விடுதலைப் போரில் அரவிந்தர் – 9

-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம் 9

அலிபூர் வெடிகுண்டு வழக்கும் ஓராண்டு சிறையும்

“வெள்ளிக்கிழமை இரவு எந்த கவலையும் இல்லாமல் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலை ஐந்து மணியளவில் (2 மே 1908) என் தங்கை பரபரப்பாக என் அறைக்கு வந்து என்னைப் பெயர் சொல்லி அழைத்தாள். நான் படுக்கையில் இருந்து எழுந்தேன். அடுத்த கணம் அந்த சிறிய அறைக்குள் ஏராளமான போலீசார் ஆயுதங்களுடன் நுழைந்தனர். போலீஸ் சூப்பிரண்டென்ட் கிரிகனும் 24 பர்கானாவைச் சேர்ந்த மிஸ்டர் கிளார்க்கும் சில போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் சிவப்புத் தலைப்பாகை அணிந்த போலீஸ்காரர்களும் சில உளவாளிகளும் எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சியும் உற்சாகமும் மிக்க முகத்தை உடைய வினோத் குப்தாவும் அதில் இருந்தனர்.”

“துப்பாக்கிகளாலும் பீரங்கிகளாலும் நன்கு பாதுகாக்கப்பட்ட கோட்டையை முற்றுகையிடும் கதாநாயகனைப் போல, கையில் துப்பாக்கியுடன் அவர்கள் இருந்தார்கள். ஒரு வெள்ளைக்காரக் கதாநாயகன் என் தங்கையின் மார்பை துப்பாக்கியால் குறி பார்த்தான் என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை".  

-அரவிந்தர் தனது கைதுப் படலத்தை இப்படித்தான் தொடங்கி எழுதியுள்ளார்.  ‘சிறை வாழ்க்கை’ என்ற தலைப்பில் 1909-10இல்  ‘சுப்ரபாத்’ என்ற பத்திரிகையில் அது தொடராக வந்தது. பின்பு  ‘காராகாஷிணி’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றது.

அந்த நிகழ்விலிருந்து விலகி நின்று, ஏதோ சம்பந்தமே இல்லாதது போல அவர் அந்த நூலில் தனது கைது, சிறைச் சூழ்நிலை, கருணையற்ற அந்தச் சூழலில் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை எழுதியுள்ளார்.

கேலி, குத்தல், நகைச்சுவை என பிரிட்டிஷ் சிறை முறைமையைப் பற்றியும் அங்கிருந்த சிறை அதிகாரிகள், சக கைதிகளைப் பற்றியும் வழக்கு விசாரணையின் போது நடந்தவை  பற்றியும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.

“அரைத் தூக்கத்தில் நான் எழுந்து உட்கார்ந்தேன். கிரீகன்,  ‘அரவிந்த கோஷ் யார், நீ தானா?’ என்று கேட்டார்.  ‘ஆமாம். நான் தான் அரவிந்த கோஷ்’ என்றேன். உடனே அவர் ஒரு போலீஸ்காரரிடம் என்னைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார். நான் அதற்கான ஆணையைக் காட்டும்படி கேட்டேன். அதைப் படித்து, பின்னர் கையெழுத்திட்டேன். அதில் வெடிகுண்டு பற்றி குறிப்பிடப் பட்டிருந்ததால் அது முசாஃபர்பூர் கொலை தொடர்பாக இருக்கலாம் என்றும் அதனால்தான் இத்தனை வீரர்களும் போலீஸ்காரர்களும் என்று யூகித்தேன். என்னுடைய வீட்டில் எந்தவிதமான வெடிபொருட்களோ குண்டுகளோ கண்டுபிடிக்காத போது என்னை ஏன் கைது செய்ய ஆணையிட்டார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நான் கைது செய்யப்பட்டேன். ஆனால் அர்த்தமற்ற ஆட்சேபணைகள் எதையும் நான் எழுப்பவில்லை. கிரீகன் சொன்னபடி என் கைகளில் விலங்கு பூட்டப்பட்டது. இடுப்பில் வலுவான கயிறு கட்டப்பட்டு அதன் மறுமுனையை ஒரு போலீஸ்காரர் பிடித்துக் கொண்டார். அப்போது போலீசார், அபினாஷ் பட்டாச்சாரியாவையும் சைலேன் போஸையும் கொண்டு வந்தார்கள். அவர்களின் கைகளும் விலங்கிடப்பட்டு, இடுப்பில் கயிறு சுற்றப்பட்டிருந்தது.

“அரை மணி நேரத்திற்குப் பிறகு, யார் சொல்லி என்று தெரியவில்லை, கை விலங்குகளும் கயிறுகளும் அகற்றப்பட்டன. கிரீகன் பேச்சு அவர் ஏதோ கொடூரமான விலங்கின் குகைக்குள் நுழைந்தது போலவும், நாங்கள் படிப்பறிவற்ற சட்டத்தை உடைத்தெறியும் முரடர்கள், எனவே எங்களிடம் மரியாதையாக நடந்துகொள்ளத் தேவையில்லை என்பதும் போலவும் இருந்தது. ஆனால் சில கூர்மையான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்ட பிறகு அவரது போக்கு சற்றே மாறியது. பினோத் பாபு என்னைப் பற்றி ஏதோ சொன்னார். அதைக் கேட்ட பிறகு என்னிடம்,  ‘நீ பி.ஏ. படித்திருக்கிறாய். இதுபோன்ற வீட்டில், கட்டில் இல்லாமல் தரையில் படுத்து இருக்கிறாயே. இது உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்றார். ‘நான் ஏழை. இப்படி தான் வாழ்கிறேன்’ என்றேன். ‘அப்போ, பணக்காரனாவதற்குத் தான் இப்படி எல்லாம் செய்கிறாயா?’ என்று பதிலுக்குக் கத்தினார். தாய்நாட்டின் மீது அன்பு, எளிமையாக வாழ்வதன் உயர்வு பற்றியெல்லாம் சொன்னால் அந்த பிரிட்டிஷ் மரமண்டைக்குள் ஏறாது என்பதை புரிந்துகொண்ட நான் வாளாவிருந்தேன்”.

இதனிடையே வீடு முழுவதும் சோதனையிடப்பட்டது. சோதனை என்ற பெயரில் எல்லாம் தலைகீழாய் ஆனது.  அரவிந்தர் எழுதுகிறார்:

“சோதனை ஐந்தரை மணிக்குத் தொடங்கியது; பதினோரு மணி வாக்கில் முடிந்தது. எல்லாப் பெட்டிகளும் தலைகீழாய்ப் போனது. நோட்டுப் புத்தகங்கள், கடிதங்கள், பேப்பர், குப்பை, காகிதங்கள், நாடகங்கள்,உரைநடை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என எதுவும் சோதனையின் பிடியிலிருந்து தப்பவில்லை. ஆனால் உருப்படியாக எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தக்ஷணேஸ்வரத்திலிருந்து புனித மண்ணை எடுத்து வந்து ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் போட்டு வைத்திருந்தேன். அதை ஏதோ புதிய விஷயம் போலவும், வலிமையான வெடிமருந்தோ என்ற அச்சத்தோடும் மிஸ்டர் கிளார்க் பார்த்தார். அவரது சந்தேகத்தில் தவறில்லை.” 

