-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
4. பட்டீச்சுரம் போய் வந்தது – இ
அகால போஜனம் மாறியது
இங்ஙனம் சில தினங்கள் சென்றன. இரவில் அகாலத்திலுண்ணுதலால் மிக வருந்திய சவேரிநாத பிள்ளை ஒருநாள், “இப்படி ஆகாரம் பண்ணிக் கொண்டிருக்க என்னாலியலாது. இருக்கவும் வேண்டியிருக்கிறது. பசியோ பொறுக்க முடியவில்லை. விபரீதமான இந்த வீட்டு வழக்கத்தை இதுவரையில் நான் எங்கும் கண்டிலேன். மற்றவர்கள் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. எந்த வழியாலாவது இந்தத் துன்பம் நீங்கினால் எனக்கும் பிறர்க்கும் மிகவும் சௌகரியமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டுச் சில தினங்களுக்கு முன்னமே தாம் செய்து வைத்திருந்த பாட்டொன்றை எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகத்தா பிள்ளை சவேரிநாத பிள்ளையின் சுவையான பேச்சை அடிக்கடி கேட்பவராதலால் அவர் என்ன பேசுகின்றாரென்பதை அறிந்துகொள்ள எங்களை யணுகினார்; “என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். நான் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து விட்டேன்; பிறரும் அப்படியே இருந்து விட்டார்கள்.
சவேரிநாத பிள்ளை: பேசுவது உங்கள் சங்கதிதான். கோபித்துக்கொள்ளாமல் இருந்தாற் சொல்லுவேன்.
ஆறுமுகத்தா பிள்ளை: சும்மா சொல்லும்.
சவேரிநாத பிள்ளை : நாங்கள் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும் சரியான காலத்திற் கூழையாவது உண்போம். இங்கே வருவதற்கு முன் ஒரு நாளாவது அகாலத்தில் உண்டதில்லை. அந்த வழக்கத்தால் இராத்திரியில் உங்கள் வீட்டில் அகாலத்தில் உண்ணும் உணவு எவ்வளவு நன்றாக இருந்தாலும் எங்களுக்குச் சிறிதேனும் செல்லவில்லை; பிடிக்கவுமில்லை. அங்ஙனம் உண்ணும் காலத்திற்கு வெகுநேரத்திற்கு முன்பே பசியும் அடியோடே குடியோடிப் போய்விடுகின்றது. இந்தக் கஷ்டத்தை நினையாதவர் இங்கே ஒருவருமில்லை. உங்கள் கோபத்திற்கு அஞ்சியே யாவரும் இத் துன்பத்தை வெளிப்படுத்தாமல் பல்லைக் கடித்துக்கொண்டு காலங்கழித்து வருகிறார்கள். உங்களிடத்தில் எப்படியாவது இந்தக் கஷ்டத்தைச் சொல்லி இந்த வழக்கத்தை முற்றிலும் மாற்ற வேண்டுமென்று வந்த நாள்முதல் எண்ணிக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன்; ஒரு பாடலையுஞ் செய்தேன். நல்லவேளையாக நீங்களே கேட்டீர்கள். அதனால் உண்மையைச் சொல்லி விட்டேன். அப்பால் உங்கள் இஷ்டம்.
அந்தப்பாடல் இதுதான்:
(கட்டளைக் கலித்துறை) “புரமாய வென்றரு டேனு புரேசர் புகன்றுறையும் திரமாம் பழைசையிற் காலத்தி லூணின்றித் தீயபசி உரமாய் வருத்த வருந்துறு வேமென் றுணர்ந்தறிவில் மரமாப் படைத்தில னேபாவி யாய மலரயனே“."”.
ஆறுமுகத்தா பிள்ளை: இது கும்பகோணத்திலிருந்து பல இடங்களுக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஊராதலின், பலர் இவ்வழியே செல்வார்கள். இரவில் நெடுநேரம் கழித்தும் சிலர் வருவார்கள். அவர்களுக்கு உணவளித்து உபசரிக்கும் வழக்கம் எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. முன்பே உண்டுவிட்டால் பின்பு வருகிறவர்களுக்குச் சில சமயம் உணவு கிடைக்காமற் போய்விடும். கிடைத்தாலும் ஆறிப் பதனழிந்து விடும். ஆதலால் யாவரும் நேரங்கழித்தே உண்ணுவதாயிருந்தால் வருபவர்கள் எல்லோரும் திருப்தியாக உண்பார்களென்ற எண்ணத்தினால் இவ்வாறு பெரியோர்கள் செய்துவந்தார்கள். அவ்வழக்கத்தைப் பின்பற்றியே நானும் நடத்தி வருகிறேன்.
சவேரிநாதபிள்ளை: அகாலத்தில் வருபவர்களுக்கு வேண்டியவற்றை யெடுத்துவைத்து விட்டு மற்றவர்கள் முன்னால் உண்டுவிடலாமே. அதனால் என்ன பிழை? பின்பு வருகிறவர்களுக்காக முன்புள்ளவர்கள் பசியோடு சோர்ந்து தூங்கிய பின்னர்ப் பசியும் கெட்டுப்போகின்றது. தூக்கத்தையும் கெடுத்து எழுப்பி உண்பித்தலில் அவர்களுக்கு என்ன சுவை தெரியப் போகிறது? வயிறாரத்தான் உண்பார்களா?
