-பத்மன்

கொன்றைவேந்தன்- 86
ஊக்கமுடைமை ஆக்கத்திற்கழகு
விளக்கம்:
தளராத உறுதியோடு முயற்சி செய்வதே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்கிறார் ஔவையார்.
ஊக்கம் என்றால் தூண்டுதல், மன எழுச்சி, இடைவிடா முயற்சி, தன்னம்பிக்கை, உயர்வான எண்ணம், வலிமை எனப் பொருள். ஆக்கம் என்பதற்கு படைப்பு, வளர்ச்சி, உற்பத்தி, செல்வம், உயர்வு, முன்னேற்றம் எனப் பல பொருள் உண்டு.
ஒரு செயலில் உற்சாகமாக இறங்குதல், செயலில் சந்திக்கும் இடையூறுகளை மனவலிமையோடு தாங்கிக் கொள்ளுதல், தோல்விகள் வந்தாலும் சோர்ந்து போய்விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தல், இலக்கை அடையும் வரை தொய்வின்றி உழைத்தல், வெற்றிக்குப் பின்னரும் ஓய்ந்து விடாமல் புதுப் புது முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுதல் ஆகியவை ஊக்கம் உடைமை ஆகும்.
அவ்விதம் ஊக்கத்தோடு செயலில் ஈடுபடுவர்களுக்கு வளர்ச்சி வந்து சேரும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். முன்னேற்றத்தின் வாசல்கள் அடுத்தடுத்து திறக்கும்.
இதைத்தான் ஆக்கத்தை உருவாக்கும் சிறப்பையும், வளர்ச்சி என்ற பெருமையையும் தருவது ஊக்கமே என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஔவையார்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையா னுழை
-என்று இதனையே திருக்குறள் (594) கூறும். அதாவது ஊக்கம் உடையவனின் முகவரியைத் தேடிப்பிடித்து வளர்ச்சி வந்துசேரும் என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். மற்றொரு குறளில் (593)
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்
-என்றும் உரைத்துள்ளார். ஊக்கம் உடையவர் தான் தேடிவைத்த செல்வம் பறிபோனாலும் துயரப்பட்டு புலம்ப மாட்டார் என்கிறார். ஏனெனில் உற்சாகத்தோடு புதிய முயற்சிகளில் உறுதியாக ஈடுபடும் இயல்புடையவர் என்பதால் இழந்தவை திரும்பி வருவதோடு, புதிய ஆக்கங்களும் அவர் வீட்டு வாசல் கதவுகளை வந்து தட்டும்.
இவற்றை உட்பொருளாகக் கொண்டுதான், ‘ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு’ என மொழிந்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 87
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
விளக்கம்:
தூய்மையான உள்ளம் கொண்டவர்களுக்கு வஞ்சகத்தனமான எண்ணம் இருக்காது என்கிறார் ஔவையார்.
வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம். அழுக்குச் சேர்ந்த துணிகளைத் துவைத்து கறை, அழுக்குகளை நீக்குவதை ‘வெளுத்தல்’ என்கிறோம். சுவர்களில் படிந்த கறைகளை அகற்ற வெள்ளை அடிக்கிறோம். பல வகைகளிலும் வெண்மை, வெள்ளை என்பது தூய்மையைச் சுட்டுகிறது. அவ்வகையில் வெள்ளை என்பது இங்கே கள்ளம் கபடமற்ற மனத்தைக் குறிக்கிறது.
கள்ளம் என்பதற்கு திருட்டுத்தனம், வஞ்சக எண்ணம், வஞ்சனை, ரகசியக் குற்றம், மறைவான நடத்தை எனப் பொருள்கள் உண்டு. குழந்தையைப் போல சூதுவாது இல்லாதவர்கள், இறை உணர்வில் தோய்ந்து உள்ளத் தூய்மை பெற்றவர்கள் ஆகியோரே வெள்ளை மனத்தினர். அவர்களது மனது சுத்தமாக இருப்பதால், அவர்களுக்கு கறை, அழுக்கு போன்ற வஞ்சக எண்ணங்கள் தோன்றாது.