சோதனை முடிந்ததும் கைது செய்யப்பட்ட மூவரையும் உள்ளூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பிறகு அங்கிருந்து லால் பஜார் பகுதியில் இருந்த தலைமையகத்துக்குக் கொண்டு சென்றனர். அது பற்றி   அரவிந்தர் கூறியிருப்பதாவது:

“அங்கு இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட பிறகு (நுண்ணறிவுப் பிரிவின் தலைமையகமான) ராய்ட் சாலைக்குக் கொண்டு சென்றார்கள். அந்த மங்களகரமான இடத்தில் மாலைப் பொழுது கழிந்தது. அங்குதான் தந்திரமான உளவாளியான மௌல்வி சம்சுல் ஆலமைச் சந்தித்து, அவரது அன்பான பேச்சைக் கேட்டேன். மௌல்வி, மதம் பற்றி மிக சுவாரஸ்யமான பிரசங்கம் செய்யக் கேட்டேன்.  ‘உண்மையாக இருப்பது தான் ஆன்மிக வாழ்வு. அதிகாரிகள் சொன்னார்கள், அரவிந்த கோஷ் பயங்கரவாதிகளின் கட்சி தலைவர் என்று. அது இந்தியாவுக்கு கவலையும் சோகமும் தரும் விஷயம். ஆனால் நேர்மையின் பாதையில் சென்றால் சூழ்நிலை மாறிவிடும்’ என்றார் அவர்”.

பிபின் பால், அரவிந்த கோஷ் போன்ற நல்ல மனிதர்கள் தாங்கள் எதைச் செய்திருந்தாலும் அதை அவர்களாகவே வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள் என்று மௌல்வி முழுமையாக நம்பினார் என்று தெரிகிறது.

“அவரது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் மதப்பற்றையும் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். அனாவசியமாகப் பேசுவது தவறென்று புரிந்து, பணிவுடன் அவரது பிரசங்கத்தைக் கேட்டு என் மனதில் ஆழப் பதித்துக் கொண்டேன். ஆனால் தனது மதப்பற்றை பேசிக் கொண்டிருந்த போதும் மௌல்வி தனது தொழிலை மறக்கவில்லை. பேச்சினிடையே 'நீங்கள் தோட்டத்தை வெடிகுண்டுகள் தயார் செய்ய உங்கள் தம்பியிடம் கொடுத்தது மிகப் பெரிய தவறு. உங்கள் புத்திசாலித்தனத்திற்கு ஏற்றதல்ல' என்றார். அவரது வார்த்தைகளின் உள்ளார்ந்ததை நான் புரிந்து கொண்டேன். புன்முறுவலுடன்,  ‘சார், தோட்டம் என்னைப் போலவே என் தம்பிக்கும் சொந்தமானது. நான் அதை அவருக்குக் கொடுத்தேன், அதுவும் வெடிகுண்டு செய்வதற்கு என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்?’ என்றேன். சற்றே குழப்பம் அடைந்த மௌல்வி,  ‘இல்லை, இல்லை, நீங்கள் கொடுத்திருந்தால் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன்’  என்றார்.”

ராய்ட் தெருவில் இருந்து லால் பஜார் நிலையத்திற்கு அரவிந்தரைக் கொண்டு சென்றார்கள். அங்கு நடந்ததை அரவிந்தர் விவரிக்கிறார்…

"லால் பஜார் நிலையத்தில் தரைத் தளத்தில் இருந்த பெரிய அறையில் சைலேனையும் என்னையும் வைத்தார்கள். ஏதோ உணவு கொடுத்தார்கள். பிறகு இரண்டு ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அதில் ஒருவர் போலீஸ் கமிஷனர் மிஸ்டர் ஹாலிடே என்று பிறகு தெரிந்து கொண்டேன். எங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவுடன் ஹாலிடேவுக்கு கோபம் வந்தது. என்னைச் சுட்டிக்காட்டி 'இந்த மனிதனுடன் எவரையும் பேசவோ தங்க வைக்கவோ கூடாது' என்று அங்கிருந்த சார்ஜன்டிடம் கத்தினார். உடனே சைலேனை அங்கிருந்து வேறொரு அறைக்குக் கொண்டு சென்றார்கள்”...

“நான் தனியான பிறகு ஹாலிடே, 'இந்தக் கோழைத்தனமான கொடுஞ்செயலைச் செய்ய உனக்கு வெட்கமாக இல்லையா?' என்றார்.  ‘அதில் நான் சம்மந்தப்பட்டுள்ளேன் என்று அனுமானிக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?’ என்றேன். 'நான் அனுமானிக்கவில்லை. எனக்கு எல்லாம் தெரியும்' என்றார். அதற்கு நான்,  ‘உங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்தக் கொலைகாரச் செயலில் எனக்கு எந்த்த் தொடர்பும் இல்லை' என்று மறுத்தேன்”.

இந்த உரையாடல்களில் இருந்து அரவிந்தர் எப்படி சீண்டப்பட்டார் என்பதும், அந்த சூழ்நிலையிலும் அவர் எப்படி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு எச்சரிக்கையோடு பதில் சொன்னார் என்றும் நமக்குத் தெரிகிறது. அவர் ஐ.சி.எஸ். படிப்பின்போது கொஞ்சம் சட்டமும் படிக்க வேண்டியிருந்தது. எனவே அவர் பொறியில் சிக்கவில்லை. மிகுந்த அழுத்தம் கொடுத்தபோதும் அவர் எந்தக் கருத்தையும் கூறாமல் தன்னுடைய உரிமையை மட்டும் பேசினார். ஆரம்பத்தில் இருந்தே அரசு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொல்லைகளை அவருக்குக் கொடுக்க முனைந்தது. சாப்பிட ஒவ்வாத உணவை அவருக்குக் கொடுத்தது. அவரது வழக்கறிஞர் வீட்டிலிருந்து உணவைத் தருகிறோம் என்றபோது அதை போலீஸ் கமிஷனர் மறுத்துவிட்டார். இவ்வாறு லால் பஜாரில் மூன்று நாட்கள் கழித்தார்.

மே 5 ஆம் தேதி திங்கள்கிழமை கல்கத்தா தலைமை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினார்கள். அதற்குள் எட்டு வெவ்வேறு இடங்களில் போலீஸ் தேடுதல் வேட்டையாடி இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்டோரை மே 2 ஆம் தேதியே கைது செய்தனர். கைது செய்வது மேலும் தொடர்ந்தது. எனவே மிகப் பெரிய எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதால், எல்லா வழக்குகளையும் ஒன்றாக்கி அலிப்பூர் மாவட்ட நீதிபதி முன்பு நடத்துவது என்று அரசு முடிவு எடுத்தது. எனவே அரவிந்தர் உட்பட எல்லோரையும் வழக்கு விசாரணைகள் முடியும் வரை அலிப்பூர் சிறையில் அடைத்தது. இதனால் அது   ‘அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு‘ எனப்பட்டது.

