சத்திய சோதனை- 4(11-15)

-மகாத்மா காந்தி

நான்காம் பாகம்

11. ஐரோப்பியருடன் நெருங்கிய தொடர்பு

     இந்த அத்தியாயம், என்னை ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இக்கதை எவ்விதம் எழுதப்படுகிறது என்பதைக் குறித்து வாசகர்களுக்கு நான் விளக்க வேண்டியது இங்கே அவசியமாகிறது.

இதை எழுத ஆரம்பித்தபோது எந்த முறையில் இதை எழுதுவது என்பதைக் குறித்து நான் எந்தத் திட்டமும் போட்டுக் கொள்ளவில்லை. என்னுடைய சோதனைகளின் கதையை எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ள என்னிடம் எந்தவிதமான நாட்குறிப்போ, வேறு ஆதாரங்களோ இல்லை. எழுதும்போது கடவுள் எவ்வழியில் என்னை நடத்திச் செல்கிறாரோ அவ்வழியில் எழுதுகிறேன். என்னுடைய மனமார்ந்த எண்ணங்களும் செயல்களும் இறைவனால் தூண்டப்பட்டவையே என்று நிச்சயமாக நான் அறிவேன் என்றும் நான் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், என் வாழ்க்கையில் நான் செய்திருக்கும் மிகப் பெரிய காரியங்களையும், மிகச் சிறியவை என்று கருதக்கூடிய காரியங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும் போது அவைகளெல்லாம் கடவுளால் நடத்தி வைக்கப்பட்டவைதான் என்று சொல்லுவது தவறாகாது என்றே எண்ணுகிறேன்.

     கடவுளை நான் கண்டதுமில்லை; அறிந்ததுமில்லை. உலகமெல்லாம் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையே என் நம்பிக்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த என் நம்பிக்கை அழிக்க முடியாதது. ஆகையால் அந்த நம்பிக்கை அனுபவத்திற்குச் சமம் என்று கருதுகிறேன். என்றாலும், நம்பிக்கையை அனுபவம் என்று விவரிப்பது உண்மைக்கு ஊறு செய்வதாகும் என்று சொல்லக் கூடுமாகையால், கடவுளிடம் எனக்குள்ள நம்பிக்கையை எடுத்துக்கூற என்னிடம் சொற்கள் இல்லை என்று சொல்லுவதே மிகவும் சரியானதாக இருக்கக்கூடும்.

     கடவுள் தூண்டும் வழியில் இக்கதையை நான் எழுதுகிறேன் என்று நான் ஏன் நம்புகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுவது ஓரளவுக்கு இப்பொழுது எளிதாக இருக்கக்கூடும். முந்தைய அத்தியாயத்தை நான் எழுத ஆரம்பித்தபோது இந்த அத்தியாயத்திற்குக் கொடுத்திருக்கும் தலைப்பையே அதற்கும் கொடுத்தேன். ஆனால், அதை நான் எழுதிக் கொண்டிருந்தபோது ஐரோப்பியருடன் பழகிய அனுபவத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னால் முகவுரையாகச் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதையே செய்து தலைப்பையும் மாற்றினேன்.

     திரும்பவும் இப்பொழுது இந்த அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தபோது ஒரு புதிய பிரச்னை என் முன்பு நிற்பதைக் காண்கிறேன். ஆங்கில நண்பர்களைக் குறித்தே நான் எழுதப் போகிறேன். அவர்களைக் குறித்து எதைக் கூறுவது, எதைக் கூறாதிருப்பது என்பதே கஷ்டமான அப்பிரச்னை. பொருத்தமான விஷயங்களைக் கூறாது போனால் சத்தியத்தின் ஒளி மங்கிவிடும். இந்தச் சரித்திரத்தை எழுதுவதிலுள்ள பொருத்தத்தைக் குறித்தே நான் நிச்சயமாக அறியாதபோது, பொருத்தமானது எது என்பதை நேரே முடிவு செய்து விடுவதென்பது கஷ்டமானதாகும்.

     எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரங்களாவதற்கு ஏற்றவையல்ல என்பதை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். இதை இன்று அதிகத் தெளிவாக அறிகிறேன். எனக்கு நினைவிருப்பவை எல்லாவற்றையும் இக்கதையில் நான் கூறவில்லை. உண்மையின் முக்கியத்தை முன்னிட்டு நான் எவ்வளவு கூறலாம், எவ்வளவு கூறாமல் விடலாம் என்பதை யார் கூற முடியும்?  என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கூறும் அரைகுறையானதும் ஒரு தலைப் பட்சமானதுமான சாட்சியங்களுக்கு ஒரு நீதிமன்றத்தின் முன்பு என்ன மதிப்பு இருக்கும்? நான் இது வரையில் எழுதியிருக்கும் அத்தியாயங்களின் பேரில், குறும்புத்தனமானவர் யாரேனும் குறுக்கு விசாரணை செய்வதாக இருந்தால், அவைகளைக் குறித்து மற்றும் பல விவரங்கள் வெளியாகலாம். இது விரோத உணர்ச்சியுடன் குறை கூறுபவரின் குறுக்கு விசாரணையாக இருந்தால், என்னுடைய பாசாங்குகளில் பலவற்றை வெளிப்படுத்திவிட்டதாக அவர் பெருமையடித்துக் கொள்ளலாம்.

ஆகையால், இந்த அத்தியாயங்களை எழுதாமல் இருப்பது கூட நல்லதல்லவா என்ற எண்ணமும் எனக்கு ஒரு கணம் உண்டாகிறது. ஆனால், என்னுள் இருக்கும் அந்தராத்மாவின் தடை எதுவும் இல்லாதிருக்கும் வரையில் நான் தொடர்ந்து எழுதியே ஆக வேண்டும். ஒரு காரியத்தைச் செய்ய ஒரு முறை தொடங்கி விட்டால், அது ஒழுக்கத் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலன்றி அதைக் கைவிடவே கூடாது என்ற முனிவரின் உபதேசத்தை நான் பின்பற்ற வேண்டும்.

     விமர்சகர்களைத் திருப்தி செய்வதற்காக நான் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கவில்லை. இதை எழுதுவதுகூடச் சத்திய சோதனையில் ஓர் அம்சமேயாகும். இதை எழுதுவதன் நோக்கங்களில் ஒன்று, நிச்சயமாக என் சக ஊழியர்களுக்குச் சிறிது மன ஆறுதலையும், சிந்தனை செய்வதற்குரிய விஷயத்தையும் அளிப்பதுதான். அவர்களுடைய விருப்பத்திற்கு உடன்பட்டே இதை எழுத ஆரம்பித்தேன் என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீ ஜெயராம்தாஸும் சுவாமி ஆனந்தும் இந்த யோசனையை வற்புறுத்தாதிருந்தால் இதை எழுதியே இருக்க மாட்டேன்.

     ஆகையால், நான் சுயசரிதையை – இதை எழுதியது தவறு என்றால் அத்தவறில் அவர்களும் பங்கு கொள்ள வேண்டும்.

