மகாவித்துவான் சரித்திரம்- 1(20)

-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்

20. திருவாவடுதுறையாதீன வித்துவான் ஆகியது

மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் முயற்சி

இவர் திருவாவடுதுறைக்குச் சென்று வரும்பொழுது அங்கே சின்னப்பட்டத்தில் இருந்த சுப்பிரமணிய தேசிகர் இவர்பால் அன்புடன் பேசியிருந்து மகிழ்வது வழக்கம். அவர் தமிழ்ப் பெருங்கவிஞராகிய மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையில் அவதரித்தவர். இயல்பிலேயே தமிழார்வம் மிக்கவர். தாண்டவராயத் தம்பிரானிடத்துப் பல தமிழ் நூல்களைப் பாடங் கேட்டவர். நுணுகிய அறிவு வாய்ந்தவர். வித்துவான்களுடைய திறமையை நன்றாக அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவர். *1 பிள்ளையவர்களைப்பற்றித் தாண்டவராயத் தம்பிரானவர்கள் மூலமாக முன்னரே அறிந்தவர். நேரிற் பார்த்துப் பழகிய பின்னர் இவரிடத்து அவருக்கு அதிகமான அன்பு ஏற்பட்டது. இவரைத் தம்முடைய மடத்திலேயே இருக்கச்செய்து தம்பிரான்களுக்கும் பிறருக்கும் தமிழ் நூற்பாடஞ் சொல்லிக்கொண்டிருக்கச் செய்ய வேண்டுமென்னும் எண்ணம் அவருக்கு உண்டாகி வளர்ச்சியுற்றது. அவ்வாறு செய்வதற்கு அப்பொழுது ஆதீன கர்த்தராக இருந்தவரும் தம்முடைய ஞானாசிரியருமான அம்பலவாண தேசிகருடைய கட்டளையைப் பெற விரும்பி ஒருநாள் அவர் அம்பலவாண தேசிகரிடம் இவருடைய பெருமைகளைப் பற்றி விரிவாகச் சொல்லி, “தமிழில் மிக்க பயிற்சியுள்ள மீனாட்சிசுந்தரம் பிள்ளையை இவ்விடத்திலே இருக்கச் செய்து தம்பிரான்களுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ்ப் பாடங்களை முறையாகச் சொல்லி வருமாறு சந்நிதானத்திற் கட்டளையிட்டால் நலமாயிருக்கும். படிப்பதற்குப் பலர் காத்திருக்கிறார்கள்” என்று விண்ணப்பித்தார். அப்போது இருவருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது:

அம்பல: இங்கே கந்தசாமிக் கவிராயரும் சில தம்பிரான்களும் இருக்கிறார்களே; அவர்களைக் கொண்டே சொல்விக்கலாமே.

சுப்: சிற்சில நூல்களைப் பாடஞ் சொல்லுவாரேயன்றி இக் காலத்தில் வழங்கும் தமிழ்ப் பிரபந்த வகைகளையும் பெரிய காப்பியங்களையும் இலக்கண நூல்களையும் திருக்குறள் – பரிமேலழகருரை முதலியவற்றையும் வருத்தமின்றித் தெளிவாகச் சொல்வதற்குக் கவிராயரால் இயலாது. இதுவரையிற் பாடஞ் சொல்லி வந்ததில் அவரிடம் படித்து நல்ல தேர்ச்சி பெற்றவர் ஒருவரையும் காணவில்லை. வெகு காலத்துப் பழக்கத்தினால் கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் என்பவற்றைப் படித்து அவர் கதை சொல்லிக்கொண்டு வருகிறார். அதனை ஒரு பெரிய செயலாக மதிக்கலாகாது. படித்தவர்களுடைய இயல்பு பாடஞ்சொல்வதனாலே தான் விளங்கும்.

அம்பல: இவர் மட்டும் அதிகமாகப் படித்தவரென்பது உமக்கு எப்படித் தெரியும்?

