சத்திய சோதனை – 5 (1-5)

-மகாத்மா காந்தி

ஐந்தாம் பாகம்

1. முதல் அனுபவம்

     நான் தாய்நாட்டிற்கு வந்து சேருவதற்கு முன்னாலேயே போனிக்ஸிலிருந்து புறப்பட்டவர்கள் இந்தியா சேர்ந்து விட்டனர். நாங்கள் முதலில் போட்டிருந்த திட்டத்தின்படி நான் முன்னால் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், யுத்தம் காரணமாக இங்கிலாந்தில் எனக்கு ஏற்பட்ட வேலைகளினால் எங்கள் திட்டங்களெல்லாம் மாறிவிட்டன. இந்தியாவுக்கு எப்பொழுது போவேன் என்ற நிச்சயம் இல்லாமல் நான் இங்கிலாந்தில் இருக்க வேண்டி வந்தபோது, போனிக்ஸிலிருந்து வந்தவர்களுக்கு இந்தியாவில் இடம் தேட வேண்டிய பிரச்னை எனக்கு ஏற்பட்டது. சாத்தியமானால், அவர்கள் எல்லோரும் இந்தியாவில் ஒரே இடத்தில் தங்கி, போனிக்ஸில் நடத்தியதைப் போன்ற வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று விரும்பினேன். நான் அவர்களைப் போய்த் தங்கும்படி சொல்லுவதற்கு ஏற்ற ஆசிரமம் எதுவும் இருந்ததாகவும் எனக்குத் தெரியாது. ஆகையால், ஸ்ரீ ஆண்டுரூஸைச் சந்தித்து அவர் கூறுகிற யோசனையின்படி நடந்து கொள்ளுமாறு அவர்களுக்குத் தந்தி கொடுத்தேன்.

ஆகவே, ஸ்ரீ ஆண்ட்ரூஸ், அவர்களை முதலில் கங்கிரி குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தர், அவர்களை அங்கே தமது சொந்தக் குழந்தைகளாகவே கருதி நடத்தினார். அதன் பிறகு அவர்கள் சாந்தி நிகேதன் ஆசிரமத்தில் தங்கினார்கள். அங்கும், கவியும் அவருடைய ஆட்களும், அதேபோல் அவர்கள்மீது அன்பைப் பொழிந்தனர். இந்த இரண்டு இடங்களிலும் அவர்கள் பெற்ற அனுபவங்கள், அவர்களுக்கும் எனக்கும் அதிக உதவியாக இருந்தன.

கவி ரவீந்திரர், சிரத்தானந்தஜி, தலைமைப் பேராசிரியர் சுசீல் ருத்ரா ஆகிய மூவரும் ஆண்டுரூஸின் திரிமூர்த்திகள் என்று நான் அடிக்கடி அவரிடம் கூறுவது உண்டு. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது அவர்களைப் பற்றிப் பேசுவதென்றால் ஸ்ரீ ஆண்டுரூஸ் சலிப்படைவதே இல்லை. தென்னாப்பிரிக்காவைப் பற்றிய எனது இனிய நினைவுகளில் இந்தத் திரிமூர்த்திகளைக் குறித்து ஸ்ரீ ஆண்டுரூஸ் இரவு பகலாக என்னிடம் பேசியவை அதிக இனிமை உடையனவாகும். அவை என் உள்ளத்தில் அப்படியே பதிந்தும் இருந்தன. இயற்கையாகவே ஸ்ரீ ஆண்டுரூஸ், போனிக்ஸிலிருந்து வந்தவர்களை  தலைமைப் பேராசிரியர் ருத்ராவுக்குப் பழக்கப்படுத்தி வைத்தார். அவருக்குத் தனி ஆசிரமம் இல்லை. ஆனால், தமது வீட்டையே போனிக்ஸிலிருந்து வந்த குடும்பத்தினர் தங்குவதற்கு முற்றும் விட்டுவிட்டார். வந்து சேர்ந்த ஒரு நாளைக்குள்ளேயே தங்கள் சொந்த வீட்டில் வாழ்வதாகவே உணரும்படி ஸ்ரீ ருத்ராவைச் சேர்ந்தவர்கள் செய்துவிட்டனர். ஆகையால், தாங்கள் போனிக்ஸில் இருப்பதாகவே அவர்கள் எண்ணினர்.

போனிக்ஸ் கோஷ்டியினர் சாந்திநிகேதனத்தில் இருக்கின்றனர் என்பது நான் பம்பாயில் வந்து இறங்கிய பிறகு தான் எனக்குத் தெரியும். ஆகவே, கோகலேயைப் பார்த்து விட்டு, எவ்வளவு சீக்கிரத்தில் சாத்தியமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நான் அவசரப்பட்டேன்.

பம்பாயில் எனக்கு நடந்த வரவேற்புகள், ஒரு சின்னச் சத்தியாக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்றை நடத்தும் சந்தர்ப்பத்தை எனக்கு அளித்தன. என்னைக் கௌரவிப்பதற்காக ஸ்ரீ ஜஹாங்கீர் பெடிட்டின் இல்லத்தில் நடந்த விருந்தின் போது குஜராத்தியில் பேச நான் துணியவில்லை. வாழ்நாளின் சிறந்த காலத்தையெல்லாம் ஒப்பந்தத் தொழிலாளருடன் வாழ்வதில் கழித்த நான், அரண்மனை போன்று இருந்த அந்த ஆடம்பரச் சூழ்நிலையில், ஒரு முழு நாட்டுப்புறத்தான் போல் இருப்பதாகவே எண்ணிக் கொண்டேன். அப்பொழுது நான் கத்தியவாரிகளைப் போல் வேட்டி கட்டிக்கொண்டு சட்டையும் போட்டிருந்தேன். எனவே, நான் இப்பொழுது இருப்பதைவிட அப்பொழுது அதிக நாகரிக முள்ளவனாகவே தோன்றினாலும், பெடிட் மாளிகையின் ஆடம்பரமும் பிரகாசமும் என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. என்றாலும், ஸர் பிரோஸ்ஷாவின் பாதுகாப்பின் கீழ் தைரியம் அடைந்து ஒருவாறு ஒழுங்காகவே சமாளித்துக் கொண்டேன்.