அலிப்பூர் சிறை

 “எனது சிறை வாழ்க்கை மே ஐந்தாம் தேதி அலிப்பூர் சிறையில் தொடங்கியது. அடுத்த ஆண்டு மே ஆறாம் தேதி நான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன்” என்று எழுதியுள்ள அரவிந்தர் மிகவும் தத்துவார்த்தமாக பின்வருமாறு எழுதியுள்ளார்:

“1908 மே மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமையன்று என் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வரும் என்றும், அடுத்த ஓராண்டுக் காலம் எந்த விதமான மனிதத் தொடர்பும் இல்லாமல் சமுதாயத்திற்கு அப்பால் ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு விலங்கு போல வாழ்வேன் என்றும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் மீண்டும் உலகச் செயல்பாடுகளில் நுழையும் போது பழைய அரவிந்த கோஷாக இருக்க மாட்டேன் என்பதையும் நான் அறியவில்லை. ஓராண்டுக் கால சிறை வாழ்க்கை பற்றிப் பேசியுள்ளேன். சரியாகச் சொன்னால் அது ஓராண்டுக் கால ஆசிரம வாழ்க்கை அல்லது தவக்குடில் வாழ்க்கை என்றே சொல்ல வேண்டும். பிரிட்டிஷ் அரசின் சீற்றத்தால் நான் கடவுளை கண்டேன்”.

இதனிடையே  அரவிந்தரின் கைது, ஏராளமான புரட்சியாளர்களின் கைது என்ற செய்தி நாடு முழுக்கப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். முசாபர்பூர் குண்டுவெடிப்பு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாகப் பிடிபட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவரான பிரஃபுல்ல சாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவரான குதிராம் போஸ் விசாரிக்கப்பட்டு வந்தார். (பின்னர் அவரும் தூக்கிலிடப்பட்டார். தியாகத்தின் மறுபெயராக அவரது பெயர் மாறிப் போனது) பயங்கரவாத சதித் திட்டத்தில் அரவிந்தர் ஈடுபட்டிருப்பார் என்று எவரும் நம்பவில்லை. ஆனாலும் அரசு அவர்தான் அந்தச் சதிக்கு மூளை என்றும், எல்லாத் தீமைகளுக்கும் அவரே வேர் என்றும் கூறியது. மக்கள் கவலையடைந்தனர்.

மாவட்ட நீதிபதியாக இருந்த பிர்லே முன்பு அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு 1908 மே மாதம் பதினெழாம் நாள் துவங்கியது. 42 பேர்  குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். ஆரம்பகட்ட விசாரணையின் போது மூன்று பேர் தகுந்த சாட்சி இல்லையென விடுவிக்கப்பட்டனர். அரவிந்தர் உட்பட மீதமிருந்த 39 பேர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் சாட்சிகளும் சான்றுகளும் அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டு, விசாரணை தொடங்கியது.

மாவட்ட நீதிபதி முன்பு விசாரணை நடந்து வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நரேந்திரநாத் கோசைன் என்பவன் அரசுத் தரப்பு சாட்சியாக மாறினான். அரசுத் தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொல்லிவிட்டால் அவனை முழுமையாக மன்னித்து விடுதலை செய்வதாக அரசு வாக்குறுதி அளித்தது. கோசைன் அரசுத் தரப்பு சாட்சியாக மாற ஒப்புக்கொண்டவுடன் அவனை சிறையில் ஐரோப்பியர்கள் பகுதிக்கு மாற்றி விட்டார்கள். இதன் மூலம் அவனை சகாக்களிடமிருந்து காப்பாற்றுவது அரசின் நோக்கம். ஆனால் அது நிறைவேறவில்லை. கன்னாய்லால் தத், சத்யேந்திரநாத் பாசு என்ற இரண்டு புரட்சியாளர்கள் கோசைனின் துரோகத்துக்கு விலை கொடுக்க வேண்டுமென முடிவெடுத்தனர்.

துரோகியைக் கொன்று கைதான கன்னாய்லால் தத், சத்யேந்திரநாத் பாசு

தாங்களும் அரசுத் தரப்புக்கு மாற விரும்புவதாக கோசைனுக்கு செய்தி அனுப்பினர். அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை சிறையில் இருந்த மருந்தகம் முன்பு அவர்கள் சந்திப்பதாக ஏற்பாடானது. அப்பொழுது அவர்களிடையே பேச்சுவார்த்தைக்கு பதிலாக திடீரென்று துப்பாக்கிச் சத்தம் கேட்டது. கோசைன் ஓடுவதும் அவனைத் துரத்திக் கொண்டு கனாயும் சத்யனும் ஓடுவதும் அவர்களை மடக்கிப் பிடிக்க சிறை வார்டன்கள் ஓடுவதும் தெரிந்தது. மேலும் பல துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டன. கோசைன் குண்டடிப்பட்டு பக்கத்தில் இருந்த சாக்கடையில் விழுந்தான்; செத்தான். கனாயும் சத்யனும் மடக்கி பிடிக்கப்பட்டு உடனடியாக தனித்தனி அறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் உடனடியாக விசாரிக்கப்பட்டனர். இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் வீரமுடன் மரணத்தை எதிர்கொண்டனர். உண்மையான தேச பக்தர்கள் எல்லோரும் துக்கம் அனுஷ்டித்தனர்.

கோசைனின் மரணம் ஒட்டுமொத்த வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவன் ஏற்கனவே பல விஷயங்களை காவல் துறையிடம் சொல்லி இருந்தான். அது அரவிந்தர் தரப்பை மோசமாக பாதிக்கும் என்பது மட்டுமன்றி, மற்றவர்கள் விஷயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். கோசைன் முக்கியமான சாட்சி. ஆனால் அவன் உயிருடன் இல்லாததால், குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்பதால், அரசுத் தரப்பு அவனுடைய வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியவில்லை.

கனாய், சத்யனுக்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் விசாரணையில் சந்திரநாகூரைச் சேர்ந்த புரட்சியாளர்கள் இரண்டு துப்பாக்கியை சிறைக்குள் கடத்திவந்து பரீந்தரிடம் ஒப்படைத்து இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. எந்த வகையிலோ அந்த துரோகியை தீர்த்துக் கட்டிய தீரச் செயல் பாராட்டுக்குரியதே.