     இனி, தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் விஷயத்திற்கு வருவோம். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக என்னுடன் இந்தியர் வசித்துக் கொண்டிருந்ததைப் போலவே, டர்பனில் ஆங்கில நண்பர்களும் என்னுடன் வசித்துக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வசித்தவர்கள் எல்லோருக்கும் இது பிடித்திருந்தது என்பதல்ல. ஆனால் அவர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் தான் வற்புறுத்தினேன். இவ்விதம் செய்தது எல்லோருடைய விஷயத்திலும் புத்திசாலித்தனமானதாக முடியவுமில்லை. சிலர் விஷயத்தில் மிகவும் கசப்பான அனுபவமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் இந்தியரும் உண்டு; ஐரோப்பியரும் உண்டு. இந்த அனுபவங்களுக்காக நான் வருத்தப்படவில்லை. இவை போன்றவை இருந்த போதிலும், நண்பர்களுக்கு அசௌகரியங்களையும் மனக் கவலையையும் அநேக சமயங்களில் நான் உண்டாக்கி இருக்கிறேன் என்றாலும், என் பழக்கத்தை நான் இன்னும் மாற்றிக்கொண்டு விடவில்லை. நண்பர்களும் அன்புடன் என்னைச் சகித்துக்கொண்டு தான் வந்திருக்கிறார்கள். புதிதாக வருபவர்களுடன் எனக்கு ஏற்படும் தொடர்பு நண்பர்களுக்கு மனவேதனையை அளிப்பதாக இருக்கும் போதெல்லாம் அவர்களைக் குறைகூற நான் தயங்கியதே இல்லை. தங்களுள் காணும் கடவுளை மற்றவர்களிடமும் காண வேண்டும் என்பதை நம்புகிறவர்கள், எல்லோருடனும் விருப்பு வெறுப்பின்றி வாழ முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இத்தகைய தொடர்புகளுக்கு தேடாமலேயே கிடைக்கும் வாய்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிடாமல், சேவை உணர்ச்சியுடன் அந்தச் சந்தர்ப்பங்களை வரவேற்று, அவைகளினாலெல்லாம் மனஅமைதி கெடாமல் பார்த்துக் கொள்ளுவதன் மூலமே அவ்விதம் வாழ்வதற்கு வேண்டிய ஆற்றலைப் பெற முடியும்.

ஆகையால், போயர் யுத்தம் ஆரம்பமானபோது என் வீடு நிறைய ஆட்கள் இருந்தார்கள் என்றாலும், ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து வந்த இரு ஆங்கிலேயரையும் அழைத்துக் கொண்டேன். இருவரும் பிரம்மஞான சங்கத்தினர். இவர்களில் ஒருவர் ஸ்ரீ கிட்சின். இவரைக் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளப் பின்னால் சந்தர்ப்பம் இருக்கும். இந்த நண்பர்களினால் என் மனைவி அடிக்கடி கண்ணீர் வடிக்க வேண்டி வந்தது. துரதிர்ஷ்டவசமாக என்னால் அவளுக்கு இதுபோன்ற சோதனைகள் பல ஏற்பட்டன. ஆங்கில நண்பர்கள், குடும்பத்தினர்போல என்னுடன் நெருக்கமாக வசிப்பது இதுவே முதல் தடவை. நான் இங்கிலாந்தில் இருந்தபோது ஆங்கிலேயரின் வீடுகளில் தங்கியிருக்கிறேன். அங்கே அவர்களுடைய வாழ்க்கை முறையை நானும் அனுசரித்து வந்தேன். ஏறக்குறையச் சாப்பாட்டு விடுதியில் தங்குவதைப் போன்றதே அது. இங்கோ அது முற்றும் மாறானது. ஆங்கில நண்பர்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயினர். பல விஷயங்களில் அவர்கள் இந்தியரின் முறைகளை மேற்கொண்டனர். நடைமுறை போன்றவைகளில் மேனாட்டு முறையே அனுசரிக்கப்பட்டாலும் உள் வாழ்க்கை முற்றும் இந்திய மயமானதாகவே இருந்தது. குடும்பத்துடன் சேர்ந்தவர்களாக அவர்களை வைத்துக் கொண்டிருப்பதால் சில கஷ்டங்கள் இருந்தன என்பது எனக்கு நினைவு இருக்கிறது. என்றாலும், என் வீட்டில் தங்கள் சொந்த வீடு போன்றே அவர்கள் இருந்து வருவதில் அவர்களுக்கு எந்தவிதமான கஷ்டமுமே இல்லை என்பதை நான் நிச்சயமாகக் கூற முடியும். டர்பனில் இருந்ததைவிட ஜோகன்னஸ்பர்க்கில் இவ்விதமான தொடர்புகள் இன்னும் அதிகமாயின.

$$$

12. ஐரோப்பியரின் தொடர்பு (தொடர்ச்சி)

     ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு சமயம் என்னிடம் நான்கு இந்தியக் குமாஸ்தாக்கள் இருந்தனர். குமாஸ்தாக்கள் என்பதைவிட அவர்கள் என் புத்திரர்கள் போலவே இருந்தனர் எனலாம். ஆனால், எனக்கு இருந்த வேலைக்கு இவர்கள் போதவில்லை. டைப் அடிக்காமல் எதுவும் செய்ய இயலாது. எங்களில் யாருக்காவது டைப் அடிக்கத் தெரியுமென்றால் அது எனக்குத்தான். குமாஸ்தாக்களில் இருவருக்கு அதைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாததனால் அவர்கள் அதில் போதிய திறமை பெறவில்லை. அவர்களுள் ஒருவரை நல்ல கணக்கராகப் பயிற்சி செய்துவிடவும் விரும்பினேன். அனுமதிச் சீட்டுப் பெறாமல் டிரான்ஸ்வாலுக்குள் யாரும் வர முடியாதாகையால், நேட்டாலிலிருந்து நான் எவரையும் கொண்டு வருவதற்கும் முடியவில்லை. என்னுடைய சொந்தச் சௌகரியத்திற்காக அனுமதிச் சீட்டு அதிகாரியின் தயவை நாடுவதற்கு நான் விரும்பவுமில்லை.

என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. வேலை பாக்கியாகிக் குவிந்துகொண்டே போயிற்று. ஆகையால், நான் என்னதான் முயன்றாலும், தொழில் சம்பந்தமான வேலைகளுடன் பொது வேலையையும் செய்து சமாளித்துக்கொண்டு விடுவது அசாத்தியம் என்று எனக்குத் தோன்றியது. ஓர் ஐரோப்பியக் குமாஸ்தாவை வைத்துக்கொள்ள நான் தயாராகவே இருந்தேன். ஆனால், என்னைப் போன்ற ஒரு கறுப்பு மனிதனிடம் வேலை செய்ய ஒரு வெள்ளைக்கார ஆணோ, பெண்ணோ வருவார்கள் என்ற நிச்சயம் எனக்கு இல்லை. என்றாலும், முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தேன். எனக்குத் தெரிந்த டைப்ரைட்டர் தரகர் ஒருவரிடம் சென்றேன். சுருக்கெழுத்தும் தெரிந்த டைப் அடிப்பவர் ஒருவர் எனக்குத் தேவை என்று அவரிடம் கூறினேன். பெண்கள் கிடைப்பார்கள் என்றும், ஒரு பெண்ணை ஏற்பாடு செய்வதாகவும் அவர் சொன்னார். ஸ்காட்லாந்திலிருந்து அப்பொழுதுதான் வந்தவரான குமாரி டிக் என்ற பெண்ணைப் பார்த்து அவர் விசாரித்தார். அப் பெண்ணுக்குப் பணம் தேவை. ஆகையால், யோக்கியமான பிழைப்பு எங்கே கிடைத்தாலும் வேலை பார்ப்பதில் அவளுக்கு ஆட்சேபமில்லை. எனவே, அந்தத் தரகர் அப்பெண்ணை என்னிடம் அனுப்பினார். அப்பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போய்விட்டது.

