-மகாகவி பாரதி

3. சுதேசமித்திரன் 11.12.1915
சென்ற வாரம் சென்னப்பட்டணம் கந்தசாமி கோயில் வசந்த மண்டபத்தில், சாது மகா சங்கத்தாரின் ஏற்பாட்டிலே ஒரு கூட்டம் நடந்தது. அதிலே, சுவாமி அத்புதாநந்தர் என்பவர் ஒரு நேர்த்தியான உபந்யாசம் செய்ததாகத் தெரிகிறது.
சுவாமி சொல்லியதன் சுருக்கம்:-மத விஷயங்களில் நமது முன்னோர் மிகவும் உயர்ந்த ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிறார்கள். இவற்றை நாம் நன்றாகத் தெரிந்து கொண்டு உலகத்தாருக்கெல்லாம் உபதேசம் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் அமெரிக்கா ஐரோப்பா முதலிய வெளி தேசத்தார் நமது உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
இனி, மதவிஷயங்கள் என்பவை பரமார்த்திக உண்மைகளாம்; அதாவது ஐம்புலன்களுக்கெட்டாத, சுத்த அறிவினால் காணுதற்குரிய, தெய்விக உண்மைகள்; இவை ஞானம், பக்தி, யோகம் என்னும் வழிகளிலே கிடைப்பனவாகும். இவற்றை நமது முன்னோர் பெரியபாடு பட்டுத் தேடித் தம்முடைய நூல்களிலே திரட்டி வைத்திருக்கிறார்கள். இந்தச் செல்வத்தை நாம் திறமையுடன் கையாண்டு உலகத்தாருக்கெல்லாம் வாரிக் கொடுத்து இவ்வுலகத்தின் துன்பங்களையும், சிறுமைகளையும் அறியாமைகளையும் மாற்றி இதனை மேன்மைப்படுத்த வேண்டும்.
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
என்று திருவள்ளுவர் சொல்லியபடி, இஃதே ஸ்வாமி அத்புதாநந்தருடைய கருத்தாகும். இதை நான் பரிபூர்ணமாக அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். ஆனால், நமது ஆசையை இவ்வளவுடன் நிறுத்தி விடலாகாது. லௌகிக விஷயங்களிலும் நமது உதவியை உலகம் வேண்டித்தான் நிற்கிறது. இதை நாம் மறந்து விடலாகாது. நமது முன்னோர் பரமார்த்திகச் செய்திகளில் மாத்திரமே நிகரற்ற மேன்மையடைந்திருந்ததாக நினைத்துவிடலாகாது. இகலோக அறிவிலும் ஆச்சரியமான உயர்வு பெற்றிருந்தார்கள். பல தேசங்களையும் அவற்றின் பலவித சாஸ்திரங்களையும், நன்றாக அறிந்த எனது நண்பரொருவர் ஐரோப்பாவில் மகா கீர்த்தி பெற்றிருக்கும் யவனத்துச் (கிரேக்க தேசத்துச்) சிற்பத்தைக் காட்டிலும் நமது புராதனச் சிற்பம் மேம்பட்டதென்று கருதுகிறார். இதை வெளியுலகத்தாருக்கு விளங்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன், ஸ்ரீ ஆனந்த குமாரசாமி முதலிய வித்வான்கள் மிகவும் உழைத்து வருகிறார்கள். ஆனால் இதை இங்கு நமது தமிழ் நாட்டிலே வாழும் ஜனங்களுக்கு விளங்கக் காட்டுவார் யாரையும் காணவில்லை. பல தேசத்து சங்கீதங்களையும் நான் ஒருவாறு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். நமது புராதன சங்கீதத்துக்கு நிகரானது இவ்வுலகத்தில் வேறெங்குமில்லை என்பது என்னுடைய முடிவு. கவிதை விஷயத்திலும் இப்படியே.
இனி கணிதம், ரசாயனம் முதலிய வேறு பல சாஸ்திரங்களும் நமது தேசத்திலே தான் முதலில் வளர்ச்சி பெற்றவையாகும்.
* *
நாம் இகலோகத்து அறிவிலும் மேம்பாடு பெற வேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன்மேலும் வளர்ந்து மீளவும் உலகத்தாருக்கு ஊட்ட வேண்டும். இகலோக வளர்ச்சியிலே நாம் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நாமே தகுதியுடையோர்.
