-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்- 2: பகுதி 4
காங்கிரசில் ராஜ விசுவாசிகள்
1885-இல் பம்பாயில் நடந்த முதல் காங்கிரசில் தீர்மானித்தபடி 1886-இல் கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் நடந்தது. தேசபக்தர் பாலகங்காதர திலகர் முதன்முதலாக இந்த காங்கிரசில் தான் பங்கு கொண்டார்.
தொடர்ந்து அதற்கு அடுத்த வருஷம் 1887-இல் காங்கிரஸ் சென்னையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்தது. இதற்குத் தலைமை வகித்தவர் பக்ருதீன் தயாப்ஜி. இதில் சேலம் விஜயராகவாச்சாரியர் தமிழில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார். அந்தப் பிரசுரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
முதல் இரு மாநாடுகளிலும் ஆங்கிலமே பிரதானமாகப் பேசப்பட்ட மொழியாயினும் சென்னையில் அந்தந்தப் பிரதேச மொழியின் மூலம் தேசபக்தியைப் பரப்ப முடியும் என்பது தெரிந்தது.
சேலம் விஜயராகவாச்சாரியாரின் தமிழ்ப் பிரசுரம் நல்ல வரவேற்பைக் கண்டதும், வைஸ்ராய் டப்ரின் பிரபுவுக்கு காங்கிரஸ் மீது கோபம் வந்தது. லண்டனில் இருந்த பிரிட்டிஷாருக்கும் ‘இது என்ன பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் மாறுகிறதே! நமக்கு சேவகம் செய்வார்கள் என்று இவர்களுக்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தினால், நம்மை வாழ்த்தி ‘Long Live the King’ பாடாமல் சுதேசிப் பிரசுரங்களை வெளியிடுகிறார்களே’ என்று வருத்தமும் கோபமும் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு – இவ்விரு மொழிகளிலும் அந்தப் பிரசுரம் இருந்தது.
ஆங்கிலேயர்கள் நினைத்தது ஆங்கிலம் படித்த மேல்தட்டு மக்கள் மட்டுமே காங்கிரசுக்கு வருவார்கள் என்று; ஆனால் சாதாரணக் குடிமக்களும் அதில் சேர்ந்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒவ்வோராண்டும் டிசம்பரில் நடந்த காங்கிரசின் மகாநாடு தொடர்ந்து 1905 வரையிலும் ஒரே மாதிரியான செயல்பாட்டுடன் கூடிக் கலைந்தது.
இங்கிலாந்து மன்னருக்கு வாழ்த்துத் தெரிவித்த பின்னர் காங்கிரசார் தங்கள் ராஜ விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்ட பின்னரே கூட்டம் தொடங்கும். அனைவரும் அனேகமாக ஆங்கிலத்தில் பேசிக் கலைவார்கள். தங்கள் குறைகளைத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆங்கில அரசிடம் கருணை கூர்ந்து அவற்றை நிறைவேற்றிட வேண்டுகோள் விடுப்பார்கள். வழக்கம் போல ஆங்கில அதிகார வர்க்கம் அவற்றைச் சட்டை செய்வதில்லை. அது போலவே ஆங்கில அதிகார வர்க்கம் கோபம் அடைந்துவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். எப்போதாவது ஒருசில விஷயங்களில் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும், அத்தோடு சரி.
1905-ஆம் வருஷம் அப்போது வைஸ்ராயாக இருந்த லார்டு கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்து இந்துக்கள் மேற்கிலும், முஸ்லிம்கள் கிழக்கிலுமாக இருக்கும்படி செய்து வங்காளிகளின் ஒற்றுமையைக் குலைக்கச் சதிசெய்தார். ஆனால், வெள்ளைக்காரர்கள் விரித்த வலையில் இவ்விரு பிரிவினரும் விழுந்துவிடாமல் வங்கப் பிரிவினையை இரு தரப்பாரும் கடுமையாக எதிர்த்தார்கள்.
வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. இதுபோன்றதொரு எதிர்ப்பை இதற்கு முன்பு சந்தித்திராத பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டு எதிர்ப்பை முறியடிக்க முயன்றது. எனினும் அடக்க அடக்க மேலெழுந்த எதிர்ப்பு அலைகளைக் கண்டு ஒருவழியாகப் பணிந்து வந்த ஆங்கில அரசு 1911-இல் பிரித்த வங்கத்தை மீண்டும் ஒன்று சேர்த்தது. இதன் பின்னர் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரத்தக் களரி ஏற்பட்டு மீண்டும் வங்கம் பிரிக்கப்படும் என்பதை அவர்கள் அன்று உணர்ந்திருக்க மாட்டார்கள்.
