-சுவாமி ஆசுதோஷானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. சென்னை- மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளராக இருந்தவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது…

விழித்தெழு பாரதமே!
-130 வருடங்களாக நாம் இதையே கூறி வருகிறோம். திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு கதை சொல்வார்.
பக்தர் ஒருவரின் வீட்டுக்கு ஒரு சந்நியாசி சென்றார். அங்கு தங்கள் குழந்தையை ஆசீர்வதிக்கக் கேட்டுக் கொண்டனர். குழந்தை பேசுகிறதா என்று துறவி கேட்டபோது, இப்போது தான் அம்மா, அப்பா என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறான் என்று கூறி, குழந்தையைத் துறவிக்கு முன்னால் சொல்லிக் காட்டச் செய்தார்கள். சுவாமி ஆசிர்வதித்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தார். வளர்ந்த அந்தப் பையனுக்கு 18 வயது ஆகிவிட்டது. துறவி அவனிடம், நீ என்ன கற்றுக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அப்போதும் அவன் முன்பு போலவே அம்மா, அப்பா என்று இழுத்தால் அந்தத் துறவிக்கு எப்படி இருக்கும்?
அதுபோல, சுவாமி விவேகானந்தர் விட்ட இடத்திலேயே ‘விழித்தெழு பாரதமே’ என்று நாமும் சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்?
பாரதம் விழித்தெழுந்ததா? பாரதம் முன்னேறுகிறது; 2020-ல் உலகின் உச்சியில் இருக்கும் என்கிறார்கள் (2013-இல் எழுதிய கட்டுரை இது). அப்படி இருந்தால் நாம் ஏன் மீண்டும் பாரதமே விழித்தெழு என்று கூற வேண்டும்?
ஒருவேளை சுவாமிஜி சொன்னதை எங்கோ தவறாகப் புரிந்து கொண்டுள்ளோமோ? இப்போது காணப்படும் விழிப்புணர்வுகளெல்லாம் சரியான விழிப்புணர்வா?
ஓர் இந்தியன், ஓர் இந்து என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்கிறோமா? ஆங்கிலேயன் எழுதிய நம் வரலாற்று நூல்களின் மூலம், இன்றைய இந்தியா என்பது வெள்ளைக்காரன் நமக்குத் தந்த கொடை; அவனே நமக்கு உடுக்கக் கற்றுக் கொடுத்தவன், தபால் தந்திகளைக் கொண்டு வந்தவன் என்றெல்லாம் நாம் படித்து வருகிறோம்.
சுவாமி விவேகானந்தர் சொன்னார்: இதையெல்லாம் நம்பாதீர்கள். மகோன்னதமான ஒரு கடந்த காலம் நமக்கு இருந்தது.
விழித்தெழு என்பதில் உள்ள முதல் பகுதி இதுதான்.
கடந்த காலத்தின் நமது பெருமைகளைப் பற்றி யாராவது ஒருவன் இந்தியர்களுக்குச் சொன்னால் அவனைவிட இந்தியாவுக்கு நன்மை செய்பவன் யாரும் இருக்க முடியாது. அதற்காகவே சுவாமிஜி எல்லோரையும் சம்ஸ்கிருதம் படிக்கச் சொன்னார்.
ஏனெனில் ஆங்கிலேயன் அவனுக்கு வேண்டியதை எல்லாம் ஆங்கிலத்திற்கு மாற்றி, உண்மைகளை எல்லாம் அதில் மறைத்துவிட்டான். அவை சம்ஸ்கிருதத்தில் புதைந்துள்ளன. சுவாமிஜி சம்ஸ்கிருதம் படிக்கச் சொன்னது மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்காகவே.
பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் என்பவர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். நாம் இப்போது கண்டுபிடித்துள்ள அத்தனையும் சம்ஸ்கிருத புத்தகங்களில் உள்ளன என்பதை எண், குறியீடு சகிதமாக விளக்குகிறார்.
கணிதம், வானவியல், ஜோதிடம் போன்ற அத்தனையையும் நாம் கண்டுபிடித்துள்ளோம். இது பழம் புராணம் பேசுவது அல்ல.
ஆனால் இன்றைக்கு ஒரு மாணவன் +2 முடிக்கும் முன் அமெரிக்காவில் ஒரு கால் வைக்கத் துடிப்பதுபோல, ஒரு காலத்தில் வெளிநாட்டினர் இந்தியாவில் கால் வைக்கத் துடித்தனர்.