நீதிபதி சார்லஸ் போர்ட்டன் பீச்கிராஃப்ட்

வழக்கு விசாரணை செப்டம்பர் 14-ஆம்தேதி முடிவுற்றது. குற்றம் சாட்டப்பட்ட 39 பேரில் கோசைன், கனாய், சத்யன் மூன்று பேர்கள் உயிரிழந்து விட்டனர். இருதரப்பையும் விசாரித்த நீதிபதி, வழக்கை அதைவிட உயர்ந்த செசன்ஸ் கோட்டுக்கு வழக்கை அனுப்பினார். எல்லோர் மீதும் அரசுக்கு எதிராகத் திட்டமிட்டு சதி செய்து வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பரீந்தர் கோஷ், ஹேமச்சந்திர தாஸ், உல்லாஸ்கர் போன்றோர் மீது சதித் திட்டம் தீட்டியது, கொலை முயற்சியில் ஈடுபட்டது, சட்ட விரோதமாக ஆயுதம் தயாரித்தது போன்ற மேலும் சில வழக்குகள் பதியப்பட்டன. அவை நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். அந்த குற்றச்சாட்டுக்கள்  அரவிந்தர் மீதும் சுமத்தப்பட்டன. வழக்கின் முக்கிய விசாரணை 24 பர்கானா மற்றும் ஹூப்ளி மாவட்ட செசன்ஸ் நீதிபதியான சார்லஸ் போர்ட்டன் பீச்கிராஃப்ட் முன்பு வந்தது. பலரது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சட்டப் போர் நீதிமன்றத்தில் துவங்கியது.

4,000 ஆவணங்கள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் என சுமார்  நானூறு சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன. சுமார் இருநூறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். வழக்கு 1908 அக்டோபர் பத்தொன்பதாம் தேதி தொடங்கி 1909 ஏப்ரல் பதிமூன்று வரை நூற்றி முப்பத்தியோரு நாட்கள் நடைபெற்றது. 1909 மே ஆறாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அரிய தற்செயலாகத் தான் இந்த வழக்கு நீதிபதி பீச்கிராப்ட் முன்பு வந்தது. அவர் ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி.  அரவிந்தர் ஐ.சி.எஸ். தேர்வு எழுதிய அதே 1890இல் அவரும் அந்தத் தேர்வை எழுதினார். அந்தத் தேர்வில் அவரை விட அதிக மதிப்பெண் பெற்றவர் அரவிந்தர். இருவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள்.  அரவிந்தர் கிங்ஸ் கல்லூரி;  பீச்கிராஃப்ட் கிளார் கல்லூரி. ஐ.சி.எஸ். தேர்வின் ஆரம்ப மற்றும் இறுதித் தேர்வின் போது அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இருவருக்கும் அறிமுகம் உண்டு. அரவிந்தர் நெருங்கிய நண்பராக இருந்திருந்தால் பீச்கிராஃப்ட் அந்த வழக்கை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் அவருக்கு அரவிந்தரின் பின்னணியைப் பற்றி நன்கு தெரிந்திருந்ததால் வழக்கில் அதிக கவனமும் அக்கறையும் காட்டினார். நடுநிலையான நீதிபதி என்று அவரைக் கருத வேண்டியிருக்கிறது. ஏனெனில் அலிப்பூர் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவில்லை. அவரும் பின்னாளில் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞராக மெட்ராஸில் (சென்னை) இருந்து எர்டிலி நார்டன் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆஜரானார். அவர் பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர். எதிர்த் தரப்பை முரட்டுத்தனமாக மடக்கி தன் தரப்பை நிறுவி விடுவதில் கில்லாடி. வழக்கின் ஆரம்ப நிலையில்  அரவிந்தர் சார்பாக பல வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். ஆனால் வழக்கு செசன்ஸ் கோட்டுக்கு வந்தபோது அதை சித்தரஞ்சன் தாஸ் ஏற்றுக்கொண்டார், குறிப்பாக அரவிந்தனின் வழக்கை. அவர் பிரபலமாகி முன்னணிக்கு வந்து கொண்டிருந்த வழக்கறிஞர். இங்கிலாந்திலேயே அரவிந்தருடன் நட்புக் கொண்டு அவருடன் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர். அவர் மற்ற எல்லா வழக்குகளையும் விட்டுவிட்டு இந்த வழக்கு ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தினர். இரவு பகலாக அந்த ஒரே வழக்கில் கவனத்தைக் குவித்தார். வழக்கிற்காக எந்தக் கட்டணமும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் வழக்கில் ஆஜரான பிறகு வழக்கின் போக்கு மாறியது. இதை  அரவிந்தரே குறிப்பிட்டுள்ளார்.

சித்தரஞ்சன் தாஸ்

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அரவிந்தர் உத்தரபாராவில் நிகழ்த்திய உரை மிகவும் புகழ் பெற்றது. அதில், “செஷசன்ஸ் கோட்டில் வழக்கு விசாரணையின் போது எனக்கு எதிரான சான்றில் என்ன தவறு இருக்கிறது சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும்போது எந்த விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளை என் தரப்பு வழக்கறிஞருக்கு எழுதி அனுப்புவேன். அப்போது நான் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. என் தரப்பை வாதிட இருந்த வழக்கறிஞர் மாறி அவருக்குப் பதிலாக வேறொருவர் அங்கு நின்றார். அவரைப் பார்த்ததும் எனக்கு திருப்தி உண்டானது. ஆனாலும் நான் வழக்கம் போல குறிப்புகளை அனுப்பினேன். பிறகு அதை விட்டு விட்டேன். காரணம் எனக்குள் ஒரு செய்தி கிடைத்தது. அது – ‘உன் காலைச் சுற்றியுள்ள கண்ணி வலையில் இருந்து உன்னைக் காப்பாற்ற போவது இவர்தான். இந்தக் குறிப்பு எழுதும் தாள்களை தள்ளிவை. நீ அவருக்கு குறிப்புகளைக் கொடுக்காதே. நானே அதை நேரடியாகக் கொடுக்கிறேன்’ என்பதுதான்” என்று அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மிக நீண்ட காலத்திற்கு நடக்கும் சட்டப் போராட்டத்திற்கு ஏராளமான பணம் செலவாகும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதற்காக அரவிந்தரின் தங்கை சரோஜினி நிதி திரட்டத் தொடங்கினார். நாட்டின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் பலரும் சிறிதும் பெரிதுமாக நிதி அளித்தனர். அது பேருதவியாக இருந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையிலிருந்து தினமும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் கம்பிக் கூண்டுக்குள் நிறுத்தப் படுவார்கள். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அங்கு இருப்பார்கள். அரசுத் தரப்பு வழக்கறிஞரான நார்டன் பாதுகாப்புக் கருதி தன் பையில் ஒரு துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறியுள்ளார். பரபரப்பான அந்தச் சூழ்நிலையிலும் அரவிந்தர் அமைதியாகவும் ஒருவிதமான விலகிய மனோபாவத்துடனும் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் எதிர்காலம் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக சிரித்தபடி காணப்பட்டனர். அது பற்றி அரவிந்தர் எழுதியுள்ளார்:  

“அரிதான காட்சியைப் பார்க்க முடிந்தது. முப்பது - நாற்பது பேருடைய வாழ்க்கை, மரண தண்டனையா, தீவாந்திர வாழ்நாள் சிறையா என தெரியாமல் ஊசலாட்டத்தில் இருந்த போதும், குற்றம் சாட்டப்பட்ட சிலர் அக்கம்பக்கம் பார்க்காமல், தங்களிடம் இருந்த பங்கிம்சந்திரரின் நாவலிலோ, விவேகானந்தரின் ராஜயோகம் நூலிலோ, பகவத்கீதையிலோ, புராணங்களிலோ, அல்லது ஐரோப்பிய தத்துவ நூல்களிலோ ஆழ்ந்து மூழ்கி இருந்தனர்”.