அதன் பிறகு குஜராத்தியரின் வரவேற்பு நடந்தது. எனக்கு ஒரு வரவேற்பு உபசாரம் நடத்தியே தீருவதென்று அவர்கள் தீர்மானித்து விட்டார்கள். காலஞ்சென்ற உத்தமலால் திரிவேதி, இந்த வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்தார். அக் கூட்டத்தின் நிகழ்ச்சி முறை இன்னது என்பதை முன்னாடியே அறிந்து கொண்டேன். ஸ்ரீ ஜின்னாவும் குஜராத்தியாகையால் அவரும் வந்திருந்தார். அங்கே அவர் தலைமை வகித்தாரா, முக்கியப் பேச்சாளராக இருந்தாரா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. அவர் ஆங்கிலத்தில் சுருக்கமாகவும் இனிமையாகவும் பேசினார். பேசிய மற்றவர்களும் அநேகமாக ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்றுதான் எனக்கு ஞாபகம். நான் பேச வேண்டிய சமயம் வந்தபோது என் வந்தனத்தை குஜராத்தியில் தெரிவித்துக் கொண்டேன். குஜராத்தியினிடமும் ஹிந்துஸ்தானியினிடமும் எனக்கு பற்று அதிகம் என்றும் எனக்கு விளக்கினேன். குஜராத்திகளைக் கொண்ட ஒரு கூட்டத்தில் ஆங்கிலம் பேசப்படுவதைக் குறித்து என்னுடைய பணிவான ஆட்சேபத்தையும் தெரிவித்துக் கொண்டேன். ஏனெனில், நீண்டநாள் வெளிநாடுகளில் இருந்துவிட்டுத் திரும்பியிருக்கும் ஒருவன், நீண்ட காலமாகவே வழக்கமாகப் போய்விட்ட காரியங்களைக் கண்டிப்பது மரியாதைக் குறைவான செய்கை என்று கருதப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன். குஜராத்தியிலேயே பதிலளிப்பது என்பதில் நான் பிடிவாதமாக இருந்ததைக் குறித்து யாரும் தவறாக எண்ணிக் கொண்டதாகத் தோன்றவில்லை. ஒவ்வொருவரும் என் கண்டனத்தைக் குறித்துத் தாங்களே சமாதானமடைந்தார்கள் என்பதைக் கண்டு உண்மையில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

புது மாதிரியான என்னுடைய எண்ணங்களை என் நாட்டு மக்களின் முன்பு கொண்டு வருவதில் எனக்குக் கஷ்டம் இராது என்று எண்ண அக்கூட்டம் எனக்குத் தைரியமளித்தது. பம்பாயில் சிறிது காலம் தங்கி, இவ்விதமான ஆரம்ப அனுபவங்களை நிறையப் பெற்றுப் புனாவுக்குச் சென்றேன். அங்கே வருமாறு கோகலே என்னை அழைத்திருந்தார்.

$$$

2. புனாவில் கோகலேயுடன்

     கவர்னர் என்னைப் பார்க்க விரும்புகிறார் என்று நான் பம்பாய் வந்து சேர்ந்ததுமே கோகலே எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார். நான் புனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னால் கவர்னரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது நல்லது என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி கவர்னரைப் போய்ப் பார்த்தேன். சுகங்களைக் குறித்து வழக்கமாக விசாரிப்பது முடிந்த பிறகு என்னிடம், “உங்களை நான் ஒன்று கேட்டுக் கொள்ளுகிறேன். அரசாங்க சம்பந்தமாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளுவதற்கு முன்னால் நீங்கள் என்னை வந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “அந்த வாக்குறுதியை எளிதில் நான் உங்களுக்கு அளிக்க முடியும். ஏனெனில், எதிராளியின் கருத்து இன்னது என்பதை அறிந்துகொண்டு, சாத்தியமான வரையில் அவருடன் ஒத்துப்போவது என்பதே சத்தியாக்கிரகி என்ற முறையில் என்னுடைய தருமமாகும். இந்தத் தருமத்தைத் தென்னாப்பிரிக்காவில் கண்டிப்பான வகையில் அனுசரித்து வந்தேன். இங்கும் அப்படியே செய்வதென்றும் இருக்கிறேன்.”

லார்டு வில்லிங்டன் எனக்கு நன்றி தெரிவித்துவிட்டுக் கூறியதாவது: “நீங்கள் விரும்பும் போதெல்லாம் என்னிடம் வரலாம். என் அரசாங்கம் வேண்டுமென்று எந்தத் தவறையும் செய்யாது என்பதை நீங்கள் காண்பீர்கள்.”

அதன் பிறகு நான் புனாவுக்குப் போனேன். அந்த அருமையான நாட்களைப் பற்றிய என் நினைவுகளை எல்லாம் இங்கே கூறி விடுவது என்பது இயலாத காரியம். கோகலேயும், இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர்களும் என்னைத் தங்கள் அன்பு வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டனர். என்னைச் சந்திப்பதற்காக அவர்களையெல்லாம் கோகலே அங்கே வரவழைத்திருந்தார் என்றுதான் எனக்கு ஞாபகம். எல்லா விஷயங்களைப் பற்றியும் அவர்களுடன் நான் மனம் விட்டுத் தாராளமாக விவாதித்தேன்.

அச்சங்கத்தில் நான் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் கோகலே ஆவலுடன் இருந்தார். எனக்கும் அந்த விருப்பம் இருந்தது. ஆனால், என்னுடைய கொள்கைகளுக்கும் வேலை முறைக்கும் அவர்களுடையவைகளுக்கும் அதிகப் பேதம் இருந்ததால் அச்சங்கத்தில் நான் சேருவது சரியன்று என்று மற்ற அங்கத்தினர்கள் கருதினர். கோகலேயோ, என்னுடைய கொள்கைகளில் நான் பிடிவாதமாக இருந்தபோதிலும், அவர்களுடைய கொள்கைகளைச் சகித்துக் கொள்ளவும் என்னால் முடியும் என்றும், நான் தயாராய் இருக்கிறேன் என்றும் நம்பினார். அவர் கூறியதாவது: “சமரசம் செய்துகொள்ளத் தயாராயிருக்கும் உங்கள் குணத்தை சங்கத்தின் அங்கத்தினர்கள் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் கொள்கையில் பிடிவாதமுள்ளவர்கள்; சுயேச்சைப் போக்குள்ளவர்கள்! உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றே நம்புகிறேன். உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு உங்களிடம் மதிப்பும் அன்பும் இல்லை என்று ஒரு கணமேனும் நீங்கள் எண்ணிவிடக் கூடாது. அவர்கள் உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதற்கு எங்கே பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினாலேயே உங்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்குகிறார்கள். நீங்கள் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், சேர்த்துக் கொள்ளப்படா விட்டாலும் உங்களை ஓர் அங்கத்தினர் என்றே நான் பாவிக்கப் போகிறேன்.”

