மகாவித்துவான் சரித்திரம் -2 (4அ)

-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்

4 அ. பட்டீச்சுரம் போய் வந்தது

திருவிடைமருதூர் சென்றது

வண்டியில் இவர் ஏறியவுடன் இவர் உத்தரவின்படி அதில் நான் ஏறச் செல்லுகையில் பஞ்சநதம் பிள்ளை விரைந்துவந்து என் கையிலிருந்த புதிய புத்தகங்களையெல்லாம் வெடுக்கென்று பறித்தார்; “படிப்பதற்கு எனக்கு வேண்டாமா?” என்றேன். “ஒவ்வொன்றிருந்தால் உமக்குப் போதும். மற்றவைகளை வைத்துக்கொண்டு இப்போது நீர் என்ன செய்யப் போகிறீர்?” என்று சொல்லி என்னுடைய விருப்பத்தின்படி ஒவ்வொன்றைக் கொடுத்துவிட்டு மற்றவைகளைத் தாம் வைத்துக்கொண்டார்.

அப்பால் இவர் திருவிடைமருதூருக்குச் சென்றார். சென்றபொழுது வண்டியில் அநேக விஷயங்கள் இவருடைய சம்பாஷணையால் தெரியவந்தன.

திருவிடைமருதூரிலுள்ள ஓரன்பர் வீட்டிற்குச் சென்று அங்கே இவர் தங்கினார். அநுஷ்டானம் செய்துவிட்டுப் பின்பு சயனித்துக் கொண்டார். மிகவும் தளர்ந்த சரீரமுடையவராதலால், மடத்திலிருந்து பாடஞ்சொல்லும் பொழுதல்லாத சமயங்களிலெல்லாம் இவர் பெரும்பாலும் சயனித்துக்கொண்டே பாடஞ் சொல்லுதல் முதலியவற்றை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். நான் இவர் அருகில் இருந்தேன். அப்பொழுது சில நூல்களில் உள்ள அரிய பாடல்களைச் சந்தர்ப்பத்துடன் கூறிப் பொருளும் சொன்னதன்றித் திருவாவடுதுறை மடத்தில் 14 – ஆம் பட்டத்திலிருந்த வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய இயல்புகளையும் அவரைச் சார்ந்து தாம் அடைந்த பயன்களையும் சொன்னார்; அவர்பால் தாம் தெரிந்து கொண்ட *1 சில செய்யுட்களைச் சொல்லி என்னை எழுதிக்கொள்ளும்படி செய்து அவற்றின் பொருளையும் என் மனத்திற்படும்படி அறிவுறுத்தினார். அப்பால்,

(வெண்பா)  

*2 “பண்டுமைக்கோர் பால்கொடுத்த பண்பனைக்கோ டீச்சரத்துக்
கண்டுமயல் கொண்டவன்றாள் கண்ணுற்றாய் - ஒண்டொடியாய்
வந்திநின்றார் வந்தரக்கேண் மாலையெங்கண் மாதினுக்குத்
தந்திநின்றார் தந்திடென்று தான்”

என்பதை எழுதிக்கொள்ளச் செய்து அதற்குப் பொருள் சொல்லுமென்றார். அச்செய்யுள் முடிந்ததுபோல முடியாது நிற்றலையறிந்து நான் பொருள் சொல்லுதற்குத் தடுமாறினேன். இவர் புன்னகை கொண்டு அச்செய்யுட்குப் பொருள் கூறி, “இச் செய்யுள் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப் பெற்றது; அவரால் நூற்றுக்கணக்கான தனிச்செய்யுட்கள் இதைப் போலவே செய்யப்பட்டுள்ளன” என்று அவருடைய கவித்துவ சக்தியையும் வரலாற்றையும் பாராட்டிக் கூறினர்.

