– சுவாமி ததாகதானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி ததாகதானந்தர் (1923- 2016), ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் வேதாந்த சொஸைட்டியின் நிர்வாகியாக இருந்தவர். ராமகிருஷ்ணர், அன்னை சாரதை, சுவாமி விவேகானந்தர் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் அன்னை குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...

இந்தியக் குடும்பங்களில் ஒரு தாய்க்கான ஸ்தானத்தை சுவாமி விவேகானந்தர் இவ்வாறு வரையறுத்துள்ளார்:
எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள். உலகில் தன்னலம் சிறிதும் அற்ற, உண்மையான அன்பு ஒரு தாயிடம் மட்டுமே உள்ளது. அந்த அன்பினால் அவள் எப்போதும் துன்புற்றுக் கொண்டு இருப்பாள்: அதே சமயம் எப்போதும் அன்பைப் பொழிந்து கொண்டே இருப்பாள். அன்னையிடம் நாம் காணும் அன்பைவிட வேறெந்த அன்பு இறைவனின் அன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்க முடியும்? எனவே இந்த உலகில் ஓர் இந்துவுக்குத் தாயே இறைவனின் அவதாரமாகும்.
“மேலைநாட்டில் லட்சியப் பெண்மை என்பது மேலைநாடுகளைப் பொருத்தவரையில் மனைவி, கீழை நாடுகளிலோ அது தாய்மை” என்றார் சுவாமிஜி.
சுவாமிஜி வாழ்நாள் முழுவதும் தம் அன்னையை வாழும் தேவியாகவே கண்டு சேவை செய்தார்.
சுவாமிஜியின் ஒரே உலகியல் பிணைப்பு
துன்பத்தில் உழலும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகுடன் சுவாமிஜியைப் பிணைக்க அவரது குருநாதர் துண்டிக்கப்படாத ஒரு பிணைப்பை வைத்திருந்தார்.
தமது அன்னை புவனேஸ்வரி தேவியிடம் சுவாமி விவேகானந்தர் கொண்டிருந்த என்றும் மாறாத அன்பும், பொறுப்புணர்ச்சியுமே அந்தப் பிணைப்பு.
தமது இறுதிக்காலத்தில் சுவாமிஜி கேத்ரி அரசருக்கு பேலூர் மடத்திலிருந்து 22.11.1898 அன்று இவ்வாறு கடிதம் எழுதினார்:
என் மனதில் உள்ளதை உங்களிடம் திறந்து கூற எனக்கு எந்த நாணமும் இல்லை. இந்த வாழ்க்கையில் உங்களை மட்டுமே எனது நண்பராகக் கருதுகிறேன்.
என் மனதை அரித்துக் கொண்டிருக்கின்ற மகா பாவம் ஒன்று உள்ளது. உலகிற்குச் சேவை செய்வதற்காக நான் என் தாயை வருந்தத்தக்க விதத்தில் புறக்கணித்ததே அது..
எனவே இனி சில வருடங்களாவது என் தாய்க்குச் சேவை செய்ய வேண்டும் என்பது எனது கடைசி விருப்பமாக உள்ளது. நான் என் தாயுடன் வாழ விரும்புகிறேன். இது எனது இறுதி நாட்களையும் என் தாயின் இறுதி நாட்களையும் மனதிற்கு இதமானதாக ஆக்கும்.
அவர் இப்போது ஒரு சிறு குடிசையில் வசிக்கிறார். அவருக்கு அடிப்படை வசதிகள் கொண்ட ஒரு சிறிய வீடாவது கட்டுவதற்கு விரும்புகிறேன்.
-இக்கடிதத்திலுள்ள ஒவ்வொரு சொல்லிலும், எண்ணத்திலும், உணர்ச்சியிலும் தன் அன்னையிடம் சுவாமிஜிக்கு இருந்த உளம் கனிந்த அன்பு சொட்டுச் சொட்டாய் ஊறியிருக்கிறது என்றே கூறலாம்.
எஃகின் உறுதியும் மலரின் மென்மையும் ஒன்றிணைந்த அரியதொரு கலவை அவரிடம் இருந்ததை இக்கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.
01.12.1898 சுவாமிஜி மன்னருக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார்:
மேலும் ஒரு வேண்டுகோள், முடிந்தால் என் அன்னைக்கு நிரந்தரமாக மாதம் ரூ. 100 வழங்க வேண்டும். என் மரணத்திற்குப் பின்னும் அது தொடர வேண்டும், மேலும் மதிப்பிற்குரிய தங்களின் அன்பும் கருணையும் என் மீது எந்தக் காரணத்தினாலாவது குறைந்தாலும், ஒரு காலத்தில் ஓர் ஏழைத் துறவியிடம் தாங்கள் கொண்ட அன்பை நினைவில் கொண்டு என் எளிய தாய்க்கு அந்த உதவியைத் தொடர வேண்டும்.
கடிதத்தைப் பெற்றதும் கேத்ரி மன்னர் சுவாமிஜிக்கு ரூ. 500 உடனடியாக அனுப்பி வைத்தார்.
ஆனால், பல்வேறு காரணங்களினால் வீடு கட்டுவது கைவிடப்பட்டது.
சில காலத்திற்குப் பின் சுவாமிஜி ரூ. 5000 கடன் பெற்றுத் தன் சித்தியிடமிருந்து ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் சித்தியோ வீட்டு உரிமைப் பத்திரத்தைத் தர மறுத்து அவரை முற்றிலும் ஏமாற்றிவிட்டார்.