இப்படி காங்கிரஸ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகையில், பிரிட்டிஷ் அரசு இந்திய மக்கள் பால் ஏதேனும் கருணை காட்டுமோ என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிகுந்தது. இந்திய மக்களையும், அவர்களது பிரதிநிதிகளாக இருந்த காங்கிரசையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ராஜவிசுவாசம் மிக்க நமது காங்கிரஸ் தலைவர்கள் ஆங்கில வைஸ்ராய், கவர்னர், மற்ற அதிகாரிகளிடமும், இங்கிலாந்தில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும் அதீத மரியாதையும் பணிவும் காட்டி வந்தனர். அத்துணை பேரும் மிதவாத காங்கிரசார். மாதிரிக்கு ஒரு நிகழ்ச்சியை இப்போது பார்க்கலாம்.
1904-ஆம் ஆண்டில் சென்னையில் காங்கிரஸ் கூடியது. பூபேந்திரநாத் பாசு என்பார் தலைவர். பின்னாளில் தென்னிந்திய நலச் சங்கத்தில் சேர்ந்த ஏ.பி.பாத்திரோ என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு பெட்லாண்ட் என்பார் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்ததுதான் தாமதம், மாநாட்டுப் பந்தலில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கவர்னருக்கு மரியாதை செலுத்தினர். பேசிக் கொண்டிருந்தவரை உடனடியாகப் பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டு, காங்கிரஸ் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜியை அழைத்து காங்கிரசாரின் ராஜ விசுவாசத்தை விளக்கி ஒரு தீர்மானம் கொண்டுவரச் செய்து கவர்னரை மகிழ்ச்சியடையச் செய்தனர். என்னே காங்கிரசாரின் பிரிட்டிஷ் பக்தி!
இதுபோன்றதொரு நிகழ்ச்சி 1906-லும் லக்னோ காங்கிரசில் நடந்தது. அப்போது சர் ஜேம்ஸ் ரஸ்டன் எனும் வெள்ளைக்கார கவர்னர் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்தபோது எல்லோரும் எழுந்து மரியாதை செய்து தங்கள் ராஜவிசுவாசத்தைப் பதிவு செய்தனர். ஆனால் இப்படிப்பட்ட மரியாதைகள் வீண் போகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அப்போது காங்கிரசில் இருந்த தலைவர்கள் பெரும்பாலும் வக்கீல்கள், ஆங்கிலம் படித்தவர்கள். அவர்கள் காட்டிய மரியாதைக்குப் பிரதிபலனாக பலருக்கு நீதிபதி பதவிகளும், கவர்னரின் நிர்வாக கவுன்சில் உறுப்பினர் பதவியும், வைசிராய் நிர்வாக சபையின் பதவிகளும் கெளரவங்களும் வந்து சேர்ந்தன.
இதெல்லாம் 1906 வரையில் தான்; அதன் பிறகு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த மாற்றம் ஒரு இரவில் ஏற்பட்டதல்ல. 1906-இல் கல்கத்தா காங்கிரசிலேயே இரு பிரிவுகள் தோன்றி கடுமையாகக் கருத்து மோதலில் ஈடுபடத் தொடங்கினர். ஒரு பிரிவினர் தீவிரவாதிகள் என்றும், மற்றொரு பிரிவினர் மிதவாதிகள் என்றும் அடையாளம் காணப்பட்டனர். ‘சுயராஜ்யம்’ என்கிற கோஷமே முதன்முதலில் இந்த கல்கத்தா காங்கிரசில் தான் கேட்க முடிந்தது. அதுவும் தாதாபாய் நெளரோஜி எனும் கெளரவம் மிக்க தலைவரால் முழங்கப்பட்டது.
வங்கப் பிரிவினையால் வந்த விளைவு இந்திய சுதேசிகள் பிரிட்டிஷ் சாமான்களை வாங்கக் கூடாது என்றும், சுதேசிப் பொருள்களைத் தான் வாங்க வேண்டுமென்றும் ஒரு கிளர்ச்சியை உருவாக்கினார்கள். காங்கிரசாருக்கு ‘வந்தேமாதரம்’ எனும் கோஷம் ஒரு மந்திரச் சொல்லாகப் பயன்பட்டது. மெல்ல மெல்ல காங்கிரஸ் மிதவாதிகளின் கரங்களிலிருந்து தீவிரமான காங்கிரசார் கைகளில் போய்ச் சேர்ந்தது. எனினும் மிதவாதிகள் ஒட்டுமொத்தமாக காங்கிரசிலிருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்ல முடியாது.