ஆறுமுகத்தா பிள்ளை இவர் சொல்லிய பக்குவத்தினால் அவற்றைக் கேட்டுச் சிறிதும் சினங்கொள்ளாமல், “உங்களுக்கெல்லாம் அசௌகரியமாக இருந்தால் அந்த வழக்கத்தை வைத்துக்கொள்வதில் எனக்குப் பிரியமில்லை; நீங்கள் சொல்லுகிறபடியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு அன்று முதல் 10 மணிக்குள்ளாகவே எல்லோரும் ஆகாரம் பண்ணும்படி ஏற்பாடு செய்துவிட்டார். பழைய வழக்கம் மாறிய காரணத்தையறிந்த இக் கவிஞர் பிரான் சவேரிநாத பிள்ளையின் தைரியத்தையும் சாதுரியத்தையும் பற்றி மகிழ்ந்ததன்றி அவர் செய்த செய்யுளையும் கேட்டுப் பாராட்டினார். மற்ற யாவரும் அவரைப் புகழ்ந்து வாழ்த்தினார்கள்.
சில பிராமணர்களின் அன்பு
அயலூர்களிலுள்ள மிராசுதார்களாகிய பிராமணர்கள் சிலரிடம் ஆறுமுகத்தா பிள்ளை கடனாகப் பெருத்த தொகைகளை வட்டிக்கு வாங்கியிருந்தார். அப்பொழுதப்பொழுது கொடுக்கப் படாமையால் வட்டிகள் அதிகரித்து விட்டன. பணங்கொடுத்தவர்கள் அடிக்கடி வந்து கேட்பாராயினர். அது தெரிந்த ஆறுமுகத்தா பிள்ளை இப்புலவர் சிகாமணியை அழைத்துச் சென்று அவர்களோடு சில நேரம் பேசிக்கொண்டிருக்கும்படி செய்துவிட்டு வட்டிகளிற் சில பாகத்தையாவது முழுவதையுமாவது தள்ளிக் கொடுத்தால் உபகாரமாக இருக்குமென்று கேட்டுக்கொண்டனர். முதலாளிகளிற் சிலர் ஆறுமுகத்தா பிள்ளை பிள்ளையவர்களுடைய அன்பரென்பதை நினைந்தும், இவர் தங்கள் வீட்டுக்கு வந்த கெளரவத்தை உட்கொண்டும் வட்டியிற் சில சில பாகத்தைத் தள்ளிக் கொடுத்துப் பத்திரத்தில் வரவு வைத்துக்கொள்ளச் செய்தார்கள். ஊற்றுக்காடென்னும் ஊரிலிருந்தவரும் வடமொழியிற் சிறந்த வித்துவானுமாகிய காளிராமையரென்பவர் வட்டி முழுவதையுமே தள்ளிப் பத்திரத்தில் வரவு வைத்துக்கொள்ளச் செய்தார்; அங்ஙனம் செய்ததன்றி இவரைச் சிலதினம் தம்முடைய வீட்டில் வைத்திருந்து விருந்தளித்து உபசரித்து அனுப்பினார்.
நூலுக்கும் நீருக்கும் சிலேடை
ஒருநாள் பிள்ளையவர்களோடு ஆறுமுகத்தா பிள்ளையும் நாங்களும் ஸ்வாமிமலை சென்று முருகப்பிரானைத் தரிசனஞ் செய்துவிட்டுத் திரும்பிவருகையில் காவிரியின் கரையை அடைந்தோம். அப்பொழுது பட்டுச் சாலியர்களிற் சிலர் நெய்தற்குரிய நூல்களை அந்நதியில் கழுவிக்கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ஆறுமுகத்தா பிள்ளை என்னைப் பார்த்து, “இந்த நூலுக்கும் நீருக்குமாக நீர் பத்து நிமிஷத்தில் ஒருசிலேடை வெண்பாப் பாடும் பார்ப்போம்” என்றார். “அவ்வளவு சீக்கிரத்திற் செய்ய முடியாதே; செய்யாவிட்டால் இவர் என்ன கடினமான வார்த்தைகளைச் சொல்வாரோ” என்று நான் யோசித்துக்கொண்டு நின்றேன். இவர், “இவ்வளவு கடினமான விஷயத்தைக் கொடுத்துச் சீக்கிரத்திற் பாடி முடிக்கச் சொன்னால் இவரால் ஆகுமா?” என்று சொல்லிவிட்டு உடனே முதலிரண்டடியைத் தாம் பாடி முடித்துப் பின் இரண்டடிகளைச் செய்யும்படி எனக்குச் சொன்னார்; அவ்வாறே பாடி முடித்தேன். அச்செய்யுள் வருமாறு:
(வெண்பா) “வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறு நிறம் கொள்ளுகையாற் றோயக் குறியினால் – உள்ளவன்பிற் றாய்நேர்ந்த வாறுமுகத் தாளாளா நீமொழிந்த ஆய்நூலு நீருநிக ராம்“."”. (தோய் அக்குறி - நீரிற்றோய்க்கும் அச்செயல், தோய மென்னும் பெயர்.)
புறங்கூற்றாளர் அடங்கியது
திருவிடைமருதூருலாவைப் பற்றிச் சிலர் *16 அங்கங்கே சென்று சென்று இடையறாமற் கூறிவரும் புறங்கூற்றுக்களைக் கேட்டு ஆறுமுகத்தா பிள்ளை மிகவும் வருத்தமுற்று அங்ஙனம் கூறுவோர்களை அடக்க வேண்டுமென்று எண்ணினார். அங்ஙனம் எண்ணியிருக்கையில் அவர் செய்தற்குரிய திதியொன்று வந்தது. அதனை வழக்கத்திற்கு அதிகமாகச் செலவு செய்து முடித்தற்கு நிச்சயித்து மேற்கூறிய புறங்கூற்றாளர்களையும் வேறு சில பெரியோர்களையும் அன்றைத் தினம் உணவிற்கு வருவித்தார். அவர்களுக்குத் திருப்தியுண்டாகும்படி ஆகாரஞ் செய்வித்துத் தக்ஷிணைகளையும் அளித்தார்.