தியாகராச செட்டியாரைப் பார்த்தது

திருவிடைமருதூரிலிருந்து காலையிற் புறப்பட்டுச் செல்லுகையில் நான், “தியாகராச செட்டியாரவர்களைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு அதிகமாக இருக்கிறது. இப்பொழுது கும்பகோணத்தின் வழியாகவே பட்டீச்சுரத்திற்கு விஜயம் செய்யக் கூடுமோ?” என்று கேட்டேன். அதற்கு இவர், “தியாகராசை முன்னம் பார்த்திருப்பதுண்டா?” என்று கேட்டார். அவர்களைப் பார்த்ததில்லை; கும்பகோணத்திற்கு உத்தமதானபுரம் அருகிலுள்ளதாதலின் அவர்களுடைய புகழ் அந்தப்பக்கத்தில் மிகப் பரவியிருந்தது. தமிழிற் சிறந்த பயிற்சியுடையவர்களென்றும் நன்றாகப் பாடம் சொல்லக் கூடியவர்களென்றும் எல்லோரும் அவர்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்ளுதலை நான் கேட்டிருக்கிறேன். தக்கவர்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்னும் ஆவலுடனிருந்த நான் அவர்களுடைய கீர்த்தியைக் கேட்டு அவர்களிடமே போய்ப் பாடங்கேட்க வேண்டுமென்று விரும்பினேன். அதற்குரிய செளகரியங்கள் எனக்கு வாயாமையால் வேறு சிலரிடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்பால் நாளாக நாளாக அவர்களையும் அவர்களைப் போன்ற பலரையும் படிப்பித்து முன்னுக்கு வரச் செய்தவர்கள் ஐயா அவர்களென்றும் இங்கே படித்தால் அடையும் பயன் அதிகமாக இருக்குமென்றும், செட்டியாரவர்கள் மாணாக்கரும் பாபநாசம் பள்ளிக்கூட உபாத்தியாயராக இருந்தவருமான இராகவையர் முதலியவர்கள் சொல்லக் கேட்டதன்றி இவ்விடத்துப் புகழை அதன் பின்பு பலரிடத்தும் கேட்டு நன்றாகத் தெரிந்துகொண்டுதான் இங்கே வந்தேன்” என்று சொன்னேன்.

இவர், “தியாகராசு சிறந்த புத்திமான்; நல்ல பயிற்சியும் தெளிவும் சொல்வன்மையும் உள்ளவன். இன்று அவனைப் பார்த்துவிட்டுத்தான் நான் பட்டீச்சுரம் போகக் கூடும். ஆதலால் நீரும் அவனைப் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே கும்பகோணம் சென்று ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் கோயிலின் தெற்கு வீதியிலுள்ள அவருடைய வீட்டுத் திண்ணையில் ஏனையவர்களோடும் இருந்தார். விசாரித்த பொழுது வீட்டில் அவர் இல்லையென்று தெரியவந்தது.

உடனே அவரிடம் படித்துக்கொண்டிருந்த திருக்கருகாவூர் மாதவிவனம் பிள்ளையென்பவர் ஓடிப்போய்ச் சொல்ல, செட்டியார் வேகமாக வந்து, “ஏன் இங்கே இருக்கிறீர்கள்? உள்ளே போய் இருக்க வேண்டாமா?” என்று சொல்லி வந்தனம் செய்து விட்டு எழுந்து பஞ்சநதம் பிள்ளையைப் பார்த்து, “சீக்கிரம் சமையலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று சொன்னார். அப்போது இவர், “பட்டீச்சுரத்திற்கு இன்று அவசியம் போக வேண்டியிருக்கிறது. (என்னைச் சுட்டி) காலையில் ஆகாரம் செய்து கொள்வது இவருக்கு வழக்கம்; ஆதலால், சீக்கிரம் ஆகாரம் பண்ணுவித்தால் நலமாக இருக்கும்” என்று சொன்னார். செட்டியார் உடனே தமக்குத் தெரிந்த ஒரு வீட்டுக்கு என்னை அனுப்பி ஆகாரம் செய்வித்தார்.

நான் ஆகாரம் செய்துகொண்டு வந்தபின்  செட்டியார் என்னைச் சுட்டி  பிள்ளையவர்களை நோக்கி, “இவர் யார்?” என்றார். “இவர் சில மாதங்களாக என்னிடம் படித்து வருகிறார். சில பிரபந்தங்கள் பாடங்கேட்டிருக்கிறார்” என்று சொல்லிவிட்டு உடனே இவர் புறப்பட்டார். செட்டியாரும் வேறு சிலரும் உடன் வருவாராயினர்.