சுப்: இந்த ஆதீன வித்துவான் தாண்டவராயத் தம்பிரான் இவரைப் பற்றிப் பலமுறை அடியேனிடம் சொல்லியிருப்பதுண்டு. இப்பொழுது வழங்கும் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை யெல்லாம் யாதொரு சிரமமும் இல்லாமல் மிகவும் சுலபமாக இடைவிடாமற் பாடஞ் சொல்லும் ஆற்றலை யுடையவரென்றும் அங்ஙனம் சொல்வதொன்றே இவருக்குத் திருப்திதரப் போதுமானதென்றும் பல நூல்களை இயற்றியுள்ளாரென்றும் சொல்லியிருக்கிறார். இவருக்கு அவ்வாறு பாடஞ் சொல்லுவதே பொழுது போக்காக இருக்கிறதாம். இதனை அவர் சென்னை, திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் பன்முறை அறிந்திருந்தனராம். இவரைப்போற் சிரமமில்லாமற் பாடஞ் சொல்வதற்குச் சிறிதேனும் தம்மால் இயலாதென்றும் இவர் இருந்தால் மடத்திற்கு இன்னும் விசேஷமான கெளரவங்கள் உண்டாகுமென்றும் வித்துவான்கள் பலரிடத்தும் சென்று பாடங்கேட்டதனால் இந்த ஆதீனத்திலிருந்த சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர் முதலியவர்களுடைய நூல்களை இவரையன்றிச் சொல்லுபவரில்லையென்றும் அடிக்கடி இவரைப் பற்றி அடியேனிடம் பாராட்டிப் பேசி மகிழ்வார். அன்றியும் இவர் பல வருஷங்களுக்கு முன் வேளூர் மகா ஸந்நிதானத்தின் காலத்தில் அவர்களைத் தரிசித்து அவர்களால் பாராட்டப் பெற்றவராம்.

அம்பல: ஓ! இவரைப் பார்த்தால் நமக்கு அப்படித் தோற்றவில்லையே. நீர் மிகச் சிறந்தவராகக் கூறுகின்றீரே!

சுப்: ஆம். இவரையொப்பாரும் மிக்காரும் இத் தமிழ்நாட்டில் வேறொருவரும் இல்லை.

அம்பல: பார்ப்பதற்கு மிக்க சாதுவாக இருக்கிறாரே!

சுப்: நன்றாகப் படித்தவர்கள் அவ்வாறே இருப்பார்கள். பிறர் தாமே அறிந்து தங்களை உபசரித்தால்தான் தம்முடைய ஆற்றலை அவர்கள் புலப்படுத்துவார்கள்.

அம்பல: இவரை யாராவது உபசரித்ததுண்டா?

சுப்: இவர் சென்னையிற் பல பிரபுக்களாலும் வித்துவான்களாலும் நன்கு மதிக்கப்பட்டவர். தாண்டவராயத் தம்பிரான் சென்னையில் இருந்தபொழுது அவர்கள் இவரை உபசரித்ததை நேரிற் கண்டாராம். அன்றியும் பங்களூரில் இவர் மிக்க சிறப்பை அடைந்திருக்கின்றாராம். இந்தப் பக்கத்துப் பிரபுக்கள் யாவரும் இவருடைய நண்பர்கள்.

அம்பல: அது சரிதான். இவருடன் பலர் இருக்கிறார்களே; அவர்கள் இவரைவிட்டு நீங்க மாட்டார்கள் போல் இருக்கிறதே. இவரோடு எல்லோரும் இங்கே இருப்பாராயின் அதிகச் செலவாகும் அல்லவா? அதைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கிறோம்.

சுப்: அவ்வளவுபேரும் இவருடைய மாணாக்கர்கள். இவர் எங்கே இருந்தாலும் உடனிருப்பார்கள். அவர்களுள் முன்னமே படித்தவர்கள் சிலர்; இப்பொழுது படிப்பவர்கள் சிலர்;  இனிப் படிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சிலர்; அவர்களிற் பந்தியிலே உண்ணத்தக்கவர்களுக்குப் பந்தியிலும் ஏனையவர்களுக்கு அவரவர்க்கேற்றபடியும் ஆகாரம் செய்விக்கலாம். இங்கே சாப்பாட்டுச் செலவில் ஒன்றும் குறைவில்லையே. படித்த வித்துவான்கள் இருத்தலும் அவர்களைக்கொண்டு பலரைப் படிப்பித்தலும் மடத்துக்கு ஏற்றவையாகும். அது ஸந்நிதானத்திற்குத் தெரிந்ததே. ஸம்ஸ்கிருத வித்துவான்களாக மடத்திற் பல காலமாக இருந்தவர்களில் திருக்கோடிகாவல் கோதண்டராம சாஸ்திரிகள், ராமகுட்டி சாஸ்திரிகள், திருவாலங்காட்டு விசுவபதி தீட்சிதர், அப்பா தீட்சிதர், அப்பைய தீட்சிதர், தியாகராஜ சாஸ்திரிகள் முதலியோர்கள் இருந்து வடமொழியைப் பிரகாசப்படுத்துகிறார்களே? இங்கே ஸம்ஸ்கிருதம் படிக்க வருபவர்களுக்கு ஸெளகரியம் செய்து கொடுத்துப் படிப்பிப்பதுபோலத் தமிழ் கற்பவர்களுக்கும் அனுகூலம் செய்யவேண்டுவது அவசியமே. ஸம்ஸ்கிருதத்தில் அவர்களெல்லோரும் எவ்வாறு சிறப்புற்று விளங்குகிறார்களோ அவ்வாறே இவரும் தமிழிற் பெரியவராக விளங்குகிறார். சிவஞான முனிவர் முதலிய பல பெரிய வித்துவான்கள் தமிழைப் பரிபாலனம் செய்தமையால் வித்தியா தானத்தில் மிகக் கீர்த்திபெற்ற இந்த இடத்தில் இவர் அவசியம் இருத்தல் வேண்டும். அதனால் மடத்தின் கௌரவம் பெருகும்; துரைத்தனத்தாரும் நம்மை மதிக்கும் நிலை உண்டாகும். இவருக்குப் பல உத்தியோகஸ்தர்களும் பிரபுக்களும் பழக்கம் உண்டு; ஆதலால் அவர்களெல்லாரும் நம்மை இன்னும் அதிகமாகக் கௌரவிக்கக் கூடும்.