அடுத்தவரை ஏமாற்றுதல், திருடுதல், பொய் சொல்லுதல், நம்பிக்கை துரோகம் இழைத்தல், வஞ்சித்தல், பிறரைத் துன்புறுத்தல், கெடுதி நினைத்தல், மோசடி செய்தல், பழி வாங்குதல், கையூட்டுப் பெறுதல், ஊழல் புரிதல் போன்றவை கள்ளச் சிந்தனைகள் ஆகும்.
குழந்தை போன்ற மனது இருப்பவர்களுக்கு இயல்பிலேயே தீய சிந்தனைகள் தோன்றாது. இறை நினைப்பிலும் ஆன்மிக எண்ணத்திலும் ஊறி மனத்தைப் பக்குவப்படுத்தி வெளுத்தவர்களுக்கும் கெடுதியான எண்ணம் தோன்றாது.
இதனைத்தான் ‘வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை’ என்று நவின்றுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 88
வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை
விளக்கம்:
அனைத்து அதிகாரமும் வல்லமையும் உடையவன் சீற்றம் கொண்டால், அதிலிருந்து காப்பாற்றுவதற்கு யாரும் துணைவர மாட்டார்கள் என்கிறார் ஔவையார்.
வேந்தன் என்ற சொல்லுக்கு அரசன், ஆட்சியாளன், இந்திரன் உள்ளிட்ட பொருள்கள் உள்ளன. இந்திரன் என்ற சொல்லுக்கே அரசன், தலைவன் என்றுதான் பொருள். இடி ஆயுதம் (வஜ்ராயுதம்) ஏந்தியிருப்பவனான தேவர்களின் அரசன் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டான். வேதத்தைப் போலவே சங்க இலக்கியத்திலும் இந்திரன், மருத நிலக் கடவுளாக வணங்கப்பட்டான். இந்திரனுக்கு வேந்தன் எனச் சிறப்புப் பெயரும் உண்டு. ஆக, வேந்தன் என்ற சொல் அரசனைக் குறிப்பதோடு இறைவனுக்கும் ஆகி வருகிறது.
கருணாமூர்த்தியாக இருந்தாலும் தேவையானபோது கடுமையைக் காட்டும் அந்த இறைவனுக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களோடு சர்வ வல்லமையும் உண்டு. அதைப் போன்ற குணம் கொண்டு மக்களைக் காப்பாற்றும் அரசனை உயர்வு நவிற்சியாக ‘மக்கட்கு இறையென வைக்கப்படும்’ என்றார் திருவள்ளுவர்.
அரசனை இறைவனைப்போல கருதுவதும், அரசு அதிகாரத்தை இறையாண்மை எனக் கூறுவதும் இதனால்தான்.
சீற்றம் என்பது சாதாரண கோபமோ, ஆத்திரமோ அல்ல. தவறுகளும் தீமைகளும் மலிந்துவிட்ட போது, பொறுமை எல்லை கடந்துபோய், அவற்றை அடியோடு களைந்தெறிவதற்காகத் தோன்றும் ஆவேசமே சீற்றம்.
ஆம்துணை என்றால் ஆகும் துணை, அதாவது ஆகிவரும் உதவி என்று பொருள். அதிகாரங்களை வைத்திருப்பதோடு வல்லமையும் கொண்டிருக்கும் அரசனுக்குச் சீற்றம் வந்தால், தவறிழைத்தவன் அழிந்துபோவான். அச்சத்தின் காரணமாக அவனுக்கு உதவி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். குற்றத்துக்கான தண்டனை இது என்பதால் அவன் சார்பாக பேசக்கூட மாட்டார்கள். மண்ணுலகில் சிறு பகுதியை ஆளும் அரசனாகிய வேந்தனுக்குச் சீற்றம் வந்தாலே யாரும் துணைக்கு வர மாட்டார்கள் என்றால், அனைத்துலகையும் ஆளுகின்ற ஆண்டவனாகிய அந்த வேந்தனுக்குச் சீற்றம் வந்தால் யார்தான் உதவி செய்ய முடியும்?
எனவே அரசனுக்கோ, ஆண்டவனுக்கோ சீற்றம் வரும் வகையிலான குற்றங்களை யாரும் செய்யக் கூடாது. செய்தால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. மனிதனாகிய அரசனுக்கு உடனடியாகச் சீற்றம் வந்துவிடும். ஆனால் தெய்வத்துக்குச் சீற்றம் விரைவில் வந்துவிடாது. மிகவும் பொறுமையாக இருந்து, உலகில் குற்றம் எல்லை கடந்து போகும்போது, சீற்றம் கொண்டு, உரிய வடிவில் நின்று இறைவன் கொல்வான். அப்போது ஏற்படும் அழிவைத் தடுக்க எதுவும் துணையாக இருக்க முடியாது.
