-மகாகவி பாரதி
விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி காலமானபோது மகாகவி பாரதி எழுதிய இரங்கல் குறிப்பு இது. “நம்பிக்கைக்குப் பெயர் தாதாபாய் நெளரோஜி; அதற்கு மரணம் இல்லை. நம்பின காரியம் கைகூடும் என்ற வசனத்தை ஹிந்துக்கள் நம்பும்படியும் செய்வதற்காகத் தோன்றிய பெரியோர்களில் தாதாபாய் ஒருவர்” என்கிறார் பாரதி. தாதாபாய் மீதான அவரது கவிதையும் பொருத்தம் கருதி இங்கே மீண்டும் வெளியாகிறது.

4 ஜூன் 1917 பிங்கள ஆனி 21
தாதாபாய் நெளரோஜி ஜீவதசைமாறி ஆத்மதசை யடைந்து விட்டார். 92 வருஷம் இந்த உலக வெள்ளத்தி்லே எற்றுண்டு பயன் மாறிப் போன மண் தோணியைக் களைந்துபோய் விட்டார். அவருடைய புகழுடம்பிலிருந்து ஹிந்துஸ்தானத்தின் கார்யங்களை ஆத்ம ஸ்வரூபியாகி நடத்தி வருவார். “தாதாபாய் நெளரோஜி இறந்து போனார். தாதாபாய் நெளரோஜி நீடூழி வாழ்க.”
~
தாதாபாய் நெளரோஜி இறந்து போகவில்லை. அதனாலேயேதான் நீடூழி வாழ்கவென்று சொல்ல இடம் உண்டாகிறது. நம்பிக்கைக்குப் பெயர் தாதாபாய் நெளரோஜி; அதற்கு மரணம் இல்லை. நம்பின காரியம் கைகூடும் என்ற வசனத்தை ஹிந்துக்கள் நம்பும்படியும் செய்வதற்காகத் தோன்றிய பெரியோர்களில் தாதாபாய் ஒருவர். தன்னை மறந்து குற்றுயிரோடு கிடந்த ஹிந்து தேசம் மறுபடியும் உயிர் கொண்டு, ஸ்மரணைபெற்று வலிமை காட்டும் என்று தாதாபாய் ஒரு நாளா, இரண்டு நாளா, 70 வருஷம் இடைவிடாது நம்பினார்.
அவர் சாகுமுன்னே ஹிந்துஸ்தானம் பிழைத்துவிட்டது. ஹிந்துக்களுடைய சக்தி ஏறுவதைக் கண்ணாலே பார்த்த பிறகு தான் அந்தக் கிழவனாருடைய பிராணன் பிரிந்தது. ஹிந்துக்களுக்கு இந்தியாவில் அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று 70 வருஷங்களுக்கு முன்னே தாதாபாய் நெளரோஜி கண்டுபிடித்தார். 11 வருஷங்களுக்கு முன்னே கல்கத்தா காங்கிரஸ் சபையில் ஹிந்துக்களுக்கு ஸ்வராஜ்யம் வேண்டும் என்று தாதாபாய் முரசடித்தார். இந்தியா முழுவதும் அந்த வார்த்தை பரவி அசைக்க முடியாமல் நிலைபெற்றதைக் கொண்டபின் உயிர் துறந்தார்.
1905ம் வருஷத்தில் சென்னப்பட்டணத்தில் சுதேசமித்திரன் ஜி.சுப்ரமணிய அய்யர் என்னிடம் ஒரு நாள் தாதாபாய் நெளரோஜியின் 80-வது பிறந்த நாள் விசேஷம் கொண்டாட வேண்டும் என்று சொன்னார். “பார்லிமெண்ட் சபைக்கும், மந்திரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மூச்சு விடாமல் விண்ணப்பம் எழுதி தாதாபாய் ஒரு பயனும் அறியாமல் கிழத் தன்மை முற்றிக் கிடக்கிறார். இவருக்குப் பிறந்த நாள் கொண்டாடி நாம் என்ன பயன் பெறப் போகிறோம்?” என்று கேட்டேன்.
அப்போது ஜி.சுப்ரமண்ய அய்யர் சொன்னார்:
“தாதாபாய் உறுதியுடைய மனிதன். அவர் நினைத்த காரியங்கள் கடைசிவரை ஈடேறத்தான் செய்யும். ஹிந்து ஜனங்கள் பசியாலும் பிணியாலும் அழிந்து போகாமல் காக்கவேண்டும் என்றும் அதற்கு ஆங்கிலேயர் நமக்குத் தன்னாட்சி கொடுப்பதே உபாயம் என்றும் தாதாபாய் நெளரோஜி சொல்லிக் கொடுத்தார். நமக்கெல்லாம் தேச பக்தி அவர் கொடுத்த பிச்சை. அவரை நாம் ஆசார்யராகக் கொண்டாட வேண்டும்” என்று சொன்னார்.
பல வருஷங்கள் கடந்தன. இன்று தாதாபாய் நெளரோஜியை உயிர் பெற்ற ஹிந்துஸ்தானம் ஆசாரிய ஸ்தானத்தில் கொண்டாடி ஊரூராகப் புகழ்ச்சி பேசுவதைக் காணும்போது ஜி.சுப்ரமண்ய அய்யர் போட்ட மதிப்பு சரியென்று விளங்குகிறது. வைஸ்ராய்களும் கவர்னர்களும் இப்போது நெளரோஜிக்குப் பெருமை சொல்லுகிறார்கள். உயிரோடிருக்கும்போதே அவரை ராஜாங்கத்தார் மிகவும் மேன்மைபடுத்தி உபசரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஸ்வராஜ்யக் கொள்கைக்கு மேன்மையும் வெற்றியும் உண்டென்பதை தாதாபாய் பல விதங்களிலே காண்பித்தார்.