தியாகராச செட்டியாரோடு சம்பாஷித்தது

செட்டியார் என்னை நோக்கி, “என்ன பாடங்கேட்கிறீர்?” என்றனர். இவர், “எங்கேனும் ஓரிடத்திலிருந்து கேட்கலாமே” என்றார். அப்பாற் போய் ஸ்ரீகும்பேசுவரர் கோயிலில் மேற்கு வாயிற்கு நேரே உட்புறத்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியமூர்த்தி கோயிலின் முன் மண்டபத்தில் இவர் அமர்ந்தார். மற்றவர்களும் உடன் இருந்தார்கள். தியாகராச செட்டியார், “ஏதேனும் ஒரு பாடலைச் சொல்லி அதற்குப் பொருளும் சொல்லும்” என்று,   என்னைக் கேட்டார். நான் துறைசையந்தாதியிலிருந்து,

(கட்டளைக் கலித் துறை)
 
*3 “அண்ணா மலையத் தனைஞானக் கோமுத்தி யண்ணலையாம்
அண்ணா மலையத் தனைவினை யாலயர்ந் தாந்தமிழை
அண்ணா மலையத் தனையாண்ட வாபல் லமரருக்கும்
அண்ணா மலையத் தனையொப்ப வாவென் றறைந்திலமே”

என்ற பாடலைச் சொல்லிப் பொருளுஞ் சொன்னேன். அப்பால் அவருடைய விருப்பத்தின்படி, வேறு நூல்களிலிருந்தும் சில பாடல்களைக் கூறிப் பொருளும் சொன்னேன். சொன்ன பின்பு செட்டியார், “துறைசை யந்தாதியைப் பாடஞ் சொல்லுவீரா?” என்று கேட்டார். அவருடைய கல்விப் பெருமையையும் புகழையும் தக்கவர்கள் சொல்ல நன்றாகக் கேட்டறிந்தவனாதலால். திடீரென்று விடை சொல்லுவதற்கு ஒன்றும் தோன்றாமல் சும்மா இருந்து விட்டேன். அப்போது இப்புலவர் கோமான், “நீ அந்த அந்தாதிக்குப் பொருள் கேட்டதில்லையோ?” என்று செட்டியாரைக் கேட்டார். அவர், “திருச்சிராப்பள்ளியிலிருந்து நான் கும்பகோணம் வரும்வரையில் நீங்கள் இயற்றிய நூல்களுக்குப் பொருள் கேட்டிருக்கிறேன். அப்பால் நீங்கள் செய்த நூல்கள் சாதாரணமானவைகளாக இருந்தால் நான் ஒருவாறு தெரிந்து கொள்ளுவேன்; பாடமுஞ் சொல்லுவேன். இந்த மாதிரியான யமகம் திரிபுகளாயிருந்தால் பெரும்பான்மையான பாகங்கள் எனக்கு விளங்கா. நீங்கள் திருவாவடுதுறை மடத்துக்குச் சென்று பழகுவதற்கு முன்பு பாடிய பாடல்களின் இயல்பு வேறு; அப்பாற் செய்த நூல்களின் இயல்பு வேறு. அவற்றுள் ஒவ்வொன்றிலும் அரிய விஷயங்களும், *4 சாஸ்திரக் கருத்துக்களும் நிரம்பியுள்ளன. ஏதேனும் ஒரு பிரபந்தத்தை எடுத்துக்கொண்டு வந்து யாரேனும் இதற்குப் பொருள் சொல்லுங்களென்று கேட்டாலும், சந்தேக நிவர்த்தி செய்ய வேண்டுமென்றாலும் எனக்கு ஒன்றும் புரிவதில்லை. துறைசை யந்தாதியைப் போன்ற நூல்களைப் பாடங்கேட்டே தீரவேண்டும். திருச்சிராப்பள்ளி *5 சதாசிவம் பிள்ளை சில மாதங்களுக்கு முன்பு இதைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து பாடஞ் சொல்ல வேண்டுமென்று சொன்னான். படித்துப் பார்த்தேன்; ஒன்றும் புரியவில்லை. ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்ளென்று அனுப்பினேன். அவன் வந்திருக்கக் கூடுமே. அவனைப் போல் இன்னும் யாராவது இதைத் தூக்கிக்கொண்டு வந்து உபத்திரவம் செய்தால் இவரிடம் தள்ளிவிடலாமே என்று எண்ணித்தான் இப்பொழுது இவரைக் கேட்டேன்” என்று சொன்னார். அப்போது உடனிருந்த ஆறுமுகத்தா பிள்ளை, “ஐயா அவர்கள் முன்னமே பட்டீச்சுரத்திற்கு ஒரு பதிற்றுப்பத்தந்தாதி செய்திருக்கிறார்கள். அந்த நூலை நீங்கள் கேட்டதுண்டா?” என்றார். தியாகராச செட்டியார், “கேட்டதில்லை; அதில் ஒரு செய்யுள் ஞாபகமிருந்தால் சொல்லவேண்டும்” என்று ஆவலுடன் கேட்கவே ஆறுமுகத்தா பிள்ளை,

