-சேக்கிழான்

புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி
4. வளர்ச்சிக்கான மூன்று அடிப்படைகள்:
‘குணநலம் சான்றோர் நலனே’ என்பார் திருவள்ளுவர் (திருக்குறள்- 982). நாட்டின் குடிமகன் சான்றோனாக இருக்க வேண்டும் என்று விழையும் பாரதி, அதற்கான பண்பு நலங்களைக் கூறிச் சென்றிருக்கிறார். அச்சமே மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளுகிறது என்பதால்தான் ‘அச்சம் தவிர்’ என்று தனது புதிய ஆத்திசூடியைத் துவக்குகிறார் பாரதி. ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்ற திருக்குறளை (1075) இங்கு நினைவு கூரலாம்.
யாருக்கெல்லாம் அஞ்சக் கூடாது? கீழோர்க்கு (16), சாவதற்கு (26), தீயோர்க்கு (45), தொன்மைக்கு (51), பேய்களுக்கு (72) அஞ்சக் கூடாது என்கிறார் பாரதி. அடுத்து, அச்சமின்மைக்கு வழிவகுக்கக் கூடியதாக, ஆண்மை தவறேல் (2) என்ற வாசகம் வழி, வீரத்தை விட்டுவிடக் கூடாது என்கிறார்.
காலத்தை வீணாக்குதல் கூடாது (14); எந்த இடரிலும் மனம் தளரக் கூடாது (27); நாய் போல அடிமை வாழ்வு வாழக் கூடாது (37); தேனீக்கள் போல பிறரும் இன்புற வாழ வேண்டும் (38); எளியோர்க்கு இரக்கம் காட்டுவது பண்புடைமை (40); துயரத்தை வெல்ல வேண்டும் (46), யாரையும் புறம் கூறக் கூடாது (47); பொய்யை வெறுக்க வேண்டும் (73); தன்மானத்துடன் வாழ வேண்டும் (76); தேவையான நேரங்களில் அமைதியை, மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும் (84); ஆணவம் கூடாது (85); பொறாமை கூடாது (110) ஆகிய அமுத மொழிகள் வாயிலாக, நற்குணங்களை பண்புப் பதிவுகளாக இளையோர் நெஞ்சில் நாட்டுகிறார் பாரதி.
ஒருவன் உயர்ந்த குணங்கள் கொண்டவனாக இருந்தாலும் வலிமை வாய்ந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் சாதிக்க முடியும். எனவே தான் உடலினை உறுதி செய் (5) என்று கட்டளையிடுகிறார் பாரதி.
வலிமையே வாழ்வு…
‘பலமே வாழ்வு; பலவீனமே மரணம்’ என்று கூறுவார் சுவாமி விவேகானந்தர். வலிமையான உடலில் தான் உறுதியான உள்ளம் அமையும் என்பது அவர்தம் கூற்று. எனவேதான், உடல்நலத்துக்கு உகந்த அறிவுரைகள் பலவற்றை அருளி இருக்கிறார் பாரதி.
‘விசையுறு பந்தினைப் போல்- உள்ளம் வேண்டியபடிச் செல்லும் உடல் கேட்டேன்..’
-என்றும் (கேட்பன),
‘தோளை வலிவுடையதாக்கி- உடற் சோர்வும் பிணி பலவும் போக்கி- அரி வாளைக் கொண்டு பிளந்தாலும்- கட்டு மாறாத உடலுறுதி தந்து…’
-என்றும் (யோகசித்தி) மகாகவி பாரதி பாடி இருக்கும் பாடல்களை இங்கு நினைவுகொள்ளுதல் நலம்.
உடல் வலிமை, நோயின்மை, புலனடக்கம், தொடர் பயிற்சி, நல்லுணவு ஆகியவற்றால் உடல்நலத்தை எய்தல் கூடும். அதற்கான அறிவுரைகளை பாரதி கூறி இருக்கிறார்.
விரிவடைவதே வாழ்க்கை. சுருங்குவதே அழிவு என்று சொல்லப்படுவதுண்டு. எனவேதான் இளைத்தல் நல்லதல்ல (3) என்கிறார் பாரதி. உடல் நலத்தில் மட்டுமல்ல செல்வ வளத்திலும் இளைத்தல் பலவீனமே. பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி உண்டு.
