-பத்மன்

கொன்றைவேந்தன்- 56
நைபவர் எனினும் நொய்ய உரையேல்
விளக்கம்:
பலவீனமானவரைக் கூட இளக்காரமாகப் பேசாதே என்கிறார் ஔவையார்.
நைதல் என்றால் கெடுதல், நிலை திரிதல், வருந்துதல், பலவீனமடைதல் எனப் பல பொருள் உண்டு.
நொய்ய என்றால் வருத்தம் ஏற்படும்படி, நோகும்படி என்று பொருள். நைபவர் என்னும் சொல்லுக்கு பலமற்றவர் என்பதோடு, தன் நிலையில் இருந்து கெட்டுப் போனவர், தன் நிலை இழந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
வசதியாக வாழ்ந்து கெட்டுப் போயிருக்கலாம், புத்தி பிசகிப் போனவராக இருக்கலாம். தன் தவறு காரணமாக பெருமை குன்றியவராக இருக்கலாம்.
இவ்வாறு ஏதோ ஒரு காரணத்தால் தன் நிலையில் இருந்து கெட்டுப் போனவராக ஒருவர் இருப்பினும், அவர் மனம் நோகும்படி பேசாதே என்கிறார் ஔவையார்.
பலமற்றவர், தவறிழைத்தவர் என்பதற்காக நோக அடிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்களுக்கும் மனம் இருக்கிறதே? நாம் மனம் போன போக்கில் ஏளனமாகப் பேசி விடலாமா?
இதனைத்தான் மகாகவி பாரதி, ‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ?’ என்று சீறுகிறார்.
நிலை இறக்கம் என்பதை ஏளனம் செய்து புண்படுத்துவது வக்கிர புத்தி. அது கூடாது. ஆகையால்தான் நைபவர் எனினும் நொய்ய உரையேல் என்று அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 57
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
விளக்கம்:
மென்மையானவரும் சுட்டுப் பொசுக்கும் திண்மையுடையவராக மாறுவர் என்று எடுத்தியம்புகிறார் ஔவையார்.
நொய் என்றால் நுண்மை, மென்மை, நலிவு என்று பொருள். நுணுக்கமாக, உடைந்த அரிசி, நொய் என்று கூறப்படுவதை நோக்கவும்.
வெய் என்றால் வெப்பம், சூடு, தீ என்று பொருள். வெய்யோன் என்பது சூரியனைக் குறிக்கும். வெப்பம் மிகுந்த வலிமை உடையது. யாரையும் எதனையும் வாட்டி எடுத்துவிடக் கூடியது. ஒருவர் சினந்தால் ‘அவர் சூடாயிட்டார்’ என்கிறோம்.
ஆற்றலும் வெப்பமாகத்தான் இருக்கிறது. ஆகையால் வெய்யவர் என்பது வலிமையுடையவர், சீற்றம் கொள்பவர் என்பதைக் குறிக்கிறது. சூரியனையும் குறிப்பதால் மேன்மை தங்கியவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
சிறார்களை நாம் மென்மை உடையவர்கள் எனக் கருதுகிறோம். அவர்களும் ஒரு காலகட்டத்தில் திண்மை உடையவராக மாறுகின்றனர். பெண்களையும் மென்மையானவர்கள் என்று கருதுகிறோம். ஆயினும் அவர்கள் சீறும்போது ‘பூவொன்று புயலானது’ எனக் கூறத்தக்க வகையில் திண்மை உடையவராக மாறுவர்.
உடல் வலிமையற்றவர்கள், செல்வாக்கு இல்லாதவர்கள், வறுமையில் உழல்பவர்கள் ஆகியோரை நொய்யவர் எனக் கருத இடமுண்டு. இத்தகையோரை அரவணைக்காமல் அலட்சியப்படுத்தினால், தொடர்ந்து அவமானப்படுத்தினால், அவர்களும் அறச்சீற்றம் கொண்டு வெய்யவர்களாக மாறுவர். அப்போது நாடு தாங்காது. ஆகையால், நலிவடைந்தவர்களும் சீற்றம் கொண்டால் வலிமையுடையவர்களாக மாறிவிடுவர் என்பதை எடுத்துரைக்கிறார் ஒவையார்.
