-சேக்கிழான்

புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி
5. இலக்கை அடைய எளிய கருவிகள்…
ஒருவன் அடிப்படையாகப் பெற வேண்டிய குணநலன்கள், உடல் வலிமை, கல்வித் திறம் ஆகியவற்றைப் பெற்றிருந்தாலும், அவனது நடையழகும், நல்லெண்ணமும், சமுதாய உணர்வும்தான் அவனை அவையத்து முந்தி இருக்கச் செய்கின்றன; இலக்கை நோக்கி அவனை உந்தித் தள்ளுகின்றன.
ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரைப் பற்றிய சித்திரம் உருவாகுதல் உலக இயல்பு. எனவே, நமது நடையும் நடத்தையுமே நமக்கு வெளியுலகில் உடனடியான மதிப்பைப் பெற்றுத் தரும். எனவேதான், நடையழகுக்கு பாரதி முக்கியத்துவம் தந்திருக்கிறார்.
தனது ‘நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்’ என்ற கவிதையில், எப்படிப்பட்ட இளைஞர்கள் நாட்டில் இருக்க வேண்டும், எப்படிப்பட்டவர்கள் இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு உரைத்திருக்கிறார் பாரதி.
வலிமையற்ற தோளுடன், மார்பு ஒடுங்கிய, பொலிவற்ற முகத்துடன், ஒளியற்ற கண்களுடன் காட்சிதரும் இளைஞனை ‘போ போ’ என்று விரட்டுகிறார் அவர். அவரது காலத்தைய அடிமைப்பட்ட இளைஞனின் வடிவம் அது. மாறாக, அவர் விரும்பி வரவேற்ற இளைஞன் எப்படி இருக்கிறான் என்று பாருங்கள்:
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா களிபடைத்த மொழியினாய் வா வா வா கடுமைகொண்ட தோளினாய் வா வா வா தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா ஏறுபோல் நடையினாய் வா வா வா!
என்று பாடும் பாரதிக்கு, ஏறுபோல் நடப்பதில் அலாதிப் பிரியம். திமிர்ந்த காளை போல எவர்க்கும் அஞ்சாத தீரத்துடன், வீரவிழிப் பார்வையுடன், உலகை வெல்லத் துணியும் ஞானத்துடன் இளைஞர்கள் நடை பயில வேண்டும் என்பதே அவரது அவா.
நன்னடைக்கு என்னென்ன தேவை? இதோ அவரே கூறுகிறார்…
சோம்பலும், ஓய்வு என்ற பெயரிலான காலமழித்தலும் கூடாது (11); நிலையிற் கலங்காத குன்று போல என்றும் நிமிர்ந்த மிடுக்கு வேண்டும் (17); சோம்பல் மனிதனின் முன்னேற்றத்துக்குத் தடை (19); கெடுமனம் படைத்தோரிடம் சீறத் தயங்கக் கூடாது (28); வசதியான வாழ்க்கையைத் தவறவிட்டுவிடக் கூடாது (36); எக்காலத்தும் நமது இயல்பான தன்மையைக் கைவிடக் கூடாது (42); யாருக்கும் தாழ்ந்துபோகக் கூடாது (43); எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதன் இறுதி வரை முயன்று முடிக்க வேண்டும் (58);
எப்போதும் யாரிடமும் முகம் சுழித்துப் பேசக் கூடாது, முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும் (60); காலம் கடந்துபோன கருத்துகளைப் போற்றக் கூடாது, என்றும் புத்திளமையுடன் திகழ வேண்டும் (67); பெருமை தரும் செயல்களுக்கு மாற்றான பீடைச் செயல்களுக்கு இடம் தரக் கூடாது (68); சோம்பேறித்தனத்தால் வாழ்வை இழந்துவிடக் கூடாது (77); வாழ்க்கையில் ஓர் ஒழுங்குமுறையை வகுத்துக்கொண்டு தவறாமல் வாழ்வது சிறப்பு (91).
மேற்கண்டவற்றைப் பின்பற்றுவோரின் நடை கம்பீரமாகவும், தேஜஸுடனும் விளங்கும். அத்தகையவர்களை உலகம் வணங்கும்.
சொலல் வல்லன்…
தற்கால இளைஞர்கள் கணிப்பொறியிலும், கையடக்க அலைபேசியிலும் தனது காலத்தைச் செலவிட்டு பொலிவிழந்து வருகின்றனர். நமது எண்ணமே நம்மை வடிவமைக்கும் தகைமை வாய்ந்தது. எனவே நாம், அநாவசிய எண்ணங்களைத் தவிர்ப்பது, வாழ்வின் உயர்வுக்கு வழிகோலும்.