இதனைத்தான் ‘வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை’ என்று எச்சரித்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 89
வைகல் தோறும் தெய்வம் தொழு
விளக்கம்:
தினந்தோறும் காலையில் தெய்வத்தை வணங்கு என்கிறார் ஔவையார்.
வைகல் என்பதற்கு நாள், அதிகாலை, வேளை ஆகிய பொருள்கள் உள்ளன. தெய்வம் என்றால் கடவுள். அறிவொளியாகவும், அனைத்தையும் ஆக்கி, காத்து, அழிக்கும் சக்தியாகவும் இருப்பது தெய்வம்.
தொழுதல் என்றால் வணங்குதல் என்று பொருள். நெஞ்சுக்கு நேராக கரங்களைக் குவித்து வணங்குதலும், விழுந்து (பணிந்து) வணங்குதலும் தொழுதல் ஆகும்.
‘நம்பு தம்பி, தெய்வம் உண்டு’ என்று சொன்ன பாரதியார் ‘அறிவே தெய்வம்’ என்றும் ‘தெய்வம் நீ என்றுணர்’ என்றும் விளக்கியுள்ளார். எல்லாவற்றிலும் உறைகின்ற இறை சக்தி நமக்குள்ளும் வீற்றிருக்கிறது. அதனை அறிந்துகொண்டு நல்வழிப்படுவதற்கே வழிபாடு. அதற்காகத்தான் பாரதி போற்றும் ஔவைப் பாட்டி நமக்கு, தெய்வம் தொழு எனக் கட்டளை இடுகிறார்.
தெய்வத்தை அறிந்துகொள்வதும், தனக்குள்ளே தெய்வத்தை உணர்வதும் ஓர் அனுபூதி. தொடர் பயிற்சியின் மூலமே அது சாத்தியமாகும். அதற்காகத்தான் தினமும் தெய்வத்தைத் தொழ வேண்டும். மேலும் அறிவின் மூலம் தெய்வத்தை நமக்குள்ளே அறிந்துகொண்டாலும் அகங்காரத்தால், எங்கும் வியாபித்திருக்கும் அதன் ஆற்றலை அறியாமல், மதியாமல் போய்விடுவோம். அது சாதகனுக்கு பாதகம். ஆகையால்தான், தான் அந்தத் தெய்வத்தின் ஒரு சிறு துளி என்பதை நினைவில் வைத்திருப்பதற்காகத்தான் தினந்தோறும் வணங்க வேண்டும்.
வைகலுக்கு வேளை என்றும் பொருள் இருப்பதால் அதிகாலை, நண்பகல், மாலை ஆகிய மூவேளைகளிலும் தெய்வத்தைத் தொழுதல் நலம். இறைசக்தியால் நடத்தப்படுவதான தோன்றுதல், இயங்குதல், மறைதல் ஆகிய மூன்றையும் குறிப்பதாக இம்மூவேளைகள் அமைந்துள்ளன. ஆகையாலும் தினந்தோறும் முக்காலமும் தெய்வத்தைத் தொழ வேண்டும்.
இதனைத்தான் சுருக்கமாக, ‘வைகல் தோறும் தெய்வம் தொழு’ என்று கூறியுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 90
ஒத்த இடத்தில் நித்திரை கொள்
விளக்கம்:
நமக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய இடத்தில் படுத்து உறங்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.
ஒத்த என்றால் ஏற்ற, தகுந்த, பொருத்தமான, சரிசமமான, நேரான எனப் பல பொருள் உண்டு.
நித்திரை என்பது உறக்கம், ஓய்வு எனப் பொருள்படும். உடலுக்குத் தேவைப்படும் ஓய்வே உறக்கம். முக்கியமாக இரவு நேரத்திலே உடலின் செயல்களை நிறுத்தி ஓய்வு கொடுத்தல் அதாவது நித்திரை கொள்ளுதல் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களுக்கு இயற்கையின் விதி. இவ்வாறு உறங்கி ஓய்வெடுத்து விழிக்கும்போதுதான் உடலும் மனமும் மூளையும் புத்துணர்வு பெறுகின்றன.