(விருத்தம்)

"வரைமா திருக்கு மொருகூறு மழுமா னணிந்த திருக்கரமும்
அரைசேர் வேங்கை யதளுடையும் அரவா பரணத் தகன்மார்பும்
விரைசேர் கொன்றை முடியுமரை மேவு மடியும் வெளித்தோற்றி
நரைசேர் விடையான் றிருப்பழைசை நகரி லருளப் பெற்றேனே"

என்ற செய்யுளைச் சொன்னார். சொல்லியபொழுது செட்டியார் அவரையும் பிள்ளையவர்களையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, “இந்தப் புஸ்தகம் உங்களிடம் இருக்கின்றதா? இருந்தால் கிழித்துத் *6 திருமலைராயனாற்றிற் போட்டுவிடுங்கள்; இந்தப் பாடலையாவது இதிலுள்ள வேறு பாடலையாவது, படித்த யாரிடத்தும் ஐயா செய்ததாக இனிச் சொல்ல வேண்டாம்; சொன்னால் ஐயா செய்ததேயன்றென்று துணியைக் கீழே போட்டுத் தாண்டிப் பிரமாணம் செய்து விடுவார்கள். இப்போது ஐயாவவர்கள் செய்கிற நூல்களோ தனிப் பாடல்களோ ‘தங்கந் தங்கமாக’ இருக்கின்றன; அர்த்தபுஷ்டி அமைந்தனவாகவும் கம்பீர நடையுள்ளனவாக வுமிருக்கின்றன, அவைகளைக் கேட்ட காதுக்கு இந்த அந்தாதிச் செய்யுட்கள் நன்றாகவே இரா. இந்தச் சமயத்திலேயா இந்தப் பாட்டை நீங்கள் சொல்லுகிறது! இனி மறந்தே விடுங்கள். மறுபடியும் சொல்லுகிறேன்; புத்தகத்தைப் பரிகரித்துவிடுங்கள்” என்று வற்புறுத்திக் கூறினார்; பின்பு பிள்ளையவர்களை நோக்கி, ” இப்படியும் ஒரு நூல் நீங்கள் பாடினதுண்டா? எதன்பொருட்டு இதைச் செய்தீர்கள்? செய்ததாக ஞாபகம் இருக்கின்றதா? சொல்லுங்கள்” என்று கேட்டார்.