இரண்டாம் முறை அமெரிக்காவில் தங்கியிருந்த போது தமது அன்னையையும், அவருடைய பிரச்னைகளையும் பற்றி சுவாமிஜி மீண்டும் சிந்தித்தார்.
இது குறித்து 17.01.1900 அன்று திருமதி ஒலே புல்லுக்கு சுவாமிஜி இவ்வாறு எழுதினார்:
மடத்தின் அனைத்துக் கவலைகளையும் விட்டுவிட்டு என் அன்னையிடம் சிறிது காலம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவரது இறுதிக் காலத்திலாவது சிறிது ஆறுதல் அளிக்க நான் முயல வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா? மகானான ஆதிசங்கரர் கூட இதைச் செய்ய வேண்டியிருந்தது.
1884 ஆம் ஆண்டில் அன்னையை நான் பிரிந்தது பெரிய துறவு. இப்போது அன்னையிடம் திரும்பிச் செல்வது அதைவிட மிகப் பெரிய துறவு.
07.03.1900 அன்று திருமதி ஒலே புல்லுக்கு சுவாமிஜி ஒரு கடிதம் எழுதினார்:
என் வாழ்நாள் முழுவதும் என் அன்னைக்குப் பெரும் சித்ரவதையாக இருந்திருக்கிறேன். அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு தொடர் துயரமாகவே இருந்து வருகிறது. முடிந்தால், அவரைச் சிறிது மகிழ்ச்சியாக வைத்திருப்பதே எனது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். நான் அனைத்தையும் திட்டமிட்டு வைத்துள்ளேன்.
26.07.1900 அன்று சுவாமிஜி அமெரிக்காவை விட்டு இந்தியாவிற்குத் திரும்பினார்.
தமது அன்னைக்குச் செய்ய வேண்டிய புனிதக் கடமை என்று கருதிய எதையும் அவர் ஒருபோதும் ஒதுக்கியதில்லை. அவர் அவ்வப்போது தமது அன்னையைச் சென்று கண்டு வந்தார். அவருடைய பொருளாதார மற்றும் குடும்பப் பிரச்னைகளையும் தம்மால் முடிந்த அளவு தீர்த்து வைக்கவும் முயற்சிகள் செய்தார்.
சுவாமிஜி மகாசமாதி அடைந்தபோது (1902) அவரது அன்னையின் வயது 61. அன்னையிடம் சுவாமிஜிக்கு ஆழ்ந்த அன்பு ஏற்படக் காரணமாக இருந்த தூய்மை, புனிதம் ஆகியவை நிறைந்த புவனேஸ்வரி தேவியின் இயல்பையும் அவர் சுவாமிஜியிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் புரிந்து கொள்வது எளிதல்ல.
சுவாமிஜியின் பெற்றோரின் பின்னணியைப் பற்றிச் சிறிதாவது அறிமுகம் இல்லாமல் இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

புவனேசுவரி தேவியின் இயல்பு
நமது பண்டைய நீதிகளின் தொகுப்பாளரான மனு எழுதுகிறார்:
பக்தி செலுத்துவதற்கு உரியவர்களாக விளங்குபவர்களைப் பொருத்த வரை, ஆசிரியர் ஒரு சொற்பொழிவாளரைவிடப் பத்து மடங்கும், தந்தை ஓர் ஆசிரியரைவிட நூறு மடங்கும், தாய் ஒரு தந்தையைவிட ஆயிரம் மடங்கும் உயர்ந்தவர்.
குழந்தைகளின் பண்பாட்டுக் கல்விக்கு முற்றிலும் பொறுப்பானவர்கள் அன்னையரே. நாட்டின் மொத்த எதிர்காலமும் அவர்களிடமே உள்ளது.
சுவாமிஜியின் பக்திக்கு உரியவரான அவரது அன்னை இத்தகைய ஓர் ஒப்பற்ற பெண்மணி ஆவார். இந்தியப் பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கும் நற்பண்புகளின் முழு உருவம் அவர்.
தம் வாழ்நாள் முழுவதும் சோதனைகள், இன்னல்கள், ஏழ்மை ஆகியவற்றைப் பெரும் கண்ணியத்துடன் தாங்கிக் கொண்டு நாடு முழுவதும் சுற்றியலையும் துறவியாக உலக ஆசானாகத் தமது தலைமகனான நரேந்திரரை வழங்கியவர் புவனேஸ்வரி தேவி.
வடக்கு கொல்கத்தாவில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பெற்றோரின் ஒரே மகள் அவர். அவர் சற்றே குள்ளம். ஆயினும் அழகு மிக்கவர். நரேந்திரரின மிடுக்கான நடை இவரிடமிருந்து வந்தது தான்.
16 வயதுடைய விசுவநாத தத்தரை மணந்தபோது புவனேஸ்வரி தேவியின் வயது 10 மட்டுமே. இந்துப் பண்பாட்டின் சின்னமாய், கணவருக்கு உற்ற துணையாய், அவரது பெரிய கூட்டுக் குடும்பத்தின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு கொள்பவராய் புவனேசுவரி தேவி இருந்தார்.
சுவாமிஜியின் தந்தை விசுவநாதர் பரந்த மனம் படைத்தவர். பிற மதங்களின் கலாச்சாரத்ததையும் இலக்கியங்களையும் நன்கு ரசிப்பவர்.
சுவாமி சாரதானந்தர் கூறினார்:
வேண்டிய அளவு பொருள் ஈட்டுதல், மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் கொடைத் தன்மை. இவையே விசுவநாதரின் வாழ்க்கை லட்சியமாக இருந்தன. வுழக்கறிஞராக இருந்து அவர் ஈட்டிய வருவாய் அனைத்தும் அவரை அண்டியிருந்த பலரைப் பேணவே பெருமளவில் செலவிடப்பட்டது.