     “இந்தியரின் கீழ் ஊழியம் பார்ப்பதில் உமக்கு ஆட்சேபம் உண்டா?” என்று அப்பெண்ணைக் கேட்டேன்.

     “இல்லவே இல்லை” என்று அவர் உறுதியாகக் கூறினார்.

     “என்ன சம்பளம் நீர் எதிர்பார்க்கிறீர்?”

     “ஏழரைப் பவுன் கேட்டால் அது உங்களுக்கு அதிகமானதாக இருக்குமா?”

     “உம்மிடமிருந்து நான் விரும்பும் வேலையை அளிப்பீரானால், அச் சம்பளம் அதிகமானதாகாது. எப்பொழுது வேலைக்கு வர முடியும்?”

     “நீங்கள் விரும்பினால் இந்த நிமிடத்திலேயே.”

     நான் அதிகத் திருப்தி அடைந்துவிட்டேன். எழுத வேண்டிய கடிதங்களை அவளுக்கு அப்பொழுதே சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

     அப்பெண் டைப் அடிப்பவர் என்பதற்குப் பதிலாக வெகு சீக்கிரத்திலேயே எனக்கு ஒரு மகள் அல்லது சகோதரி போல் ஆகிவிட்டார். அவர் செய்த வேலை பற்றிக் குறைகூற எந்தக் காரணமும் எனக்கு இல்லை. ஆயிரக் கணக்கான பவுன் தொகையை நிர்வகிக்கும் பொறுப்பும் அடிக்கடி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்டு. கணக்குகள் வைத்துக் கொள்ளுவதும், அவர்தான். என் முழு நம்பிக்கையையும் அவர் பெற்றுவிட்டார். இன்னும் அதிக முக்கியமானது என்னவென்றால், அவர் தமது மனத்திற்குள்ளிருந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கூட என்னிடம் கூறிவந்தார். முடிவாகத் தமக்குக் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் என் ஆலோசனையையும் நாடினார். அவரைக் கன்னிகாதனம் செய்துகொடுக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. குமாரி டிக், ஸ்ரீமதி மெக்டானல்டு ஆனதும் என்னை விட்டுப்போய்விட வேண்டியதாயிற்று. ஆனால், விவாகமான பிறகும் கூட வேலை அதிகமாக இருக்கும்போது கூப்பிட்டால் தவறாமல் வந்து செய்துவிட்டுப் போவார்.

ஆனால், அவருடைய ஸ்தானத்தில் நிரந்தரமான ஒரு டைப் குமாஸ்தா இப்பொழுது அவசியமாயிற்று; மற்றோர் பெண் எனக்குக் கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலியானேன். குமாரி ஷிலேஸின் என்பவரே இவர். இவரை ஸ்ரீ கால்லென் பாக் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஸ்ரீ கால்லென் பாக் பற்றி உரிய இடத்தில் வாசகர் அறிந்துகொள்ளுவர். இப் பெண்மணி இப்பொழுது டிரான்ஸ்வாலில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் உபாத்தியாயினியாக இருக்கிறார். இவர் என்னிடம் வந்தபோது சுமார் பதினேழு வயது இருக்கும். இப் பெண்ணிடம் சில விசித்திரமான சுபாவங்கள் உண்டு. சில சமயங்களில் எனக்கும் ஸ்ரீ கால்லென் பாக்குக்கும் அதைப் பொறுக்க முடியாது போகும். டைப் அடிக்கும் குமாஸ்தாவாக வேலை செய்வதைவிட, அதற்கான அனுபவம் பெறுவதற்கு என்றே இப் பெண் முக்கியமாக வேலைக்கு வந்தார். நிறத் துவேஷம் என்பது இவருடைய சுபாவத்திற்கே விரோதமானது. வயதுக்கோ, அனுபவத்திற்கோ இவர் மதிப்புக் கொடுப்பதில்லை. ஒருவரை அவமதிப்பதாகுமே என்பதைக் கூட பொருட்படுத்தமாட்டார்; அவரைக் குறித்துத் தாம் நினைப்பதை நேருக்கு நேராகத் தயக்கமின்றிக் கூறிவிடுவார். இவருடைய அதி தீவிரப் போக்கு பல சமயங்களில் என்னைச் சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால், இவருடைய கபடமற்ற வெள்ளை மனப்போக்கோ, சங்கடம் ஏற்பட்டவுடனே அச்சங்கடத்தைப் போக்கியும் விடும். இவருடைய ஆங்கில ஞானம் என்னுடையதைவிட மேலானது என்று கருதினேன். அதோடு இவருடைய விசுவாசத்தில் எனக்கு முழு நம்பிக்கையும் இருந்தது. ஆகையால், இவர் டைப் அடிக்கும் கடிதங்களைத் திரும்பப் படித்துப் பாராமலேயே கையெழுத்திட்டு விடுவேன்.

     இவர் செய்திருக்கும் தியாகம் மகத்தானது. வெகு காலம் வரையில் இவர் ஆறு பவுனுக்கு மேல் வாங்கிக்கொள்ள எப்பொழுதும் மறுத்துவிட்டார். கொஞ்சம் அதிகமாக வாங்கிக் கொள்ளுமாறு நான் வற்புறுத்தும்போது என்னைத் திட்டிவிடுவார். “உங்களிடம் சம்பளம் வாங்குவதற்காக நான் இங்கே இல்லை. உங்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன்; உங்கள் கொள்கைகளும் எனக்குப் பிடித்திருக்கின்றன என்பதனாலேயே இங்கே இருக்கிறேன்” என்பார்.

     ஒரு சமயம் என்னிடம் நாற்பது பவுன் வாங்கிக் கொண்டார். ஆனால், அதைக் கடனாகவே பாவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். சென்ற ஆண்டு முழுத்தொகையையும் திருப்பி அனுப்பிவிட்டார். அவருடைய தியாகத்திற்குச் சமமானவை அவர் தைரியமும், பளிங்கு போன்ற மாசற்ற ஒழுக்கமும். போர் வீரனும் வெட்கமடையும்படி செய்யும் தீரம் கொண்ட சில பெண்களுடன் பழகும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அத்தகைய பெண்களில் இவரும் ஒருவர். இப்பொழுது இவர் வயது முதிர்ந்த மாது. இவர் என்னிடம் இருந்தபோது நான் அறிந்திருந்ததுபோல, இப்பொழுது இவர் மனநிலையைப் பற்றி நான் அறியேன். ஆனால், இந்த யுவதியுடன் ஏற்பட்ட பழக்கம் எனக்கு என்றென்றும் புனிதமானதொரு நினைவாகவே இருந்துவரும். ஆகையால், இவரைப் பற்றி எனக்குத் தெரிந்தவைகளைக் கூறாமல் விடுவேனாயின் நான் சத்தியத்திற்குத் துரோகம் செய்தவனாவேன்.

