சுவாமி விவேகானந்தர்: காந்திஜியின் முன்னோடி

-லா.சு.ரங்கராஜன் 

அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்;  மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே….

ஆம்! ‘எழுமின், விழிமின்!; லட்சியத்தை அடையும் வரை ஓயாதீர்!’ என்ற சுவாமி விவேகானந்தரின் (1863 – 1902) அறைகூவல், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தேசமெங்கும் எதிரொலித்தது.

அவரது உணர்ச்சிமிக்க உரைகள் தேசிய எழுச்சியை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தது. விவேகானந்தரின் சிந்தனைத் தாக்கத்தினால் தான் இந்த நாட்டில் சுதந்திர வேட்கை உதித்தது என்றால் அது மிகையன்று.

தத்துவார்த்த வேதாந்தத்தின் சிறப்பை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துரைத்த விவேகானந்தர், இந்தியாவில் புதிய வேதாந்தத்தைப் புகுத்தி, ஒட்டுமொத்த சமுதாய உணர்வுக்கு வித்திட்டார்.

விவேகானந்தர் தமது ஆசான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு இறுதிக்காலம் வரை இந்து சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டுக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் அறைகூவுவதே தனது வாழ்வின் முக்கிய அம்சமாகக் கருதிச் செயல்பட்டார்.

எளிய மக்கள்பால் அவருக்கிருந்த அபரிமித அனுதாபமும் ஆதங்கமும் அவர்களை உய்விக்கும் ஆவேசமும் அவரது உரைகளிலும் ஏராளமான கடிதங்களிலும் பல்வேறாக வெளிப்படுகின்றன. தாம் ஓர் அரசியல்வாதி அல்ல என்று விவேகானந்தர் பலமுறை கூறியபோதிலும், ‘தேசபக்தத் துறவி’ எனப் பெயரெடுத்தார்.

இந்திய மக்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி, உறுதி படைத்த நெஞ்சர்களாக்கி, ஆன்மிகம் செரிந்த பாரதப் பண்பின் சிறப்பை எடுத்துரைத்து,  தேசப்பற்றை ஊட்டுவித்தார்.

மதச்சார்பின்மைக் கோட்பாடு, சமூக சமதர்மம், அடித்தள மக்களை மேம்படுத்துதல், மகளிர் சுதந்திரம், ஜனசக்தி, தீண்டாமை ஒழிப்பு, இந்து- முஸ்லிம் ஒற்றுமை, அனைவருக்கும் ஆதாரக் கல்வி- இவை யாவற்றிலும் விவேகானந்தரின் பங்கு கணிசமானது.

இவ்வாறு சுவாமி விவேகானந்தர் இந்திய மக்களை விழிப்புறச்செய்து அவர்களிடையே தேசிய ஆர்வத்தை விதைத்துப் பண்படுத்திய அரசியல் ராஜபாட்டையிலே தான் மகாத்மா காந்தி 1918-ல் காலடி பதித்து சுலபமாக வெற்றி நடை போட முடிந்தது.

விவேகானந்தரின் ஜென்ம தினத்தையொட்டி, 1921 ஜனவரி 30 அன்று பேலூர் ராமகிருஷ்ண தலைமை மடத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மகாத்மா காந்தி தமது உரையில், “மறைந்த மகான் விவேகானந்தரிடம் தமக்கு அத்தியந்த மரியாதையும் ஈடுபாடும் உண்டு” என்றார்.

“சுவாமிஜி எழுதியுள்ள பல புத்தகங்களை நான் ஆழ்ந்து படித்தறிந்துள்ளேன். எனது குறிக்கோள்கள் யாவுமே அந்த மாமனிதனின் லட்சியங்களுக்குப் பல்வேறு கூறுகளில் ஒத்ததாக அமைந்துள்ளது எனக் கண்டேன். இன்று மட்டும் விவேகானந்தர் உயிரோடிருந்திருந்தால் ஆன்மிகம் இழைந்த தேசிய விழிப்புக்கு நாங்களிருவரும் கைகோர்த்துப் பாடுபட்டிருப்போம். எனினும், அன்னாரது தெய்வதம் நம்மிடையே நிலவி வருகிறது. அவரது எழுச்சிமிகு பேச்சுகள் நம் அனைவருக்கும் உந்துதல் அளித்துவரும்’” என்றார்.  

      (‘கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி’, நூல் 19, பக்: 307-8).

தமக்கு வெகு முன்பாகவே கைராட்டையின் மகிமை பற்றி விவேகானந்தர் எடுத்துரைத்துள்ளார் என்பதை காந்திஜி அறிந்தபோது மகிழ்ச்சி மேலிட்டார். 1895-ல் நியூயார்க் நகரில் ஒரு கூட்டத்தில் அமெரிக்கர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு விவேகானந்தர் அளித்த பதிலில் பின்கண்ட வாசகத்தை தமது ‘யங் இந்தியா’ வார இதழில் (26-5-1927 தேதியிட்டது) காந்திஜி பெருமையுடன் பிரசுரித்தார்.

“சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் ஒரு கிராமத்துக்குச் சென்றபோது கைராட்டினத்தில் நூல் நூற்றுக் கொண்டிருந்த கிராமப் பெண் ஒருத்தி அவரிடம் இவ்வாறு கூறினாளாம்:  ‘எங்களிடம் துவைதம்,  அத்வைதம் பற்றியெல்லாம் பேசுவானேன்? கைராட்டையைச் சுழற்றும்போது எழும் மெல்லிய ஓசை,  ஸோ ஹம் (ஸோ+ அஹம்)  ஸோ ஹம் (நான் அவனே,  நான் அவனே) என ஒலித்து என்னைச் சிலிர்ப்பிக்கிறது’ என்றாளாம்.

அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த விவேகானந்தர், நியூயார்க் கூட்டத்தில் அதை இவ்வாறு விமர்சித்தாராம்: 

“இயந்திரங்களாலும் விஞ்ஞானத்தாலும் யாது பயன்? அறிவு பரவியுள்ளது; அவ்வளவே தான். வறுமை, பற்றாக்குறைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. அப்பிரச்னைகள் மேன்மேலும் கடினமாகி வருகின்றன. மெஷின்கள் ஏழ்மையை அகற்றவில்லை. போட்டா போட்டிகள் தான் மலிந்துவிட்டன. மக்கள் மேன்மேலும் உழைக்க வேண்டியுள்ளது. செயல் திட்டங்கள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குக் கடவுளின் விகசிப்பாகவும் ஆன்மிக இசையோடு கூடியதாகவும் உள்ளது என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும்” என்றாராம் சுவாமிஜி”.

     (‘யங் இந்தியா’ 26-5-1927).

இந்து தர்மத்தின் சகிப்புத்தன்மையையும் அனைவரையும் அரவணைக்கும் பரந்த நோக்கத்தையும் பற்றிய விவேகானந்தரின் விமர்சனம், அவை குறித்து காந்திஜி பிற்காலத்தில் எடுத்துரைத்த கருத்துகளுக்கு ஒப்பானவை.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் செப்டம்பர் 11, 1893-ம் ஆண்டு கூடிய உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை மிகப் பிரசித்தமானது. “எனதருமை அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!” என கணீரென கம்பீரமாக அவர் தமது சொற்பொழிவைத் தொடங்கியபோது, கூடியிருந்த சமயப் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்து மதத்தின் சகிப்புத் தன்மையையும் பரந்த நோக்கையும் பற்றி விவேகானந்தர் அன்று அங்கு கூறிய சொற்கள் அவரது சிந்தனைச் சாரத்தைத் தெள்ளத் தெளிய எடுத்துரைப்பதாக அமைந்தது.

சகிப்புத்தன்மையையும் சர்வசமய சம்மதத்தையும் இந்து தர்மம் வலியுறுத்துகிறது. ‘வெவ்வேறு ஓடைகளும் ஆறுகளும் வெவ்வேறு மூலங்களினின்றும் உற்பத்தியாகி, கடைசியில் அவற்றின் நீர் கடலில் ஒன்றாகக் கலப்பது போன்று, வெவ்வேறு மனப்பாங்கு கொண்ட மனிதர்கள் இறைவனை நாட பல்வேறு வழிகளை – அவை நேர் வழியோ, சுற்று வழியோ நெளிவு சுளிவான வழியோ எதுவாயினும் – பின்பற்றினாலும் அம் மார்க்கங்கள் யாவுமே, ஹே ஜகதீசா, உனையே வந்தடைகின்றன’ எனும் உபநிடத வாக்கை விவேகானந்தர் மேற்கோள் காட்டினார்.

காந்திஜியும் கருத்தை வேறு உவமானத்தோடு இவ்வாறு வரைந்துள்ளார்: 

“வெவ்வேறு சமயங்கள் ஒரு மரத்தின் இலைகள் போன்றவை. எந்த இலைகளும் ஒன்றுபோல் இல்லைதான். ஆயினும், அவற்றுக்கிடையிலோ அல்லது அவை உண்டான கிளைகளுக்கிடையிலோ பகைமை இல்லை”.

         (‘அரிஜன்’, 26-5-1946).