அம்பல: அவர்கள் நம்மை மதித்தாலென்ன? மதியா விட்டாலென்ன?

சுப்: அவ்வாறு கட்டளையிடலாமா! அவசியம் துரைத்தனத்தாருடைய பிரியமும் உத்தியோகஸ்தருடைய மதிப்பும் இந்தக் காலத்திற்கு வேண்டியனவே. அரசாங்கத்தார் கல்வி விஷயத்தில் மிக்க அபிமானத்தைக் காட்டி வருகிறார்கள் என்பது தெரியுமே? ஆதலின் இந்தத் துறையில் நாம் நன்மை செய்து வருதலை அவர்களறிந்து கொள்வார்களாயின் நம்மிடத்தில் அவர்களுக்குள்ள நல்ல அபிப்பிராயம் அதிகமாகும்.

அம்பல: ஆமாம்! இவரை இங்கே அமர்த்தினால் தக்க சம்பளம் கொடுக்க வேண்டுமே. என்ன கொடுக்கலாம்? இங்கே உயர்ந்த சம்பளம் ஐந்து கலம் தானே? அதற்குமேற் கொடுக்க முடியாதே! கொடுத்தால் மற்றவர்கள் தங்களுக்கும் அவ்வளவு கொடுக்க வேண்டுமென்று கேட்கக்கூடும். ஆதலால் இதைப்பற்றி நமக்கு ஒரு முடிவும் தோன்றவில்லை.

சுப்: அதைப்பற்றிய கவலை சிறிதும் வேண்டாம். இவருடைய மாணாக்கர்களைப் போஷித்துப் பாதுகாத்தலே போதும். அதனாலேயே இவர் மிகவும் திருப்தியடைவார். அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்.

அம்பல: அப்படியா! என்ன இது மிக ஆச்சரியமாக இருக்கிறது? அவ்வாறு இருந்தால் நமக்கு ஒன்றும் சிரமமே இல்லை. அவ்வாறே செய்து விடலாம். இந்த விஷயத்தைப்பற்றி நீர் சொன்னது மிகவும் சந்தோஷத்தை விளைவிக்கின்றது.

திருவாவடுதுறையாதீன வித்துவானாகியது

இங்ஙனம் ஒப்புக்கொண்டு மடத்திலுள்ள முக்கியமான அதிகாரிகளுக்குப் பிள்ளையவர்களை ஆதீன வித்துவானாக நியமித்திருப்பதாகவும் வேண்டிய ஸெளகரியங்களையெல்லாம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார். அவ்வாறே யாவும் செய்யப்பட்டன. இவருக்கு இரண்டு தவசிப்பிள்ளைகளைத் திட்டம் செய்தனர்;  மடத்திலிருந்தே அவர்களுக்கு மாதச்சம்பளம் அளிக்கப்பட்டது.

பாடஞ் சொல்லுதல்

அப்போது பிள்ளையவர்களுக்குண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. முன்பு ஒருகாலத்தில் அம்பலவாண முனிவரிடம் வருந்தி வருந்திப் பாடங்கேட்டு இவ்வளவேனும் இவ்வாதீன சம்பந்தம் உண்டாயிற்றேயென உவகை கொண்டிருந்த தம்மை ஆதீனத்து வித்துவானாக ஆக்குவித்தது திருவருளேயென நினைந்து உருகினார். பின்பு நல்லதினம் ஒன்றிற் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். படிக்க விரும்பிய பல தம்பிரான்களும் படிக்க வேண்டுமென்று முன்னமே வந்திருந்து மடத்தில் உண்டுகொண்டிருந்த சிலரும் பாடங்கேட்க ஆரம்பித்தார்கள். இவருடன் முன்பு இருந்த மாணாக்கர்களும் உடனிருந்து பாடங்கேட்டு வருவாராயினர். பரீட்சித்து அவரவர்களுடைய தகுதிக்கேற்ற வண்ணம் இரண்டு மூன்று பிரிவாகப் பாடஞ் சொல்லி வந்தனர். படிக்க வேண்டிய புத்தகங்கள் அச்சிடப்பட்டவைகளாயின் மடத்துச் செலவில் விலைக்கு வருவித்து மாணாக்கர்களுக்குக் கொடுப்பித்தும் அச்சிடப்படாதவைகளாயின் வேறே பிரதி செய்து கொள்ளும்படி செய்தும் இவர் பாடங்களை நடத்தி வந்தார்.