     லட்சியத்திற்காக உழைப்பதில் இவருக்கு இரவென்றும் பகலென்றும் தெரியாது. நள்ளிரவில் தன்னந்தனியாக வெளி இடங்களுக்குச் செய்தி கொண்டுபோவார். துணைக்கு ஆள் அனுப்புவதாகச் சொன்னால், கோபத்தோடு அதை மறுத்து விடுவார். ஆயிரக்கணக்கான தீரமான இந்தியர், இவருடைய புத்திமதியை எதிர்நோக்கி நின்றனர். சத்தியாக்கிரக சமயத்தில் தலைவர்கள் எல்லோரும் சிறையில் இருந்தபோது இவர் தன்னந்தனியாக இயக்கத்தை நடத்தி வந்தார். அப்பொழுது ஆயிரக்கணக்கானவர்களை வைத்துக்கொண்டு இவர் நிர்வகிக்க வேண்டியிருந்தது. கவனிக்க வேண்டிய கடிதப் போக்குவரத்துக்களும் ஏராளமாக இருந்தன. ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையையும் இவரே நடத்த வேண்டியிருந்ததென்றாலும், இவர் சோர்வடைந்துவிட்டதே இல்லை.

குமாரி ஷிலேஸினைக் குறித்து முடிவில்லாமல் நான் எழுதிக் கொண்டே போக முடியும். எனினும், இவரைக் குறித்து  கோகலே கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன். என் சக ஊழியர்கள் ஒவ்வொருவரையும் கோகலே நன்கு அறிவார். அவர்களில் பலரை அவருக்குப் பிடித்திருந்தது. அவர்களைப் பற்றி தமது அபிப்பிராயத்தையும் கூறுவார். எல்லா இந்திய, ஐரோப்பிய சக ஊழியர்களிலும் குமாரி ஷிலேஸினுக்கு அவர் முதலிடம் கொடுத்தார். “குமாரி, ஷிலேஸினிடம் நான் கண்ட தியாகம், தூய்மை, அஞ்சாமை ஆகியவைகளைப் போல வேறு யாரிடமும் நான் கண்டதில்லை” என்றார், அவர். “உங்களுடைய சக ஊழியர்களிடையே குமாரி ஷிலேஸின் முதலிடம் வகிக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்” என்றும் கூறினார்.

$$$

13. இந்தியன் ஒப்பீனியன்

     மற்றும் பல ஐரோப்பியருடனும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பைக் குறித்துச் சொல்லுவதற்கு முன்னால் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும். என்றாலும், ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பைக் குறித்து இப்போதே சொல்லிவிட வேண்டும். என் வேலைக்கு குமாரி டிக்கை நியமித்தது மாத்திரம் போதவில்லை. எனக்கு மேற் கொண்டும் உதவி தேவையாயிற்று. முந்திய அத்தியாயங்களில் ஸ்ரீ ரிச் என்பவரைப் பற்றிக் கூறியிருக்கிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு வர்த்தக ஸ்தாபனத்தில் அவர் நிர்வாகியாக இருந்தார். அந்த வர்த்தக ஸ்தாபனத்தை விட்டுவிட்டு என் கீழ் வக்கீல் வேலைக்குப் பயிற்சி பெறுமாறு யோசனை கூறினேன். அதன்படி அவர் செய்து எனக்கு இருந்த வேலைப்பளுவைப் பெரிதும் குறைத்தார்.

அந்தச் சமயம் ஸ்ரீ மதன்ஜித், ‘இந்தியன் ஒப்பீனியனை’ ஆரம்பிக்கும் திட்டத்துடன் என்னிடம் வந்து என் ஆலோசனையைக் கேட்டார். அப்பொழுதே அவர் ஓர் அச்சகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டத்தை அங்கீகரித்தேன். இப்பத்திரிகை 1904-இல் ஆரம்பமாயிற்று. ஸ்ரீ மன்சுக்லால் நாஸர் அதன் முதல் ஆசிரியரானார். எல்லாச் சமயங்களிலும் நானே அப்பத்திரிகையை நடத்திவர வேண்டி வந்ததால், வேலை முழுவதும் என் தலையிலேயே விழுந்தது. அவ்வேலையைச் செய்துகொண்டு போக ஸ்ரீ மன்சுக்லாலினால் முடியாது என்பதல்ல. இந்தியாவில் இருந்த போது ஓரளவுக்குப் பத்திரிகையாளராக அவர் அனுபவம் பெற்றிருக்கிறார். ஆனால், நான் அங்கே இருக்கும்போது சிக்கலான தென்னாப்பிரிக்கப் பிரச்னைகளைக் குறித்து அவர் எழுத முற்படுவதில்லை. என்னுடைய விருப்பு, வெறுப்பற்ற தன்மையில் அவருக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு. ஆகவே, தலையங்கங்களை எழுதும் பொறுப்பை அவர் என்மீது போட்டு விட்டார். இன்றளவும் அது வாரப் பத்திரிகையாகவே இருந்து வருகிறது. ஆரம்பத்தில் அது குஜராத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரமாயிற்று. ஆனால், ஹிந்திப் பகுதியும் தமிழ்ப் பகுதியும் பெயரளவுக்குத்தான் இருந்தனவே ஒழிய, எந்த நோக்கத்தின் பேரில் அவை ஆரம்பிக்கப்பட்டனவோ அதை அவை நிறைவேற்றவில்லை. ஆகையால், அந்தப் பகுதிகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருப்பது ஓரளவுக்கு ஏமாற்றுவதாகும் என்று நான் உணர்ந்ததால் அவற்றை நிறுத்தி விட்டேன்.

     இந்தப் பத்திரிகைக்கு நான் பணம் எதுவும் போட வேண்டிவரும் என்று நினைக்கவே இல்லை. ஆனால், பண உதவி இல்லாமல் அது நடந்துகொண்டு போக முடியாது என்பதைச் சீக்கிரத்திலேயே கண்டுகொண்டேன். பெயரைப் பொறுத்த வரையில் இப்பத்திரிகைக்கு நான் ஆசிரியன் அல்ல என்றாலும், அதை நடத்துவதற்கு முழுப் பொறுப்பாளியாக இருப்பது நான்தான் என்பதை இந்தியரும், ஐரோப்பியரும் நன்கு அறிவார்கள். இப் பத்திரிகையை ஆரம்பிக்காமலேயே இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆரம்பித்துவிட்ட பிறகு அதை நிறுத்தி விடுவதென்பது நஷ்டத்தோடு வெட்கக் கேடுமாகும். ஆகவே, என் பணத்தை அதில் போட்டுக்கொண்டே போனேன். முடிவில் நான் மிச்சம் பிடித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் அதிலேயே போட்டு விட நேர்ந்தது. ஒரு சமயம் மாதத்திற்கு 75 பவுன் நான் அனுப்ப வேண்டியிருந்ததும் எனக்கு நினைவிருக்கிறது.