என்னுடைய உத்தேசங்கள் யாவை என்பதை கோகலேயிடம் கூறினேன். என்னை இந்திய ஊழியர் சங்கத்தில் அங்கத்தினனாகச் சேர்த்துக் கொண்டாலும், சேர்க்காது போயினும், ஓர் ஆசிரமத்தை அமைத்து, அதில் என் போனிக்ஸ் குடும்பத்துடன் வாழ விரும்பினேன். குஜராத்தில் எங்காவது ஆசிரமத்தை அமைப்பதே உத்தேசம். நான் குஜராத்தியாகையால், குஜராத்துக்குச் சேவை செய்து அதன் மூலம் நாட்டுக்குச் சேவை செய்ய எண்ணினேன். இந்த என் உத்தேசம் கோகலேக்குப் பிடித்திருந்தது. அவர் கூறியதாவது: “நீங்கள் நிச்சயம் அப்படியே செய்ய வேண்டும். அங்கத்தினர்களுடன் நீங்கள் பேசியதன் பலன் எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் ஆசிரமத்தை என் சொந்த ஆசிரமமாகவே கருதுவேன். ஆசிரமத்தின் செலவுக்கு நீங்கள் என்னையே எதிர்பார்க்க வேண்டும்.”

இதைக் கேட்டு நான் அளவுகடந்த ஆனந்தமடைந்தேன் நிதி திரட்டும் பொறுப்பிலிருந்து விடுபடுவது ஓர் ஆனந்தமே. அதோடு, நான் தன்னந்தனியாக இந்த வேலையில் ஈடுபட வேண்டியதில்லை என்றும், எனக்குக் கஷ்டம் ஏற்படும்போது நிச்சயமான துணை எனக்கு இருக்கிறது என்றும் எண்ணிய போது பெரிய பாரம் நீங்கியதுபோல இருந்தது.

ஆகவே, காலஞ்சென்ற டாக்டர் தேவ் என்பவரை கோகலே அழைத்து எனக்காகச் சங்கத்தில் கணக்கு வைக்கும் படியும், ஆசிரமத்திற்கும் பொதுச் செலவிற்கும் எனக்குத் தேவைப்படுவதை எல்லாம் கொடுக்கும்படியும் கூறினார்.

அதன் பிறகு சாந்திநிகேதனத்திற்குப் புறப்படத் தயாரானேன். நான் புறப்படுவதற்கு முன்னால் கோகலே எனக்கு ஒரு விருந்து வைத்தார். அதற்கு குறிப்பிட்ட சில நண்பர்களை மாத்திரம் அழைத்திருந்ததோடு எனக்குப் பிடித்தமான பழங்களுக்கும், கொட்டைப் பருப்புகளுக்கும் ஏற்பாடு செய்து இருந்தார். அவருடைய அறையிலிருந்து சில அடி தூரத்திலேயே இந்த விருந்து நடந்தது. என்றாலும், அந்தக் கொஞ்ச தூரமும் நடந்துவந்து அவ்விருந்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் அவர் இருந்தார். ஆனால், என்னிடம் கொண்டிருந்த அன்பினால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் விருந்துக்கு வந்தே தீருவதென்று பிடிவாதமாக இருந்தார். அப்படியே வந்தும் விட்டார். ஆனால், அவர் மூர்ச்சையடைந்து விடவே அவரைத் தூக்கிச் செல்லும்படி நேர்ந்தது. இவ்விதம் அவர் மூர்ச்சையடைந்து விடுவது புதிதல்ல. எனவே, தமக்குப் பிரக்ஞை வந்ததும் விருந்தைத் தொடர்ந்து நடத்தும்படி எங்களுக்குச் சொல்லி அனுப்பினார்.

இந்த விருந்து, சங்கத்தின் விருந்தினர் விடுதிக்கு எதிரில் திறந்தவெளியில், நண்பர்களுடன் கலந்து பேசுவதற்கு வாய்ப்பளிப்பதற்காக நடந்ததேயன்றி வேறன்று. அதில் நண்பர்கள் நிலக்கடலை, பேரீச்சம்பழம், மற்றும் பழங்கள் இவற்றைச் சாப்பிட்டுக்கொண்டே ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசினர். ஆனால், திடீரென்று கோகலே மூர்ச்சை அடைந்தது, என் வாழ்க்கையில் சாதாரணமான சம்பவமாகி விடவில்லை.

$$$

3. அது ஒரு பயமுறுத்தலா?

     புனாவிலிருந்து ராஜ்கோர்ட்டுக்கும் போர்பந்தருக்கும் போனேன். காலஞ்சென்ற என் சகோதரரின் மனைவியையும் மற்ற உறவினர்களையும் பார்ப்பதற்கே அங்கே சென்றேன்.

தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகத்தின் போது ஒப்பந்தத் தொழிலாளரின் உடைக்குப் பொருத்தமானதாகவே என் உடையும் இருக்க வேண்டும் என்பதற்காக என் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தில்கூட வீட்டுக்குள் இருக்கும்போது அதே உடையில்தான் இருந்து வந்தேன். பம்பாயில் வந்து இறங்கியபோது உள் சட்டை, மேல் சட்டை, வேட்டி, அங்க வஸ்திரம் ஆகியவைகளை கத்தியவாரி முறைப்படி அணிந்து கொண்டேன். இத்துணிகளெல்லாம் இந்திய மில்களில் தயாரானவை. ஆனால், பம்பாயிலிருந்து ரெயிலில் மூன்றாம் வகுப்பில் நான் பிரயாணம் செய்ய வேண்டியிருந்ததால் அங்க வஸ்திரமும் மேல்சட்டையும் அனாவசியமான இடையூறுகள் என்று கருதி அவற்றைப் போட்டுவிட்டேன். எட்டு அணா, பத்தணா விலையில் ஒரு காஷ்மீர்த் தொப்பி வாங்கிக் கொண்டேன். இத்தகைய உடை அணிந்திருப்பவரை ஏழை என்றே கருதுவார்கள்.

அச்சமயம் பிளேக் நோய் பரவி இருந்ததால் வீரம்காமிலோ அல்லது வத்வானிலோ – எந்த ஊர் என்பதை மறந்துவிட்டேன் – மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை வைத்தியப் பரிசோதனை செய்து வந்தனர். எனக்குச் சுரம் கொஞ்சம் இருந்தது. எனக்குச் சுரம் இருக்கிறது என்பதை இன்ஸ்பெக்டர் கண்டதும் ராஜ்கோட் வைத்திய அதிகாரியிடம் போய் ஆஜராகும்படி என்னிடம் கூறி என் பெயரையும் பதிவு செய்துகொண்டார்.

நான் வத்வான் வழியாகப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று யாரோ சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில், அவ்வூரில் பிரபல பொதுஜன ஊழியரும், தையற்காரருமான மோதிலால் ஸ்டேஷனுக்கு வந்து என்னைப் பார்த்தார். வீரம்காம் சுங்க வரியைப் பற்றி அவர் என்னிடம் சொன்னார். அதனால், ரெயில்வேப் பிரயாணிகள் அனுபவிக்க வேண்டியிருக்கும் துயரங்களையும் கூறினார். எனக்குச் சுரம் இருந்ததால், பேசுவதற்கே எனக்கு விருப்பமில்லை. சுருக்கமாகப் பதில் சொல்லிவிட முயன்றேன். என்னுடைய பதில் ஒரு கேள்வியாக அமைந்தது. “சிறை செல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” என்பதே என்னுடைய கேள்வி.