இதனை வேறொரு கோணத்திலும் சிந்திக்கலாம். நொய்யவர் என்பதற்கு நுட்பமானவர், நுணுக்கமானவர் எனப் பொருள் எடுத்துக் கொள்ளலாம். அவ்வகையில், நுட்பமாகச் சிந்திப்பவர்கள் வலிமையுடைவர்களாக மேன்மை அடைவர் என்று கூறுகிறார் ஔவையார்.
இன்னும் வேறு ஒரு கோணத்தையும் பார்க்கலாம். நொய்யவர் என்பவர் யோகத்தில் திளைத்து உடலை நலிவடையச் செய்து, உள்ளத்தில் நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து பரம்பொருளைக் கண்டடைவர். அத்தகையவர் ஒளிபொருந்திய சூரியனைப் போல, புதியதொரு தெய்வம்போல மேன்மை அடைவர் என்றும் ஔவையார் உபதேசிக்கிறார்.
ஆக, பல்வேறு கோணங்களிலும், ‘நுண்மையுடையோர் திண்மையுடையோராகமாறுவர்’ என்பதை எடுத்துரைத்துள்ளார், ஓரடியில் உன்னதங்களை ஓதும் நமது ஔவை மூதாட்டியார்.
$$$
கொன்றைவேந்தன்- 58
நோன்பு என்பது கொன்று தின்னாமை
விளக்கம்:
பிற உயிரைக் கொன்று தின்பதைத் தவிர்ப்பதே சிறந்த விரதம் என்றுரைக்கிறார் ஔவையார்.
நோன்பு என்றால் உறுதியாகக் கடைபிடிக்கும் விரதம் எனப் பொருள்படும். அறநெறிகளில் அசையாது நிற்றலும் நோன்பே. வேண்டுதலுக்காகவோ மனவலிமைக்காவோ ஒரு நாள் உண்பதை விலக்குவதோ, வாயடக்கம் பூணுவதோ மட்டும் விரதம் அல்ல. வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து ஒழுகும் ஒழுக்கமும் விரதமே. அவ்வகையில் புலால் உண்ணாமை மிகச் சிறந்த நோன்பாகும்.
காட்டு மிருகங்கள் பசிக்காக இரையை அடித்துத் தின்பது வேறு. மனத்தால் சிந்திக்கவும் மாற்று வழிகளில் புசிக்கவும் தெரிந்த மனிதன் பசிக்காகவோ ருசிக்காகவோ கொன்று தின்பது என்பது வேறு. அவ்வாறு கொன்று தின்னாமை விரதம் ஆகும்.
‘அஹிம்சா பரமோ தர்ம:’ என்கிறது உபநிஷதம். கொல்லாமையே மாபெரும் அறம். கொன்று தின்னாமை மாபெரும் விரதம். அதனால்தான் திருவள்ளுவரும் புலால் மறுத்தல் எனத் தனி அதிகாரமிட்டு பத்துக் குறட்பாக்களை மொழிந்துள்ளார்.
ஊன் உண்ணும் சிலர், ‘தான் கொல்வதில்லை, யாரோ கொல்கிறார்கள், நான் தின்கிறேன்’ என்பார்கள். அதற்காகத்தான் திருவள்ளுவர்,
தினற்பொருட்டு கொல்லா துலகெனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவா ரில்
-என்றுரைத்துள்ளார் (திருக்குறள்- 256).
தான் தின்பதற்காகப் பிற உயிர்களைக் கொல்வதை உலக மக்கள் தவிர்த்துவிட்டால் இறைச்சியை விலைக்கு விற்கும் வழக்கமும் மறைந்துவிடும் என்கிறார். ஊன் தின்பதாலேயே பிற உயிர்கள் கொலையுறுகின்றன.
ஆகையால் கொன்று தின்னாமை என்று ஔவையார் கூறியிருப்பதும், தானே கொன்று தின்னுதல் மற்றும் பிறர் கொன்று அதைத் தின்னுதல் ஆகிய இரண்டையுமே குறிக்கிறது.