பின்பு அவர்கள் எல்லோரையும் பகல் ஒரு மணிக்கு ஓரிடத்தில் வந்து கூடியிருக்கும்படி செய்து அவர்களை நோக்கி, “திருவிடை மருதூருலாவைப் பற்றிக் குற்றஞ் சொல்லுபவர்கள் இப்போது எடுத்துச் சொல்லலாம். அவற்றிற்கு ஐயா அவர்கள் சமாதானம் சொல்லுவார்கள்” என்று சொல்லிவிட்டுத் தாம் ஓரிடத்தே இருந்தார்; அப்பொழுது தியாகராச செட்டியார் முதலியோரும் உடனிருந்தார்கள். அச்சபையில் அப்பொழுது வந்திருந்தவர்களுடைய தொகை சற்றேறக்குறைய நூறுக்கு மேலே இருக்கும்.
இந்தக் கவிஞர்பிரான் அவ்வுலா எழுதப்பட்டுள்ள ஏட்டுச்சுவடி யொன்றை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். எனக்கு ஏட்டுப் பிரதியைப் பார்த்துப் படிக்கும் வழக்கம் அதிகமாக இல்லாமையாற் படிக்கும்பொழுது சில சில இடங்களில் தடுமாற்றம் அடைந்து வாசித்தேன். இவர், “இப்படி வாசித்தால் அடிப்பேன்” என்றார். உடனே அதிக ஜாக்கிரதையாகத் தவறின்றி மெல்லப் படித்து வந்தேன். புறங்கூற்றாளர் தவறென்று சொல்லிக் கொண்டிருந்தனவாகத் தாம் கேள்வியுற்ற இடங்களை எடுத்துக்காட்டித் தக்க சமாதானங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அந்த நூல் இராத்திரி பன்னிரண்டு மணிக்கு முற்றுப் பெற்றது.
ஆதியுலா, ஏகாம்பர நாதருலா, திருவானைக்காவுலா, திருவாரூருலா, திருவெங்கையுலா முதலியவற்றிலிருந்து அப்பொழுதப்பொழுது இடத்துக்குப் பொருத்தமாக இவரால் மேற்கோள்கள் எடுத்துக் காட்டப்பட்டன. அப்பொழுது ஆவூர்ப் பசுபதி பண்டாரம், ஸ்வாமிமலை சபாபதி தேசிகர், கும்பகோணம் பேட்டைத்தெருவிலுள்ள வைத்தியநாத தேசிகர் முதலிய கல்விமான்கள் கேட்டு மிகவும் திருப்தியடைந்து, “இவ்வளவு அழகான உலாவை நாங்கள் இதுவரையில் அறிந்ததில்லை. பல ஸ்தல சரித்திரங்களும் சிவபுராணக் கதைகளும் நாயன்மார்களுடைய அருமை வரலாறுகளும் தேவார திருவாசகக் கருத்துக்களும் நிறைந்து எல்லா உலாக்களுக்கும் மேற்பட்டு நிகரின்றி இந்த உலா விளங்குகின்றது. இன்றைத் தினம் இந்த உலாமுகமாக அருமையான விஷயங்கள் பல வற்றை அறிந்து கொண்டோம். இந்த நூலில் என்ன குற்றம் இருக்கின்றது? ஒன்றுமில்லையே. யாரேனும் இதிற் குற்றம் உண்டென்று சொல்லியிருந்தால் அவர்களைக் கல்வியறி வில்லாதவர்களென்று சொல்லுவதற்கு நாங்கள் பின்னிடோம். நீங்கள் இக் காலத்தில் எழுந்தருளியிருப்பது நாங்களும் தமிழும் செய்த பெரும் புண்ணியத்தின் பயனென்றே சொல்லத்தடையில்லை” என்று உலாவையும் பிள்ளையவர்களையும் மிகப் பாராட்டினார்கள்; “அரோக திடகாத்திரத்தோடு சிரஞ்சீவியாயிருந்து தமிழ்ப் பாஷையைப் பரிபாலனம் செய்துகொண்டு வரவேண்டும்” என்று இவரை வாழ்த்தவும் செய்தார்கள்; முன்பு குறை கூறியவர்களும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
அப்பால் ஆறுமுகத்தா பிள்ளை புறங்கூற்றாளரைப் பார்த்து, “நீங்கள் இப்பொழுது சொன்னது உண்மைதானா? இனி எங்கேனும் உலாவைப் பற்றித் தூஷணமான வார்த்தைகள் உங்கள் வாக்கிலிருந்து வெளிப்படுமானால் நான் சும்மா விட மாட்டேன்; அறிந்து கொள்ளுங்கள்” என்றார். அதன்பிறகு அவ்வுலா சம்பந்தமான புரளிவார்த்தைகளெல்லாம் எவ்விடத்தும் அடங்கி விட்டன.
அவ்வுலாவில் ஒவ்வொரு கண்ணியையும் இரண்டுமுறை மூன்று முறை படித்துக்கொண்டே வந்தமையால் மிகுந்த சோர்வை அடைய வேண்டியவனாக இருந்தும் இடைவிடாமற் கேட்டுவந்த பல அரிய விஷயங்களால் அமுதத்தையுண்டவன் போலப் பசி தாகத்தாலுண்டாகும் களைப்பின்றியிருந்தேன். பின்பு ஆகாரம் செய்யும்படி துணை சேர்த்து என்னை அனுப்பியபொழுது இப்புலவர்பிரான் அருகில் வந்து என்னை நோக்கி, “ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டேன்” என்று சொல்லத் தொடங்கிய காலத்தில் இவருடைய குறிப்பையறிந்து நான், “சொன்னபடியே செய்திருந்தால் எனக்குச் சந்தோஷமாக இருந்திருக்கும். படித்தற்குரிய பலரிருக்கையில் என்னைப் படிக்கும்படி சொன்னது என்பாலுள்ள அன்பின் மிகுதியாலேயே என்று தெரிந்து இன்புற்றேன்” என்று ஒருவாறு தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு ஆகாரம் செய்யச் சென்றேன்.
