-எஸ்.எஸ்.மகாதேவன்

27. கண்ணன் சொன்னது: “கண்ணில் ஒற்றிக் கொள்”
ரூபாய் நோட்டில் பிள்ளையார் லட்சுமி, படங்களை அச்சிட வேண்டும் என்று தில்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை வைத்து காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறார், ‘என்னைப் போல ஹிந்து உண்டா?’ என்று கேட்கிற தொனியில். இப்போதே சாமி படம் இல்லாத ரூபாய் நோட்டு காலில் பட்டுவிட்டது என்றால் எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வது சராசரி ஹிந்துவின் வாடிக்கை. இந்திய ரூபாய் நோட்டு மட்டுமல்ல, அமெரிக்க டாலர், இங்கிலாந்து பவுண்டு என்று எந்த கரன்சியானாலும் அது சராசரி ஹிந்துவிற்கு மகாலட்சுமி தான். கண்ணில் ஒற்றிக் கொள்ளத்தான் செய்வான்.
இது என்ன ஹிந்துவுக்கு இப்படி ஒரு மனப்பான்மை? போற்றத்தக்க, மதிப்பார்ந்த எந்த ஒரு பொருளிலும் என்னை (கடவுளை) காண்பாய் என்று கண்ணன் வழி காட்டியிருக்கிறானே? கீதை பத்தாவது அத்தியாயத்தில் கண்ணன் 17 செய்யுள்களில் பட்டியலிடுகிற விஷயங்களில் சிலவற்றைப் பார்ப்போம்:
“சேனைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தனாகவும் (ஸ்கந்தன் என்பவர் முருகன்), நீர்நிலைகளுள் சமுத்திரமாகவும் இருக்கிறேன். வாக்குகளுள் ஓரெழுத்தாகிய ஓம் என்ற பிரணவம் நான். யக்ஞங்களுள் நான் ஜப யக்ஞம், அசையாதவற்றுள் ஹிமாலயமாக இருக்கிறேன். மரங்கள் எல்லாவற்றினுள் நான் அரசமரம், தேவரிஷிகளுள் நான் நாரதர். ஆயுதங்களுக்குள் நான் வஜ்ராயுதம், பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன். மாதங்களில் மார்கழி, பருவங்களில் வசந்தகாலம் நான். அழகான, புகழத்தக்க வைபவங்கள் அனைத்தும், என்னுடைய தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே என்பதை அறிவாயாக.“"” (பகவத் கீதை - சுவாமி சித்பவானந்தரின் மொழிபெயர்ப்பு).
பகவத் கீதை ஏதோ கனத்த புத்தகத்திற்குள் அடக்கம் என்று யாராவது நினைத்தால் ரூபாய் நோட்டை கண்ணில் ஒற்றிக்கொள்ளும் சாமானிய ஹிந்துவின் மனப்பான்மையை சற்று கவனித்துப் பார்க்கட்டும். கரன்சி நோட்டில் கடவுளைப் பார்க்கிறான் என்றால் அது கண்ணன் சொன்னபடியேதான்!
ஆனால் தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்து ஒன்றும் பொதுவாக பணத்துக்குப் பறப்பவன் அல்ல. அவனுடைய கலாச்சாரம் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது, ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று. செல்வத்திற்குப் பெயரே ஐஸ்வர்யம் (ஈஸ்வர சம்பந்தம் உள்ளது). பேரறிஞர் தீனதயாள் உபாத்யாய குறிப்பிடுவாரே, “சத ஹஸ்தம் ஸமாஹர, சஹஸ்ர ஹஸ்தம் வீக்கிற” என்ற உபநிடத வாக்கியத்தை, அதன் பொருள்தான் என்ன? நூறு கரங்களால் விளைவி, ஆயிரம் கரங்களுக்கு வழங்கு என்பதுதானே?
உயர்ந்த பொருட்களில் கடவுளைக் காண்பது ஒரு படி. அடுத்த படி, அனைத்திலும் ஆண்டவனை தரிசிப்பது. பச்சைப் பசேலென்று படர்ந்த புல்வெளியை தியானித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அதிலேயே ஆழ்ந்து தானே புல் என்ற ஐக்கிய உணர்வில் திளைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து காளை ஒன்று புல்லின் மீது குளம்பு பதித்து நடந்தது; பரமஹம்சர் தன் மார்பில் வலியை உணர்ந்தார். இது அவரைப் பற்றிய கதை அல்ல. அவர் பெற்ற அனுபவத்தின் வர்ணனை.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று ராமலிங்க வள்ளலார் பாடியது உயர்வு நவிற்சியாக அல்ல; அவருடைய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அனுபவம் அது. ’ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இங்குள்ள அனைத்திலும் ஈசன் வசிக்கிறான்) என்று உபநிடதம் பேசுகிறதே, அது வேறொன்றும் அல்ல; இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதைத்தான் அப்படிச் சொல்கிறது.
இதெல்லாம் ரூபாய் நோட்டைக் கண்ணில் ஒற்றிக்கொள்வது போன்ற அன்றாடப் பழக்க வழக்கங்களால் ஹிந்துவுக்கு மனதின் அடியாழத்தில் பதிந்து போன சங்கதி. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது போன்ற சொல்லாடல்களால் ஹிந்து சோம்பேறி ஆகி விடுவதில்லை. மாறாக எங்கும் நிறைந்த ஈசன் நாமேதான் என்ற எண்ணத்தில் அவன் தன்னை பத்திரமாக உணர்கிறான். அதுமட்டுமல்ல, மறுபிறவியில் ஹிந்துவுக்கு உள்ள நம்பிக்கை அவன் மனதில் அமைதியைப் படர்த்துகிறது. இந்தப் பிறவியில் நல்லது நடந்தால் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும், இந்தப் பிறவியில் கஷ்டம் நேர்ந்தால் வினைப்பயன் என்றும் நினைத்துக் கொள்ளப் பழக்கப்பட்டவன் ஹிந்து. உலகில் வேறு எந்த நாகரிகத்திலும் இப்படி ஒரு பண்புப் பதிவு கிடையாது.
இந்தோனேஷியாவை கம்யூனிஸ்டுகள் 1965-இல் கைப்பற்ற முயன்றபோது சுஹார்த்தோவின் ராணுவம் பல்லாயிரக்கணக்கில் படுகொலை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியைத் துடைத்தழித்தது. “ஹிந்துக்களான (அந்த நாட்டின்) பாலித் தீவு மக்கள் கொலையாவதற்கு வரிசையாக வந்து நின்றார்கள்; மறுபிறவி நிச்சயம் என்ற அவர்களின் நம்பிக்கைதான் காரணம்” என்று அடுத்த ஆண்டு ‘கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்’ என்ற அமெரிக்கப் பத்திரிகை எழுதியது.
இது எதிர்மறையான உதாரணம் என்றாலும், சனாதன தர்மம் எனப்படும் ஹிந்துவின் வாழ்வியல் பற்றி உலகத்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதுதான் விஷயம். ஆக்கபூர்வமான விதத்தில் சனாதன தர்மம் உலகிற்கு நம்பிக்கையூட்டிய சமீபத்திய உதாரணம் வேண்டுமென்றால், கொரோனா பரவிய இரண்டு ஆண்டுகளில் 150 நாடுகளுக்கு சனாதன தர்மத்தின் தொட்டிலான பாரத தேசம் இலவசமாக தடுப்பூசி அனுப்பி வைத்ததே, அதுதான்.
$$$