     இப் பத்திரிகை சமூகத்திற்கு நல்ல சேவை செய்திருக்கிறது என்பதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நான் உணருகிறேன். லாபத்திற்கு நடத்தும் வர்த்தக ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும் என்ற நோக்கம் என்றும் இருந்ததில்லை. என்னால் நடத்தப்பட்டு வந்தவரையில் அப் பத்திரிகையில் ஏற்பட்ட மாறுதல்கள், என்னிடம் ஏற்பட்ட மாறுதல்களுக்கு அடையாளங்களாக இருந்தன. இப்பொழுது ‘எங் இந்தியா’ வும், ‘நவஜீவ’னும் இருப்பதைப்போல் அந்த நாளில் ‘இந்தியன் ஒப்பீனியன்’ என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டும் கண்ணாடி போல் இருந்து வந்தது. அதன் பத்திகளில் பிரதி வாரமும் என் ஆன்ம உணர்ச்சிகளைக் கொட்டி வந்தேன். சத்தியாக்கிரகக் கொள்கையையும் அதன் அனுஷ்டானத்தையும் நான் அறிந்திருந்த வகையில் அதில் வெளியிட்டு வந்தேன். பத்து வருட காலத்தில், அதாவது 1914-ஆம் ஆண்டு வரையில், சிறைச்சாலைக்குள் எனக்குக் கிடைத்த கட்டாய ஓய்வைத் தவிர மற்ற சமயங்களில், என்னுடைய கட்டுரை இடம் பெறாத ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழே இல்லை. நான் தீர யோசிக்காமலோ, வேண்டும் என்றே மிகைப்படுத்தியோ, திருப்திப்படுத்துவதற்கு மாத்திரம் என்றோ அக்கட்டுரைகளில் ஒரு வார்த்தையைக் கூட எழுதியதாக எனக்கு நினைவு இல்லை. எனக்கு அப்பத்திரிகை தன்னடக்கத்திற்கு ஒரு பயிற்சியாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. நண்பர்களுக்கோ, என் கருத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு அது ஒரு சாதனமாக இருந்தது. குற்றங் கண்டுபிடிப்பவர்களுக்கு, அதில் ஆட்சேபிக்கத் தக்க விஷயங்கள் அதிகம் கிடைப்பதில்லை. உண்மையில் ‘இந்தியன் ஒப்பீனியனி’ன் நேர்மையான போக்கு, குற்றங் கூறுவோரும் தங்கள் பேனாவை அடக்கிக்கொள்ளும்படி செய்தது.

‘இந்தியன் ஒப்பீனியன்’ இல்லாமல் சத்தியாக்கிரகம் சாத்தியமில்லாமலும் இருந்திருக்கக்கூடும். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் நம்பிக்கையான விவரங்களையும் தென்னாப்பிரிக்காவில் இந்தியரின் உண்மையான நிலைமையையும் அறிவதற்கு வாசகர்கள் இப்பத்திரிகையை ஆவலுடன் எதிர்நோக்கினர். ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் இடையே நெருங்கிய, தூய சம்பந்தத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்று நான் எப்பொழுதும் முயன்று வந்தேன். ஆகையால், நான் மனித சுபாவத்தின் எல்லாவிதத் தோற்றங்களையும் சாயல்களையும் கற்றறிவதற்கு இப் பத்திரிகை ஒரு நல்ல சாதனமாயிற்று. இதய அந்தரங்க உணர்ச்சிகளைப் பொழிந்து எழுதிய கடிதங்கள் ஏராளமாக, பிரவாகமாக எனக்கு வந்து குவிந்து கொண்டிருந்தன. எழுதியவரின் மனப்போக்கை ஒட்டி  சில சிநேக முறையில் இருந்தன; சில குற்றங் கூறுவனவாகவோ, கசப்பானவையாகவோ இருந்தன. இந்தக் கடிதங்களையெல்லாம் படித்து, விஷயத்தை அறிந்துகொண்டு பதில் சொல்வது எனக்கு நல்ல படிப்பாக அமைந்தது. என்னுடன் நடத்திய இக்கடிதப் போக்குவரத்தின் மூலம் சமூகம் தன்னுடைய எண்ணத்தை எனக்கு அறிவிப்பது போலவே இருந்தது. ஒரு பத்திரிகையாளரின் பொறுப்பை முழுவதும் நான் அறிந்து கொள்ளுமாறும் அது செய்தது. இந்த வகையில் நான் சமூகத்தில் அடைந்த செல்வாக்கு, வருங்காலப் போராட்டத்தைக் காரிய சாத்தியமானதாகவும், கண்ணியமானதாகவும், எதிர்க்க முடியாததாகவும் ஆக்கியது.

 பத்திரிகைத் தொழிலின் ஒரே நோக்கம் சேவையாகவே இருக்க வேண்டும் என்பதை ‘இந்தியன் ஒப்பீனியன்’ ஆரம்பமான முதல் மாதத்திலேயே அறிந்து கொண்டேன். பத்திரிகை, ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப் பிரவாகம். எவ்விதம் கிராமப் புறங்களையெல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசமாக்கி விடுமோ அதே போலக் கட்டுத்திட்டத்திற்கு உட்படாத பேனாவும் நாச வேலைக்குத்தான் பயன்படும். கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத்திட்டமில்லாததை விட அது அதிக விஷமானதாகும். கட்டுத்திட்டம் உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்தச் சோதனையில் தேறும்? ஆனால் பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவார்கள்? மேலும் இதில் முடிவு கூறுவது யார்? பொதுவாக நல்லதையும் தீயதையும் போல பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து இருந்துகொண்டுதான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

$$$

14. கூலிகளின் ஒதுக்கலிடங்கள்

     நமக்கு மிகப் பெரிய சேவை செய்து வரும் வகுப்பினர் உண்டு. ஆனால், ஹிந்துக்களாகிய நாம், அவர்களைத் ‘தீண்டாதார்’ என்று சொல்லுகிறோம். பட்டணம் அல்லது கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில் அவர்களை ஒதுக்கியும் வைத்திருக்கிறோம். அப்படிப்பட்ட சேரிகள் குஜராத்தியில் ‘டேட்வாடா’ என்று சொல்லப்படுகின்றன. அப் பெயருக்கு இழிவையும் கற்பித்திருக்கிறோம். கிறிஸ்தவ ஐரோப்பாவில் இப்படித்தான் யூதர்கள் ஒரு சமயம் ‘தீண்டாதோர்’ ஆக இருந்தனர். அவர்கள் குடியிருக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தைக் ‘கெட்டோக்கள்’ என்ற இழிவான பெயர் கொண்டும் கூறி வந்தார்கள். அதே வழியில் இன்று நாம் தென்னாப்பிரிக்காவில் தீண்டாதவர்களாக இருக்கிறோம். ஆண்டுரூஸின் தியாகமும், சாஸ்திரியாரின் மந்திரக் கோலும் நம் கஷ்டங்களைப் போக்குவதற்கு எவ்வளவு தூரம் பயன்படப் போகின்றன என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும்.

