வேப்ப மரம் பின்னுஞ் சொல்லுகிறது:

“நடந்த கதையை அடியிலிருந்து சொல்லுகிறேன். மானுடா, கவனத்துடன் கேள். எனக்கு இப்போது முப்பது வயது தானாகிறது. நான் இள மரம். பதினைந்து வருஷங்களின் முன்பு ஒருநாள் வஸந்த காலத்தின்போது, இரா வேளையில் ஆச்சர்யமான நிலா வீசிக் கொண்டிருந்தது. நான் விழித்துக் கொண்டிருந்தேன். ஸாதாரணமாக மரங்கள் மனிதரைப் போலவே பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருக்கும். இரவானவுடனே தூங்கும். அன்றிரவு எனக்கு எந்தக் காரணத்தாலோ தூக்கமே வரவில்லை. நிலாவையும், வானத்தையும், சூழ்ந்திருக்கும் மரங்களையும் பார்த்துக் கொண்டு பிரமாநந்தத்தில் முழுகி யிருந்தேன்.

“அப்போது பதினாறு வயதுடைய மிகவும் அழகான மனித ஆண் பிள்ளை யொருவனும், அவனைக் காட்டிலும் அழகான பன்னிரண்டு வயதுடைய மனிதப் பெண் ஒருத்தியும் அதோ தெரிகிற நதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சிறிது நேரத்துக்குள்ளே அவ்விருவரும் ஸாமான்ய மனித ரில்லை யென்பது எனக்குத் தெளிவாய் விட்டது. சிறகுக ளில்லாமல் அவர்கள் வானத்தில் பறந்து விளையாடுவது கண்டேன். பிறகு ஒருவருக் கொருவர் பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவ்விருவரும் யாரெனில், அகஸ்த்ய மஹரிஷியும், தாம்ரபர்ணி யம்மனும்.

“அகஸ்த்யர் ஸாதாரண காலத்தில் கட்டை விரலளவுடைய வடிவந் தரித்திருப்பது வழக்கம். ஆனால், அவர் காம ரூபி. அதாவது, நினைத்தபோது நினைத்த வடிவந் தரிக்கும் திறமை படைத்தவர். தாம்ரபர்ணி யம்மனும் அப்படியே. ஆதலால், அவ்விருவரும் அப்போது அதி சுந்தரமான மனுஷ்ய ரூபந் தரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள், அவர்களுடைய கிரீடை பொழுது விடியும் வரை நடந்தது. அப்பால் தாம்ரபர்ணி மறைந்து விட்டாள்.”

வேப்ப மரம் சொல்லுகிறது: “கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். தாம்ரபர்ணி யம்மன் பகலைக் கண்டவுடன் மறைந்து சென்று விட்டாள். அகஸ்த்யர் மாத்திரம் தனியாக வந்து எனதடியில், இப்போது நீ நிற்குமிடத்திலே படுத்துக்கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்தனர்.

“எனக்கு அந்த ஸமயத்தில் அகஸ்த்யருடைய சக்திக ளெல்லாம் நன்றாகத் தெரியாது. ஆதலால், அவர் யோகத்திலிருக்கிறா ரென்பதை அறியாமல் ஜலக் கிரீடையின் சிரமத்தால் ஸாதாரண நித்திரையி லிருக்கிறா ரென்று நினைத்தேன். பொழுது விடிந்து ஏறக்குறைய ஒரு ஜாமமாயிற்று.

“அப்போது அதோ, உனக்கெதிரே ஒரு புளியமரம் நிற்கிறது பார் -அந்த மரத்தின் கீழே யுள்ள புற்றிலிருந்து ஒரு பெரிய நல்ல பாம்பு ‘ஜூஸ்’ என்று சீத்காரம் செய்து கொண்டு அகஸ்த்யர் படுத்திருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து வரலாயிற்று. அதைக் கண்ட மாத்திரத்தில் நான் திடுக்கிட்டுப் போனேன்.

“ஐயோ! இந்தக் கொடிய பாம்பு இந்த மஹா புருஷனைக் கொன்றுவிடப் போகிறதே! இவரை எப்படியேனும் கண் விழிக்கும்படி செய்வோமானால், தம்முடைய தவ வலிமையினால் பாம்பை அடக்கி விடுவார் என்றெண்ணி அவரை விழிக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் என் இலைகளை அவர்மீது சொரிந்தேன். அவர் விழிக்கவில்லை. இதற்குள் பாம்பு அவரை நெருங்கி வந்து அவருடைய பாதத்தில் இரண்டு முறை கடித்தது. மூன்றாம் முறை கடிக்கும் பொருட்டும் படத்தைத் தூக்கிற்று.

“அத்தருணத்தில் அவர் கண்ணைத் திறந்து பார்த்துக் கயிற்றைத் தூக்குவதுபோல எளிதாக அந்தப் பாம்பைக் கையால் எடுத்துக் கழுத்தில் வளைய வளையச் சுற்றிக் கொண்டார். அந்தப் பாம்பும் கயிற்றைப் போலவே ஒன்றும் செய்யாமல் பரம ஸாதுவாக அவர் கழுத்தில் கிடந்தது. கடியுண்ட இடத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதில் அவர் கொஞ்சம் மண்ணை யெடுத்துப் பூசினார். புண் உடனே ஆறிப்போய் சாதாரணத் தோலாய் விட்டது.

“இதைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்ய மடைந்தேன். இப்படிப்பட்ட மஹானிடம் ஒரு வார்த்தை பேசக்கூட யோக்கியதை யில்லாமல், ஊமை மரமாய் பிறந்து விட்டோமே என்றெண்ணித் துயரப்பட்டேன். எப்படியேனும் எனது கருத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்பி, அவர் காலின்மீது சில மலர்களையும், இலைகளையும் சொரிந்தேன். அவர் தலையை நிமிர்த்து என்னை நோக்கி, “வேப்ப மரமே’ என்று கூப்பிட்டார்.

