-இராம.கோபாலன்
அமரர் திரு. இராம கோபாலன் (19.09.1927 – 30.09.2020), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகர்களுள் ஒருவர். தமிழகத்தில் ஹிந்து சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும், மக்களை ஒன்றிணைக்கவும், ஹிந்து முன்னணி அமைப்பை 1981- இல் நிறுவி, தனது 94-வது வயதிலும் இளைஞரைப் போல தொடர்ந்து இயங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே...

அண்ணா ஹசாரே ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வருங்காலத்தில் என்ன செய்வது என்பது பற்றி அவர் முடிவு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ரயில் நிலையத்தில் இருந்த புத்தகக் கடையில் சுவாமி விவேகானந்தர் பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்தார். அவருடைய வாழ்க்கைப் பாதையை அது தெளிவுபடுத்தியது. அன்றே அவர் தனது வாழ்க்கையை சமுதாயத்திற்காக அர்ப்பணித்தார். இன்று (# 2012-இல் எழுதிய கட்டுரை இது) அவர் ஊழலுக்கு எதிரான யுத்தத்தில் நாட்டிற்கே வழி காட்டிக் கொண்டிருக்கிறார்.
என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் ஓர் அனுபவம் உள்ளது. நான் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள் (பெயர் சரியாக நினைவில் இல்லை) என்ற புத்தகத்தை எப்போதும் பையில் வைத்திருப்பேன். அது எனக்கு வழிகாட்டியாக அமைந்தது. சுவாமி விவேகானந்தரைப் படித்த எவரும் அவரால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது.
“நான் செய்வதற்கு தொண்டு, பணி எதுவுமே இல்லை என்ற முடிவிற்கு நான் வந்தால், அந்தக் கணமே இந்த உடலைத் துறந்து விடுவேன்” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். பாரத நாட்டு ஏழை, எளிய மக்களுக்காக – அவர்களுடைய வறுமைக்காகவும், அறியாமைக்காகவும், அவர் மனம் கதறியது. கோடீஸ்வரர்களின் வீடுகளில் அவர் தங்கியிருக்க நேர்ந்தாலும் அந்த சுகங்களை அனுபவிக்க அவரால் முடியவில்லை. காரணம், அவர் ஒரு உத்தம சந்யாசி.
பெண்மையை அவர் மதித்தார். ஆனால் அவர்கள் பலவீனமானவர்கள் என்றோ, பரிதாபப்பட வேண்டியவர்கள் என்றோ அவர் ஒருபோதும் கருதியதில்லை. மகாசமாதி தினத்தன்றும் கூட, காலையில் 8 மணி முதல் 11 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு அவர் தியானத்தில் மூழ்கி இருந்தார். இன்னொரு விவேகானந்தர் இருந்திருந்தால் அவரால்தான் விவேகானந்தர் சாதித்தது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
அன்று மதியம் 1 மணிக்கு பிரம்மசாரிகளின் அறையில் சுவாமிஜி நுழைந்தார். அவர்களுக்கு மூன்று மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கண வகுப்பு நடத்தினார். ஆனால் எவருக்குமே அலுப்புத் தோன்றவில்லை. இடையிடையே சில நகைச்சுவைக் கதைகளைக் கூறி மன இறுக்கத்தைக் குறைப்பார். எல்லாவற்றிலும் இடையிடையே வேடிக்கைக் கதைகளை சொல்வார். பேலூர் மடத்தில் ஒரு வேதக் கல்லூரி துவங்க திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். ‘வேதங்களைப் படிப்பதால் என்ன பயன்?’ என்று சுவாமி பிரேமானந்தர் கேட்டார். ‘அந்தக் கல்வி மூடநம்பிக்கைகளைக் கொன்றுவிடும்’ என்று சுவாமிஜி பதிலளித்தார்.
பாரத நாட்டு வரலாற்றில் சுவாமிஜியின் பங்களிப்பு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் (1857) தற்காலிகத் தோல்வி அடைந்து ஆறு ஆண்டுகளே ஆகியிருந்தபோது அவர் பிறந்தார். விவேகானந்தர் மட்டும் பிறந்திருக்காவிட்டால், பாரத நாடு அரசியல் ரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் தோல்வியடைந்து, துவண்டு, அவமானப்பட்ட இனமாக மாறியிருக்கும். அந்த நிலையில் இருந்த நாட்டை தன்னுடைய தவ வலிமையினால் தூக்கி நிறுத்தினார் விவேகானந்த சுவாமி.
அவர் விராட புருஷனாக, வெற்றி வீரனாக விளங்கினார். குருக்ஷேத்திர யுத்தத்தின் போது மனமுடைந்து நின்ற அர்ஜுனனை பகவான் கிருஷ்ணன் மாவீரன் ஆக்கியது போல, விவேகானந்தர் வீர அமுதத்தை பருகக் கொடுத்து நாட்டிற்குப் புத்துணர்ச்சி அளித்தார்.
நமது கலாச்சாரப் பாரம்பரியத்தின் சிறப்பையும் மேன்மையையும் உயர்வையும் தெய்வீகத் தன்மையையும் மக்களுக்கு எளிதில் புரியும்படி அவர் விளக்கினார். அதன் விளைவாக மதம் மாற்ற வந்த அன்னிய சக்திகளின் முதுகெலும்பு முறிந்தது.