நீண்ட வழக்கு முடிவுக்கு வந்தது. அரவிந்தர் மட்டும் அதில் குற்றம் சாட்டப்பட்டு நிற்கவில்லை என்றால், வழக்கு எப்போதோ முடிந்திருக்கும். அரசு அவரைக் குறி வைத்து வழக்கை நடத்தியது. சித்தரஞ்சன் தாஸின் இறுதி உரை மட்டுமே எட்டு நாட்கள் தொடர்ந்து நடந்தது. அது சட்டத் துறையில் புகழ்மிக்க உரையாக அமைந்தது. உரையின் இறுதியில் அவர் நீதிபதியையும் அவரது ஆலோசகர்களையும் பார்த்து, “குற்றம் சாட்டப்பட்டு நிற்கும் இந்த மனிதர் இந்த நீதிமன்றத்தின் முன்பு மட்டும் நிற்கவில்லை. வரலாறு என்னும் நீதிமன்றத்தின் முன்பும் நிற்கிறார். நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். இந்தப் பிரச்னை அமைதியுற்று நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்தப் பரபரப்பும் கொத்தளிப்பும் அடங்கிய பல காலத்திற்குப் பிறகு, அந்த மனிதரின் மரணத்திற்குப் பிறகு, அவர் தேசபக்தக் கவிஞராக, தேசியத்தின் தீர்க்கதரிசியாக, மானுடத்தின் மீது மகத்தான காதல் கொண்டவராகப் போற்றப்படுவார். அவரது மறைவுக்குப் பிறகும் அவரது வார்த்தைகள் இந்தியாவில் மட்டுமல்ல, கடல் கடந்த தேசங்களிலும் எதிரொலிக்கும். எனவேதான் சொல்கிறேன், அவர் இந்த நீதிமன்றத்தின் முன்பு மட்டுமே நிற்கவில்லை. வரலாறு எனும் நீதிமன்றத்தில் நிற்கிறார்” என்றார்.

1909 மே மாதம் ஆறாம் தேதி தீர்ப்பு நாள். அசம்பாவிதங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்காமல் தடுக்க அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. வழக்கம்போல குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குள் அழைத்து வரப்பட்டனர். 10.50 மணிக்கு நீதிபதி இருக்கையில் வந்து அமர்ந்தார். பதினோரு மணிக்கு தீர்ப்பை வாசித்தார்.

பரீந்தர் குமார் கோஷ், உல்லாஸ்கர் தத்தாவுக்கு மரண தண்டனை, ஹேமச்சந்திர தாஸ் உட்பட பத்து பேருக்கு தீவாந்திர ஆயுள் தண்டனை. ஏழு பேருக்கு வெவ்வேறு கால அளவிலான சிறைத் தண்டனை. எஞ்சிய 17 பேருக்கு – அவர்கள் பெயரை அவர் படிக்கவில்லை – விடுதலை என்றார். விடுவிக்கப்பட்டவர்களில் அரவிந்தரும் நெளினிகாந்த் குப்தாவும் அடங்குவர்.

மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிர தண்டனைகளையும் மீறி (பின்னர் பரீந்தர் கோஷ், உல்லாஸ்கரின் மேல்முறையீட்டில் அவர்களது மரண தண்டனை தீவாந்திர ஆயுள் தண்டனையாக மாறியது),  அரவிந்தர் விடுதலையானது பெரிதும் கொண்டாடப்பட்டது.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அரவிந்தரும் மற்றவர்களும் நேராக சித்தரஞ்சன் தாஸ் வீட்டிற்குப் போனார்கள். அங்கு அவர்களுக்கு ராஜ வரவேற்பு கொடுக்கப்பட்டது. கொண்டாட்டமும் விருந்தும் நடந்தது. அந்தக் கொண்டாட்டமான சூழ்நிலையிலும் அரவிந்தரின் கண்கள் எந்தவிதமான சலனமோ அக்கறையோ இல்லாமல், சிந்தனையில் ஆழ்ந்ததாக இருந்தன. இந்த இடத்தில் அலிப்பூர் சிறையில் அரவிந்தருக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முக்கியமான நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வது நல்லது.

“நான் அடைக்கப்பட்ட சிறை அறை 9 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது. ஜன்னல்கள் ஏதுமில்லை. முன்னால் இரும்புக் கதவு. அதுதான் என் இருப்பிடம். எதிரே சிறிய கற்களாலான திறந்தவெளியும் உயர்ந்த மதிலும் அதில் ஒரு கதவும் இருந்தன. கண் உயரத்துக்கு அந்தக் கதவில் ஒரு ஓட்டை அல்லது திறப்பு. கதவுக்குப் பின்னால் இருந்து காவலர் அந்த ஓட்டை வழியாக கைதி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவ்வப்போது பார்ப்பார். ஆனால் நான் இருந்த இடத்திலிருந்த அந்த மரக்கதவு பெரும்பாலும் திறந்தே கிடந்தது”.

-என்று அரவிந்தர் எழுதியுள்ளார். அந்த சிறிய அறையில் அவர் உண்ண வேண்டும், உறங்க வேண்டும், இயற்கை உபாதைகளை முடிக்க வேண்டும். அந்தச் சிக்கலைப் பற்றி அவர்,

விசாரணைக் கைதியாக அரவிந்தர் அடைக்கப்பட்டிருந்த அலிப்பூர் சிறை அறை.
“எல்லாமே அந்த சிறிய அறைக்குள் என்றால் எவ்வளவு அசௌகரியம் என்பது சொல்லாமலேயே புரியும். குறிப்பாக சாப்பிடும் போதும் இரவு தூங்கும் போதும். கழிப்பறையுடன் கூடிய வசிப்பிடம் என்பது மேற்கத்திய நாகரிகம். ஆனால் அந்தச் சிறிய அறையிலேயே படுப்பது, உண்பது, கழிப்பது என்றால்.....! இந்தியர்களாகிய நமக்கு பல வருந்தத்தக்க வழக்கங்கள் உள்ளன. மிகவும் நாகரிகமாக இருப்பது என்பது நமக்கு வலிக்கத்தான் செய்யும்”

-என்று கிண்டலும் குத்தலுமாக எழுதியுள்ளார்.

மனிதத் தன்மையே அற்ற சூழ்நிலையில் அவர் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டது கோடைக்காலத்தில். அந்த சிறிய அறை அப்போது கொதிக்கலன் போல இருந்தது. கொடுக்கப்பட்ட உணவின் தரமோ அச்சுறுத்துவதாக இருந்தது.  