பாதுகாக்க வேண்டிய சிறிய மாமனாரும் மாமியாரும் மாற்றுப் புடவை கூடத் தராமல் அநீதி இழைத்துக் கடுமையாக நடத்திய போதிலும் அதைப் பொறுமையாகச் சகித்துக் கொண்டார் புவனேஸ்வரி தேவி.
நீண்ட நாட்களுக்குப் பிறகே இதைக் கவனித்த அவரது கணவர் நான் இவ்வளவு சம்பாதித்தும் என் மனைவிக்கு வயிறார உணவு கிடைக்கவில்லையே என ஒருமுறை வேதனையுடன் கூறினார்.
கூட்டுக் குடும்பத்தின் தலைவரான மனசாட்சியற்ற சிற்றப்பா பிறருடன் சேர்ந்து கொண்டு நியாயமாக அவர்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை ஒவ்வொரு முறையும் மறுத்து வந்தார்.
அத்தகைய சூழலில் புவனேஸ்வரி அந்தக் குடும்பத்தில் அனுபவித்த வேதனைகள் எவ்வளவு இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கலாம்.
சுவாமிஜி தன் அன்னையைப் பற்றிக் கூறியவற்றை சகோதரி கிறிஸ்டைன் நினைவு கூர்கிறார்:
ராமாயணத்தைப் படிக்கக் கேட்டு கேட்டதை அப்படியே திரும்ப ஒப்பிக்கக்கூடியவர் புவனேஸ்வரி தேவி. சுவாமிஜி நல்ல நினைவாற்றல் கொண்டிருப்பதை ஆன்மிகத்திற்கு ஓர் அடையாளமாகக் கருதினார்.
தம் அன்னையைப் பற்றிய பல நிகழ்ச்சிகளை சுவாமிஜி கூறினார். அவரிடம் தனக்குள்ள உணர்ச்சிகளையும் பெருமையையும் மறைத்துக்கொள்ள மிகவும் முயன்றார். பெருமைமிகு அப்பெண்மணி புவனேஸ்வரி தேவி, சுவாமிஜி தேர்ந்தெடுத்த துறவற வாழ்வில் ஒப்புதல் இன்மை, அதே சமயம் அவர் அடைந்த புகழில் பெருமை ஆகிய இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையில் எப்படி அலைக்கழிக்கப்பட்டார்.
சுவாமிஜியின் அன்னையைக் காணும் பேறு பெற்ற எங்களுள் சிலர் தமது கம்பீரமான தோற்றத்தை சுவாமிஜி அவரிடமிருந்து தான் பெற்றிருக்கிறார் என்பதை அறிவோம். இந்தச் சிறிய பெண்மணி ஓர் அரசி போன்று கம்பீரமாக விளங்கினார்.
சுவாமிஜியின் அன்னையை வயது முதிர்ந்த நிலையில் கண்ட அவரது சீடரான மன்மதநாத் கங்குலி இவ்வாறு கூறுகிறார்:
அன்னையின் தோற்றமே பெருமதிப்பிற்கு உரியது. நீண்ட புருவங்களும் பெரிய அழகிய கண்களும், உறுதியான உடல் வலிமையும் கொண்டவர் அவர். எதிர்ப்பேச்சுக்கு இடமின்றிப் பணிய வைக்கும் ஆளுமைச் சிறப்பைக் கொண்டவர் அவர். சுவாமிஜி இந்தக் குணநலன்களை அவரிடமிருந்து பெற்றதில் வியப்பு ஏதுமில்லை.
புவனேஸ்வரி தேவியின் விரதங்கள்:
இயல்பாகவே புவனேஸ்வரி தேவி மகன் வேண்டும் என்று விரும்பினார். சிவபெருமானைக் குறித்து திங்கட்கிழமைகளில் உபவாசம் மேற்கொள்வது மற்றும் பிரார்த்தனைகள் ஆகியவற்றை அவர் கடைப்பிடித்தார்.
புவனேஸ்வரி ஒரு மகனைப் பெற வேண்டி காசி வீரேசுவர சிவனிடம் பிரார்த்தனை செய்தார்.
ஒரு நாள் அவருக்குக் கனவு ஒன்று ஏற்பட்டது.
சிவபெருமான் தியானத்திலிருந்து எழுந்து ஓர் ஆண் குழந்தையாக வடிவெடுத்து அவருக்குப் பிறக்க இருப்பதை அதில் கண்டார்.
1863, 12 ஜனவரி திங்கட்கிழமையன்று ஒரு மங்களமான வேளையில் பாட்டனார் துர்க்கா பிரசாதரின் சாயலில் இறைவனின் வரமாகக் கிடைத்த அவர்களது மகன் நரேந்திரர் பிறந்தார்.
அன்னை புவனேஸ்வரி சிறந்த பக்திமதி. சிவபெருமானைத் தினமும் வழிபடுவார். அதிகம் பேசமாட்டார். ஆற்றல், அடக்கம், மற்றும் எல்லாச் சூழ்நிலையையும் இறைவனின் திருவுள்ளமாக ஏற்றுக்கொள்வது ஆகியவை அப்புனிதமான இந்துப் பெண்மணியின் இயல்புகள் ஏழைகளிடமும் ஆதரவற்றவர்களிடமும் அவர் மிகுந்த பரிவு கொண்டிருந்தார்.