எங்கே படுத்தாலும் உடனே அயர்ந்து தூங்கிவிடுதல் என்பது ஒரு வரம். அது எல்லோருக்கும் வாய்த்து விடாது. அதேநேரத்தில் சமச்சீரற்ற தரை, மேடுபள்ளமான இடம், நிம்மதியாகத் தூங்க விடாமல் ஓசை எழும்பும் இடம், நல்ல காற்றோட்டம் இல்லாத இடம் போன்ற இடங்களில் உறங்கினால் யாருக்குமே நிம்மதியான நித்திரை வராது. இடையூறுடன் கூடிய உறக்கம் எதிர்மறை விளைவைத் தந்துவிடும். புத்துணர்வுக்குப் பதிலாக பகலிலும் சோம்பிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்திவிடும். ஆகையால்தான் நமக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய இடத்தில் உறங்க வேண்டும் என்கிறார் ஔவையார்.
சிலருக்கு பழக்கப்பட்ட இடத்தில்தான் உறக்கம் வரும், புது இடத்தில் வராது என்பார்கள். அதற்காகத் தூங்காமல் இருக்கலாமா? பழகிய இடம் என்பது ஒரு மனப்பாங்கு, அவ்வளவே. புது இடமாக இருந்தாலும் சமதரையான, காற்றோட்டமுள்ள, இரைச்சலற்ற இடத்தில் படுத்தால் நிம்மதியான உறக்கம் வரும். இதையும் கருத்தில் கொண்டே ஒத்த இடத்தில் நித்திரை கொள் என்று உரைத்துள்ளார் ஔவையார்.
இதற்கு வேறு ஒரு கோணத்திலும் விளக்கம் காணலாம். நித்திரை என்பது மிக அமைதியான மனநிலையையும் குறிக்கும். வேறு எவ்வித நினைப்பும் இன்றி மனதை ஓரிடத்தில் குவித்து, அதிலே லயிப்பது நித்திரை. ஒத்த இடம் என்பது இறை நினைப்பு. இறை நினைப்பில் ஆழ்ந்து கிடக்கப் பழகிக் கொள் என்ற ஞானோபதேசத்தையும் ‘ஒத்த இடத்தில் நித்திரை கொள்’ என்ற வாசகத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 91
ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
விளக்கம்:
ஓதுதல் இல்லாதவர்களுக்கு நல்லுணர்வும் ஒழுக்கமும் இருக்காது என அறுதியிட்டுச் சொல்கிறார் ஔவையார்.
ஓதல் என்பதற்கு பயிலுதல், பிறருக்கு போதித்தல், எடுத்துச் சொல்லுதல், மந்திரம் ஜெபித்தல், மனப்பாடம் செய்தல் ஆகிய பொருள்கள் உள்ளன. கல்விதான் அறிவுக் கண்ணைத் திறந்து, நல்வழியைக் காட்டுகிறது.
ஆகையால் நன்கு கல்வி கல்லாத ஒருவரிடம் நல்ல உணர்வுகளோடு ஒழுக்கமும் இருக்காது என இதற்குப் பொருள் கொள்ளலாம்.
அதேநேரத்தில் ஓதல் என்பது வேதத்தோடு தொடர்புடைய சிறப்புச் சொல். வேதம் கற்றல், வேதத்தைப் பிறருக்குச் சொல்லித் தருதல் ஆகியவற்றுக்கு ஓதல் என்று பெயர். வேதம் ஓதல் என்பது வெறுமனே கற்றுக் கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், வேதச் சொற்களை மனப்பாடம் செய்தல், வேதக் கருத்துகளை விளக்கத்தோடு நன்கு புரிந்து கொள்ளுதல், மந்திரம் ஜெபித்தல், தான் கற்றதைப் பிறரின் நலனுக்காகப் பயன்படுத்துதல், பிறருக்கும் புரியும் வகையில் சொல்லிக் கொடுத்தல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.
வேதத்தை குருட்டு மனப்பாடம் செய்வதற்குப் பெயர் ஓதல் அல்ல. வேதத்தை இன்னார்தான் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்ற குருட்டு மனப்பான்மையும் ஓதல் அல்ல. ஏனெனில் அவ்வாறு செய்யும்போது, கருதும்போது வேதத்தின் அடிப்படை அடிபட்டுப் போகிறது.