அப்பொழுது படித்தவர்கள் (திருநெல்வேலிப் பேட்டையிலிருந்து வந்து அங்கே காஷாயம் பெற்றுப் படித்துவந்த) நமச்சிவாயத் தம்பிரான், மதுரை இராமசாமி பிள்ளை, தேவகோட்டை நாராயண செட்டியார் முதலியவர்கள். அவர்கள் அப்பொழுதே சிறந்த வித்துவான்களாக மதிக்கக்கூடிய நிலையில் இருந்தவர்கள்.

அவர்களுள் நமச்சிவாயத் தம்பிரான், பாடங்கேட்கும் நூலை முன்னதாகவே படித்து வைப்பதும் படித்த பின்பு சிந்தனை பண்ணுவதும் வழக்கம். இதனால் மற்றவர்களைக் காட்டிலும் அவருடைய படிப்பு ஓங்கி நின்றது.

இக்கவிஞர்பிரான் இருப்பதற்காக மடத்திற்கு எதிரில் இருந்த ஒரு பசுத்தொழுவம் செப்பனிடப்பட்டு விடுதியாக அமைக்கப்பட்டது. அது விசாலமான முற்றத்தையுடையது. அதனை மிகவும் பரிசுத்தமான இடமென்று நினைந்து இவர் அங்கேயே இருந்து வருவாராயினர். பாடஞ்சொன்ன காலங்களையன்றி மற்றக் காலங்களில் தாம் பாட வேண்டிய நூல்களைப் பாடி மாணவர்களைக் கொண்டு எழுதுவித்தும் வந்தார். தம்முடைய மாணவர்கள் கவலையின்றி உண்டு பாடங்கேட்பதற்குரிய செளகரியங்கள் அமைந்தமையால், அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பதற்கில்லையே யென்று முன் கவலையுற்றிருந்த இவருக்கு அளவற்ற சந்தோஷமும், இதுவும் *2 ஸ்ரீ சுவர்ணத்தியாகர் திருவருளும் நமச்சிவாய மூர்த்தியின் திருவருளுமே என்னும் எண்ணமும் உண்டாயின. அந்த உவகையினால் இவர் மிக்க ஊக்கமும் பெற்றனர்.

அம்பலவாண தேசிகர்மீது கலம்பகம் இயற்றியது

திருவாவடுதுறை மடத்திலுள்ள சம்பிரதாயங்களையும் மற்றவற்றையும் பார்த்த இவருக்கு அப்பொழுது தலைவராகவிருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர் விஷயமாக ஒரு பிரபந்தம் இயற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. தோன்றவே, மடத்தின் சம்பிரதாயங்களை யெல்லாம் நன்கு விசாரித்து அறிந்து கொண்டு சில தினங்களில் அம்பலவாண தேசிகர் மீது கலம்பகமொன்றை இயற்றி முடித்தார்.

மகாவித்துவானென்னும் பட்டம் பெற்றது

அப்பால் ஒரு விசேடகாலத்தில் திருவாவடுதுறையில் அம்பலவாண தேசிகர் முன்னிலையில் பல வித்துவான்களும் பிரபுக்களும் சூழ்ந்த மகாசபையில் அந்நூல் அரங்கேற்றப்பட்டது. அதைக் கேட்ட எல்லோரும் அதிசயித்தார்கள். திருவாவடுதுறை சம்பந்தமாகப் பல பிரபந்தங்கள் இருந்தாலும் அக் கலம்பகம் எல்லாவற்றிலும் சிறந்ததாகவும் பொருள் நயம் செறிந்ததாகவும் சைவ சம்பிரதாயங்களையும் ஆதீன சம்பிரதாயங்களையும் விளக்கிக் கொண்டிருப்பதாகவும் உள்ளதென்று கொண்டாடினார்கள். அப்பொழுது பெரிய காறுபாறாகவும், ஆதீன வித்துவானாகவுமிருந்து விளங்கிய கனகசபைத் தம்பிரான் முதலியோர்கள் இவருடைய புலமைத் திறத்தைக் கண்டு மகிழ்ந்து, “இவர்களுக்குச் சந்நிதானம் தக்க மரியாதை செய்தருள வேண்டும்” என்று தலைவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். அதனைக் கேட்ட அம்பலவாண தேசிகர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகரோடும் ஆலோசித்து ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார். எல்லோரும், “அத்தகைய பட்டத்திற்கு இவர் ஏற்றவரே” என்று கூறிச் சந்தோஷித்தார்கள். பட்டம் அளித்ததன்றி அம்பலவாண தேசிகர் சால்வை முதலிய பரிசில்களும் இவருக்கு வழங்கி மடத்தில் இல்லறத்தார் உண்ணும் வரிசையில் முதல் ஸ்தானத்தையும் கட்டளையிட்டார்.