புராதன யூதர்கள், தாங்களே கடவுளின் அன்புக்குப் பாத்திரமான மக்கள் என்றும், மற்றவர்களெல்லாம் அப்படியல்ல என்றும் எண்ணிக்கொண்டார்கள். இதன் காரணமாக அவர்களுடைய சந்ததியார் விசித்தரமானதும் அநீதியானதும் ஆன வினைப்பயனை அனுபவித்தாக வேண்டியவர்களாயினர். அநேகமாக அதே மாதிரியே ஹிந்துக்கள், தாங்கள் ஆரியர்கள் அல்லது நாகரிகமானவர்கள் என்று எண்ணிக் கொண்டனர். தமது சொந்த உற்றார் உறவினரேயான ஒரு பகுதியினரை அநாரியர்கள் அல்லது தீண்டாதார் என்று ஒதுக்கித் தள்ளினர். இதன் பயனாக, அநீதியானதேயென்றாலும் விசித்திரமான கர்ம பலன், தென்னாப்பிரிக்காவில் ஹிந்துக்களின் தலைமீது மாத்திரமல்ல, தங்கள் ஹிந்து சகோதரர்களைப் போல் அதே நிறத்தினரான முஸ்லிம்கள், பார்ஸிகள் ஆகியவர்கள் தலைமீதும், அவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனால், இப்பொழுது விடிந்திருக்கிறது.

     இந்த அத்தியாயத்தை ‘ஒதுக்கலிடங்கள்’ என்ற தலைப்புடன் ஆரம்பித்தேன். அதன் பொருளை ஓரளவுக்கு வாசகர் இப்பொழுது புரிந்துகொண்டிருப்பர். தென்னாப்பிரிக்காவில் ‘கூலிகள்’ என்ற கேவலமான பெயரை நாம் பெற்றிருக்கிறோம். இந்தியாவில் ‘கூலி’ என்றால், சுமை தூக்குகிறவர், கூலிக்கு வேலை செய்பவர் என்றுதான் பொருள். ஆனால் தென்னாப்பிரிக்காவிலோ அதற்கு அவமரியாதையான பொருள் இருக்கிறது. ‘பறையன்’,  ‘தீண்டாதான்’ என்ற சொல்லுக்கு நாம் என்ன பொருள் கொள்ளுகிறோமோ, அப்பொருளே தென்னாப்பிரிக்காவில் ‘கூலி’ என்பதற்குக் கொடுக்கப்படுகிறது. ‘கூலி’களுக்குக் குடியிருக்கக் கொடுக்கப் பட்டிருக்கும் இடங்கள் ‘கூலி ஒதுக்கலிடங்கள்’ என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓர் ஒதுக்கலிடம் ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கிறது. ஆனால், ஒதுக்கலிடமுள்ள மற்ற இடங்களில் இந்தியருக்குச் சாசுவதக் குடிவார உரிமை இருப்பது போல இங்கே இல்லை. ஜோகன்னஸ்பர்க்கில் அப்பகுதியில் இந்தியர், மனைகளை 99 வருடக் குத்தகைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்பகுதியில் ஜனத்தொகை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல விஸ்தீரணம் அதிகரிக்கப்படவில்லை. ஆகையால், அவ்விடத்தில் மக்கள் நெருக்கமாகவே வசிக்க நேர்ந்தது. அரைகுறையான வகையில் கக்கூசுகளைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததைத் தவிர முனிசிபாலிடி அப் பகுதியில் வேறு எந்தவிதமான சுகாதார வசதியும் செய்யவே இல்லை. அங்கே நல்ல பாட்டைகளோ, விளக்குகளோ இல்லை. அங்கே குடியிருந்தவர்களின் நலனிலேயே இது சிரத்தையில்லாமல் இருந்தபோது, அப் பகுதியின் சுகாதாரத்தை அது பாதுகாக்கும் என்பதற்கு இடமே இல்லை. அங்கே குடியிருந்தவர்களோ, நகரசபையின் சுகாதார விதிகளையும் சுகாதாரத்தையும் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகையால், நகரசபையின் உதவி அல்லது கண்காணிப்பு இல்லாமல் அவர்கள் எதுவும் செய்துகொள்ள முடியாது. தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர், ராபின்ஸன் குருஸோக்களாக இருந்திருப்பார்களாயின், அவர்கள் கதை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், ராபின்ஸன் குருஸோக்களாகக் குடியேறிய நாடு ஒன்றேனும் உலகில் இருப்பதாக நாம் அறியோம். பொதுவாகச் செல்வத்தையும் வர்த்தகத்தையும் தேடிக்கொண்டே மக்கள் வெளிநாடுகளில் போய்க் குடியேறுகிறார்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியரில் பெரும்பாலானவர்கள், ஒன்றும் தெரியாத பரம ஏழை விவசாயிகள். ஆகையால், அவர்களுக்கு அளிக்க வேண்டிய எல்லாக் கவனமும் பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவை. அவர்களைத் தொடர்ந்து அங்கே சென்ற வியாபாரிகளும், படித்த இந்தியரும் மிகச் சிலரே.

நகரசபையின் அக்கிரமமான அசிரத்தையும், அப் பகுதியில் குடியிருந்த இந்தியரின் அறியாமையும் சேர்ந்து அவர்கள் குடியிருந்த இடத்தை முற்றும் சுகாதாரக் கேடானதாக்கி விட்டன. அப்பகுதியின் நிலைமை அபிவிருத்தியடையும்படி நகரசபை ஒன்றுமே செய்யாமல் இருந்ததோடு, தங்களுடைய சொந்த அசிரத்தையினால் ஏற்பட்ட சுகாதாரக் கேட்டை, அப்பகுதியையே அழித்து விடுவதற்கு ஒரு சாக்காகவும் உபயோகித்துக்கொண்டது. அந்த இடத்தில் குடியிருக்கும் உரிமையை இந்தியரிடமிருந்து பறித்துவிட உள்ளூர்ச் சட்டசபையின் அதிகாரத்தையும் பெற்றது. நான் ஜோகன்னஸ்பர்க்கில் குடியேறியபோது அங்கே இருந்த நிலைமை இதுவே.

     குடியேறியிருந்தவர்களுக்குத் தங்கள் சொந்த நிலத்தில் சொத்துரிமை இருந்ததால் இயற்கையாகவே நஷ்டஈடு பெற வேண்டியவர்களாகின்றனர். சில ஆர்ஜித வழக்குகளை விசாரிப்பதற்கு என்று ஒரு விசேட நீதிமன்றம் அமைத்தார்கள். நகரசபை கொடுக்க முன்வரும் தொகையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத இந்தியருக்கு அந்த நீதிமன்றத்திடம் அப்பீல் செய்துகொள்ள உரிமை உண்டு. அந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் தொகை, நகரசபை கொடுக்க முன்வந்த தொகையைவிட அதிகமானதாக இருந்தால் நகரசபையே செலவுத் தொகையையும் கொடுக்க வேண்டும்.