வேறொரு தருணம் காந்திஜி  “அடிப்படையில் சமயம் என்பது ஒரு விருட்சம் போன்றது. அதன் கிளைகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இல்லை எனினும்,  ஏதொரு கிளையும் மற்றொன்றைக் காட்டிலும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை” என எழுதியுள்ளார். (‘அரிஜன்’, 13-3-1937)

சிகாகோ உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் மற்றொரு நாள் உரையாற்றும்போது மத மாற்ற முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில்,   “ஒரு கிறிஸ்தவர் இந்துவாக மதம் மாற வேண்டும் என்பது என் நோக்கமா? கடவுள் சாட்சியாக என் நோக்கம் அவ்வாறு இல்லவே இல்லை. இந்துவோ புத்தமதத்தினனோ கிறிஸ்தவனாக மாற வேண்டும் என்கிறேனா? ஒருக்காலும் இல்லை. எந்த ஒரு மதமும் மற்ற மதங்களின் அடிப்படை சாராம்சத்தை உள்வாங்கித் தழைக்க வேண்டும். அதே சமயம், தமது மதத்தின் தனித்தன்மையைப் பாதுகாத்துப் பேணி நம் மதம் வகுத்துக்கொண்ட வழியில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே என் அறிவுரை” என்று விளக்கினார்.

இதே கருத்தைப் பிரதிபலிப்பது போன்று காந்திஜி தமது ‘யங் இந்தியா’ (19-1-1928)வில்,  “ஒரு இந்து, முன்னிலும் மேம்பட்ட இந்துவாகவும், ஒரு முஸ்லிம் முன்னிலும் சிறந்த முஸ்லிமாகவும், அதேபோன்று கிறிஸ்தவன் முன்னைக்காட்டிலும் மேலான கிறிஸ்தவனாகவும் பரிமளிக்க வேண்டும் என்பதே நமது உள்ளார்ந்த பிரார்த்தனையாக அமைய வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

இதே கருத்தை 1947, டிசம்பர் 27 அன்று புது தில்லியில் நிகழ்த்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் திரும்பவும் வலியுறுத்தினார்.

(‘கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி”,  நூல் 90, பக்: 293).

பரம ஏழை மக்களை தரித்திர நாராயண சொரூபிகளாகக் கண்டு அவர்களின் வறுமையைப் போக்கும் வழிபாட்டை மேற்கொள்ளல் வேண்டும் என்ற புதிய கருத்தை சுவாமி விவேகானந்தர் தான் விதைத்தார்.  “நீர் கடவுளை எங்கு சென்று தேடுவீர்? ஏழை, எளியோர், நலிவுற்றோர், தாழ்த்தப்பட்டோர் அனைவரும் கடவுளின் அம்சங்களேயாம். தரித்திர நாராயணக் கடவுளின் வழிபாட்டாக அவர்களுக்கு சேவை செய்ய விழைந்தால் என்னவாம்?” என்று 1894, அக்டோபர் 27 அன்று நண்பர் ஒருவருக்கு விவேகானந்தர் எழுதியுள்ளார்.

வேறொரு கடிதத்தில், “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ (உன் அன்னையை கடவுளாக பாவிக்கவும், உன் தந்தையையும் ஆசானையும் அவ்வாறே கடவுளாக நோக்கு) என்பது பண்டைய அறநூல்கள் புதிய மாணாக்கர்களுக்குப் போதிக்கின்றன. ஆனால், தரித்திர தேவோ பவ என்பேன், எழுதப் படிக்கத் தெரியாத, அறியாமைக்குரிய, ஏழை ஜனங்களுக்கு உதவி புரிவதே உங்கள் சமய தர்மமாகும். அதுவே தரித்திர நாராயண சேவை” என்று விவேகானந்தர் அறிவுறுத்தியுள்ளார்.

(‘சுவாமி விவேகானந்தர்’, வி.கே.ஆர்.வி. ராவ் எழுதியது;

மத்திய அரசு பிரசுர இலாகா பதிப்பு).

காந்திஜி 1922-24-ல் எரவாடா மத்திய சிறைக்கூடத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது படித்த வெகு பல நூல்களுள், ‘விவேகானந்தரின் எழுத்துகள்’, மற்றும் ‘ராஜயோகம்’ ஆகியவையும் அடக்கம். அதன் பின்னரே காந்திஜி ஏழைகளையும் தீண்டாதோரையும் தரித்திர நாராயணனின் அம்சங்கள் எனக் கூறத் தொடங்கினார்.

“சுவாமி விவேகானந்தர் மதாச்சாரியராகவே நாள் கழித்த போதிலும், தேசபக்தி எழுச்சிக்கு அவர் பெரியதோர் மூலதனமாக நின்றார்” என்றும், “விவேகானந்தரின் வேதாந்தப் பிரச்சாரம் நமது தேசபக்தி முயற்சிக்குத் தாய் முயற்சியாக அமைந்தது” என்றும், நூறு ஆண்டுகளுக்கு முன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமது ‘இந்தியா’ (26-11-1906 மற்றும் 15-5-1909) வார இதழ்களில் பொறித்த வாசகம் மிக மிகப் பொருத்தம் அன்றோ! 

 • நன்றி: ‘தினமணி’ (12.01.2012)  

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s