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று திருவள்ளுவர் (திருக்குறள்- 596) ஊக்கமுடமை அதிகாரத்தில் கூறும் கருத்து, உயர்ந்த எண்ணமே நம்மை உயர்த்தும் என்பதுதான். இதனையே ‘எண்ணுவதுயர்வு’ என்று (7) கூறுகிறார் பாரதி. இதற்கான வழிகள் யாவை என்றும் பல இடங்களில் அவர் கூறிச் செல்கிறார்…
செயற்கரிய செயல் செய்யும் சூரர்களைப் போற்ற வேண்டும். அதன்மூலம் நாமும் அரிய செயல்வீரர்களாக முடியும் (30); எந்தச் செயலாயினும் திட்டமிட்டு, துணிவுடன் செய்ய வேண்டும் (31); யாரிடம் பேசினாலும் தெளிவாகப் பேச வேண்டும் (34); அதையும் நன்கு ஆராய்ந்து பேச வேண்டும் (81); எதையும் நேர்மையுடனும் அச்சமின்றியும் பேச வேண்டும் (61); அதையும் உரக்க, துணிவுடன் பேச வேண்டும் (107);
நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் கடமையுணர்வுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும், அதன் வெற்றி- தோல்வியில் மயங்கக் கூடாது (52); நல்லனவற்றையே எண்ண வேண்டும். எந்தக் காரியம் செய்யப் புகும் முன்னரும் அதன் வெற்றியையே கருத வேண்டும் (54); நாம் உள்ள உறுதியுடன் இருந்தால் நினைப்பது அனைத்தும் நிறைவேறும் (56);
எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்க வேண்டும். தானியங்களை நையப் புடைத்தல் போல செயலில் வைராக்கியம் வேண்டும் (62); திட்டமிட்ட, வியூகம் அமைத்த செயல்கள் நிச்சயம் வெல்லும். அந்தத் திட்டங்கள் உதவாதபோது அவற்றிலிருந்து விடுபடவும் தெரிந்திருக்க வேண்டும் (78); அற்பர்கள், கீழோர், நேர்மையற்றவர்கள், சுயநலமிகளை மதிக்கக் கூடாது (100).
இவ்வாறு உயர்ந்த எண்ணங்களுடன், வல்லமை மிகுந்த சொல்லாடல் மிகுந்தவனை வெல்ல உலகில் யாரும் இல்லை என்று கூறுகிறது திருக்குறள். (647):
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது.
இறைவனின் பணியாளனே மனிதன்:
நமக்கு இறைவன் அருளிய வாழ்க்கை அனைவருக்கும் நலன் விளைவிக்கவே என்ற எண்ணமே நம்மை உய்விக்கும். இல்லாதோர்க்கு ஒன்று ஈவதே வாழ்வின் பொருள் என்பார் திருவள்ளுவர் (திருக்குறள்- 231). பாரதியும் ‘ஈகை திறன்’ (4) என்று கூறுவதன் வாயிலாக, தானம் செய்வதன் உட்பொருளை விளக்குகிறார். இதுவே சமுதாய உணர்வு. இதனை வலுப்படுத்த பாரதி கூறும் வழிமுறைகள்:
ஒற்றுமையே நாட்டுக்கும் தனி மனிதனுக்கும் நன்மை விளைவிக்கும் (10); எந்தப் பலன் கிடைத்தாலும் அதனை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் (103); பிறரது அனைத்துச் செயல்களுக்கும் தனி ஒருவன் பொறுப்பாக முடியாது. அனைவரையும் அரவணைக்க வேண்டும் என்பதற்காக அவர்களது கடமைகளை நாமே செய்ய இயலாது (15); அனைவரும் இணைந்து தொழில் செய்து நட்டை முன்னேற்ற வேண்டும் (18); ஏதாவது ஒரு கைத்தொழிலில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் (21); எந்த வேலையும் சிறியதோ பெரியதோ அல்ல. அனைத்தும் முக்கியமானவையே (97); உழவுத் தொழிலைப் போற்ற வேண்டும் (82);
குடும்பச் சுமை, சமுதாயக் கடமைகளின் சவாலைக் கண்டு மருண்டுவிடக் கூடாது (29); நல்ல சேர்க்கை நன்மையைப் பல மடங்கு தரும். அத்தகைய நட்பு வட்டத்தை இழந்துவிடக் கூடாது (32); உலக வாழ்க்கைக்கு அடிப்படையான பணத்தினைப் பெருக்கும் தொழில்களில் ஈடுபட வேண்டும் (65); இசை, பாட்டு முதலான கலைகளால் சமுதாயத்தில் அன்பைப் பெருக்க வேண்டும் (66);
நாட்டின் பாதுகாப்புக்கு உதவும் போர்க்கலைகளைப் பயின்றிருக்க வேண்டும். அது தனி மனிதப் பாதுகாப்புக்கும் உதவும் (74); மனிதர்கள் எவரும் தாழ்ந்தவர் அல்லர். சிறியவர்- பெரியவர், மேலோர்- கீழோர், செவர்- ஏழை என்ற எந்த பேதமும் இன்று அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் (87); இந்த உலகம் இறைவனின் அற்புதமான லீலைகளில் இயங்கும் ஒரு பொம்மை. இதை மனதில் இருத்தி, ஆணவம் இல்லாது, அனைவருக்கும் நலம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் (99).
இதுவரையிலும் 6 விதமான சுய முன்னேற்ற அம்சங்களை நாம் பார்த்தோம். இந்த சுய முன்னேற்றத்தால் அடைய வேண்டியது என்ன? அடுத்த அத்தியாயத்தில் அதனைக் காண்போம்…
$$$