நாளந்தா, தக்ஷசீலா பல்கலைக்கழகங்களுக்கு வந்தவர்கள் அத்தனை பேரும் ஆன்மிகம் மட்டும் படிக்க வரவில்லை. வேதியியல், இயற்பியல், கணிதம், வானியல் போன்ற பலவற்றைக் கற்கவும் வந்தனர். அவ்வளவு பெருமை மிக்க நாடு இது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாம் கடந்த கால நூல்களைப் படிக்கவில்லையென்றால், சுவாமி விவேகானந்தரையாவது உரிய முறைகளோடு படிக்க வேண்டும்.
ஸ்ரீ சாரதாதேவி கூறிய ஒரு கதை உண்டு.
ஒரு படித்துறையில் ஒரு கல் கிடந்தது. எல்லோரும் அதைப் பயன்படுத்தினர். பெண்கள் அதில் துணி தோய்த்தனர், மஞ்சள் தேய்த்தனர். ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் அதைப் பார்த்து, அது வைரக்கல் என்பதைக் கண்டு கொண்டான். அதை எடுத்துச் சென்று, பட்டை தீட்டி விற்று கோடீஸ்வரன் ஆனான். கல் எல்லோருக்கும் பயன்பட்டது. ஆனால் உண்மையில் அந்தக் கல்லை நன்கு பயன்படுத்தியவன் யார்? அந்த வழிப்போக்கன் தான்.
அதுபோல சுவாமி விவேகானந்தர் எல்லோருக்கும் பயன்படுவார். அவர் கூறிய ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டால் தான் அவரது மன அடியாழத்திலிருந்து அவரது ஆன்மா எவ்வளவு மகத்தான நாட்டைச் சேர்ந்தவர்கள் நாம் என்று அலறுவது நமக்குக் கேட்கும்.
அடுத்த கேள்வி, அவ்வளவு உன்னதமாக இருந்த பாரதம், எப்படி திடீரென்று காணாமல் போயிற்று?
சுவாமி விவேகானந்தர் ‘ஒரு நாள் பாரதம் மகோன்னதமாக வரும்’ என்றார். அதை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என்று இப்போது சொல்ல முடியுமா?
சுவாமிஜி சொல்வதுபோல, நமது உடல் பலவீனமடையாமல் இருக்கும்போது எந்தக் கிருமியும் நம்மை அணுக முடியாது.
அல்பரூனி (Abu Raihan Al-Biruni) ஒரு சரித்திர எழுத்தாளர். 11-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மீது கஜினி முகமது படையெடுத்தபோது அவரை அடிமையாகக் கொண்டு வந்தான். அவர் சம்ஸ்கிருதமும் இந்தியப் பாரம்பரியமும் படித்தார். இன்றுள்ள இந்திய வரலாறுகளில் முக்கியமானது அவர் எழுதிய வரலாறு. அதில் அவர் ஓர் உண்மையைக் கூறியுள்ளார். அதைத் தான் சுவாமிஜியும் பின்னால் குறிப்பிடுகிறார்.
இந்தியர்களிடம் எல்லாம் இருந்தும் ஒரு குறைபாடு உள்ளது என்பதைக் காட்டத் தான் சுவாமி விவேகானந்தர் தவளைக் கதையைக் கூறினார்.
கிணற்றுத் தவளைக்கு, கடல் என்றால் என்னவென்று புரியவைக்க முடியவில்லையே என்று கடல் தவளை சொல்லியது. நீ என்னுடன் வா, நான் உனக்குக் கடலைக் காண்பிக்கிறேன் என்றது.
தான் வசிக்கும் கிணற்றைவிட வேறு எதுவுமே பெரிதில்லை என்று கொக்கரித்த கிணற்றுத் தவளை, இவன் பொய்யன், இவனை அடித்துத் துரத்து என்று கத்தியது.
அந்த நிலையில் தான் இந்தியர்கள் இருந்ததாக அல்பரூனி கூறுகிறார்.
விவேகானந்தரைக் கற்க வேண்டும்!
பாரதம் விழித்தெழ வேண்டுமென்றால், சுவாமி விவேகானந்தர் சொன்னதைச் செய்ய வேண்டும். அவர் சொன்னதைச் செய்ய வேண்டுமென்றால், அவர் என்ன சொன்னார் என்பது தெரிய வேண்டும். சுவாமிஜியின் உண்மையான வரலாற்றை முதலில் படிக்க வேண்டும்.