பாரத நாடு அடிக்கடி மயங்கி விழந்து கொண்டிருந்தது. எண்ணற்ற தாக்குதல்களின் காரணமாக சோர்ந்து களைத்து விழுந்த போதெல்லாம், ஒரு தெய்வீக சக்தி அதைத் தூக்கி நிறுத்தியது. சுவாமி விவேகானந்தர் அவ்வழியில் உதித்த மகாத்மா. பாரதத்தின் கடந்தகாலப் பெருமைகளை அவர் விளக்கிய போதெல்லாம், மேற்கத்திய நாடுகள் அதனை வீழ்ந்து வணங்கினர். பேரறிஞர் ஒருவர் அவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘அவர் மனிதர் அல்ல தெய்வம்’ என்று குறிப்பிட்டார்.
கடவுளை சரணடை; பூரணமாக சரணடை; கடவுள் சர்க்கரை மலையைப் போன்றவர். உனக்கு அதில் ஒரு அணு மட்டும் போதும். மலையை முழுவதும் கொண்டுசெல்ல ஏன் விரும்புகிறாய்? – இது சுவாமி விவேகானந்தரின் சிந்தனை. தான் தோன்றுவதற்கு பக்குவமான நிலையில் பாரதம் இருந்தபொழுது தான் சுவாமி விவேகானந்தர் அவர் தோன்றினார். ஐரோப்பிய மயமாகி இருந்த கொல்கத்தாவில் அவர் அவதரித்தார். தனது 39 ஆண்டுகால வாழ்வில், தான் எதற்காகப் பிறந்தாரோ, அதை அவர் நிறைவேற்றித் திரும்பினார்.
பகவத்கீதையை இந்த புதிய யுகத்தின் சித்தாந்தமாக அவர் விளக்கிச் சொன்னார். நர நாராயணர், தரித்திர நாராயணர் என்ற சொற்களின் மூலம் அவர் யதார்த்த உலகைப் படம் பிடித்துக் காட்டினார். பாரத நாட்டிற்கு ஆன்மிக அடித்தளம் அத்தியாவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தாழ்வுற்று வறுமை மிஞ்சி, பாழ்பட்டு நின்ற பாரத சமுதாயத்திற்கு அவருடைய அவதாரம் அமுத சஞ்சீவியாகப் புத்தெழுச்சி அளித்தது. அவரைப் பார்த்தவர்கள் தம்மை அறியாமலேயே எழுந்து நின்று வணங்கினர். இன்றைய நவீன உலகத்தை வார்த்தெடுத்த உத்தம சிற்பி விவேகானந்தர் எனில், அதில் எந்த அலங்கார வார்த்தைகளும் இல்லை.

இந்து சமயம் மட்டமானது; அது இனி தலைதூக்கவே முடியாது என்று, செத்துப் போன சமுதாயமாகக் கருதி அதைக் குப்பையில் சேர்த்துவிட அனைவரும் நினைத்தபோது, அதை தனது வாழ்வால் மாற்றிக் காட்டினர்; பாரத அன்னையை பேரரசியாக, அணிமுடி தரித்தவளாக தரிசனம் காட்டினார் சுவாமி விவேகானந்தர். எல்லாத் துறைகளிலும் இந்த நாடு வெற்றிபெறும் என்று அவர் தீர்க்க தரிசனம் கூறி இருக்கிறார்.
பயமற்ற ஆன்மிக உணர்வு, தேசபக்தி, உடல்- மனம்- அறிவில் வலிமை, பெண்களை மதித்தல் ஆகிய குணங்களை அவர் நாட்டு மக்களுக்குக் கற்பித்தார். பாரதம் உலக குருவாக விளங்கும் என்பதை அவர் வெறுமனே நினைக்கவில்லை; மனக்கண் முன்பு தத்ரூபமாகப் பார்த்தார். போக்ரானில் பாரதம் அணுகுண்டு வெடித்தபோது 1998-ல் உலகம் பாரதத்தை பயபக்தியோடு நோக்கியது; நம்மைப் புரிந்துகொள்ளத் தலைப்பட்டது. சுவாமி விவேகானந்தர் உறுதியோடு மனக்கண்ணில் பார்த்த பாரதத் தாயின் எழுச்சி விரைவில் நிகழும் என்பது உறுதி.
இறைவா எங்களுக்கு ஒரு விவேகானந்தரை வழங்கினாய். அவர் இந்த நாட்டை இமயத்தின் சிகரத்திற்கு உயத்தினார். அவரது நினைவுகளே இன்னும் பல விவேகானந்தர்களை உருவாக்கும்.
வாழ்க விவேகானந்தம்! வெல்க அவருடைய கனவுகள்!
.
# குறிப்பு: தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டை ஒட்டி ‘விவேகானந்தம்150.காம்’ என்ற இணையதளம் 2012-இல் தொடங்கப்பட்டு 2015 வரை செயல்பட்டது. அதில் சமுதாயத்தின் பல துறைகளைச் சார்ந்தவர்கள் சுவாமிஜி குறித்த கட்டுரைகள், கவிதைகளை எழுதினர். நமது தளத்தில் ‘விவேகானந்தம்’ என்ற பிரிவில் தொகுக்கப்படும் கட்டுரைகள் பல, அந்தத் தளத்தில் வெளியானவையே. 2012 ஆம் ஆண்டு, சங்க்ராந்தியன்று சென்னையில் அந்த இணையதளத்தைத் தொடங்கிவைத்து ஆசியளித்த அமரர் திரு. இராம.கோபாலன் அவர்கள் அளித்த கட்டுரை இது…
$$$