காங்கிரஸ் மெல்லத் தன் வழியிலிருந்து மாறி தீவிர அரசியல் இயக்கமாக மாறி வரும் சூழ்நிலையை ஹியூம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். தான் எந்தப் பின்னணியில் என்ன காரணத்துக்காக காங்கிரசைத் தொடங்கினாரோ, அந்த நோக்கம் திசைமாறி இப்போது இந்திய சுதந்திரம் எனும் கோஷத்துடன் புத்துணர்வு பெற்று பயணிப்பதை அவர் புரிந்துகொண்டு தன் வேலை இங்கு முடிந்துவிட்டது என்று மூட்டை முடிச்சுக்களுடன் இங்கிலாந்துக்குப் பயணமானார்.
21 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரசின் செயலாளராக இருந்த ஏ.ஓ.ஹியூம் தன் பதவியையும் துறந்தார். ஹியூம் என்ன நினைத்து காங்கிரசைத் தொடங்கினாரோ, அது இப்போது தேச சுதந்திரத்தைத் தேடும் இயக்கமாக மாறிப் போனமைக்காக அவருக்கு நன்றி சொல்லித்தான் தீரவேண்டும்.
1907-ஆம் வருஷ காங்கிரஸ் சூரத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வருஷ காங்கிரஸ் மாநாடு அவர்கள் சரித்திரத்தில் கறை படிந்த மாநாடாக ஆகிவிட்டது. முதலில் 1907 காங்கிரஸ் நாகபுரியில் நடப்பதாக இருந்தது பின்னர் சூரத்துக்கு மாற்றப்பட்டது.
நாகபுரி மராட்டிய மாநிலத்தில் இருந்த நகரம். அங்கு பாலகங்காதர திலகர் செல்வாக்கு பெற்றிருந்த நகரம். அங்கு மாநாடு நடந்தால் தீவிர காங்கிரசார் வசம் காங்கிரஸ் முழுமையாகப் போய்விடும் என்றுதான் அந்த ஆண்டு மாநாட்டை சூரத்துக்கு மாற்றினார்கள். அங்கு மிதவாதிகளில் ஒருவரான ராஷ்பிகாரி கோஷ் என்பார் தலைமை வகிப்பதாக இருந்தது.
சூரத்தில் காங்கிரஸ் கூடுவதற்கு முன்பாக பிரிட்டிஷ் அரசு காங்கிரசார் மீது கடுமையான அடக்கு முறைகளைக் கையாண்டனர். அவர்களது நோக்கம் காங்கிரசில் தீவிரவாதிகளாக இருக்கும் திலகர் போன்றவர்களை அடக்கி வைக்க வேண்டுமென்பது தான். பஞ்சாபின் தன்னிகரிலாத் தலைவராக இருந்த லாலா லஜபதி ராய், புரட்சி வீரன் பகத் சிங்கின் சித்தப்பா அஜீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி பிரிட்டிஷ் அரசின் தயவால் காங்கிரஸ்காரர்கள் மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பிரித்து முத்திரையிடப்பட்டு, பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியானார்கள்.
அந்தக் காலகட்டத்தில் காங்கிரசில் இரு பிரிவினரின் கருத்துக்கள் எப்படி இருந்தன என்பதை ஒருசில நிகழ்ச்சிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
சென்னையைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் என்பார் பம்பாயில் நடந்த முதல் கூட்டத்துக்கே வந்து கலந்து கொண்டவர். வி.கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் 1906-இல் காங்கிரசை சென்னையில் கூட்ட ஏற்பாடுகளைச் செய்தவர்; அவர் காலத்தில் பாலகங்காதர திலகர் தலைமையில் உருவான தீவிர காங்கிரஸ் இயக்கத்தாரை உடலின் அழுகிய பாகமாக உருவகம் செய்து, அந்த அழுகிய பகுதியை உடனடியாக வெட்டி எறிந்துவிட்டால் காங்கிரஸ் ஆரோக்கியமாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்தவர்.
இவர்கள் தவிர 1898-ஆம் ஆண்டு காங்கிரசில் தென்னாப்பிரிக்க இந்தியர்கள் பற்றி தீர்மானம் கொண்டு வந்த ராமேசன், 1897 அம்ரோட்டி காங்கிரசில் தலைவராக இருந்த சங்கரன் நாயர், டி.வி.சேஷகிரி ஐயர், கிருஷ்ணசாமி ஐயரின் தோழர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் காங்கிரசில் மிதவாதிகளாக இருந்து வெள்ளையர்களின் நம்பிக்கையைப் பெற்றதால் நீதிபதி பதவிகளை அடைந்தார்கள் என்றால், அன்றைய நிலைமையை நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.