அனைத்து மனிதர்கள் மாத்திரமல்ல, அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சுகமாக இருக்க வேண்டும், ஒரு துன்பமும் அடையக் கூடாது எனக் கூறுகிறது வேதம். ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ (அனைத்து உலகங்களும் நன்றாக இருக்க வேண்டும்), ‘ஸர்வே ஜனோ சுகினோ பவந்து’ (அனைத்து மனிதர்களும் நன்றாக இருக்க வேண்டும்), ‘ஸர்வே பவந்து சுகின:’ (அனைத்துமே நலமாக இருக்க வேண்டும்), ‘மா கச்சித் துக்கபாக் பவேத்’ (யாருமே, எதுவுமே துயரமடையக் கூடாது) ஆகிய மாபெரும் உன்னத வாக்கியங்கள் வேதத்தில் ஒலிக்கின்றன. இவற்றின் உட்பொருள் அறியாமல் படித்தல் ஓதல் அல்ல. இவற்றை ஒருசிலர் மட்டுமே அறிய வேண்டும் எனக் கருதுவதும் ஓதல் அல்ல.
அதேநேரத்தில் வேதம் ஓதுவதற்கு கடுமையான நியம நிஷ்டைகள் உள்ளன. யாராக இருந்தாலும் அவற்றைக் கடைபிடிக்க வேண்டும். அதேபோல
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
-என்று திருவள்ளுவர் (திருக்குறள்- 292) மொழிந்திருப்பதைப் போல, தீமையை அழிப்பதும் ஒருவகையில் நன்மையை உருவாக்குவதே ஆகும்.
ஆகையால்தான் வேதக் கடவுளர்கள் நன்மையை நல்கும் கருணையோடு தீமையை ஒழிக்கும் கடுமையோடும் விளங்குகிறார்கள். இதன் உட்பொருளை நாம் தெளிவாக உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு மிகச் சரியாகப் புரிந்துகொண்டு வேதம் ஓதப்படாததால்தான், பாரதம் பல்வேறு கீழ்மைக்கும் ஆளானது. ஓதல் என்பது வெறும் கோட்பாட்டை மாத்திரமல்ல, செயல்பாட்டையும் உள்ளடக்கியது.
நான்கு வேதங்களோடு ஆயுர் வேதம் (மருத்துவம்), தனுர் வேதம் (ஆயுதப் பயிற்சி) ஆகியவையும் வேதம் என்றே போற்றப்படுகின்றன.
தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாய்மொழி, திருமந்திரம், திருப்புகழ் போன்ற நம் தமிழ் ஞான நூல்களும் வேதங்களே.
திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற அறநூல்களைப் பொருளுணர்ந்து கற்றலும் வாழ்வில் கடைபிடித்தலும் ஓதலே.
ஆக, ஓதல் என்பதன் பொருள், பொருளுணர்ந்து பயிலுவதோடு செயல்பாட்டிலும் அதைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே. அவ்வாறில்லாவிடில் நமக்கு உரிய உணர்வோடு, ஒழுக்கமும் (நெறிசார்ந்த வாழ்வும்) அமையாது.
ஆக, அறிவைத் தருகின்ற கல்வியையும், அறிவின் உச்சமாகிய வேதத்தையும் (இதர ஞான, அறநூல்கள் உட்பட) ஓதாதவர்களிடம் உணர்வும் ஒழுக்கமும் இருக்காது. இதனைத்தான் ‘ஓதாதார்க்கில்லை உணர்வோடொழுக்கம்’ என்று பகர்ந்துள்ளார் ஔவையார்.
(குறிப்பு: வு,வூ, வொ, வோ ஆகியவற்றில் தொடங்கும் வகரச் சொற்கள் இல்லாததால், 85, 86, 90, 91 ஆகிய பாக்களில் முறையே உ, ஊ, ஒ, ஓ எனத் தொடங்கும் சொற்களை ஔவையார் பயன்படுத்தியுள்ளார்.)
இத்துடன் கொன்றைவேந்தன் விளக்கவுரை நிறைவடைகிறது.
(நிறைவு)
$$$
One thought on “கொன்றைவேந்தன் (86-91)”