அந்தக் கலம்பகத்திலுள்ள சில அரிய விஷயங்களும் பாடல்களும் வருமாறு:

திருவாவடுதுறை மடத்தில் வழிபடப் பெற்றுவரும் மூர்த்தி ஸ்ரீ நடராஜப் பெருமான்; இது,

“கடிமலர் கைக்கொண் டன்பு கனியவம் பலவா ணன்பொன்
அடியருச் சனைகோ முத்தி யம்பல வாணா செய்வாய்
தடிதலில் விதியான் முன்னந் *3 தன்னைத்தா னருச்சித் தேத்தும்
படிநினைந் தனைகொல் யார்க்கும் பழக்கவா தனைவி டாதே”

என்பதிற் புலப்படுத்தப் பட்டிருக்கின்றது.

அடியேனுடைய உடல், பொருள், ஆவி மூன்றையுங்கொண்டு முத்தியாகிய ஒன்றை மட்டும் ஈவதற்கு வருத்தம் என்ன என்னும் கருத்து,

“அருவி யறாவரை போன்முத்த மாலை யவிரிலஞ்சூழ்
பொருவிய லோவு திருவா வடுதுறைப் புண்ணியமா
சொருவிய வம்பல வாணா வடிய னுடன்முதலாக
மருவிய மூன்றுங்கொண் டொன்றீ வதற்கு வருத்தமென்னே”

என்னும் செய்யுளில் அமைந்துள்ளது.

‘நீர் அணிந்துள்ள பிறை, எலும்பு முதலிய பொருள்களும், உமக்கு இருப்பிடமாகிய கைலைமலை, ஊர்தியாகிய இடபம் முதலியவைகளும் வெண்ணிறமுடையன; இங்ஙனம் வெண்ணிறமுடைய பொருள்களையே நீருடைமையால் அடியேனுடைய வெள்ளறிவையும் கொள்ளுதல் முறையாகும்’ என்னும் கருத்தை அமைத்து,

“துணிபிறை வெண்மை யெலும்பணி வெண்மை
சூடுகங் காளமும் வெண்மை
துரோணமும் வெண்மை கபாலமும் வெண்மை
துவலைசால் கங்கையும் வெண்மை
பணிதரு கொக்கின் றூவலும் வெண்மை
பயில் குழை யருக்கமும் வெண்மை
பரவுறு கயிலை வாகனந் துவசம்
பரிக்குமக் கிவைகளும் வெண்மை
மணியொளி நீறு வாளி துஞ் சாவம் :
வயங்குதேர்ப் பாகிலா ளில்லம்
மதம் பொழி யயிரா வணமிவை வெண்மை
மற்றியன் மேனியும் வெண்மை
அணிகிளர் முன்னா ணினக்கெனி னிந்நாள்
அவிர் புகழ் நீற்றொடு துறைசை
அம்பல வாண வாரிய வடியேன்
அறிவு வெண் மையுங்கொளல் வழக்கே”

என்று பாடிய செய்யுள் மிக்க சுவையுடையதாக விளங்குகின்றது.

அந்நூலிலுள்ள வேறு சில பாடல்கள் வருமாறு:

“தரைகமழ்வண் பொழிற்றிருவா வடுதுறைக்கட் குரவர்பிரான் தானாய்த் தெய்வ
விரைகமழம் பலவாண மேலோனுண் மையையுணர்ந்தேன் விளம்பக் கேளீர்
உரைகமழ்தண் கயிலாயத் தொருவன்கா ணாலவனத் துறைந்தான் முன்னம்
புரைகமழிவ் வரசவனத் துறைவாரிப் போதவன்சீர் புகல்வார் யாரே”

(அரசவனம் - திருவாவடுதுறை)

“அருந்தவருக் கரசுகலை யறுபத்து நான்கினுக்கு மரசு ஞானம்
பொருந்தவருக் கரசுகுர வருக்கெல்லா மரசுநெடும் பொன்மா மேருப்
பெருந்தவருக் கரசுதுறை சைப்பதியம் பலவாண பிரானீ யென்றே
வருந்தவருக் கரசுபெறா நினைநிழற்றுந் திருவரசு மகிழ்ந்து தானே”

(வருந்து அவருக்கு - வீண்செயலால் வருந்துகிறவர்களுக்கு; அவம் - வீண்.)