வரமாகப் பெற்ற மகனை புவனேஸ்வரி தேவி மிகுந்த அக்கறை, எல்லையற்ற பொறுமை, தொடர்ந்த பிரார்த்தனை ஆகியவற்றுடன் வளர்த்தார். அப்படிப்பட்டவரின் உயிரே குழந்தை நரேந்திரராக (சுவாமி விவேகானந்தர்) வடிவெடுத்ததுபோல் இருந்தது.
ஒருமுறை சரியான காரணம் இன்றி நரேந்திரர் தன் பள்ளி ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார். அவர் இதைப் பற்றிக் கூறியபோது அவரது அன்னை கூறினார்:
“மகனே நீ செய்தது சரியானதே என்னும்போது அதற்காகத் தண்டிக்கப்பட்டால்தான் என்ன? உனக்கு வரும் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியற்றதாக, அநீதியாக இருந்தாலும் உனக்குச் சரியென்று தோன்றுவதையே எப்போதும் செய்”
வாழ்வின் இறுதிவரை சுவாமிஜி கற்றுக் கொண்டு உறுதியாகக் கடைப்பிடித்தது, வாழ்வோ, சாவோ கொண்ட கொள்கையில் உறுதியாக இரு என்பதாகும்.
சுவாமிஜியின் அன்னை நேர்மை, தூய்மை கண்ணியம், மனிதநேயம் போன்ற வாழ்விற்கு வேண்டிய மாறாத உயர் நெறிகளைத் தன் குழந்தைகளின் இளம் மனங்களில் ஆழமாக விதைத்தார்.
புவனேஸ்வரி தேவியின் பிற ஒப்பற்ற பண்புகள்:
புவனேஸ்வரி பெரிய சிக்கலான தன் கூட்டுக் குடும்பத்தைத் திறம்பட நிர்வகித்தார். மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டிருந்த அவர் தமது குழந்தைகளுக்குப் பண்பாட்டுக் கல்வி வழங்குவதில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார்.
கடுமையான வீட்டுவேலைகளுக்கு நடுவிலும் சுவாமிஜியின் அன்னை ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு நேரம் ஏற்படுத்திக் கொண்டார். பிற்காலத்தில் சகோதரி நிவேதிதை, சகோதரி கிறஸ்டைன் ஆகியோருடன் ஆங்கிலத்தில் உரையாட அவரால் முடிந்தது.
தமது மூன்று மகன்களுக்கும் ஆங்கில ஆரம்பப் பாடங்களை புவனேசுவரி தேவியே கற்றுத் தந்தார். வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய துன்பங்களுக்கு நடுவிலும் ஒருவர் எக்காரணத்தைக் கொண்டும் நல்லொழுக்க விதிகளைக் கைவிடக் கூடாது என்று ஆணித்தரமாக அவர்களுக்குக் கற்றுத் தந்தார்.
இனிய குரல் பெற்றிருந்த புவனேஸ்வரி தேவி நாடகங்களில் கேட்ட ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய பாடல்களை இனிமையாகப் பாடுவார். பக்திப் பாடல்களைப் பாடியவாறு அவரது வீட்டிற்குப் பிச்சை ஏற்க வரும் ஆண்டிகளின் பாடல்களை ஒருமுறை கேட்டதும் திரும்பப் பாடுவார்.
சுவாமிஜி தன் தாயின் சிறப்பான நினைவாற்றலைக் கொண்டிருந்தார். ராமாயணம், மகாபாரதத்தின் நீண்ட பகுதிகள் அவருக்கு மனப்பாடமாகத் தெரியும். அது மட்டுமல்லாமல் அழிவற்ற அந்த இதிகாசங்களின் உட்கருத்தை உள்வாங்கி அது உணர்த்தும் உயர்வான இந்துப் பண்பாட்டுடன் ஒன்று சேர்த்துத் தம் குழந்தைகளுக்குப் பரம்பரைச் சொத்தாக அளித்திருந்தார்.
தினமும் ராமாயணம், மகாபாரதம், அந்த நாளைய வங்க மொழி இலக்கியம் ஆகியவற்றறைப் படிப்பதற்கும், வங்கக் கவிதைகள் இயற்றுவதற்கும் நேரத்தை அவர் ஒதுக்கிக் கொண்டார்.
புவனேஸ்வரி தேவியும், விசுவநாதரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். விசுவநாதர் இளம் விதவைகள் மறுமணத்தைப் பெரிதும் ஆதரித்தார்.
பலரது கடும் எதிர்ப்புகளையும் மீறி அவர்கள் வசித்த பகுதியில் விதவைகள் மறுமணம் இரண்டு நடைபெற்றபோது அதற்கு ஆதரவு அளிப்பதில் கணவருக்கு புவனேஸ்வரி தேவி உறுதுணையாக இருந்தார்.
புவனேஸ்வரியின் பெருந்தன்மைக்கும், தியாக உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி:
அவரது மகள் ஜோகேந்திர பாலா 1891 –இல் 25 வயதில் தற்கொலை புரிந்துகொண்டார். அதன் பின் அவரது மருமகன் மறுமணம் செய்து கொண்டார். புதுமணப் பெண்ணைத் தன் வீட்டில் வரவேற்று அவளைத் தன் மகள் போலவே புவனேஸ்வரி நடத்தினார்.
