நட்பும் நம்பிக்கையும் வெல்லும்!

-வ.மு.முரளி

வெவ்வேறு பின்னணியில் இருந்து தொழில்நகரான திருப்பூருக்கு வந்த மூன்று நண்பர்கள் இணைந்து ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கி வென்ற கதை இது. கல்வி அவர்களை இணைத்தது; தொழில் அவர்களைப் பிணைத்தது. இன்று திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்களில் முதல் ஐம்பதில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்கள்….
ஸ்ரீதர், ராமசந்திரன், தமிழரசன்: நட்பை முதலீடாக்கி வென்றவர்கள்.

எஸ்.ராமசந்திரன், திருநெல்வேலியைச் சேர்ந்தவர், தந்தை கல்லூரி நூலகர். சராசரியான குடும்பம். குமாரபாளையம், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் டிப்ளமோ (1982- 85) படித்தார். படிப்பு முடித்தவுடன், மதுரை, மதுரா கோட்ஸ் ஸ்பின்னிங் மில்லில்  இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். 1988இல், உடன் படித்த நண்பர் நடராஜின் அழைப்பால் திருப்பூர் சாய ஆலையில் மேற்பார்வையாளராகப் பணிக்கு வந்தார்….

என்.ஸ்ரீதர், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர். அப்பா நரசிம்மன், ஈரோட்டில் போஸ்ட் மாஸ்டராக இருந்தார். சராசரியான குடும்பம். குமாரபாளையம், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் ப்ராசஸிங்கில் டிப்ளமோ (1982- 85) படித்தார். படிப்பு முடித்தவுடன், மைசூர் அருகிலுள்ள நஞ்சன்கூடில் 5 ஆண்டுகள் சாய ஆலையில் பணிபுரிந்தார். காடா துணிகளை சாயமேற்றும் ஆலை. மாத சம்பளம் ரூ. 500. அப்போது திருப்பூரில் கணக்குத் தணிக்கையாளராக இருந்த சித்தப்பா, திருப்பூரில் நல்ல தொழில் வாய்ப்பு இருப்பதாகக் கூறவே, 1989இல் திருப்பூர் வந்து ஒரு சாய ஆலையில் சேர்ந்தார். பிறகு உறவினர் ஒருவரின் பையிங் அலுவலகத்தில் (ஏற்றுமதி விற்பனை முகவர்) பணி சேர்ந்தார்…

கே.தமிழரசன், நாமக்கல் அருகிலுள்ள வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர். அப்பா காளியண்ணன் அரசுப் பள்ளி ஆசிரியர். சராசரியான குடும்பம். குமாரபாளையம், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் ப்ராசஸிங்கில் டிப்ளமோ (1982- 85) படித்தார். படிப்பு முடித்தவுடன், நண்பர் ஸ்ரீதரின் அழைப்பில் மைசூர் அருகிலுள்ள நஞ்சன்கூடில் 5.5 ஆண்டுகள் சாய ஆலையில் பணிபுரிந்தார். அங்கிருந்து திருப்பூர் நகருடன் தொடர்பு ஏற்பட்டது. அதையடுத்து நண்பர் ஸ்ரீதருடன் இணைந்து 1992இல் திருப்பூர், முருகம்பாளையத்தில் சாய ஆலையைத் தொடங்கினார்…. 

இப்படி வெவ்வேறுபட்ட சூழலில் இருந்து திருப்பூர் வந்த மூவருக்குமான பொது அம்சம், மூவரும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக்கில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது. மூவரும் 1992இல் திருப்பூரில் ஒருங்கிணைகின்றனர். அப்போது திருப்பூர் தொழில் துறையின் வளர்ச்சியை உணர்கின்றனர். 1993இல் ‘எஸ்ஸார் அசோஸியேட்ஸ்’ என்ற பையிங் அலுவலகத்தைத் தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் ஃபிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளுக்கான ஆடைகளை பையிங் அலுவலகம் மூலமாக ஏற்றுமதி செய்து வந்தனர்.

அப்போது நேரம் காலம் பார்க்காமல், நேர்மையாக உழைத்ததன் காரணமாக, நல்ல அனுபவம் கிடைத்துடன் லாபமும் கிடைத்தது. எனினும் ஆடை தயாரிப்பில் பிறரைச் சார்ந்திருப்பதில் இருந்த சிரமம் புரிந்தது. நாமே பனியன் கம்பெனி தொடங்கினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. 1995இல் மிகவும் குறைந்த முதலீட்டில் ‘தனவர்ஷினி எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் தொடங்கப்படுகிறது. ஆரம்பத்தில் 50 பேர் பணிபுரிந்த அந்நிறுவனம் இன்று 1,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கிறது. இவர்களது நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ. 250 கோடியை எட்டி இருக்கிறது.

சினிமாவில்தான் ஒரே பாட்டில் ஹீரோ கோடீஸ்வரராக முடியும். இவர்கள் கடந்து வந்த பாதை எளியதல்ல. “திட்டமிட்ட அணுகுமுறை, தன்னம்பிக்கை, கடும் உழைப்பு, தொழிலில் நேர்மை ஆகியவை தான் எங்களை உயர்த்தின. நாங்கள் மூவரும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டோம். குடும்பத்தினர் எங்கள் தொழில் சிரமங்களைப் புரிந்துகொண்டு உறுதுணையாக இருந்தனர். தரமான ஆடைகளை வழங்கினோம். இன்று முன்னணியில் இருக்கிறோம்” என்கிறார் ஸ்ரீதர்.