தாங்கள் பேசுவது இன்னதென்பதைச் சிந்திக்காமலேயே சிலர் பேசிவிடுவார்கள். அப்படிப்பட்ட ஆவேச உணர்ச்சியுள்ள வாலிபர்களில் மோதிலாலும் ஒருவர் என்று நான் எண்ணினேன். ஆனால், அவர் அப்படிப்பட்டவர் அன்று. உறுதியுடன் தீர்மானமாக அவர் பின்வருமாறு பதில் கூறினார்:

“நீங்கள் எங்களுக்குத் தலைமை வகித்து இயக்கம் நடத்துவதாயின் நாங்கள் நிச்சயமாகச் சிறை செல்வோம். கத்தியவாரைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் எங்களுக்கு உங்கள் மீது முதல் உரிமை உண்டு. என்றாலும், இப்பொழுது உங்களை இங்கே தாமதிக்கச் செய்யும் உத்தேசம் எங்களுக்கு இல்லை. ஆனால், திரும்பும்போது இங்கே தங்கிச் செல்லுவதாக வாக்குறுதியளிக்க வேண்டும். நமது வாலிபர்கள் செய்து வரும் வேலையையும் அவர்களுக்குள்ள உணர்ச்சியையும் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். எங்களுக்குக் கட்டளையிட்ட மாத்திரத்தில் நாங்கள் முன்வருவோம் என்பதை நீங்கள் நம்பலாம்.”

மோதிலால் என்னைக் கவர்ந்துவிட்டார். அவரைப் பற்றி அவருடைய தோழர் ஒருவர் பின்வருமாறு பாராட்டிக் கூறினார்: “இந்த நண்பர் சாதாரணத் தையற்காரரே. தமது தொழிலில் மிகவும் திறமைசாலி. ஆகையால், தமக்குத் தேவையான ரூபாய் பதினைந்தை, தினத்திற்கு ஒரு மணி நேரம் வேலை செய்து, ஒரு மாதத்தில் சம்பாதித்துக்கொண்டு விடுகிறார். மீதமுள்ள தமது நேரத்தையெல்லாம் பொதுச் சேவைக்குச் செலவிடுகிறார். எங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். படித்தவர்களாகிய நாங்கள் அவரைக் கண்டு வெட்கமடைகிறோம்.”

பின்னால் மோதிலாலுடன் நான் நெருங்கிப் பழக நேர்ந்ததும், இந்தப் பாராட்டுரையில் மிகைப்படுத்திக் கூறப்பட்டது எதுவும் இல்லை என்பதைக் கண்டேன். ஆசிரமத்தை ஆரம்பித்த காலத்தில், ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அவர் அங்கே தங்குவார். ஆசிரமக் குழந்தைகளுக்கு அவர் தையல் வேலை சொல்லிக் கொடுத்ததோடு ஆசிரமத்திற்கு வேண்டிய துணிமணிகளையும் தைத்துக் கொடுப்பார். ஒவ்வொரு நாளும் வீரம்காமைப் பற்றி என்னிடம் பேசுவார். பிரயாணிகளின் துயரங்களையும் சொல்லுவார். அக் கஷ்டங்கள் அவருக்கு முற்றும் சகிக்க முடியாதவையாகி விட்டன. திடீரென்று நோயுற்று, அவர் நல்ல இளம் வயதில் காலமானார். வத்வானின் பொதுவாழ்வுக்கு அவருடைய பிரிவினால் அதிக நஷ்டம் ஏற்பட்டது.

ராஜ்கோட் போய்ச் சேர்ந்ததும் மறுநாள் காலை வைத்திய அதிகாரியிடம் போனேன். அங்கே எல்லோருக்கும் என்னைத் தெரிந்திருந்தது. நான் தம்மிடம் வர நேர்ந்ததைக் குறித்து டாக்டர் வெட்கப்பட்டதோடு இன்ஸ்பெக்டர்மீதும் கோபமடைந்தார். இன்ஸ்பெக்டர் தமது கடமையையே செய்தாராகையால் இக்கோபம் அனாவசியமானது. அவருக்கு என்னைத் தெரியாது; என்னைத் தெரிந்திருந்தாலும் அவர் வேறுவிதமாக நடந்து கொண்டிருக்க முடியாது. இனித் தம்மிடம் வர வேண்டியதில்லை என்று வைத்திய அதிகாரி கூறி விட்டார். அதற்குப் பதிலாக என்னிடம் ஓர் இன்ஸ்பெக்டரை அனுப்பினார்.

அத்தகைய சந்தர்ப்பங்களில் சுகாதாரக் காரணங்களுக்காக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளைப் பரிசோதிப்பது அவசியமேயாகும். பெரிய மனிதர்கள், மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ய முற்படுவார்களாயின், வாழ்க்கையில் அவர்களுடைய நிலை எதுவாக இருப்பினும், ஏழைகள் என்ன என்ன கட்டுத்திட்டங்களுக்கு உட்பட வேண்டியிருக்கின்றதோ அவைகளுக்கெல்லாம் அவர்களும் விரும்பிக் கட்டுப்பட வேண்டும். அதிகாரிகளும் பாரபட்சம் காட்டாமல் நடந்துகொள்ள வேண்டும். அதிகாரிகளோ, மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளும் தம்மைப் போல மனிதர்களே என்று கருதாமல் செம்மறி ஆடுகளாகப் பாவிக்கிறார்கள் என்பதே என் அனுபவம். அப்பிரயாணிகளிடம் அவமதிக்கும் தோரணையிலேயே பேசுகிறார்கள். அவர்கள் ஏதாவது பதில் சொல்லிவிட்டாலோ, விவாதித்து விட்டாலோ, அதிகாரிகள் சகிப்பதில்லை. மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள், அதிகாரிகளின் வேலைக்காரர்களைப் போல அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை அதிகாரிகள் அடிக்கலாம்; பயமுறுத்திப் பணம் பறிக்கலாம்; சாத்தியமான எல்லாவித அசௌகரியங்களையும் பிரயாணிகள் அனுபவிக்கும்படி செய்துவிட்ட பிறகே அவர்களுக்கு டிக்கெட்டும் கொடுக்கலாம். இவ்விதம் டிக்கெட்டு வாங்குவதற்குள் ரெயிலும் போய்விடும். என்றாலும் இதற்கெல்லாம் கேள்வி முறையே இல்லை. இவற்றையெல்லாம் நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். படித்தவர்களும் பணக்காரர்களுமான சிலர், ஏழைகளின் அந்தஸ்தை விரும்பி ஏற்றுக்கொண்டு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தாலன்றி, ஏழைகளுக்கு மறுக்கப்படும் வசதிகளை அனுபவிக்க இவர்கள் மறுத்து விட்டாலல்லாமல், தவிர்க்கக்கூடிய கஷ்டங்களையும், அவமதிப்புக்களையும், அநீதிகளையும் அனுபவிக்க வேண்டியதே என்று சும்மா இருந்துவிடாமல் அவைகளை ஒழிப்பதற்காகப் போராடினாலன்றி, இந்நிலைமையில் சீர்திருத்தமே சாத்தியமில்லை.