சித்து

“விள்ளரும் புகழ்சா லாவடு துறையுண்
மேவிய வம்பல வாண
வித்தகன் றிருமு னொருதினஞ் சென்று
மெய்யுறப் பணிந்தன மனையான்
தள்ளருங் கருணை கூர்ந்துவேண் டுவதென்
சாற்றுக வென்றுநீ றளித்தான்
தளர்விலாப் புடைவீங் கிடவுணல் வேண்டுந்
தயைபுரி யென்றஃ தேற்றோம்
எள்ளருஞ் சுவைய வடிசின்முன் னளித்தா
னிலைதவிர்த் தியாவையு முண்டோம்
இவன்செய்பே ருதவிக் கினிச்செய லியாதென்
றெண்ணினோஞ் சாமியாய் விளங்க
உள்ளரு மனையான் றிருமட முழுது
முஞற்றினோ நமதுசித் தருமை
உணர்பவ ரியாரே யாவயிற் சென்றா
லுணரலா மோதுவார் பலரே.

(சாமி - பொன், துறவி. ஓதுவார்-சொல்பவர், தேவாரம் ஒதுபவர்கள்.)

மகா வைத்தியநாதையருடைய பழக்கம்

அப்பொழுது நிகழ்ந்த மகரத்தலைநாட் குரு பூஜையில் (தை மாத அசுவதி நட்சத்திர குருபூஜையில்) ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்கு நடந்த பட்டணப் பிரவேசத்தில் பாதசாரியாக உடன்வந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் கோமுத்தி தீர்த்தத்தின் தென்கரையில் வாண வேடிக்கை நடக்கும்பொழுது அங்கே நிற்பதிற் சிறிது தளர்ச்சியுற்று அயலிலிருந்த சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்தார். அப்பொழுது மாணாக்கர்களோடு பிள்ளையவர்களும் உடன்சென்றிருந்தார்கள். அவர்கள் வரவையறிந்து, அங்கே தங்கியிருந்த மகா வைத்தியநாதையர் தம் தமையனாராகிய இராமஸாமி ஐயருடன் வந்து கண்டு சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தின்படி பக்கத்தில் இருந்தார். மற்ற வித்துவான்களும் சூழவிருந்தார்கள். அந்த இருவர்களும் சங்கீதத்தில் உயர்ந்த பயிற்சியுடையவர்களாக இருந்ததன்றித் தமிழிலும் நல்ல அறிவுவாய்ந்தவர்கள். எதனையாவது ஒருமுறை கேட்டார்களானால் அதனை மறக்க மாட்டார்கள்; அதனால் ஏகஸந்தக்கிராகிகளென்று புகழ்பெற்று விளங்கினார்கள். பிரசங்க சக்தி அவர்களிடத்தில் நன்றாக அமைந்திருந்தது. அவ்வளவுக்கும் காரணம் சுப்பிரமணிய தேசிகருடைய பழக்கமும் ஆதரவுமே. அவர்களைப் பிள்ளையவர்களுக்குப் பழக்கம் செய்துவைக்க வேண்டுமென்னும் கருத்து சுப்பிரமணிய தேசிகருக்குப் பலநாளாக இருந்துவந்தது. ஆனாலும் சமயம் நேரவில்லை. அப்பொழுது அவ்விருவருடைய பெருமையையும் பற்றிப் பிள்ளையவர்களிடமும் பிள்ளையவர்களைப் பற்றி அவர்களிடமும் பிரஸ்தாபித்து விட்டு அவ்விருவரையும் நோக்கி, “உங்கள் வாக்கினால் ஏதேனும் ஒரு பாடல் சொல்ல வேண்டும்” என்றனர். அவர்கள், இக்கவிஞர் பெருமானைப்பற்றி இளமையிலிருந்து அறிந்திருந்ததன்றி இவருடைய நூல்களைப் படித்து ஞாபகத்திலும் வைத்திருந்தார்கள். இவரைப் பார்க்க வேண்டுமென்னும் ஆவல் நெடுநாளாக உடையவர்களாகையினால் அளவிலா மகிழ்ச்சியுற்று இவரைப்பற்றிச் சிறிது நேரம் பாராட்டினர். பின்பு

*4 பூங்காவனக் குயிலேதழை பொலியத்திரி மயிலே
நீங்காமலெவ் வுயிர்க்கும்முயி ராய்நின்றரு ணிமலன்
பாங்காருமை யாளோடு பசுங்கொன்றை மணப்ப
ஈங்கார்வழிச் சென்றான்கொ லிசைப்பீரெமக் குறவே”