“என்னப்பா மேலே மேலே ஓடுகிறாய்? இந்த மாதிரியான நூலை நான் செய்திருக்கக்கூடாதா? முன்பு *7 தம்பியின் தந்தையாராகிய நமச்சிவாய பிள்ளையவர்கள் காலத்தில் நான் செய்து அரங்கேற்றியதுண்டு. சாதாரணமான ஜனங்களுக்கு இப்படி இருந்தால் தானே தெரியவரும்? கடினமாக இருந்தால் அவர்கள் அறிவார்களா? மனத்திற்படுமா?” என்று பக்குவமாக விடையளித்தார். செட்டியார், “ஆனால் சரி. தங்களுக்கு அகௌரவம் உண்டாகக் கூடாதென்று சொன்னேனேயன்றி வேறொன்றுமில்லை. அது கிடக்கட்டும். நேரமாய்விட்டது. புறப்பட வேண்டும்” என்று சொன்னார்.

இங்ஙனம் சொல்லிவிட்டுச் செட்டியார் எழுந்து என்னைப் பார்த்து, “நீர் நன்றாகப் படிக்க வேண்டியவற்றைப் படித்துக் கொள்ளும். கூட இருப்பதையே பெரும்பயனாக நினைந்து சிலரைப்போல் வீணே காலங்கழித்துவிடக் கூடாது; சிலகாலம் இருந்துவிட்டுத் தெரிந்துவிட்டதாக பாவித்துக்கொண்டு சொல்லாமல் ஓடிப்போய்விடவும் கூடாது. இப்படிப் பாடம் சொல்லுபவர்கள் இக்காலத்தில் யாரும் இல்லை. உம்முடைய *8 நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்” என்று சொல்லி இவரிடம் விடைபெற்றுத் தம் வீடு சென்றார்.

செட்டியாருடைய வார்த்தைகள் எனக்கு அமிர்த வர்ஷம் போலேயிருந்தமையால் அவற்றைக் கருத்திற் பதித்து அங்ஙனமே நடந்து வருவேனாயினேன்.

பட்டீச்சுர முதலியவற்றின் வரலாறு

அப்பால் இவர் பட்டீச்சுரத்திற்குப் புறப்பட்டார். போகும்பொழுது இடையிலுள்ள தாராசுரமென்னும் தலத்தின் பெருமையையும் *9 சோழன் மாளிகையின் வரலாற்றையும் சத்திமுற்றம், பட்டீச்சுரம் முதலிய தலங்களின் பெருமைகளையும் சொல்லிக்கொண்டே போனார். ஊர் சேர்ந்தவுடன் ஆறுமுகத்தா பிள்ளை தம்முடைய வீட்டிற்கு எல்லோரையும் அழைத்துச் சென்றார்.

பட்டீச்சுரம் முதலியவற்றின் பெருமை

பட்டீச்சுரம் முதலிய ஊர்களின் காட்சி என் கண்ணைக் கவர்ந்தது. பட்டீச்சுரமும் திருச்சத்திமுற்றமும் சோழவரசர்களுடைய அரண்மனையிருந்த இடத்தின் பக்கத்தன. பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், வடதளி அல்லது வள்ளலார்கோயில், முழையூர், பாற்குளம், *10 கோபிநாதப்பெருமாள் கோயில், திருமேற்றளி முதலிய பல தலங்களைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கிற ‘பழையாறை’ என்னும் ஒரு பழைய நகரம் பண்டைக் காலத்தில் இவ்விடத்தே நல்ல நிலைமையில் இருந்ததுண்டு; அது சோழவரசர்களுடைய பழைய இராசதானி. அது தனியே கீழைப்பழையாறையென்ற சிறியதோர் ஊராக இப்பொழுது தென்பாலுள்ளது; பெரிய புராணத்தில்,

 “பாரி னீடிய பெருமைசேர் பதி *11 பழை யாறை”

                 (அமர் நீதி. க.)

எனக் கூறியிருப்பது இத்தலமே. இந்த நகரத்தினிடையே திருமலை ராயனென்னும் ஓராறு ஓடுகின்றது.

அது நானூறு வருடங்களுக்கு முன்பு திருமலைராயன்பட்டினத்தேயிருந்து அரசாட்சி செய்த மாலைப்பாடித் திருமலைராயனென்னும் அரசனால் வெட்டுவிக்கப்பட்டதென்பர். இதிற் பழமையான கட்டிடங்கள் இருந்ததைத் தெரிவிக்கும் பல அடையாளங்களை இப்போது காணலாம். பட்டீச்சுரத்தின் வடக்கு வீதியே திருச்சத்திமுற்றத்தின் தெற்கு வீதியாகவுள்ளது.