அருள் வேண்டுகின்ற மானுடர், ஊன் உண்ணாது இருத்தலை மிகச் சிறந்த கோட்பாடாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதைத்தான் ‘நோன்பு என்பது கொன்று தின்னாமை’ என்று அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 59
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
விளக்கம்:
ஒருவருக்கு ஏற்படும் விளைவைக் கொண்டே அவரது நற்செயல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ஔவையார்.
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். விதை ஒன்று போட சுளை வேறு விளையாது. இவையெல்லாம் முன்னோர்தம் அனுபவ உரைகள். தீமை செய்தவன் நன்கு வாழ்வதைப் போல காட்சி தருவான். ஆனால் திகைத்திட வீழ்ச்சி அடைவான். நல்லவன் துயருறுவதைப் போலத் தோன்றும். ஆனால் அவனது தர்மம் தலைகாக்கும், தலைமுறைகளையும் காக்கும்.
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார்.
அவையெல்லாம் நம் கர்ம வினைகளின் விளைவுகளே. ஆகையால் நன்றே செய்ய வேண்டும்.
நமக்கு ஏற்படும் விளைவுகளே நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.
விளைந்த பயிர்களைக் கொண்டு அது விளைந்த நிலத்தின் தன்மையையும் விதையின் தன்மையையும் அறிந்துகொள்ள முடிகிறதென்றால், விளைவுகளின் தன்மையை வைத்து செய்கையின் தன்மையை நிர்ணயம் செய்துவிட முடியாதா?
இதனைத்தான் ‘பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்’ என எடுத்துரைக்கிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 60
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
விளக்கம்:
பால் பாயச விருந்தாக இருந்தாலும் சாப்பிடுவதற்குரிய காலம் அறிந்து உணவருந்த வேண்டும் என்கிறார் ஔவையார்.
வயிறு என்பது கண்டதையும் இட்டு நிரப்புகின்ற கூடை அல்ல. அது மிகச் சிறந்த இயந்திரம்.
உணவை உள்வாங்கிச் செரித்து உடலுக்குத் தேவையான ஊட்டங்களைப் பிரித்துக் கொடுத்து கழிவுகளை வெளியேற்றும் மாபெரும் தொழிற்சாலை வயிறு.
அதிலும் முறைப்படி இயங்குகின்ற ஆலையே வயிறு என்பது நாம் முக்கியமாக உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயம்.
பசியை உணர்த்தி உணவைக் கேட்பதும் வயிறே. புசித்ததைப் பயனுள்ளதாய் ஆக்குவதும் வயிறே. அது சரியான கால இடைவெளியில் இப்பணியை ஆற்றுகிறது. இந்த இயற்கையை மாற்ற முடியாது. ஒருநாள் முழுவதும் சாப்பிட்டுவிட்டு பல நாள் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது.
‘ஒருநாளைக்கு உணவை ஒழியென்றால் ஒழியாய், இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்’ என்று ஔவையாரே கிண்டலாக வயிற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
வயிறு இவ்வாறு முறையாக இயங்குவதன் மூலம் நம்மையும் முறையாக இயங்கச் செய்கிறது. ஆகையால் வாயின் ருசிக்காக வயிற்றைக் கெடுத்தல் கூடாது.
பால் உடலுக்கு நல்லதுதான். பால் கலந்த பதார்த்தங்கள் சுவையானவை தாம். அதற்காக காலம் தவறி உண்டால் பிரச்னையே. ‘அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ வயிற்றில் இருக்கும் உணவு செரிமானமாகாத காலத்தில் மேற்கொண்டு அடைத்தால் அது தீங்காகவே முடியும்.
உடல்நலம் இல்லாதபோது பால், கஞ்சி போன்ற எளிய உணவுகளையே உண்ண வேண்டியிருக்கும். அதனையும் உரிய காலத்தில் அருந்த வேண்டும். இல்லையேல் பயனில்லை.
இதனால்தான் பால் கலந்த விருந்தாக இருந்தாலும் சரி, பால் கலந்த பத்திய உணவாக இருந்தாலும் உரிய காலத்தில் முறையாக உண்ண வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.
$$$
2 thoughts on “கொன்றைவேந்தன் (56-60)”