“மாவேநறும் பலவேமனன் மண்டுந்தட மலர்ந்த
பூவேசெழுங் காவேநலம் புணர்ஞான முணர்ந்தோர்
நாவேபுகழ் பெரியோனெனை நன்றாட்கொள வுரியோன்
தேவேசனிவ் வதிமாதொடு சென்றான்கொ லுரைப்பீர்”

“குருந்தேநறுங் கொன்றாய்கொடி முல்லாய்செழுங் குரவே
திருந்தேனென நிற்கும்மொரு சிறியேனையும் பொருளா
வருந்தேலென வாண்டானுமை மாதோடுமிவ் வழியே
மருந்தேயெனச் சுரரேத்திட வந்தான்கொ லுரைப்பீர்”

என்னும் பாடல்களை இசையோடு சொல்லிக் காட்டினார்கள். அவற்றைக் கேட்ட இவர், “இவை எந்த நூலிலுள்ளவை?” என்றார்.

அவர்கள்: தாங்கள் இயற்றிய சூதசங்கிதையில் பிரமன் முதலியோர் தில்லையில் நோற்று ஞானம் பெற்ற அத்தியாயத்தில் உள்ளவை.

மீ: அப்படியா! இன்னும் அந்த நூலில் வேறு செய்யுட்கள் உங்களுக்குப் பாடம் உண்டோ?

அவர்கள்: நிறைய உண்டு. கோடகநல்லூர்ச் சுந்தரஸ்வாமிகள் எங்களை அடிக்கடி சொல்லச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்கள். அவர்கள் வடமொழிச் சூதசங்கிதையில் அதிகப் பழக்கமுள்ளவர்களாதலால் இந்தப் பாடல்களைக் கேட்டு மிக ஆச்சரியப்படுவதன்றித் தங்களைப் பாராட்டிக்கொண்டேயிருப்பார்கள்.

மீ: இந்நூலை நான் செய்ததாகச் சொன்னீர்களே. அதனை அறிந்ததெப்படி?

அவர்கள்: திருநெல்வேலியில் வேதாந்த சாஸ்திரப் பரிசயமுள்ளவராக இருக்கும் ஐயாசாமி பிள்ளையவர்களும் எங்களுக்குத் தெரிந்த மற்ற வித்துவான்களும் சொன்னார்கள்.

சுப்பிரமணிய தேசிகர், பிள்ளையவர்களை நோக்கி, “அந்த உண்மையை நீங்கள் எவ்வளவு மறைத்தாலும் மறைவுபடுமா? உங்கள் கவித்துவத்தையும் புகழையும் யாரால் மறைக்க முடியும்? சூரியனை மறைப்பதற்கு யாரால் இயலும்” என்று சொல்லி மகிழ்ந்தார்.

அந்த இருவர்களுடைய தோற்றப் பொலிவும் விபூதி ருத்திராட்ச தாரணமும் சிவபக்திச் செல்வமும் இசையோடு பொருள் விளங்கப் பாடல்களைச் சொல்லும் அழகும் அங்கசேஷ்டையின்றிப் பாடுவதும் ஆலாபனம் செய்கையில் ‘சங்கரா’ என்று சொல்லுவதும் இம்மகாவித்துவானுடைய மனத்தைக் கவர்ந்தன. பின்பு, “ஐயா! அந்தப் பாடல்கள் உங்கள் வாக்கிலிருந்து வரும்பொழுது தனிச்சுவையையுடையனவாக இருக்கின்றனவே. உங்களைப் போலத் தமிழ்ப்பாடல்களை இவ்வளவு அழகாகச் சொல்பவர்களை இதுகாறுங் கண்டிலேன். உங்களுடைய க்ஷேமத்தைக் குறித்துப் பரமசிவனைப் பிரார்த்திக்கிறேன். உங்களுடன் அடிக்கடி பழக வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்” என்றார். அவர்கள், ”எங்களுடைய முழு வாழ்விற்கும் காரணம் ஸந்நிதானமே. அந்த அன்பே உங்களையும் பார்க்கும்படி கூட்டி வைத்தது. உங்களைப் பார்த்துப் பழகிப் பாடங்கேட்க வேண்டுமென்று நீண்ட நாளாகக் காலத்தை எதிர்பார்த்திருந்தோம். இன்று எங்கள் பாக்கியத்தால் அது நிறைவேறியது. எல்லாவற்றிற்கும் காரணம் சிவகிருபையே” என்றார்கள்.

மறுநாள் பிற்பகலில் மடத்தில் பல பிரபுக்களும் பலவகையான வித்துவான்களும் இருந்த சபையில் வழக்கம் போலவே அவ்விருவருடைய இசைப்பாட்டு நடைபெற்றது. அப்பொழுது மகா வைத்தியநாதையர் வடமொழி,  தென் மொழிகளிற் சிவசம்பந்தமான கீர்த்தனங்களைப் பாடுவதைக் கேட்டு இவர் அவற்றில் ஈடுபட்டுப் பின்வரும் பாடல்களைச் சொன்னார்.