தாதாபாய் நெளரோஜியினுடைய விண்ணப்ப உபாயம் நமக்குக் கைகூடி வருமோ என்பது ஒரு சந்தேகம். நாமே பல விண்ணப்பங்கள் ராஜாங்கத்தாருக்கு எழுதிப் பயனை இதுவரை பெறாமல் இன்றும் எதிர்பார்த்த நிலைமையில் இருக்கிறோம். நம்முடைய விண்ணப்பங்களை அதிகாரிகள் உடனுக்குடனே கவனித்தால் நமக்கும் நல்லது; அவர்களுக்கும் நல்லது. ஜனங்களுக்குள்ளே அதிருப்தி பரவாமல் நம்முடைய நோக்கம் நிறைவேறும். தாதாபாய் போன்ற ஸ்வராஜ்யத் தலைவர்களிடம் அதிகாரிகள் நேருக்கு நேராக மந்திராலோசனை செய்தால் நல்லது. நம்மிடத்திலே தோன்றியிருக்கும் புதிய சக்தியை அதிகாரிகள் கண் சிறந்து பார்க்காமல் புறக்கணித்திருப்பது தந்திர சாஸ்திரத்துக்குப் பொருந்திய செய்கையன்று.
தாதாபாய் தெய்வ பக்தியுடையவர். அதனாலே தான் நான் அவருக்கு ௸ புகழ்ச்சியுரை எழுதத் துணிந்தேன். ராஜ்ய விஷயங்களிலே கலந்து காங்கிரஸ் சபைக்குப் போன மாத்திரத்திலேயே ஒருவன் மதிப்புக்கிடமாக மாட்டான். தெய்வ பக்தியை மூலபலமாகக் கொண்டதனாலேயே தாதாபாய் கார்யஸித்தி பெற்றார். ஆதலால் பக்தியே தாரகம். ஒவ்வொருவனும் தெய்வ பக்தி பண்ணலாம். வியாபாரி, தச்சன், அம்பட்டன், ராஜா, மந்திரி, பிராமணன், பறையன் எல்லோரும் தெய்வபக்தியாலே மேன்மை பெறுவார். எந்தத் தொழிலும் தெய்வ பக்தியால் வெற்றியடையும்.
தாதாபாயினுடைய பூதசரீரத்திலிருந்த சக்தியைக் காட்டிலும் ஆயிரமடங்கு அதிக சக்தி அவருடைய நாமத்தில் புகுந்து, அப்பெயர் நினைப்பினாலே ஹிந்து ஜாதி மேன்மை பெறும்படி நேரிடலாம். பராசக்தியின் இஷ்டப்படி உலகம் அசைகிறது. பராசக்தி இப்போது நம்பிக்கையை உலகம் முழுதும் பரப்புகிறாள். சில தினங்களின் முன்பு ஒரு இங்கிலீஷ் சாஸ்திரி கடவுளைப் பற்றி எழுதியிருக்கும் புஸ்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். சரணாகத தர்மத்தை அந்த நூல், நமது விசிஷ்டாத்வைதிகளைப் போல் அத்தனை தெளிவாகச் சொல்லுகிறது. ஹிந்து மதம் உலக முழுமையும் வியாபித்துக் கொண்டு வருகிறது.
நம்பிக்கையின் ஸஹஸ்ரநாமங்களில் தாதாபாய் நெளரோஜி என்பதொன்று. நம்பிக்கை வெற்றி பெறும். நம்பிக்கை நீடூழி வாழ்க.
$$$
- பிற்சேர்க்கை: மகாகவி பாடிய கவிதை (தேசீயத் தலைவர்கள்)

3. தாதாபாய் நௌரோஜி
முன்னாளில் இராமபிரான் கோதமனா
தியபுதல்வர் முறையி னீன்று
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்
தியஎமது பரத கண்ட
மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப்
பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில
மக்களவ ரடிகள் சூழ்வாம். 1
அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம்
மைந்தன், தன் அன்னை கண்ணீர்
எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென்
உயிர் துடைப்பேன் என்னப் போந்து,
யௌவன நாள் முதற்கொடுதான்
எண்பதின்மேல் வயதுற்ற வின்றுகாறும்
செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி
யானுழைப்புத் தீர்த லில்லான் 2
கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக்
கருணையும்அக் கருணை போலப்
பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு
நிகரின்றிப் படைத்த வீரன்.
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்
எனஅதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றித்
தனக்குழையாத் துறவி யாவோன். 3
மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும்
மதியாதே வாணாள் போக்குந்
தீதாவார் வரினுமவர்க் கினியசொலி
நன்குணர்த்துஞ் செவ்வி யாளன்,
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே
உண்மைநெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்
நவுரோஜி சரணம் வாழ்க! 4
எண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு
இருந்தெம்மை இனிது காக்க!
பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந்
துக! எமது பரதநாட்டுப்
பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி
போற்புதல்வர் பிறந்து வாழ்க!
விண்புல்லு மீன்களென அவனன்னார்
எவ்வயினும் மிகுக மன்னோ!
$$$