பம்பாயில் நடக்கப் போகிற காங்கிரஸ் சபைக்குப் பல ஊர்களிலிருந்து பிரதிநிதிகள் வருவதிலே சில மாதர்களும் பிரதிநிதிகளாக வரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண் பிரதிநிதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யும் பொருட்டு தர்ம சேவர்களாக (வாலண்டியர்களாக) ஆண் பிள்ளைகள் முற்பட்டு வந்திருப்பது போலவே, பெண் பிரதிநிதிகளுக்கு வேண்டிய உபகாரங்கள் செய்வதற்காக தர்மசேவகப் பெண்கள் சிலர் முற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புதுமை நமது தேசத்துக்குப் பெரியதோர் நன்மைக்குறியென்பது என்னுடைய கொள்கை.
* *
அடடா! விளையாட்டுப் பேச்சை மறந்தல்லவோ போய்விட்டோம். யுவான் ஷி காய் சீன தேசத்துக் குடியரசுத் தலைவர்- காயாக இருந்தவர் பழுத்துக்கொண்டு வருகிறார். பூர்வ ராஜ வம்சத்தை ஒழிப்பதற்கு பகீரத பிரயத்தனங்கள் செய்து சீன தேசத்தார் குடியரசு நாட்டினார்கள். யுவான்-ஷி-காயின் பக்கம் சேனாபலம் இருந்தபடியால் அந்தக் குடியரசுக்கு இவர் தலைமை பெறுதல் சுலபமாயிற்று. நாட்பட நாட்பட, வெகு சீக்கிரத்தில், யுவான் மனதில் குடியரசை விட ராஜதிகாரமே சீனத்துக்குப் பொருந்திய ஏற்பாடாகுமென்று உதயமாயிற்று. உலகத்தாரெல்லாம் இவர் தாமே ராஜாவாகிவிட நினைப்பதாக நிச்சயித்தனர். இப்போது பழைய குமார ராஜாவுக்கு இவருடைய பெண்ணை மணஞ் செய்து கொடுப்பதாக வதந்தியேற்படுகிறது. எனவே சீனா தேசத்துக் குடியரசு இன்னும் எவ்வளவு காலம் ஜீவித்திருக்குமென்பதை நமது தேசத்து ஜோதிடர்கள் கண்டுபிடித்துச் சொல்லும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். அதன் ஜாதக விவரங்கள் சிலவேண்டுமானாலும் சொல்லுகிறேன்.
மேற்படி குடியரசுக்கு உச்சஸ்தானத்திலே இராகு இருக்கிறான். இரண்டாமிடத்திலே சனி. சனி சப்பாணியென்ற விஷயம் சகலருக்கும் தெரியும். மற்ற கிரகங்களெல்லாம் வக்கிரந்தான். இதற்கு நானே தீர்மானம் சொல்லிவிடக்கூடும். ஆனால், எனக்கு ஜோதிடத்திலே அரிச்சுவடி கூடத் தெரியாது.
**
செய்யூரிலிருந்து ஸ்ரீ மாதவய்யா ஒரு கிழவருடைய விவாகத்தின் சம்பந்தமாக எழுதியிருந்த கடிதம் சில தினங்களின் முன்னே சுதேசமித்திரனில் பிரசுரஞ் செய்யப்பட்டிருந்தது.
கிழவருக்கு வயது 70; அவருடைய தாயார் இன்னும் உயிரோடிருக்கிறாள். அந்தப் பாட்டிக்கு வயது 98. இந்தத் தாயாருக்கும் தமக்கும் உபசாரங்கள் செய்யும் பொருட்டுக் கிழவர் ஒரு பதினாறு வயதுக் குமரியை மணஞ் செய்துகொள்ளப் போகிறாராம். இதே கிழவரிடம் இதைத் தவிர இன்னும் 21 குமரிகள் ஜாதகம் வந்திருப்பதாகத் தெரிகிறது. கடைசியாக ஒருவாறு தீர்மானஞ் செய்திருக்கிற பெண்ணுடைய தகப்பனார் பணத்தையும் விதியையும் ஜோதிடத்தையும் நம்பி வேலை செய்கிறார். தெய்வத்தை நம்புவதாகத் தெரியவில்லை. ஒட்டகத்துக்கு ஓரிடத்திலா கோணல்? தமிழ் நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?
- சுதேசமித்திரன் (11.12.1915)
$$$