1900-ம் ஆண்டில், கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெரும் மழை பெய்தது. அப்போது புவனேசுவரி தேவி தம் மகன் பூபேந்திரநாதர் மூலம் உணவுப் பொருள்களை காங்குர்காச்சி யோகோத்யானுக்கு அனுப்பி வைத்தார். அவற்றைக் கொடுப்பதற்காக இடுப்பளவு நீரில் பூபேந்திரநாதர் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
1884-ல் கணவர் மறைந்தபோது புவனேஸ்வரிக்கு வயது 43. விசுவநாதரின் மறைவுக்குப் பின் குடும்ப நிலைமை பெரும் வீழ்ச்சியிலிருந்து தப்புவதற்கு புவனேசுவரியின் திறமையே காரணம்.
அவரது அறிவுக் கூர்மையையும், துணிவுடன் பிரச்னைகளைச் சமாளிக்கும் திறமையையும் பற்றி சுவாமி சாரதானந்தர் விவரிக்கிறார்.
கணவரின் மறைவால் துயர நிலைக்கு வீழ்ந்துவிட்ட புவனேஸ்வரி தேவியின் மனவுறுதி பெருமளவுக்குச் சோதிக்கப்பட்டது. அந்தச் சோதனையான நாட்களில் பொறுமை, அமைதி, சிக்கனம், அவ்வப்போது மாறுகிற சூழ்நிலைக்குத் தக்கபடி நடந்து கொள்வது போன்ற நற்பண்புகளை அவர் வெளிப்படுத்தினார்.
மாதம் 1000 ரூபாய் செலவு செய்து குடும்பப் பொறுப்புகளை நிர்வகித்து வந்தவருக்கு 30 ரூபாய்க்குள் தன்னையும், தன் குழந்தைகளையும் பராமரித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
அவருடைய கணவரின் உதவியால் முன்னுக்கு வந்த உறவினர்களோ, அவர்களது நிலையைக் கண்டும் புவனேஸ்வரிக்கு உதவி செய்ய முன் வரவில்லை. மாறாக, சட்டப்படி அவருக்குரிய உடைமைகளைக் கூட எவ்வாறு அபகரிக்கலாம் என்றே திட்டமிட்டனர்.
இத்தகைய துன்பநிலையில் இருந்தபோதிலும் தமது பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றி வந்த புவனேஸ்வரியைப் பார்ப்பவர்கள் மனதில் இயல்பாகவே மரியாதை மேலோங்கியது.
அவரது மூத்த மகன் உடன் இல்லாமை, சட்டம் படிக்க இங்கிலாந்து சென்ற இரண்டாவது மகன் மகேந்திரநாதர் பற்றி எந்தவித தகவலும் இல்லாமை ஆகியவையும் சேர்ந்து அவருக்குப் பெரும் துன்பத்தை அளித்தன. சுவாமிஜியின் மறைவிற்குப் பின்னரே மகேந்திரர் கல்கத்தா திரும்பினார்.
பணமிழப்பு, மனதை உலுக்கும் துயரச் சம்பவங்கள் ஆகியவற்றின் இடையே 1903-ல் மூன்றாவது மகன் பூபேந்திரநாதர் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆங்கிலேய ஆட்சியால் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனைக்குப் பின் அவர் விடுதலை அடைந்தார்.
விடுதலையான அன்றே பூபேந்திரநாதர் சகோதரி கிறிஸ்டைனிடம் உதவி பெற்று அவரது அறிவுரைப்படி கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார். சில நாட்களுக்குப் பின் காவல் துறையினரிடமிருந்து தப்பி அவர் அமெரிக்காவிற்கு மாறுவேடத்தில் சென்றுவிட்டார்.
இந்த வீரமகனைப் பெற்றதற்காக புவனேஸ்வரி தேவியை வங்கப் பெண்மணிகள் பாராட்டினார்கள்.
புவனேசுவரி தேவி துயரத்துடன் இவ்வாறு கூறினார்: “பூபேனின் பணி இப்போது தான் தொடங்குகிறது. நான் அவனை நாட்டிற்காக அர்ப்பணித்துவிட்டேன்”.
சுவாமிஜி கொண்டிருந்த பக்தி:
சுவாமிஜி துறவியான பின்னரும் தம் அன்னையின் வறுமை நிலையை ஒருபோதும் மறந்ததில்லை. தமது வருத்தத்தையும் வேதனையையும் பிரதமதாச மத்ராவிடம் அவர் வெளிப்படுத்தியபோது அவர் புவனேஸ்வரிக்குப் பெரும் பணமுடிப்பு ஒன்றினை அனுப்பி வைத்தார்.
14 ஜூலை 1889 அன்று சுவாமிஜி கொல்கத்தாவிலுள்ள சமூலியாவிலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் குடும்பப் பெருமையை மனதில் கொண்டு அவரது அன்னை அந்தப் பணத்தை ஏற்க மறுத்தது பற்றி நமக்குத் தெரிய வருகிறது.
சுவாமிஜி மேலை நாடுகளுக்குச் செல்ல நினைத்த போது அவரது அன்னையைப் பற்றிய ஒரு கனவு அவரது மனதைப் பெரிதும் பாதித்தது. அதை அவர் இவ்வாறு விவரிக்கிறார்:
நான் மன்மத பாபுவின் வீட்டில் தங்கியிருந்தபோது ஒரு நாள் இரவு என் அன்னை இறந்துவிட்டதாகக் கனவு கண்டேன். எனது மனம் மிகவும் குழம்பியது.
என் இந்த நிலையைப் பார்த்த மன்மதர் ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் வசித்து வந்த ஆவிகளைக் கட்டுபடுத்தும் ஆற்றல் படைத்தவரும், மனிதரின் எதிர்காலம் கடந்த காலம் பற்றித் தெரிவிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவருமான கோவிந்த செட்டியிடம் போய் கேட்கலாம் என ஆலோசனை கூறினார். நானும் என் வேதனையை நீக்க விரும்பி அதற்கு ஒப்புக் கொண்டேன்.