''பொருவில்மகா வைத்தியநா தன்பாடு மிசைப்பெருஞ்சீர் பொருவா னெண்ணில்
ஒருவிலருட் டுறைசையெங்கள் குருமணியம் பலவாண னொளிர்கூ டற்கண்
வெருவில்சிறப் புறமுனம்பா டிசைப்பெருஞ்சீ ரேபொருவும் விருத்த ரூபம்
மருவிலனிந் தனச்சுமையு மெடுத்திலன்வேற் றுமையிவையே மதிக்குங் காலே.”

“அனைநிகர்சுப் பிரமணிய மணியொடுமா வடுதுறையி லமரர் நின்ற
தனைநிகரம் பலவாண பரசிவன்மற் றெங்கள்குரு சாமி மேன்மேற்
புனையும்வயித் தியநாத னிசைவிரும்பி னானிதுவும் புகழோ வென்னின்
இனையன் *5 வயித் தியநாத னிசைவிரும்பல் பரம்பரையின் இயைந்த வாறே.”

இவர் புராணம் அரங்கேற்றும் இடங்களுக்கு அவ்விருவரும் போகும்படி நேர்ந்தால் இரண்டு மூன்றுநாள் அங்கே இருந்து கேட்டு வருவது அக்காலமுதல் அவர்களுடைய வழக்கமாக இருந்தது. அப்பொழுது இவர் சொல்லும் அருமையான பாடல்களிற் சிலவற்றை மனப்பாடம் செய்து கொண்டு கதை பண்ணுகையில் உபயோகித்து வந்தார்கள்.

பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை

இடையிடையே வழக்கம்போல பட்டீச்சுரத்திற்குப் பிள்ளையவர்கள் சென்று வருவதுண்டு; அங்கே நமச்சிவாயபிள்ளை காலஞ்சென்ற பின்னர் அவருடைய குமாரராகிய ஆறுமுகத்தா பிள்ளை யென்பவரும் இவரிடத்தில் மிக்க மரியாதையுடையவராகி இவரைத் தம் தந்தையாராகவும் குருவாகவும் பாவித்திருந்தார். திருவாவடுதுறைக்கு வந்து இவரை அழைத்துச்சென்று சில மாதம் வைத்திருந்து உபசரித்து அனுப்புவார்.

இயல்பாகவே இவருக்கு வடமொழி வித்துவான்களிடத்தும், சங்கீத வித்துவான்களிடத்தும் அன்பு உண்டு. தியாகராசலீலை முதலியவற்றை இயற்றுகின்ற காலமுதற்கொண்டே வடமொழி வித்துவான்களுடைய பழக்கமும் அவர்களுடைய உதவியும் அமைந்திருந்தன. திருவாவடுதுறை மடத்திற்கு வந்த பிறகு அத்தகைய பழக்கம் அதிகமாயிற்று. அந்த மடம் பலவகை வித்துவான்கள் ஒருவர் பின் ஒருவராக நாடோறும் வந்து பரிசு பெறும் இடமாதலின் அவர்கள்பாற் பல அரிய செய்திகளை அறிந்துகொள்வதும், பல சுலோகங்களையும் அவற்றின் பொருளையும் கேட்டுத் தமிழில் மொழி பெயர்ப்பதும், அக்கருத்துக்களை ஞாபகத்தில் வைத்திருந்து தாம் இயற்றும் நூல்களில் இடத்திற்கேற்ப அமைத்துக் கொள்வதும் இவருக்கு வழக்கம். அந்த வித்துவான்களும் இவருடைய அறிவின் திறத்தை அறிந்து வியந்து இவரோடு பழகுதலையும் இவருடைய செய்யுட்களைக் கேட்டலையும் பெரிய லாபமாகக் கருதியிருந்தனர். “சான்றோர் சான்றோர் பாலராப” என்பது மெய்யன்றோ?

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  168 – ஆம் பக்கம் (மூல நூல்) பார்க்க.
2.  இது திருவாவடுதுறையிற் கோயில் கொண்டருளிய சிவபிரானது திருநாமம்.
3.  சிவபிரான் தம்மைத் தாமே அருச்சித்தது திருவிடைமருதூரிலும் திருவையாற்றிலும்; குருவைச் சிவமாகப் பாவிக்க வேண்டுமென்பது இச்செய்யுளில் அறியற்பாலது.
4.  இவை திருமால் கூற்று.
5.  வைத்தியநாதரென்பது திருவாவடுதுறை மடத்துப் பெரிய பூசையிலுள்ள உடையவர் திருநாமம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s