“கொட்டையான அரிசி, உமியும் சிறுகற்களும் பூச்சிகளும் மயிரும் குப்பையும் கொண்ட காராமணிக் குழம்பு. அதுவும் நீர்த்துப்போய் இருக்கும். காய்கறி, கீரைகளில் புல்லும் இலைகளும் கலந்து கிடக்கும்” என்கிறார் அரவிந்தர். தண்ணீரும் மிகக் குறைந்த அளவே கிடைக்கும். அவருக்கு ஒரு தட்டு, ஒரு கிண்ணம், ஒரு போர்வை கொடுக்கப்பட்டது. “என் அன்புள்ள கிண்ணமே”, என்று துவங்கும் அரவிந்தர் அதுபற்றி கெலியாக எழுதியுள்ளார்…

“அது பல பயன்பாடுகளைக் கொண்டது; ஜாதி வேறுபாடுகளைக் கடந்தது; எல்லா விதமான பாகுபாடுகளையும் கடந்தது. அறைக்குள் இயற்கைக்கடனை முடித்த பிறகு கழுவப் பயன்பட்டது. அதே கிண்ணம் பல் விலக்க, குளிக்கவும் பயன்பட்டது. உணவு கொடுக்கும்போது குழம்பு அல்லது காய்கறி அதே கிண்ணத்தில்தான் இடப்படும். நான் தண்ணீர் குடிப்பதும் வாய் கொப்பளிப்பதும் அதே கிண்ணத்தில் தான். இப்படி பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு பொருள் பிரிட்டிஷ் சிறையில் மட்டுமே கிடைக்கும்”...

-என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நமக்கு வெறுப்பூட்டும் அந்தச் சூழ்நிலை பற்றி அவர் தொடர்ந்து எழுதிய அற்புதமான வார்த்தைகளை படிக்கும்போது அந்த வெறுப்பு மறைந்து விடுகிறது.

“அலிப்பூர் அரசு ஹோட்டலைப் பற்றி நான் கொடுத்த மேற்கண்ட விவரங்களை எல்லாம், நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதற்காகச் சொல்லவில்லை. நாகரிகம் மிகுந்த பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் விசாரணைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பான ஏற்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காகத் தான். நிரபராதிகளுக்கு எவ்வளவு நீண்ட மனஉளைச்சல்! நான் விவரித்த கஷ்டங்கள் அங்கு இருந்தன என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் இறைவனின் கருணை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான் கொஞ்ச நாட்கள்தான் கஷ்டப்பட்டேன். பிறகு என் மனம் எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளவும், அதை உணராதபடிக்கு மேலெழவும் தொடங்கியது. அதனால்தான் என் சிறை வாழ்க்கையை கோபமும் சோகமும் இல்லாமல் அதை நினைத்து சிரித்தபடி என்னால் எழுத முடிகிறது”.

கஷ்டமான, மனிதத் தன்மையற்ற சிறை வாழ்க்கையை – சிறைத் துறையின் நெறிமுறைகளின் குற்றமேயன்றி – அங்குள்ள சிறை அதிகாரிகளின் குற்றமாக பார்க்காத தன்மை அரவிந்தருக்கே உரித்தானது.  ‘காராகாஹினி’யில் சிறை சூப்பிரண்ட் எமர்சனைப் பற்றிக் குறிப்பிடும்போது, மறைந்து போன ஐரோப்பிய கிறிஸ்தவக் கொள்கைகளின் உருவமாக இருப்பவர்  என்று பரிவுடன் குறிப்பிடுகிறார். அதேபோல மருந்தகத்தில் துணை மருத்துவராக இருந்த டாக்டர் பைத்யநாத் சாட்டர்ஜி பற்றியும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். அவருடைய மேலதிகாரியான டாக்டர் டாலே என்ற ஐரிஷ்காரரைப் பற்றிக் குறிப்பிடும் போது, சுதந்திரமான சிந்தனையும் உணர்வுகளையும் கொண்ட இனத்தின் மேலான பல பண்புகளைப் பெற்றவர் என்றே குறிப்பிடுகிறார். டாக்டர் டாலேவின் சிபாரிசினால் தினமும் காலையும் மாலையும் கொஞ்சம் நேரம் சிறை அறைக்கு முன்பு இருந்த திறந்த வெளியில் உலாவ அனுமதி கிடைத்தது. வீட்டிலிருந்து சில ஆடைகளும் புத்தகங்களும் பெற முடிந்தது. அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது தாய்மாமன் கிருஷ்ணகுமார் மித்ரா பகவத் கீதையையும் உபநிஷத நூல்களையும் கொடுத்தனுப்பினார்.

சிறையில் அரவிந்தருக்கு பற்பல ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டன. அவற்றைப் பற்றி அவர் உத்தரபாரா உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த அனுபவங்கள் எல்லாம் அவருக்குள் தீவிரப் போராட்டத்திற்குப் பின்னர் தான் ஏற்பட்டன. உத்தரபாரா உரையில்…

“நான் கைது செய்யபட்டு லால் பஜார் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்ட போது என் நம்பிக்கை ஆட்டம் கண்டது. இறைவனின் நோக்கம் என்னவென்று அவன் இதயத்துக்குள் புகுந்து பார்க்க என்னால் முடியவில்லை. எனவே அவன் நோக்கத்தில் குறை கண்டு என் இதயம் விம்மியது. எனக்கு ஏன் இது நடக்கிறது. என் நாட்டு மக்களுக்காக பணிபுரிவதும் அந்தப் பணி நிறைவேறும் வரையில் அவன் (இறைவன்) என்னைப் பாதுகாப்பான் என்று கருதி இருந்தேன். அப்படியானால் நான் ஏன் இங்கு இருக்கிறேன், அதுவும் இந்தக் குற்றச்சாட்டுடன்? ஒரு நாள் கழிந்தது, இரண்டு நாள் கழிந்தது, மூன்றும் கடந்தது. அதன் பின் எனக்கு ஒரு குரல் எழுந்தது. 'பொறுத்திருந்து பார்' என்றது. அதன் பிறகு நான் அமைதியுற்றேன். காத்திருக்கத் தொடங்கினேன்”...

“லால் பஜாரில் இருந்து அலிப்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு எந்த மனிதத் தொடர்பும் இல்லாமல் ஒரு மாதம் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டேன். அங்கு இரவும் பகலும் அந்தக் குரலை எதிர்பார்த்து இருந்தேன். என்ன சொல்லப் போகிறார், நான் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்த்தேன். அந்த தனிமைச் சிறையில் தான் எனக்கு முதல் பாடம், முதல் அனுபவம் ஏற்பட்டது. எனக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது, நான் கைதாவதற்கு ஓரிரு மாதம் முன்பு எனக்குள் ஒரு குரல் 'எல்லாவிதமான செயல்களில் இருந்தும் உன்னை அப்புறப்படுத்திக்கொண்டு தனிமையை நாடிச் செல். உனக்குள்ளே பார். அப்பொழுதுதான் நீ அவருக்கு நெருக்கமாவாய்' என்றது. நான் பலவீனமாக இருந்ததால் அந்த அழைப்பை ஏற்கவில்லை. நான் செய்து கொண்டிருந்த பணி எனக்குப் பெரியதாகப் பட்டது. அது என் மனதிற்குப் பெருமை தருவதாக இருந்தது. நான் இல்லாவிட்டால் அந்தப் பணிக்கு இடையூறு ஏற்படும் அல்லது நின்றே போய்விடும். ஆகவே நான் இதிலிருந்து விலகக் கூடாது என்று நினைத்தேன்”...

