எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை

-மகாகவி பாரதி

வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான மகாகவி பாரதியின் முழக்கம் இது. நூற்றாண்டுகளுக்கு (1915) முன்னர் பாரதி எழுதிய அவலம் இன்றும் நமது நாட்டில் தீரவில்லை. இந்த  ‘ஊழலுக்கு’த் தீர்வாக மகாகவி முன்வைப்பது பெண் விடுதலையே. இரு பெண்களைப் பெற்றவரல்லவா? சரியாகத் தானிருக்கும்.

15 ஜூன் 1915                                                                                   நள ஆனி 22



நமது தேசத்தில் வறுமை அதிகம்.

முன்னேயிருந்தவர்களின் கோழைத்தன்மை, ஒற்றுமைக் குறைவு, சாஸ்திர ஞானமில்லாமை, பல தேச விவகாரங்கள் தெரியாமை, மூட கர்வங்கள் முதலியவற்றால் லக்ஷ்மியை இழந்தோம். மேற்படி குணங்கள் இன்னும் நம்மைவிட்டு நன்றாக நீங்கவில்லை. நாளொன்றுக்கு சராசரியாக நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு முக்காலணா வரும்படி யென்று கணக்காளிகள் சொல்லுகின்றார்கள்; அதாவது, நரகத் துன்பம் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இப்படி இல்லை.

இந்த நிலையில் நமக்குள்ளே பலர் பலவிதமான இகழ்ந்த காரியங்கள் செய்வது வியப்பில்லை. மிகுந்த செல்வமுடைய நாடுகளிலே கூட மனிதர் பணத்துக்காக எத்தனையோ மானங்கெட்ட காரியங்கள் செய்கிறார்கள்; ஏழைத் தேசத்தாராகிய நாம் இவ்வளவு மானத்துடன் பிழைப்பதே பெரிய காரியம்.

பணம், பொதுக் கல்வி, விடுதலை மூன்றும் இல்லாவிட்டால் அந்த நாட்டில் மானமேது?

பிராமணருக்குள் விவாஹ காலங்களிலே எதிர்ஜாமீன் கேட்கும் வழக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும் சில வருஷங்களாகப் பலர் பேசி வருகிறார்கள். மானமுடைய தேசங்களிலே சீதனம் கொடுத்தல் பெண்களின் பெற்றோர் செய்வது சாதாரணமேயாம். ஆனால், மாப்பிள்ளைகளுக்கு விலைத்தரங்கள் போட்டு, இன்ன பரீக்ஷை தேறினவனுக்கு இத்தனை ரூபாய் கிரயம் என்று முடிவு செய்து வைத்து, அதன்படி விவாஹங்கள் நடத்தும் வழக்கமில்லை.

சீனா, ஜப்பான், நவீன பாரசீகம் முதலிய எல்லா மனுஷ்ய தேசங்களிலேயும் விவாஹம் அன்பையே ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகிறது. இங்கே, பணத்துக்காக விவாஹங்கள் செய்து கொள்ளுகிறார்கள். சாதாரணமாகப் பெண்களுக்கு விலை கூறி விற்பது வழக்கமாகவே இருந்தது. இப்போது ‘பூசுரர்’ (பூமண்டலத்திலே தேவர்) ஆகிய பிராமணக் கூட்டத்தார் மாப்பிள்ளைக்கு விலைபோட்டு விற்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

புண்ய பூமி! பணம் கொடுக்கச் சொல்லி ஏழைக் குடும்பத்தாரை வதைசெய்யும் போது தான் துன்பம் அதிகப்படுகிறது. பெண்கள் ருதுவாகு முன்பு விவாகம் நடந்து தீர வேண்டும். ஒரு ஜாதியிலே, ஒரு பிரிவிலே, ஒரு சாகையிலே, ஒரு கிளையிலே, ஒரு பகுதியிலே, ஒரு வகுப்பிலே, ஒரு கோணத்திலே, ஓரோரத்துக்குள்ளே தான் ஸம்பந்தங்கள் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் ‘ஸநாதன அதர்மம்’ முட்ட வருகிறது.

மாப்பிள்ளைகளோ உயர்ந்த கிரயங்கள் கொடுத்தாலொழிய அகப்படுவதில்லை. முக்கால்வாசிக் குடும்பத்தார் நித்திய ஜீவனத்துக்கு வழியில்லாத ஏழைகள். நாலைந்து பெண்களைப் பெற்று விட்டால், இந்த ஏழைகள் என்ன செய்வார்கள்? திருநெல்வேலி ஜில்லாவில் எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்திலே ஒரு பெண்ணுக்கு விவாஹம் நடந்தபோது, அவளுடைய பெற்றோர் மாப்பிள்ளைக்குப் பணங்கொடுத்தார்கள். பிறகு ருது சாந்தியின்போது, அந்த மாப்பிள்ளை, ‘ஐந்நூறு ரூபாய் கொடுத்தால்தான் ருதுசாந்தி செய்து கொள்வேன். இல்லாவிட்டால் பெண் உங்கள் வீட்டோடே இருக்கட்டும்’ என்று சொல்லி ஐந்நூறு ரூபாய் தண்டம் வாங்கிக் கொண்டான்.

இது போலவே சீமந்தத்துக்கும் கிரயம் வாங்கிக் கொண்டான். பிறகு அந்தப் பெண்ணை விலக்கி வைத்துவிட்டு வேறொரு பெண்ணை விவாகம் செய்துகொண்டு புது மாமனாரிடத்திலும் முன்னைப் போலவே ‘பண வசூல்கள்’ செய்து வருகிறான். பணம் கொடுக்க வழியில்லாத குடும்பத்தாரும் அவர்களைப் பார்த்துப் பரிதவிக்கும் சிலரும், இந்த விஷயத்தில் ஏதேனும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

கல்யாணமாகாமல் காலேஜிகளில் படிக்கும் பிரமச்சாரிப் பிள்ளைகள் தமக்குள் சபை கூடி இனிமேல் மாமனாரிடம் தண்டம் வாங்குவதில்லை என்று பிரதிக்கினை செய்துகொள்ள வேண்டுமென்று சிலர் சொல்லுகிறார்கள். பிள்ளையின் தகப்பனன்றோ பணம் வாங்குகிறான்? அதற்குப் பிள்ளை சபதம் செய்துகொண்டால் என்ன பிரயோஜனம்? நியாயத்திலே கூடத் தகப்பன் வார்த்தையை மீறி நடக்கும் பிள்ளைகள் நமது நாட்டிலே பலரில்லை. இதுவெல்லாம் வீண் வார்த்தை. பெண்களுக்கு விடுதலை யுண்டானால் ஒழிய விவாக சம்பந்தமான ஆயிரத்தெட்டு ஊழல்கள் நீங்க வழியில்லை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s