     அங்கே குடியிருந்தவர்களான இந்தியரில் பெரும்பாலானவர்கள் என்னையே சட்ட ஆலோசகராக வைத்துக் கொண்டனர். இந்த வழக்குகளின் மூலம் பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால், அவர்களிடம் ஒன்று கூறினேன். வழக்கில் வெற்றி பெற்றால், நீதிமன்றம் என்ன செலவுத் தொகைக்குத் தீர்ப்புச் செய்கிறதோ அதுவே எனக்குப் போதும்; வழக்கின் முடிவு எதுவானாலும் ஒவ்வொரு வழக்குக்கும் எனக்குப் பத்து பவுன் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் இவ்விதம் கொடுக்கும் பணத்தில் ஒரு பாதியை ஏழைகளுக்கு வைத்திய சாலையோ அல்லது அத்தகைய வேறு ஸ்தாபனமோ ஆரம்பிக்க ஒதுக்கி வைத்துவிடப் போகிறேன் என்பதையும் அவர்களிடம் சொன்னேன். இயல்பாகவே இது அவர்கள் எல்லோருக்கும் திருப்தியளித்தது.

     எழுபது வழக்குகளில் ஒன்றுதான் தோற்றுப் போயிற்று. ஆகவே, பெருந்தொகையே கட்டணமாகக் கிடைத்தது. வந்ததையெல்லாம் விடாமல் விழுங்கிக் கொண்டிருக்க ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகை இருந்தது. இதுவரையில் அது 1600 பவுன் விழுங்கியிருக்கிறது என்பது எனக்கு ஞாபகம். இந்த வழக்குகளுக்காக நான் கஷ்டப்பட்டு வேலை செய்தேன். கட்சிக்காரர்கள் எப்பொழுதும் என்னைச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களில் பெரும்பான்மையோர், முன்னால் பீகாரிலிருந்தும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் வந்தவர்கள். தங்களுடைய குறைகளுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளுவதற்கென்று, சுயேச்சையான இந்திய வர்த்தகர்களின் சங்கத்தின் தொடர்பு இல்லாமல், தனியாக ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டு இருந்தார்கள். இவர்களில் சிலர், கபடமில்லாதவர்கள்; தாராள குணம் உள்ளவர்கள்; உயர்ந்த ஒழுக்கம் உள்ளவர்கள். இவர்களுடைய தலைவர்கள், சங்கத் தலைவரான ஸ்ரீ ஜெயராம் சிங்கும், சங்கத் தலைவரைப் போன்றே இருந்த ஸ்ரீ பத்ரியும் ஆவார். அவர்கள் இருவரும் இப்பொழுது காலமாகி விட்டனர். அவர்கள் எனக்குப் பெரும் அளவு உதவியாக இருந்தார்கள். ஸ்ரீ பத்ரி என்னுடன் நெருங்கிப் பழகியதோடு சத்தியாக்கிரகத்திலும் முக்கியமான பங்கு எடுத்துக்கொண்டார். அவர்களையும் மற்ற நண்பர்களையும் கொண்டு, வடக்கிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் வந்து குடியேறி இருந்த அநேக இந்தியருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வெறும் சட்ட ஆலோசகர் என்பதைவிட அவர்களுக்கு நான் சகோதரனாகவே ஆகிவிட்டேன். மறைவாகவும், பகிரங்கமாகவும் அவர்கள் அனுபவித்த துக்கங்களிலும் கஷ்டங்களிலும் நானும் பங்கு கொண்டேன்.

அங்கே இந்தியர் என்னை எப்படி அழைத்து வந்தார்கள் என்பதை அறிவது கொஞ்சம் ருசிகரமானதாகவே இருக்கக்கூடும். காந்தி என்று என்னைக் கூப்பிட அப்துல்லா சேத் மறுத்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக யாரும் என்னை ‘சாஹேப்’ (துரை) என்று கருதவோ, அப்படி அழைத்து என்னை அவமதிக்கவோ இல்லை. அப்துல்லா சேத் சிறந்த சொல் ஒன்றைக் கண்டுபிடித்தார். ‘பாய்’, அதாவது சகோதரர் என்பது தான் அச்சொல். மற்றவர்களும் அதையே பின்பற்றி, நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்துவிடும் வரையில் என்னை ‘பாய்’ என்றே கூப்பிட்டு வந்தார்கள். முன்னால் ஒப்பந்தத் தொழிலாளராக இருந்த இந்தியர் இப்பெயரால் என்னை அழைத்தபோது அதில் இனிமையானதொரு மணம் கமழ்ந்தது.

$$$

15. கறுப்பு பிளேக் -1

     இந்தியர் குடியிருந்த ஒதுக்கல் இடங்களை நகரசபை வாங்கிக் கொண்டதுமே அவ்விடத்திலிருந்து இந்தியர் அகற்றப்பட்டு விடவில்லை. அவர்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னால் அவர்களுக்கு ஏற்றதான புது இடங்களைத் தேட வேண்டியிருந்தது. நகரசபை இதைச் சுலபத்தில் செய்து விட முடியாமல் இருந்ததனால், அந்த ஆபாசப் பகுதியிலேயே இந்தியர்கள் இருந்து கஷ்டப்பட வேண்டியதாயிற்று. முன்னால் இருந்ததைவிட அவர்கள் நிலைமை இப்போது மிகவும் மோசமானதாக இருந்தது என்பதுதான் இதில் வித்தியாசம். சொந்தக்காரர்கள் என்று இல்லாது போய்விட்டதால் அவர்கள் நகரசபையின் இடத்தில் வாடகைக்கு இருப்பவர்களாயினர். இதன் பலனாக அவர்களுடைய சுற்றுப்புறங்களெல்லாம் முன்னால் இருந்ததைவிட அதிக ஆபாசமாயின. அவர்களே சொந்தக்காரர்களாக இருந்தபோது சட்டத்திற்குப் பயந்துகொண்டாவது. ஏதோ ஒரு வகையில் சூழ்நிலை சுத்தமாக இருக்கும்படி செய்ய வேண்டியிருந்தது. நகரசபைக்கோ அப்படிப்பட்ட பயம் எதுவும் இல்லை! அங்கே குடியிருந்தோர் தொகை அதிகமாயிற்று. அதோடு ஆபாசமும் ஒழுங்கீனமும் பெருகின.

நிலைமை இவ்வாறு இருந்து வந்ததைக் குறித்து இந்தியர் கொதிப்படைந்திருந்த சமயத்தில் அங்கே திடீரென்று கறுப்பு பிளேக் நோய் பரவியது. இந்த நோயை  ‘நிமோனிக் பிளேக்’ என்றும் கூறுவது உண்டு. புபோனிக் பிளேக்கைவிட இது மகா பயங்கரமானதும் பிராணாபாயமானதுமாகும்.