“பிறகு அவர் என்னுடன் மீண்டும் பேசினார். 'பந்தத்தை முறிக்கும் சக்தி உனக்கு இல்லை என்பதால் அதை நானே உடைத்தெறிந்து உள்ளேன். ஏனெனில் நீ அந்த வேலையை தொடர்ந்து செய்ய வேண்டியதில்லை என்று கருதினேன். நீ செய்ய வேண்டிய பணி வேறொன்று உள்ளது. அதை உனக்கு சொல்லிக் கொடுக்கவும் அதில் உனக்கு பயிற்சி அளிக்கவும் உன்னை அழைத்து வந்துள்ளேன்' என்றார். என் கையில் கீதையை வைத்தார். அவரது சக்தி என்னுள்ளே நுழைந்தது. நான் கீதையை அறிவுப்பூர்வமாக மட்டுமின்றி,  ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் என்ன எதிர்பார்த்தார், இறை பணியை செய்ய முன் வருபவர்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்தேன்”

-என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அரவிந்தர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுகிறார்.

“ஹிந்து மதத்தின் மையமாக இருக்கும் உண்மையை நான் உணரும்படி அவர் செய்தார். முதலில் சிறைக் காப்பாளர்கள் மனதை என்பால் திருப்பினார். அவர்கள் தங்களுடைய மேலதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் என்னைப் பற்றி பேசும்படி செய்தார்.  ‘இவர் அறைக்குள்ளே முடங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார். காலையும் மாலையும் அரை மணி நேரம் திறந்த வெளியில் காலாட விடலாம்’ என்றார்கள். அது ஏற்பாடானது. நான் நடக்கும்போது அவரது சக்தி மீண்டும் என்னுள் புகுந்தது. என்னை சக மனிதர்களிடமிருந்து பிரித்த சிறையைப் பார்த்தேன். அந்த உயர்ந்த மதில்கள் என்னை சிறைப்படுத்தவில்லை. அந்த வாசுதேவனே என்னைச் சுற்றியுள்ளான். சிறைக்குள் நீண்டிருந்த மரக்கிளைகளின் நிழலில் நடந்தேன். அது மரக்கிளை அல்ல, வாசுதேவனே என்பதை உணர்ந்தேன். அங்கு நிற்பது ஸ்ரீ கிருஷ்ணன்தான், அவர்தான் என் மீது நிழலாகக் கவிழ்ந்திருக்கிறார். என் சிறை அறைக் கதவுகளைப் பார்த்தபோது அது தன் கடமையைச் செய்ய அங்கு இருப்பதைக் கண்டேன். அங்கு வாசுதேவனே நிற்பதாகத் தெரிந்தது. நாராயணனே காவலாளி வடிவில் நின்று பாதுகாப்பதாகப் பட்டது. முரட்டுப் போர்வையில் படுத்தபோது ஸ்ரீ கிருஷ்ணனே -என் நண்பனாக, அன்பனாக- என்னைக் கட்டி அணைத்துக் கொண்டான். இதுதான் அவன் எனக்கு அளித்த ஆழ்ந்த தரிசனத்தின் முதல் பயன்”.

“சிறையில் இருந்த மற்ற கைதிகளைப் பார்த்தபோது அந்தத் திருடர்கள், கொலைகாரர்கள், பணத்தைச் சுருட்டியவர்கள் எல்லோரும் எனக்கு வாசுதேவனாகத் தெரிந்தார்கள். அந்த இருண்ட ஆன்மாவுக்குள், தவறாகப் பயன்படுத்தப்பட்ட அந்த உடல்களுக்குள் நாராயணனே இருப்பதைக் கண்டு கொண்டேன். அவர்கள் என்மீது காட்டிய அன்பும் இரக்கமும் அந்தக் கொடுமையான சூழ்நிலையில் வெளிப்பட்ட மனிதநேயமும் எனக்கு வெட்கத்தை ஏற்படுத்தியது. அவர்களில் ஒருவர் எனக்கு ஞானியாகத் தெரிந்தார். எழுதப் படிக்கத் தெரியாத என் தேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர். கொள்ளை அடித்ததற்காக பத்தாண்டு தீவிர சிறைத் தண்டனை பெற்றவர் ஒருவர். மிகவும் தாழ்ந்த ஜாதி என கேவலமாக நோக்கப்படுபவர் ஒருவர். இறைவன் என்னிடம் சொன்னார், 'இவர்களிடம் என்னுடைய பணியை செய்யத்தான் உன்னை அனுப்பினேன். இதுதான் நான் உயர்த்த உள்ள தேசத்தின் நிலை. இதற்காகத்தான் அதை உயர்த்த உள்ளேன்’ என” 

-என்று அரவிந்தர் உத்தர்பாரா உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசுகையில்,   

“வழக்கு கீழ்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டேன். அப்போதும் அந்தத் தரிசனம் தொடர்ந்தது. இறைவன் என்னிடம் சொன்னார், சிறைப்பட்டபோது உன் இதயம் நொறுங்கி என்னை நோக்கி  ‘உன்னுடைய பாதுகாப்பு எங்கே?’ என்று கதறினாய். நீதிபதியைப் பார். வழக்கை நடத்தும் வழக்கறிஞர்களைப் பார்’. அவர் சொன்னபடியே நான் அவர்களைப் பார்த்தேன். நீதிபதி வாசுதேவனாக இருந்தார். நீதிபதி குழுவைப் பார்த்தால் அங்கு ஸ்ரீமன் நாராயணன் வீற்றிருந்தார். வழக்கறிஞர்களைப் பார்த்தபோது அங்கு என்னுடைய நண்பரும் அன்பருமான ஸ்ரீ கிருஷ்ணர் உட்கார்ந்திருந்தார். இறைவன் புன்னகையோடு என்னைப் பார்த்து  ‘இப்பொழுது நீ பயப்படுகிறாயா?’ என்று கேட்டார்.  ‘நானே எல்லாம் மனிதர்களுக்குள்ளும் இருக்கின்றேன். நானே அவர்களின்  வார்த்தையையும் செயலையும் ஆள்கிறேன். உனக்கு என்னுடைய பாதுகாப்பு உள்ளது. பயப்பட வேண்டாம். உனக்கு எதிரான இந்த வழக்கை என்னிடம் விட்டு விடு. இது உனக்கானது அல்ல. இந்த வழக்கு விசாரணைக்காக உன்னை இங்கு அழைத்து வரவில்லை. வேறொரு விஷயத்துக்காக அழைத்து வந்துள்ளேன். இந்த வழக்கே என் பணியைச் செய்வதற்கான வழியே அன்றி வேறு எதுவும் இல்லை. நான்தான் வழி நடத்துகிறேன். எனவே பயப்பட வேண்டாம். உன்னை எதற்காக சிறைக்கு கொண்டு வந்தேனே அந்தப் பணியில் ஈடுபடு. நினைவில் கொள், நீ வெளியே வரும்போது பயப்படக் கூடாது. தயங்கக் கூடாது. செய்வதெல்லாம் நானே. நீயோ வேறு எவரோ அல்ல. எனவே மேகங்கள் சூழலாம். ஆபத்துக்களும் கஷ்டங்களும் வரலாம். துன்பங்கள் வரலாம். அசாத்தியமான சூழ்நிலைகள் ஏற்படலாம். நினைவில் கொள், எதுவும் கஷ்டமல்ல, எதுவும் அசாத்தியம் அல்ல. நான் இந்த தேசத்துக்குள் இருக்கின்றேன். அதை நானே உயர்த்துகிறேன். நானே வாசுதேவன். நானே நாராயணன். நான் நினைப்பது தான் நடக்கும். மற்ற எவர் நினைப்பதும் நடக்காது. நான் கொண்டு வருவதை எந்த மனித சக்தியாலும் தடுக்க முடியாது’ என்றார்".