கத்தியவாரில் நான் சென்ற இடங்களிலெல்லாம் வீரம்காம் சுங்கத் தொல்லைகளைப் பற்றிய புகார்களையே கூறினர். ஆகையால், லார்டு வில்லிங்டன் அளித்திருந்த வாக்குறுதியை உடனே பயன்படுத்திக்கொள்ளுவது என்று முடிவு செய்தேன். இது சம்பந்தமாகக் கிடைத்த பிரசுரங்கள் யாவற்றையும் சேகரித்துப் படித்தேன். புகார்களெல்லாம் உண்மையானவை என்று நான் திருப்தியடைந்த பிறகு பம்பாய் அரசாங்கத்திற்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன். லார்டு வில்லிங்டனின் அந்தரங்கக் காரியதரிசியைக் கண்டு பேசினேன். கவர்னரையும் சந்தித்தேன். கவர்னர் தமது அனுதாபத்தைத் தெரிவித்தார். ஆனால், தவறுக்கு டில்லி அரசாங்கத்தின்மீது பழி போட்டார். “இது எங்கள் கையில் இருந்தால் சுங்கத்தை எடுத்திருப்போம். இந்திய அரசாங்கத்தினிடமே நீங்கள் போக வேண்டும்” என்றார், கவர்னர்.

இந்திய அரசாங்கத்திற்கு எழுதினேன். ஆனால், என் கடிதம் கிடைத்தது என்பதற்கு ஓர் அத்தாட்சி வந்ததேயன்றி வேறு பதிலே இல்லை. பின்னால் லார்டு செம்ஸ்போர்டைச் சந்திக்கும் சமயம் வந்த பிறகே பரிகாரத்தை அடைய முடிந்தது. இதைப் பற்றிய விவரம் முழுவதையும் அவருக்கு நான் எடுத்துக்கூறிய போது அவர் ஆச்சரியப்பட்டு விட்டார். இதைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தது. நான் கூறியவைகளையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். வீரம்காம் பற்றிய தஸ்தாவேஜூகளை எல்லாம் அனுப்பும்படி அப்பொழுதே டெலிபோனில் உத்தரவிட்டார். அதிகாரிகள் தக்க சமாதானம் கூறாவிட்டால், அல்லது இருப்பதே சரி என்று காட்டாவிடில், சுங்கத்தை நீக்கி விடுவதாகவும் வாக்களித்தார். நான் வைசிராயைக் கண்டு பேசிய சில தினங்களுக்கெல்லாம் வீரம்காம் சுங்கம் நீக்கப்பட்டு விட்டதெனப் பத்திரிகைகளில் படித்தேன்.

இந்தியாவில் சத்தியாக்கிரகத்திற்கு இச்சம்பவம் ஆரம்பம் என்று நான் கருதினேன். ஏனெனில், கத்தியவாரில் பகஸ்ரா என்ற இடத்தில் நான் செய்த பிரசங்கத்தில் சத்தியாக்கிரகத்தைப் பற்றிக் கூறியிருந்தேன். பம்பாய் அரசாங்கத்தின் காரியதரிசியை நான் சந்தித்துப் பேசியபோது, நான் சத்தியாக்கிரகத்தைப் பற்றி அப்பிரசங்கத்தில் கூறியதை ஆட்சேபித்தார். “அது பயமுறுத்தல் அல்லவா?” என்று அவர் கேட்டார். “பலம் பொருந்திய அரசாங்கம் பயமுறுத்தல்களுக்கு விட்டுக் கொடுத்துவிடும் என்று நினைக்கிறீர்களா?” என்றார்.

அதற்கு நான் கூறிய பதிலாவது: “இது பயமுறுத்தலே அல்ல. மக்களுக்குப் போதிப்பதே இது. குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்குள்ள எல்லா நியாயமான உபாயங்களையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியது என் கடமை. சுதந்திரத்தை அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள், அந்த சுதந்திரத்திற்கான எல்லா வழிகளையும் முறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அவ்வழிகளில் சாதாரணமாகக் கடைசியான வழியாக இருந்து வருவது பலாத்காரம். ஆனால், அதற்கு நேர் மாறாகச் சத்தியாக்கிரகமோ, முற்றும் அகிம்சையோடு கூடிய ஆயுதம். அதன் உபயோகத்தைக் குறித்தும் அதில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் விளக்கிக் கூற வேண்டியது என் கடமை என்று கருதுகிறேன். பிரிட்டீஷ் அரசாங்கம் பலமுள்ள அரசாங்கம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சத்தியாக்கிரகமே மிகச் சிறந்த பரிகாரம் என்பதிலும் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.”

கெட்டிக்காரரான அந்தக் காரியதரிசி, நான் கூறியதை ஒப்புக்கொள்ளத் தயங்கும் முறையில் தலையை அசைத்து, “பார்ப்போம்” என்றார்.

$$$

4. சாந்திநிகேதனம்

     ராஜ்கோட்டிலிருந்து சாந்திநிகேதனத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் என்னை அன்பில் மூழ்கடித்து விட்டனர். எளிமையும் அன்பும் அழகாகக் கலந்ததாக இருந்தது, வரவேற்பு. இங்கே தான் காக்கா சாகிபை நான் முதன்முதலாகச் சந்தித்தேன்.