     இந்த நோய் பரவுவதற்குக் காரணமாக இருந்த இடம், அதிர்ஷ்டவசமாக இந்தியர் குடியிருப்பு இடமன்று. ஜோகன்னஸ்பர்க்குப் பக்கத்தில் இருந்த தங்கச் சுரங்கம் ஒன்றிலிருந்தே இந்த நோய் பரவியது. அச்சுரங்கத்தின் தொழிலாளர்கள் பெரும்பாலும் நீக்ரோக்கள். அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள், அவர்களுடைய வெள்ளைக்கார எஜமானர்களே. அங்கே இச் சுரங்க சம்பந்தமான வேலையில் சில இந்தியர்களும் இருந்தனர். இவர்களில் இருபத்து மூன்று பேருக்கு இந் நோய் கண்டது. ஒரு நாள் மாலை இந்நோயினால் கடுமையாகப் பீடிக்கப்பட்ட இவர்கள், இந்தியர் குடியிருப்புப் பகுதியிலிருந்த தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ‘இந்தியன் ஒப்பீனியனு’க்கு அப்பொழுது சந்தா சேர்த்துக் கொண்டிருந்த ‘ஸ்ரீ மதன்ஜித்’ அப்பொழுது அப் பகுதிக்குப் போயிருந்தார். அவர் அச்சம் என்பதை ஒரு சிறிதும் அறியாதவர். கொள்ளை நோய்க்குப் பலியான இத் துர்ப்பாக்கியர்களைப் பார்த்ததும் அவர் உள்ளம் பதறியது. பென்ஸிலினால் எழுதி எனக்குப் பின்வருமாறு ஒரு குறிப்பு அனுப்பினார்: “திடீரென்று கறுப்பு பிளேக் நோய் கண்டிருக்கிறது. தாங்கள் உடனே வந்து அவசரமாக நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாதுபோனால் மகா மோசமான விளைவுகளுக்கு நாம் தயாராக வேண்டியிருக்கும். தயவுசெய்து உடனே வாருங்கள்.”

     காலியாக இருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்து ‘ஸ்ரீ மதன்ஜித்’ தைரியமாகத் திறந்தார். நோயால் பீடிக்கப்பட்டிருந்தவர்களையெல்லாம் அவ் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தார். அப்பகுதிக்கு நான் உடனே சைக்கிளில் போனேன். எந்தச் சந்தர்ப்பத்தை முன்னிட்டு அந்த வீட்டை எடுத்துக்கொள்ள நேரிட்டது என்பதைக் குறித்து நகரசபை நிர்வாகிக்கு உடனே எழுதினேன்.

     இச் செய்தியை அறிந்ததும் ஜோகன்னஸ்பர்க்கில் வைத்தியத் தொழில் செய்துவந்த டாக்டர் வில்லியம் காட்பிரே உதவிக்கு விரைந்து வந்து சேர்ந்தார். நோயாளிகளுக்கு அவரே டாக்டரும் தாதியுமானார். ஆனால், இருபத்து மூன்று நோயாளிகளை நாங்கள் மூன்று பேர் கவனித்துக் கொண்டுவிட முடியாது.

     ஒருவருடைய உள்ளம் மாத்திரம் பரிசுத்தமானதாக இருக்குமாயின், துன்பம் வந்ததுமே அதைச் சமாளிக்க உடனே ஆட்களும் கிடைப்பார்கள்; சாதனங்களும் கிட்டும் என்பது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை. அச் சமயம் என் அலுவலகத்தில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் மூவரின் பெயர்கள் ஸ்ரீ கல்யாண்தாஸ், மாணிக்கலால், குணவந்தராய் என்பவையாகும். மற்றொருவரின் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை. கல்யாண்தாஸை அவர் தந்தை என்னிடம் ஒப்படைத்திருந்தார். பரோபகார குணத்திலும், சொன்ன மாத்திரத்தில் சொன்னதை மனமுவந்து பணிவுடன் செய்வதிலும் கல்யாண்தாஸைவிடச் சிறந்தவர்கள் யாரையும் நான் தென் ஆப்பிரிக்காவில் கண்டதில்லை. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அப்பொழுது மணமாகவில்லை. எவ்வளவுதான் மகத்தானவை ஆயினும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய கடமைகளை அவர்மீது சுமத்த நான் தயங்கவே இல்லை. மாணிக்கலால், ஜோகன்னஸ்பர்க்கில் எனக்குக் கிடைத்தார். இவருக்கும் மணமாகவில்லை என்றுதான் எனக்கு ஞாபகம். ஆகவே, அந்த நால்வரையும் – அவர்களைக் குமாஸ்தாக்கள் என்று சொன்னாலும் சரி; சக ஊழியர்கள் அல்லது என் புதல்வர்கள் என்று சொன்னாலும் சரி – தியாகம் செய்துவிடத் தீர்மானித்தேன். கல்யாண்தாஸைக் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. மற்றவர்களும் – அவர்களிடம் நான் கூறியதுமே – சம்மதித்து விட்டனர். “நீங்கள் எங்கே இருப்பீர்களோ அங்கே நாங்களும் இருப்போம்” என்பதே அவர்களுடைய சுருக்கமான, இனிமையான பதில்.

 ஸ்ரீ ரிச்சின் குடும்பம் பெரியது. அவரும் இதில் குதித்துவிடத் தயாராக இருந்தார். ஆனால், அவரை நான் தடுத்தேன். அவரை இந்த ஆபத்திற்கு உட்படுத்த எனக்கு மனம் வரவில்லை. ஆபத்துப் பிராந்தியத்திற்கு வெளியே இருந்த வேலைகளை அவர் கவனித்துக் கொண்டார்.

     கண்விழித்துப் பணிவிடை செய்த அன்றிரவு மிகப் பயங்கரமான இரவு. அதற்கு முன்னால் எத்தனையோ நோயாளிகளுக்கு நான் பணிவிடை செய்திருக்கிறேன். ஆனால், கறுப்பு பிளேக் நோய் கண்டவர்களில் யாருக்கும் நான் பணிவிடை செய்ததே இல்லை. டாக்டர் காட்பிரேயின் தீரம் மற்றவர்களையும் தொத்திக்கொண்டது. பணிவிடை செய்வது என்பது அதிகமாகத் தேவைப்படவில்லை. அப்போதைக்கப்போது அவர்களுக்கு மருந்து கொடுத்துவருவது, நோயாளிகளின் தேவைகளைக் கவனிப்பது, அவர்களுடைய படுக்கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, அவர்கள் உற்சாகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவது ஆகியவையே நாங்கள் செய்ய வேண்டியிருந்தவை.

வேலை செய்த இளைஞர்கள் காட்டிய தளராத உற்சாகத்தையும் பயமின்மையையும் கண்டு, அளவு கடந்த ஆனந்தமடைந்தேன். டாக்டர் காட்பிரேயின் தைரியத்தையும், அனுபவம் மிக்கவரான ஸ்ரீ மதன்ஜித்தின் தீரத்தையும், யாரும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், இன்னும் வயது வராதவர்களான இந்த இளைஞர்களின் உற்சாகத்தை என்னவென்று கூறுவது?

     அன்றிரவு எல்லா நோயாளிகளையும் காப்பாற்றிவிட்டோம் என்பதுதான் எனக்கு ஞாபகம். ஆனால், அச்சம்பவம் – அதிலுள்ள பரிதாபம் ஒரு புறமிருக்க – உள்ளத்தைக் கவரும் முக்கியத்துவம் உடையதாகும். எனக்கு அது பாரமார்த்திக மதிப்பு வாய்ந்தது. ஆகையால், அதை விவரிக்க மேலும் இரு அத்தியாயங்களை நான் எழுத வேண்டும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s