நாங்கள் அந்த மனிதரைச் சந்தித்தபோது அவர் ஒரு பென்சிலால் சில உருவங்களை வரையத் தொடங்கினார். அதன் பின்னர் அவர் அசையாமல், தன் மனதை ஆழ்ந்து ஒருமுகப்படுத்தியதைக் கவனித்தேன். அதைத் தொடர்ந்து அவர் என் பெயர், குல வரலாறு, முன்னோர் பற்றிய விவரங்களைக் கூறினார்.
மேலும் ஸ்ரீராமகிருஷ்ணர் எப்போதும் என்னுடன் இருக்கிறார் என்றும் கூறினார். எனது அன்னையைப் பற்றி நல்ல செய்தியும் தெரிவித்தார். நான் கூடிய விரைவில் தொலைதூர நாடுகளுக்குச் சென்று இந்து மதம் பற்றிக் கூற வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
சுவாமிஜி 29 ஜனவரி 1894 அன்று தனது நண்பர் ஹரிதாஸ் விஹாரிதாஸ் தேசாய்க்கு எழுதுகிறார்:
உங்களது கடைசிக் கடிதம் எனக்குச் சில நாட்கள் முன்பு கிடைத்தது. துயரப்படுகின்ற எனது தாயையும், சகோதரர்களையும் நீங்கள் பார்க்கச் சென்றிருந்ததை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது இதயத்தின் மிக மென்மையான பகுதியை நீங்கள் தொட்டுவிட்டீர்கள்.
உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும். திவான்ஜி நான் ஒன்றும் கல்நெஞ்சக்காரன் அல்ல. இந்த உலகில் நான் யாரையேனும் ஒருவரை நேசிக்கிறேன் என்றால் அது எனது அன்னையே ஆவார். இருந்தாலும் நான் இந்த உலகைத் துறக்காமல் இருந்திருந்தால், என் குருதேவர் எந்த உண்மையை உலகிற்கு உபதேசிக்க நினைத்தாரோ, அந்த லட்சியமும் குறிக்கோளும் வெளிச்சத்திற்கு வராமலேயே போயிருக்கும் என நம்புகிறேன்.
ஒருபுறம், இந்தியா மற்றும் உலக மதங்களின் எதிர்காலம் பற்றி என் காட்சி. எந்த உதவியும் இல்லாமல் ஏன் அவர்களைப் பற்றிச் சிந்திக்கக்கூட யாருமில்லாமல் காலங்காலமாக அறியாமையில் மூழ்கிக் கொண்டே இருக்கிற லட்சக் கணக்கான மக்களிடம் நான் கொண்ட அன்பு.
மறுபுறம் எனக்கு மிக நெருங்கியவர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களைத் துயரத்தில் ஆழ்த்துகின்ற போக்கு, இரண்டினுள் நான் முன்னதையே தேர்ந்தெடுத்தேன். மீதி உள்ளதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.
சுவாமிஜியின் வரலாற்றைப் படிக்கும் அனைவருக்கும், தமது பல்வேறு இன்னல்களை அஞ்சாமலும் பொறுமையுடனும் எதிர்நோக்கிய காலத்திலும் சுவாமிஜிக்குத் தமது அன்னையிடமிருந்த மென்மையான அன்பும் பக்தியும் சிறிதும் குறையவில்லை.
1893-ஆம் ஆண்டில் சிகாகோ சர்வமத மகாசபையில் சுவாமிஜிக்குக் கிட்டிய பெரும் வெற்றியையும் பாராட்டையும் அறிந்த பிரம்மசமாஜத் தலைவர் பிரதாப சந்திர மஜூம்தார் பொறாமையால் துடித்தார்.
சுவாமிஜியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக வங்காளத்தில் பலரையும் தூண்டிவிட்டு அவரை நிந்தித்துப் பழி கூறும் செயல்களில் ஈடுபட்டார்.
அமெரிக்காவில் தமக்குக் கிடைக்கும் பாராட்டுகளை சுவாமிஜி பெரிதாகக் கருதவில்லை. அது போலவே இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க எண்ணி நடைபெறும் செயல்களையும் அவர் பொருட்படுத்தவில்லை.
நியூயார்க்கிலிருந்து 26 ஏப்ரல் 1894 அன்று இசபெல் மெக்கிண்ட்லிக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
எனது நாட்டு மக்கள் (மஜூம்தார் மற்றும் அவரைப் போன்றோர்) என்னைப் பற்றிப் பேசும் அவதூறுகள் பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை.
ஆனால் எனக்கு ஒன்றைப் பற்றித் தான் கவலை. எனக்கு வயதான ஒரு தாய் இருக்கிறார். வாழ்க்கையில் பல கஷ்டங்களை அவர் அனுபவித்து வந்திருக்கிறார். அந்தத் துயரங்களுக்கு இடையிலும் இறைப்பணிக்காகவும் மனிதசேவைக்காவும் நான் துறவறம் பூண்டதைப் பொறுத்திருந்தார்.
எந்தக் குழந்தையை மற்ற எல்லாக் குழந்தையைக் காட்டிலும் அன்பு செலுத்திப் போற்றிப் பாலூட்டி வளர்த்தாரோ, அந்தக் குழந்தை- மஜூம்தார் கூறுவது போல- ஒரு மிருகத்தனமான வாழ்க்கையைத் தொலைதூரத்திலுள்ள ஒரு நாட்டில் வாழ்கிறான் என்ற கடும் பழிச்சொற்களைக் கேள்விப்பட்டால் அவர் எவ்வளவு வேதனை அடைவார். அவர் மனம் எப்படிக் குன்றிப்போகும் அவர் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார் என்பதை நினைத்துத்தான் என் மனம் வருந்துகிறது.