கலேல்காரை ‘காக்கா சாகிப்’ என்று ஏன் அழைக்கிறார்கள் என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. பிறகே அதன் விவரம் எனக்குத் தெரிந்தது. நான் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அங்கே இருந்தவரும், அங்கே என் நெருங்கிய நண்பருமான ஸ்ரீ கேசவராவ் தேஷ்பாண்டே, பரோடா சமஸ்தானத்தில் கங்காநாதர் வித்யாலயம் என்ற பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். அப்பள்ளிக்கூடத்தில் ஒரு குடும்பத்தின் சூழ்நிலை இருந்து வர வேண்டும் என்பதற்காக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உறவுப் பெயர்களை அவர் ஆசிரியர்களுக்கு வைத்திருந்தார். ஸ்ரீ கலேல்காரும் அங்கே ஓர் ஆசிரியர். அவரை அங்கே ‘காக்கா’ (சிற்றப்பா) என்றே அழைத்து வந்தனர். பட்கேயை ‘மாமா’ என்று அழைத்தார்கள். ஹரிஹர சர்மாவை ‘அண்ணா’ என்று அழைத்தனர். மற்றவர்களுக்கும் இவை போன்ற பெயர்கள் உண்டு. காக்காவின் நண்பரான ஆனந்தானந்தரும் (சுவாமி) மாமாவின் நண்பரான  பட்டவர்த்தனரும் (அப்பா) பிறகு அக்குடும்பத்தில் சேர்ந்தார்கள். இவர்களெல்லோரும் நாளாவட்டத்தில் ஒருவர் பின் ஒருவராக எனது சக ஊழியர்களானார்கள். ஸ்ரீ தேஷ்பாண்டேயை சாகிப் என்று அழைத்து வந்தனர். வித்தியாலயத்தைக் கலைத்துவிட வேண்டி வந்தபோது அக்குடும்பமும் கலைந்துவிட்டது. ஆனால், அவர்கள் தங்களுடைய ஆன்மிக உறவையோ, அங்கே வழங்கிய உறவுப் பெயர்களையோ விட்டுவிடவே இல்லை.

பல ஸ்தாபனங்களையும் பார்த்து அனுபவம் பெறுவதற்காக காக்கா சாகிப் அப்பொழுது பிரயாணம் செய்து வந்தார். நான் சாந்திநிகேதனத்திற்குச் சென்றபோது அவர் அங்கே இருந்தார். அதே கூட்டத்தைச் சேர்ந்தவரான சிந்தாமணி சாஸ்திரியும் அப்பொழுது அங்கே இருந்தார். இருவரும் சமஸ்கிருதம் கற்பிப்பதில் உதவி செய்து வந்தார்கள்.

போனிக்ஸ் குடும்பத்தினருக்குச் சாந்திநிகேதனத்தில் தனி இடம் கொடுத்திருந்தார்கள். அக்குடும்பத்திற்குத் தலைவராக இருந்தார், மகன்லால் காந்தி. போனிக்ஸ் ஆசிரமத்தின் விதிகள் யாவும் அங்கேயும் கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வருகின்றனவா என்று கவனிப்பதை அவர் தமது வேலையாகக் கொண்டார். அவர் தமது அன்பினாலும், அறிவினாலும், விடா முயற்சியினாலும் தம்முடைய புகழ்மணம் சாந்தி நிகேதனம் முழுவதிலும் கமழும்படி செய்திருந்ததைக் கண்டேன்.

ஆண்டுரூஸ் அங்கே இருந்தார். பியர்ஸனும் இருந்தார். வங்காளி ஆசிரியர்களில் ஜகதானந்த பாபு, நேபால் பாபு, சந்தோஷ்பாபு, க்ஷிதிமோகன் பாபு, நாகேன் பாபு, சரத் பாபு, காளி பாபு ஆகியவர்களுடன் ஓரளவுக்கு நெருங்கிய பழக்கம் எங்களுக்கு ஏற்பட்டது.

என்னுடைய வழக்கப்படி அங்கே இருந்த ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் நான் சீக்கிரத்தில் ஒன்றிப் போய்விட்டேன்.அவரவர்களின் காரியங்களை அவர்களே செய்து கொள்ளுவதைக் குறித்து அவர்களுடன் விவாதித்தேன். ஆசிரியர்களுக்கு ஒரு யோசனை கூறினேன். சம்பளத்திற்கு வைத்திருக்கும் சமையற்காரர்களை அனுப்பிவிட்டு ஆசிரியர்களும் மாணவர்களுமே தங்கள் உணவைச் சமைத்துக் கொள்ளுவதானால், சிறுவர்களின் உடலுக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற வகையில் சமையலறையை நிர்வகிக்க ஆசிரியர்களால் முடியும் என்றேன். இது, தங்கள் காரியங்களைத் தாங்களே செய்துகொள்ள வேண்டும் என்பதில் மாணவருக்கு ஓர் அனுபவப் பாடமாகவும் இருக்கும் என்றேன். ஆசிரியர்களில் இரண்டொருவர், அது ஆகாத காரியம் என்று தலையை அசைத்தார்கள். சிலர், என் யோசனையைப் பலமாக ஆதரித்தார்கள். சிறுவர்களும் அதை வரவேற்றனர். புதுமையான காரியங்களில் சுபாவமாக சிறுவர்களுக்கு இருக்கும் ருசியே இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே, நாங்கள் இப்பரீட்சையில் இறங்கினோம். இதுபற்றித் தமது கருத்தைத் தெரிவிக்குமாறு கவியை நான் கேட்டதற்கு, அதை ஆசிரியர்கள் ஆதரிப்பதாயிருந்தால் தமக்கு ஆட்சேபமில்லை என்று கூறினார். “இந்தச் சோதனையில் சுயராஜ்யத்தின் திறவுகோல் அடங்கியிருக்கிறது” என்று அவர் சிறுவர்களிடம் கூறினார்.

இந்தப் பரீட்சை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஸ்ரீ பியர்ஸன் தமது உடலை வருத்திப் பாடுபட்டார்; அதிக உற்சாகத்தோடு இவ்வேலைகளில் ஈடுபட்டார். காய்கறிகளை நறுக்குவதற்கு ஒரு கோஷ்டி, தானியத்தைச் சுத்தம் செய்வதற்கு ஒரு கோஷ்டி என்று இவ்விதம் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கோஷ்டி அமைக்கப்பட்டது. சமையலறையையும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் வேலையை நாகேன்பாபுவும் மற்றவர்களும் மேற்கொண்டனர். கையில் மண்வெட்டியுடன் அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது.

அங்கே நூற்றிருபத்தைந்து பையன்களும் அவர்களின் ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும், உடலுழைப்பான இந்த வேலையைச் சுலபமாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்துவிட முடியாது. தினமும் விவாதங்கள் நடந்துவந்தன. சிலர் சீக்கரத்திலேயே சோர்வடைந்து விட்டனர் என்பது தெரிந்தது. ஆனால், அப்படிச் சோர்ந்துவிடக் கூடியவர் அன்று பியர்ஸன். எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் சமையலறையிலோ, அதன் பக்கத்திலோ அவர் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பதைக் காணலாம். பெரிய பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்யும் வேலையை அவர் மேற்கொண்டார். பாத்திரங்களைத் துலக்குகிறவர்களுக்கு அந்த வேலையில் சலிப்புத் தோன்றாமல் இருப்பதற்காகச் சில மாணவர்கள் அவர்களுக்கு முன்னால் சித்தார் வாத்தியம் வாசிப்பார்கள். எல்லோருமே இந்த வேலையில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். தேனீக்கள் சுறுசுறுப்பாக இருக்கும் தேன் கூடுபோல் இருந்தது, சாந்திநிகேதனம்.