எனக்கு நைடதம் அளித்தது
அப்பால் ஸரஸ்வதி பூஜையன்று பட்டீச்சுரத்துக்கு அருகிலுள்ள என் ஊராகிய உத்தமதானபுரம் சென்றேன். பூஜையை அங்கே முடித்துக்கொண்டு மறுநாளாகிய விஜயதசமியன்று புனப்பூஜையைச் செய்துவிட்டுப் பிற்பகலில் புறப்பட்டுப் பட்டீச்சுரம் வந்து 4 மணிக்குப் பிள்ளையவர்களைக் கண்டேன். “ஏன் இவ்வளவு அவசரமாக வந்தீர்?” என்றார். “இன்று விஜயதசமியாதலால் ஐயா அவர்கள் கையால் ஏதாவது புஸ்தகம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளலா மென்றெண்ணி விரைந்து வந்தேன்” என்றேன். உடனே அந்த வீட்டிற் பூஜையிலிருந்த சுவடிகளுள் ஏதாவதொன்றைக் கொண்டுவரும்படி இவர் ஒருவரை அனுப்பினர். போனவர் ஓரேட்டுச்சுவடியை எடுத்துக்கொணர்ந்து கொடுத்தார். அதனை என்னிடம் அளித்த இவர், “என்ன நூலென்று பிரித்துப் பார்த்துச் சொல்லும்” என்றார். அங்ஙனமே பிரித்து, “இது நைடதத்தின் மூலம்” என்றேன். கேட்ட இவர், “நைடதத்தைப் படித்தாற் கலிபீடை நீங்குமென்று சொல்வார்கள். ஆதலால் இப்புத்தகத்தைப் பெற்ற உமக்குக் கலி இன்றோடு நீங்கிவிட்டது. இனி ஒருபோதும் அணுக மாட்டாது” என்றார். அப்பொழுது நான், “இங்கே படித்தற்கு எப்பொழுது வந்தேனோ அப்பொழுதே என்னைச் சார்ந்திருந்த அரிஷ்டமெல்லாம் நீங்கிவிட்டனவென்றே துணிந்திருக்கிறேன். அன்றியும், மாயூரத்தில் முதன்முறையாக இங்கே பெற்றுக்கொண்டதும், நைடதமே. அப்பொழுதே அவ்வாறு எண்ணினேன்” என்று சொன்னேன்.
பாடஞ்சொல்லப் பயிற்றல்
புதிய மாணாக்கர்களுக்குப் பழைய மாணாக்கர்களைக் கொண்டு பாடஞ் சொல்லுவிப்பது இவருக்கு இயல்பு. அதற்குக் காரணம் அவர்களுக்குப் பாடஞ்சொல்லும் ஆற்றல் உண்டாக வேண்டுமென்பது தான். ஏதேனும் பிழையிருந்தால் சொன்னவரைத் தனியே அழைத்து உண்மையைத் தெரிவிப்பார்.
ஒருநாள் பட்டீச்சுரத்திலிருந்து கும்பகோணத்திற்குப் போகும்பொழுது நான் மற்றொருவருக்குக் குடந்தைத் திரிபந்தாதிக்குப் பொருள் சொல்லிக்கொண்டே சென்றேன். *17 நாட்டஞ் சிவந்தனை என்னும் செய்யுளில் ‘சிவந்தனை நேர்ந்தேயுறும்’ என்பதற்குச் சிவமானது தன்னை ஒத்தே அத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்றதென்று சொன்னேன். கேட்ட இவர் அவ்விடத்திலேயே நின்றுகொண்டு என்னைத் தனியே அழைத்து ‘நேர்ந்து’ என்பதற்கு, ‘கொடுத்து’ என்பது பொருளென்றும் இனிக் கவனித்துச் சொல்ல வேண்டுமென்றும் சொல்லிவிட்டு முன்னே செல்வாராயினர்.
‘தன்பெருமை தானறியாத் தன்மையன்’
கும்பகோணம் பட்டீச்சுரத்திற்குச் சமீபமாதலால் ஆறுமுகத்தா பிள்ளைக்குரிய சில காரியங்களை முடித்துக் கொடுத்தற்கும், வரவேண்டுமென்று விரும்பிய அன்பர்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றுதற்கும் நினைந்து அடிக்கடி எங்களை அழைத்துக்கொண்டு இவர் அங்கே சென்று வருவார்.
ஒருநாள் அந்த நகருக்குச் சென்று ஓரிடத்தில் பல பிரபுக்களோடு பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே இருந்த எதிராஜ பிள்ளை யென்னும் கனவானொருவர் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி ஓர் இனிய செய்யுளைக் கூறினார். அங்கிருந்த யாவரும் அதனைக் கேட்டு அதன் இனிமையைப் பாராட்டினர். இவரும் அச்செய்யுளின் நயத்தை வியந்துவிட்டு, “இச் செய்யுள் எந்த நூலிலுள்ளது?” என்று கேட்டார். “தாங்கள் இயற்றிய கும்பகோண புராணத்திலுள்ளது” என்றார் அவர். அதனைக் கேட்ட யாவரும் ஆச்சரியமுற்றனர். அளவிறந்த செய்யுட்களைப் பாடியவராதலின் அது தாம் இயற்றிய செய்யுளென்பதை இவர் அறிந்திலர். இதைப்போன்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை யான் அறிந்திருப்பதுண்டு.