ஆனால் கடவுள் உயர்ந்தவர். யாராலும் அவரது குழந்தைகளுக்குக் களங்கம் ஏற்படுத்தவோ காயம் ஏற்படுத்தவோ முடியாது.
சுவாமிஜி கேம்பிரிட்ஜில் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். 1894 டிசம்பர் 17 அன்று திருமதி ஒலே புல்லின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது இல்லத்தில் ‘இந்தியப் பெண்களின் உயர்ந்த குறிக்கோள்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்தச் சொற்பொழிவு சில பெண்களின் மனங்களில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சில அமெரிக்கப் பெண்கள் சுவாமிஜிக்குத் தெரியாமல், இந்தியாவில் உள்ள சுவாமிஜியின் அன்னைக்குக் கடிதம் எழுதினர் அதனுடன் குழந்தை ஏசு அன்னை மேரியின் மடியில் வீற்றிருக்கும் அழகானதொரு படத்தையும் அனுப்பி வைத்தனர்.
சுவாமிஜியின் உரை பற்றி திருமதி புல் எழுதுகிறார்:
வேதங்களிலிருந்தும் உயர்வான கொள்கைகள், இன்றைய விதிமுறைகளில் இந்தியப் பெண்களுக்குச் சாதகமாக உள்ளவை ஆகியவை பற்றிக் குறிப்பிட்டார் சுவாமிஜி.
பின் மிக்க மரியாதையுடன் தமது தாயின் தூய சுயநலமில்லாத அன்பு தான் தம்மை இந்த வழியில் செலுத்தி முடிந்த அளவு நல்லதைச் செய்யவும், துறவறத்தை மேற்கொள்ளவும் உந்துதலாக இருந்தது என்று, தம் அன்னைக்கு ஓர் அர்ப்பணமாக அவரது உரை அமைந்திருந்தது.
‘சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு’ என்னும் நூல் இவ்வாறு குறிப்பிடுகிறது:
சுவாமிஜி எங்கு சென்றாலும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் தமது தாய்க்குப் புகழாரம் சூட்டினார். சுவாமிஜியின் நண்பர்களில் ஒருவர் அவருடன் சில வாரங்கள் விருந்தினராக ஒரு நண்பர் வீட்டில் மகிழ்ச்சியாகக் கழித்த நாட்களை நினைவுகூரும்போது சுவாமிஜி அடிக்கடி தம் அன்னையைப் பற்றிப் பேசினார். அவர் தமது அன்னைக்கு உள்ள சுயகட்டுப்பாட்டை மிகவும் பாராட்டினார்.
பின்னர் தனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் தன் அன்னையைப் போல் நீண்ட நாள் விரதம் இருந்து பார்த்ததில்லை என்று அவர் கூறியது என் நினைவுக்கு வருகிறது. அவரது அன்னை ஒருமுறை எதுவும் உண்ணாமல் தொடர்ந்து 14 நாட்களுக்கு விரதம் இருந்துள்ளார் என்றும் கூறினார் அவர்.
என்னை இந்தப் பணியைச் செய்ய ஊக்கமளித்ததே என் தாய்தான். அவளது உயரிய குணங்கள் தான் என் வாழ்க்கைக்கும் என் தொண்டுக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது என அடிக்கடி அவர் தன் அன்னையைப் பற்றிக் கூறுவதை அவரது சீடர்கள் கேட்டிருக்கிறார்கள்.
1897-ல் சுவாமிஜி தமது முதல் மேலைநாட்டுப்பயணத்தை முடித்துத் தாயகம் திரும்பிய உடனேயே தமது தாயைப் பார்க்கச் சென்றார். பின்னரும் பல்வேறு அவசரப் பணிகளுக்கிடையிலும் தமது தாயை முடிந்த வரையிலும் அடிக்கடி சென்று பார்த்து வருவார்.
மேலைநாடுகளில் கிடைத்த புகழுடன் அவர் தம் அன்னையைச் சந்திக்கச் சென்றார். அப்போது அங்கு ஒரு சொற்பொழிவாளரையோ, நாட்டுப்பற்றுமிக்க ஒரு துறவியையோ காணவில்லை.
தாய்க்கு மட்டுமே உரிய குழந்தையாக அன்னையின் மடியில் தலையைப் புதைத்து, குழந்தைபோல் ‘அம்மா உன் கையால் எனக்கு உணவூட்டு’ என்று சுவாமிஜி கெஞ்சினார்.
மற்றொரு நாள் சுவாமிஜி அன்னையைச் சந்திக்கச் சென்றபோது அவரது தாய் அப்போது தான் தமது பகல் உணவினை முடித்திருந்தார். அம்மாவிடமிருந்து உண்ண ஒரு பருக்கைகூட இல்லையே என்று சுவாமிஜிக்கு மிக வருத்தமாக இருந்தது. ஒரு முருங்கைக்காய் மட்டுமே அன்னையின் தட்டில் மிச்சம் இருந்தது.
உடனே சுவாமிஜி தமது அன்னை மீது வைத்திருந்த பரிவையும் அவரை மகிழ்விக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அபாரமானவை.
ஒருமுறை சுவாமிஜியும், சுவாமி பிரம்மானந்தரும் பலராம் போஸின் இல்லத்தில் தங்கியிருந்தனர். சுவாமிஜிக்கு நீரிழிவு நோய் இருந்தது. இரவில் எளிதில் உறக்கம் வராது. நண்பகலில் அவர் சற்று உறங்குவது வழக்கம்.