இத்தகைய மாறுதல்கள் ஒரு முறை ஆரம்பமாகிவிட்டால் எப்பொழுதும் வளர்ந்துகொண்டே இருக்கும். போனிக்ஸ் கோஷ்டியினர் தாங்களே சமைத்துக்கொண்டனர். அவர்கள் சாப்பாடு மிகவும் எளிமையாகவும் இருந்தது. மசாலைச் சாமான்களே அந்தச் சாப்பாட்டில் இல்லை. அரிசி, பருப்பு, கறிகாய் மாத்திரமேயன்றிக் கோதுமை மாவு கூட, ஒரே சமயத்தில் ஒரே பாத்திரத்தில் நீராவியில் சமைக்கப்பட்டன. வங்காளிச் சமையலில் சீர்திருத்தம் செய்வதற்காக சாந்தி நிகேதனத்தின் பையன்கள் அதே போன்ற சமையலைத் தொடங்கினார்கள். இரண்டொரு உபாத்தியாயர்களும் சில மாணவர்களும் இச்சமையலைச் செய்து வந்தார்கள்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு இப்பரீட்சை நிறுத்தப்பட்டு விட்டது. பிரபலமான இந்த ஸ்தாபனம், மத்தியில் கொஞ்ச காலத்திற்கு இந்தப் பரீட்சையை நடத்தியதால் அதற்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்பதே என் அபிப்பிராயம். இதனால் ஏற்பட்ட சில அனுபவங்கள் உபாத்தியாயர்களுக்குப் பயனுள்ளதாகவே இருந்திருக்க முடியும்.

சாந்திநிகேதனத்தில் கொஞ்ச காலம் தங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், விதியோ வேறுவிதமாக இருந்துவிட்டது. நான் அங்கே வந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. இதற்குள் கோகலே காலமாகிவிட்டார் என்று புனாவிலிருந்து எனக்குத் தந்தி வந்தது. சாந்திநிகேதனம் துக்கத்தில் ஆழ்ந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். தேசத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறித்துத் துக்கப்படுவதற்காக ஆசிரமத்தின் கோயிலில் ஒரு விசேஷக் கூட்டம் நடந்தது. மிகுந்த பக்தியுடன் அது நடந்தது. அன்றே நான் என் மனைவியோடும் மகன்லாலுடனும் புனாவுக்குப் புறப்பட்டேன். மற்றவர்கள் எல்லோரும் சாந்திநிகேதனத்திலேயே தங்கினார்கள்.

ஆண்டுரூஸ், பர்த்வான் வரையில் என்னுடன் வந்தார். “இந்தியாவில் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கு ஒரு சமயம் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி வருமென்றால் அது எப்பொழுது வரும் என்பது குறித்து உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?” என்று அவர் என்னைக் கேட்டார்.

நான் கூறியதாவது: “இதற்குப் பதில் சொல்லுவது கஷ்டம். ஏனெனில், ஓர் ஆண்டுக்கு நான் எதுவும் செய்வதற்கில்லை. கோகலே என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கியிருக்கிறார். அனுபவம் பெறுவதற்காக நான் இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டும்; அது முடியும் வரையில் பொது விஷயங்களைக் குறித்து நான் எந்தவிதமான அபிப்பிராயமும் கூறக் கூடாது என்பது அவர் என்னிடம் வாங்கிய வாக்குறுதி. அந்த ஓராண்டு முடிந்துவிட்ட பிறகும்கூட, என் கருத்துக்களை வெளியிடுவதற்கு நான் அவசரப்படப் போவதில்லை. ஆகையால், ஐந்தாண்டுகளுக்கோ அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கோ, சத்தியாக்கிரகத்திற்கான சமயம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.”

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘ஹிந்த் ஸ்வராஜ்’ (இந்திய சுயராஜ்யம்) என்ற நூலில் நான் வெளியிட்டிருந்த சில கருத்துக்களைக் குறித்துக் கோகலே சிரிப்பது வழக்கம். “நீங்கள் இந்தியாவில் ஓராண்டு தங்கியிருந்த பிறகு உங்கள் கருத்துக்கள் தாமாகத் திருந்தி விடும்” என்று அவர் கூறுவார்.

$$$

5. மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் துயரங்கள்

     மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள், டிக்கெட்டுகளை வாங்குவதற்கும் கூட என்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதைப் பர்த்வானில் நாங்கள் நேரில் காண நேர்ந்தது. மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளை இதற்குள் கொடுக்க முடியாது என்று எங்களுக்குச் சொல்லிவிட்டனர். ஸ்டேஷன் மாஸ்டரைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தாலும் அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் இருக்கும் இடத்தை யாரோ ஒருவர் எனக்கு அன்புடன் காட்டினார். எங்களுக்கு இருந்த கஷ்டத்தை ஸ்டேஷன் மாஸ்டரிடம் எடுத்துக் கூறினேன். அவரும் அதே பதிலைத்தான் சொன்னார். டிக்கெட் கொடுக்கும் இடத்தின் சன்னலைத் திறந்ததும் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு அங்கே சென்றேன். ஆனால் டிக்கட்டுகளை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அங்கே வல்லவன் வகுத்ததே சட்டமாக இருந்தது. பலமுள்ளவர்களும், மற்றவர்களைப் பற்றிய கவலையே இல்லாதவர்களுமான பிரயாணிகள், ஒருவர் பின் மற்றொருவராக வந்து என்னை இடித்து வெளியே தள்ளிக்கொண்டே இருந்தனர். ஆகையால், முதல் கும்பலில் கடைசியாக டிக்கெட் வாங்கியவன் நான்தான்.

ரெயில் வந்து நின்றது. அதில் ஏறுவது மற்றொரு பெரும் சோதனையாகி விட்டது. ரெயிலுக்குள் முன்பே இருந்த பிரயாணிகளும், ஏற முயன்றவர்களும் பரஸ்பரம் திட்டுவதும், பிடித்துத் தள்ளுவதுமாக இருந்தார்கள். பிளாட்பாரத்தில் மேலும் கீழும் ஓடினோம். ஆனால், “இங்கே இடம் இல்லை” என்ற ஒரே பதில்தான் எங்களுக்கு எங்குமே கிடைத்தது. கார்டிடம் போனேன். “முடிந்தால் ஏறிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். முடியாது போனால் அடுத்த ரெயிலில் வாருங்கள்” என்று அவர் கூறினார்.

