-டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888- 1975), சிறந்த தத்துவ மேதை. சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே…

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆன்மிகப் பிரசாரம் செய்துவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பினார். அப்போது சென்னை மாநகர மக்கள்தான், அவருக்கு முதன்முதலில் மிகவும் சிறந்த முறையில் ஒரு மாபெரும் வரவேற்புக் கொடுத்தார்கள்.
சமுதாயச் சீர்திருத்தத்துக்குப் பாடுபட்டவர் விவேகானந்தர். அவருடைய சிறந்த குணம், எல்லோருக்கும் நல்ல ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. சென்னையில் நான் மாணவனாக இருந்தபோது, சுவாமி விவேகானந்தரின் நூல்களும் சொற்பொழிவுகளும் மாணவர்களிடம் விநியோகிக்கப்பட்டன. 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுவாமி விவேகானந்தரின் அருள்வாக்குகள், மாணவர்களை மந்திரத்தில் கட்டுண்டவர்கள் போன்று மயக்கிவிட்டன. இதை நான் மாணவனாக இருந்தபோது, என் அனுபவத்தில் கண்டேன்.
முழுமையான வாழ்க்கை:
இந்தியாவின் சாஸ்வதமான குரலை, சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் பிரதிபலிக்கின்றன. அந்த அறிவுரைகளை, உலக வரலாற்றில் நெருக்கடியான இந்த நேரத்தில் நாம் புரிந்துகொண்டு, அவற்றின் வழியில் நடந்தாக வேண்டும்.
சுயநலமின்மை, தைரியம், மனிதகுலத்திற்குத் தொண்டு செய்தல், தேசபக்தி ஆகியவற்றின் மூலமாகத்தான் மனித வாழ்க்கையின் லட்சியம் முழுமையடையும் என்பது, அந்த மகான் அருளிய உபதேசமாகும். இதை நாம் அனைவரும் பின்பற்றியாக வேண்டும். மனித மாண்புகளில் நம்பிக்கை இழப்பதும், மனித மதிப்புகளைத் திரித்துக் காட்டுவதும் – மனித இயல்பை அவமானப்படுத்துவதாகும். சுவாமி விவேகானந்தரின் பூர்வாசிரமப் பெயர் நரேந்திரநாத் என்று இருந்தது, தற்செயலாக நேர்ந்த ஒரு விஷயமல்ல.
மனிதகுலம் ஒன்று:
மனிதகுலம் முழுவதையும் நாம் ஒரு குடும்பமாக நினைக்க வேண்டும் என்று, சுவாமி விவேகானந்தர் போதித்து வந்தார். இந்த ஆன்மிக தத்துவத்தைத் தான் அவர் உலகிற்குப் போதித்தார். ஆன்மிகம் என்பது – புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் கிடைத்து விடுவதில்லை; அது வாழ்க்கையின் நிரந்தரமான உண்மைகள் பற்றிய ஆழ்ந்த அனுபூதி நிலையாகும்.
ஒருவர் வாழ்க்கையில் இறையனுபூதி பெறுவதற்கு, வறட்டு சித்தாந்தம் அடிப்படையாக இருக்க முடியாது என்பது, என்றென்றும் இந்தியாவின் வழியாக இருந்து வந்திருக்கிறது. வாதப் பிரதிவாதங்கள் மூலம் இறையனுபூதியைப் பெற முடியாது என்பது தான் இந்துக்களின் நம்பிக்கை. நம் நாட்டின் இந்த நம்பிக்கைக்கு, மிகவும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக சுவாமி விவேகானந்தர் இருந்தார். எல்லா மத நம்பிக்கைகளையும் விட, மனிதகுலம் ஒன்று என்ற உணர்வு மிகவும் மேலானது என்று, சுவாமி விவேகானந்தர் கருதினார்.
இந்த நிரந்தரமான உண்மையைத் தான் அவர், சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் எடுத்துக் கூறினார். விவேகானந்தர் தேசபக்தியோடு இணைந்த ஆன்மிகத்தைப் பரப்பியவர். அவரது தேசபக்தி குறுகியதாக இல்லாமல், மனிதகுலம் முழுவதையும் அரவணைத்து ஏற்றுக்கொண்டது.
எல்லா மக்களையும் உறவினர்களாகவும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் நாம் காண வேண்டும் என்பது தான், அவர் புகட்டிய மதமாகும். இந்தக் கருத்தைக் கொண்ட மதத்தைத் தான் அவரும் பின்பற்றினார்; நாமும் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். இதை அவர், சிறந்த மனிதர்களை உருவாக்கும் மதம் என்று குறிப்பிட்டார். அவர் காட்டிய ஆன்மிகத்தில், மனிதாபிமானம் நிறைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். அதில் தியான வாழ்க்கைக்கும், சமுதாயத் தொண்டிற்கும் முரண்பாடு எதுவும் இல்லை.
இந்தியாவின் தகுதி வாய்ந்த நன்மக்கள்:
தியாகம், தொண்டு ஆகிய இரண்டு சொற்கள் மூலமாகவும் அவர் ஒரு கருத்தைத் தான் கூறியிருக்கிறார். இறைவனைப் பற்றிய கருத்து நமக்குச் சுய அனுபவமாகும்போது, இயல்பாகவே நாம் துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்ய முன்வருவோம். ஆதலால், இந்த உயர்ந்த மனிதர் எதற்காக வாழ்ந்தார்? மக்களுக்கு அவர் எதைப் போதித்தார்? என்பதை நாம் நினைவில்கொள்வது முற்றிலும் அவசியம்.
அதை நினைவில் கொள்வது மட்டுமன்றி, நாம் என்ன செய்ய வேண்டும்? என்று அவர் விரும்பினார் என்பதையும், நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அவரது அறிவுரைகளைக் கிரஹித்து, நம் முன்னால் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் விவேகானந்தரை உருவாக்கிய இந்தியாவின் தகுதி வாய்ந்த நன்மக்களாக நாம் விளங்க வேண்டும்.
- நன்றி: ஸ்ரீ மீனாட்சி மலர் – 2010
$$$