தியாகராச செட்டியார் வாதம் செய்தது
மற்றொரு நாள் சென்று கும்பகோணத்தில் நாகேசுவர ஸ்வாமி கோயிலின் வடக்கு வீதியிலிருந்த தபால் ஆபீஸ் வீட்டுத் திண்ணையில் இவர் தங்கினர். அவ்வீட்டிலிருந்த போஸ்டுமாஸ்டர் முத்தப்பிள்ளை யென்பவர் இவர் வந்திருத்தலையறிந்து உடனே ஒரு புத்தகத்தோடு வந்து வந்தனம் செய்துவிட்டு இவருடைய குறிப்பின்படி அருகில் இருந்தார். “கையிலுள்ளது என்ன புத்தகம்?” என்று இவர் கேட்டனர். அவர், “ஐயா அவர்கள் செய்த திருநாகைக்காரோணப் புராணம். இதனைச் செட்டியாரவர்களிடத்துப் பாடங் கேட்டு வருகிறேன்” எனவே இவர், “அதில் ஒரு செய்யுளைப் படித்திடுக” என்று சொன்னார். அவர் அதிலுள்ள நைமிசப்படலத்தின் முதற் செய்யுளாகிய,
(கலி நிலைத்துறை) *18 “செங்கை யாட்டினா ரங்கைமா னேந்திய சிவனார் பங்கை யோர்மகட் குதவிய பரமனார் பதத்துக் கொங்கை யார்தனைச் சார்நரை யுய்த்திடு குணத்தாற் கங்கை யாற்றரு கிருப்பது நைமிசக் காடு”
என்ற பாடலை மாலைக்காலமாதலாற் கல்யாணி ராகத்தில் நன்றாகப் படித்துக் காட்டினர். கேட்டு மிகவும் இன்புற்ற இவர் என்னைப் பார்த்துவிட்டு மேலேயுள்ள பாடல்களைப் படிக்கும்படி அவருக்குச் சொன்னார். இவர் படிக்கிற மாதிரி நான் படிக்க வேண்டுமென்று குறிப்பித்தாரென்பதை அப்பார்வையால் அப்பொழுது தெரிந்துகொண்டேன்.
மேற் பாகத்தை அவர் படித்துக்கொண்டே வருகையில் இவர், “பொருள் நன்றாகத் தெரிந்துகொண்டு வருகிறீரா?” என்று கேட்டனர். அவர், “செட்டியாரவர்கள் பொருள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். சில செய்யுட்களின் ஒவ்வொரு பாகத்திற்குப் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனாலும் தைரியமாகவே ஏதேனும் சொல்லுகிறார்கள். அதில் எனக்குத் திருப்தி பிறக்கவில்லை. பட்டீச்சுரம் வந்து ஐயா அவர்களால் அவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டுமென்று எண்ணியும் வேலை மிகுதியால் அங்கே வர முடியவில்லை” என்றார். இவர் சந்தேகமுள்ள இடங்களில் ஏதாவதொன்றைக் குறிப்பிட்டுச் சொல்லும்படி கேட்டார். அப்பொழுது முத்தப்பிள்ளை,
துவஜஸ்தம்ப வருணனை
(கொச்சகக் கலிப்பா) *19 “ஊறுதெரி தலுந்தவிர்ந்தோ ருடம்புதளி யுட்புகுந்து மாறுதவிர் காரோண வள்ளலா ரெதிர்நின்று வேறுமல ரிலைபுனைந்து வேண்டுபலன் களுமுதவிப் பேறுதவு சிவமேயாய்ப் பிறங்கிவிடை மேற்கொளுமே" (திருநகரப். 138)
என்ற செய்யுளைப் படித்துக் காட்டினர். இப்புலவர்பிரான், “தியாகராசு இதற்கு என்ன பொருள் சொன்னான்?” என்றனர். முத்தப்பிள்ளை, “அவர்கள் விளங்கவில்லையென்று முதலிற் சொல்லிவிட்டுச் சிறிது நேரம் யோசித்துப் பார்த்து ஏதோ சொன்னார்கள்; எனக்கு இப்பொழுது அது ஞாபகத்திலில்லை” என்றார். அவர் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் தியாகராச செட்டியார் பாடஞ் சொல்லுதற்கு வழக்கம் போலே அங்கே வந்தார். வந்தவர் முத்தப்பிள்ளை நாகைக்காரோணப் புராணத்தைக் கையில் வைத்திருப்பதையும் இவர் அவரோடு பேசிக்கொண்டிருத்தலையும் பார்த்துவிட்டு ஆலோசித்துக்கொண்டு அருகில் வந்து நின்று இவருக்கு அஞ்சலி செய்து, “நீங்கள் எப்பொழுது இங்கே வந்தீர்கள்? வீட்டுக்கு வரலாகாதா? வருவதை முன்னதாக எனக்குத் தெரிவிக்கக் கூடாதா? தெரிவித்திருந்தால் முந்தியே இங்கு வந்திருப்பேனே” என்றார். இவர், “இருக்கட்டும்; ‘ஊறு தெரிதலும்’ என்ற செய்யுளுக்கு நீ இவருக்குச் சொல்லிய அர்த்தம் என்ன? சொல்ல வேண்டும்” என்றார்.
தியாகராச செட்டியார், “எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த ஒரு பாட்டுக்காகப் பட்டீச்சுரம் வந்து கேட்பதென்றால் எனக்குச் சாத்தியப்படுமா? எனக்குள்ள வேலைகள் அதிகமென்பது உங்களுக்குத் தெரியுமே. இன்னும் இதைப் போன்ற பாடல்கள் இந்நூலிற் பல இருக்கின்றன. அவை எனக்கு மிக்க சங்கடத்தை உண்டுபண்ணுகின்றன. இப்புத்தகத்தை அச்சிடுவித்தீர்களே. கடினமான பாடல்களுக்குப் பொருள் எழுதிப் பதிப்பிக்கச் செய்திருந்தால் எவ்வளவோ அனுகூலமாயிருக்கும். பொருளெழுதாவிட்டால் இது போன்ற கடினமான பாடல்கள் யாருக்கு விளங்கும்? ஒருசமயம் உங்களுக்கே விளங்காமற் போனாலும் போகுமே. நான் உண்மையைச் சொல்லுகிறேன். கோபிக்க வேண்டாம்” என்று மேன்மேலே இதுபோன்ற விஷயங்களைப் பேசத் தொடங்கிவிட்டார்.