“எனக்கு அவசரமான வேலை இருக்கிறதே” என்று நான் மரியாதையுடன் பதில் சொன்னேன். ஆனால், நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருக்க அவருக்கு அவகாசமில்லை. இன்னது செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். எங்கே சாத்தியமோ அங்கே ஏறிக்கொள்ளுமாறு மகன்லாலிடம் கூறிவிட்டு நானும் என் மனைவியும் இன்டர் வகுப்பு வண்டியில் ஏறிக்கொண்டோம். நாங்கள் அவ்வண்டியில் ஏறுவதைக் கார்டு பார்த்தார். அஸன்ஸால் ஸ்டேஷனை அடைந்ததும், எங்களிடம் அதிகப்படிக் கட்டணத்தை வசூலிப்பதற்காக அவர் எங்களிடம் வந்தார். அவரிடம் பின்வருமாறு கூறினேன்: “எங்களுக்கு இடம் தேடித் தர வேண்டியது உங்கள் கடமை. எங்களுக்கு இடம் கிடைக்காததால் நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். மூன்றாம் வகுப்பு வண்டியில் எங்களுக்கு இடம் கொடுப்பதானால் நாங்கள் அங்கே போய்விடச் சந்தோஷத்துடன் தயாராயிருக்கிறோம்.”

இதற்குக் கார்டு, “உம்முடன் விவாதிக்க நான் தயாராயில்லை. உமக்கு நான் இடம் தேடிக்கொடுக்க முடியாது. அதிகப்படியான கட்டணத்தை நீர் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இறங்கி விடும்” என்றார்.

எப்படியும் புனா போய்ச் சேர்ந்துவிட விரும்பினேன். ஆகையால், கார்டுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க நான் தயாராக இல்லை. அவர் கேட்ட அதிகப்படிக் கட்டணத்தை, அதாவது புனா வரையில் கொடுத்து விட்டேன். என்றாலும், அந்த அநியாயத்தைக் குறித்து ஆத்திரம் அடைந்தேன்.

காலையில் மொகல்சராய்க்குப் போய்ச் சேர்ந்தோம். மூன்றாம் வகுப்பில் மகன்லால் இடம் பிடித்துவிட்டதால் அந்த வண்டியில் போய் ஏறிக்கொண்டேன். டிக்கெட் பரிசோதகருக்கு இந்த விஷயங்களை யெல்லாம் கூறினேன். மொகல்சராயில் மூன்றாம் வகுப்பு வண்டியில் நான் ஏறிக்கொண்டு விட்டதாக எனக்கு அத்தாட்சி கொடுக்குமாறு அவரிடம் கேட்டேன். ஆனால், அதைக் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். இதில் பரிகாரம் பெறுவதற்காக ரெயில்வே அதிகாரிகளுக்கு எழுதினேன். அதற்குப் பின்வருமாறு எனக்குப் பதில் வந்தது: “அத்தாட்சியை அனுப்பி இருந்தாலன்றி அதிகப் படியாக வசூலித்திருந்த கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது எங்களுக்கு வழக்கமில்லை. ஆனால், உங்கள் விஷயத்தில் ஒரு விதிவிலக்குச் செய்கிறோம். என்றாலும், பர்த்வானிலிருந்து மொகல்சராய்  வரையில் வாங்கிய அதிகப்படிக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது சாத்தியமில்லை.”

மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தைக் குறித்து எனக்கு ஏற்பட்ட இந்த முதல் அனுபவத்தை எல்லாம் நான் எழுதுவதாக இருந்தால் அதுவே ஒரு பெரிய புத்தகமாகி விடும். ஆனால், அந்த அனுபவங்களைக் குறித்து இந்த அத்தியாயங்களில் ஆங்காங்கே குறிப்பாகச் சிலவற்றையே நான் சொல்ல முடியும். உடல்நிலை சரியாக இல்லாததன் காரணமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தை நான் கைவிடநேருவது, எனக்கு அதிகத் துயரம் அளித்திருக்கிறது. இது எப்பொழுதும் எனக்கு அதிகத் துயரம் அளிப்பதாகவே இருக்கும்.

மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் துயரங்களெல்லாம் ரெயில்வே அதிகாரிகளின் திமிரினால்தான் ஏற்படுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. ஆயினும், பிரயாணிகளின் முரட்டுத்தனம், ஆபாசமான பழக்கங்கள், சுயநலம், அறியாமை ஆகியவைகளையும் குற்றம் கூறாமல் இருப்பதற்கில்லை. இதிலுள்ள பரிதாபம் என்னவென்றால், தாங்கள் தவறாகவும், ஆபாசமாகவும் சுயநலத்தோடும் நடந்துகொள்ளுவதை அவர்கள் உணராமல் இருப்பதே. தாங்கள் செய்வதெல்லாம் இயல்பானதே என்று அவர்கள் கருதுகிறார்கள். இவைகளுக்கெல்லாம் முக்கியமான காரணம், படித்தவர்களாகிய நாம் அவர்களிடம் கொள்ளும் அசிரத்தையே ஆகும்.

மிகவும் களைத்துப் போய்விட்ட நிலையில் நாங்கள் கல்யாண் போய்ச் சேர்ந்தோம். மகன்லாலும் நானும் ஸ்டேஷன் தண்ணீர்க் குழாயிலிருந்து கொஞ்சம் தண்ணீர் பிடித்துக் குளித்தோம். என் மனைவி குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்வதற்கு நான் போய்க் கொண்டிருந்த போது இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ கௌல் எங்களைத் தெரிந்துகொண்டார். அவர் எங்களிடம் வந்தார். அவரும் புனாவுக்குத்தான் போய்க் கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்புப் பிரயாணிகள் குளிக்கும் இடத்திற்கு என் மனைவியை அழைத்துப் போவதாக அவர் சொன்னார். மரியாதையோடு அவர் அளிக்க முன்வந்த இந்த உதவியை ஏற்றுக்கொள்ள நான் தயங்கினேன். இரண்டாம் வகுப்புப் பிரயாணிகள் குளிக்குமிடத்தை உபயோகித்துக்கொள்ள என் மனைவிக்கு உரிமை இல்லை என்பதை அறிவேன். என்றாலும், முறையற்ற அச்செய்கைக்கு முடிவில் நானும் உடந்தையானேன். சத்தியத்தை அனுசரிப்பவருக்கு இது அழகல்ல என்பதையும் அறிவேன். அந்த ஸ்நான அறைக்குப் போய்த்தான் குளிக்க வேண்டும் என்று என் மனைவிக்கு ஆவலும் இல்லை. ஆனால், சத்தியத்தினிடம் இருந்த பற்றை, மனைவியினிடம் கணவனுக்கு இருந்த பாசம் வென்றுவிட்டது. சத்தியத்தின் முகம், மாயையின் தங்கத்திரையினால் மூடப்பட்டிருக்கிறது என்று உபநிடதம் கூறுகிறது.

$$$

Leave a comment