வேப்ப மரம் பின்னுங் கதை சொல்லுகிறது. “கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். இங்ஙனம் என்னை அகஸ்த்யர் கூப்பிட்டவுடனே என்னை யறியாமலே என் கிளைகளிலுள்ள வாய்களினின்றும், ‘ஏன் முனிவரே என்ற தமிழ்ச் சொற்கள் உதித்தன. என் உடம்பு முழுவதும் புளகிதமாய் விட்டது. மாற்றிப் பிறக்க வகை யறிந்து கொண்டேன்.

“வேப்ப மரப் பிறவிபோய் எனக்கு மனிதப் பிறவி யுண்டாயிற் றென்று தெரிந்து கொண்டேன்: உடம்பு மாறவில்லை. உடம்பு மாறினாலென்ன, மாறாவிட்டா லென்ன? நான் உடம்பில்லை. நான் ஆத்மா, நான் போதம், நான் அறிவு. திடீரென்று வேப்பமரச் சித்தம் மாறிப் போய் எனக்குள் மனுஷ்ய சித்தம் சமைந்து விட்டது. மனுஷ்ய சித்தம் ஏற்பட்டாலன்றி மனித பாஷை பேச வருமா? கோடி ஜன்மங்களில் நான் பெற்றிருக்க வேண்டிய பயனை அந்த முனிவர் எனக்கு ஒரே கணத்தில் அருள் செய்தார்.

“எனக்கேற்பட்ட ஆனந்த மிகுதியால் என் பூக்களையும் இலைகளையும் கணக்கில்லாமல் அவருடைய பாதத்தின்மீது வர்ஷித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி பூத்தவராய், ‘ஏ, வேப்ப மரமே, நேற்றிரவு நானும் தாம்ரபர்ணியும் இங்கு ராமநதியில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த காலத்தில் நீ பார்த்துப் பெரு மகிழ்வெய்திப் பல ஆசீர்வாதங்கள் கூறினாய். அதை நான் ஞான திருஷ்டியால் உணர்ந்தேன். அப்பால், சிறிது நேரத்திற்கு முன்பு நான் யோக ஸமாதியிலிருந்தபோது இந்தப் பாம்பு வருவதைக் கண்டு நீ என்னைக் காக்க விரும்பி, என்னை எழுப்பும் பொருட்டாக என்மீது நின் இலைகளையும் பூக்களையும் சொரிந்தாய்.

“இங்ஙனம் நீ என்னிடம் காட்டிய அன்பிற்குக் கைம்மாறாக உனக்கு நான் ரிஷி போதம் கொடுக்கிறேன். இதனால் உனக்கு ஸகல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாய்விடும். எல்லா ஜந்துக்களினிடத்திலும் ஸமமான பார்வையும், ஸமமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர்களிடத்திலும் தன்னையே காண்பதாகிய தேவ திருஷ்டி ஏற்படும். இவற்றால் நீ ஜீவன் முக்தி பெறுவாய்” என்றார்.

“அது முதல் நான் அவர் கூறிய சக்திக ளெல்லாம் பெற்று, யாதொரு கவலையு மில்லாமல், யாதொரு பயமுமில்லாமல் ஜீவன் முக்தி பதமடைந்து வாழ்ந்து வருகிறேன்” என்று வேப்ப மரம் சொல்லிற்று?

உடனே நான் அந்த வேப்ப மரத்தடியில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினேன்.

“உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டது.

அப்போது நான் அந்த வேப்ப மரத்தை நோக்கி, “உனக்கெப்படி அகஸ்த்யர் குருவோ, அப்படியே நீ எனக்குக் குரு. அந்த முனிவர் உனக்கருள் புரிந்த ஜீவன் முக்தி பதத்தை எனக்கு நீ எனக்கருள் புரிய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தேன்.

“கொடுத்தேன்” என்றது வேப்ப மரம்.

இந்த ஸமயத்தில் நான் உண்மையாகவே தூக்கந் தெளிந்து கண்ணை விழித்தெழுந்து நின்றேன்; எழுத்தாணிக் குருவிகளும், சிட்டுக் குருவிகளும், வேறு பலவிதமான குருவிகளும் பறந்து கூவி விளையாடிக் கொண்டிருந்தன. அணில்களும், ஓந்திகளும் ஆடியோடிக் கொண்டிருந்தன.

காக்கைகளும், கிளிகளும், பருந்துகளும், தட்டான் பூச்சிகளும், வேறு பலவகை வண்டுகளும் ஒளிக் கடலிலே களித் தோணி கொண்டு நீந்துவதுபோல் உலாவி வந்தன. கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஓராண் குயிலும், ஒரு பெண் குயிலும் ஒன்றுக்கொன்று காதற் பாட்டுக்கள் பாடிக் கொண்டிருந்தன.

ஆண் குயில் பாடுகிறது: “துஹு, துஹு, துஹு துஹு, துஹு, துஹு ராதா ரே” (இதன் பொருள்: நி, நீ, நீ நீ, நீ, நீ ராதை யடீ)

பெண் குயில் பாடுகிறது: “துஹு, துஹு, துஹு ராதா க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண”

வேப்ப மரம் தனது பசிய இலைகளை வெயிலில் மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தது.

‘என்ன ஆச்சர்யமான கனவு கண்டோம்’ என்றெண்ணி யெண்ணி வியப்புற்றேன். இதற்குள் வெயிலேறலாயிற்று. எனக்கும் பசியேறத் தொடங்கிற்று.

வேப்ப மரத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தோப்பினின்று புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s