அரவிந்தரின் வார்த்தைகளில் ஓர் அதிர்வு இருப்பதை நீங்கள் உணர முடியும். இறைவன் எல்லாவற்றிலும் உள்ளான் என்ற பிரபஞ்ச விழிப்புணர்வை -சுதேவ சர்வமிதி- என்று தான் உணர்ந்ததை தனது இரண்டாவது ஆன்மிக அனுபவமாக (பரோடாவில் பரிநிர்வாண உணர்வு பெற்றது முதல் அனுபவம்) கூறும் அரவிந்தர் அதனை அடிப்படையாகக் கொண்டே தனது யோக –  ஆன்மிகத் தத்துவத்தை பின்னர் கட்டமைத்தார்.

சில காலம் கழித்து தனிமைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு பெரிய ஹாலில் வைக்கப்பட்டார். அங்கு அவர் மற்றவர்களுடன் பொதுவான பேச்சு, சிரிப்பு, விளையாட்டுகளில் ஈடுபடாமல், தனது யோக சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால் அங்கு அதுவரை தான் சந்தித்திராத குற்றம் சாட்டப்பட்ட பல சகாக்களை அறிமுகம் செய்து கொண்டார். அவர்களைப் பற்றி  ‘காராகஹினி’யில் எழுதும் போது, “இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது பரந்த உள்ளமும் தைரியமும் வலிமையும் பல்வேறு பயிற்சிகளையும் பெற்ற வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த மனிதர்களே மீண்டும் இந்தியாவுக்கு வந்து விட்டார்களோ என்று நினைத்தேன்” என்று எழுதியுள்ளார்.

நரேன் கோசைனின் கொலைக்குப் பிறகு சிறை அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தினர். அரவிந்தரை மீண்டும் தனிமைச் சிறையில் வைத்தனர். ஆனால் அவரோ தனிமைச் சிறையை தவக்குடியிலாக மாற்றி யோக சாதனைகளில் மூழ்கினார். அப்போது அவருக்கு பல அரிய ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டன. அதுபற்றி அவர் பின்னர் பேசியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக, தியானத்தில் இரண்டு வார காலம் சுவாமி விவேகானந்தர் பிரசன்னம் ஆகி அவரது இனிய குரலால் பல விஷயங்களைக் கூறி வழிகாட்டி உள்ளார். அது பற்றி அரவிந்தர், “விவேகானந்தரின் ஆன்மா தான் அதிமனம் பற்றி எனக்கு முதன்முதலாக குறிப்பை அளித்து திசை காட்டியது. அந்தக் குறிப்பின் வழியே சென்று தான் நான் உண்மை- விழிப்புணர்வு எல்லாவற்றிலும் செயல்படுவதைத் தெரிந்து கொண்டேன். அவர் அதிமனம் என்ற வார்த்தையைச் சொல்லவில்லை. அந்த வார்த்தை என்னுடையது” என்று எழுதி உள்ளார்.

அப்போது ஏற்பட்ட முக்கியமான இன்னொரு திறப்பு, ஓவியங்களைப் பற்றியது. அது பற்றி அரவிந்தர், “எனக்கு சிற்பங்களைப் பற்றி ஓரளவு தெரியும். ஆனால் ஓவியங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. அலிப்பூர் சிறையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது ஒருநாள் சிறைச் சுவற்றில் சில ஓவியங்கள் எனக்குத் தெரிந்தன. அவற்றைப் பார்த்ததும் எனக்குள் இருந்த ஓவியக்கண் திறந்தது. ஓவியக்கலை பற்றி எல்லா விஷயங்களும் தெரிய வந்தது” என்று எழுதி உள்ளார்.

தியானத்தில் அவர் ஈடுபட்டபோது பல சித்திகளை (சக்திகளை) அடைந்தார். புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு மேலெழும் சித்தியைக் கண்டபோது திடீரென்று தரையிலிருந்து மேலேறி காற்றில் மிதந்தார். வேறொரு சந்தர்ப்பத்தில் எந்த விதமான தசை அசைவும் இன்றி கையை உயர்த்தி அதே நிலையில் வலியே இல்லாமல் தூங்கிவிட்டார். வெளியில் இருந்து அவரைப் பார்த்த காவலாளி அவர் இறந்து விட்டாரோ என்று பயந்து அபாயக் குரல் எழுப்பினார். வேறெரு சந்தர்ப்பத்தில் பதினோரு நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருந்து அதன் ஆன்மிகப் பலன்களைப் பெற்றார். அதனால் அவரது உடல் எடை நாலரை கிலோவுக்கு மேல் குறைந்துவிட்டது. ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது மட்டுமன்றி, அதற்கு முன்பில்லாத வகையிலே குடம் தண்ணீரை தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடிந்தது.

இன்னொரு முக்கியமான விஷயம் அவரது தலைமுடி. அது மினுமினுப்பாக இருந்தது. அதுபற்றி சக கைதி ஒருவர் அவரிடம் தலைக்கு எண்ணெய் தேய்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அரவிந்தர்,  “எண்ணெய் தேய்ப்பது இல்லை. இப்போதெல்லாம் குளிப்பது கூட இல்லை. என்னுடைய ஆன்மிக அனுபவத்தால் என் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. என் தலைமுடி உடலில் இருந்து கொழுப்பை உறிஞ்சிக் கொள்கிறது” என்று பதில் சொன்னார். அதைக் கேட்ட அந்த சக கைதி பிரமிப்பில் ஆழ்ந்தார். இந்த அசாதாரண அனுபவங்களுக்கு அறிவியல் ஏதாவது விளக்கம் கொடுக்கிறதா அல்லது கதை என்று தள்ளி விடுமா என்று தெரியவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டவை சிறையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மாற்றங்கள் பற்றி மட்டுமே.  ‘சாவித்திரி’யிலிருந்து சில வரிகள் இங்கு நினைவு கூறத்தக்கவை…

அந்த பரந்த இறை- அறிவு மேலிருந்து கீழிறங்கியது,
புதிய பூ- உலக அறிவு தன்னுள் பரந்து விரிந்தது...
மனிதன் தெய்வீகத்துடன் நடை போட்டான்.

$$$

(அடுத்த அத்தியாயம் புதன்கிழமை வெளியாகும்)

.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s