உண்மையை நோக்கி நம்மைத் திருப்புவது தான் விழித்தெழுதல். நமது பாரம்பரியத்திற்கென்று ஒரு பெரிய ஆற்றல் உள்ளது என்றார் விவேகானந்தர். இது நாம் முதலில் அறிய வேண்டிய உண்மை. பாரதத்தில் புதிதாக யாரும் வந்து எதையும் கற்றுத் தர வேண்டியதில்லை. நம்மிடமே எல்லாம் உள்ளது.
பாரத தேசத்துச் சாதனைகளை நமது ரிஷிகள் ஆழ்ந்த தியானங்களின் விளைவாக உள்ளிருந்து கண்டெடுத்தனர். வெளியில் சென்று எதையும் காணவில்லை; எல்லாமே அகத்தில்தான்.
எந்தச் செல்வம் என்றாலும் அது இயற்கையில் இருப்பது தானே. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு மாற்றி வைக்கிறோம். அதை இயற்கையே தானாகக் கொண்டுவந்து தரும்படி செய்ய முடியும்.
“நமக்குள்ளிருந்தே எல்லா ஆற்றல்களையும் கொண்டுவர முடியும்” என்று தைத்திரிய உபநிஷதம் சொல்கிறது. ‘தேவா: பலம் ஆவஹந்தி’- தேவர்கள் எல்லாம் நம்மிடம் வந்து இது உன்னிடம் இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள்.
நமது வரலாறு என்பது இயற்கையைப் பழுதாக்காமல் இயைந்து வாழ்வது. இயற்கையின் அனுமதியோடு உண்மைகளை வாங்கி உலகத்துக்குச் சொல்வோம். இது சுவாமிஜி காட்டும் இரண்டாம் உண்மை.
இந்தியா ஆன்மிகத்தின் வழியே வெற்றி பெற்றால் தான் அந்த வெற்றி உண்மையானதாக இருக்கும். மற்ற வெற்றிகள் யாவும் அதன் பின்னால் தான்.
‘பாரதம் என்றைக்கும் இல்லாத இளமையுடன், எழிலுடன் மீண்டும் ஒருமுறை உள்ளதை நான் என் மனக்கண்ணில் பார்க்கிறேன்’ என்றார் சுவாமிஜி.
அதே சுவாமிஜி ‘…பாரதத் திருநாடு ஆன்மிகத்தை விட்டு அரசியலுக்குப் பின்னாலோ, வேறு எதன் பின்னாலோ போனால் மூன்றே தலைமுறைகளில் அழிந்துவிடும்’ என்றும் சொல்கிறார். நாம் இப்போது எந்தப் பாதையில் போகிறோம் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
இந்த இடத்தில் ஓர் உண்மைக் கதை…
வாஷிங்டன் கார்வர் என்ற மேதை 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். அவர் கருப்பின மக்களின் தலைவர். வெள்ளை இனத்தவன் கருப்பின மக்களை அடக்கி வைக்க வேண்டும் என்பதற்காகவே வேண்டாத வரிகளையெல்லாம் அவர்கள் மீது திணித்துக் கொண்டேயிருந்தான். அவர்களை எந்த வழியிலும் முன்னேற விடாமல் தடுத்தான். வேர்க்கடலைக்கு மட்டும் வரி போடவில்லை. இதைக் கண்ட கார்வர் தமது மக்களிடம் வேர்க்கடலை பயிரிடும்படிக் கூறினார். வேர்க்கடலை அமோகமாக விளைந்தது. மக்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் வெள்ளையர் அரசு அந்த வருடம் வேர்க்கடலைக்கும் வரி போட்டது. வேர்க்கடலையையும் விற்க முடியாத நிலைமை. திடீரென்று கார்வர் காணாமல் போய்விட்டார். மக்கள் மிகுந்த கோபமடைந்தனர். 10, 15 நாட்களுக்குப் பிறகு அவர் திரும்ப வந்தார். கடலையை அப்படியே விற்றால் தான் வரி செலுத்த வேண்டும். அதை வெவ்வேறு பொருள்களாக மாற்றி நாம் விற்கலாம். அதற்கான பல வழிகளை நான் கண்டு பிடித்துள்ளேன். உணவுப் பொருள்கள் முதல் நக பாலிஷ் வரை 28 பொருள்களை நாம் செய்ய முடியும். இப்படி விற்றால் நாம் வரியால் பாதிக்கப்பட மாட்டோம் என்றார். கார்வரை ஒருவரும் நம்பவில்லை. ஒரு நாள் அவர் முக்கியத் தலைவர்கள் எல்லோரையும் விருந்திற்கு அழைத்தார். விருந்தில் பல சுவையான பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. விருந்து பிரமாதமாக இருந்தது. உணவுப் பொருள்கள் அவ்வளவும் வேர்க்கடலையைக் கொண்டே தயாரிக்கப்பட்டன என்று கார்வர் கூறினார். பிறகு மக்கள் வேர்க்கடலையை அவர் கூறிய முறைப்படி மதிப்பு மிக்கதாக உருமாற்றம் செய்தார்கள். நல்ல லாபம் அடைந்தார்கள். இப்படி வேர்க்கடலையில் இவ்வளவு பொருள்கள் தயாரிக்கலாம் என்று எப்படி உங்களுக்குத் தோன்றியது? என்று கேட்டபோது, இயற்கையின் கதவைத் தட்டினேன்; அது எனக்குக் கொடுத்தது என்று அவர் பதிலளித்தார்.