அப்பால் இவர், “நான் சமீபத்திலிருக்கும்பொழுது யாரையேனும் அனுப்பியாவது கேட்டுக்கொண்டு வரச்செய்து சொல்லலாமே. அது செய்ய முடியாவிட்டால் தெரியவில்லை என்றாவது சொல்லிவிடலாமே” என்றார். அப்பொழுது செட்டியார் சிறிதும் பின்வாங்காமல், “இந்த நூலில் மட்டுமல்ல; நீங்கள் செய்த வேறு நூல்களிலும் இந்த மாதிரியான இடங்கள் பல உள்ளன. அவற்றிற்கு எனக்கும் பிறர்க்கும் பொருள் விளங்கவில்லை. அவற்றில் ஒன்றை மட்டும் இப்பொழுது சொல்லுவேன்: மாயூரப் புராணத்தில் திருநாட்டுப் படலத்தில் ‘அம்மையார் நீழலில்யா மமர்வோமென் றருள்செய்த, செம்மையார் வீற்றிருக்குந் திருத்தஞ்சை” (54) என்பதில் உள்ள அம்மையார் வரலாறு எனக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. பலரைக் கேட்டேன். ஒருவரும் சொல்லவில்லை. பின்னும் நாகைக்காரோணப் புராணத்திலே தலவிசேடப் படலத்தில்,
(விருத்தம்) *20 “மருவொரு கொம்பு தாங்கு மார்புடை நமைப்பூ சித்துப் பொருகரி கொம்போர் நான்கும் பெறப்பொலி தலமு முண்டால்" *21 “பருவத்து மடந்தாய் பூமேற் பசுவன்றி வான்மேற் றங்குந் திருவத்தோர் பசுவைக் கொண்டு சிருட்டிசெய் தலமு முண்டால்” *22 “கொடுமைசெய் களிற்றை மாட்டிக் குலவுநீ முந்தி யீன்ற வடுவறு களிறு போற்றி வழிபடு தலமு முண்டால்” (32, 37, 39)
என்று பாடியிருக்கிறீர்களே. இத்தலங்களின் பெயரையும் இத்தலங்களின் சரித்திரங்களையும் தெரிந்துகொள்வது எப்படி? இவற்றிற்கெல்லாம் குறிப்பு எழுதியிருந்தாலல்லவோ விளங்கும்? படிப்பவர்களுக்கு விளங்கும்படியல்லவோ பாட வேண்டும்? அங்ஙனம் செய்யப்படாத பாடல்கள் பாடல்கள் அல்லவே; நீங்கள் இப்பொழுது பாடும் நூல்களில் இம்மாதிரியான பிரயோகங்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. முன்பு நீங்கள் இப்படிப் பாடியதில்லை. உங்கள் நூல்களைப் படிப்பவர்களெல்லாம் வந்து உங்களையே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியுமா? நான் சொன்னபடி கடினமான பாகங்களுக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்திருந்தால் எல்லாரும் தெரிந்து கொள்வார்களே. இந்தத் துன்பம் உங்களுக்குத் தெரியவில்லையே! கோபித்துக் கொள்ள வேண்டாம்; என் அனுபவத்தைச் சொல்லுகிறேன்” என்று மேலே மேலே பேசுவாராயினர்.
அருகில் இருந்த சில அன்பர்கள், “செட்டியார் என்ன இப்படிப் பேசுகிறாரே!” என்று அஞ்சினர். முன்னொரு முறை *23 துறைசையந்தாதியைக் குறித்துச் செட்டியார் பேசியதை நேரில் நான் கேட்டவனாதலால் இதில் எனக்கு வேறுபாடு தோற்றவில்லை. ஆனாலும் இம்முறை இவ்விருவருடைய சம்பாஷணையும் சற்றுக் கடுமையாகவே இருந்தது.
இக் கவிஞர்பிரான், “என்னப்பா மிகுந்த கோபத்தோடே பேசுகிறாய்? இப்படிப்பட்ட இடங்களிலுள்ள அருமையை நீ பாராட்டாமற் பழிப்பதும் மிக உழைத்து அமைத்திருக்கும் அமைப்பை மதியாமலிருப்பதும் நன்றாக இல்லையே. இவைபோன்ற பிரயோகங்கள் பழைய நூல்களிற் பல உள்ளனவே. அங்ஙனம் பாடியவர்களெல்லாம் தெரியாதவர்களா? அப்படிப் பாடுவது ஓரழகன்றோ? சிலவகைப் பாடல்களைச் சிலர் விருப்பத்தின்படியே பாடவேண்டியிருக்கிறது; யோசித்துப் பேசு” என்றார்.