மதுரையையடைந்து பாண்டிய அரசனுடைய அவைக்களத்தைச் சேரமுடியாமற் சில தினம் காத்திருந்து, “நாராய் நாராய் செங்கானாராய்” என்ற தொடக்கத்தையுடைய ஓர் அகவலைப் பாடி அரசனைக் கண்டு பரிசுகளைப் பெற்றுவந்த சத்திமுற்றப் புலவரென்ற சிறந்த தமிழ்க் கவிஞர் மிக்க செல்வத்தோடு இருந்து விளங்கிய இடம் இந்தச் சத்தி முற்றமே; “எம்மூர்ச்சத்திமுற்றத்து வாவியுட்டங்கி” என அச்செய்யுளிற் குறிக்கப்பட்ட வாவி (தடாகம்) இப்பொழுதும் இவ்வூர்ச் சிவாலயத்தின் தென்புறத்தே நல்ல நிலைமையிலுள்ளது.

தஞ்சைமா நகரத்திலிருந்து முன்பு அரசாண்ட அச்சுதப்ப நாயக்கரென்பவரிடம் மந்திரியாக இருந்து பல கருமங்களையும் அவரைக் கொண்டு நடத்துவித்ததன்றி வடமொழி, தென்மொழிப் புலவர்களையும் ஸங்கீத வித்துவான்களையும் ஆதரித்தவரும் திருவையாறு திருநாகேச்சுரமென்னும் ஸ்தலங்களின் வடமொழிப் புராணங்களைத் தக்க கவிஞர்களைக் கொண்டு தமிழிற் செய்வித்தவருமாகிய ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரென்னும் அந்தணர்பெருமான் வஸித்த இடம் பட்டீச்சுரம் ஸ்ரீ தேனுபுரேசர் ஆலயத்தின் தென்பாலுள்ளதாகிய அக்கிரஹாரத்தின் மேல்சிறகிலுள்ள வீடுகளில் ஒன்று. அவருடைய பூஜை மடம் திருமலைராயனாற்றின் வடகரையில் மிகப் பெரிதாக இருந்து பின்பு இடிந்து கிடந்தது; இப்போது அதுவும் இருந்த இடம் தெரியாமற் போயிற்று; கோவிந்த தீக்ஷிதருடைய பிம்பமும் அவருடைய பத்தினியார் பிம்பமும் கைகுவித்து நிற்கும் வண்ணமாகப் பட்டீச்சுரத்தின் கோயிலில் தேவியின் ஸந்நிதானத்தின் தென்புறமாக உள்ளன.

இக்கவிஞர் கோமான் பட்டீச்சுரம் சென்ற தினத்தின் மாலையில் திருமலைராயனாற்றிற்கு என்னையழைத்துச் சென்றார். இடையிலே காணப்படும் இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி அவற்றின் சரித்திரங்களைச் சொல்லிக்கொண்டே போனார். கோயிலில் ஸ்ரீ ரிஷபதேவர் ஸந்நிதியினின்றும் முற்றும் விலகியிருத்தலைக் கண்டு அதற்குக் காரணம் என்னவென்று கேட்டேன். திருச்சத்திமுற்றத்திலிருந்து முத்துப்பந்தரின் கீழே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் கோபுரவாயில் வழியே எழுந்தருளும் கோலத்தைத் தாம் பார்த்தற்கு விரும்பி ஸ்ரீ தேனுபுரேசர் விலகியிருக்கும்படி கட்டளையிட அதைக் கேட்டு ரிஷபதேவர் விலகியிருந்தனரென்பது பழைய வரலாறு” என்று இவர் விடையளித்தார்.