ஆன்மிகத்தை விட்டு வேறு எந்த வழியில் சென்றாலும் அழிவு தான் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அப்படியானால் இன்று நாம் காணும் அழிவுக்கு என்ன காரணம்? சிறிது சிக்கலான விஷயம் தான். நாம் ஆன்மிகத்தை விட்டுவிட்டோமா? சுவாமிஜி ராமேஸ்வரம் சொற்பொழிவில் கூறுகிறார்:
நீ உடம்பு முழுவதும் வரிப்புலி போல சிவனுக்குரிய அடையாளங்களைத் தரித்திருந்தாலும் உண்மையில் அவரிடமிருந்து நீ விலகியே இருக்கிறாய். அவரது பிள்ளைகள் அனைவரையும் உன்னால் நேசிக்க முடிகிறதா? முடிந்தால், அதுதான் உண்மையான ஆன்மிகம்.
இந்த இடத்திலும் நாம் ஆன்மிகம் என்று அவர் சொன்னதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் விழித்தெழுவதற்கு அவர் கூறிய பாதையையும் புரிந்துகொள்ள வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் நடக்க முடியாத ஒன்றைச் சொல்லியிருக்கவே மாட்டார். அவர் கண்ட பாரதம் மலர வேண்டும்.
மனிதன் தன் அருகில் இருப்பவனை நேசிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறானா? அவனுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறானா? இதையே நான் ஆன்மிகம் என்பேன் என்கிறார் சுவாமிஜி.

வசிஷ்டர் போன்ற மகான்கள் எப்படிச் சாதித்தார்களோ, அப்படிச் சாதித்து ஒரு பாரதத்தை உருவாக்க முயன்றால் அதுவே விழித்தெழுந்த பாரதம். இந்த முயற்சி இல்லாத நமது சாதனைகள் எல்லாம், நம்மை நம்மிலிருந்து, நம்மை நாட்டின் லட்சியத்திலிருந்து, நம்மை நம்முடைய இறைவனிடமிருந்து விலக்கிக் கொண்டே இருக்கும்.
அதனால் தான் ‘பாரதமே விழித்தெழு’ என்று அன்றைக்கே அவர் சொன்னது இன்றும் நமக்குப் பொருந்துகிறது.
ஆனால், நாம் ஆங்காங்கே இணைப்பை விட்டுவிடுகிறோம். பாரதமே விழித்தெழு என்று அவர் குறிப்பிட்டது எதை? அவர் ஆன்மிகம் என்று எதைச் சொன்னார்? பாரதத்தின் பின்னணி என்ன? இதையெல்லாம் கற்றுக்கொள்வதை விட்டுவிட்டோம்.
நமது கடமைகளில் முக்கியமானது விவேகானந்தரை ஆழமாகப் படிப்பது; பலரைப் படிக்க வைப்பதிலிருந்தே பாரதம் விழித்தெழ முடியும்.
இப்படிச் செய்தால் ‘பாரதமே விழித்தெழு’ என்பதில் நாம் முதல் அடியை எடுத்து வைத்துவிட்டோம் என்று பொருள்.
- நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (அக்டோபர் 2013).
$$$