-சேக்கிழான்

புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி
6. எடுத்த காரியம் யாவினும் வெற்றி!
இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்; அவர்கள் தங்கள் குணத்தை, வலிமையை, அறிவை, சமூக உணர்வை, நடையழகை, எண்ணத்தை எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்ன பாரதி, அவற்றின் மூலமாக செய்ய வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
தனி மனித வளர்ச்சியானது அவனது குடும்பத்துக்கும், ஊருக்கும், அவன் பிறந்த நாட்டுக்கும், அதனால் இந்த உலகிற்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். இதுவே பாரத பாரம்பரியம். அந்தக் கண்ணோட்டத்துடன் தான் கீழ்க்கண்ட அறிவுரைகளை பாரதி வழங்குகிறார்:
எத்தகைய துயரம் வந்தாலும் தருமன் போல, ஹரிசந்திரன் போல, தனது சுயதர்மத்தைக் கைவிடாமல், கேட்டினை எதிர்த்து நிற்க வேண்டும் (20); கொடுமை நிகழும்போது அதை வேடிக்கை பார்ப்பதோ, கண்டும் காணாமல் செல்வதோ தகாது. அதனை எதிர்த்து நிற்க வேண்டும் (22); மனிதரிடத்து அன்பு பரவுவதை எப்பாடுபட்டேனும் காத்தல் வேண்டும் (41); இந்தத் தேசம் உன்னுடையது. இதனைக் காப்பாற்ற வேண்டியது உனது கடன் (49); நாம் இருக்கும் நாட்டையோ, நமக்கு உரிமையான பூமியையோ இழக்க சம்மதித்தல் கூடாது (70); உழைப்பால் நாம் பெற்ற பயன்களை விட்டுத்தரக் கூடாது (24); சூரியன் போல ஓய்வின்றி எல்லா நாளும் கடமையாற்ற வேண்டும் (55); எந்த ஒரு செயற்களத்திலும் முதன்மையானவனாக நிற்க வேண்டும். போர்முனையில் நிற்கத் தயங்குதல் கூடாது (79);
பதினாறு பேறுகள் என்று சொல்லப்படும் அனைத்து வகைச் செல்வங்களையும் முயற்சியால் வென்று இனிதே வாழ வேண்டும் (44); பெண்களைச் சிறப்பிக்க வேண்டும். சகதர்மினியான மனைவியின் மாண்பை உயர்த்த வேண்டும். பெண்ணடிமைத்தனம் கூடாது (50); ஊக்கமுடைய வெளிநாட்டவர்கள் சாதனை படைப்பது போல, மனம் தளராது, இடையறாது முயற்சிக்க வேண்டும் (86); இவ்வுலகம் இயங்கக் காரணமான இல்லற வாழ்வில் ஈடுபட்டு லௌதீகச் செயல்களில் முழுமை பெற வேண்டும் (102); நல்ல விளைவுக்குத் தேவையான நல்ல விதைகளைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும் (105);
பழமையில் பெருமிதம் கொள்ளலாம். எனினும், புதியன செய்ய விரும்ப வேண்டும் (69); வேதம் கூறும் விழுமிய நற்பொருளை புதுமையாக வெளிப்படுத்த வேண்டும் (108); நமது லட்சியம் பெரிதாக இருக்க வேண்டும். அமரத்துவமான நமது இலக்கும் அழிவற்றதாக இருக்க வேண்டும் (71); இறைவனின் திருவிளையாடலில் ஒரு கருவியே நாம் என்பதையும், நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அம்சம் என்பதையும் மறக்கக் கூடாது (48); இந்த உலகிற்கு தலைமை தாங்கப் பிறந்தவன் நீ என்ற கடமையை (109) உணர்ந்து எந்நாளும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறாக, தனி மனிதரின் இளைஞரின் கடமையை நினைவுறுத்தும் மகாகவி பாரதியின் இறுதி இலக்கு, நமது இளைஞர்கள் வையத் தலைமை கொள்ள வேண்டும் என்பதே.
செயற்கரிய செய்வாரே பெரியர்; சிறியர் செயர்கரிய செய்கிலா தார்
என்று திருவள்ளுவர் கூறும் திருக்குறள் (26), யாரும் செய்ய இயலாத அரிய செயலைத் துணிந்து செய்பவனையே பெரியோன் என்று வாழ்த்துகிறது. அத்தகைய அரும் செயலை ஆற்றுவோரே பாரதி கனவு கண்ட நவயுக இளைஞர்கள்.
நல்லதோர் வீணை செய்தே – அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி- எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்! வல்லமை தாராயோ- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி- நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
-என்ற பாடலில் (வேண்டுவன) பாரதியின் ஆன்மவேகம் வெளிப்படுகிறது. அவர் விரும்பிய இளைய சமுதாயம் பூமிக்கு பாரமானது அல்லர்; எமது இளைஞர்கள் இந்த பூமியைப் புதுப்பிக்கப் பிறந்தவர்கள். இந்த உலகம் பயனுற வாழ்வதற்காக வல்லமையைத் தவமிருந்து பெற்றவர்கள் என்பதே மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கம்.
$$$