தமிழபிமானிகள் முதலியோர் வந்துபோதல்

பட்டீச்சுரத்திற்கு இவர் வந்திருத்தலையறிந்து அவ்வூரிலுள்ள தமிழபிமானிகளும் கும்பகோணத்திலும் அயலூர்களிலும் இருந்த வித்துவான்களும் பிரபுக்களும் அடிக்கடி வந்து இவரோடு அளவளாவி இன்புறுவதன்றிப் படித்தவற்றில் தமக்குள்ள ஐயங்களைப் போக்கிக் கொண்டும் பல அரிய நூற்பொருள்களை அறிந்து கொண்டும் செல்வார்கள். தியாகராச செட்டியாரும் தம்முடைய மாணாக்கர்களோடு விடுமுறை நாட்களில் வந்து பார்த்துவிட்டுச் செல்வார்; பழைய மாணாக்கர்களாகிய தஞ்சை காலேஜ் உபாத்தியாயர் ஐயாசாமி பிள்ளை, இராமகிருஷ்ண பிள்ளை முதலியவர்களும் சுந்தரப் பெருமாள் கோயில் அண்ணாஸாமி ஐயர், கதிர்வேற்பிள்ளை முதலியவர்களும் வந்து தெரிந்துகொள்ள வேண்டியவற்றைத் தெரிந்துகொண்டு போவார்கள். யார் வந்தாலும் தமிழ் நூல்களைப் பற்றிய சம்பாஷணைகளே நடைபெறும்.

முற்கூறிய சோழன் மாளிகையென்னும் ஊரில் மிக்க பூஸ்திதியுள்ளவரான இரத்தினம் பிள்ளை யென்னும் கனவான் அக்காலத்தில் இவருடைய ஓய்வு நேரங்களில் வந்து திருவிளையாடற் புராணம் முதலிய சில காப்பியங்களையும் சில பிரபந்தங்களையும் பாடங்கேட்டுச் செல்லுவார். சத்திமுற்றப் புலவர் மரபைச் சார்ந்த ஒருவர் அப்பொழுது வந்து நாலடியார் முதலிய நீதி நூல்களையும் அஷ்டப் பிரபந்தம் முதலிய பிரபந்தங்களையும் நாள்தோறும் முறையே இவரிடத்திற் பாடங் கேட்டுவந்தார்.

ஒரு வேளை இரண்டு வேளை இருந்து செல்பவர்களுக்கும், சில தினமிருந்து செல்பவர்களுக்கும், ஸ்திரமாக உடனிருப்பவர்களுக்கும் வேண்டிய உணவு, இடவசதி முதலியவற்றை ஆறுமுகத்தா பிள்ளை அமைத்து நன்றாகக் கவனித்துக் கொள்வார். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் உதவியால் அவ்வூர் அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் ஆகாரம் செய்து கொண்டிருந்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் அன்பு

திருமலைராயனாற்றிற்குத் தென்பாலுள்ளதாகிய *12 மேலைப் பழையாறை யென்னுமூர் ஆறுமுகத்தா பிள்ளைக்கே உரியதாக இருந்தது. அவ்வூர் தெற்கிலும் வடக்கிலும் இரண்டு நதிகளை எல்லையாகப் பெற்று விளங்குவது. ஊரின் நாற்பக்கத்தும் வாழைப் புதர்களடர்ந்த படுகைகளும் நடுவில் நன்செய் வயல்களும் இடையிடையே தென்னந்தோப்புக்களும் கமுகந் தோட்டங்களும் மாந்தோப்புக்களும் உண்டு. தென்னை, பலா முதலிய மரங்களடர்ந்துள்ள ஒரு தோட்டத்தினிடையில் மிகவும் அழகியதான கட்டிடமொன்று இருந்தது. அதில் ஓய்வு நேரங்களிலெல்லாஞ்சென்று இவர் அன்பர்களுடன் தங்கியிருப்பார். அங்கே பாடமும் நடைபெறும். நல்ல கனிவர்க்கங்களும் இளநீர்களும் இனிய பிறபொருள்களும் ஆறுமுகத்தா பிள்ளையால் அடிக்கடி வருவித்து அங்கே இவருக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும். நிலவளத்தால் அவை சுவை முதிர்ந்தனவாய் உண்பவர்களுக்கு இன்பத்தை உண்டுபண்ணும்.

