குழந்தைகள்

-மகாகவி பாரதி


25 அக்டோபர் 1917 

ஐரோப்பாவில் பல தேசங்களில் சண்டையினால் ஆள் மிகவும் சேதப்படுவதிலிருந்து அங்கே பல பண்டிதர் இனி வரப்போகும் ஐனத்தொகையாகிய குழந்தைகளை நேரே பாதுகாக்கும் விஷயத்தில் அதிக சிரத்தை பாராட்டி வருகிறார்கள். மேல் வகுப்புக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் அளவு கீழ் ஜாதிக் குழந்தைகளுக்கு அங்கே படிப்பு இதுவரை கற்றுக் கொடுக்கவில்லை. கீழ் வகுப்புக் குழந்தைகளை அதிபால்யத்திலே தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வேலை செய்யச் சொல்லி வருவதால் அவர்களுடைய அறிவு  விசாலமடைய யாதொரு வழியுமில்லாமற் போகிறது.

யந்திரத் தொழிற்சாலைகள் மனிதரை மிருகங்களுக்கு ஸமானமாகச் செய்து விடுகின்றன. காலை முதல் மாலை வரை ஒருவன் ஒரு மனையின் மேலிருந்து கொண்டு, நரக வாதனை போன்ற தீராத யந்திரச் சத்தத்தினிடையே, யந்திரத்துக்குள் கொஞ்சங் கொஞ்சமாகப் பஞ்சை நுழைத்துக் கொண்டிருந்து விட்டு, ஸாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் குடித்து மதிமயங்கிக் கிடந்து, மறுநாள் காலை பொழுது விடியுமுன்னே மறுபடி பஞ்சு போடப் போய்விடுகிறான். இவன் தன்னுடைய அறிவை விசாலப்படுத்தவும், உலக இன்பங்களை அநுபவிக்கவும், தியானம் பூஜை முதலிய தெய்வக் காரியங்கள் செய்யும் நேரமெங்கே?

எப்போதும் இடைவிடாமல், அவன் காதில் யந்திரத்தின் பேய்க் கூச்சலும், கண்முன் இரும்பும் பஞ்சும் மாறாமல் இருப்பதால் அந்த மனிதன் நாளடைவில் மனிதத் தன்மை மாறித் தான் ஒரு இரும்பு யந்திரம் போலாய் விடுகிறான். இந்தத் தொழிலுக்குச் சிறு குழந்தைகளைக் கொண்டு விட்டால் அவற்றின் கதி என்னாகும்?

இங்ஙனம் பாழடைந்து குட்டிச்சுவராய்ப் போகும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்றும், மேல் ஜாதிக் குழந்தைகளைப் போலே கீழ் ஜாதிக் குழந்தைகளுக்கும் தக்க வயதாகும் வரை படிப்பும் நாகரிகமும் கற்றுக் கொடுத்துத் தொழிற்சாலைகளில்  சேராமல் தடுக்க வேண்டுமென்றும் மேற்குத் திசையாரில் பல பண்டிதர் முயற்சி செய்து வருகிறார்கள்; படிப்பாளிகளில் அநேகர் இந்த யுத்தத்தில் மடிந்து போவதால், சண்டை முடிந்த பிறகு ஐரோப்பாவில் கல்வியின் நிலைமை மிகவும் சீர்கெட்டுப் போயிருக்குமென்பதில் ஸந்தேகமில்லை. இது நிற்க.

நமது தேசத்தில் எல்லாருக்கும் ஆரம்பப் படிப்பு ஸர்க்கார் செலவில் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ கோகலே வைஸ்ராய் சபையில் கூகூ என்று கத்திப் பார்த்தார். செலவுக்குப் பணம் இல்லை என்று சொல்லி அதிகாரிகள் கையை விரித்துவிட்டார்கள். இது சண்டைக்கு முந்தி! இப்போதோ கேட்கவே வேண்டியதில்லை. இனிமேல் போகப் போகச் சண்டைச் செலவும், சண்டை முடிந்தால் வாங்கின கடனுக்கு வட்டிச் செலவும் அதிகப்பட்டுக் கொண்டு போகும் ஆதலால் நாம் ராஜாங்கத்தாரிடம் இவ்விஷயத்தில் அதிக உதவி எதிர்பார்க்க இடமில்லை. 

ஆண், பெண், அடங்கலாக நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இனாம் படிப்புக் கட்டாயமாய்ச் சொல்லி வைக்க வேண்டும். இது ராஜாங்கத்தாருடைய கடமை. ஆனால் நம்முடைய ராஜாங்கத்தார் இப்போதுள்ள நிலைமையில் அவர்கள் இந்தக் காரியம் செய்ய மாட்டார்கள்.

நமக்கு நல்ல காலம் எப்போது வருமோ தெய்வத்துக்குத்தான் தெரியும். அதுவரை அதிகாரிகள் எப்படியிருந்த போதிலும், அதைப் பொருட்டாக்காமல் நாட்டிலுள்ள பணக்காரர் மற்றெல்லாவித தர்மங்களைக் காட்டிலும், ஜனங்களுக்கு அறிவு விருத்தியும், தைரியமும், தேச பக்தியும் உண்டாக்கத் தகுந்த சுதேசியக் கல்வி ஏற்படுத்திக் கொடுப்பதைப் பெரிய தர்மமாகக் கருதி, அதிலே பணம் செலவிட முற்படும்படி மேற்படி பணக்காரருக்கு நல்ல புத்தி ஏற்படுத்திக் கொடுக்குமாறு தெய்வத்தை வேண்டுகிறோம்.

ஒரு நாட்டில் உள்ள எல்லாவிதமான குறைகளுக்கும் புத்திக் குறையே ஆதாரம். இது படிப்புக் குறைவினால் உண்டாவது. இந்தக் குறையை நீக்குவதில் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்தல் மிகவும் அவஸரம்.

“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையவர் கல்லா தவர்.”

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s