“பொருள் தெரிந்த பின்பல்லவோ கேட்பவர்களுக்கு அவற்றிலுள்ள அருமை புலப்படும்? அதற்குமுன் அவற்றின் அருமைப்பாடும் மதிப்பும் எப்படித் தெரியவரும்? உங்களோடு நெடுநாள் பழகிக்கொண்டிருக்கும் எனக்கே உங்களுடைய பாடல்களுக்குப் பொருள் விளங்காமல் இருக்குமானாற் பிறர் என்ன செய்வார்கள்? இப்படி நீங்கள் பாடுவதிற் சிறிதேனும் எனக்குத் திருப்தியில்லை. இந்த மாதிரியான பாடல்களை இனி நீங்கள் பாடக் கூடாது. நிர்ப்பந்தத்தாற் பாடும்படி ஏற்பட்டால் பதிப்பிக்குங் காலத்தில் அந்தப் பாகங்களுக்குக் குறிப்புரையெழுதியே பதிப்பிக்கும்படி செய்ய வேண்டும். இன்னும் முன்பு குறிப்புரை யில்லாமற் பதிப்பித்த புத்தகங்களிலுள்ள கடினமான பாகங்களுக்கும் குறிப்புரை எழுதிப் பதிப்பித்து அவற்றோடு சேர்த்துவிடச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் உழைப்புப் பிரயோசனப்படாது. என்னுடைய ஆசிரியருக்கு ஒரு பழிப்பும் இல்லாமலிருக்க வேண்டுமென்றே இப்போது இவற்றைச் சொல்லலானேன். நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் வேறு வேறு ஊர்களுக்குச் சென்று சிலகாலம் அங்கங்கே இருந்து வருகிறீர்கள். பொருள் தெரியாத ஒவ்வொருவனும் வந்து வந்து ‘அதற்குப் பொருள் சொல்; இதற்குப் பொருள் சொல்’ என்று என் கழுத்தை யறுக்கிறான். ஏதாவது நான் சொல்லத்தானே வேண்டியிருக்கிறது? சொல்லாவிட்டால் வருகிறவன் விடுகிறானா? எனக்கு இதே வேலையாக இருக்கிறது. இப்படித்தானே ஒவ்வொருவரும் கஷ்டப்படுதல்கூடும்! நூல் நன்றாயிருந்தாலும் பிறருக்குக் கஷ்டத்தை உண்டுபண்ணுகின்ற தல்லவா? இதைப்பற்றிப் பல நாளாகச் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேன். முன்பு சில சமயங்களிற் குறிப்பாகவும் சொல்லி யிருக்கிறேன். சந்தர்ப்பம் வாயாமையால் இதுவரையில் விஸ்தாரமாக நான் சொல்லவில்லை. பல தீட்டுக்கு ஒரு முழுக்கு என்றபடி இப்பொழுது எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்; அப்பால் உங்கள் இஷ்டம்” என்றார்.
இப்படியே இருவரும் ஓய்வின்றிப் பேசிக் கொண்டிருக்கையில் இரவு மணி எட்டாய்விட்டது. இருவரும் மிகப் பெரியவர்களானமையால் இடையிலே ஒருவரும் பேசமுடியவில்லை. அங்கே வந்திருந்த ஆறுமுகத்தா பிள்ளையின் ஜபமும் பலிக்கவில்லை; செட்டியாரிடத்தில் மிக்க கோபங்கொண்டவராய் இவரைப் பார்த்து, “நேரம் ஆய்விட்டபடியால் ஊருக்குப் புறப்படுவோம்” என்றார். இக்கவிதிலகர் எழுந்து நின்று, “போய்வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். சரியென்று சொல்லிச் செட்டியாரும் விடைபெற்றுக்கொண்டு தம்முடைய வீட்டிற்குச் சென்றார்; அவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளாமற் போனாரே யென்று நாங்கள் வருத்தமடைந்து பேசிக்கொண்டே சென்றோம்.
இங்ஙனம் கண்டிப்பாகப் பேசுவது செட்டியாருக்கு இயல்பாதலால் அதனையறிந்த பழையவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் வேறுபாடு தோற்றவில்லை; ஏனையோர்க்கு மட்டும் ஒரு பெருஞ் சண்டையாகத் தோற்றியது. பிள்ளையவர்கள்பால் செட்டியாருக்குள்ள அன்பின் மிகுதிதான் இங்ஙனம் பேசுவித்ததென்று சிலர் நினைந்தார்கள்.
மதவாரணப் பிள்ளையார் துதி
பட்டீச்சுரத்தில் ஒருநாட் காலையில் தரிசனஞ்செய்வதற்கு ஸ்ரீ தேனுபுரேசரது ஆலயஞ்சென்று ஸ்தல விநாயகராகிய ஸ்ரீ மதவாரணப் பிள்ளையாரென்னும் விநாயக மூர்த்தியை இவர் தரிசித்துக்கொண்டு நிற்கையில் ஆறுமுகத்தா பிள்ளை, “மதவாரண மென்னும் பெயரை யமகத்திலமைத்து ஒரு செய்யுள் செய்யும்” என்று எனக்குச் சொன்னார். இது மிகக் கடினமான காரியமாயிற்றேயென்று கவலையுற்று, ‘இங்கே யிருப்பது பெருந்துன்பத்திற்கு இடமாக விருக்கிறதே’ என்று நினைந்து முகவாட்டத்துடன் நின்றேன்.
அந்தக் குறிப்பையறிந்த இக்கவிஞர் சிகாமணி, “தம்பி, இவ்வளவு கடினமான விஷயத்தை இவருக்குக் கொடுக்கலாமா? இனி இப்படிச் சொல்லுவது தருமமன்று” என்று சொல்லித் தரிசனஞ் செய்துவிட்டு வீடு சென்று அவர் விரும்பிய வண்ணம் ஒரு விருத்தமியற்றி அதை எழுதச்செய்து அவரிடம் படித்துக் காட்டும்படி சொன்னார். நான் அவ்வண்ணம் செய்தேன். அது,
*24 “நாமதவா ரணங்குறித்த படிகொடுதீ வளர்த்துமென நவிலுந் தக்க
நாமதவா ரணங்குசிவ மிகப்பினென வுங்கொள்ளான் நண்ணு மாற்றண்
ணாமதவா ரணங்குமிறுந் தடப்பட்டீச் சுரம்புகுந்து நலியச் செய்தாம்
நாமதவா ரணங்குளிர்பூந் தாளருள வின்பநலம் நண்ணி னேமால்"
-என்பது.