எந்தக் காலத்தும் எனக்குப் பாடம் நடந்து கொண்டேயிருக்கும்; பாடம் சொல்லாவிட்டால் இவருக்குப் பொழுதுபோகாது. வருகிறவர்கள், தாம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டு முடித்த பின் நான் கேட்கும் பாடங்களையும் கேட்டு மகிழ்ந்து செல்வார் கள். ஒவ்வொருநாளும் பிற்பகலில் அயலூரார் வருவார்கள். அப்பொழுதப்பொழுது தாம் கேள்வியுற்ற பலசெய்திகளை எங்களுக்கு இவர் சொல்வதுண்டு.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இச்செய்யுட்களையும் இவற்றின் பொருள்களையும் இச்சரித்திரத்தின் முதற்பாகத்தில் 36-39-ஆம் பக்கங்களிற் காணலாம்.
2.  பால் – இடப்பாகத்தை. கோடீச்சரம் – கொட்டையூர். கொண்டு – கொண்டேன். கண்ணுற்று – கண்டு. ஆய் ஒண்டொடியாய் – ஆராயப் படுகின்ற ஒள்ளிய வளையலையுடைய பாங்கியே. வந்தி – பணிவாயாக. நின்று ஆர்வம் தர கேள். மாலை – மயக்கத்தை. தந்தி – தந்தாய். நின் தார் தந்திடு என்று ஆர்வம் தரத் தாரைக் கேள். இச் செய்யுள் தலைவி கூற்று.
3.  திருவண்ணாமலைக்குத் தலைவனை; ஞானக்கோ முத்தி – திருவாவடுதுறை. யாம் அண்ணாம். அலை அத்தனை வினையால் – அலைகளையுடைய கடலைப் போன்ற அவ்வளவு வினைகளால்; தமிழை அள் நா மலையத்தனை – அகத்திய முனிவரை; மலையம் – பொதியின் மலை. அண்ணா – தலைவனே. மலைய – போர் செய்தற்கு. ஆதலால் யாம் எவ்வாறு உய்வே மென்றபடி.
4.  சாஸ்திரம் – சைவசித்தாந்த சாஸ்திரங்கள்.
5.  இவர் ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளையின் உறவினரில் ஒருவர்.
6.  இது பட்டீச்சுரத்திற்குத் தென்பால் ஓடும் ஒரு நதி.
7.  தம்பியென்றது ஆறுமுகத்தா பிள்ளையை.
8.  கும்பகோணம் காலேஜ் வேலையை எனக்குச் செய்வித்ததையே நன்மையாகக் கருதுகிறேன்.
9.  சோழனுடைய அரண்மனையிருந்த இடம் இப்பொழுது சோழன் மாளிகை என்னும் ஊராக இருக்கின்றது; பட்டீச்சுரத்துக்கு வடவெல்லையாகவுள்ளது. அங்கே இரண்டு சுவர்கள் கூடிய மூலையொன்று 11 – நிலையுள்ள ஒரு கோபுரத்தின் உயரமுடையதாக இருந்ததை இளமையிற் பார்த்திருக்கிறேன். அதனை அரண்மனைச் சுவரென்று யாவரும் சொல்வார்கள். பிற்காலத்தில் அதனை இடித்து ஏலம் போட்டுவிட்டார்கள்.
10.  இப்பொழுது கோணப்பெருமாள் கோயிலென்று வழங்கும்; தக்ஷிணத் துவாரகையென்றும் சொல்லப்படும்.
11. இந்த நகரத்தின் பெருமையையும் இதன்பால் வாழ்ந்த சோழ அரசர்கள் இன்னார் இன்னாரென்பதையும் அவர்கள் புகழையும் யாப்பருங்கல விருத்தி, வீரசோழியமென்பவற்றின் உரைகளிலுள்ள மேற்கோள்களாலும் சிலாசாசனங்களாலும் அறியலாகும்.
12.  இது பழையாறையென்னும் ஊருக்கு மேல்பால் இருத்தலால் இப்பெயர் பெற்றது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s