இதில் வி.கிருஷ்ணசாமி ஐயர் என்பவரைப் பற்றி அவர் நீதிபதி பதவியைப் பெற்றவுடன் கடுமையாகத் தாக்கி கட்டுரை எழுதியவர் மகாகவி பாரதி. ஆனால் பாரதியாரின் தேசபக்திப் பாடல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட உதவி புரிந்தவரும் இந்த கிருஷ்ணசாமி ஐயர் தான்.
காங்கிரசில் இப்படி இருவேறு கருத்துடையவர்கள் இருந்த காரணத்தால் ஒரு சாரார் சிறைகளுக்கும், மற்றொரு சாரார் நீதிபதிகளாக பதவி ஏற்கவும் சென்றார்கள் என்பது பிரிட்டிஷாரின் பாரபட்சமான போக்கைக் காட்டுகிறது.
மிதவாதிகள் என்கிறோமே, அந்தப் பிரிவில் இருந்தவர்கள் சிலருடைய பெயர்களைத் தெரிந்துகொள்ள ஆவல் ஏற்படுகிறதல்லவா? ஆம்! அவர்களில் ராஷ் பிஹாரி கோஷ், பெரோஷ் ஷா மேத்தா, கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோரை முக்கியமாகச் சொல்லலாம்.
தீவிர காங்கிரஸார் எனப்படுவோர் லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால், அரவிந்தர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சக்கரை செட்டியார், மண்டையம் சீனிவாசாச்சாரியார், மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோரைச் சொல்லலாம்.
தமிழகத்திலிருந்து சூரத் காங்கிரசுக்கு இரு அணிகளாகச் சென்றனர். மிதவாத காங்கிரசாருக்கு வி.கிருஷ்ணசாமி ஐயரும், தீவிரவாத காங்கிரசுக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையும் தலைமையேற்றுச் சென்றனர். 23-ஆவது காங்கிரஸ் 1907-ஆம் ஆண்டி டிசம்பர் 26-ஆம் தேதி சூரத் நகரில் கூடியது. நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின….
சிறையில் இருந்த லாலா லஜபதி ராய் விடுதலை அடைந்து சூரத் காங்கிரசுக்கு வந்து சேர்ந்தார். மாநாட்டுத் தலைவர் தன் தலைமை உரையைத் தொடங்கினார். திலகர் எழுந்து அவர் பேச்சுக்கு ஏதோ மறுப்பு தெரிவித்தார். மிதவாத காங்கிரசார் ஏற்பாடு செய்திருந்தபடி சிலர் திலகரைத் தாக்கினர். உடனே மாநாட்டுப் பந்தலில் கலவரம் வெடித்தது. நாற்காலிகள் வீசி எறியப்பட்டன. கலகம் உச்சகட்டத்தை அடைந்தது. போலீசார் தலையிட்டு பிரதிநிதிகளை பந்தலை விட்டு வெளியேற்றிவிட்டனர். மாநாடு அதோடு முடிந்து போயிற்று.
சூரத்துக்கு முன்பும் பின்பும் கூட பல மாநாடுகள் நடந்துள்ளன. ஆனால் படித்தவர்கள், பெரும்பாலும் வழக்கறிஞர்கள், இந்த நாட்டை பின்னாளில் ஆளப் போகிறவர்கள் இப்படி அநாகரிகமாக நாற்காலிகளையும் பெஞ்சுகளையும் எடுத்து வீசி அராஜகத்தில் ஈடுபட்ட செயல் இந்தியர்களுக்கே அவமானகரமான செயல்; வெட்கப்படக்கூடிய செயல்.
அந்த மாநாட்டின்போது வ.உ.சி.யைக் காணவில்லை என்று பாரதி பல கூடாரங்களுக்கும் சென்று தேடி இரவு வெகுநேரம் கழித்து அவர் இருக்குமிடம் தெரிந்தது என்று இந்த மாநாட்டைப் பற்றி தான் எழுதிய கட்டுரையில் கூறுகிறார்.
ஒரே கட்சிக்குள் இருவேறு கருத்துக்கள் இருந்த போதும் அதனை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யாமல் ஒருவரையொருவர் தாக்கி ரத்தவிளாறாக்கிய செயல் காங்கிரசின் அவமானகரமான நிகழ்ச்சி என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(4)”