நான் என் சொந்த ஊர் போனது
பின், “தீபாவளிக்கு என் சொந்த ஊராகிய உத்தமதானபுரம் போவதற்கு எண்ணியிருக்கிறேன்; விடையளிக்க வேண்டும்” என்று இவரை நான் கேட்டுக் கொண்டேன். அப்படியே செய்யலாமென்று சொல்லிப் பட்டுக்கரை அங்கவஸ்திரமிரண்டை வருவித்து, தீபாவளியில் உபயோகித்துக் கொள்ளும்படி இவர் கொடுத்தார். நான் புறப்படுதற்கு விடைபெறும்பொழுது, “தீபாவளி ஸ்நானஞ் செய்துவிட்டு மாயூரத்திற்கே வந்துவிடலாம். அதற்குள் நானும் அங்கே போய்விடுவேன்” என்றார். அப்பால் ஊருக்குச் சென்றேன்; சென்றது முதல் ஜ்வர நோயால் மிகவும் பீடிக்கப்பட்டேன்; அதனால் குறிப்பிட்டபடி மாயூரஞ் செல்லுதற்கு முடியவில்லை. பின்பு இவர் மாயூரம் போய்விட்டார். குறிப்பிட்டபடி பின்பு நான் அங்கே வாராமையாற் கவலையுற்று என்னைப் பார்த்து வரும்படி ஒரு மனிதரை யனுப்பினர். “ஜ்வரத்தால் வர முடியவில்லை; ஸெளக்கியமானவுடன் வந்து விடுவேன்” என்று அவரிடம் சொல்லி அனுப்பினேன். அடிக்கடி யாரையேனும் அனுப்பி என்னைப் பார்த்துவரச் செய்து என் தேக நிலையை அறிந்து கொண்டேயிருந்தார்; நானும் இவருடைய ஞாபகமாகவே யிருந்தேன். மார்கழி மாதத்தின் இறுதியில் எனக்கிருந்த ஜ்வரநோய் நின்றது.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
16. முதற்பாகம், பக்கம், 333.
17. “நாட்டஞ் சிவந்தனை யென்செய லாநம னேகுடந்தைக்
கோட்டஞ் சிவந்தனை நேர்ந்தே யுறுமங்குக் கூடிமலப்
பூட்டஞ் சிவந்தனை செய்தோங் கருணை புரிந்ததிலை
வாட்டஞ் சிவந்தனைப் பொன்சொரிந் தாலு மதிக்கலமே.”18. செங்கை – திருவாதிரை நட்சத்திரம். பதத்து உய்த்திடு.
19. ஊறு தெரிதலும் – ஸ்பரிச உணர்ச்சியையும். ஓருடம் பென்றது மரத்தை. வேறுமலர் இலை புனைந்து – தனக்குரியனவல்லாத வேறு மலர்களையும் மாவிலை முதலிய இலைகளையும் சூடி. பலன் – நற்பயன்; பழமென்பது வேறு பொருள். துவஜஸ்தம்பம் பஞ்சலிங்கத்துள் ஒன்றாதலின் ‘சிவம்’ எனப்பட்டது. விடைமேற் கொள்ளும் – இடபக்கொடியை மேற்கொள்ளும்; இடபவாகனத்தின் மேலெழுந்தருளியிருக்கு மென்பது வேறு பொருள்.
20. ஒரு கொம்பு – ஆதிவராகத்தின் கொம்பு. கரியென்றது ஐராவதத்தை. தலம் – திருவெண்காடு.
21. பூமேற் பசு வென்றது பிரமனை. தலம் – கருவூர்.
22. களிற்றை – கயமுகாசுரனை. களிறு – விநாயகர். தலம் – திருச்செங்காட்டங்குடி.
23. இதன் 38 – 39 – ஆம் பக்கம் முதலியவற்றைப் பார்க்க.
24. பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3334. ஆரணங் குறித்தபடி நாம் அதவு கொடு தீ வளர்த்தும் என நவிலும் தக்க நாம – வேதம் குறித்தபடி நாம் அத்திக்கட்டையைக் கொண்டு யாகாக்கினியை வளர்ப்போம் என்று சொல்லும் தக்கனென்னும் பெயரை உடையாய். சிவம் இகப்பின் அணங்கு தவார் – சிவபெருமானை நீக்கி யாகம் இயற்றினால் வருத்தம் நீங்கார்; எனவும் – என்று ததீசி முனிவர் முதலியவர்கள் சொல்லவும்; கொள்ளான் நண்ணும் ஆற்று அண்ணாம் – அவ்வுரையை மேற்கொள்ளாமல் அவன் அடைந்த தீயவழியிற் சேரமாட்டோம். மதவாரணம் குமிறும் தடம் பட்டீச்சுரம் புகுந்து – வலியையுடைய சங்குகள் முழங்கும் குளங்களையுடைய பட்டீச்சுரத்தை அடைந்து. நாம் நலியச் செய்தாம் – அச்சத்தைக் கெடச் செய்தோம். மதவாரணம் குளிர் பூந்தாள் அருள் – மதவாரணப் பிள்ளையார் தம் குளிர்ந்த மலர் போன்ற திருவடிகளை அளித்தமையால். இன்ப நலம் – ஆனந்தமாகிய பயனை. நண்ணினேம் – அடைந்தோம்.
அதவென்றது, அத்திக்கட்டையாற் செய்யப்பட்ட சிருக்குச் சிருவம் முதலியவற்றை; ஆகுபெயர்.$$$