உடலினை பயிற்சிகள் வாயிலாக உறுதியானதாக்க வேண்டும் (5); உடலையும் மனதையும் கட்டுக்குள் வைப்பதன் மூலமாக ஐம்புலன்களையும் ஆளத் தெரிந்திருக்க வேண்டும் (9); நோய்களுக்கான மருந்தை குறைவாகவே உட்கொள்ள வேண்டும்; அதாவது நோய்களே வராது தடுக்க வேண்டும் (12);
நமது தோற்றத்துக்குப் பொலிவூட்டும் தடியுடன் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது சிலம்பக் கலை பயின்றிருக்க வேண்டும் (23); சூரிய வந்தனம் செய்வதன்மூலம் உடலை நெறிப்படுத்த வேண்டும் (38); மனதை ஒருமைப்படுத்தும் தியானம், தவம் போன்றவற்றில் தினமும் ஈடுபட வேண்டும் (53); இறப்புக்கு வழிவகுக்கும் நோயால் நொந்துபோவதைத் தவிர்க்க வேண்டும் (63);
வாழ்க்கையை வெறுக்கச் செய்யும் மூப்பு விரைவில் வர அனுமதிக்கக் கூடாது (80); முழுமையான ஈடுபாட்டுடன் தவம் செய்ய வேண்டும் (83); இளமைத் தன்மையை காக்க நிதமும் உடற்பயிற்சி, நல்லுணவு, போதிய உறக்கம், புலனடக்கம் ஆகியவற்றைக் கைக்கொள்ள வேண்டும் (88); நாவின் ருசிக்கு அடிமையாகிவிடக் கூடாது (92); எப்போதும் மிடுக்காகவும், பொலிவான முகத்துடனும் இருக்க வேண்டும் (93); உடலின் வீரியத்தை தளரவிடக் கூடாது; அதை விருத்தி செய்ய வேண்டும் (106) ஆகியவை உடல்நலம் குறித்த மகாகவி பாரதியின் அறிவுறுத்தல்கள்.
கற்க கசடற…
அடிப்படை குணங்கள் நல்லவையாக அமைய வேண்டும்; அதன்பின் உறுதியான உடலை அமைக்க வேண்டும்; அதன்பின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான கல்வி நாட்டத்தில் குழந்தைகள் கவனம் கொடுக்க வேண்டும்.
கல்வி கற்பதன் நோக்கம் அதன் படி நடப்பதே என்கிறார் (13) பாரதி.
கற்க கசடற கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக
என்று திருவள்ளுவர் (திருக்குறள்- 391) இரு வரிகளில் கூறுவதை இரண்டே வார்த்தைகளில் சொல்கிறார் பாரதி. எத்தகையவற்றைக் கற்க வேண்டும்?
சரித்திரத்தில் தேர்ந்த அறிவு தேவை (26); சைகைக்கலையின் பொருள் உணர்ந்திருக்க வேண்டும் (33); சோதிடத்தை நம்பி எதிர்காலத்தை விட்டுவிடாமல், நாமே எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் (35); சட்டம், நீதி ஆகியவற்றைக் கூறும் நூல்களைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் (57); எந்த நூலாயினும் அதனை முழுமையாக நுணுகி ஆராய்ந்து கற்க வேண்டும் (59); வலிமை தரும் மந்திரங்களைக் கொண்ட வேதம் பயில வேண்டும் (75); நவரசம் என்று சொல்லக்கூடிய மெய்ப்பாடுகளையும் அவற்றைக் கொண்டு இயலும் நடனம், நாடகம் ஆகிய கலைகளிலும் தேர்ச்சி கொள்ள வேண்டும் (89);
எல்லா இடங்களிலும் மென்மையான போக்கு உதவாது. எனவே முக்குணங்களில் ஒன்றான ராட்சத குணமும் பயின்றிருக்க வேண்டும் -இது கல்வி அல்ல; கவாத்து போன்ற பயிற்சியால் அமைவது (90); ஒருவரை அறிய கைரேகை சாத்திரத்தை அறிந்திருக்க வேண்டும் (94); எதையும் உடனே வெற்றிகரமாகச் செய்துமுடிக்க வேண்டுமானால், அது லாவகமாக முடிய வேண்டுமானால் இடையறாத பயிற்சி அவசியம் (98); உலோகங்கள் தொடர்பான அறிவியலைக் கற்க வேண்டும் (101); வானவியலில் ஞானம் பெற வேண்டும்- சோதிடத்தை இகழ்ந்தவர் வானநூலைக் கற்கச் சொல்கிறார் (104) ஆகியவை பாரதியின் அறிவுநல விழைவுகள்.
$$$