திருப்பூர், கொங்குநகரில் வாடகைக் கட்டட்டத்தில் சிறிய யூனிட்டில் தொடங்கிய இவர்களது தொழில் பயணம் 2001இல் ரூ. 10 கோடியை எட்டியது; 2014இல் 100 கோடியை எட்டியது. தற்போது பின்னலாடைத் தயாரிப்பின் பெரும்பாலான துணைத் தொழில்களையும் கொண்டதாக இவர்களது நிறுவனம் வளர்ந்திருக்கிறது; நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்பிராய்டரி போன்ற துணைத் தொழில்களையும் கொண்டிருக்கிறது. 4 இடங்களில் உற்பத்திப் பிரிவுகள் இயங்குகின்றன.

நிறுவனத்தின் விற்பனை அபிவிருத்தி, நிதித் துறைகளை ஸ்ரீதரும், உற்பத்தித் துறையை தமிழரசனும், மனிதவளம் மற்றும் அலுவல நிர்வாகத்தை ராமசந்திரனும் பார்த்துக் கொள்கிறார்கள். பின்னலாடைத் தொழிலில் குறித்த நேரத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்வதும் தரத்தைக் கடைபிடிப்பதும் தான் முக்கியம். தங்கள் 32 ஆண்டுகால தொழில் காலத்தில் பெற்ற அனுபவங்களே இவர்களை மேம்படுத்தி இருக்கின்றன. “ஒவ்வொரு தவறிலிருந்து பாடம் கற்றோம். அந்தப் பிழைகள் மறுபடி நிகழாமல் பார்த்துக் கொண்டோம். நாங்கள் பெற்ற ஜவுளித் தொழில்நுட்பக் கல்வியும் மிகவும் உறுதுணையாக இருந்தது” என்கிறார் ராமசந்திரன்.

நூல் விலையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இவர்களுக்கு ஒரே பிரச்சினை. இதர மூலப்பொருள்களின் விலையேற்றமும் தொழிலை பாதிக்கிறது. அதனால் ஏற்றுமதி ஆடைகளின் விலையைத் தீர்மானிப்பதில் சிக்கல் நேரிடுகிறது என்கிறார்கள். தொழிலாளர் பிரச்சினையை முன்கூட்டியே உணர்ந்துகொண்டு தொழிலாளர்களுக்கு விடுதி வசதி செய்து கொடுத்த முன்னோடி ஏற்றுமதியாளர்களில் இவர்களின் நிறுவனமும் ஒன்று.  

“திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தென் கொரியா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தவையாக இருக்கின்றன. இது ஒரு மனக்குறையாக இருக்கிறது. இவற்றையும் உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். அதற்கு வெளிநாட்டு இயந்திர தயாரிப்பு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்கச் செய்ய வேண்டும்” என்கிறார் தமிழரசன். ஆடை ஏற்றுமதி மட்டும் தங்களுக்கு நிறைவளிக்கவில்லை என்ற இவரது மனக்குறையில் தேசபக்தி வெளிப்படுகிறது.

இவர்களின் சமூகப் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது. பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு சத்தமின்றி உதவி வருகிறார்கள். சி.ஐ.ஐ. திருப்பூர் தலைவராக ஸ்ரீதர் பொறுப்பு வகித்திருக்கிறார். ரோட்டரி சங்கத்தில் தமிழரசன் பொறுப்பு வகிக்கிறார். இவர்கள் இணைந்து காங்கயத்தில் நடத்தும் விவேகானந்த அகாதெமி (சி.பி.எஸ்.இ.) பள்ளியை ராமசந்திரன் கவனித்துக் கொள்கிறார். அங்கு ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். நிஃப்ட்–டீ கல்லூரி மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளித்து வருகிறது தனவர்ஷினி நிறுவனம். 

“திருப்பூரில் பல முன்னோடிகளின் செயல்பாடுகளைப் பார்த்து அவர்களையே ஆதர்ஷமாகக் கொண்டு உழைத்து வருகிறோம். எங்கள் அடுத்த தலைமுறையையும் இத்தொழிலில் ஈடுபடுத்த தயாராகி வருகிறோம். ஆனால் அது எங்கள் முடிவாக மட்டும் இல்லை. நாங்கள் தொழில் ஆர்வத்தில் ஒன்றிணைந்தோம். அதுபோல வாரிசுகளும் இருந்தால் நல்லது. ஏனெனில், பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதரமாக இந்நிறுவனம் மாறி இருக்கிறது. அதைத் தொடர வேண்டும்” என்று ஸ்ரீதர் சொல்லும்போது, நிறுவனத்தை உருவாக்குவது மட்டும் முக்கியமானதல்ல என்று புரிகிறது.

இளைஞர்களுக்கு இவர்களின் அறிவுரை? “வெற்றிக்கு குறுக்குவழிகள் கிடையாது. நேரத்தை சரியான வகையில் பயன்படுத்தி,  ‘ஸ்மார்ட் ஒர்க்’ செய்தால் வெற்றி நிச்சயம்” என்பது தான். 

  • நன்றி: விஜயபாரதம் தீபாவளிமலர் – 2026

$$$

Leave a Reply