பாரதி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் திரு. ஜனனி ரமேஷ்: வாழ்க்கைக் குறிப்பு

-ஆசிரியர் குழு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இயங்கி வரும் சென்னையைச் சார்ந்த எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ் அவர்கள் இந்த ஆண்டு, விஜயபாரதம் பிரசுரம் வழங்கும், மொழிபெயர்ப்புக்கான பாரதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஓரியண்டல் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான இவர், சட்டம், இலக்கியம், வரலாறு, வர்த்தகம், அரசியல், இதழியல் என பல்வேறு துறைகளில் பட்டங்கள் பெற்றவர்.

பட்டுக்கோட்டையைச் சார்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி- ஜெயலட்சுமி தம்பதியரின் மகனாக 1959 செப். 16இல் பிறந்தவர் திரு. ரமேஷ். இவரது புனைப்பெயரான  ‘ஜனனி ரமேஷ்’ இயற்பெயரை மீறி நிலைத்துவிட்டது. இவரது தந்தை இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவர். சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய அரசு அதிகாரியாக சென்னையில் பணியாற்றினார். எனவே சென்னையில் ரமேஷ் வளர்ந்தார்.

எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் ஆரம்பக் கல்வி, திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்தார். திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (அரசியல் அறிவியல்), மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. (காந்திய சிந்தனை), முதுநிலை பட்டயம் (இதழியல்), (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பில். (வரலாறு), எம்.பி.ஏ. (சுற்றுலா), பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பி.எல்., சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். (தமிழ்), மும்பை காப்பீட்டுக் கல்வி நிறுவனத்தில் ஏ.ஐ.ஐ.ஐ. ஆகிய பலதுறைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர் ஜனனி ரமேஷ். இதன் பயனாக, பல துறை நூல்களை எளிதில் மொழிபெயர்ப்பவராக மாறினார்.

தனது பதினான்காம் வயதில்‘கோகுலம்’ சிறுவர் இதழில் முதல் சிறுகதை வெளியானது.  ‘இதயம் பேசுகிறது’,  ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் ‘ஜூனியர் போஸ்ட், விகடன் பேப்பர்’,  நாணய விகடன்’,  வலம், ஆழம் ஆகிய பத்திரிக்கைகளில்  தொடர்ந்து எழுதியுள்ளார். ‘விகடன்.காம்’ இணைய தளம் தொடங்கப்பட்ட நாள்முதல் சுமார் பத்து ஆண்டுகாலம் தினந்தோறும் வணிகச் செய்திகளை வழங்கியுள்ளார்.   

தினமணி,  தமிழ் இந்து (மாயாபஜார்), தினமலர் (பட்டம்), கலைமகள், அமுதசுரபி, விஜயபாரதம் ஆகிய பத்திரிகைகளிலும், தொழில், மருத்துவம், வணிகம், கட்டுமானம் உள்ளிட்ட துறை சார்ந்த இதழ்களிலும் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அகில இந்திய வானொலியில் இவரது சிறுகதைகளும், கவிதைகளும், பிரபலங்களுடனான நேர்காணல்களும் ஒலிபரப்பாகி உள்ளன. மொழிபெயர்ப்புகள் உள்பட எழுதிய நூல்களின் எண்ணிக்கை: 39.

இவரது நூல்களின் பட்டியல்:

இலக்கியம் / ஆன்மிகம்

  • தமிழ் அறிஞர்கள்
  • திருவள்ளுவர்: வரலாற்றுத் தேடல்
  • சைவ ஆதீனங்கள்
  • ஹிந்துத்வம் (மொழிபெயர்ப்பு நூல்; மூலம்:ஜே. நந்தகுமார்)
  • நாலடியார்: மூலமும் உரையும்
  • உதயண குமார காவியம்: நாவல் வடிவில்

வாழ்க்கை வரலாறு:

  • சச்சின் டெண்டுல்கர்
  • தலாய் லாமா
  • முசோலினி
  • ஜூலியஸ் சீசர்
  • ஔரங்கசீப்  (மொழிபெயர்ப்பு: மூலம்: ஆட்ரே ட்ரஷ்கெ)
  • நெல்சன் மண்டேலா
  • ருக்மிணி தேவி அருண்டேல் (மொழிபெயர்ப்பு; மூலம்: வி.ஆர்.தேவிகா)
  • ஜனநாயகன் – பாரத ரத்னா  கர்பூரி தாக்கூர் (பிகார் முன்னாள் முதல்வர்)

வரலாறு  / அரசியல்:

  • இந்திய அரசியல் வரலாறு (மொழிபெயர்ப்பு; மூலம்: கிருஷ்ணகாந்த்)
  • தெலங்கானா
  • இந்திய சீனப் போர் (மொழிபெயர்ப்பு; மூலம்: மேக்ஸ்வெல்)
  • தேசத் தந்தைகள் (மொழிபெயர்ப்பு; மூலம்: ராஜ்மோகன் காந்தி)
  • பிரேந்திர குமார் கோஷ் (அரவிந்தரின் சகோதரர்) அந்தமான் சிறை அனுபவங்கள்
  • சாவர்க்கரின் வாக்குமூலம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு)
  • நேருவின் இந்தியா (மொழிபெயர்ப்பு; மூலம்: மானஷ் ஃபிராக் பட்டாசார்ஜி)
  • உலக வரலாறு (மொழிபெயர்ப்பு; மூலம்: ஹெச்.ஜி.வெல்ஸ்)
  • சிறுவர்களுக்கான பிரபல ஆங்கிலக் கதைகள் தமிழில் – பாகம் 1
  • சிறுவர்களுக்கான பிரபல ஆங்கிலக் கதைகள் தமிழில் – பாகம் 2
  • Grandpa Stories

புதினங்கள்:

  • விதியின் சிறையில் மாவீரன் (மொழிபெயர்ப்பு; மூலம்: துர்காதாஸ்)
  • சிந்து சமவெளி சவால் (மொழிபெயர்ப்பு; மூலம்: துர்காதாஸ்)

சிறுவர் இலக்கியம் (கையடக்கப் பிரதி):

  • சீன மதங்கள்
  • நைட்டிங்கேலும் ரோஜாவும்
  • கலிவரின் பயணங்கள்
  • ஹகிள்பெர்ரி ஃபின்
  • இளவரசனும் ஏழையும்
  • டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட்
  • ஆண்டனி & கிளியோபாட்ரா
  • தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்
  • 80 நாள்களில் உலகைச் சுற்றி
  • டெம்பெஸ்ட்
  • சுவிஸ் ஃபேமிலி ராபின்சன்

பரிசுகளும் விருதுகளும்:

  • தமிழக அரசு – தமிழ் வளர்ச்சித் துறை – ‘தமிழ் அறிஞர்கள்’ நூலுக்குப் பரிசு
  • அமரர் தேவன் அறக்கட்டளை விருது
  • கவிஞர் பாரதன் – பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, தேனி – ‘தமிழ் அறிஞர்கள்’ மற்றும் ‘திருவள்ளுவர்’ நூல்களுக்குப் பரிசும்  பாராட்டும்/
  • கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணனின்  கவிதை உறவு – ‘எழுத்துச் செல்வர்’ விருது
  • பில்டர்ஸ் லைன் – ‘சிறந்த எழுத்தாளர்’ விருது
  • இலக்கியச் சோலை – ‘கவி முகில்’ விருது
  • தமிழ்நாடு சிற்றிதழ்கள் பதிப்பாளர் சங்கம் – ‘பயனெழுத்துப் படைப்பாளி’ விருது
  • வணிகமணி – ‘சிறந்த எழுத்தாளர்’ விருது.

இவரது மனைவி சாந்தி. மகள்: ஜனனி; இரு பேரன்கள். பணி ஓய்வுக்குப் பிறகு மிகவும் தீவிரமாக எழுத்துப் பணியில் இயங்கி வருகிறார்.

இவரது முகவரி:

திரு. ஜனனி ரமேஷ்,
5 / 24 முகப்பேர் மேற்கு,
சென்னை – 600 037.
போன்:  98400 95919
மின் அஞ்சல்: writerjhananiramesh@gmail.com

$$$

Leave a comment