ஒரு நாள் அவ்வழியே சென்று கொண்டிருந்த அவரது அன்னையின் பணிப்பெண் தற்செயலாக ‘நரேன்’ என்று கூப்பிட்டுக் கொண்டு அங்கு வந்தார்.
சுவாமி பிரம்மானந்தர் சுவாமிஜியின் அறைக்குள் பார்த்துவிட்டு சுவாமிஜி உறங்கிக் கொண்டிருப்பதாக அவளிடம் கூறிவிட்டார். அவளும் சென்றுவிட்டாள் சுவாமிஜி உறக்கத்திலிருந்து எழுந்ததும் பிரம்மானந்தர் அவரிடம் பணிப்பெண் வந்து சென்றதைக் கூறினார்.
சுவாமிஜி கோபத்துடன் ஏன் உடனேயே என்னை எழுப்பவில்லை? என்று அவரைக் கடிந்து கொண்டார். அதோடு அவள் எனது அன்னையிடமிருந்து ஏதாவது அவசரச் செய்தி கொண்டு வந்திருப்பாள் என்று கூறி உடனேயே ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு தம் அன்னையின் இருப்பிடத்திற்குச் சென்றார்.
சுவாமிஜி பக்தியுடன் தம் அன்னைக்குத் தம்மால் முடிந்ததை எல்லாம் செய்து அவரது மனதிற்கு மகிழ்வூட்டினார்.
1901 அக்டோபரில் தூய அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் பெயரில் முதன் முதலாக பேலூர் மடத்தில் துர்க்கா பூஜையைச் சுவாமிஜி நடத்தி வைத்தார். சுவாமிஜியின் அழைப்பிற்கிணங்க அவரது அன்னையும் அதற்கு வருகை தந்திருந்தார்.
பிறகு தன் அன்னையின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜகத்தாத்ரி பூஜையை எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று முன் நின்று நடத்தி வைத்தார். சுவாமிஜி.
தாயின் கட்டளைக்கிணங்க சில நாட்கள் கழித்து அதே ஆண்டில் காளி பூஜைக்குப் பின்னர் காளிகாட் கோயிலுக்குச் சென்று காளியைத் தரிசித்து வந்தார். இத்தரிசனம் அவரது அன்னையின் விருப்பத்தையும், கட்டளையையும் நிறைவேற்றவே செய்யப்பட்டது.
குழந்தைப் பருவத்தில் சுவாமிஜி நோய்வாய்ப்பட்டபோது அவரது அன்னை அவர் குணமடைய வேண்டுமென அன்னை காளியிடம் வேண்டினார். பின்னர் தமது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து சுவாமிஜியைக் குணமடையச் செய்த அன்னை காளிக்கு நன்றிக் கடனாக அவளது ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்வதாக நேர்ந்து கொண்டார்.
சுவாமிஜியின் அப்போதைய உடல்நலக்குறைவைப் பார்த்துத் துன்புற்ற அவரது அன்னை தமது பிரார்த்தமையை நிறைவேற்றாததை நினைவுகூர்ந்து அதை நிறைவேற்ற விரும்பினார்.

மிகுந்த பக்தியுடன் எல்லாவிதச் சடங்குகளையும் முறையாகச் செய்து புவனேசுவரியின் வேண்டுதலை சுவாமிஜி நிறைவேற்றினார். ஆதிகங்கையில் நீராடி ஈரத்துணியுடன் ஆலயத்தை மும்முறை அங்கப்பிரதட்சிணம் செய்து அன்னை காளியை அவர் வழப்பட்டார்.
சுவாமிஜியுடன் புனிதப் பயணம் செல்ல வேண்டும் என்பது புவனேசுவரி தேவியின் முக்கிய விருப்பம். உடல்நிலை குன்றியிருந்தபோதிலும் தம் அன்னையின் நீண்ட நாளைய விருப்பத்தை நிறைவேற்றவும், இறுதி நாட்களை அவருடன் கழிக்க வேண்டும் என்பதாலும் சுவாமிஜி இணங்கினார்.
தமது அன்னை மற்றும் சில உறவினர்களைக் கிழக்கு வங்காளத்தில் உள்ள டாக்கா சந்திரநாத், அசாமில் உள்ள காமாக்யா போன்ற புனிதத் தலங்களுக்குத் தம்முடன் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்தார். அன்னையை ராமேஸ்வரம் அழைத்துச் செல்வது என்ற அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.
தமது மறைவைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததால் சுவாமிஜி தமக்குப் பின் தன் அன்னையைக் கவனித்துக் கொள்ளும்படியும், சட்டப்படி அவருக்குக் கிடைக்க வேண்டியதைக் கிடைக்கச் செய்ய உதவும் படியும், சுவாமி பிரம்மானந்தரிடம் கூறினார். வட இந்தியாவிலுள்ள புனிதத் தலங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும்படியும் கேட்டுக் கொண்டார்.
சுவாமிஜியின் மறைவிற்குப் பின் சுவாமி பிரம்மானந்தர் சுவாமிஜியின் அன்னையை அடிக்கடி பார்க்கச் சென்றார். அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்து ஆறுதல் கூறினார்.
1911-ல் சுவாமி பிரம்மானந்தர் அன்னையுடன் பூரி சென்று வந்தார். பின் அவரது துன்பமும் துயரமும் மிக்க வாழ்வு 25 ஜீலை 1911 அன்று நிறைவுற்றது.
$$$